தங்கத் தாத்தாவும் பண்டிதமணியும்

அனலை ஆறு இராசேந்திரம்

ழத்துப் புலவர் வரிசையில் நிலைத்தவோர் இடம் பெற்ற பெருமைக்குரியவர் நம் 'தங்கத் தாத்தா' நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் அவர்கள். சிறுவர்க்கும் பெரியோர்க்குமாக சிந்தை அள்ளும் செந்தமிழ்ப் பாடல்களைப் படைத்துத் தந்தவர் அவர். ஈழ நாட்டின் அழகும் வளமும் அவர் பாடல்களில் விளங்கும். தமிழ் மக்கள் வாழ்வும் பண்பாடும் கொண்டாட்டங்களும் புலவர் பாடல்களில் அமர்ந்து நீடுவாழும் பேறுபெற்றன. 'பல்வேறு தலைப்புகளில் தனிப்பாடல்களாகவும் சிற்றிலக்கிங்களாகவும் ஏறத்தாள பதினையாயிரம் பாடல்களைப் புலவர் பாடியுள்ளார்' என்பர் தமிழ் அறிஞர். சைவம், தமிழ் என்னும் இரண்டையும் தன்னிரு கண்களாகக் கொண்டிருந்த தங்கத் தாத்தா கந்தபுராண தத்துவ விளக்கம், உயிரிளங்குமரன் நாடகம் முதலிய சமய சார்பான நூல்களையும் எழுதியுள்ளார். தமிழன்னை திருவடிகளைப் பாமலர் சொரிந்து தொழுதலையே பணியாகக் கொண்டு வாழ்ந்த புலவர் அவர்களின் மைந்தர்களான பண்டிதர் சோ.இளமுருகனார், வித்தியாநிதி, சோ.நடராசன் ஆகியோர் தந்தையைப் போலவே தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கியமை இலக்கிய உலகு அறிந்ததே.

புலவர் அவர்களின் மனைவியாரான திருமதி.சின்னம்மை அவர்கள் தமிழ்ப் பெண்மைக்கு இலக்கியமாக விளக்கியவர். 'மனைக்கு விளக்காகிய வாணுதல்' என்னும் புறநானூற்றுத் தொடருக்கு இலக்கணமானவர். புலவர் ஒருபோது சன்னிநோய் கண்டு படுக்கையிற் கிடந்தார். இரண்டு மாதங்கள் வரையில், படுக்கையை விட்டு எழுந்து தன் இயற்கைக் கடன்களையே நிறைவேற்ற முடியாதவராயிருந்தார் அவர். அவ்வேளை, சின்னம்மையார் தாயினும் சாலப் பரிந்து கணவர் கடன்கள் அனைத்தினும் அவர் கையென நின்று பணிவிடை செய்தார். பொன்மனச் சின்னம்மையின் அன்புப் பணிகளில் தன்னை இழந்தார் புலவர். 'கண்டார் வெறுப்பன செய்பவனே ஆனாலும் கொண்டானைத் தாங்குதலே தன்கடன்' என வாழ்ந்த தமிழ்ப்பெண் வழிவந்த பொற்புடையாளை செந்தமிழ்ப் பாடல் யாத்துப் போற்றிட விழைந்தது அவர் புலமை நெஞ்சம். அதன் பயனாய்த் 'தாரமாய்த் தாயானாள் கை' என்னும் கலிவெண்பா பிறந்தது.

அக்கலிவெண்பாவில், பூக்களை ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரத்திற்காயத் தொடுத்தாற் போல், திருமணம் புரிந்த நாள் தொடக்கம் மனைவியின் கை தனக்குச் செய்த பணிவிடைகளை அடுக்கடுக்காய்க் கூறி மகிச்சி அடைகிறார் புலவர். முதலில் திருமண நாளன்று மறையவர் வளர்த்த நெருப்புக் குண்டத்தைச் சுற்றிவரும் நேரத்தில் தன் கை விரல்களை மனையாள் கை அன்போடு பற்றிக்கொண்ட இன்ப நிகழ்வு அவர் நெஞ்சை நிறைத்தது.

'சீராக மன்றிற் றிருறாளிற் செந்தீயை
நேராகச் சூழ்ந்துவரும் நேரத்தில் - ஆராநல்
லன்புடனே என்கை விரலோ டணையவந்த
பொன்புனையும் செல்வப் புதுமலர்க்கை.....'


நோய் கண்டு பாயே தஞ்சமெனக் கிடந்து வாந்தி எடுத்த வேளையெலாம் நெஞ்சைத் தடவிச் சுகம் செய்தும், அவ்வாந்தி மேல் மணலைப் போட்டுச் சுத்தம் செய்தும், கைகளை வெந்நீர் கொண்டு கழுவிவிட்டும், அழுக்கான அந்நீரை அப்பால் அகற்றியும் இன்னும் பலவாறும் மனைவி செய்த பணிகளை மடைதிறந்த வெள்ளமெனப் பாடிச் செல்கிறார் புலவர்.

'பண்டைப் பழவினையாற் பாயோ டெனைக்கிடத்திக்
கொண்டுவருத் துங்கொடுநோய் கூடுங்கால் - உண்டாகும்
சரத்திக்கு நெஞ்சைத் தடவுங்கை சர்த்தியின்மேற்
சுத்திக்கு வெண்மணலைத் தூவுங்கை – சுத்திசெய
வெந்நீரைக் கொண்டு கழுவுங்கை விட்டுமிழ்ந்த
அந்நீரை அப்பா லகற்றும்கை - பின்ஈரம்
மாற்றுங்கை.......'


மேனி வலியின்போது தயிலமிட்டுத் தடவும் கையை,

'....நாரி வலிக்குதென்றால் நாடியுரு விப்பிடித்து
வேரித் தயிலமிடும் மெல்லியகை.....'
என்று பாராட்டுவார்.

'..... சீலையழுக்
கானவைகள் எல்லாம் அலம்பியடித் துப்பிழிந்து
வான் வெயின்முகத்து வைக்குங்கை......'
என்றும்,

'......... தாவிலாப்
பத்தியங்கள் வைக்குங்கை பாங்கா யருத்துங்கை'


என்றும் பாடி மகிழும் புலவர் தன் மனைவி சின்னம்மை கை

'பங்கப் படாதுயரும் பாக்கியக்கை'
என்று கூறி முத்தாய்ப்பு வைக்கிறார்.

புலவர் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களைக் கலிவெண்பா நன்கு கவர்ந்தது. ஆலினைத் தாங்கும் விழுதுகள் போல் புலவரைத் தாங்கி நிற்கும் பால் மொழி மாதின் மனைமாட்சி அவர் நெஞ்சில் வியப்பை ஏற்படுத்திற்று. வள்ளுவர் வாழ்க்கைத் துணைவியான வாசுகியுடன், புலவர்தம் மாசில் மனையாளை ஒப்பிட்டுப் பார்த்தது அவர் தமிழ் நெஞ்சம். வாசுகி அம்மையார் பின்தூங்கி முன் எழுந்து கணவர்க்குப் பணிவிடை செய்யும் பெற்றியர். புலவர் மனையாளோ இத்தனை பணிகளையும் நித்திரை ஒழித்தன்றோ செய்திருக்க முடியும்? ஆகவே, வையத்தார் வாழக் குறள் பாடிய வள்ளுவர் வாழ்க்கைத் துணையினும் ஈழத் தமிழர் வாழ்வைப் பாடிய புலவர் வாழ்க்கைத் துணை பண்டிதமணிக்கு உயர்ந்து தெரிந்தனள். புலவர்க்குப் பணிவிடை செய்த சின்னம்மை கையினும், அப்பணிக்காய்த் துயில் துறந்து நின்ற அவள் கண்ணையே புலவர் போற்றிப் பாடியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் பண்டிதமணி. தன் எண்ணத்தை அழகிய ஒரு நேரிசை வெண்பாவாக எழுதிப் புலவருக்கு அனுப்பினார்.

பின்தூங்கி முன்எழூஉம் பெற்றியுரைத் தார்தேவர்
உன்தாரத் துக்குறக்கம் உண்டுகொலோ – குன்றாமே
தண்ணென் தமிழ்ப்புலவோய் தாயானாள் கையிருக்கக்
கண்ணுக்கே வேண்டும் கவி


வெண்பாவைக் கண்ட புலவர் மகிழ்ச்சி கொண்டார். பண்டிதமணியைப் பாராட்டியும் வாழ்த்தியும் ஓர் அகவற்பா யாத்து அவர்க்கு அனுப்பிவைத்தார்.

அண்டர்கள் விழையும் அனுதினு மினிக்கும்
தண்டமிழுணர்ந்த பண்டித மணியே!
இலக்கியக் கலைக்கடன் முழுகி நிலைப்படு
நூல்வகைச் செஞ்சொல் வால்வளை ஈன்ற
முhமணிக் குவைகள் வாரித் தூநகை
இன்புடன் கேட்டுநர் அன்பொடு மகிழத்
தூக்கிவிலை உரைக்கும் வாக்கினில் வல்லோய்!
எல்லாம் வல்ல இறையவ னருளாற்
பல்லாண்டு வாழ்வும் உடல்நலப் பாடும்
எண்ணிய வெய்தலும் ஞானமும் கல்வியும்
திருவும் சிறப்பும் மருவி எஞ்ஞான்றும்
ஐம்முகன் அருளிய கைம்முகன் தெய்வப்
பெரும்பெயர் கொண்ட அரும்புகழ்க் குரிசில்
கைக்கவி இருக்கக் கட்கவி வேண்டிய
அற்புத நுண்மதிப் பொற்புயர் செல்வ!
வாழிய பெரும நீயே
ஆழிசூ ழுலகில் அடைவன அடைந்தே!



கடலிடை மூழ்கி முத்துக்களைச் சேகரித்து அவற்றைத் தூக்கி நிறுத்தித் தரம் காட்டி விலை கூறுவார் போல், இலக்கியங்களிற் படிந்து கருத்து மணிகளைத் திரட்டி, சொல் சொல்லாய் அவற்றின் திறன் ஆய்ந்து கூறும் நாவல்லார் பண்டிதமணி எனப் பாவாரம் சூட்டுகிறார் புலவர். மேலும் தண்டமிழ்ப் பேராழி என்னத் திகழ்ந்த பண்டிதமணி கைக்கவி இருக்கக் கட்கவி வெண்டக் கூறிய சான்று அவரின் அற்புத நுண்மதியின் பொற்புறு விளைவு என்று போற்றுகிறார். பண்டிதமணியின் நேரிசை வெண்பாவுக்குப் பதிலாகப் புலவர் எழுதிய நேரிசை வெண்பா இது.

'துன்பிற் சுடர்முத்தம் தூக்கலால் தொண்டுசெயும்
அன்பி லிரவு மலர்தலால் - நண்பகேள்
விண்ணுக்கும் விண்ணவர்க்கும் ஒக்குமென வேறுரைப்பேன்
கண்ணுக்கு வேண்டும் கவி'


கொள்கை ஒருமையும் உயர்குணங்களும் வாய்ந்த அறிஞர்களிடையேயான தூய நட்பிற் பிறக்கும் ஆக்கங்களை மேனாட்டார் பொன்னே போல் மதித்துப் போற்றுவர். அவ்வகையில் தங்கத் தாத்தாவும் பண்டிதமணியும் கைமாறிக் கொண்ட இப்பைந்தமிழ்ப் பாக்கள் சிறந்த இலக்கியச் செல்வங்களாம் என்பதில் ஐயமுண்டோ?


 

analaiaraj@hotmail.com