யாழ்முரி இசை

 

முனைவர் இரா.வசந்தமாலை


க்தி இலக்கியக்காலத்தில் இசைத்தமிழுக்கு முன்னோடியாய் விளங்கியவை சைவத்திருமுறைகளாகும். தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுமூன்று பண்களில் பல அழிவுற்று நின்றபோது திருமுறைகள் அடையாளப்படுத்திய பண்களின் எண்ணிக்கை 24. இதில் மிகுதியான பண்களைப் பயன்படுத்திப் பதிகம்பாடிய பெருமை திருஞானசம்பந்தரையே சாரும். இப்பண்களைத் தவிர்த்து இவர்தம் யாழ்முரி, திருத்தாளச்சதி, திருவிராகம் இசை வடிவத்தினால் சிறப்புப் பெறுவனவாகும். 'மாதர் மடப்பிடியும்| எனத் தொடங்கும் யாழ்முரிப் பதிக்கத்தின் இசை நயங்களையும், இசை நுட்பங்களையும், பண்ணிசை ஆய்வின் விளைவால் இதற்கான 'இராகங்கள்| குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரை.

யாழ்முரி - தோற்றம்

தருமபுரத்தில் திருஞானசம்பந்தருடன் இருந்து இசைப்பணியாற்றிவந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் தமது சுற்றத்தார்களிடம் ஞானசம்பந்தருக்குத் தான் யாழ் வாசித்து வரும் செய்தியினை எடுத்துரைத்து மகிழ்ந்தபோது, இதனைக் கேட்ட உறவினர்கள் 'நீவீர் இத்திருப்பதிகத்தை யாழிலிட்டுத் தக்க முறையில் வாசிப்பதனால் அதன் இசையாண்டும் பரவுவதாயிற்ற' எனக் கூறினர். சம்பந்தரின் பாடல்கள் தம்முடைய யாழின் மூலமாகப் பெருமையடைந்தன என்ற உறவினரின் கூற்றைப் பாணரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சம்பந்தரைப் பணிந்து 'யாழில் அடங்காதவாறு திருப்பதிகம் ஒன்றை அருளிச்செய்யவேண்டும்| என்று கேட்டுக் கொண்டார். இவ்வேண்டுகோளின் விளைவே ''மாதர் மடப்பிடியும" எனும் யாழ்முரிப் பதிகம். பாணரும் இப்பதிகத்திற்கு இசைமீட்ட முயல, இசையோ யாழில் அடங்காது போக, யாழ்ப்பாணர் நாணமுற்று சம்பந்தரின் முன் யாழை உடைக்க முயன்றபோது சம்பந்தர் இச்செயலைத் தடுத்து, சிவபெருமானின் திருவருட் பெருமையெல்லாம் இக்கருவியில் அடங்குதல் என்பது இயலாது. எனவே, 'இந்த யாழைக் கொண்டே இத்திருப்பதிக இசையினை வாசிப்பீராக' என்றுரைக்க பாணரும் யாழிசைத் தொண்டினைத் தொடர்ந்தார் என்பது 'யாழ்முரி| தோற்றம் பெற்றதற்கான ஒரு வரலாறு.

யாழ்மூரி - யாழ்முரி - பெயர் வேறுபாடு

ஞானசம்பந்தரின் 'மாதர் மடப்பிட' எனும் இப்பதிகம் இருவேறு பெயர்களால் அழைக்கப்பெறுகின்றது. ''யாழ்மூரி|| எனும் வழக்கு மிகக் குறைவே. ''மூரி - வலிமை, யாழ்மூரி-யாழைக் காட்டிலும் இசைவன்மை வாய்ந்தத" (அ.கந்தசாமிப்பிள்ளை (குறிப்புரை) முதல் திருமுறை, பதிக வரலாறு, ப.
588) எனும் காரணம் பற்றி 'யாழ்மூரி| என்று அழைக்கப் பெறுவதுண்டு. பெரும்பான்மையானோர் 'யாழ்முரி| என்றே இப்பதிகத்தைக் குறிப்பிட்டுள்ளனர். ''முரி" என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி மூன்று பொருள்களைத் தருகின்றது. அப்பொருள், 1. கெடுதல், தவறுதல், 2. ஒடித்தல், அழித்தல், 3. இசைப்பாவின் இறுதிப் பகுதி (தமிழ்ப் பேரகராதி ஐஏ, ப.3278) என்பதாகும். இத்தகு பொருள்களை அடியொற்றியும், ஞானசம்பந்தரின் வரலாற்றைப் பின்பற்றியும் ''யாழ்முரி|| என்று இப்பதிகத்தை அழைப்பதற்கான காரணத்தை மூன்று நிலைகளில் குறிப்பிடலாம்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஞானசம்பந்தரின் பாடலுக்கு ஈடாக இசைக்க இயலாது தனது யாழிசையில் தவறிய காரணத்தால் ''யாழ்முமுரி" என்றாயிற்று என்பது ஒரு பொருள்.

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஞானசம்பந்தரின் வரலாற்றின் வழிநின்று திருநீலகண்டர் தனது யாழை ஒடிக்க (அ) அழிக்க முயன்றதன் காரணமாக ''யாழ்முரி|| என்றாயிற்று என்பது இரண்டாம் பொருள்.

முழுக்க முழுக்க இசைநிலையில் நின்று விளக்குமிடத்து இப்பதிகப் பாடல்கள் பண் நிலையிலும், தாள நிலையிலும் முரித்துப் பாடும் (மாற்றிப்பாடும்) தன்மை பெற்றமையால் ''யாழ்முர" ஆயிற்று என்பது மூன்றாவது கருத்து.

இம்மூன்று நிலைகளில் மூன்றாவது பொருளைக் காரணமாகக் கொண்டே இசை ஆய்வாளர்கள் யாழ்முரியை விளக்கிச் செல்கின்றனர்.

முரிப்பாடலும் யாழ்முரியும்

''எடுத்த இயலும் இசையும் தம்மில்
முரித்துப் பாடுதல் முரி எனப்படும"

(சிலம்பு.
7 கானல் வரி 14-16: அரும்பதவுரை)
எனும் சிலம்பின் உரைக் குறிப்பு முரிப்பாடல் சிலப்பதிகாரத்திலேயே இடம் பெற்றுள்ளமைக்குச் சான்று பகரும். சிலம்பின் தொடர்நிலைச் செய்யுளில் இடையே இடம்பெறும் முரிப்பாடல்கள் தனிப்பாடல் நிலையில் சிறப்புப் பெறுவது ஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகத்திலேயே எனலாம். ''முரி என்பது தாளக் கணக்கிற்கும் பண் நுண்மைக்கும் ஏற்ப பகுத்துப் பாடுதலாகும். இது தொன்மை தொட்டு இசைத் துறையில் சிறந்து வருவத" (எ.ப.
104) என்று முரிப்பாடல் குறித்துத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் விளக்கமளிக்கிறது. ''நடைக்கேற்பச் சொற்களின் எழுத்துக்கள் காலப்படுத்தப்பட்டுப் பிரித்து இசைக்கப்படுவது ''முரி" எனப்பட்டத" (தமிழிசையியல், ப.95) என்பதும் வீ.ப.கா. சுந்தரம் தரும் விளக்கமாகும். இசை வடிவத்தில் ''முர" அமைப்பது குறித்துக் குறிப்பிடுமிடத்து,

வாரம், கூடை முதலிய நடைகளை மாற்றுதல்
நடையுள் நடை வைத்தல்
தாளம் முரித்தல்
இசைக்காலம் முரித்தல்
பண் முரித்தல்


முதலியன பாடுதுறையிலே இசைமுரிகள் ஆகும். மேற்சுட்டிய விளக்கங்களின்வழி முரிப்பாடலுக்குரிய இலக்கணம் தெரிய வருகின்றது. இதை அடியொற்றி யாழ்முரி என்பதற்கு, ''இயலும் இசையும் அவ்வடிக்குள்ளேயே முரிந்து மாறுபடும்படி அமைந்தமையால் 'முரிவரி' என்னும் இசைப்பாவின் பாற்படும்" (பன்னிரு திருமுறை வரலாறு, ஐ, ப.
469) என்பது வெள்ளைவாரணனாரின் கருத்தாகும். மேலும், ''யாழ் என்றால் சுரநரம்பு எனப் பொருள் கொள்வோர் பண்ணிற்கு உரிய சுரநரம்புகளை அந்தந்தச் சுரநரம்புகளைக் கொண்டே இப்பண் இசையை ஒலிக்கும்படிச் செய்யாமல் வேறு யாழாகிய சுரநரம்புகளைக் கொண்டு அப்பண்ணிசை ஒலிக்கும்படிச் செய்யப்பட்டத" (யாழ்முரிப்பண், ப.57) என்பார் வா.சு.கோமதி சங்கரஐயர். எனவே, 'மாதர் மடப்பிட' என்ற திருப்பதிகம் முரிப்பாடல் தன்மையுடையது என்பதும், இவ்வியலும் இதன் இசையும் வேறுபட்டு (பண்ணிலும், நடையிலும், தாளத்திலும்) நின்ற காரணம் பற்றியே 'யாழ்முரி' என்ற பெயருடைத்தாயிற்று என்பதும் தெளிவாகின்றது. திருஞானசம்பந்தருக்கு முற்பட்டவரான காரைக்காலம்மையார், சமகாலத்தவரான அப்பரடிகள், பிற்காலச் சுந்தரர் இவர்தம் படைப்புகளில் 'யாழ்முரி| குறித்து யாதொரு குறிப்பும் காணப்பெறவில்லை. பண்டைப் பாலைகளின்வழிப் பிறந்த 103 பண்களின் பெயர்ப்பட்டியலில் யாழ்முரி இடம்பெறவில்லை. எனவே, யாழ்முரி என்பது பாடும் வகையால் சிறப்புப் பெற்ற புதியதொரு இசைப்பாடல் என்பது தெரிய வருகின்றது.

பண் ஆய்வும் யாழ்முரியின் இராகங்களும்

சென்னைத் தமிழிசைச் சங்கப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ''யாழ்முரிக்குரிய பண் ''மேகராகக்குறிஞ்ச" எனப்பெறும் ''நீலாம்பர" இராகமாகும் என்றும் இது நுட்பச் சுரங்களை உடையதால் யாழில் வாசிக்க இயலாது போயிருக்கலாம் என்றும் கூறப்பட்டத". (லெ.ப.கரு.இராமநாதன்செட்டியார் (ப.ஆ.), பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும், ப.
208). பல பதிகங்கள் மேகராகக்குறிஞ்சியிலே பாடப்பட்டுள்ளன. இதற்குரிய இசையினை யாழிலிட்டு வாசித்தவர் திருநீலகண்டரே. அப்படியிருக்க இப்பதிகம் மட்டும் யாழில் அடங்காத இசையினை உடையது என்று கூறுவது பொருந்தாது எனுமாறு ''யாழில் அடங்காத ஓர் இசையினைச் சம்பந்தர் அருள இசைந்தார் என்றமையால் அது பாணருக்கும் மற்றையோர்க்கும் முன்னர்த் தெரிந்த மேகராகக்குறிஞ்சிப் பண்ணாக இருக்க முடியாது என்பதுதான் பொருத்தம். ஆகவே, யாழ்முரிப்பண் மேகராகக்குறிஞ்சியாகிய நீலாம்பரி இராகத்தின்றும் வேறான ஓர் இராகம் என்பது ஏற்புடையதாகிறது|| (தெய்வத்தமிழிசை, ப.50) என்பார் ஞானாகுலேந்திரன்.

இத்தகையதோர் ஐயத்திற்குப்பின் 'யாழ்முரி|க்கு உரிய இராகமாக ''அடாண" எனும் இராகம் வகுக்கப்பட்டது. குருசாமிதேசிகர் என்பவரே இத்தகு இராகத்தில் பாடும் மரபினை முதன்முதலில் உண்டாக்கியவர் என்றாலும், பல்வேறு சான்றுகளுடன் அடாண இராகமே யாழ்முரிக்கு உரியது என்று வலியுறுத்தியவர் வா.சு.கோமதி சங்கர ஐயராவார். இவர்தம் ''யாழ்முரிப்பண" எனும் நூலின் வாயிலாக, ''யாழ்முரிப்பண்ணின் நுட்பத்தைக் கண்டே வடநாட்டினர், இப்பண்ணின் பொருள் அமையுமாறு ''அடாண" எனும் சொல்லை அமைத்துக் கொண்டனர" என்ற செய்தியும் ''வடமொழிப் பெயரால் வழங்கப்பெறும் இராகங்கள் பலவும் தமிழ்ப் பண்கள" என்ற குறிப்பும் தென்படுகின்றன. இந்திய இசைக்கு அடிப்படை தமிழ்இசையே என்பது இவர்தம் கருத்து. மேலும், ''யாழ்முரி, அடாண ஆகிய இரு பெயர்களும் ஒரே பொருளையும் கருத்தையும் குணநலனையும் கொண்டவ" (யாழ்முரிப்பண், ப.
57) என்று விளக்கமளித்துள்ளார். பொதுவாக, யாழ்முரிக்குரிய சுவை, இராகம் இரண்டும் பொருத்தமுடன் இசை வல்லுநர்களால் வகுக்கப்பட்டுள்ளன என்பதறியலாம்.

யாழ்முரியின் சுவை 'உவக' என்பர். இதனடிப்படையில் சம்பந்தர் யாழ்முரிப் பண்ணைப் பாடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பாடலில் உவகையையும் வெற்றி உணர்வையும் தந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. உவகைக்கும், வீரத்திற்கும் ''அடாண" இராகம் மிகப் பொருத்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இசையமைப்பிற்குரிய திருஞானசம்பந்தரின் 'யாழ்முர' என்பது இசைவல்லுநர்களால் பல்வேறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் தெரிய வருகின்றது.

எனவே, பல்வேறு வரலாற்றின் அடிப்படையிலும் இசை ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையிலும்,

வடிவநிலையில் ஆராய்தல்
இசை நிலையில் ஆராய்தல்
பாடும் முறையில் ஆராய்தல்


எனும் நிலைகளின்கீழ் யாழ்முரிக்கான இசைநுட்பத்தை ஆராய்ந்தறியலாம். தமிழிலக்கிய ஆய்வறிஞர்களும் இசைவல்லுநர்களும் இணைந்து பழந்தமிழரின் இசைத்தமிழ்ப் பண்களையும் அதன் வடிவங்களையும் பல்வேறு ஆய்வுகளின்வழி வெளிக்கொணர முற்பட்டால் இசைத்தமிழ் வளம்பெறும் என்பது உறுதி.


துணைநின்ற நூல்கள்:


அ.கந்தசாமிப்பிள்ளை (குறிப்புரை), திருஞானசம்பந்தசுவாமிகள் முதல் திருமுறை, தருமபுரஆதீனம்,
1955.

தமிழ்ப்பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,
1982.

அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், சிலப்பதிகாரம், கமர்ஷpயல் அச்சுக்கூடம், சென்னை,
1920.

வீ.ப.கா.சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம் ஐஏ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி,
2000.

வீ.ப.கா.சுந்தரம், தமிழிசையியல், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை,
1994.

க.வெள்ளைவாரணன், பன்னிரு திருமுறை வரலாறு - ஐ, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1994.

வா.சு.கோமதிசங்கரைய்யர், யாழ்முரிப்பண், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1977.

வெ.ப.கரு.இராமநாதன் (ப.ஆ.), பண்ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும், தமிழ் இசைச்சங்கம், சென்னை,
1974.

ஞானாகுலேந்திரன், தெய்வத்தமிழிசை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
1994.