ஞானம் " ஈழத்துப் புலம் பெயர் இலக்கியம்" - சிறப்பிதழ் அறிமுக விழா - கனடா

தலைமையுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

 

நாள்:     21-03-2015

நேரம்:  மாலை 4:00 முதல் 7:00 வரை

இடம்  ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
 


 

நூல் வெளியிடுவதும், பட்டங்கள் வழங்குவதும், இரங்கல்கள் நிகழ்த்துவதும், தனிநபர் துதி பாடுவதும், சார்புப்போக்குகளும் ரொரன்றோ தமிழ்ச்சங்கத்தின் விதிமுறைக்குள் அடங்கா. அவை எமது நோக்கமும் அல்ல. தமிழ்ச்சங்கம் என்றாலே அரசியல் சார்பும், அதிகாரப்போட்டியும், நிதிசேர் நிகழ்ச்சிகளும், தேசியம், புனர்வாழ்வு என்ற போர்வைகளில் நடக்கும் நிதிக் கையாடல்களும் நிறைந்த சமகாலப் பின்ணணியிலே இவை கடந்து தமிழ் இலக்கியத்தை அணுகவும், ஆராயவும், கலந்துரையாடவும், ஐயம் தெளியவும் ஒரு தரமான தளமாகவும், கருத்தாடல் களமாகவும் உருவானதே ரொரன்றோ தமிழ்ச்சங்கம். இது தனிப்பட்டவர்களுடைய சங்கமல்ல. கருத்தாடாலில் பங்களிக்கின்ற, பங்கு பற்றுகின்ற எங்கள் யாபேரினதும் சமூகமே ரொரன்றோ தமிழ்ச்சங்கம்.

 

தன்னந்தனியான ஒரு தீவிலே இரண்டு தமிழர்கள் கரையொதுங்கினால் என்ன செய்வார்கள் என்பது சிரித்திரன் சஞ்சிகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஒரு கேலிச்சித்திர வினா. சங்கம் அமைப்பார்கள்; சண்டை பிடிப்பார்கள்; எனபது அதில் ஆசிரியர் சிவஞானசுந்தரம் எழுதிய பதில்.

 

இந்தப் பின்ணணியிலே இப்போதுதான் தோன்றித் தளிர் நடை போடும் எமது தமிழ்ச்சங்கம் பண்டைய மூன்று தமிழ்ச்சங்கங்களைப்போல தரமான படைப்புகளைத் தேர்ந்து தொகுப்பது சாத்தியமா என்ற வினா எமது சங்கத்தின் ஆரம்ப காலத்தில் எம்மிடையே எழுந்ததுண்டு.

 

தரமான இலக்கியங்கள் கால வெள்ளத்திலே அழிந்து போகாமல் காப்பதற்கு தமிழர்கள் பழங்காலத்திலிருந்தே கையாண்டுவந்த யுத்திதான் இலக்கியங்களின் தொகுப்பு முறை.

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை என்னும் எட்டுதொகை நூல்கள்; திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டு;

திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை என்னும் நீதி நூல்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்; பன்னிரு திருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், நூறாண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட பதினெண் பாடல்கள் போன்ற சமய இலக்கியங்கள் என்பன தமிழ் இலக்கியத் தொகுப்பு முறையின் உதாரணச்சான்றுகளாம்.   

 

ஆயினும் சமகாலத்தில் இவ்வாறான இலக்கியத் தேர்விலும், தொகுப்பிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், எழக்கூடிய பகை எதிர்ப்பு மற்றும் நட்புச்சார்பு சிக்கல்களையும் கருத்தில் கொண்டு நாம் இதிலே தயக்கத்துடன் நின்ற வேளையில் காலத்தின் தேவையாலும் கடவுளின் அருளாலும் வழிகாட்டல் போல எம்மைத் தேடி வந்ததுதான் இலக்கியத்தோட்டம் அ.முத்துலிங்கம் ஊடாக வந்த வைதேகி ஹேர்பேட் அவர்களின் சங்க இலக்கிய நூல்தொகுப்பு அறிமுகம். வைதேகி ஹெர்பெட் இனது சங்க இலக்கியம் முழுமைக்குமான  தமிழ் மூலத்துடனும், தமிழ் ஆங்கில பதவுரையுடனும், ஆங்கில தொகுப்புரையுடனும் கூடிய நூல் தொகுதி அருமையான தேவையான வரலாற்று மற்றும் மரபுக் குறிப்புகளுடனும், சங்க இலக்கியத்துக்கான அறிமுக நூலுடன் சில மாதங்களுக்கு முன்னால் ரொரன்றோ தமிழ்ச்சங்கத்தால் கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

 

இந்தப் பின்னணியிலே 2000 ம் ஆண்டு இலங்கையிலே ஆரம்பிக்கப்பட்ட ஞானம் சஞ்சிகையானது தனது 50 வது இதழை இலக்கியத் தரம் மிக்க பொன் மலராகவும், 100 வது இதழை ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாகவும், 150 வதுஇதழை ஈழத்துப் போர் இலக்கியமாகவும் வெளியிட்டுத் தடம் பதித்த ஞானம் சஞ்சிகை தனது 175 வது இதழை ஈழத்துப் புலம் பெயர் இலக்கியத்தின் சிறப்பிதழாக உலகத் தமிழ் இலக்கியத்துக்கு சமர்ப்பித்துப் பெருமை கொள்கின்றது. இன்று இதனைக் கனடாவில் ரொரன்றோ தமிழ்ச் சங்கத்தினூடாக அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். நாம் இந்நிகழ்வை எமது சங்க காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருகின்ற  இவ்வாறான தொகுப்பு இலக்கிய மரபினதும், இலக்கிய ஆவணக் காப்பு முயற்சியினதும் தொடர்ச்சியாகவே காண்கின்றோம்.

 

முற்போக்கு, பிற்போக்கு, இடம்போக்கு, வலம்போக்கு, கடும்போக்கு, மென்போக்கு, சீனப்போக்கு, இரஷ்ஷியப்போக்கு, ஈழப்போக்கு, ஐக்கிய இலங்கைப்போக்கு, தேசியப்போக்கு, சர்வதேசப்போக்கு, மானுடப்போக்கு, பெண்போக்கு, ஆண்போக்கு, அலிப்போக்கு, உடன்போக்கு என்று உள்வாங்கியதையெல்லாம் வயிற்றுப்போக்குகளாகவும் வாந்தியெடுப்புகளாகவும் அப்படியே வெளித்தள்ளும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகிலே (purgative literature world) எந்தப்போக்கையும் சாராமல், எந்தப்போக்கிலும் எடுபடாமல், எந்தப்போக்கிலும் அடங்காமல், எல்லோரையும் சேர்த்து நடைபோடும் அதேவேளை  எல்லாப்போக்குகளையும் ரசித்து, சகித்து, உள்வாங்கி, அவற்றுள் தரமானவற்றை வெளித்தருகின்ற ஞானம் சஞ்சிகையின் தனிப்போக்கு தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஒரு சரித்திரம்.

 

இன்றைய தமிழ் இலக்கிய உலகிலே ஞானம் என்று ஒரு தமிழ்க் கலை இலக்கியச் சஞ்சிகைக்குப் பெயர் சூட்டுவதற்கே ஒரு தனித்திடம், ஒரு துணிச்சல் வேண்டும். பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம் என்பது ஞானம் சஞ்சிகையின் தாரக வார்த்தைகள். ஞான் என்ற வடமொழி வேர்ச்சொல்லுக்கு அறிதல் என்பது பொருளாம். இது படிப்பறிவு என்றும், பட்டறிவு என்றும் இரு திறப்படும். ஞானம் என்ற வேர்ச்சொல்லே gnow என்னும் கிரேக்கச் சொல்லுக்கும், அதிலிருந்து ஞானத்தைக் குறிக்கும் gnosis என்ற சொல்லுக்கும், அறிவைக் குறிக்கும்  kowledge என்ற சொல்லுக்கும் அடிப்படை.

 

காலத்தைக் கடந்து நிற்கும் தரமான கலை இலக்கியப் படைப்பாளிகளும், படைப்புகளும் முகிழ்கின்ற காலம் ஒரு சமுதாயம் அரசியல், பொருளாதார ரீதியாகத் திடமாகவும், அமைதியாகவும் இருக்கின்ற காலம் என்பது வெளிப்படை. இப்படிப்பட்ட காலங்கள் கலை இலக்கியப் படைப்புகளின் பொற்காலம் என்பது சரித்திரம்.  இலக்கில்லாத பயணங்களுடன் ஆரம்பித்து இன்று உலகமெல்லாம் சிதறுண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இலக்கியக்குரலாக 2000 ம் ஆண்டு தொடங்கி வெளிவருகின்ற ஞானம் சஞ்சிகையின் பின்புலம் இதற்கு முற்றிலும் விதிவிலக்கானது. தேசியத்தினதும், பேரினவாதத்தினதும், சர்வதேசத்தினதும், அவற்றின் புதிய ஆயுதங்களினதும், யுத்திகளினதும், கொள்கைகளினதும் போராட்டக்களமாக மாறிய எமது தாயகத்தின் கெடுபிடிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், பொருளாதார, வாழ்வாதாரத் தடைகளுக்கும், ஆட்கடத்தல்களுக்கும், போட்டுத்தள்ளுதல்களுக்கும், சகோதரப் படுகொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும், பொறிவெடிகள், எறிகணைகள், கண்ணி வெடிகள், குண்டு வெடிப்புகள், விமானக்குண்டு வீச்சுகள், பல்கணைத் தாக்குதல்களுக்கும் தப்பிப்பிழைக்கத் தலைகால் தெரியாமல் தறிகெட்டு ஓடி  உலகெல்லாம் சிதறுண்டிருக்கும் எமது ஈழத்தமிழர்களின் பாலைவனங்கள், சமுத்திரங்கள், பனித்திடர்கள், அடவிகள், நாமமே அறியாத   தீவுகள், பெருந்தேசங்களுக்கூடான இடம் பெயர்வையும், சிறை வாழ்க்கையையும், முகாம் அனுபவங்களையும்,இழப்புகளையும், இறப்புகளையும், அங்க ஊனங்களையும், பிரிவுகளையும், பேதங்களையும், காயங்களையும், எரிவுகளையும், தனிமையையும், தாபங்களையும், விரகங்களையும், விரக்திகளையும், உடல்களையும், உயிர்களையுமே ஆகுதியாக்கி எரிகின்ற வேள்வித்தீயில் எமது வெற்றிகளின், சாதனைகளின் உருவாக எழுந்த அக்கினிக்குஞ்சுதான் ஞானம் சஞ்சிகை இன்று தருகின்ற ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்.

 

எமது இனத்தின் பரிதவிப்புகளைப் பதிவுகளாக்கி, அவலங்களை ஆவணங்களாக்கி, கவலைகளைக் கவிதைகளாக்கி, சீரழிவுகளைச் சிறுகதைகளாக்கி, வாழ்வின் நடிப்புகளை நவீனங்களாக்கி, வலியை வளர்ச்சியாக்கி வெறும் பார்வையாளராக இல்லாமல் பங்காளராக இருந்து வளர்ந்திருக்கின்றது, எம்மை வளர்த்திருக்கின்றது ஞானம் சஞ்சிகை என்பது இந்த வெளியீட்டினூடாகத் தெரிகின்றது.

 

போரின் தீவுக்குள் எழுந்த சுடராகிய ஞானம் சஞ்சிகையானது போர்க்காலத்துக்கு முன்னரே தொடங்கப்பெற்று, போரின் பேரழிவுடன் சரித்திரமாகிப்போன டொமினிக் ஜீவாவின் மல்லிகை, சிவஞானசுந்தரத்தின் சிரித்திரன் போன்ற இதழ்களுடன் ஒப்பிடும்பொழுது இவ்வளவு இழப்புகள் மத்தியிலும் எம்மவரைச் சரித்திரத்தில் தலை நிமிர்ந்து நிற்கவைத்திருக்கின்றது. வலியை உரமாக்கி வாழ, வளர, சாதிக்க முடியும் என்று காட்டிய, கற்றுத்தந்த உனக்கு நாம் தலை வணங்கி நிற்கின்றோம்.