விழுமிய வாழ்வுக்குப் பாரதியாரின் பத்துக் கட்டளைகள்

பேராசிரியர் இரா.மோகன்
 

 

கவியரசர் பாரதியாரின் பிறந்த நாள்: 11.12.2015

ருபதாம் நூற்றாண்டின் விடியலில் தமிழ்க் கவிதை வானில் 'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்' என்னும் எழுச்சிமிகு வாக்குமூலத்துடன் வலம் வந்தவர் பாரதியார். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இடைவெளியின்றி வாழ்ந்த மாமனிதர் அவர். வாழ்வைப் பொறுத்த வரையில் அவர் விரும்பியது 'தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடித் துன்பம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரை எனப் பின் மாயும்' வேடிக்கை வாழ்வை அன்று; 'உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்' வாடிக்கை வாழ்வையும் அன்று. சுடர்மிகு அறிவு கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் உயர்வாழ்வினையே - வையத்துள் வாழ்வாங்கு வாழும் தெய்வ வாழ்வினையே - அவர் தம் கவிதைகளில் பெரிதும் போற்றினார். இவ்வகையில் மனிதன் விழுமிய வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாகப் பாரதியார் தம் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள 'பத்துக் கட்டளைக'ளைக் குறித்துக் காண்போம்.

1.'கவலையற்றிருங்கள்!'

எதையாவது எண்ணியெண்ணிக் கவலைப்படுவதையே தன் இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். இங்ஙனம் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பவனைப் 'பாவி' எனச் சாடுகின்றார் கவிஞர். வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டும் அவனது கவலை தீர்ந்துவிடாது. எனவே,

'நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை'


என்கிறார் பாரதியார். மேலும், அவரது கருத்தில் கவலைப்படுதலே கருநரகம்; கவலையற்று இருத்தலே முக்தி.

2.'அச்சம் தவிருங்கள்!'

'அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' எனத் தற்கால பாரத மக்களின் நிலைமையைப் பற்றி நெஞ்சு பொறுக்காமல் வெதும்பிப் பாடியவர் பாரதியார். 'அறம் செய விரும்பு!' எனத் தமது ஆத்திசூடியைத் தொடங்கிய ஒளவைக்கு மாற்றாக, 'அச்சம் தவிர்!' எனத் தம் ஆத்திசூடியைத் தொடங்கிப் புதுமை படைத்தவர் அவர்.

'யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்'


என்பதே அச்ச உணர்வைப் போக்கி வீர உணர்வைக் கைக்கொள்வதற்கு அவர் படைக்கும் தாரக மந்திரம் ஆகும்.

3.'சஞ்சலமின்றி இருங்கள்!'

மகிழ்ச்சியான - நிறைவான - வாழ்வுக்கு, மனம் சஞ்சலம் இல்லாமல் - சலனம் இல்லாமல் - இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். 'தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு, பராசக்தி உளத்தின் படி உலகம் நிகழும்' எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றார் பாரதியார். 'திருவைப் பணிந்து, நித்தம் செம்மைத் தொழில் புரிந்து, வருவது வருக என்றே மகிழ்வுற்று இருக்க வேண்டும்' என்பதே அவரது அடிப்படையான வாழ்வியல் சிந்தனை.

4. 'போனதற்கு வருந்துதல் வேண்டா!'

நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு, 'இன்று புதிதாய்ப் பிறந்தோம' என்ற உணர்வோடு - நம்பிக்கையோடு - வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதே பாரதியாரின் அழுத்தமான கருத்து.

'சென்றதுஇனி மீளாது... நீர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்'

என்பது கவியரசர் அறிவுறுத்தும் ஓர் இன்றியமையாத வாழ்வியல் பாடம் ஆகும்.

5.'கோபத்தை வென்றிடுங்கள்!'

'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்பது வள்ளுவம். இம் மணிமொழியை அடியொற்றிக் கவியரசரும் சினத்தின் கேட்டினையும் பொறுமையின் பெருமையினையும் குறித்துப் பயில்வார் நெஞ்சில் பதியும் வண்ணம் பாடியுள்ளார்.

'சினங் கொள்வார் தமைத்தாமே தீயாற்சுட்டுச்
செத்திடுவார் ஒப்பாவார்...
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்...
கொடுங் கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறிய தாகும்...'


என்பது கவிஞர் தம் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட முடிவாகும்.

6.'அன்பு செய்யுங்கள்!'


'அன்பே சிவம்' என்பது திருமூலர் வாக்கு. 'அன்பின் வழியது உயிர்நிலை' என்பது வள்ளுவர் வாய்மொழி. 'ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என விரும்பியவர் வள்ளலார். பாரதியாரும் தம் பங்கிற்கு அன்பு நெறியின் அருமை பெருமைகளைக் குறித்துத் தம் கவிதைகளில் ஒல்லும் வகையெல்லாம் பாடியுள்ளார். 'வையகத்தில், அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார், இன்புற்று வாழ்தல் இயல்பு' என்பது அவர் உணர்த்தும் வாழ்க்கை நெறி. சுருங்கக் கூறின், அன்பே அவரது மதம்.

7.'தன்னை வென்றாளும் திறமையைப் பெறுங்கள்!'

ஒருவன் வாழ்க்கையில் உயர்வதற்கு மிக முக்கியமானது அவன் தன்னை அறிதல் - தன்னை ஆளல் - தன்னை வெல்லல். 'தனைத்தான் ஆளுந்தன்மை நான் பெற்றிடில், எல்லாப் பயன்களுமே தாமே எய்தும்' என 'விநாயகர் நான்மணி மாலை'யில் பொதுப்படப் பாடுவார். 'ஆத்ம ஜயம்' என்ற வேதாந்தப் பாடலில் அவர்,

'தன்னை வென்றாளும் திறமை பெறாதுஇங்கு
தாழ்வுற்று நிற்போமா?'
என அறிவார்ந்த வினா ஒன்றினைத் தொடுப்பார்.


8.'விமானத்தைப் போல் ஒரு நல்ல மனத்தைப் பெறுங்கள்!'

அறங்களுள் எல்லாம் தலையாய அறம் மனத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகும். அதனால்தான் 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம்' என இரத்தினச் சுருக்கமாய் மொழிந்தார் வான்புகழ் வள்ளுவர். 'மனமது செம்மையானால் மந்திரம் செபித்தல் வேண்டா' என்பது சித்தர் வாக்கு. மனத் தூய்மையின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்தே கவியரசர் பாரதியாரும் தம் கவிதைகளில் ஆங்காங்கே மனத்திற்குப் பற்பல அறிவுரைகளை – கட்டளைகளை – வழங்கியுள்ளார்.

'முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று,
மூன்றுலகும் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போல் ஒரு
நல்ல மனம் படைத்தோம்'


என்பது மனத்தை வாழ்த்திக் கவிஞர் பாடியிருக்கும் பாட்டு; நல்ல மனத்திற்குக் கவிஞர் சூட்டி மகிழும் புகழாரம் ஆகும்.

மனிதன் 'பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றிற் படுத்துப் புரளும்' மனதினை வேண்டாது, 'விமானத்தைப் போல் விண்ணில் பறந்து வாழும்' மனத்தினைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பது கவியரசரின் முடிந்த முடிபு.

'மனத்தைக் குழந்தை மனம் போலே வைத்துக் கொள்ளுங்கள். கபடமின்றி இருங்கள் என்று பாரதியார் ஓயாமல் உபதேசிப்பார்' என அவரது துணைவியரான செல்லம்மா பாரதி குறிப்பிடுவது இங்கே நினைவு கூரத்தக்கது.

9. 'தெய்வம் காக்கும் என நம்புங்கள்!'

நம் வாழ்வில் வரும் சோதனைகள் - நெருக்கடிகள் - துன்பங்கள் - தொல்லைகள் எல்லாவற்றையும் 'மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே' - 'எல்லாம் புரக்கும் இறை நம்மையும் காக்கும்' என்ற நம்பிக்கையாலே - வெற்றி கொள்ளலாம் என ஆழமாக நம்புகின்றார் பாரதியார்.

மேலும், தேடி இறைவனைச் சரணடைந்தால், கேடதனை நீக்கி, கேட்ட வரம் தருவான் அவர் என்கிறார் பாரதியார்.

' நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!'


10. 'அமரத் தன்மை எய்துங்கள்!'

'அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி. அகத்திலே அன்பினோர் வெள்ளம். பொறிகளின் மீது தனியரசாணை, பொழுதெலாம் இறைவனது பேரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல்' என்னும் இப் பண்புகளையே அருளுமாறு எல்லாம் வல்ல பரம்பொருளிடம் வேண்டுகோள் விடுக்கின்றார் பாரதியார். அவர் சுட்டும் இப் பண்புகள் எல்லாம் ஒரு மனிதனின் வாழ்வில் - ஆளுமையில் - படியுமாயின், அவன் மண்ணிலேயே விண்ணைக் காண்பான்; அமரத் தன்மையை அடைவான் என்பது உறுதி.

கவியரசர் பாரதியார் வலியுறுத்திப் பாடியுள்ள இப் 'பத்துக் கட்டளை'களைக் கசடறக் கற்று, அவற்றின் வழி நிற்கும் மனிதனின் வாழ்வு விழுமிய வாழ்வாக விளங்கும். இம் மண்ணுலக வாழ்விலேயே வானுறையும் தெய்வநிலை மனிதனுக்கு வந்து சேரும்!

 


பேராசிரியர்; இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.
எழுத்தாளர் - பேச்சாளர்