இலக்கியங்களில் மெய்ப்பாடுகள்

கவிஞர். மா. உலகநாதன், (முனைவர் பட்ட ஆய்வாளர்)


பல்கால் பழகினும் தெரியா உளவேல்
தொல்காப்பியம் திருவள்ளுவர் கோவை
மூன்றினும் முழங்கும்

                                     - சுவாமிநாத தேசிகர்


மெய்ப்பாடு என்பது, வெளிப்படுவது என்று பொருள்படும்.
உள்ளத்து உணர்ச்சிகளால் செயல்களில் தோன்றும் வெளிப்பாடு மெய்ப்பாடு. எட்டு வகையான மெய்ப்பாடுகள் எனத் தொல்காப்பியம் வரையறுக்கிறது. விரிக்கின் அதுவே
32 வகையெனவும் கூறும்.

நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப!


                                     (தொல் - பொருள்:
247)

நகை:

நகை என்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருக வாய்விட்டுச் சிரித்தலும் என மூன்று வகைப்படும். இவற்றை நான்கு கூறினுள் அடக்கிக் கூறுவர் தொல்காப்பியர்.

எள்ளல் இளமை பேதைமை மடனென்(று)
உள்ளப் பட்ட நகைநான் கென்ப.


                                    (மெய் - நூற்
4(இளம்)

இங்கே, அகநானூற்றுப் பாடலொன்றில், பேதைமை பற்றி வரும் நகையைக் காண்போம்.

தலைவி, தன் தாய் தன்னை வெகுண்டதின் காரணத்தினைத் தன் பேதைமையால் உணராது, அது பற்றி நகைக்கின்றாள்.


நகை நீ கேளாய் தோழி! அல்கல்
...............
நல்லை மன்! ஏன நகூஉப் பெயர்ந்தோளே.

                                    (அகம் :
248)

தோழி! நேற்று நகைப்புக்கு இடமான ஒரு செய்தியைக் கேள்! தலைவன் இரவுக்குறியின் கண் தோட்டத்திற்கு வந்தான். அவனை நம் தாய் கண்டாள். பின் விரைவாக என் முகத்தைப் பார்த்தாள். என்னை நோக்கி, நீ மிகவும் நல்லவள்! என்றாள். தலைவன் சிரித்தபடி அப்பால் சென்றான்.

இது எப்படியிருக்கிறதென்றால், தன்னை எதிர்த்த ஆண் பன்றியின் வீரத்தை மதித்துக் கானவன் அம்பை எய்யாமல் மீண்டது போல், அன்னையும் நம் தலைவனின் பெருந்தகைமையை நினைத்து அவனை கடிந்து கொள்ளாமல் போய்விட்டாள்!

அழுகை:

அழுகை என்பது அவலம்; இரக்கம் தானே அவலித்தலும், அவலம் கண்டு அவலித்தலும் என அஃது இருவகைப்படும். அழுகை விரிந்து நடப்பதை தொல்காப்பியர்.


இளிவே, இழவே அசைவே வறுமையென
விளிவேல் கொள்கை அழுகை நான்கே!
என்பார்.

கைகேயி கொண்ட வரங்களால், இராமன் நாடிழந்து காடு செல்கின்றான் என்பதை எண்ணி நகரத்திலுள்ளார் பலர் அழுகின்றனர். மக்கள் மட்டும் அல்லாது எல்லா உயிர்களும் அழுதனவாம்.

உயர்திணை அழுகை:

ஆடினர் அழுதனர் ; அமுத ஏழிசை
பாடினர் அழுதனர் ; பரிந்த கோதையர்
ஊடினர் அழுதனர் ; உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் ; குழாங் குழாங் கொடே!


                        நகர்நீங்கு படலம் -
213

அஃறிணை அழுகை:

ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத களிறு அழுத கால்வயப் போர்
மாவும் அழுத அம் மன்னவனை மானவே.


                                                    ந.நீ.படலம் -
1703இளிவரல்:

இளிவரல் என்பது இழிபு ; அஃதாவது மானக்குறைவு ; இளிவரல் எனும் இம்மெய்ப்பாடு தோன்றுவதை

மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இனிவரல் நான்கே.


                              மெய்ப்-நூல்.
6 (இளம்)

என்று தொல்காப்பியர் விரித்துக் கூறுவார்.
காமப்பிணி கொண்ட தலைவியொருத்தி மழையுடன் வந்த வாடைக் காற்றினை நோக்கி, 'நீ இமய மலையையும் அசைக்கும் தன்மையினை உடையாய் ; எளியவளாகிய என்னை அலைப்பது வீரமோ'? என்று கூறித் தன் பிணியுடைமை கருதி இகழ்ச்சியுறுகின்றாள்.

மருட்கை :

மருட்கை என்பது வியப்பு ; இதனைத் தொல்காப்பியர்,

'புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கே நான்கே'!

எனும் நூற்பாவால் கூறுவர்.

இங்கே, சிறுமை பற்றிய மருட்கையைக் காணலாம் ஒரு தலைவன் தலைவியின் இடைச் சிறுமை கண்டு வியப்பது.

மைம்மலர் ஓதி மணிநகைப் பேதை தன்
கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம
கடையிற் சிறந்த கருநெடுங்கண் பேதை
இடையிற் சிறிய தொன்றில்.


என்ற பாடலில் தலைவன் அங்ஙனம் வியக்கிறான்.
அச்சம் :
அச்சம் என்பது பயம். அச்சத்தின் இயல்பினைத் தொல்காப்பியர்,

அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.


                     மெய்ப் - நூற் -
8(இளம்)

என்ற விதியால் கூறுவர்.
கள்வர் பற்றி வரும் அச்சத்தைக் கலிப்பாட்டடிகள் கவனப்படுத்துகின்றன. இக்கள்வன் ஆறலைக் கள்வனல்லன். தலைவியின் மனங்கவர் கள்வன.


தலைவி, தலைவனை நோக்கி, 'நீ கண்ணை மூடித் திறப்பதற்குள் மறைந்து விடுங் கள்வன் என்னை விட்டு நீங்குதி'! என்கிறாள்.

ஓரூ உ நீயெங்கூந்தல் கொள்ளல்! யாம் நின்னை
வேரூஉதுங் காணுங் கடை
தேரியிழாய்!


                           (கலி –
87)

இப்பாடலில் கள்வன் போலும் தலைவனைக் கண்டு தலைவி அஞ்சி இமைப்பின் இதழ் மறைவு ஆங்கே கெடுதி! என்கின்றாள்.
வள்ளுவரும்,

நெஞ்சத்தார் காத லவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.


                           குறள்:
1128

எம் காதலர் எம் நெஞ்சினுள் இருக்கின்றார். ஆகையால், சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணி அவற்றை உண்ண அஞ்சுகின்றோம் என்கிறாள்.

பெருமிதம்:

பெருமிதம் என்பது வீரம். அஃது ஏனைப் பெருமைகளோடு ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்பதால் பெருமிதம் எனப்பட்டது.

கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.


               மெய்ப் -நூற்-
9(இளம்)


என்ற தொல்காப்பியர் கூற்றால் அறியப்படும். இங்கே, கொடை பற்றி வரும் பெருமிதம் பேசப்படுகிறது.

சித்தரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் - தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

போர்க்களத்தில் கண்ணனுக்குத் தம் புண்ணியம் அனைத்தும் தாரை வார்த்த பிறகு, கர்ணன் தன் கொடை பற்றிய பெருமிதத்தால் பேசுகின்றான்.

தருமன் முதலான அரிய காதல்
     தம்பியரோ டெதிர்மலைந்து தறுகண் ஆண்மைச்
செருவில் என துயிர் அனைய தோழற் காகச்
     செஞ்சோற்றுக் கடன் கழித்தோர் ; தேவர் கோவுக்கு
உரைபெறுநற் கவசமும்குண் டலமும் ஈந்தேன்,
     உற்றபெரு நல்வினைப்பே நுனக்கே தந்தேன்.


                  (வில்லிபாரதம் -
17ஆம் போர்ச்சருக்கம்-248)

வெகுளி:

வெகுளி என்பது சினம். அதன இயல்பினை,
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.


                           (மெய்ப்-நூற்
10(இளம்)

என்ற நூற்பாவால், தொல்காப்பியம் கூறும்.

உறுப்பறை (உறுப்பு சிதைதல்) பற்றி வரும் வெகுளி எத்தகையது என்பதைக் காணலாம்.

தன்னுடைய மூக்கும் காதும் சுக்ரீவனால் அழிந்தமை கண்டு கும்பகருணன் சினங்கொள்கிறான்.

எண்ணுடைத் தன்மையன் இனைய எண்ணிலாப்
பெண்ணுடைத் தன்மையன் ஆய பீடையால்
புண்ணுடைச் செவியொடு மூக்கும் பொன்றலால்
கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன.


                         (கம்ப-கும்பகருணன் வதைப்-
297)

கும்பகருணன் கொண்ட சினத்தால் அவன் கண்கள் குருதியைக் கொப்பளித்தனவாம்.

உவகை:

உவகை என்பது காமம் முதலிய மகிழ்ச்சி, இதன் இயல்பினைத் தொல்காப்பியர்,

செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே.


                    (மெய்ப்-நூற்-
11 (இளம்)

என்ற நூற்பாவால் அறியத் தருகிறார்.

விளையாட்டு பற்றி வரும் உவகை எத்தகையது என்பதை இனிக் காண்போம். விளையாட்டு எனபது ஆறும் குளம் சோலையும் முதலாகிய வனப்பு மிக்க இடங்களில் தங்கித் துணையொடு விளையாடி மகிழுவது ஆகும்.

சீவகன் தன் துணைவியாருடன் நீர் விளையாட்டில் ஈடுபடுகின்றான். காந்தருவதத்தை விளையாட்டில் தோற்றோடி சீவகனைத் தழுவிக்கொள்கின்றாள்.

அடுத்தசாந் தலங்கால் சுண்ணம்
அரும்புனல் கவர அஞ்சி
உடுத்தபட் டொளிப்ப ஒண்பொன்
மேகலை ஒன்றும் பேசா
கிடப்பமற் றரசன் நோக்கிக்
கெட்டதுன் துகில் மற் றென்ன
மடத்;தகை நாணிப் புல்லி
மின்னுச்சேர் பருதி யொத்தான்


                             (சிந்தா
– 2666)


என்ற சிந்தாமணிப் பாடலில், மடத்தகை நாணிப் புல்லி, மின்னுச் சேர் பருதியொத்தான் என்றதனால், இங்கு (காதல்) விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தமை அறியலாகிறது.

முடிவுரை:

தொல்காப்பியம் காட்டும் மேற்கூறிய மெய்ப்பாடுகள் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. படிப்போரின் கற்பனை, உய்த்துணரும் அறிவு, பொருளறியும் திறன் இவற்றினால் மட்டுமே இந்த நயங்களை, சுவையை அறிந்து மாந்த முடியும். சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற கரு10லங்களை அள்ளியள்ளி, களித்துக் களித்து இன்புறலாம். இன்னும் இன்னும் என்று தேடித் தேடிப் படிக்கலாம். ஆய்வாளர்கள் மேலும் மேலும் முயல்வார்களாக!

துணை நின்ற நூல்:

1. சுப்பு ரெட்டியார், ந.டாக்டர் ; முன்னாள் தமிழ்த்துணைத்தலைவர், பேராசிரியர் ; திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி பழனியப்பா பிரதர்ஸ் - சென்னை, 600 014 - நவ-1963.

2.  சங்க இலக்கியங்கள்
3.  கம்ப இராமாயணம்.

 


 

கவிஞர். மா. உலகநாதன்,  : 94429 02334.