அவையை அடக்கும் அவையடக்கம்

 

பால சிவகடாட்சம்


நூலின் ஆரம்பத்தில் அவையடக்கம் என்று ஒன்றைக் கூறுவது தமிழ்நூலாசிரியர்கள் மத்தியில் நெடுங்காலமாக இருந்துவரும் ஒரு வழக்கம். சங்ககாலத்தில் இந்த வழக்கம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இதனைக்காண முடியவில்லை. அவையடக்கம் கூறும் வழக்கம் யாரால் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. திருமூலரின் திருமந்திரத்தில் அவையடக்கம் என்ற தலைப்பில் சில பாடல்களைக் காணமுடிகிறது.

ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே


ஆனால் இப்பாடல் அவையடக்கம் என்பதன் வரைவிலக்கணத்துள் அடங்குவதாக இல்லை. இறையுண்மையைத் தமிழில் உணர்த்துவதே மூலரின் நோக்கம். இறைவனின் பெருமையை தான் மட்டுமல்ல எவராலும் அறிந்து கொள்ள முடியாது என்று கூறுவதால் அவையோர்முன் இவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதாகக் கருதமுடியாது. மேலும் இப்பாடல்கள் நூலின் தொடக்கத்தில் இடம்பெறவில்லை என்பதையும் கவனிக்கலாம்.

நூலாசிரியர் ஒருவர் தமது நூலில் அவையடக்கம் என்ற ஒன்றைச்சேர்க்க வேண்டிவந்ததன் வரலாற்றுப் பின்னணியைச் சற்றுநோக்குவோம். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய சோழப்பெருமன்னர் தமிழ்மொழியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினர். இலக்கண இலக்கிய நூல்கள் பல இக்காலப்பகுதியில் தோன்றலாயின.

அரசன் முன்னிலையில் புரவலரும் பாவலரும் நிறைந்திருக்கும் அவையில் நூலாசிரியர் தாம் ஆக்கிய நூலைத் தாமே படித்துக் காட்டுவார். அவையோர் அவ்வப்போது எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பார். தாம் ஆக்கிய திருத்தொண்டர் கதையைக் கேட்பதற்கு அநபாயச்சோழனின் அரசவை தில்லைப்பதியில் கூடியமை பற்றி சேக்கிழார் சுவாமிகள் தெரிவிக்கின்றார்.

மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப்பேர் அம்பலம் செய்ய
தூய பொன் அணி சோழன் நீடுழி பார்
ஆய சீர் அநபாயன் அரசவை


இப்படியானதொரு நூல் அரங்கேற்ற நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து அரங்கத்தில் கூடியிருக்கும் அவையோருக்குத் தனது பணிவைத் தெரிவித்துக் கொள்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அவையடக்கம் என்பதற்கு 'சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை' என்று சீவகசிந்தாமணி உரையாசிரியர் விளக்கம் தருகிறார். ஆனால் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணநூலுக்கு உரை எழுதிய சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் அவையடக்கம் என்பதற்கு ஒரு வித்தியாசமான விளக்கத்தைத் தந்துள்ளார். 'அவையடக்கமாவது யாதாயினும் ஒருநூல் செய்வோன் அவையத்தார் தன்நூலிற் குற்றம் கூறற்கு எழவொட்டாது வழிமொழி கூறி அவரை அடக்குதல்' என்று அவையடக்கத்தின் நோக்கத்தை விளக்குகிறார் இவர். இவரது கருத்தின்படிஇ இங்கே அடக்கம் என்பது பணிவு என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை; மாறாக அவையடக்கம் என்பதற்கு அவையை அடக்குவது என்றே பொருள்கொள்ளவேண்டும்.

நூலாசிரியர் தாம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி எவ்வளவு பெரியதுஇ கடினமானது என்பதை சபையோர்க்கு உணர்த்துவதும் தம்மீது எழக்கூடிய விமர்சனங்களை இயன்றவரை தவிர்ப்பதுமே அவையடக்கத்தின் நோக்கம் எனலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் அவையடக்கம் பாடியுள்ளான். கம்பனைப் போன்றோர் விமர்சனங்களுக்குப் பயந்து அவையடக்கம் பாடினார்கள் என்று கருதமுடியுமா?

இந்த இடத்தில் கம்பரின் நிலையைச் சற்றுக் கவனிப்போம். கம்பனுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ராமர் கதை தமிழ்நாட்டவர்க்கு நன்கு பரிச்சயமான ஒன்று. சமஸ்கிருதமொழியில் இக்கதை செய்தவர் மூவர். இவற்றுள் மிகச்சிறந்ததென எண்ணப்பட்ட வான்மீகி ராமாயணத்தைத் தமிழில் தரவேண்டும். உள்ளதை உள்ளபடி அதேசமயம் தமிழ் நாட்டுமக்கள் ஏற்றுக் கொள்ளும் முறையில் தரவேண்டும். சோழமன்னன் முன்னிலையில் ஒட்டக்கூத்தர் போன்ற தலைசிறந்த கவிஞர் பெருமக்கள் நிறைந்திருக்கும் அவையில் அரங்கேற்றவேண்டும். இப்படியானதொரு கட்டத்தில்தான் கம்பர் அவையடக்கம் பாடுகிறார். எப்படி?

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றுஇக்
காசில் கொற்றத்து இராமன் கதை அரோ


பாற்கடலுள் நுழைந்துவிட்ட பூனை ஒன்று அதனை முற்றிலும் நக்கிக் குடித்துவிட முயல்வதைப்போல் நானும் வான்மீக ராமாயணம் என்ற பெருநூலைத் தமிழில் தரத் துணிந்தமைக்கு எனது பேராசையே காரணம். குற்றங்குறைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டி நிற்கின்றான் கம்பன்.

அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?


அரங்கத்தில் ஆடும் இளம்பெண்களின் பாதங்கள் தரையில் கீறிவிட்டதற்காக அரங்கத்தை அமைத்த தச்சர் கோபித்துக் கொள்வாரா. அதுபோல படித்தவர்கள் நீங்கள். என் கவிதையில் குற்றம் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் கம்பர்.

அவையடக்கம் என்பது என்னவென்றே எனக்குத்தெரியாது. அடக்கம் என்று எதனைச்சொல்லுகிறார்கள் என்றும் தெரியவில்லை. இயன்ற வரை குற்றம் தவிர்க்கும் நாவை உடையவன். என் சிறிய வார்த்தை களையும் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார் ஓர் அப்பாவிப் புலவர்.

அவையடக்கம் என்பது அறியேன் இற்றாமென்று
எவையடக்கம் என்பேன் எளிதில்-சுவையடக்கு
நன்மைகள் இல்லேன் நவையடக்கு நாவுடையேன்
புன்மொழியுங் கொள்வீர் பொறுத்து


குற்றம் கண்டுபிடிப்பதற்கென்றே சிலர் அவைக்கு வருவார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரின் எழுத்துக்களிலும்கூடப் பிழை கண்டுபிடிப்பாரகள். அவர்களைப்பற்றி நான் கவலைப்படவில்ல என்று கூறுகிறார் கந்தப்புராணம் பாடிய கச்சியப்பர்.

குற்றமே தெரிவார் குறுமுனி
சொற்ற பாவினும் ஓர் குறை சொல்வரால்
கற்றிலா வென் கவி வழுவாயினும்
முற்று நாடி வல்லோர் உய்த்துரைக்கவே


இவரது முதற்பாடலான கடவுள் வாழ்த்திலே வரும் 'திகடசக்கர' என்னும் முதலாவது சொற்றொடரிலேயே இலக்கணப்பிழை கண்டு பிடிக்க முற்பட்டவர்களல்லவா இவரது அவையோர்கள். எனவேதான் கச்சியப்பரின் அவையடக்கம் இவ்வாறு அமைந்தது.

முழுமதியிலும் கறைகளைப் பார்க்கிறோம். ஆயினும் நிலவின் பயன் கருதி உலகம் அதனைப் போற்றவில்லயா? அதுபோல் நல்லவர்கள், வல்லவர்கள் எனது நூலில் குற்றம் காணினும் இது கந்தனின் கதையென்பதால் ஏற்றுக்கொள்வார்கள் என்கிறார் கச்சியப்பர்.

குறைபல மாமதி கொளினும் அன்னதால்
உறுபயன் கருதியே உலகம் போற்றல் போல்
சிறியஎன் வெற்றுரை சிறப்பின்று ஆயினும்
அறுமுகன் கதை இது என்று அறிஞர் கொள்வரே


இதையே வேறொரு விதமாகக் கூறுகிறார் மற்றும் ஒரு புலவர். நோய் வாய்ப்பட்டவர் கசக்கும் என்பதற்காக மருந்து எடுக்கமாட்டேன் என்று கூறிவிடுவாரா? குளிருக்காகவோ சமையலுக்காகவோ நெருப்பின் அருகில் இருப்பவர்கள் அங்கே எழக்கூடிய புகை கூடாது என்று விலகிப் போவார்களா? அப்படிச் செய்வார்களானால் அவர்களைப்போல் வேறு மடையர்கள் இருக்கமுடியுமா? அதுபோலத்தான் முக்குற்றமும் இல்லாத இறைவன் புகழ் பாடுவதால் என் சொல்லில் வரும் குற்றமும் குற்றமே அல்ல என்கிறார் இப்புலவர்.

நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார் புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறுவேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே


ஒரு சிலர் இருக்கிறார்கள் தமக்குப்பிடிக்காதவர் எதைச் சொன்னாலும் அதில் ஏதாவது ஒரு குற்றத்தைக் கண்டு பிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். வேண்டப்பட்டவர்கள் எதையாவது உளறிவைத்தாலும் ஆகா ஓகோ என்று புகழ்வார்கள்.

வேறுசிலர் இருக்கிறார்கள். இவர்களால் உருப்படியாக எதையும் செய்யமுடியாது. ஆனால் ஊக்கம் உடையவர்களைத் தட்டிக்கொடுக்க மாட்டார்கள். மாறாக 'உமக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை. உம்மைவிட எத்தனையோ பெரியவர்கள் இதைப்பற்றியெலாம் எப்பொழுதோ எழுதிவிட்டார்கள்' என்று நக்கல் அடிப்பார்கள். இவர்களுக்கு நல்ல பதிலடி கொடுக்கிறார் வீரசோழியம் என்ற தமிழ் இலக்கணநூலை எழுதிய புத்தமித்திரர் என்ற சோழநாட்டுப் பௌத்தபிக்கு. இவர் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பர்.

ஆயுங் குணத்து அவலோகி தன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண் தமிழ் ஈங்கு உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பின்
ஈயும் பறக்கும் இதற்கு என்கொலோ சொல்லும் ஏந்திழையே.


எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் போதிசத்துவரான அவலோகிதனிடம் கேட்டறிந்து அகத்தியன் இவ்வுலகத்திற்குத் தந்த தமிழ் இலக்கணம் பற்றிப் பேசுவதற்கு இங்கு நீயும் வந்துவிட்டாயோ என்று கேட்பீர்கள். உண்மைதான். ஆனால் பருந்து பறக்கும் அகண்ட வெளியில் ஈயும் பறக்குமல்லவா. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்று கேட்கிறார் இவர். அகத்தியர் சிவபிரானிடமிருந்தும் முருகப்பெருமானிடமிருந்தும் தமிழ் இலக்கணம் பற்றி அறிந்துகொண்டு உலகுக்கு வழங்கினார் என்பது சைவர்கள் கூறும் கதை. வீரசோழிய ஆசிரியர் பௌத்தரானபடியால் அகத்தியர் போதிசத்துவரான அவலோகிதரிடம் தமிழ் பயின்றவராகக் கூறிவைக்கின்றார்.