மூதின் மகளிரும் பாண்டியன் தேவியின் பல்சான்றீர்: குரலும் - தாய்வழிமரபு

 

முனைவர் பா.வேலம்மாள்


னித உறவுகளின் ஒருங்கிணைவையும், பண்பு நலன்களின் பாங்கினையும், மன உணர்வுகளின் நுண்மையையும், அறநெறிகளின் உயர் சிறப்பினையும் சங்க இலக்கியப் புலவர்கள் அனுபவ மொழிகளாக 'பதிவு' செய்திருக்கின்றனர். சங்ககாலம் என்பது பண்டைத்தமிழர் பெருமை, மூவேந்தர்களின் எழுச்சி, பொற்காலம் போன்ற புனைவுகளுடன் இன்று முன் வைக்கப்படுகின்றது. ஏறத்தாள நானூறு ஆண்டுகளைச் சங்ககாலம் என்று வரையறுத்து, அப்பொழுது வெளியான படைப்புகளைத் தொகுத்துச் சங்க இலக்கியம் என அடையாளப்படுத்துகின்றனர். இத்தகைய சங்க இலக்கியங்கள் வாயிலாக, மறக்குலப் பெண்டிராக, மூலப்படிவமாக இருந்த பெண்மையின் உயர்ச்சி திசை மாறி, பெண்ணாக இருப்பதால் மட்டுமே உரிமைகள் மறுக்கப்பட்டு, கீழ்மட்ட நிலையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் காண்பதே இவண் நோக்கம்.

உயிரினங்களின் தொடர் மரபுச் சங்கிலியாக விளங்குவது பெண்ணினம். எனவே பெண்ணினம் உலக இயக்கத்திற்கு முதற்பொருளாக விளங்குகிறது. மனித இனத்தின்படி மலர்ச்சிப் பாதையில் தலைமைப் பீடத்தில் இருந்தவள் பெண். குழுத்தலைமை, இனப்பெருக்கம், வாழ்வாதாரத் தேவைகளைப் பகிர்ந்தளித்தல் என அனைத்திலும் முதன்மைப்பட்டிருந்தாள்.

தாய்வழிச் சமூகத்தின் அமைப்பு முறைக்கு ஆதாரமாக 'குடிவழி
(Descent), உறைவிடமுறை (Residence), சொத்துரிமை, குடும்ப நிர்வாகத்தில் அதிகாரமும், தலைமையும் (Authority and Succession) ஆகிய நான்கு முதன்மையான கூறுகளை விளக்குகிறார் பக்தவத்சல பாரதி. மேலும் தாய்வழிச் சமூகத்தை நிறுவுவதற்கான வழிகளாகப் 'பேறுகாலத் தனிமை, சேய்வழி அழைத்தல்' எனும் கூறுகளை டைலர் கூறுகின்றார்.

சங்க இலக்கியப் பாடல்களில் தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் நிறையக் காணக் கிடைக்கின்றன. இதன்வழி சங்க இலக்கியக் காலம் தந்தை வழிச் சமூகம் கால்கொண்டு வேரூன்ற ஆரம்பித்ததையும், அதே நேரத்தில் பெண்வழிச் சமூகத்தின் எச்சங்களைத் தன் அடையாளமாக சுமந்து வருகின்ற இரண்டு முரண்பட்ட சூழலை கொண்டுள்ளது.
ஒரு ஆணை அடையாளப்படுத்தும் பொழுது இவன் இந்த பெண்ணின் தந்தை எனக் கூறப்படுகின்றான். இது சேய்வழி அழைத்தல் எனப்படுகின்றது.

'நெடுமொழித் தந்தை' (அகம்
17:7)

அரச வம்சத்தினரும் பெண்களின் வழியே சுட்டப்படும் மரபு சங்க இலக்கியத்தில் இடம்பெறுகின்றது.

'அம் கலுந் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை சுடு போர்ச் சோழன்' (அகம்
96:12-13)
'இழை அணி பணைத் தோள், ஐயைதந்தை
மழை வளம் தரூஉம் மாவண் தித்தன்' (அகம்
6:3-4)
'ஒலி இருங்கதுப்பின் ஆயிழை கணவன்' (புறம்
138:8)

என்று பெண்ணிற்கான முக்கியத்துவம் அறியப்படுகின்றது.

தொடக்கக்காலப் பெண் விடியற்காலைத் தொட்டு அந்தி மறையும் வரையிலும் தீவிரமாக வேலையில் ஈடுபட்டிருந்தாள். உணவு சேகரித்தல், குழந்தைப் பராமரிப்பு, தோல்களைப் பதப்படுத்தி உபயோகப்படுத்துதல், பிராணிகளின் தோல்களிலிருந்து ஆடைகள், கவண்கள் மற்றும் கொள்கலன்கள் தயாரிப்பது, சமையல் வேலை, மண்பாண்டம் புனைதல், புற்கள், சோரைப்புல், நாணல், மரப்பட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு கூடைகள் வேய்தல், பற்கள் அல்லது எலும்புகளைக் கொண்டு மாலைகள் செய்தல், தற்காலிகமான அல்லது நிரந்தரமான உறைவிடங்களை நிர்மாணித்தல் என பல பணிகளைச் செய்திருக்கிறாள். மிகவும் தொடக்க காலத்தில் பெண்கள் உணவு சேகரித்து, குலம் உயிர் வாழ்வதற்கு உதவியதோடு, நாகரீகத்தை நோக்கி அது தள்ளாடிக் சென்ற பாதையில் மனித இனத்தை முன்னுக்குச் செலுத்துவதற்கும் உதவியது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூகப் பாகுபாடுகள் பெருமளவு இருந்ததாகத் தெரியவில்லை. மனிதஇன வளர்ச்சி சேகரிப்பு, வேட்டையாடுதல் என்றபடி நிலைகளைக் கடந்து வரும்பொழுது உற்பத்தியும், நிலையான வாழ்வும் கிட்டியது. இது மனிதனிடம் உடைமை எண்ணத்தை உருவாக்கியது.

சங்ககால மக்கள் அகவாழ்வில் காதலையும், புறவாழ்வில் வீரத்தையும், தங்கள் வாழ்க்கை மரபாகக் கொண்டு வாழ்ந்தனர். காதலைப் போற்றிய அளவிற்கு வீரத்தையும் போற்றினர். பெண்கள் வீரத்தில் மட்டுமல்லாது கல்வியிலும் சிறந்து விளங்கினர். வேட்டை சமுதாயத்தில் ஆண்களும், பெண்களும் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆண், பெண் இருவரும் வேட்டையில் ஈடுபட்டாலும், வேட்டையில் கொண்டு வந்த பொருள்களை பெண்ணே பங்கீடு செய்து கொடுத்திருக்கிறாள்.

சங்ககாலத்தில் பெண்கள் நேரடியாகப் போரில் ஈடுபடவில்லை எனினும் தங்கள் வீட்டு ஆடவர்களுக்கு வீரத்தை ஊட்டிப் போருக்கு அனுப்பும் துணிச்சல் மிகுந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவேதான் தொல்காப்பியர் தொடாக்காஞ்சி, ஆஞ்சிக்காஞ்சி, முதுகாஞ்சி, முதுபாலைக்காஞ்சி, தலைப்பெயல் நிலைக்காஞ்சி என்ற புறத்திணைத் துறைகளில் பெண்களின் நிலைகளையும், வீரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

புறப்பொருள் வெண்பா மாலையும், தலையொடுமுடிதல், ஆஞ்சிக்காஞ்சி, சிருஞ்சாரநிலை, உவகைக் கலுழ்ச்சி, தின்னைவேட்டல், மூதின் முல்லை, ஏறாண்முல்லை, முதுபாலை,தாபதநிலை போன்ற பல துறைகளின் மூலமாகப் புற வாழ்க்கையில் பெண்களின் பல்வேறு நிலைகளைச் சுட்டிக்காட்டுகின்றது.

மூதின் முல்லை என்பது மூதில் + முல்லை எனப் பிரித்து பொருள் கொள்ள முடியும். மூதில் என்பது முது + இல் எனப் பிரித்து பொருள் கொள்ளும்போது, பழைய மறக்குடி எனப் பொருள்படும். 'மூதின் முல்லை' என்பது மறக்குடியில் பிறந்த ஆடவர்க்கேயன்றி அக்குடியிலுள்ள மகளிர்க்கும் மறமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறும் புறத்திறை எனச் சென்னைப் பேரகராதி கூறுகிறது.

மறக்குடியில் பிறந்த பெண்டிர் மூதின் மகளிர் என்றழைக்கப்பட்டனர். மூதின் மகளிர் பற்றிய சொல்லாட்சி புறநானூற்றில் 'கெடுகசிந்தை கடிதவட்டுணிவே முதின் மகளிராதற்குமே' (புற
279) என்ற ஒக்கூர் மாசாத்தியார் பாடலிலும், முதின் பெண்டிர் என்ற சொல், 'மூதின் பெண்டிர் கசிந்தழ நாணி' (புற19) என்ற பாடலிலும் பயின்றுள்ளமையைக் காண முடிகின்றது.

மூதின்முல்லை மறக்குல மகளிரின் வீரத்தின் உச்சக்கட்டம் எனலாம். புறநானூற்றில் மூதின்முல்லைத் துறையில் அமைந்த பாடல்களில் மூன்று பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை,
9 பாடல்களை ஆண்பாற் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். 7 பாடல்களைப் பெண்பாற் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இப்பாடல்களில் தாயார் வீரவுணர்வு காட்டுவன-9, மனைவியர் வீரவுணர்வு காட்டுவன-11.

வீரன் ஒருவன் போர்க்களத்திற்குச் சென்று பகை வேந்தர்களின் படைகளை வீரத்துடன் எதிர்த்து நின்றான். பல வீரர்களைக் கொன்று தானும் மாண்டான். அவன் தாய் போர்க்களத்திற்குச் சென்று மாண்ட அவன் உடலைத் தேடினாள். புறமுதுகிட்டு ஓடாத வீரப்புண்ணுடைய தன் மகனின் உடலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவளுக்கு அப்போது ஏற்பட்ட பெருமிதத்தின் காரணமாக வற்றியிருந்த மார்பினின்றும் பால் சுரக்கிறது. இக்காட்சியை ஒளவையார்,

'இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி
வாடு முலையூறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலைத் தாய்க்கே'
(புறம்:
295)

வாகைப்போர் முடிந்ததும் இல்லத்திற்கு வராமல் காலந்தாழ்த்தும் மகனை எண்ணிப் பெருமிதம் கொள்கிறாள் தாய்;. பகை வேந்தனை வீழ்த்தாமல் மீளலாகாதெனத் தனது மகன் போரிடுவதால் அவனது தேர் இன்னும் வரவில்லை போலும் என்று வீரம் கனலும், ஆண்மையை எண்ணிப் பார்க்கும் தாயின் பெருமிதத்தை,

'வேந்துடன் நெறிவான் கொல்லோ
நெடிது வந்தன்றோ னெடுந் தகைதேரே'
(புறம்
296)

எனும் வரிகளில் சுட்டுகிறார்.

மறக்குடிப் பெண்ணொருத்தி அடுத்தடுத்து நடைபெற்ற வாகைப் போரிலே அன்புக்குரிய தந்தையையும், கணவனையும் இழந்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறாள். மீண்டும் தனது மனையிலிருந்து யாரைப் போருக்கு அனுப்புவதென, அவளது வீரமனம் வினவுகிறது. தனது சின்னஞ்சிறு பாலகனின் கையிலே வேலைக் கொடுத்து வென்று வாவென அனுப்பும் வீரத்தாய் (புறம்-276) காட்டப்படுகிறாள்.

மறத்தாய் ஒருத்தி தன் மகன் தும்பைப் போரில் முதுகில் புண்பட்டு இறந்தான் எனக்கேட்டுச் சிரிக்கிறாள். புறமுதுகிட்டு அவன் இறந்திருப்பின் அவனுக்குப் பால் கொடுத்த மார்பினை அறுத்து எறிவேன் எனச் சூளுரைத்து, களத்திற்குச் செல்லுகிறாள். வீழ்ந்து கிடக்கும் மகன், புறமுதுகிடவில்லை என்று கண்டு 'ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள்' (புறம்
278).

மறக்குடி பெண் ஒருத்தியிடம் எனது சிறிய இல்லத்தின் தூணைப் பிடித்து நின்றபடி உன் மகன் எங்குள்ளான்? என கேட்கிறாள். அதற்கு அந்த மற தாய் என் மகன் எங்குள்ளானோ தெரியவில்லை ஆயினும்,
'புலி சேர்ந்து போகிய கல் அளைபோல,
ஈன்ற வயிறோ இதுவே,
தோன்றிவன் மாதோ, போர் களத்தானே'
(புறம்
86)

என்று வீரம் பொங்க கூறுகிறார்.

அயல் அரசர்கள் போரின் மூலம் தன் நாட்டைப் பிடித்து மக்களை அடிமையாக்குதல் ஒரு போதும் நடக்கக் கூடாது என்று மறக்குடிப் பெண் கருதினாள். தன் நாட்டின் சுதந்திரம் தன் தமையன் உயிர்க்கும், தன் கணவன், குழந்தை உயிர்க்கும் மேலானது என்று எண்ணினாள், நாடு அயலானுக்கு அடிமையாவதை அவள் வெறுத்தாள் என்பதும் தெரிய வருகின்றது.

நாடோடியாக வாழ்ந்த மக்கள் நிலையான வாழ்வு கண்டு தமக்கென நிலத்தையும், பொருள்களையும், சொந்தப்படுத்தத் தொடங்கிய காலம் முதல் பெண் இரண்டாந்தர நிலையை அடைந்துவிட்டாள். பெண் இல்லத்திற்கு இன்றியமையாதவள். எனினும், அவளுக்கிருந்த உடலமைப்பு வேறுபாடுகள், இனவிருத்தி செய்யும் தன்மை போன்றவை அவளைச் சிற்சில நேரங்களில் இன்னொருவர் துணை நாடி நிற்கும் நிலைக்குத் தள்ளியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மணக் கட்டுப்பாடு மக்களிடையே நிலைபெறவே ஆண் பெண்ணிற்கு அவளுடைய இயலாமைக் காலத்தில் உற்ற துணையானான்.

தொடக்க காலங்களில் இனக்குழுக்களிடையேயும், நாட்டு மக்களிடையேயும் நடைபெற்ற இடைவிடாப் போரும், தம் தனித்தன்மையை நிலைநாட்டும் ஆர்வமும், வெளியுலகில் ஏற்பட்ட எதிர்ப்புகளும், ஆணுக்கு தன் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கியது. இதனால்,

'வினையே ஆடவர்க்கு உயிரே வாள்றுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'
(குறு
135:1:2)

எனப் பெண்கள் வீட்டிற்குரியவர்களாகவும், ஆண்கள் வினைஞர்களாகவும், பொருளீட்டும் கடமையுடையவர்களாகவும் மாறி, பொருளுக்கு உடைமையாளர்களாயினர். இச்சூழலில் தாய்வழி உரிமைகள் தூக்கியெறியப்பட்டன. ஆண்வழிச் சமூகம் உருப்பெற்றது.

ஆணே குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும், பார்த்துக்கொள்ளத் தொடங்கினான். இனவிருத்தி செய்யும் ஆற்றல் பெண்ணிற்கே அமைந்திருந்தமையால், குழந்தைகளைப் பெற்று, அவர்களைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பும் தானாகவே அவளுக்கு அமைந்துவிட்டது. அத்துடன் ஒரு இல்லத்திற்கு உணவினைச் சேகரித்து, அதைச் சமைத்து, இல்லத்தில் நிறைவினைச் சேர்க்கும் பணியுடன், அண்டிவந்த விருந்தினரை ஓம்புதலையும், அவளே தன் பொறுப்பாக்கிக் கொண்டாள்.

வெளியுலகில் போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண்பதிலும், பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தன் பெரும்பகுதிக் காலத்தைச் செலவிட்ட ஆடவன், குடும்பத்தின் நிலைபேற்றிற்கு அச்சாணியாக விளங்கியமையால், பெண்ணைவிட உயர்ந்த நிலையிற் கொள்ளப்பட்டான்.

ீனெறி பரதவர் மகள் (நற்
45:3)
குறவர் மடமகள் (கலி
39:16)
தண்டலையுழவர் தனிமடமகளே (நற்
97:9)
புதல்வன் தாய் (ஐங்
90:4)
உமணர் காதல் மட மகள் (அகம்
140:5
)

என சமூக செல்லாடல்கள் மாறின. தந்தைவழிச் சமூகம் உருப்பெற்ற விதத்தைக் கூறும் எங்செல்ஸ் 'ஒரு கணத்தின் எந்த அங்கத்தினரையும் பாதிக்க வேண்டியதில்லை. எல்லா அங்கத்தினர்களும் முன் போலவே இருந்துவர முடியும். இனிமேல் ஆண்களின் சந்ததிகள் கணத்துக்குள்ளேயே இருக்க வேண்டும். பெண்களின் சந்ததிகள் கணத்திலிருந்து விலக்கப்பட்டு தகப்பனின் கணத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்ற சர்வ சாதாரணமான தீர்;மானம் செய்தால் போதும். பெண்வழியாக வம்சாவளியைக் கணக்கிடுவது, தாய் வழியாக வாரிசுரிமையைக் கணக்கிடுவது இரண்டும் அத்தோது தூக்கியெறியப்பட்டன' என்கிறார் (சங்க இலக்கியத்தில் குடும்பம் ப.
69).

காலத்துக் காலம் ஏற்பட்ட போர் முயற்சிகளில் பகைவர்களிடம் கொண்ட தம் வெற்றியைப் பறை சாற்றப் பெண்களைச் சிறையெடுத்ததும் உண்டு. தொடக்க காலத்தில் பெண் போரிற் சிறையெடுக்கப்பட்டாலும், அவளை சிறையெடுத்த குழுவினரின் சொத்தாக அவள் கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக அந்தக் குழுவினருடன் சேர்ந்து அவர்களில் ஒருத்தியாக அவர்களின் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வாழ்ந்தாள். அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் பெண்கள் சிறைப்பிடித்துச் சென்ற குழுவினரின் உரிமையாகக் கொள்ளப்பட்டார்கள். அத்துடன் வீரமிக்க போர்வீரன் ஒருவன் தன் ஆற்றலை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்குடன் பகைக் குழுவினுள் சென்று பெண்களை சிறையெடுத்து வருவதுமுண்டு. தமிழகத்தில் வெற்றிகொண்ட அரசன் தன் பகையரசன் நாட்டுப் பெண்களை அவமதித்துத் துன்பப்படுத்தியமைக்குச் சான்றுகள் உண்டு.

நன்னன் என்ற தமிழ் அரசன் போரில் தன் பகையரசனின் உரிமை மகளிரைப் பற்றி வந்து அவள் தலையை மழித்து, அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றாலே அப்பகைவனின் யானையைக் கட்டியதாக நற்றினை கூறுகின்றது. (நற்:270).

இனக்குழு வாழ்க்கைக்குப்பின் ஏற்பட்ட குடும்ப அமைப்பில், திருமணம் பெண்ணிற்குப் புதிய மதிப்புகளையும், புதிய நிலைகளையும் அளிக்கின்றது. அதே நேரத்தில் அவளிடமிருந்து சமுதாயம் புதிய கடமைகளையும் எதிர்பார்க்கின்றது. அத்துடன் அவளுக்கான நில குணநலன்களையும், அக்குணநலன்கள் இல்லாத நிலையில் அவளை சமுதாயம் இழிவுபடுத்துவதையும் பார்க்க முடிகிறது.

பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் பல்வேறு சூழலுக்கேற்ப கட்டமைக்கப்பட்டிருந்ததை நாம் காண இயலுகின்றது. பெண்கள் திருமணத்திற்கு முன்பு தன் தந்தையின் கடுமையான காவலுக்கும், கண்காணிப்புக்கும் உரியவர்களாகக் காட்டப்படுகின்றனர்.

'தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடு மொழித்தந்தை அருங்கடி நீவி' (அகம்
176:7)
'அருங்கடி அன்னை காவல் நீவி' (நற்
365:1
)

திருமணமானப்பிறகு 'கற்பு' என்ற பண்பு இன்றியமையாத பண்பாக விளங்கியது. கற்பெனும் பண்பு ஒரு பெண்ணிடம் இல்லாதபோது அவள் மதிப்புடையவளாகக் கொள்ளப்படவில்லை. அத்தகையப் பெண்கள் பொது மகளிர் எனவும், கற்புடைய பெண்கள் குலமகளிர் எனவும் அழைக்கப்பட்டனர். சங்க இலக்கியங்களில் கற்பெனும் சொல் முல்லை, கல்வி, கற்பனை, மதில், மகளிர் நிறை, பயிற்சி போன்ற பல பொருள்களில் வழங்கப்பட்டாலும், பெருமளவில் பெண்களுடன் தொடர்புபடுத்தியே பேசப்படுகிறது. இல்வாழ்வில் ஈடுபட்ட பெண்களுடன் தொடர்புபடுத்தி குறிப்பாக அவர்கள் ஒரே ஆடவனுக்கு உள்ளத்தாலும், உடலாலும் உண்மை உடையவர்களாக வாழ்வதைக் குறிக்கிறது.

சங்ககாலத்தில் கற்பு பல வகைகளில் பேசப்படுகின்றது. பன்மாண்கற்பு, (கணவனுக்கு உடலாலும், உள்ளத்தாலும் பெண் உண்மையுடையவளாக இருப்பது மட்டுமின்றி பல்வேறு விரும்பத்தக்க குணங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்). மனைமாண் கற்பு (கணவன் பிரிந்து சென்ற போதும், அவனுக்கு உண்மையுடையவனாக வீட்டிலேயே அவள் காத்திருத்தல்). செய்தீர் கற்பு, மாசில் கற்பு (எல்லாப் பண்புகளுடன் மனைவி குற்றமற்ற கற்புடையவளாக இருக்க வேண்டும்). மறங்கடித்த கற்பு (கொடுமையை நீக்கிய பெறுதற்கரிய கற்பினை உடையவர்கள் - பார்ப்பனீய பெண்களை குறிப்பது). அடங்கிய கற்பு. ஆறிய கற்பு, அறக்கற்பு – (விதவையாக இருக்கும்போது அவள் அடங்கிய. ஆறிய கற்பு). இறந்த கற்பு (அளவிறந்த கற்பினை உடையவள்). நாணலதில்லாக் கற்பு. நிலைய இய கற்பு, வியங்கிய கற்பு, உவர் நீங்கு கற்பு (வெறுப்பு நீங்கிய கற்புடையவள்). முல்லை சான்ற கற்பு (சொற் பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறும் செய்யும் தன்மை).

கற்பைப் பற்றிய சிந்தனை அடைச் சொற்களும் சங்க இலக்கியத்திலே காணப்படுகின்றன. இதன் நீட்சியாக பிற்காலத்தில் தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு எனப் பெண்ணுக்குரிய கற்பும் கொள்ளப்பட்டது. கணவனிறப்புக் கேட்டதும் உடன் இறப்பவர்கள் தலைக் கற்புடையயோராகக் கொள்ளப்பட்டனர். இடைக்கற்புடைய பெண்கள் கணவன் இறந்தபின் அவன் சிதையில் தம்மை மாய்த்துக் கொள்வர். கடைக் கற்புடையோர் கைம்மை நோன்பு கொண்டு கணவனை மீண்டும் மறுபிறப்பில் எய்த எண்ணி வாழ்வார்கள்.

மனித இனத்தின் ஒவ்வொரு குழுவினரும். ஒவ்வொரு இனத்தினரும். ஒவ்வொரு நாட்டினரும் தத்தமக்கென்று நிலை நிறுத்தப்பட்ட கொள்கைகளையும், எண்ணங்களையும் அவற்றின் வழிப்பட்ட செயற்பாடுகளையும் கொண்டுள்ளனர். சில நடைமுறைகளைகள் எதற்காக என்றே தெரியாத தன்மையில், வந்த செயல்களுள் கணவன் இறப்பில் அவனுடைய சிதையிலேயே மனைவியும் வீழ்ந்து இறக்கும் செயலான எரிமூழ்குதல், இத்தகையப் பழக்கம் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வருவதற்கு காரணம் யாது? தன்னிச்சையாக இதைப் பெண் மேற்கொண்டாளா? பிறரின் வற்புறுத்தலுக்காக இதனை மேற்கொண்டாளா? என்பதை அறிய முடியவில்லை.

நம் நாட்டில் மிகப்பழங்காலத்திலேயே பல சமூக மக்களிடையே இவ்வுலக வாழ்வு போல் இறப்பின் பின் மறு உலகிலும் ஒரு வாழ்வு உண்டு என்று நம்பினர். அவன் பயன்படுத்திய பொருள்களை அவனோடு வைத்து எரித்தனர். அல்லது புதைத்தனர். இது உலகம் முழுவதற்கும் இருந்தது எனலாம்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கணவன் இறப்பில் பெண்கள் தீப்பாயும் வழக்கம் சங்கப்பாடல்களிலேயே காணப்படுகின்றது. தொல்காப்பியமும் எரிமூழ்குதல் பற்றி குறிப்பிடுகின்றது. தொடாஅக் காஞ்சி, ஆஞ்சிக் காஞ்சி, மூதானந்தக் காஞ்சி, முதுபாலை, தாபதநிலைக் காஞ்சி, பாலைக்காஞ்சி ஆகியவை கணவன் இறப்பில் பெண் நிலையைக் குறிப்பிடுகின்றன.

கணவன் இறந்தபின் பெண்கள் வாழவிரும்பாமைக்கு காரணங்கள் யாவை கணவன், இறந்த நிலையில் தனித்துவிடப்பட்ட நிலை, பாதுகாப்பின்மை, கைம்மை நோன்பு நோற்று நிற்கும் நிலை.

சங்க சமூகத்தில் கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்புமேற் கொண்டுள்ளனர். இவர்களின் வாழ்வியல் மிகச் சிரமத்துடனும், கடுமையான விதிமுறைகளுடனும் இருந்தது. எனவே இவ்வாறு உயிர் வாழ்வதைவிட தீப்பாய்தல் போன்ற நிகழ்வுகள் வழி உயிர் நீத்தல் விரும்பப்படும் சூழலை உணர இயலுகின்றது.

கைம்மை நோன்பு மேற்கொள்ளும் பொருட்டு வளை, கொடி உள்ளிட்ட அணிகலன்களை நீக்குதல், கூந்தல் களைதல் போன்றவற்றைக் கடைபிடித்திருக்கின்றனர்.

'ஒன் நுதல் மகளிர் கைம்மை கூர
அவிர் அறல் கடுக்கும் அம்மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே' (புறம்
25)
'மெல்இயல் மகளிரும் இழை களைந்தனரே' (புறம்
224)
'தொடி கழி மகளிரின் தொல்கவின் வாழ' (புறம்
238)


கணவனை இழந்தப் பெண்கள் வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்து இடப்பட்ட விதை போன்றதும், நல்ல வெண்மையான மணம் மிகுந்த நெய் தீண்டப்படாததும், கீரை இடையிடையே பயின்று கையால் பழிந்து கொள்ளப்பட்டதுமான. நீர்ச் சோற்றுத்திரள், அத்துடன் வெண்மையான எள்ளுத் துவையலையும், புளியுடன் சமைத்த வேளைக் கீரையையும் வேகவைத்து, உணவாகக் கொண்டனர். பருக்கைக் கற்கள் அமைந்த படுக்கையின் மீது பாயுமின்றிக் கிடப்பர் (புறம்
246) பாடலில் பேசப்படுகிறது.

'ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பறுவல் போல' (நற்
353:1,2)

என்று கைம்பெண்கள் தம் தனிமைத் துயரினின்று நீங்கவும், பிழைப்பின் பொருட்டுப் ஆடை நெய்ய நூல் நூற்கும் தொழிலினை மேற்கொண்டிருக்கின்றனர்.

அரச குல மகளிரும் இதற்கு விதிவிலக்கல்ல. சங்க இலக்கிய காலம் அரசினை மையமிட்டதாக இயங்கத் தொடங்கிய காலம், மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என ஆள்பவனை 'இறை' எனக் கருதிய காலகட்டம். எனவே அரசகுலப் பெண்கள் போரின் விளைவாக நேரடியாகப் பாதிக்கப்படுவதையும், சமூகத்தின் ஆதரவற்ற நிலையையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

அரசகுலப் பெண்கள் குறித்துப் பாடியுள்ள புலவர்கள் அவர்களின் பண்புநலன் சுட்டிப் பேசுகையில் கற்புத்திறம் பற்றியும், அதுவே அவர்களின் சிறப்பிற்கான முதன்மை குணமாகவும் கூறுகின்றனர்.

'மாண் இழை மகளிர் நாணினர்கழிய
தந்தை தம் ஊர் ஆங்கண்
தெண் கிணை கறங்கச் சென்று ஆண்டு சுட்டணனே' (புறம்
78:10-12)

தங்கள் கணவர்கள் புறமுதுகிட்டால் அதற்கு நாணி பெண்கள் உயிர் துறந்த செய்தி இதன்மூலம் நமக்குத் தெரியவருகின்றது. அரச பெண்கள் நிராதரவாக நிற்கும் நிலை, இவர்களைப் பேணுவோரும், புரப்போரும் இல்லை. இத்தகையச் சூழ்நிலையில் கைம்மை நிலையின் வெம்மையும், கசப்பும்கூட அவள் கணவனுடன் இறப்பதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். மேலும் இத்தகையை எரிமூழ்கும் வழக்கம் பெண்ணிற்கு உயர்வைக் கொடுக்கும் என்ற ஒரு ஆழ்ந்த நம்பிக்கையும் பெண்ணை இத்தகைய செயலில் ஈடுபடுத்திருக்கலாம்.

'பல் சான்றீரே பல்சான்றீரே
செல் கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சி பல்சான் றீரே
அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காய்போல் அனல் விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்தட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பாற்பெய் பள்ளிப் பாயின்றுவதியும்
உயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டீமமம்
துமக்கரி தாகுக தல்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
துள்ளிதழவித்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயு மோ ரற்றே' (புறம்
246)

பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தன் கணவனின் இறப்பிற்கு தீப்பாயத் தீர்மானிக்கிறாள். அவளைப் பெரியோர் தடுக்கிறார்கள். பிறப் பெண்களைப் போல கைம்மை நோன்பினைக் கடைப்பிடித்து, நெய்யில்லா உணவில் வெள்ளை எள்ளின் சாந்தையும், புளி கலந்து சமைத்த வேளைக் கீரையையும் மட்டும் உணவாகக் கொண்டு, பாயில்லாத நிலத்தில் படுத்துக் கைம்மை வாழ்வு வாழ்வதை நான் விரும்பமாட்டேன். உங்களைப் போன்றவற்களுக்குச் சுடுகாட்டிலுள்ள ஈமத் தீ அணுக முடியாததாக இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த ஈமத்தீயும், குளிர்ந்த நீருடைய குளமும் ஒன்றுதான்' எனக் கூறுகிறாள்.

இன்னொரு பாடலில் பெண் எரியில் மூழ்குவதற்குப் பதிலாகத் தாழியுள் தன்னையும் இறந்த கணவனுடன் புதைப்பதற்காகப் பெரிய தாழியாகச் செய்யும்படி பானை செய்யும் குயவனை வேண்டுகின்றாள்' (புறம்
240).

கைம்மை பெண்மைக் களிக்கும் துன்பத்தினுடைய உச்சநிலை, பெண்மையின் தன்மை மறக்கப்பட்டு, வாழ்வின் வன்மையெல்லாம் உருவானதே போன்ற ஒரு நிலையை ஏற்றுக்கொண்டு வாழும் ஒரு நிலைதான் கைம்மை. கைம்பெண் என்ற சொல்லிற்குத் தமிழ்ச் சமுதாயத்தில் ஆண்பாற் சொல்லே இல்லை எனலாம். ஆணுக்கு காதலி இறந்தபின் உள்ள நிலையினை தபுதார நிலை என்று கூறினாலும், பெண் செயல்படுவது போல் ஆண் செயல்படவில்லை. கைமையின் கொடுந்துயர் ஆடவருக்கில்லை. அதே போல கைம்மையின் கசப்பான சூழ்நிலைத் திணிப்புகளும் ஆணுக்கு என்றும் இருந்ததில்லை.

கணவனைப் பிரிந்திருக்கும் மகளிர் ஒப்பனை செய்ய மாட்டார்கள். தலைவன் தன் காதலை கூற்றாய் சொல்லாமல் குறிப்பாய் சொல்லிச் செல்கிறான். தலைவி அதனை உணர்ந்தாலும், பெண்கள் அதனை கேட்டல் முறையன்று.

'கண் நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்
பெண் அன்று, உரைத்தல் நமக்காயின்' (கலி 37)
இங்கு பெண்கள் ஆண்களிடம் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த இருந்த கட்டுப்பாடு தெரிகின்றது.

ஆயர்களின் திருமண முறைகளில் ஏறுதழுவுதல் முக்கிய இடம் பெறுகின்றது. ஏறு தழுவலில் வெற்றி பெறுபவர்க்கே பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பர் என்பதால் இவ்விடத்தில் வீரம் முதன்மை பெறுகின்றது. பெண்களின் விருப்பம் பின்னடைகின்றது.

கணவரால் கைவிடப்பெற்ற மகளிர், நீர் வேட்கையாலே, தண்ணீரைக் கோரி குடிக்கப்பட்டு பின்னர் தூக்கி எறியப்பட்ட, ஈச்சிலாற் பயன்படாத பனங்குடைகளை ஓப்பர் என இகழ்வாகக் கருதப்பட்டனர் (கலி
23:7:8)

அரசியலிலும் பெண்கள் நேரிடையாக ஈடுபட்ட குறிப்பு இல்லை. பெண் ஆளுநர்கள் குறித்தும் செய்திகள் கிடைக்கவில்லை. பெண் துறவு பூண்டது குறித்து சங்கப்பாடல்கள் எதுவும் பேசவில்லை.

தந்தைவழிச் சமுதாயத்தில் குடும்பம் என்பது ஆண்களை மையமிட்டதாக இருந்ததாலும், பொருளாதார சுதந்திரம் அற்றவர்களாகப் பெண்கள் இருந்தமையாலும் தலைவனின் பரத்தமையைப் பெண்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாயினர்.

இதனை உடைமைச் சமூகத்தின் பெண்ணடிமைத் தனங்களாக சங்க இலக்கியங்கள் நமக்கு புலப்படுத்துகின்றன.

பெண் இல்லாத வானிலோ அல்லது பூமியிலோ சொர்க்கம் இல்லை. பெண் இல்லாமல் சூரியனில்லை, சந்திரனில்லை, விவசாயமில்லை, நெருப்புமில்லை (அரபியப் பழமொழி) மானிட இனத்தின் கதை பெண்ணுடன் தொடங்குகிறது. மூலமனித இன மரபு நுட்ப அணுக்களைக் கொண்ட இனக் கீற்றைப் பெண்தான் தாங்கியிருந்தாள். இன்று வரையிலும் அவள்தான் தாங்கியிருக்கிறாள். அவளுடைய உழைப்பும், திறமையும், அவளுடைய உயிரியல் அமைப்பும்தான் மனித இனத்தின் திறவுகோலைக் கொண்டிருந்தது. எல்லாப் பெண்களும் சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை அடைந்திருந்திருந்தனர். தந்தை வழிச் சமுதாயத்தில் பெண்ணிற்கான வளர்ச்சியும், உயர்ச்சியும் மரபுவழி வந்த பல எண்ண அணைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெண்ணும், ஆணும் தாம் பிறந்த சமுதாயத்தை, தமது நாட்டை உயரத் தூக்கிச் செல்லும் உரமான இரு இறக்கைகள். இதுவரை ஆற்றல் குறைந்த இறக்கையாக நோக்கப்பட்ட பெண், இனிமேல் சிந்தனை திறனும், செயல் திறனும் தங்கு தடையின்றி வெளிப்படச் சமுதாயம், குறிப்பாக ஆண் சமுதாயம் துணைபுரிய வேண்டும். அப்போதுதான் நலமிக்க நாடு உருவாக முடியும்.