பூவிலே சிறந்த பூ சிரிப்பூ!

முனைவர் இரா.மோகன்


லக்கியச் சுவைகளுள் மோனையைப் போல் முதலில் நிற்பது நகைச்சுவை. 'அது மனித குலத்திற்கு வாய்த்த வரம், அந்தரங்கத்தைப் புலப்படுத்தும் ஒளிச்சரம்' என மொழிவார் தெலுங்குக் கவிஞர் சி.நாராயண ரெட்டி.

'பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர் புன்னகை' என்று கவிக்கோ அப்துல் ரகுமானும், 'பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்று பேராகும்' எனக் காவியக் கவிஞர் வாலியும் புன்னகையைச் சொல்லோவியமாக வடிப்பர்.

'ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது' எனச் சிரிப்புக்குப் புகழாரம் சூட்டுவார் கவிப்பேரரசு வைரமுத்து.

'என்னைப் பொறுத்த வரை பிரார்த்தனை எவ்வளவு புனிதமானதோ அதே போல் சிரிப்பும் புனிதனமானதாகும்' எனச் சிரிப்பின் சிறப்பினைப் பறைசாற்றுவார் ஓஷோ. 'பொதுவாகவே, அறிவைத் துலக்கப்படுத்திக் கொள்ள, ஆன்மாவை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள, உடம்பில் வியாதிகள் வராமல் தடுத்துக் கொள்ள நகைத்தல் நல்லது' என மூதறிஞர் வெ.சாமிநாத சர்மாவும் நகைச்சுவை உணர்வின் நலத்தினைப் போற்றுவார்.

நகைச்சுவையின் தனிச்சிறப்பு

ஒரு கருத்தை நகைச்சுவையோடு சொல்லும் போது அந்தக் கருத்து கேட்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடும். நகைச்சுவைக்கு உள்ள தனிச்சிறப்பு அது. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் இக் கருத்தினை விளக்க எழுத்தாளர் சாவி காட்டிய ஒரு சுவையான உதாரணம்:

' சாப்பிட வந்தவர் ஓட்டல் சர்வரிடம் கேட்கிறார்.

'இதோ பார்! நீ கொண்டு வந்து வைத்த கோழி பிரியாணியில் ஒரு ஈ செத்துக் கிடக்குது!'

'இவ்வளவு பெரிய கோழி செத்துக் கிடக்குதே, அது உங்க கண்ணில் படலே. சின்ன ஈ செத்துக் கிடப்பது மட்டும் பெரிசாத் தெரியுதாக்கும்!' என்றான் சர்வர்.

எப்போதோ படித்த இந்த நகைச்சுவையைத் துணுக்கை நினைத்துச் சிரிக்கும் போதெல்லாம் கூடவே அதில் பொதிந்துள்ள கருத்தும் என்னைச் சிந்திக்க வைக்கும்.'

சுடச் சுடப் பதில் அளிக்கும் திறம்

நகைச்சுவையின் பரிமாணங்களுள் தலையாயது சுடச் சுடப் பதில் அளிக்கும் திறம் (சுநவழசவ). இத் திறம் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் எந்தச் சூழலையும் எதிர்-கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்; எத்தகைய இக்கட்டான கேள்விக்கும் சாதுரியமாகப் பதில் கூறும் வல்லமை படைத்தவர்களாக விளங்குவார்கள். ஓர் எடுத்துக்காட்டு:

தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களில் புகழ் பெற்றவர் எஸ்.ஜி.கிட்டப்பா. இவர் இசையரசி கே.பி.சுந்தராம்பாளின் கணவர். ஒரு வழக்கில் சாட்சியாக உயர்நீதிமன்றக் கூண்டில் கிட்டப்பா ஏறினார். அவர் இரண்டாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்தவர். அவரை விசாரணை செய்த வழக்கறிஞர் நார்ட்டன் துரை மிகவும் புகழ் பெற்ற வழக்கறிஞர். கூண்டில் இருந்த கிட்டப்பாவை நார்ட்டன் துரை கேட்டார்.

' உங்கள் பெயர் என்ன?'
' கிட்டப்பா' என்று நடிகர் பதில் சொன்னார்.
' உங்கள் தொழில்?'
' நான் ஒரு நடிகன்.'
' நடிகன் என்றால் கூத்தாடி தானே?'
' ஆமாம்.'
' அது ஒரு மட்டமான தொழி;ல் தானே?'
' ஆமாம். ஆனால் என் அப்பாவின் தொழிலை விட இது மேலானது.'
' உங்கள் அப்பாவின் தொழில் என்ன?'
' அவர் உங்களைப் போல ஒரு வக்கீல்.'

வழக்கு மன்றமே கலகலத்துச் சிரித்தது. மெத்தப் படித்த நார்ட்டன் துரை கிட்டப்பாவை அவமானப்படுத்த முயன்று தோற்றுப் போனார்.

இயல்பான நகைச்சுவை

நல்ல நகைச்சுவை கவிதையைப் போல இயல்பாகப் பீறிட்டு எழுவது. அது 'இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்ன என்றால்...' என்றாற் போல் சொல்லி விட்டு வருவது அன்று; 'போனால் போகிறது, நகைச்சு வை' என்ற அடிப்படையில் தோன்றுவதும் அன்று.

ஒரு தடவை திருக்குறளார் வீ.முனிசாமியும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். 'திடீர்;' என்று ஒரு ரயில்வே 'கேட்'டருகே டிரைவர் காரை நிறுத்தினார். கலைவாணர், 'என்னப்பா ஆச்சு?' என்று கேட்டார். ''கேட்டு' சாத்தியிருக்கிறான் ஐயா!' என்று டிரைவர் சொன்னார். உடனே கலைவாணர் திருக்குறளாரைப் பார்த்து, 'பொய் சொல்லுகிறான், பார்த்தீர்களா?' என்றார். திருக்குறளார் 'என்ன?' என்று கேட்க, கலைவாணர் சொன்னார்:

' 'கேட்டு' சாத்தினான் என்று சொல்லுகிறானே, நம்மைக் கேட்டா சாத்தினான்?'

இயல்பான நகைச்சுவை என்பது இது தான்! சொல் விளையாட்டின்
(Pun) மூலம் கலைவாணர் இங்கே நயமான நகைச்சுவையைத் தோற்றுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மனத்தின் ஒட்டடைகளைத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் நகைச்சுவை


காவியக் கவிஞர் வாலியோடு உரையாடிக் கொண்டிருந்தால் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அவருடைய சிலேடைகள் சிரிப்பைப் பந்தி வைத்துக் கொண்டே இருக்கும்.
ஒரு முறை 'திரைப்பாடல்கள் நேற்றும் இன்றும்' என்ற தலைப்பில் காவியக் கவிஞர் வாலியும் கவிப்பேரரசு வைரமுத்துவும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

'பாடலில் வளமான வரிகளை எழுதுவதற்கு முன்பு மாதிரி சூழல்கள்
(Situations) இன்று அமையவில்லை' என்று வைரமுத்து ஆதங்கப்பட்டார்.

வாலி பாடல்களின் எண்ணிக்கை குறைந்து போனதைப் பற்றி குறைபட்டுக் கொண்டார். பிறகு, தமக்கே உரிய பாணியில், 'முதலில் பதினாறு பாட்டு – பிறகு பத்துப் பாட்டு – அப்புறம் ஆறு பாட்டு – பிறகு நான்கு பாட்டு – அப்புறம் இரண்டு பாட்டு – கடைசியிலே போதும் நிப்பாட்டு – நிலைமை எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா?' என்றார். அவர் சொன்ன பாவமும், அவர் கையாண்ட உத்தியும் எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.

'நல்ல நகைச்சுவை மனத்தின் ஒட்டடைகளைத் துடைத்துத் தூய்மைப்படுத்தி விடுகிறது' என்பதற்கு இந் நிகழ்வு நல்ல எடுத்துக்காட்டு.


மூவகை நகைச்சுவைகள்


நகைச்சுவையில் முறுவலித்தல், அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என மூன்று வகைகள் உண்டு. முதலாவது புன்முறுவல்; அதாவது, குமிண் சிரிப்பு. இடைப்பட்டது அளவான சிரிப்பு; மூன்றாவது வெடிச் சிரிப்பு.

1925-ஆம் ஆண்டில் பெர்னார்ட் ஷாவிற்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதும் வழக்கமான நகைச்சுவை உணர்வோடு ஷா கூறினார்:
'இந்த ஆண்டில் நான் நூல் ஒன்றும் எழுதி வெளியிடவில்லை. உலகம் அதைக் கண்டு விடுதலையுணர்ச்சியோடு மகிழ்ந்து, எனக்கு நன்றி பாராட்டிச் செய்த செயல் இது.'
- படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை இது.

• ஒரு முறை நாவரசர் டாக்டர் கா.காளிமுத்து தம் சொற்பொழிவின் இடையே சொன்ன நகைச்சுவை:

'ஒருவன், 'நான் என்ன பிராணி என்றே எனக்கு தெரியவில்லை' என்று தன் நண்பனிடம் கூறினானாம். 'ஏன்?' என்று நண்பன் கேட்டானாம். அதற்கு அவன் இப்படிப் பதில் சொன்னானாம்.

'சிங்கத்தைப் பார்;த்து யானை பயப்படுகிறது; யானையைப் பார்த்து புலி பயப்படுகிறது; புலியைப் பார்த்து கரடி பயப்படுகிறது; கரடியைப் பார்த்து ஓநாய் பயப்படுகிறது; ஓநாயைப் பார்த்து நாய் பயப்படுகிறது; நாயைப் பார்த்து பூனை பயப்படுகிறது; பூனையைப் பார்த்து எலி பயப்படுகிறது; எலியைப் பார்த்து கரப்பான் என மனைவியைப் பார்த்து நான் பயப்படுகிறேன். நான் என்ன பிராணி என்றே தெரியவில்லை!''

- கேட்பவர் இடையே அளவான சிரிப்பைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை இது.

• அறிஞர் அண்ணா பேசிய ஒரு கூட்டத்தில் சில முரட்டு இளைஞர்கள் அவருக்கு முன் வந்து, 'ஆணையிடுங்கள் அண்ணா, எங்கள் தலையையே உங்களுக்குத் தருகிறோம்' என்றார்கள்.

'தம்பிகளே! உங்கள் தலைகள் வேண்டாம்; இதயங்கள் தாருங்கள் போதும்!' என்றார் அண்ணா.

காரில் திரும்பி வரும் போது நண்பர்கள் அண்ணாவைக் கேட்டார்கள்: 'இதயங்கள் தாருங்கள், தலைகள் வேண்டாம் என்று ஏன் அண்ணா சொன்னீர்கள்?'
'ஆமாம், அவர்கள் தலைகளில் என்ன இருக்கிறது? அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?' என்று அண்ணா சொன்னதும் உடன் வந்த நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வெடிச் சிரிப்பை எழுப்பும் அற்புதமான நகைச்சுவை இது!

தலைமைப் பண்புகளுள் தலையாயது


ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தலைமைப் பண்புகளுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது நகைச்சுவை உணர்வு. தலைவர்களின் ஆளுமைத் திறத்திற்கு வண்ணமும் வனப்பும் வலிமையும் வளமும் சேர்ப்பது இவ்வுணர்வு.

• ஈ.வே.ரா. பெரியார் திருமணம் செய்து கொண்ட சமயம். மணியம்மையாரும் அவரும் ஒரு கூட்டத்தி;லே பேச வந்திருந்தார்கள். பெரியார் பேசிக் கொண்டிருந்தார். ஒரு துண்டுச் சீட்டு மேடைக்கு வந்தது. 'ஐயா, பெரியாரே! நீர் திராவிடத் தந்தை! மணியம்மையோ திராவிடத் தாய்! திராவிடக் குழந்தை எப்பொழுது பிறக்கும்?' என்பது தான் அதில் கேட்கப்பட்டிருந்த கேள்வி. கேள்வியைக் கூட்டத்திலே படித்து விட்டுச் சிரித்துக் கொண்டே, 'அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன' என்று பதில் அளித்தார் பெரியார்.

• சர்தார் வல்லபாய் படேலை ஒரு வெள்ளைக்காரர் நையாண்டித்தனமாக, 'உம்முடைய கல்சர் (பண்பு) என்ன?' என்று கேட்டார். உடனடியாக அதற்குச் சர்தார் படேல், 'எம்முடைய கல்சர் - அக்ரிகல்சர் (விவசாயம்)' என்றார். அந்த வெள்ளைக்காரர் அதற்கு மேல் படேலிடம் எந்த விதமான பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை.

'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்பது மட்டும் அன்றுளூ அப்படிச் சிரித்தால் நம் வாழ்வில் 'நலமெல்லாம் நம்மை நாடி வந்து சேரும்' என்பதே உண்மை.

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?'
எனப் பாடிய கவிஞர் கண்ணதாசன் இன்று இருந்திருந்தால்,
'நகையெல்லாம் நலமான புன்னகை ஆகுமா?'

என்று பாடி புன்னகையின் மேன்மையை உயர்த்திப் பிடித்திருப்பார்ளூ உலகிற்கு உணர்த்தி இருப்பார்.


.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021