தமிழ் வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கு

 

கவிஞர் இரா.இரவி!

விதை பல வகை உண்டு, மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை, குறும்பாக் கவிதை. இன்று உலக அளவில் குறும்பாவிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஆறிலிருந்து அறுபது வரை அனைவரும் ரசிக்கும் பா குறும்பா. அது போல குறும்பா வடிப்பவர்களும் பல்வேறு துறைகளில் உள்ளனர். பொறியாளர், மருத்துவர் பேராசிரியர், ஆசிரியர் என்று தொடங்கி, கூலித் தொழிலாளர், கட்டிடத் தொழிலாளர் வரை குறும்பா எழுதுகின்றனர். சப்பானில் ஹைக்கூ கவிதைகளை புலமை பெற்ற பண்டிதர்கள் மட்டுமல்ல, மக்களும் கூடி நின்று ஹைக்கூ சொல்வார்கள். அது போல இன்று தமிழ் வளர்ச்சிக்கு குறும்பாவின் பங்கு என்பது பாராட்டுக்குரியது.

பலவேறு இதழ்களிலும் குறும்பாக்களுக்கு என்று தனியிடம் ஒதுக்கப்பட்டு பிரபல இதழ்கள் தொடங்கி சிற்றிதழ்கள் வரை தொடர்ந்து பிரசுரம் செய்து வருகிறார்கள். வாசகர்களும் குறும்பாக்களை விரும்பி படிக்கின்றார்கள். அது மட்டுமல்ல, படிக்கின்ற படிப்பாளியை படைப்பாளியாக்கும் ஆற்றல் குறும்பாக்களுக்கு உண்டு. எனவே வாசகர்களும், குறும்பாக்கள் படைத்து இதழ்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதழ்களில் பிரசுரமான மகிழ்வில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். 'மக்கள் தொகையை விட கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்' என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். அதுபோல குறும்பா படைக்கும் கவிஞர்களும் பெருகி விட்டனர். குறும்பாக்களில் அழகியியல் மட்டுமின்றி பல்வேறு பாடு-பொருள்களில் பாடி வருகின்றனர். தமிழ் வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

இயந்திரமயமான, பரபரப்பான உலகில் நீண்ட, நெடிய கவிதைகளைப் படிப்பதற்கு மக்களுக்க்கு நேரமும், பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் குறும்பாக்கள், சில வினாடிகளிலே மூன்று அடிகளிலே முடிந்து விடுவதால் எளிதாக விரும்பிப் படிக்கின்றனர். குறும்பாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கின்ற காரணத்தால், பலரும் குறும்பா எழுதிட முன்வருகின்றனர்.

ஒரு மொழி அழியாமல் இருக்க வேண்டுமானால், அம்மொழி எழுத்து, பேச்சு இரண்டிலும் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் மொழி உயிர்ப்புடன் இருக்கும். குறும்பா நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. பல்கலைக்கழகங்களில், தன்னாட்சி கல்லூரிகளில் குறும்பாக்களை செய்யுள் பகுதியில் பாடமாக வைக்கின்றனர். மனப்பாடப் பகுதியிலும் குறும்பாக்கள் இடம் பெற்றுள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி இவை அனைத்திலும் எனது குறும்பாக்கள் பாட நூலில் இடம் பெற்றுள்ளன. முனைவர் பட்ட ஆய்வுகளும் குறும்பாக்களில் நடந்து வருகின்றது. குறும்பாவின் வெற்றிக்கு காரணம் தமிழ் என்பதே உண்மை.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் குறும்பாவிற்கான இலக்கணமாக மூன்று வரிகள், இரண்டு காட்சிகள், ஒரு வியப்புஎன்பார். பாதி திறந்து இருக்கும் கதவு என்பார்கள். சிந்தனை மின்னல் என்பார்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பார்கள். குறும்பா பற்றி பலரும் பல விளக்கங்கள் சொல்லி உள்ளனர். மூன்று வரி முத்தாய்ப்பு, சுண்டக் காய்ச்சிய பால் போல சொற் சிக்கனத்துடன் எழுதுவது குறும்பா. தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் விதமாக பல குறும்பாக்கள் உள்ளன.

அறிவியல் விஞ்ஞானி நெல்லை சு.முத்து அவர்கள் குறும்பாவை மூன்றடிச் சொற்செட்ட, நேரடி அனுபவ வெளிப்பாடு, மூன்றாவதடி மின்தாக்கு என்று குறிப்பிடுவார். ஒரு நொடியில் நாம் வாசிக்கும் போது தம்மை உயர்த்தி விடுவது குறும்பா. மின்னலாய் நமக்குள் மாற்றத்தை, மறுமலர்ச்சியே ஏற்படுத்துகிற கவிதைக் கீற்று என்கிறார் முது முனைவர் வெ.இறையன்பு குறும்பா என்பது கணினி யுகத்தின் கற்கண்டு .சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் இஅளவு சிறியது பொருள் பெரியது இதற்கால இலக்கியத்தின் தகதகப்பு, உருவத்தில் கடுகு உணர்வில் இமயம் இதேவையற்ற சொற்கள் நிக்கிடப் பிறக்கும் இபடித்தால் பரவசம் உணர்ந்தால் பழரசம் இப்படி குறும்பாவின் சிறப்பை எழுதிக் கொண்டே போகலாம் .

குறும்பா என்பதை குறுகிய பா என்றும், குறும்பான கருத்தினை கூறிடும் பா என்றும் பொருள் கொள்ளலாம். பத்து பக்க கட்டுரைகளில் வடிக்க வேண்டிய கருத்துக்களை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாக வடிப்பது குறுங்கவிதை. சாட்டையை கையில் எடுத்தல், ஓங்குதல், ஓங்கி வீசுதல் என்பார்கள். பல்வேறு பாடு பொருள்களில் குறும்பாக்கள் பாடப்பட்டு வருகின்றன. சப்பானியர்கள் ஹைக்கூ கவிதைகளில் பெரும்பாலும் இயற்கையை மட்டுமே பாடி வந்தார்கள். ஆனால் இன்று தமிழ்க்கவிஞர்கள் சப்பானிய கவிஞர்களையே மிஞ்சும் அளவிற்கு இயற்கையை பாடியதோடு மட்டுமன்றி தமிழ் குறித்தும், பல்வேறு பாடுபொருள்களிலும் குறும்பா வடித்து தமிழ் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள். குறும்பா வடிவில் ஒருபுறம் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது.

குறும்பாக்களில் இயற்கை, மனித நேயம், சமுதாயம், உளவியல் சிந்தனைகள் மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் மனக்குமுறலையும், குறும்பாக்களில் வடித்துள்ளனர். எந்தவித கட்டுப்பாடுமின்றி மனம் நினைப்பதை குறும்பாக்களில் வடித்து சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டு வருகின்றனர். மரம் வளர்க்க மழை பொழியும, மழை பொழிய மரம் வளரும் என்பதைப் போல குறும்பா எழுத தமிழ் வளரும் குறும்பா வளர தமிழ் வளரும் குறும்பா எல்லாம் ஒரு பா வா? என்று குறும்பாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று குறும்பாவின் வளர்ச்சி கண்டு பிரமித்து விட்டனர். அந்தளவிற்கு குறும்பாவின் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது.

இனிய நண்பர் கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் குறும்பாவில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .குறும்பாவி நூல்கள் எழுதியவர் .என் நூல்கள் உள்பட பல கவிஞர்களின் குறும்பா நூல்களுக்கு யாருக்கும் மறுக்காமல் தொடர்ந்து அணிந்துரை நல்கி வருபவர் .அவரது குறும்பா தமிழ் மொழியில் தொன்மை உணர்த்துகின்றது .

கவிஞர் மு.முருகேசு எழுதியது

தொன்மை மரம்
பல்லாயிரம் வேர்களோடு
செழித்திருக்கும் தமிழ்.


மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களும் அம்மா என்றே அழைக்கின்றன.தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழிக்கும் இந்த சிறப்பு இல்லை என்பதே உண்மை .அதனை உணர்த்தும் குறும்பா
.
கவிஞர் மு.முருகேசு எழுதியது .

உலகின் மூத்த மொழி
எல்லா உயிர்களின் முதல் சொல்
ம்ம்அம்மா.


சாதிகளை மறந்து தமிழர் என்று எல்லோரும் ஒன்றாக வேண்டும். சாதியால், மதத்தால், கட்சியால், தமிழர்கள் பிரியாமல் ஒன்றிணைய வேண்டும் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார் பாருங்கள். இவர் ஆங்கிலம் கலந்து பாடல் எழுத மாட்டேன் என்று அறிவித்த கவிஞர்.அறிவுமதி.

கவிஞர் அறிவுமதி எழுதிய குறும்பா

தமிழன் என்று சொல்ல
தமிழனுக்குப் பிடிக்காது
வாழக யாதவ் ... தலித்!


ஈழத்தமிழர்கள் போலவே புதுவைத் தமிழர்கள் மொழிப்பற்று மிக்கவர்கள். ஊடகங்களில் தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகின்றது. பத்து சொற்கள் பேசினால் இரண்டு சொற்கள் தமிழ். எட்டு சொற்கள் ஆங்கிலம், இப்படி நடக்கும் கொடுமை கண்டு தமிழர்களுக்கு கோபம் வரவில்லை என்பதை குறும்பாவில் நன்கு உணர்த்தி உள்ளார். பாருங்கள்.

கவிஞர் தமிழ்மணி எழுதிய குறும்பா !

மூன்று முறை முகத்தில் குத்தினால்
புத்தருக்கும் சினம் வரும்
வரவில்லை – தமிழனுக்கு


பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் குறும்பா நூல்கள் பல எழுதியவர். அவற்றுள் தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் விதமாக தமிழ்ப்பற்று விதைக்கும் விதமாக எழுதியுள்ள குறும்பா.

கவிஞர் வசீகரன் எழுதிய குறும்பா !

எந்த நாடு சென்றாலும்
தாய்மொழி தான் பேசும்
வலசைப் பறவை!


எங்கு சென்றாலும் பறவை தாய்மொழியே பேசுகின்றது. மனிதன் மட்டும் தாய்மொழியை மறக்கலாமா? என்ற கேள்வியை குறும்பாவில் கேட்கின்றார். கேள்வியால் சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றார். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்றான் மகாகவி பாரதி. உலகின் முதல்மொழி தமிழ் என்பதை சான்றுகளுடன் நிறுவிக் காட்டினார் பன்மொழி அறிஞர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். தமிழின் சிறப்பை தமிழர்கள் இன்னும் சிலர் உணராது இருக்கின்றனர். தமிழை குறைவாக மதிப்பிடுகின்றனர். அவர்களுக்கு தமிழை உணர்த்தும் விதமாக குறும்பா கவிஞர்கள் பாடுபொருள்களில் தமிழையும் பாடுபொருளாகக் கொண்டு குறும்பா பாடி வருகின்றனர். தமிழ் எங்கள் உயிருக்க்கு நேர் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

கவிஞர் நவதிலக் எழுதிய எழுதிய குறும்பா !

தமிழ் இனிமை
அம்மா
இருப்பதால்!


'அம்மா''' என்ற சொல்லே தமிழின் பெருமை தான். 'அ' உயிரெழுத்த, ம் மெய் எழுத்து, மா உயிர்மெய் எழுத்து. மூன்று எழுத்துக்களின் சங்கமமாக அம்மா என்ற என்ற சொல். மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களான ஆட, மாடு கூட உச்சரிக்கும் சொல் அம்மா. அம்மா என்ற சொல்லின் அருமையை அறியாமல் சிலர் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விட்டு பொருளே தெரியாமல் 'மம்மி' என்று அழைக்கும்படி குழந்தைகளை வற்புறுத்தி வருகின்றனர். மம்மி என்றால் 'பதப்படுத்தப்பட்ட பிணம் 'என்ற பொருள். மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களான ஆடு, மாடு கூட உச்சரிக்கும் சொல் அம்மா. அம்மா என்ற சொல்லின் அருமையை அறியாமல் சிலர் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விட்ட, பொருளே தெரியாமல் 'மம்மி' என்று அழைக்கும்படி குழந்தைகளை வற்புறுத்தி வருகின்றனர். மம்மி என்றால் 'பதப்படுத்தப்பட்ட பிணம்'' என்று பொருள். அம்மாக்கள் சிலர் என்னை பதப்படுத்தப்பட்ட பிணம் என்று அழைக்க வற்புறுத்துவது மடமையிலும் ம்டமை. இக்கொடுமை தமிழினம் தவிர வேறு இனத்தில் நடக்க வாய்ப்பு இல்லை. இப்படி பல்வேறு சிந்தனைகளை ஒரே ஒரு குறும்பா உருவாக்கும். அதுதான் குறும்பாவின் சிறப்பு.

தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள், பொங்கல் நன்னாள் இதற்கு வாழ்த்து அனுப்பும் பழக்கம் உண்டு. அப்படி அனுப்பிடும் வாழ்த்திலும் தமிங்கிலம் இருப்பதை உணர்த்திட மாற்றிக் கொள்ள உதவிடும் விதமாக ஒரு குறும்பா.

பேராசிரியர் கவிஞர் க.இராமச்சந்திரன் எழுதிய குறும்பா !

தமிழர் திருநாள்
வாழ்த்து வந்தது

HAPPY PONGAL.

குறுந்தகவல்களிலும் இது போன்ற ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதைக் காண்கிறோம். அதனால் என்ன? என்று ஆங்கிலச் சொற்களை கலக்கக் கலக்க மெல்லத் தமிழ் இனி சாகும் என்பதை தமிழர்கள் உணர்ந்து மற்ற மொழிக் கலப்பின்றி பேசவும், எழுதவும் முன்வர வேண்டும்.

ஆங்கிலக் கல்வி கற்பிக்கின்றோம் என்ற பெயரில் அயந்து வயது ஆகாத சிறிய குழந்தைகளை இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்பும் கொடுமையை சாடும் விதமாக வடித்த குறும்பா ஒன்று.

கவிஞர் பா.சேதுமாதவன் எழுதிய குறும்பா !

பட்டாம்பூச்சிகள்
சிறைப்பிடிக்கப்பட்டன
மழலையர் பள்ளி!


திரைப்படப் பாடல்கள் அன்று இருந்த அளவிற்கு தரமாக இல்லை. தரம் தாழ்ந்து ஆங்கிலம் கலந்து தமிங்கிலத்தில் எழுதி வருகின்றனர். தமிழ் வளர்ச்சிக்கு இடையூறாக தமிமைச் சிதைத்து வருவதை குறும்பாவில் சாடி உள்ளார். பாருங்கள். மக்களின் மன உயரத்தில் இருந்தவர்கள் தரம் தாழ்ந்து கீழே விழுந்து விட்டனர் என்கிறார்.

கவிஞர் பா.சேதுமாதவன் எழுதிய குறும்பா !

கோழியான
பருந்துகள்
திரைப்படப் பாடலாசிரியர்கள்தமிழின் அருமையை, பெருமையை, வளமையை, செழுமையை, குறுப்பாக்களில் பலரும் உணர்த்தி வருகின்றனர்.

கவிஞர் கொள்ளிடம் காமராஜ் அலைபேசி மூலம் தினமும் குறும்பாவை அனுப்பி வருபவர் .முக நூலிலும் எழுதி வருபவர்.

கவிஞர் கொள்ளிடம் காமராஜ் எழுதிய குறும்பாக்கள்.

கைகூப்பித் தொழச் செய்யும்
காளிதாசனையும்இ கண்ணதாசனையும்
கன்னித் தமிழ்!


-------------------

தாய்ப்பால் பசும்பால்
இரண்டிலுமில்லா புதுச்சுவை
தமிழ்ப்பால் !


குறும்பா என்பது புனைவு இலக்கியமல்ல, அது உணர்வு இலக்கியம் என்பார் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவ்ர்கள். குறும்பாவின் மூலம் தமிழ் இன உணர்வை தமிழ் மொழி உணர்வை பல கவிஞர்கள் உணர்த்தி வருகின்றனர். கடல் போல உள்ள குறும்பாக்களில் சில துளிகள் மட்டுமே இங்கே மேற்கோள் காட்டி உள்ளேன்.

குறும்பா எழுதுவதில் வல்லவர் புதுவை தமிழ் நெஞ்சன் அவர்களின் புதல்வி கு.அ. தமிழ்மொழி. தமிழ்மொழிப்பற்று விதைக்கும் குறும்பாக்கள் பல எழுதி உள்ளார், அவற்றிலிருந்து,

வரவேற்றது
தமிழனின் இல்லம்
வெல்கம் !


உண்மை தான். பல தமிழர்களின் வீட்டு வாயிலில், 'வெல்கம்' என்று எழுதியுள்ள அவல நிலையை குறும்பாவில் குறும்பாகக் காட்டி உள்ளார். படிக்கும் போது இது போன்ற தவறுகளை நாம் செய்யக் கூடாது என்ற உணர்வை உணர்த்திடும் ஆற்றல் குறும்பாவிற்கு உண்டு.

இனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா. இவர் பிறரது குறும்பாக்களையும் சாவிக்கொத்தில், கை விசிறியில், அரிசியில, நாட்காட்டியில் பதித்து, விதைத்து குறும்பாவின் கொள்கை பரப்புச் செயலாளர் போல செயல்பட்டு வருபவர். அவர் எழுதிய குறும்பா. கன்னிக்கோவில் இராஜா எழுதியது.

எகிப்தின் இடுகாடு மம்மி
அழைத்தால் ஏற்கும் பெண்களை
சவம் எனக் கூறியடி கும்மி!


மம்மி என்ற சொல்லின் உண்மையான பொருள் விளங்காமலே இன்னும் பலர் மம்மி என்று அழைக்க வற்புறுத்தி வருவது வேதனை.

தமிழ்ப்பண்பாடு சிதைந்து வருகின்றது. உலகிற்கே வழிகாட்டியது நமது பண்பாடு. ஆனால் இன்று நாகரிகம் என்ற பெயரில் சிதைத்து வருகின்றனர். குறிப்பாக திரைப்படங்களில் பண்பாட்டுச் சிதைவு தொடர்ந்து நடந்து வருகின்றது. இளையோரின் நெஞ்சங்களில் நஞ்சு விதைத்து வருகின்றனர். இவற்றை சாடும் விதமாக எள்ளல் சுவையுடன் வடித்த குறும்பா.

கவிஞர் ச.பாலகிருஷ்ணன் எழுதியது.

பழைய புகைப்படம்
பாதுகாப்பாய் இருக்கிறது
பண்பாடு

சென்னையில் உள்ள ஆசிரியரான கவிஞர் நா. பேபி உமா அவர்கள் எழுதிய குறும்பா, கவிஞர் கன்னிக்கோவில் இராஜா தொகுத்த குறும்பா நூலான தேநீர்க் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ நூலில் பிரசுரமான குறும்பா.

கவிஞர் நா.பேபி உமா எழுதியது.

பாலாக தேனாக
இனிக்கும்
தமிழ்.


உலகப்பொதுமறையான திருக்குறள் தமிழுக்குப் பெருமை. காந்தியடிகளுக்கு திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தவர் டால்சுடாய். திருக்குறளை ஆழ்ந்து படித்த பின்பே காந்தியடிகளிடம் அகிம்சை உணர்வு ஓங்கியது என்பது உண்மை. திருவண்ணாமலையில் வாழும் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவராக இருந்த போதும் குறும்பாவும் எழுதுவார். பல நூல்கள் எழுதி உள்ளார். இவரது நூல்களின் விமர்சன்ங்கள் இணையத்தில் எழுதி உள்ளேன்.

எழு சீர்
சீராய் உலகளக்கும்
திருக்குறள்


சொல் விளையாட்டால் திருக்குறளின் பெருமை உணர்த்தி உள்ளார்.

புதுக்கோட்டை கவிஞர் ஈழபாரதி, இவர் பனைமரக்காடு என்ற குறும்பா நூல் எழுதி உள்ளார். இவரது மூன்றாவது நூலான நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் என்ற புதுக்கவிதை நூல் சமீபத்தில் வெளியானது. இவரது குறும்பா.

கை கட்டி படிக்கின்றோம்
அடிமைகளாய் இன்றும்
ஆங்கிலக் கல்வி


ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான். அறிவு அல்ல, தமிழ் வழியில் பயின்றவர் தான் அறிவியல் விஞ்ஞானி மாமனிதர் அப்துல் கலாம். இளைய கலாம் என்று போற்றப்படும் மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் கோவை அருகே உள்ள கோதவடி கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்றவர் தான். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற கேரளாவின் ஆளுநராக இருக்கும் சதாசிவம் அவர்கள் ஈரோட்டில் தமிழ் வழி பயின்றவர் தான். நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களும் தமிழ்வழி பயின்றவர் தான். தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை புரிய முடிவெடுத்து நூலகத்தில் சத்திய சோதனை நூல் படித்து தற்கொலை முடிவை கைவிட்டு உச்சம் தொட்டவர். இப்படி பலரும் தமிழ்வழி பயின்று சாதனைகள் பல நிகழ்த்தியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஆங்கிலவழிக் கல்வி தான் உயர்வானது என்ற எண்ணம் தவறானது. பெற்றோர்கள் தமிழின் சிறப்பை உணர் வேண்டும்.

இன்று சில ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தமிழில் உரையாடினால் தண்டத் தொகை வசூலிக்கும் அவல நிலையும் நடந்து வருகின்றது. இதனை கண்ணுற்ற மதுரைக் கவிஞர் கலைத்தாமரை வடித்த குறும்பா.

கவிஞர் கலைத்தாமரை எழுதியது

தொடரும் தீண்டாமை
கல்வி நிறுவன்ங்களில்
தமிழ்ப் பேச்சு!


முகநூலில் தொடர்ந்து குறும்பாக்களை எழுதி வரும் கவிஞர் குறும்பா நூல்கள் பல எழுதியவர், இலக்கிய மேடைகளிலும் முகம் காட்டி வரும் வளரும் கவிஞர் ச. கோபிநாத் சேலம் அவர் எழுதிய குறும்பா நன்று.

தேசங்களின் எல்லைக் கடந்து
முன்னேறும் மொழி
கணினியில் தமிழ்

ஆம், உலக அரங்கில் தமிழ்மொழிக்கு மட்டும் தான் பெருமளவில் கவிஞர்கள் இணையத்தில் தொடர்ந்து கவிதைகள், படைப்புகள் எழுதி வருகின்றனர். வேறு எந்த மொழிக்கு இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு.

கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இவர்கள் காலத்தில் திரைப்படப் பாடல்கள் தரமாக இருந்தன. மக்களை நெறிப்படுத்தும் விதமாக இருந்தன. ஆனால் இன்று மிகவும் தரம் தாழ்ந்து எழுதி வருகின்றனர். இவற்றைக் கேட்கும் கவிஞர்கள் எல்லோருக்குமே சினம் வருகின்றது. கவிஞர் கமலி வெங்கட் அவர்களின் கோபம் நியாயமானதே.

ஆபாசப் பாட்டு
உச்சரிப்பில் வலிக்கிறது
தமிழ் எழுத்து


இனிது இனிது என்று குறும்பா நூல் எழுதியவர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள் தமிழின் இனிமையை எடுத்து இயம்பும் விதமாக வடித்த குறும்பா நன்று.

எழுத எழுத
இனிக்கிறது
வார்த்தை!

உண்மை தான். தமிழ் என்ற சொல்லை தொடர்ந்து தமிழ், தமிழ் என்று உச்சரித்துப் பாருங்கள், அமிழ்து, அமிழ்து என்று கேட்கும். இது போன்ற சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

'குறும்பா என்பது வாழ்க்கை அனுபவம், காட்சி வழியில் பொருளை ஊகித்து உணர்வது, அரும்பு நிலையிலிருந்து மலர்ந்து மணம் வீசுவது' என்கிறார் பேராசிரியர் இராம குருநாதன். இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆசிரியர்.

'தமிழ் குறும்பாவின் தனிப்பெரும் பண்பு, எரியும் பிரச்சினைகளாய் இன்று சமுதாயத்தில் இருந்து வரும் அவலங்களைச் சித்தரிப்பது! சாடுவது ; காரணமானவர்கள் மீது சாட்டை அடியை விளாசுவது' என்கிறார் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள். அய்யாவை எனக்கு குரு எனலாம்.

மற்றவர்கள் குறும்பாக்களை மேற்கோள் காட்டி எழுதும் போது என்னுடைய குறும்பாக்களையும் மேற்கோள் காட்டுவது பொருத்தம் என்று கருதுகிறேன். நானும் ஒரு குறும்பா பாவலர் என்பதால் எனது குறும்பாக்கள் உங்கள் பார்வைக்கு. நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் வளர்ச்சி குறும்பாக்கள் எழுதியுள்ள போதும்இ இரண்டு மட்டும் உங்கள் பார்வைக்கு.

தமிழன் என்று சொல்லடா?
தலை நிமிர்ந்து நில்லடா?
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா?


முதல் இரண்டு வரிகள் நாமக்கல் கவிஞரின் புகழ்பெற்ற வரிகள், மூன்றாவது வரி மட்டுமே என் வரி. புகழ்பெற்ற வரிகளோடு புதிய வரி சேர்த்து உரைக்கும் போது ஒரு மின்னல் மின்னும். மதுரை மாவட்ட மைய நூலகத்தில் வருகை புரிவோர் கையொப்பம் ஏடு உள்ளது. அதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே கையொப்பம் இடுகின்றனர்.முன்எழுத்தை ஆங்கிலத்திலேயே எழுதுகின்றனர், இந்நிலை மாற வேண்டும்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழ் உச்சரிப்பில் தமிங்கிலம் இருப்பதில்லை. அது போலவே தமிழகத்தின் தமிழர்களும் பேசிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வடித்த என் குறும்பா ஒன்று.

சாகவில்லை வாழ்கிறது
செம்மொழி தமிழ்மொழி
ஈழத்தமிழர் நாவில்!


இக்கட்டுரை வடிப்பதற்கு தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் எழுதிய கவிதைச் சுடர் நூல், அருவி கவிதை இதழ்களும் .இனிய நண்பர் கன்னிக் கோவில் இராஜா தொகுத்த நூலும் துணை நின்றன .உதவியாக இருந்தத்தை நன்றியுடன் குறிப்பிடுகின்றேன்.

சாத்தூர் சேகரன் என்ற தமிழறிஞர் பன்மொழி ஆய்வாளர், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கும் தாய்மொழி தமிழ் தான். மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் பலரும் தமிழ் மொழியே உலகின் முதல் மொழி என்று ஆய்வுரை எழுதி வருகின்றனர். தமிழறிஞர் இரா.இளங்குமரனார் அவர்க்ள் தமிழ்மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. பொருள் இன்றி ஒரு சொல்லும் இல்லை. காரணப் பெயராகவே ஒவ்வொரு சொல்லும் உள்ளன என்பதை பலவேறு எடுத்துக்காட்டுகள் காட்டி எடுத்து இயம்பி வருகின்றார்.

தமிழின் பெருமையை, அருமையை, புகழை, தனித்தன்மையை அயலவர் அறிந்த அளவிற்கு தமிழர்கள் இன்னும் அறியவில்லை என்பது கசப்பான உண்மை. குறும்பாவின் மூலம் கவிஞர்கள் தமிழின் மேன்மையை மக்களிடையே நன்கு உணர்த்தி வருகின்றனர். தமிழ் வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கு பாராட்டுக்குரியது.

தமிழின் சிறப்பை குறும்பாவை உணர்த்துகின்றனர். தமிழ் மொழியில் பிறமொழி கலப்பதோடு கண்டனத்தை குறும்பாவில் சுட்டுகின்றனர். இலக்கிய வடிவங்களில் பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்ட இனிய வடிவம் குறும்பா.

குறும்பா நூல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பரவலாக நன்றாக விற்பனையும் ஆகின்றது. குறும்பா எழுதுவது எளிது. எல்லோருமே முயற்சி செய்யலாம். மனதில் பட்டதை எழுதிவிட்டு தேவையற்ற சொற்களை நீக்கிட வேண்டும். ஒரு சிற்பி கல்லில் தேவையற்ற பகுதிகளை நீக்கிட அழகிய சிலை உருவாகும். அது போலவே தேவையற்ற சொற்களை நீக்கிட அழகிய குறும்பா உருவாகும். குறும்பாவின் வீச்சு அதிகம். படித்து முடித்தவுடன் வாசகர் நெஞ்சத்தில் நினைவின் அதிர்வலைகளை உண்டாக்கும் ஆற்றல் குறும்பாவிற்கு உண்டு.

ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்க அம்மொழியிலிருந்து நூல்களும், படைப்புகளும் வந்து கொண்டே இருக்க வேண்டும். இன்று இணையத்தில ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக பயன்பாட்டில் உள்ள மொழி நமது தாய்மொழி தமிழ்மொழி. பரந்து விரிந்த இந்த உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இணையத்தில் குறும்பா எழுதி வருகின்றனர். தங்களுக்கான தனி இணையம் உருவாக்கி எழுதுகின்றனர். பிற இணைய இதழ்களிலும் எழுதி வருகின்றனர். வலைப்பூக்களிலும் எழுதி வருகின்றனர். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு குறும்பாவும் ஒரு காரணம் என்றால் மிகையன்று. எனது குறும்பாக்களை
 www.kavimalar.com  என்ற இணையத்தில் படித்து மகிழுங்கள்.