கங்காரு நாட்டு காகிதம் ----- 1

லெ.முருகபூபதி

வெந்து தணிந்த காடுகளும் வெந்தும் தணியாத மனங்களும்


இந்த ஆண்டு கோடைகாலம், பாரதியாரின் அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்.... பாடலை எனக்கு அடிக்கடி நினைவூட்டியது. எதிர்பாராதவிதமாக நாம் வாழும் விக்ரோரியா மாநிலத்தில் சில பிரதேசங்களை காட்டுத்தீ பதம் பாரத்துவிட்டது.

முழு உலகமுமே அவுஸ்திரேலியா கண்டத்தை தொலைக்காட்சிகள் ஊடாக பார்த்து பதறிய காட்டுத்தீ சுமார் இருநூறுக்கும் அதிகமான மனித உயிர்களை எரித்து சாகடித்துவிட்டு ஓய்ந்துவிட்டது.

எமது மாநிலத்துக்குள் மனித உயிர்கள் மட்டுமன்றி காட்டுப்புதர்களில் மரங்களில் வாழும் ஆயிரக்கணக்கான ஜீவராசிகளையும் சாம்பராக்கிவிட்டது.

2004 டிசம்பரில் சுனாமி ஆழிப்பேரலை அவலம் வருமுன்பே ஊர்வன உட்பட நாய்கள் அனைத்தும் உயிர்களை பாதுகாத்துக்கொண்டன. அந்த அழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சுனாமி வரப்போகிறது என்ற அறிகுறி தென்படவில்லை.

ஆனால் தரையில் ஊறும் எறும்புக்கும் பூமிக்கு அடியில் நிகழப்போகும் மாற்றம் தெரிந்திருந்தது.
அவுஸ்திரேலியா காடுகளுக்குள் வாழ்ந்த கங்காரு- கோலா உட்பட பலதரப்பட்ட காட்டு விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் காட்டுத்தீயின் வருகையின் அறிகுறி தென்படவில்லை.

நீர்- நிலம்- காற்று - தீ – ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள் என்பார்கள்.
இவற்றில் ஜீவராசிகளை ஏமாற்றியது தீ.
நீரில்-நிலத்தில்-காற்றில்-ஆகாயத்தில் தோன்றப்போகும் மாற்றங்களை ஜீவராசிகள் முற்கூட்டியே அறிந்துகொள்கின்றன. ஆனால் தீ விளைவிக்கப்போகும் அழிவை அவை உணரும் சக்தியற்றவையாக படைக்கப்பட்டுவிட்டன.

விக்ரோரியா மாநிலத்தில் காட்டுத்தீ பரவியதற்கு ஒருசில ஆறறிவுபடைத்த மனிதர்களும் காரணம் என்று காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது.

கோடைகாலத்தில்
40-42 பாகைக்கும் அதிகமாக வெப்பம் ஏறும்பொழுது இங்குள்ளவர்களின் அன்றாட வாழ்க்கையே மாறிவிடும். வேலைக்குச்செல்பவர்களின் உடைகள் மாறும். குளிர்பானங்களின் விற்பனை அதிகரிக்கும். மின்சாரம் எச்சமயமும் தடைப்படும். பிரம்மாண்டமான Shoping Center  களில் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார் முற்றுகையிட்டுவிடுவர். அங்கே முழுமையாக குளிரூட்டப்பட்டிருக்கும்.

வேலைத்தலங்களில் காலை ஆறு மணிக்கு வேலை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கெல்லாம் தொழிலாளர் வீட்டுக்கு அனுப்பப்படுவர். பெரும்பாலானவர்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்வர்.
வீதிகளில் வாகனப்போக்குவரத்தைக்கட்டுப்படுத்தும் சிக்னல் லைற்றுகள் கோடை வெப்பத்தினால் செயலிழந்து போய்விடுவதனால் பொலிசார் துரிதமாக இயங்கி போக்குவரத்தை சீர்படுத்துவர்.

பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வெப்பம் தாங்காமல் ஒருவருக்கு ஒருவர் தண்ணீர் ஊற்றி அட்டகாசம் செய்துகொள்வர். ஆனால் அவர்களது அதிகாரிகள் தரத்தில் உள்ள மேலாளர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் ஐஸ் கோப்பியோ ஐஸ்கிறீமோ அருந்துவர்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகிவிட்டன.

கடந்துபோன ஆண்டுகளில் முதல்தடவையாகத்தான் இம்முறை காட்டுத்தீயின் கொடுமையை உணர்ந்தேன். ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் கோடை வெப்பத்தையும் அனுபவித்து எங்கேயாவது காட்டுத்தீயின் அபாயத்தையும் தகவலாக அறிந்தும் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த எனக்கு இந்த ஆண்டின் (2009) கோடைகாலம் மிகுந்த அயர்ச்சியையும் தூக்கமின்மையையும் தந்துவிட்டது.

நடுநிசியிலும் தூரதேசங்களிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் தூக்கத்தை குழப்பின.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர் செங்கை ஆழியானும் தொலைபேசி ஊடாக காட்டுத்தீ பற்றி விசாரித்து நான் சேமமாக இருக்கிறேனா என்பதை அறிந்தார்.
அதற்கு முதல் நாள் எனது குரலை அவர் லண்டன் பி;பி;ஸி ஒலிபரப்பில் கேட்டதாகவும் சொன்னார். லண்டன் பிபிஸியில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு காட்டுத்தீ அபாயம் குறித்து கேட்டிருந்தார். எங்கள் ஊரிலிருந்து சுமார் முப்பது கிலோமீற்றர் தொலைவில்தான் அநர்த்தம் நிகழ்ந்தது. அந்தப்பிரதேசத்துக்கு பாதுகாப்புக்காப்புக்காரணங்களின் நிமித்தம் நாம் வேடிக்கை பார்க்கவும் செல்லமுடியாது.

தொலைக்காட்சி-வானொலி-பத்திரிகை ஊடகச்செய்திகளை மாத்திரம் தெரிந்துவைத்துக்கொண்டு லண்டன் பி.பி.ஸி.க்கு ஒரு நாள் நடுஇரவில் தூக்கக்கலக்கத்துடன் நான் வழங்கிய செவ்வியை ஒலிபரப்பில் கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைக்கவில்லை. இணையத்தளத்தில் கேட்டிருக்கலாம். அதற்கான வழிமுறையும் எனக்குத்தெரியாது.
ஆனால் எனது குரலை யாழ்ப்பாணத்திலிருந்து செங்கை ஆழியான் கேட்டுவிட்டு தொடர்புகொள்ளும்வரையில் எனது குரல் வான் அலையில் பரவிய தகவல் தெரியாது.

கனடா-இங்கிலாந்து-இந்தியா-சிங்கப்பூர்-சவூதி அரேபியா- துபாய்-இலங்கை- பிரான்ஸ்-நோர்வே-முதலான நாடுகளில் வசிக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் இந்த காட்டுத்தீ உசுப்பிவிட்டது. மின்னஞ்சல்-தொலைபேசிகளுக்கெல்லாம் நேரம் காலம் தெரியாமல் பதில் சொல்லிக்கொண்டிருக்கநேர்ந்தது.

இவ்வளவு அமளிகளுக்கும் மத்தியில் காலை ஆறுமணிக்கு எழுந்து ஒழுங்காக நாள்தவறாமல் வேலைக்கும் போய்வந்தேன். நான் வேலைக்குப்போனால்தான் சம்பளம். நிரந்தர ஊழியர்கள் கடும்வெப்பத்தைக் காரணம்காட்டி தமது மருத்துவ லீவையோ வருடாந்த லீவையோ எடுக்கமுடியும். ஆனால் எனது நிலை அப்படியல்ல. தற்காலிக வேலையில் இருக்கும் நான், கோடைவெப்பத்தை காரணமாகச்சொல்லி வீட்டில் தரிக்க முடியாது.

நான் வேலைக்குப்புறப்பட்ட மறுகணம் மனைவி தனக்குத்தேவையான காலை-மதிய உணவு மற்றும் தண்ணீர்-குளிர்பானம் சகிதம் புறப்பட்டுவிடுவா. வேலைக்கு என்றா நினைக்கீறீர்கள்?
அதுதான் இல்லை.

வீட்டிலே குளிரூட்டி வசதி இல்லாத தாய்மார், முற்றிலும் முழுமையாக குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான
Shoping Center களுக்கு தங்கள் குழந்தைகளுடன் செல்வார்கள் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
அவர்களைப்போன்று எனது மனைவியும் அங்கே போய்விடுவா. அங்கு கோடைவெப்பத்தின் சுவடே இருக்காது. கடைத்தொகுதிகளை ரஸித்துக்கொண்டிருந்துவிட்டு வெளியே வெய்யில் சற்று தணிந்த பின்னர் வீட்டுக்குத்திரும்பிவிடுவா.

இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு நகைச்சுவைத்துணுக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு கணவர், வெளியே சென்ற மனைவிக்காக வீட்டு வாசலில் கவலையோடு காத்திருந்தார். அயல் வீட்டுக்காரர், என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள் எனக்கேட்கிறார். அதற்கு அவர், மனைவி வெளியே சென்றார். மழை வரப்போகிறது குடையும் எடுத்துச்செல்லவில்லை. அதுதான் யோசிக்கின்றேன் என்றார். மழைக்காகவா யோசிக்கிறீர்கள். குடை இல்லாவிட்டால் என்ன? ஏதும் கடைப்பக்கம் ஒதுங்கி நின்று மழை விட்டதும் வருவார்தானே என்றார் அயல்வீட்டுக்காரர். உடனே, கணவர் 'அதுதான் யோசிக்கின்றேன்' என்றாராம்.

என் மனைவியுடன் நான் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளேன்.

திருமண வீடு. பிறந்தநாள் கொண்டாட்டம், கோவில், சாமத்தியச்சடங்கு, செத்தவீடு., குடும்ப நண்பர் வீட்டுக்கான -,பிள்ளைகளின் வீட்டுக்கான விஸிட்டிங்....தூரப்பயணங்கள் இப்படியாக எங்கே வேண்டுமானாலும் மனைவியுடன் வருவதாக ஒப்பந்தம். ஆனால் கடைத்தொகுதிக்கு மட்டும் உடன்வரமாட்டேன்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எழுதப்படாத சட்டம் எமது இல்லறத்தில்.
கோடைகாலத்தில்- காட்டுத்தீ அயலில் பரவியிருந்த வேளையில் இந்த கடைத்தொகுதி விஜயம் அன்றாட நிகழ்வாகிவிட்டது மனைவிக்கு.

தினமும் நான் வேலையால் மாலையில் திரும்பும்பொழுது ஊர்ப்புதினங்களும் கொண்டுவருவா.
மின் விசிறியின் தயவில் எஞ்சிய பொழுது போகும்.

தினமும் ஊர்ப்புதினங்களுடன் வந்த மனைவி ஒரு நாள் ஒரு தமிழ் முதியவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டா. அவரும் ஈழமண்ணிலிருந்து இந்த கங்காரு நாட்டுக்கு பிள்ளைகளினால் ஸ்பொன்ஸர் செய்து அழைக்கப்பட்டவர். கடைத்தொகுதியில் மனைவியின் நெற்றி குங்குமப்பொட்டு அவரை அவவுடன் உரையாடவும் வீடுவரையும் அழைத்துவந்து உபசரிக்கவும் வைத்துவிட்டது.
வந்தவருடன் நானும் ஊர்ப்புதினங்கள் பேசினேன்.

ஈழமண்ணில் தொடரும் யுத்தம் முதல் அவுஸ்திரேலியா கோடை வெப்பம் வரையில் அவரும் பலதும் பத்தும் பேசினார். உரையாடல் எனது பிள்ளைகளைப்பற்றியும் வந்துவிட்டது. அதற்குக்காரணமும் இருந்தது.
எனது பிள்ளைகளின் திருமணப்படங்கள் வீட்டின் முன் ஹோலில் சுவர்களில் அலங்கரித்திருந்தன. அந்தச்சமயம் பார்த்து தூர தேசத்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ஒரு திருமணப்பேச்சுவார்த்தை குறித்து உரையாடல் அமைந்தது. வீட்டுக்கு வந்திருந்த பெரியவருக்கும் அந்த உரையாடல் கேட்டிருக்கவேண்டும்.

தொலைபேசி உரையாடல் முடிந்ததும், அவர் என்னிடம் கேட்டார், ' தம்பி நீரும் கலியாணங்கள் பேசி ஒழுங்கு செய்து கொடுக்கிறனீரோ? நல்ல காரியம். புண்ணியம் கிடைக்கும். இந்தக்காலத்தில் மாப்பிள்ளைகளுக்கு சரியான தட்டுப்பாடு. '

நான் எனது குடும்பத்தில்- உறவினர் மத்தியில் பேசி முற்றாக்கி செய்துவைத்த திருமணங்களைப்பற்றி பிரமாதமாகச் சொன்னேன்.

உடனே அவர், ஆச்சரியமாக என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு, ' சரி தம்பி... நீர் சாதி ஒன்றும் விசாரிப்பதில்லையா? '- என்று கேட்டார்.

'சாதி என்றால் என்ன ஐயா ? ' என்று வேண்டுமென்றே கேட்டேன்.
அவர் செருமினார். இயல்பாக வந்த செருமல் அல்ல.
அவருக்கு எனது பதில் சற்று கோபமூட்டியிருக்கவேண்டும்.
'நீர் தம்பி இந்த நாட்டுக்குவந்து எல்லாத்தையும் மறந்துபோனீர். எங்களுக்கு சாதி ஒரு அடையாளம் ஐஸே. அது பார்க்காமல் என்ன கலியாணம்.?'
நான் பதட்டப்படாமல், ' ஐயா ஈழத்தில் சாதி அடிப்படையிலா களத்தில் நின்று இளம் தலைமுறை தமிழ் ஈழத்துக்காக போராடி மடிந்தது.?'
எனது இந்தக்கேள்வி அவரை துணுக்குறச்செய்திருக்கலாம்.
மின் விசிறி சுழன்ற போதிலும் அவருக்கு வியர்த்தது.
குளிர்பானம் அருந்திவிட்டு விடைபெற்றார்.
கோடை சில மாதங்களுக்குத்தான். பின்னர் இலையுதிர்காலம், குளிர்காலம், வசந்தகாலம் வரும்.
பருவகாலங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும்.
மனித மனங்கள்...?

                                                                                                                                                  

                                                                                 ( தொடரும்........)

காகிதம் 2 ஆவது பார்க்க


mpoopathy@yahoo.com.au