கனிமொழி கவிதைகளில் வாழ்வியல் சிக்கல்கள்

முனைவர் பூ.மு.அன்புசிவா
 


ரு நாட்டு மொழி வரலாறு பரந்துபட்ட ஒன்று. அதில் பல்வேறு இலக்கியக் கலைக்களங்கள். சங்ககால முதலான தமிழிலக்கிய வரலாற்றில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பல புது இலக்கியங்கள் தோன்றியுள்ளதைக் காணலாம். ‘புதுக்கவிதை ஒரு வடிவம்’ எனலாம். ஏனென்றால் கவிஞர்கள் சமுதாயப் போக்கில் மக்களோடு பழகும்பொழுது அவர்களின் எண்ணங்கள் காலச் சூழலுக்கு ஏற்பப் பின்னோக்குப் பார்வையாக வீசும் என்பதில் எந்தவிதமான மாற்றமுமில்லை. கால ஓட்டத்தில் இலக்கியத்திற்காக கவிதைத்துறையில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் காணலாம்.

நாகரிகம் வளர வளர மக்கள் சிறு சிறு கூட்டமாக இருந்து பெரிய சமுதாயமாக வாழும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். கால ஓட்டத்தில் சிறு நாடுகள் பலவும் ஒரு குடும்பத்தின் உறுப்புகள் போல் உலகம் பெருஞ்சமுதாய அமைப்பாக உருக்கொள்ளும்.

மக்கள் தங்கள் ஆற்றலின் வலிமையும், சிறப்பையும் நன்குணர்ந்து போராட்டக் களத்தில் இறங்குவர். எத்தகைய போராட்டமாயினும். புரட்சித்தன்மையில் வெடிப்பனவே சீர்திருத்தங்கள் தோன்றியதை இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த வகையில் கவிஞர்கள் இப்போராட்ட உணர்வடைய மக்களின் எழுச்சியைப் பாடும்பொழுது, தற்காலச் சமூக அறிவியல் போக்குகளிலிருந்து திரண்டெழும் அனுபவ மூலங்களைக் கவிதை ஆக்குவர் மேலும் மக்களையும், மக்கள் சார்ந்த நிகழ்வுகளையும் கனிமொழி கவிதைகளில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

கனிமொழி

கவிஞர் கனிமொழி வாழ்வின் மகத்தான உணர்வினை தன் முழுமைக்கும் உணர்ந்துகொண்ட தருணத்தில் முகிழ்த்தது. மற்றவர்கள் பேசாததையும், காணாததையும் காட்ட விழையும் கவிஞர்களுள் கனிமொழி குறிப்பிடத்தக்கவர். தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரையில் பெண்ணியம் பேசுவதில் முதன்மைப்படுகிறார்.

தமிழ்க் கவிதையில் பெண் விடுதலை பேசிய பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் பிறகு சுயமான பெண் விழிப்பை உணர்த்தியக் கவிஞராக விளங்குகிறார். பழைய சமூக அமைப்பில் தீண்டாதவர் என ஒதுக்கப்பட்டது போலவே, பெண்கள் பின்புத்தி உள்ளவர்கள் என ஒதுக்கிய காலம் மாறி இன்று எல்லாமே பெண்கள் என ஆனபோது போராட்டங்கள் ஏராளம். இந்த வகையில் கனிமொழி கவிதைகளில் வாழ்வியலையும், அதன் சிக்கலையும் காணலாம்.

“தினமும்
உறங்கச் செல்கிறேன்
இந்தக் கனவிலிருந்து
விழித்துக் கொள்ளும் பயத்தோடு”


என்ற கவிதையின்மூலம் எதார்த்தங்களைத் தாண்டி வாழ்வை இருண்மை கொள்ளச் செய்கின்றன.
மதம் மக்களின் மனங்களைப் பண்படுத்தாமல் உணர்வுக்கு வழிவகுத்துள்ளது. பரம்பொருள் ஒன்றே, மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனும் உயிர்த்தத்துவம் பண்பாட்டு உணர்வை வளர்க்கும்.

“பீடத்தின்மீது
அமர்ந்திருந்தவனுக்கு முன்னால்
அவர்கள்
அழைத்து வரப்பட்டார்கள்
. . . . . . . . . . . . . . . . . . .
சமூகம்
சுழன்றது”


எனத் தொடங்கி முடியும் கவிதையில் வாழ்வின் சிக்கல்களையும் எதார்த்தமாக சொல்லப்படுகின்றன.

மக்கள் மனம் பண்பட்டால்தான் தெய்வங்கள் பிழைக்கும். மக்களின் பகுத்தறிவே அவர்கள் வாழ்வை வளமாக்கும். காரண காரிய உலகில் தெய்வச் சிந்தனையும், பொது நலப் பாங்கும் வளரவேண்டும்.

“தொழுவதற்கு
மசூதியும் வேண்டா
சர்ச்சும் வேண்டா
கோவிலும் வேண்டா
மனிதனைப் போற்றுங்கள்
நீங்கள்
மனிதராக வேண்டும்”


இந்தக் கவிதை மக்களை மதிக்கும் உயர்ந்த பண்பாட்டு உணர்வு கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

கனிமொழியின் கவிதைகள் எதார்த்தத் தளத்தில் இருக்கிற கவிதைகள் மிகைப்பட மொழிபடக் கூடும் அளவிற்கு இருப்பவை. இயல்பாகவும் தனித்தன்மையோடும் இருக்கக் கூடியவை என்பதை அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

உணர்வுகளைச் சொல்கையில், மிகைபடக் கூறுவதும் சொற்களில் வண்ணம் தோய்ப்பதும் கவிதைக்கு ஆகாதவை.

கனிமொழியின் கவிதைகள் ஒருகாலும் எதார்த்தத்தை மீறிப் போய்விடலாகாது என்பதில் கவனம் கொண்டிருந்ததைக் காணமுடிகிறது. இவரின் நுண்ணிய உணர்வுகளை சித்தரிக்கும் கவிதைகளை கூர்மை கொண்டதாக அமைந்துள்ளன.

“குடியேறப் போகும் முன்
சீர் செய்யப்படும் வீடு போல
வேலைகள்
நடந்து கொண்டிருந்தன”


என்று தொடங்கும் அற்புதமான கவிதைகளைக் கனிமொழியின் தொகுப்புகளில் காண முடிகிறது.

சமூக அமைப்பு காலத்திற்குக் காலம் மாற கவிஞனைப் பற்றிய கருத்தும் மாறும். தொன்மை மக்களிலிருந்து இன்றைய மக்கள் வரை கவிஞனை வெவ்வேறு பாத்திரங்களாகக் கண்டனர் மக்கள். இக்கருத்துக்கு ஒப்பக் காலத்தின் நிழலாய் விளங்கிக் கவிஞர்களும் மற்றுப் பிற படைப்பாளிகளும் சிறப்பதைக் காணலாம்.

“நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வப்போது நிறைய அன்பு செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்தக் கதைகளும் சொல்வதே இல்லை”


என்பதிலான கவிதைகளைக் காணும்போது வாழ்வில் சிக்கல்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதை எதார்த்தமாக காண வேண்டும் என்பதையே கவிஞர் கூறுகிறார்.

வாழ்க்கையில் எழும் எத்தகைய போராட்டமும் ஒரு நிலையில் தனி ஒருவனின் ஓயாத உழைப்பாலும். சீரிய முயற்சியாலும் துன்பங்கள் நீங்கி இன்பம் காண வழிபிறக்கும்.

பாரதியைப் பொறுத்தவரையில் விடுதலை என்பது பெண் விடுதலையைத்தான் முழுமூச்சாகக் கொண்டு பெண்களுக்கென்று போராடியதைக் காணமுடிகிறது. விடுதலை உணர்வை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தார்.

சில புதுக்கவிதைகள் அடிநாதமாக பிராய்டிசத்தையும், அதன் அம்சங்களையும் கொண்ட ஸர்ரியலிசம், எக்°சி°டென்சியலிசம் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

இலக்கியம் வாழ்க்கையினைக் காட்டும் காலக்கண்ணாடி. மக்கள் வாழ்க்கையின் உயரிய குறிக்கோள்களும், சீரிய நோக்கங்களும், இலட்சியப் பார்வைகளும், உலகில் வாழ வேண்டிய நெறிமுறைகளும் ஒருங்கே காட்டவல்ல கோட்பாடுகள் பதிவேடு கவிஞர்கள் பாடும்பொழுது மக்களின் சிந்தனைகள் உணர்ச்சித் துடிப்புகளாக கனிமொழியின் கவிதைகள் இருப்பதைக் காணமுடிகின்றன.

“சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா”


என்ற கவிதையின் மூலம் அப்பா என்றால் எல்லோருக்கும் பயம் உண்டு. ஆனால் கனிமொழி கவிதைகள் எதார்த்தமாக சொல்லிச் செல்வதைக் காணமுடிகிறது.

“உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது”


என்ற வரிகளின் மூலமாக அனைவரின் வீட்டிலும் நிகழும் ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே பதியம் போட்டிருக்கிறார் கனிமொழி.

சமயங்கள் அனைத்தும் மக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் பல்வேறு மார்க்கங்களின் வழி வேறு வேறானாலும் குறிக்கோள் ஒன்றே. மக்கள் அனைவரும் சென்று சேருமிடம் ஒன்றே.

“எப்போதாவது
பிடித்திருக்கிறது
உனக்கும் எனக்குமான
உலகத்தில்
மற்றவர்களை”

என்பதிலான கவிதைகளை காணும்போது மனவலி, எதார்த்தம் பதிகிறது.

தொகுப்புரை:

கனிமொழி கவிதைகளில் எளிய சொற்கள் புதிய சுவையோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது விந்தை. இறைவன் அன்பே வடிவமான பரம்பொருள். மக்கள் மக்களோடு வாழவே வழி மதவெறி மாய்க்கும் சக்தியாக வெளிப்பாடு. இவைகளே இவரின் கோட்பாடாகும்.

வாழ்க்கையின் ஆரம்பத்தையும், முடிவையும் கட்டுப்படுத்த முடியாத மக்கள் இடையில் சில ஆண்டுகள் மட்டும்தான் காரணமாகக் கொள்கிறார்கள். இக்கருத்தின் மூலம் மக்கள் வாழ்க்கையில் காலம் குறுகியது என்பது தெளிவாகிறது.

மக்கள் தங்கள் மனங்களின் சக்தியைச் சுய இலாபம் தரும் காரியங்களைச் செய்யப் பயன்படுத்துவதால் போட்டியும், பொறாமையும் மிகுந்த அவழியின்மையையும், அழிவையும் ஏற்படுத்துவர். வாழ்க்கையில் மக்களின் பங்கு மற்றவர்களுக்குப் பயனுள்ள வாழ்க்கையாய் அமைந்தால் இலட்சிய வாழ்க்கையாய் அமையும். இல்லையெனில் பிறப்பு, இறப்பு எனும் இவை தவிரக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் மக்கள் வாழ்க்கைச் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதே சுகம்.

கனிமொழியின் கவிதைகள் வாழ்வில் சிக்கலை சிக்கலில்லாமல் சொல்வதே சிறப்பு.
முனைவர் பூ.மு.அன்புசிவா

முனைவர் பூ. மு. அன்புசிவா
149,ஹரிஸ்ரீ காடர்ன்ஸ
சுண்டப் பாளையம்
கோயம்புத்தூர் - 641 007