சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் கோட்பாடுகள்
 

முனைவர் பூ.மு.அன்புசிவா


ள்ளத்தைத் திறப்பதற்கும், அதைத் திருத்திச் செம்மைப் படுத்துவதற்கும், தவறுகளைப் போக்கும் வன்மை உண்டாகுவதற்கும், நல்லனவற்றை மேற்கொள்வதற்கும், அவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவதற்கும், பிறரை நல்வழியில் செலுத்துவதற்கும் இலக்கியம் பயன்பட வேண்டும் என்கிறார் வைகவுண்ட் மன்லே (Selected Essays   From   The  Writting Of Viscount Manlay P.51).  இத்தகைய இலக்கியப் பயன்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள்.

சங்கப்புலவர்கள் தம் வாழ்வில் பட்டறிந்த உண்மைகளைப் பாடல்களாக வடித்துள்ளனர். மனித வாழ்வைப் பண்படுத்தும் இவ்வாழ்வியல் கோட்பாடுகள் எக்காலத்துக்கும் பொருந்துவன.

யாதும் ஊரே யாவரும் கேளிர்


புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் இயற்றிய 'யாதும் ஊரே' எனத் தொடங்கும் புகழ்பெற்ற பாடல் உலக வாழ்வின் நிகழ்வுகளை விருப்பு, வெறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உணர்த்தும் பாடலாகும். உலகில் உள்ள ஒவ்வோர் ஊரும் அனைவருக்கும் சொந்தமானதே. உலக மக்கள் அனைவரும் உறவினரே. நன்மையும், தீமையும் பிறரால் நமக்கு ஏற்படுவதில்லை. நம் செயல்களே அவற்றுக்குக் காரணம் என்பதை உணர வேண்டும். இறப்பு என்பது உலகில் புதியதல்ல. எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஒன்று. எனவே வாழ்க்கை இனிமை என மகிழ்ச்சி அடைவதும், வாழ்க்கை துன்பமானது என வருந்துவதும் கூடாது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். சிறப்புப் பெற்ற பெரியோரைப் பார்த்து வியப்பதும் கூடாது; சிறப்பில்லாத சிறியோரை இகழ்தல் கூடவே கூடாது. நடுவு நிலையுடன் அறவாழ்வை மேற்கொள்வதே சிறப்பு எனக் கூறுகிறது பாடல்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே
...........................................................
...................................................... மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறம்.
192)


திருத்தமான சமூகம் - வருத்தமில்லா வாழ்வு

மனிதர் ஒவ்வொருவரும் தம் நிலை உணர்ந்து செயல்படும்போது செம்மையான வாழ்வு அனைவருக்கும் கிட்டும் என்கிறார் பிசிராந்தையார். வயதாகியும் உம் தலை நரைக்கவில்லையே என்று கேட்ட சான்றோருக்கு அவர் தந்த பதில், 'என் மனைவி நற்குணங்கள் நிறைந்த பெருமை உடையவள். என் புதல்வர்களும் அறிவு நிரம்பியவர்கள். நான் சொல்வதைச் செய்பவர் என் பணியாளர்கள். என் அரசனும் நன்மையை மட்டுமே செய்பவன். எல்லாவற்றிற்கும் மேலாக என் ஊரில் நற்பண்புகள் நிறையப் பெற்ற சான்றோர்கள் வாழ்கின்றனர். வீட்டிலோ, ஊரிலோ, நாட்டிலோ கவலை தரும் சூழ்நிலை இல்லை. எனவே மனக்கவலை என்பதை அறியாத எனக்குத் தலை நரைக்கவில்லை' எனக் கூறுகிறார். இப்பாடல் தனிமனிதனின் மனநலம் திருத்தமான சமூக அமைப்பைப் பொறுத்தே அமையும் எனும் கருத்தை வலியுறுத்துகிறது. அவரவர் தத்தம் கடமைகளைச் சிறப்புற நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பு.

யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
(புறம்.
191)


இன்னாத உலகில் இனியவை காணல்

அனுபவத்தின் பயன் வாழ்க்கையைப் புரிந்து கொள்வது. இப்புரிதலைப் பக்குடுக்கை நன்கணியார் இருவேறுபட்ட காட்சிகளைக் கொண்டு உணர்த்துகிறார். ஒரு வீட்டில் சாவுப்பறை முழுங்குகிறது; மற்றொரு வீட்டில் மணமுழவு ஒலிக்கிறது. ஒருத்தி பூச்சூட்டி மகிழ்கிறாள்; மற்றொருத்தி கணவனைப் பிரிந்து கண்ணீர் சிந்துகிறாள். இது இயற்கை. இயற்கை கொடுமையானதுதான். இதனை ஒருவன் உணர வேண்டும், இதுதான் வாழ்க்கை எனப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்வின் இயற்கையைப் புரிந்து கொண்ட அவன் என்ன செய்ய வேண்டும்? துன்பங்களை மட்டுமே கண்டு துவண்டு விடாமல், வாழ்வின் இனிமைகளைக் கண்டு வாழ்வைத் தொடரவேண்டும் எனும் தத்துவம் பாடலில் சொல்லப்படுகிறது.


இன்னாது அம்ம, இவ் உலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே
(புறம்.
194)

அல்லவை செய்யாமை அறம்

நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் சான்றோருக்கு அறிவுரை கூறுகிறார். இது அனைவருக்கும் பயன்படும் அறிவுரை.

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்.
(புறம்.
195)


உங்களால் பிறருக்கு நன்மை செய்ய இயலாவிட்டாலும் துன்பம் செய்யாமலாவது இருங்கள். அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் நல்ல நெறியாகும் என்கிறார். வாழ்வில் அனைவரும் நினைத்துப் பார்த்துப் பின்பற்றவேண்டிய உயர்ந்த கருத்து இது.
அனைவர்க்கும் ஒன்றுபோல் அமைவன தேவைகள் அடிப்படைத் தேவைகள் அரசனாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும் ஒன்றே என்ற உண்மையை நக்கீரர் கூறுகிறார்.


உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே.
(புறம்.
189)

இதனை உணர்ந்தால் பேராசையும் பிறரைக் கெடுத்தலும் வஞ்சகமும் போன்றவற்றுக்கு இடம் ஏது?

நல்லோர் வாழ்வதே நாட்டின் சிறப்பு

ஒரு நாடு எவற்றால் சிறப்படைகிறது? இயற்கை வளங்கள், செல்வச் சிறப்பு ஆகியவை தேவையே. எனினும் அவற்றினும் மேலானது அங்கு வாழும் மக்களின் மனவளம். அத்தகைய மக்கள் வாழும் நாடே சிறந்தநாடு என்கிறார் ஒளவையார்.


நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
(புறம்.
187)

'நிலமே நீ நாடாக இருக்கலாம்; காடாக இருக்கலாம்; ஓரிடத்தில் பள்ளமாக இருக்கலாம்; ஓரிடத்தில் மேடாக இருக்கலாம்; ஆனால் உன்னிடத்தில் வாழும் மக்கள் நல்லவர்கள் என்றால் நல்ல நிலம் என்றும், தீயவர்கள் என்றால் தீய நிலம் என்றும் பெயர் பெறுகின்றாய்' என நிலத்தின் தன்மையைக் கூறுகிறார். இங்கு ஒளவையார் குறிப்பாக உணர்த்துவது ஒழுக்கத்தையே. நல்ல பண்பும் நல்ல செயலும் கொண்ட மக்களே, நாட்டின் நன்மைக்குக் காரணமாகிறார் என்பது கருத்து.

பிறர்க்கென வாழும் பேராண்மை

தாம் வாழும் உலகிற்குப் பெருமை சேர்க்கும் சான்றோரைக் கண்டு வியந்து பாடியுள்ளார் பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. 'புகழ் என்றால் உயிரையும் தருவர்; பழி என்றால் அதன் பொருட்டு உலகத்தையே தந்தாலும் ஏற்றுக் கொள்ளார்; சிறப்புகள் பொருந்தித் தமக்காக வாழாமல் பிறருக்காக வாழும் இத்தகைய சான்றோர்கள் இருப்பதாலேயே இவ்வுலகம் இருக்கிறது' என்கிறார்.

உண்டால் அம்ம இவ்வுலகம்
.........................................
.........................................
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.
(புறம்.
182)


ஏற்றத் தாழ்வுகள் கல்வியால் மறையும்

விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் உறுதிப் பொருளான கல்வியால் ஒருவன் அடையும் சிறப்புகளை வலியுறுத்தும் பாடல் அனைவரையும் கல்வி கற்கத் தூண்டும் தூண்டுகோலாக அமைகிறது. பாடலைப் பாடியவர் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
......................................................
......................................................
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்
ஒருவனும் அவன் கண்படுமே.
(புறம்.
183)

ஒருவன் தன் ஆசிரியருக்குத் தேவைப்படும் உதவிகள் செய்தும் பொருள்கள் தந்தும் கல்வி கற்க வேண்டும். அறிவில் சிறந்தவனையே தாயும் விரும்புவாள். கீழ்ச்சாதியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றால் அவனிடம் பாடம் கேட்க மேல் குலத்தில் பிறந்தவரும் சென்று வழிபடுவர். கல்வியின் பெருமை இத்தகையது என்கிறார்.
உலக வாழ்க்கை பற்றிய தெளிவு கொண்ட சங்கப் புலவர்கள் சமுதாயத்திற்கு உணர்த்த வந்த உயர்ந்த பொருள்களை மிக அழகிய முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். மக்களின் அக வாழ்வில் பின்பற்றக்கூடிய விழுமிய கருத்துகளையும் சங்கப் பாடல்களில் காணலாம். குடும்ப வாழ்க்கை, அவ்வாழ்க்கையில் ஆண் பெண் இருவரின் கடமைகள், அவ்வாழ்க்கையில் எழும் பிரச்சினைகள், சிக்கல்கள், அவற்றின் தீர்வுகள் போன்றவற்றையும் சங்கப்பாடல்கள் சித்திரிக்கின்றன. அக வாழ்வின் உயர் பண்பாடுகளை விளக்கும் சில பாடல்களைக் காணலாம்.

ாதல் பெரிது - அனைத்தினும் பெரிது

தலைவன், தலைவி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் அசையாத நம்பிக்கையே காதல். அதைவிட மேலானது, பெரியது வேறு இல்லை. தான் தலைவன் மீது கொண்டிருக்கும் அன்பின் திறத்தைத் தலைவி தோழியிடம் எடுத்துரைக்கிறாள்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே.
(குறுந்.
3)

தலைவி தனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள காதல் நிலத்தை விடப் பரந்ததாக, வானை விட உயர்ந்ததாக, நீரை விட ஆழமானதாக விளங்குவது எனக் கூறுகிறாள்.

வினையும் மனையும்
வினையே ஆடவர்க்குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
(குறுந்.
135)

என்னும் குறுந்தொகைப் பாடல் ஆணின் பொருளீட்டும் திறனும் பெண்ணின் அன்பு பொழியும் மனமுமே இல்லறத்தின் சிறப்பு என்பதை விளக்குகிறது.


அகங்களின் கலப்பு

அன்பு ஒன்றே ஆண் பெண் இணைவுக்கு அடிப்படை என்பதை உணர்த்துகிறது மற்றொரு குறுந்தொகைப் பாடல்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
(குறுந்.
40)

ஒருவரை ஒருவர் முன்பின் அறியாத நிலையில், செம்மண்ணில் விழுந்த மழைநீர் அம்மண்ணின் வண்ணத்தோடு ஒன்றுபடுவது போல அன்பு நெஞ்சங்கள் இரண்டும் இணைந்ததைச் சுட்டுகிறது இப்பாடல்.

சங்கப்புலவர்கள் தம் உள்ளத்தின் கற்பனைகளைச் சுவைபடப் பாடியதோடு நில்லாமல் உண்மை வாழ்வின் நிகழ்ச்சிகள் மூலமாகவும் அரிய கோட்பாடுகளைத் தந்துள்ளனர். பேகன் என்ற அரசனுடைய குடும்ப வாழ்வில் சிக்கல் ஏற்பட்டபோது கபிலர் பேகனின் இல்லறக் கடமையை உணர்த்தி அவன் மனைவி கண்ணகியின் துன்பத்தைச் சுட்டிக் காட்டினார் (புறம்.
144).

கபிலரைப் போலவே பரணரும், பேகனும் கண்ணகியும் இணைந்து வாழ்வதில் பெருவிருப்பம் கொண்டார். பேகனை நோக்கிப் பாடுகிறார். 'மயிலுக்குப் போர்வை தந்த பேகனே, நான் உன்னிடம் பெற வேண்டிய பொருள் ஒன்றுமில்லை. அருளைக் கொண்டவனே! நீ செய்ய வேண்டிய அறம் ஒன்றுதான்; இன்று இரவே தேர் ஏறிச் சென்று உனக்காக வருந்தும் உன் மனைவியின் துயரைத் தீர்ப்பாயாக! இதுவே நீ எனக்குத் தரும் பரிசு' என்கிறார்.

அறம் செய்தீமோ அருள்வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில், அஃது இருளின்
இனமணி நெடுந் தேர் ஏறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே.
(புறம்.
145)

பொன்னும் பொருளும் வேண்டிப் பாடுவோர் புலவர் என்ற கருத்துக்கு மாறாகத் தாம் பெறும் பரிசைவிடத் தம்மைக் காத்த வள்ளலின் வாழ்க்கை சிதையாது விளங்க வேண்டும் என்னும் அவர் விருப்பத்தை இங்குக் காண்கிறோம்.
சங்ககால வாழ்வியல் கோட்பாடுகளை, அறிவுரைகளைப் புலவர்கள் பொதுவாக மக்களுக்குக் கூறியவண்ணம் மேலே கண்டோம். இனி அரசர்களுக்குக் கூறிய அறிவுரைகள் சிலவற்றைக் காணலாம்.

மன்னனின் கடமை

மோசிகீரனார், 'அரசனது முறையான ஆட்சியே இவ்வுலகிற்கு உயிர். அதை உணர்ந்து செயல்படுவது மன்னனின் கடமை' என்கிறார்.

நெல்லும் உயிர் அன்றே ; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
(புறம்.
186)

பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் குடிமக்களிடம் வரிவாங்கும் முறையை அறிவுறுத்துகிறார் பிசிராந்தையார். சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை யானைக்குக் கவளம் கவளமாகத் தந்தால் அது பலநாட்களுக்குப் பயன்படும். ஆனால் யானையை வயலில் புகவிட்டால் அது உண்பதை விட அழிப்பதே அதிகம். அது போல அரசன் சிறிது சிறிதாக மக்களிடம் வரி வசூலித்தால் மக்களும் அரசனும் சிறக்கலாம். அவ்வாறின்றி அதிகாரிகளை அவர்கள் விருப்பம் போல விட்டுவிட்டால் மக்கள் அழிவர்; அரசனுக்கும் பயனில்லை என்பதைச் சிறப்பான இந்த உவமை மூலம் புலப்படுத்துகிறார்.


முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச
:098424 95241,98438 74545.