பெய்யெனப் பெய்யும் மழை

- அனலை ஆறு. இராசேந்திரம்

தெய்வம் தெழாஅள் கொழுநற் றொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

க்குறளுக்கு, ''பிற தெய்வந் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்'' என்று பொருளுரைத்தார் பரிமேலழகர்.

''தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமும் தன் கணவனென்றே கருதி, அவனை நாடேறும் தொழுதெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்'' என்று உரை எழுதிப் போந்தனர் மணக்குடவரும் பரிப்பெருமாளும்.

'குல தேவதையைக் கும்பிடாமல் தன் பத்தாவைத் தெய்வமென்று தொழுதபடியால் அவள் சொல்ல மழை பெய்யும்' என்றார் பரிதியார்.

'வேறொரு கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே நாடோறும் வணங்கி எழுகின்றாள் யாவள், மற்றிவள் இவ்வுலகத்து மழைவளங் கூர்ந்த காலத்து வானைக் குறித்து வந்து பெய்வாயாக என்று சொன்ன அளவிலே வந்து பொழியும் மழை என்றார் காலிங்கர்.

'வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய்யென்றால் மழைபெய்யும்' என்று தெளிவுரை அமைத்தார் முனைவர் மு.வ அவர்கள்.

மேலவர் உரையாசிரியர் அனைவரும் 'தன் கணவனைத் தொழுதெழுகின்ற பெண் பெய்யென்று வேண்ட மழை பெய்யும்' என்னும் கருத்துடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

திராவிட இயக்கச் சார்புடையவர்களும் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் என்று போற்றப்படுபவர்களுமான பாவேந்தர் பாரதிதாசன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி போன்றோர் இக்கருத்துக்கு மாறுபாடுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

'வான்புகழ்கொண்ட மேலான ஒருவர் என்ற காரணத்திற்காக வேறு எவரையும் பின்பற்றி நடக்காமல் தன் கணவனை மட்டும் எண்ணி, அவனுக்கு ஏற்றபடி அவனைப் பின்பற்றி நடப்பவள் பெய்யவேண்டுமென்று விரும்புங்காலத்தே பெய்யும் மழையைப் போன்றவள் ஆவாள்'

இவ்வாறு மேற்கண்ட குறளுக்கு உரை எழுதினார் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள்.

பாவேந்தர் உரையும், கலைஞர் உரையும் நாவலரை ஒத்தே அமைந்துள்ளன. மூவரும் 'கணவனைத் தொழுது எழும்' கற்புடைப் பெண் 'பெய்யென்று செல்ல மழை பெய்யும்' என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாது என்று கருதிய காரணத்தால் 'பெய்யெனப் பெய்யும் மழை என்னும் தொடருக்கு' பெய்யவேண்டிய காலத்தே பெய்யும் மழையைப் போன்றவள்' என்று பொருள் எழுதினர். இவர்கள் பெய்யெனப் பெய்யும் மழையை கொழுநன் தொழுதெழுவாளுக்கு உவமையாக்கி உரைத்தனர். ஆனால், இன்னொரு திராவிட இயக்கச் சார்பாளரான மொழி நூலறிஞர் ஞா.தேவநேயப்பாவாணர் இக்குறளுக்குப் பழம் பெரும் உரையாசிரியர் கருத்துரைகளே பொருத்தமானவை என்பார்.

'வறன் ஓடின் வையத்து வான்தரும் கற்பினள்'

                                                                                     - கலித்தொகை

'வானம் பெய்யாது வளம் பிழையாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடெனும்'
- சிலம்பு

'வான்தரு கற்பின் மனையறம்'
- மணிமேகலை

'மழை தரும் இவள்'
- மணிமேகலை


மேற்காட்டிய இலக்கியக் கூற்றுக்களை எடுத்துக்காட்டி 'கற்புடைப் பெண்டிர் பெய்யென்றால் மழை பெய்யும்' என்பது பண்டைத் தமிழர் நம்பிக்கை என்று வாதிடுவார் பாவாணர்.

நம்பிக்கைகள் பகுத்தறிவுக்குப் பொருந்துபவையாகவோ அன்றேல் பொருந்தாதவையாகவோ இருக்கலாம். ஆனால், ஒரு காலத்தில் எழுந்த நூலை, அக்காலத்து மக்களின் நம்பிக்கை, பண்பாடு, சமயக்கோட்பாடு, நூலாசிரியர் மனப்போக்கு ஆகியவற்றோடு ஒட்டியே நோக்க வேண்டுமென்பதில் யாருக்குமே மாறுபாடு இருக்க முடியாது.

மாபெரும் சிந்தனையாளர்களின் நூல்களிற் கூட பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகள் இடம்பெறுவது உண்டு. ஞாயிறு, புவி, திங்கள் ஆகியன ஒரு நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஞாயிற்றின் ஒளி, புவியின் மறைப்புக்காரணமாக திங்கள் மீது விழாது தடுக்கப்படுகிறது. இவ்வேளை புவியின் நிழல் திங்கள் மீது படிந்துபின் படிப்படியாகவே மறைந்துவிடும். இதனை அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்தில் திங்களைப் பாம்பு விழுங்குவதாகவும், பின் படிப்படியே வெளிக்கக்குவதாகவும் மக்கள் எண்ணியிருந்தனர். பகுத்தறிவுக்குப் பொருந்தாத இந்நம்பிக்கை,

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று

என்னும் வள்ளுவர் குறளிற்கூட ஏறிவிட்டது. சிறந்த சிந்தனையாளரும், மெய்யுணர்வுமிக்கவருமான வள்ளுவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தாரா அன்றேல் ஏற்றிலரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அலர் பரவும் வேகத்திற்கு, திங்களைப் பாம்பு விழுங்கும் கதை, வாய் வழியாக ஊரெங்கும் பரவுதலை உவமை கூறினார் என்றே கொள்ளவேண்டும்.

சங்க காலத்து மக்களின் நம்பிக்கை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி போன்றோரின் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்ப அமைந்திருந்ததில்லை. ஆதலின் பழம்பெரும் உரையாசிரியர் கருத்துக்களே எடுத்தாண்ட குறளுக்குப் பொருந்துவன என்பது பாவாணர் கருத்தாகும். இன்றும் நாம் பேச்சு வழக்கில் ஒரு அரசின் கொடுங்கோற் போக்கைப் பார்த்து 'இத்தகைய அரசு இருந்தால் எப்படி மழைபெய்யும்?' என்கிறோம். தீய போக்குடைய ஒருவனைப் பார்த்து 'இவனிருந்தால் மழை பெய்யுமா?' என்போம். பெண்ணுக்கே உரித்தான அடக்கமும், ஒழுக்கமும் இல்லாத ஒருத்தியை நோக்கி, 'இவள் இருக்கும் வரை பூமிக்கு மழை இல்லை' என்போம். எனவே, கற்புடைப் பெண்டிரும், செங்கோல் அரசும், நல்ல குடிமக்களும் மழைக்குக் காரணமானவர்கள் என்னும் நம்பிக்கை பண்டைத்தமிழ் மக்களிடம் இருந்ததென்பதும், அந்நம்பிக்கைகளின் வெளிப்பாடு இன்னும் முற்றாக அழிந்துவிடவில்லை என்பதும் தெளிவாகும்.

ஆகவே, எடுத்தாண்ட குறள் மேற்படி நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுந்ததென்பதும், அதற்குப் பழம் பெரும் உரையாசிரியர்களும், முனைவர் மு.வ அவர்களும் அமைத்த உரைகளே சிறப்பானவை என்றும் கொள்வதே பொருத்தமானதாகும்.

'செந்தீ முதல்வர் அறம் நினைத்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியால் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் - இம்மூன்றும்
திங்கள் மும்மாரிக்கு வித்து'

என்னும் திரிகடுகப்பாடல் இவ்விடத்தே நோக்கற்பாலதாம்.