சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்குரையிலும் மாதவி - ஓர் ஒப்பியல் ஆய்வு

.மேகராச1. அறிமுகம்

ண்ணகி கதை சமூகத்தில் ஆழ வேரூன்றுவதற்கும் பிற்காலத்தில் அக் கதை காவியம், தோத்திரம், பதிகம், பள்ளு, நாடகம், கூத்து, திரைப்படம் என்று பல வடிவங்களில் வளர்ச்சியடைவதற்கும் சிலப்பதிகாரம் பெரும் பங்கு வகித்துள்ளது. கண்ணகி கோவலன் வாழ்வியலைச் சிறந்ததொரு இலக்கியப்படைப்பாக எடுத்துக் கூறும் முத்தமிழ்க் காப்பியமே சிலப்பதிகாரம்.;. இளங்கோவடிகள் தன் காலத்துக்கு முன் நிகழ்ந்த கதையினை அடிப்படையாக வைத்தே இக்காப்பியத்தினை எழுதினார் என்று கூறும் ஆய்வாளர்கள் அதற்கு உதாரணமாக ஒருமுலையறுத்த திருமாவுண்ணி, கண்ணகி பேகன் கதை ஆகியவற்றை எடுத்துக்காட்டுவர். எனினும் இவ்விடயம் ஆய்வுக்குரியதொன்றாகக் காணப்படுகின்றது.இக்காப்பியம் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டமைந்துள்ளது. இந்நூலில் வெளிப்படும் துன்பியல் ஊடாட்டம் இந்நூல் வெற்றிபெறுவதற்கும், கண்ணகி, மனங்களில் உள்ளுறைவதற்கும் ஏதுவாக அமைந்துள்ளதெனலாம்.ஈழத்திலும் இந்தியாவில் தமிழகம், கேரளா போன்ற இடங்களிலும் கண்ணகியை மையப்படுத்தி இலக்கியங்கள் எழுந்துள்ளதுடன் அவை பற்றிய ஆய்வுகளும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. சடங்கு நிகழ்த்துகையுடன் தொடர்புடையதாகவும் மக்களின் வாழ்வியல் நம்பிக்கை சார் பண்பாட்டோடு பிணைப்புடையதாகவும் எழுந்துள்ள கண்ணகி இலக்கியங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபில் கவனிப்புக்குரியவையாக உள்ளன. அவ்வகையில் கண்ணகியம்மன் சடங்கு காலத்தில் மட்டக்களப்பு பிரதேச கண்ணகி கோயில்களில் பக்தியோடு படிக்கப்படும் கண்ணகி வழக்குரைக் காப்பியம் முக்கியமானதாகும்;.இந்நூலை இப்பிரதேச மக்கள் 'வழக்குரை'எனவும் வழக்குரைக் காதை எனவும் அழைப்பர்.கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்நூலை சகவீரன் எழுதியதாகக் கருதப்படுகிறது. இக்கருத்து ஆய்வுக்குரியதாகும்.ஏட்டுச் சுவடிகளில் காணப்பட்ட கண்ணகி வழக்குரைக் காப்பியத்தினை பண்டிதர் வீ.சி கந்தையா, 1968ம் ஆண்டு பதிப்பித்துள்ளார். பதினொரு காதைகளைக் கொண்ட இந்நூலின் அமைப்பு சிலப்பதிகாரத்திலிருந்து வேறுபட்டது. சிலப்பதிகார வஞ்சிக் காண்ட நிகழ்ச்சிகள் எதுவும் கண்ணகி வழக்குரையில் இல்லை. பாண்டிய மன்னனுடன் வழக்குரைத்த பின்னர் மதுரை எரித்து தணியாத கோபத்துடன் நின்ற கண்ணகியை இடைச்சேரி மக்கள் கோபம் தணிந்தருளுமாறு பாடிய குளிர்ச்சிக் காதையுடன் கண்ணகி வழக்குரை முடிவடைகின்றது. இவ்வாய்வு சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்குரையிலும் முக்கியம் பெறும் பெண் பாத்திரங்களுள் ஒன்றாகிய மாதவி பாத்திரம் குறித்ததாக அமைகிறது.


2. ஆய்வின் நோக்கங்கள்.

2.1 இரு நூல்களிலும் வரும் மாதவியினரை அவர்களின் பண்புகளின் அடிப்படையில் நோக்கி அவ்விருவருக்குமான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் எடுத்துக் கூறி; மாதவி பாத்திரம் பெறும் முக்கியத்துவத்தினைப் புலப்படுத்துதல்.

2.2 இரு நூல்களும் தோன்றிய சமூகச் சூழல் மாதவி பாத்திரப்படைப்பில் ஏற்படுத்தியுள்ள மாறுபாட்டுச் சூழலினை விளங்கிக் கொள்ளுதல்.

2.3 மாதவி பற்றிய மறு வாசிப்பினை ஏற்படுத்துதல்.

3. ஆய்வு முறையியல்

இவ்வாய்வு ஒப்பியல் அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. சிலப்பதிகாரத்தினையும் வீ.சி.கந்தையாவினால் பதிப்பிக்கப்பட்ட கண்ணகி வழக்குரை நூலினையும் ஆய்வு நூல்களாகக் கொண்டு அவ்விரு நூல்களிலும் வரும் மாதவி பாத்திரத்தினை ஒப்பீடு செய்வதாக அமைந்துள்ளது.

4. ஆய்வின் முக்கியத்துவம்

4.1 சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்ரையிலும் கண்ணகியினையே முதன்மைப்படுத்திப் பார்க்கின்ற தன்மையே ஆய்வாளர்களிடமும் வாசகர்களிடமும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் இவ்வாய்வானது இரு நூல்களிலும் வரும் மாதவி பாத்திரம் பற்றி அறிவதற்கு ஏதுவாக அமையும்.

4.2 இரு வேறு தேசங்களில் இரு வேறு காலங்களில் இரு வேறு ஆசிரியர்களால் படைக்கப்பட்ட இரு நூல்களிலும் மாதவி பாத்திரம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்வதற்கும் இவ்வாய்வு முக்கியமானதாகின்றது.

5. சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்குரையிலும் மாதவி

சிலப்பதிகாரத்திலும் கண்ணகிவழக்குரையிலும் வரும் பிரதான பெண் பாத்திரங்களுள் ஒன்று கண்ணகி. மற்றொன்று மாதவி.சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகியை கற்புக்கரசியாகப்படைத்துள்ள அதேவேளை மாதவியை இழிவுபடுத்தாது கலையரசியாகவும் ஒரு நெறிப்பட்ட வாழ்வை வாழ முற்பட்டவளாகவும் படைத்துள்ளார். சிலப்பதிகார அரங்கேற்றுக்காதை, அந்திமாலைச் சிறப்புச் செய் காதை, கடல் ஆடு காதை ஆகிய காதைகள் மாதவி பற்றிக் குறிப்பிடுகின்றன. ஏனைய இடங்களில் கோவலனின் கூற்றுக்களிலும் மாதவி பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.


கண்ணகி வழக்குரையாசிரியர் கண்ணகியை பிறக்கும்போதே தெய்வாம்சத்துடன் காட்டி இந்துசமய வழிபாட்டு நிலையுடன் இணைத்த கற்புத் தெய்வமாகக் காட்டி, மாதவியை விடவும் பலமடங்கு பிரகாசம் மிக்கவளாகப்படைத்துள்ளார்.இத்தன்மை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாதவிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை குறைத்த வகையினதாகவே அமைந்துள்ளது.கண்ணகி வழக்குரையில் மாதவி அரங்கேற்றுக்காதை, பொன்னுக்கு மறிப்புக்காதை, இரங்கிய காதல், வழிநடைக்காதை ஆகியவற்றிலும் வேறு பகுதிகளில் சிற்சில கூற்றுக்களிலும் மாதவி பற்றிக் கூறப்பட்டுள்ளன.

5.1. கலைத்திறன்


கலைகளைப் பயின்று பிறரை மகிழ்வித்து, பொருள்பெற்று வாழும் வாழ்க்கையைக் கொண்ட கணிகையர் குலத்தில் பிறந்தவள் மாதவி. அவளது குடும்பச் சூழல் பல கலைகளையும் பயில்வதற்கு வழியமைத்தது. கூத்து, பாடல், ஒப்பனை ஆகிய நாடக மகளிர்க்கு உரிய ஆற்றல்கள் பொருந்தியவளாகவும், ஆடல் ஆசான், இசையோன், நன்னூற் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோன், யாழ்ப் புலமையோன் முதலானோரிடம் கலைகளைக் கற்றவளாகவும் சிலப்பதிகாரம் மாதவியைக் குறிப்பிடுகின்றது. அதேவேளை கண்ணகி வழக்குரையும் மாதவி எண், எழுத்து, இசை ஆகிய மூன்றையும் பண் ஏழினையும் பதினொரு கூத்துக்களையும் கற்றவள் என்று குறிப்பிடுகின்றது.

அரசன் மகிழ்ந்து போற்றி ஆயிரத் தெட்டு கழஞ்சு பொன்னையும் தலைக்கோல் பட்டத்தோடு பச்சைமாலையினையும் பரிசாக அளிப்பதற்குக் காரணமாக அமைந்தது மாதவியின் கலைத்திறனே ஆகும். முறைப்படி மணம் செய்துகொண்ட கண்ணகியை விட்டுப்பிரிந்து மாதவியிடம் பல காலம் கோவலன் இன்புற்று வாழ்ந்தமைக்கும் அடிப்படை மாதவியின் கலைத்திறன் என்பதில் ஐயமில்லை.

சிலப்பதிகார மாதவி மன்னனின் முன்னால் நடனமாடி பாராட்டையும் பரிசையும் விருதையும் பெற்றமையைப் பின்வரும் பாடல் எடுத்துக் கூறுகின்றது.

'...
காவல் வேந்தன்
இலைப்புங் கோதை இயல்பினின் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள்' (சிலப்.அரங்கேற்று காதை. செய்யளடி.159-163)

மாதவியின் கலைத்திறன் காரணமாக அவளது புகழ் எங்கும் பரவியதுடன் வடவித்தியாதர நகரிலிருந்து விஞ்சையவீரன் தன்மனைவியுடன் இந்திரவிழாவில் மாதவியாடும் ஆடலைக் கண்டுகளிப்பதற்காக காதலியுடன் வந்திருந்தான் என்பதை சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.(சிலப்.கடல் ஆடு காதை, செய்.64-70)அவ்விழாவிலேயே மாதவி பதினொரு வகையான ஆடல்களையும் அந்தந்த ஆடலுக்கு உரிய அணியோடும் கொள்கையோடும் பாட்டோடும் ஆடிச் சிறப்பித்தாள்.இது அவளது கலைத்திறனையே புலப்படுத்துகிறது.

கண்ணகி வழக்குரை மாதவியும் யாவரையும் பாடி, ஆடி மகிழ்வித்தாள். நடன அரங்கேற்றத்தின்போது கல்லும் தேன்போல் உருகவும், சோழ மன்னனின் மனமுருகவும் பார்த்திருந்தோர் ஒன்றையொன்றை அறியாமல் வெயில் வெண்ணெய் போல் உருகப் பாடி ஆடினாள்.(கண்.வழ.மாதவி அரங்கேற்றுக் காதை,செய்.228) மேலும் மாதவி தன்னைப் பலவாறு இசைய வைத்து நடனமாடினாள். அவளது ஆடல், பார்த்திருந்த சோழ மன்னனையும் சிரிக்கச் செய்தது என கண்ணகிவழக்குரை குறிப்பிடுகின்றது.(கண்.வழ.மாதவி அரங்கேற்று காதை, செய்.240)

இவ்வகையில் இரு நூல்களிலும் வரும் கண்ணகியினர் கலைத்திறன் மிக்கவர்களாகக் காணப்படுகின்றமையினை அறியமுடிகிறது.

5.2. கோவலன் மீது அன்பு காட்டுதல்.

சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்குரையிலும் மாதவி கோவலன் மீது மிகுந்த அன்புடையவளாகப் படைக்கப்பட்டுள்ளாள். கோவலனுடன் வாழும் காலத்தில் தான் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் அம்மரபிலிருந்து தன்னை விடுவித்தவளாக கோவலனே தனது அன்புக்குரிய கணவன் என்ற உரிமையுடன் அவன் மீது ஊடி மகிழ்ந்து வாழ்ந்தாள்.மாதவி கோவலன் மீது காட்டிய அன்புகாரணமாகவேதான் தன்மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து, அவளை மறந்து கோவலனால் மாதவியுடன் நீண்டநாட்கள் வாழமுடிந்தது.

'
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்' (சிலப்.கடலாடு.109 – 110)
கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும்
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன்னிலை மயங்கினான் எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கி' (சிலப்.கானல்.21)

மேலுள்ள பாடல்கள் மாதவி கோவலன் மீது உரிமையுடன் அன்புகொண்டு வாழ்ந்த உண்மையான காதற் வாழ்வினையே எடுத்துக் கூறுகின்றன.

இந்திர விழாவில் மாதவியின் ஆடலைக் கண்டு வெறுப்புற்றிருந்த கோவலனை மகிழ்விக்க மாதவி தன்னைப் பலவாறு புனைந்து அவனை மகிழ்வித்த செய்தியைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இது கோவலனைப் பிரிய விரும்பாத,மாதவியிடத்துக் காணப்பட்ட அன்புசெலுத்தும் குணத்தினையே எடுத்துக் கூறுகின்றது.

கானல் வரிப்பாடல்களைக் கேட்டு கோவலன் விட்டுப் பிரிந்த நாள் அன்றே மாதவி அவனது பிரிவுத்துன்பத்தினால் பசலை நோய் அடைந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதேவேளை கண்ணகி கோவலனைப் பிரிந்து பல ஆண்டுகள் வாழ்ந்தபோதும் பசலை நோய் அடைந்ததாகக் கூறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

கோவலனைத் திரும்பிவருமாறு வசந்தமாலை மூலம் தூது அனுப்பிய சிலப்பதிகார மாதவி, அவன் மறுத்துக் கூறிய செய்தியை அறிந்து மேலும் துன்பப்படுகிறாள்.

'....
கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவிதான்' (சிலம்பு.வேனிற்காதை.செய்யுளடி.116-118)

கண்ணகி வழக்குரையில் பொன்னுக்கு மறிப்புக்காதை, வழிநடைக்காதை, ஆகிய பகுதிகளில் மாதவி அடைந்த துயரமும் அவள் கோவலன் மீது கொண்ட அன்பும் வெளிப்பட்டு நிற்கின்றன. கோவலன் பொன்கொடுக்க வழியற்று நின்றபோது மாதவியின் தாய் சித்திராபதி கோவலனை விட்டுவிடுமாறு கூற, தாரமாக என்னை வைத்திருந்த கோவலரை எப்படிப் போகச் சொல்வது? (கண்.வழ.பொன்னுக்கு மறிப்பு. செய்.9,12) என்று தாயிடம் குறிப்பிடுவதும் வாழ்ந்தால் கோவலனுடனே வாழ்வேன் என்று குறிப்பிடுவதும் அவள் கோவலன் மீது கொண்ட மிகுந்த அன்பினையே புலப்படுத்துகின்றது.

கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து சென்ற பின் மாதவிஅவனை நினைத்து மிகுந்த துன்பங்கொண்டு அழுது புலம்புகிறாள். பொன்னியாற்றங்கரையிலே கோவலனைவிட்டுப்பிரிந்த மாதவி, ஏற்றுநீர் வெள்ளத்தைப்போல கண்ணீர் விட்டு, குரங்கின் கைப் பூமாலையானேனே என்று அழுகிறாள்.(கண்.வழ.இரங்கியகாதல்,செய்.74-75)மேலும் மாதவி மிகநொந்துபட்டேன் என்றும் வாடிய மலர்போலானேன் என்றும் கோவலர் வந்து மீண்டும் தன்னுடன் கூடுவாரோ? என்றும்(மேலது.செய்.25) பலவாறு சொல்லியழுது பிரிவுத்துயரில் வாடுவதன் மூலம் கோவலன் மீது அவள் மிகுந்த அன்புடையவள் என்பதும் பிரிவைத்தாங்கா இயல்பினள் என்பதும் வெளிப்படுகின்றது.

5.3. மனவுறுதியும் தன்நம்பிக்கையும்

இரு நூல்களிலும் வரும் மாதவியினர் தன்நம்பிக்கையும் மனவுறுதியும் கொண்டவர்களாகப் படைக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். இவ்விருவரிடமும் காணப்பட்ட இவ் விசேட குணவியல்பு கணிகையர் குலமரபுகளை மீறி சமூகத்தின் முன்மாதிரியானவளாக அவர்களைஅடையாளப்படுத்தவும் ஏதுவாக அமைந்தது.
கோவலன் தன்னை விட்டுப்பிரிந்து சென்றாலும் அவன் மீண்டும் தன்னிடம் வருவான் என்பதில் மாதவி மிகுந்த நம்பிக்கையுடையவளாகக் காணப்பட்டாள். சிலப்பதிகார மாதவி வயந்தமாலையைத் தூது அனுப்பி, பின்னர் அவன் வரமாட்டான் என்ற செய்தியை அறிந்தபோதும் மனம் தளராது இன்று மாலைப் பொழுதில் வராவிட்டாலும் நாளை காலை வந்து விடுவார் என்று தன் எண்ணத்தைப் புலப்படுத்துகின்றாள்.

'
மாலை வாரார் ஆயினும் மாண் இழை
காலை காண்குவம்' (சிலம்பு.வேனிற்காதை.செய்யுளடி.115-116)
கண்ணகி வழக்குரையில் கோவலன் பொன்கொடுக்க வழியற்று நின்ற போதும்பிரிந்து சென்றபோதும் அவனை முழுமையாக மறந்துவிடும்படி சித்திராபதி கூற, மறுத்தும் எதிர்த்தும் உரைக்கின்றாள். அத்துடன் சித்திராபதி கோவலனை மறந்து இன்னொருவனுடன் பொருள் பெற்று வாழுமாறு கூறியபோதும் மனம் தளராது, வாழ்ந்தால் கோவலனுடனே வாழ்வேன் என்று கூறுகிறாள்.( கண்.வழ.இரங்கியகாதல்.செய்.110)
இக் கூற்றுக்கள் மாதவியைக் கற்புடைய பெண்ணாகவும் மனவுறுதி கொண்ட நெஞ்சினளாகவும் காட்டுகின்றன. தமிழ் நாட்டில் வழங்கும் பெரிய எழுத்து கோவிலன் கதை(புகளேந்திப் புலவர்),கோவலன்கதை கோவலன் சரித்திரம்(தமிழகம் முதலான கண்ணகி இலக்கியங்களில் கோவலனுடன் மாதவியும் உடன்கட்டை ஏறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

5.4. தவறை ஏற்றுக்கொள்ளுதல்

தவறை ஏற்றுக்கொள்ளும் குணவியல்பு இவ்விரு நூல்களிலும் வரும் மாதவியரிடமும் காணப்படுகின்றது. சிலப்பதிகார மாதவி கோவலனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினாள். முதலில் எழுதிய கடிதத்தினை வயந்தமாலை மூலமும் இரண்டாவது கடிதத்தினை கோசிக மாமுனி ஊடாகவும் அனுப்பினாள்.அக்கடிதத்தினை கோவலன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அக்கடிதம் அறிவுத்திறனற்றதாகவும் காதலுணர்ச்சி ஒன்றினையே நோக்காகக் கொண்டு கோவலன் தன்னுடன் சேரவேண்மென்ற கருத்தினை வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தமையாகும். கோவலன் பிரிந்து சென்றபோது சிலப்பதிகார மாதவி அவனுக்காக எழுதிய இரண்டாவது கடிதத்தை தான் முன்பு உணர்ச்சி ததும்ப எழுதிய கடிதத்தைப் போலன்றி அறிவுபூர்வமாக, அதேவேளை விட்ட தவறை ஏற்றுக்கொண்டு எழுதுகிறாள். அக்கடிதம் மாதவி தான் விட்ட தவறுக்காக வருந்துவதையும் கோவலனை சிந்திக்கவும் செய்தது. அதனால்தான் கோவலனே'தன் தீது ஏதும் இல்லாதவள்' என்று மாதவியையும் 'எல்லாம் என் தீவினைதான்' என்று அவனையும்; கூறவைத்தது.

கண்ணகி வழக்குரை மாதவியும் கோவலனுக்கு தான் எழுதிய கடிதத்தில் தன் தவறை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறாள்.சிறியோனாகிய நான் செய்துள்ள பிழையை அறிவுடையீர் பொறுத்தருளல் வேண்டும் என்று எழுதுகிறாள்.

'
சிறியோர் மிகவும் செய்துள பிழையை
அறிவோரானால் அது பொறுத்தருளி'(கண்.வழ.வசந்தமாலை.செய்.65:2-4)
மேலும் பேதையாகிய நான் செய்த பிழையைப் பொறுத்துக் கொண்டு மயில்போல் நடந்து மாலையுடனே இங்கே எழுந்தருள வேண்டும்(கண்.வழ.வயந்தமாலைதூது:செய்:66) என்றும் குறிப்பிடுகின்றாள். கோவலனைப் பிரிந்து பிரிவுத்துயரில் வாடும் போதும் பொன்னியாற்றங்கரையில் வைத்து தான் கூறிய வார்த்தை காரணமாகவே அவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றான் என்றும் தவறையுணர்ந்து கவலை கொள்கிறாள்.

5.5. பொருளாசையின்மை

இரு நூல்களிலும் வரும் மாதவியர் பொருளாசையற்றவர்களாகக் காணப்படுகின்றனர். பொருளாசையே பிரதான நோக்கமாயின் இரு கண்ணகியினரும் கோவலன் பிரிந்து சென்றபின்னர் கலங்கியிருக்கமாட்டார்கள்.

சிலப்பதிகார மாதவி, கோவலன் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற பின்னர் அவனுக்கு அனுப்பிய முதலாவது கடித்தில் மீண்டும் தன்னை வந்து சேரவேண்டும் என்ற காதற் குறிப்பினை வெளிப்படுத்தியிருந்தாள். கோவலன் கண்ணகியிடம் சென்று 'நம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயினளூ அதனால் வந்த இல்லாமை நிலை எனக்கு இங்கே வரவும் வெட்கத்தைத் தருகிறது'(சிலப்.கனாத்திறம் உரைத்த பாதை.செய்.70-71) என்று கூறுவதன் அடிப்படையில் அவன் பொருட்களை இழந்த நிலையில்தான் மாதவியை விட்டுப் பிரிந்தான் என்பது புலனாகின்றது. இந்நிலை நீண்டகாலமாகவே கோவலனுடன் வாழ்ந்த மாதவிக்குத் தெரியாமலில்லை. இருந்தும் அவள் பிரிந்துபோன கோவலனுடன் சேர விரும்பியமை பொருளாசையற்ற அவளது மனதினையே காட்டுகிறது.

மேலும் கோவலன் கொலையுண்டமை, கண்ணகி சிலம்பு ஏந்திச் சென்று வழக்குரைத்து வென்றமை, அரசன் உயிர் நீத்தமை, மதுரை நகர் அழிந்தமை அனைத்தையும் மாடலனூடாக அறிந்து சிலப்பதிகார மாதவி பெருந்துன்பமடைந்தாள். கணிகையர் குல வாழ்க்கைமுறையினால் தான் அடைந்த துன்பநிலை இனியும் வேண்டாம் என்று கருதிய அவள் மகள் மணிமேகலையினையும் அவ்வழிப்படுத்த விரும்பாது துறவு பூண்டு வாழ வழிகாட்டினாள்.மாதவி அவளது தாயிடம் 'நான் இனி எவ்வித நல்லணிகளையும் மேற்கொள்ளேன்.மணிமேகலையை மிகவும் துயரங்களைச் செய்வதான கணிகையர் கோலத்தினளாக்கிக் காணாது இருப்பாயாக' என்று சொல்லித் தான் அணிந்திருந்த தலைமாலையுடன் தன் கூந்தலையும் களைந்து, தானங்கள் பலவும் புரிந்து அறவாழ்வினளாகித் துறவு பூண்டாள். (சிலப்.நீர்ப்படைக்காதை. செய்.103 – 108)

மாதவி பொருளாசை கொண்டவளாகின் தன் கலைத்திறனைப் பயன்படுத்தி கோவலன் பிரிந்து சென்ற பின்போ அல்லது அவன் இறந்த பின்போ வேறு ஆடவர்களுடன் உறவுகொண்டு வாழ்ந்திருக்கமுடியும். அதற்கு அக்கால சமூக சூழலும் ஏதுவாகவே இருந்தது. ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை. தான் துறவு பூண்டது மட்டுமல்லாது தன்மகளையும் துறவு பூணச் செய்தமை அவளது பொருளாசையற்ற மனத்தினையே காட்டுகிறது


மாதவியுடன் வாழும் காலத்தில் கோவலன் ஆயிரத்தெட்டு களஞ்சு பொன் கொடுக்கும் நிலை காணப்பட்டபோதும் அதனை எதிர்பார்த்து மாதவி வாழவில்லை.கணிகையரின் குல வழக்கப்படியே கோவலனிடம் பொன் பெற வேண்டிய நிலை காணப்பட்டது.கண்ணகி வழக்குரையில் கணிகையர் குலமரபை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கின்றதாக படைக்கப்பட்டுள்ள மாதவியின் தாய்,கோவலன் மாதவிக்குப் பொன்கொடுக்க வழியற்றுத் தடுமாறியபோது அவனை மறந்துவிடும்படி கட்டாயப்படுத்தினாள். அதனை மாதவி மறுத்துரைத்தபோது ஊதாரி உன்னைப் பெற்று கழிசறைச்சியானேனே என்றும் அவனாலே அழிவாய் என்றும் சாபமிடுகின்றாள்.(கண்.வழ.பொன்னுக்கு மறிப்பு.செய்.44-45)


தாயின் சாபத்தினையும் பழிச் சொல்லையும் தாங்கிக் கொண்டு ஆயிரத் தெட்டு கழஞ்சு பொன் தந்தவருக்கு உன்மனம் இரங்காதோ என்றும் கோவலரை அகற்றிவிட என்மனது விடுவதாயில்லை என்றும் மாதவி அவளது தாய்க்கு மறுப்பு வார்த்தை தெரிவிக்கின்றாள்.


'
அரங்கேறினேன் நானும் அறியாத பிராயத்திலே
தயங்காமல் ஆயிரத்தெண் கழஞ்சுபொன் தந்தவரை
இரங்காதோ உன்மனது இவரைநான் அகற்றிவிடப்
பரங்காணு மும்மிதென்றாள் பாவி நீ மாதாவே' (கண்.வழ.பொன்னுக்கு மறிப்பு.செய்.46)
இவ்வார்த்தைகள் பொருளற்ற நிலையை கோவலன் அடைந்தபோதும் அவனைவிட்டுவிடாது அவனுடன் கூடி வாழவே விரும்பிய,பொருளாசையற்ற அன்புமிக்க அவளது இயல்பினையே எடுத்துக்காட்டுகின்றன.

5.6. அறிவுரை கூறும் மாண்பு.

சிலப்பதிகார மாதவியிடம் காணப்படாத அறிவுரை கூறும் பண்பு கண்ணகி வழக்குரை மாதவியிடம் காணப்படுகிறது. கோவலன் பிரிந்து சென்ற போது அவனிடம் தன் மனவுணர்வுகள் அடங்கிய ஓலையினைக் கொடுத்து வசந்தமாலையைத் தூது அனுப்பும் கண்ணகி வழக்குரை மாதவி, வசந்த மாலையிடம் ஓரிடமும் நிற்காது சென்று கோவலன் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் ஓலையைக் கொடுக்கும்படி கூறுகின்றாள்.(கண்.வழ.வயந்தமாலை.செய்.77)மேலும் கோவலனுக்கு எழுதிய ஓலையிலும் பலரும் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காதே என்று அவள் குறிப்பிட்டு எழுதியமையும் அவளது அறிவுரை கூறும் இயல்பினையே எடுத்தியம்புகின்றது.

'
நல மிகவெனவும் நல்கியுட் கொண்டு
பலர் பலர் மிகவும் பகர்தல் கேளாதே' ( கண்.வழ.வயந்தமாலை தூது.செய்.65:1-2)

6. முடிவுரை

கண்ணகி,மாதவி முதலான பாத்திரங்கள் சமூக அடையாளப்படுத்தலில் குறியீட்டுச் சொல்லுருவங்களாக நிலைத்திருப்பதை அவதானிக்கமுடியும். இவர்களில் கண்ணகி பாத்திரம் பத்தினித்; தெய்வமாகவும் கணவனுக்காகப் போராடுதல், மழையை வருவித்தல் முதலானவற்றின் தொன்மமாகவும் நிலைபெற்றுள்ளமையும் கண்கூடு. இளங்கோவடிகளும் கண்ணகி வழக்குரையாசிரியரும் கண்ணகியைப் பற்றிக் கூறுமிடங்களில் அவளது கற்புத்திறத்தினையும் கூறிச் சென்றுள்ளார். கணிகையர் குலத்தவளாக இருந்தாலும் மாதவி அம்மரபிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவளாக கோவலனாகிய ஒருவனுடனேயே வாழமுற்பட்டு பின்னர் அவ்வாழ்வு சிதைந்தபோது துறவில் நாட்டம் கொள்பவளாகவும் படைக்கப்பட்டுள்ளார். இவ்வகையில் நோக்குமிடத்து மாதவியும் கற்புடைய பெண்ணாகவே வாழ்ந்துள்ளாள். எனினும் இளங்கோவடிகளோ அல்லது கண்ணகி வழக்குரை ஆசிரியரோ அவளை அவ்வாறு குறிப்பிட முற்படவில்லை. அவர்களின் சமூகச் சூழல் இடங்கொடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழகத்தில் சிலப்பதிகாரம் எழுந்த சமூகச் சூழலும் ஈழத்தில் கண்ணகி வழக்குரை எழுந்த சமூகச் சூழலும் வேறு வேறானவை. சங்க காலத்தில் தலைவன் தலைவியருக்கிடையே காணப்பட்ட களவொழுக்;கம், மருத நிலத் தலைவனது பரத்தையை நாடிச் செல்வதான வழக்கம் போன்ற நடைமுறைகள் பின்னாளில் கடிந்தொழுகப்பட்டன. அறக்கருத்துக்கள் மேலோங்கிக் காணப்பட்ட சங்கமருவிய காலத்தில் எழுந்த நூல் என்ற வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பரத்தமையை வலியுறுத்தாது மாதவியை கணிகையர் குலமரபிலிருந்து வேறுபட்ட, முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க கற்புடைய மகளிராகப் படைத்துள்ளார். சிலப்பதிகாரத்தில் கோவலனைத் தவிர வேறு யாருமே மாதவியின் மீது குற்றம் சுமத்தவில்லை. மாதவி ஏற்றம் மிக்கவளாகவே படைக்கப்பட்டுள்ளாள்.கண்ணகி வழக்குரைக் காப்பியம் இந்து சமய வழிபாட்டில் பாராயணம் செய்யப்படும் ஓர் நூலாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை பின்பற்றுகின்ற தமிழ்ப்பண்பாட்டில் பரத்தமை கடிந்தொழுகப்படுவது தவிர்க்க முடியாததாகும். ஆதனால்தான் கண்ணகி வழக்குரையாசிரியர் மாதவியின் பரத்தமை ஒழுக்கத்தைக் கடிந்துள்ளார்.

உசாத்துணைகள்:

1.    
கந்தையா.வீசி(பதிப்பாசிரியர்),1968, கண்ணகி வழக்குரை,
      
இந்துசமய விருத்திச்     சங்கம்,காரைதீவு.
2.    
புலியூர்கேசிகன்(உரையாசிரியர்),2007,சிலப்பதிகாரம்,பாரிநிலையம்,சென்னை
3.    
வரதராஜன்.மு, 1997, மாதவி, பாரிநிலையம்.
4.    
இரகுபரன்.(பதிப்பாசிரியர்),2003, சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள்,
      
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,கொழும்பு.