தமிழில் அகராதிகளை ஆக்கியளித்த அறிஞர்கள்

கவிஞர் வி.கந்தவனம்

மிழர் மத்தியில் அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் போன்றவரின் சிறப்புக்கள் போற்றப்படும் அளவுக்குத் தமிழ் அறிஞரின் பெருமைகள் பேசப்படுவதில்லை. கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு அவர்கள் வாழுங் காலத்தில்மட்டுந்தானா?

தமிழ்வளர்ச்சிக்கு அயராது உழைத்த அறிஞர்கள் பலர். அவர்களில் அகராதிகள் வெளிவர அரும்பாடுபட்ட அறிஞர் தொண்டுகளைத் தமிழ் மக்களுக்கு நினைவுபடுத்துதல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 


நூற்பா அகராதிகள்

நிகண்டுகள்பற்றியும் அவற்றை ஆக்கி அளித்த புலவர் பற்றியும் பல தகவல்கள் கடந்த கட்டுரையில் தரப்பட்டன. தமிழில் சொல்லுக்குப் பொருள் சொல்லும் முறையை எழுதிக் காட்டியவர் தொல்காப்பியரே என்பதையும் அதிலே கண்டோம். அவர் தொடக்கி வைத்த பணியை விரிவான முறையில் நிகண்டுகள் நெடுங்காலமாகச் செய்து வந்தன. அவை வழியாகவே அகராதி என்ற சொல்லும் பிறந்தது. நிகண்டு ஆசிரியர்களில் ஒருவராகிய சிதம்பரம் இரேவணசித்தர் என்பவரே தமிழில் அகராதி என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவராவர். அகராதி நிகண்டு என்ற பெயரில் கி.பி.
1594ல் அவர் செய்த நூல் சொற்களை அகர வரிசையிற் கொண்டிருந்தது.

உரைநடை அகராதியின் முன்னோடி


நிகண்டுகள் நூற்பாக்களால்(சூத்திரங்களால்) ஆனவை. நூற்பாக்களிற் சொல்லப்பெற்ற பொருள்களை உரைநடையில் அகரவரிசையில் ஒழுங்குபடுத்த முற்பட்ட முதல் அறிஞர் வீரமாமுனிவர் ஆவர்.

வீரமாமுனிவரின் இயற்பெயர் பெஸ்கி என்பது. இத்தாலியிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்ப வந்த பெஸ்கி பாதிரியார் தமிழ்மொழியைக் கற்றுப் பெரும் புலவராகத் திகழ்ந்தார். உரைநடையிலும் செய்யுள் வடிவிலும் பல நூல்களை இயற்றினார். அகராதிகளையும் தொகுத்தார். அவற்றுள் ஒன்று சதுரகராதி என்பது. அது கி;.பி.; 1824ல் வெளியிடப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சொற்களுக்குப் பொருள் சொல்லும் நூல்கள் யாவும் அகராதி என்று அழைக்பபடலாயின.

சதுரகராதி திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டது. சதுரகராதி என்றால் நான்கு வகைப் பிரிவுகளைக் கொண்ட அகராதி என்று பொருள். பெயருக்கேற்ப அது முதலாவதாகப் பெயர் அகராதியையும் இரண்டாவதாகப் பொருள் அகராதியையும் மூன்றாவதாகத் தொகை அகராதியையும் நான்காவதாகத் தொடை அகராதியையும் கொண்டுள்ளது.


அகராதி என்பதன் பொருள்

அகராதி ஆக்கத்தில் ஈழத்தமிழரும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
1842ல் யாழ்ப்பாணத்து சந்திரசேகர பண்டிதர் பெயரகராதி என்ற பெயரில் அகராதி ஒன்றைத் தொகுத்து வெளியிட்டார். சதுரகராதியின் முதற் பகுதியாகிய பெயர் அகராதியை விரிவாக்கிச் செய்தமையால் அதற்கு அவர் பெயரகராதி என்ற பெயரைச் சூட்டினார். அகராதி ஆசிரியர் யாழ்ப்பாணத்தவராதலால் தமிழ் நாட்டவர் அவரது அகராதியை யாழ்ப்பாணத்து அகராதி என்று அழைக்கலாயினர். மானிப்பாய் அமெரிக்க மிசன் அச்சுக்கூடத்திலே அது அச்சிடப்பட்டமையால் அதனை மானிப்பாய் அகராதி என்றும் அழைத்தனர். சதுரகராதி முழுவதிலும் இடம்பெற்ற சொற்களிலும் நான்கு மடங்கு அதிகமான சொற்களைக் கொண்டதால் யாழ்ப்பாணத்து அகராதி பெரிய அகராதி என்ற மதிப்பையும் பெற்றது. யாழ்ப்பாண அகராதியிலேயே முதன்முதலாக அகராதி என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அகராதி என்பதற்கு அகரமுத லெழுத்துக்களாற் றொடங்கும் சொற்கோவை என்று அதிலே தரப்பட்டுள்ள விளக்கத்தையே பிற்கால அகராதி ஆசிரியர் சிலரும் எடுத்தாண்டுள்ளனர்.

1850ல் அண்ணாசாமிப் பிள்ளை என்பவர் ஒருசொற் பலபொருள் விளக்கம் என்னும் அகராதியை வெளியிட்டார். இலக்கிய மாணவருக்கு நன்கு பயன்படத்தக்க கையடக்கமான அகராதி அது.

யாழ்ப்பாண அகராதியைப் பின்பற்றிப் பல அகராதிகள் வெளிவந்தன. அவை பெரிதும் யாழ்ப்பாண அகராதியின் விரிவாகவே தொகுக்கப்பட்டதெனலாம். உதாரணமாகக் களத்தூர் சாமி வேதகரி முதலியார் அவர்களின் அகராதி முயற்சியைச் சொல்லலாம். அவர் யாழ்ப்பாண அகராதிக்கு ஓர் அனுபந்த அகராதியைச் சேர்த்தார். அதில் ஏறத்தாழ
6.500 சொற்கள் தொகுக்கப்பட்டன. அதனை விரிவுபடுத்திக் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு அவர்கள் 1893ல் ஓர் அகராதியை வெளியிட்டார். அதற்குப் பேரகராதி என்று பெயர்.


மாணவர் அகராதிகள்

1883ல் கோ. விஜயரங்க முதலியாரால்; அகராதிச் சுருக்கம் (Tamil Pocket Dictionary)  என்ற பெயரில் மாணவருக்கேற்ற கையடக்க அகராதி ஒன்று வெளியிடப்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலத்துக்குக் காலம் மாணவர் அகராதிகள் வெளிவரத் தொடங்கின. அவற்றுள் ச.பவானந்தம்பிள்ளை தொகுத்த தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி, மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை தொகுத்த இளைஞர் தமிழ்க் கையகராதி, வித்துவான் ஐயன்பெருமாள் கோனார் தொகுத்த கோனார் தமிழ்க் கையகராதி, லிப்கோ தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி ஆகியன பெருவரவேற்பைப் பெற்றன.

பேரகராதிகள்

1899ல் யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி வித்துவான் நா.கதிரைவெற்பிள்ளை தமிழ்ப் பேரகராதி என்ற பெயரிலே ஒரு சொற்கோவையைத் தொகுத்தார். அது இராமசாமி நாயுடு அவர்களின் பேரகராதியின் விரிவாக அமைந்த ஒரு பெருந்தொகுப்பாகும். அதன் புதுக்கிய பதிப்பு ஒன்றும் 1901ல் வெளியிடப்பெற்றது.

1909ல் பி.இராமநாதன் என்பவர் சில புலவரின் துணையுடன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி என்னும் பெயரில் இரு பகுதிகள் கொண்ட அகராதியை வெளியிட்டார். அது வித்துவான் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி மற்றும் அதற்குமுன் வெளிவந்த அகராதிகளிற் காணப்பெறாத 10.000 சொற்களை அதிகமாகக் கொண்டிருந்தது. பொருள் விளக்கத்துக்கு இடையியிடையே சிறு படங்களைச் சேர்த்திருப்பது இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதியின் தனிச் சிறப்பாகும்.

பி.வே. நமசிவாய முதலியார் காஞ்சி நாலிங்க முதலியாரைக் கொண்டு வித்துவான்
நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதியைத் திருத்தியும் மேலும் பல சொற்களைச் சேர்த்தும் விளக்கியும் செம்மைப்படுத்தி
1911ல் வெளியிட்டார். அதன் பெயரையும் தமிழ்மொழி யகராதி என மாற்றினார். தமிழ்மொழி யகராதிக்குப் பெரு வரவேற்பு இருந்தது. அதனால் அது பல பதிப்புகளையும் கண்டது.

இதுவரை வெளிவந்த அகராதிகளுள் மிகவும் பெரியது தமிழ்ச்சங்க அகராதி. அது மூன்று பெரும் பகுதிகளையுடையது. முதலாவது பகுதி
1910ஆம் ஆண்டிலும் இரண்டாவது பகுதி 1912ஆம் ஆண்டிலும் மூன்றாவது பகுதி 1923ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. அதனைப் பல ஆண்டுகளாக முயன்று உருவாக்கியவர் யாழ்ப்பாணம் நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை அவர்கள். எனினும் அகராதிகள் நூலுருவம் பெற்று வெளிவரமுன்னர் அவர் அமரத்துவம் அடைய நேர்ந்துவிட்டது. பின்னர் மதுரைச் சங்கத் தலைவர் பொன். பாண்டித்துரைத் தேவரின் முயற்சியால் அகராதி பகுதி பகுதியாக வெளியிடப்பட்டது.

நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை சூட்டிய தமிழ்ச்சொல் அகராதி என்ற பெயருடனேயே மதுரைத் தமிழ்ச்சங்கம் அதனை வெளியிட்டது. எனினும் தமிழ்ச்சங்க அகராதி என்றே பலரும் அதனை அழைக்கலாயினர்.

தமிழச்சங்க அகராதி முன்னைய அகராதிகளில்; இல்லாத பல புதுமைகளைக் கொண்டது. ஒரு சொல்லுக்கு இருக்கக்கூடிய பல பொருள்களை இலக்கிமிட்டுக் காட்டுதல், சொற்பொருளுக்கு இலக்கிய இலக்கண நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல், சொல் மூலங்களைச் சுட்டுதல் போன்ற பல புதிய முறைகளை முதன்முதலாகப் பயன்படுத்திய சிறப்பு இந்த அகராதிக்கு உண்டு.

1914ஆம் ஆண்டில் சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவர் இலக்கியச் சொல்லகராதி ஒன்றை வெளியிட்டார். நிகண்டுகளிலிருந்தும் இலக்கிய நூல்களிலிருந்தும் சொற்களைத் தெரிவுசெய்து அவற்றுக்குப் பொருள்விளக்கந் தந்துள்ளார். இலக்கியம்
பயில்வார் இதனைப் பெரிதும் பயன்படுத்தலாயினர். இலக்கியச்சொல் அகராதியைப் போன்று யாழ்ப்பாணத்தில்
1924ல் வெளிவந்த மற்றுமோர் அகராதி சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதியாகும்.

1935ல் ஜூபிலித் தமிழ்ப் பேரகராதி, ஆனந்தவிகடன் அகராதி என்ற பெயர்களில் இரு
அகராதிகள் வெளிவந்தன. ஜூபிலித் தமிழ்ப் பேரகராதியைத் தொகுத்தவர் நெல்லை
எஸ். சங்கரலிங்க முதலியார்
வெளியிட்டவர் பி.அரங்கசாமி நாயகர். ஆனந்த விகடன் அகராதியை அனந்தவிகடன் ஆசிரியர் வெளியிட்டார்.
2,040 பக்கங்களைக் கொண்ட பெரிய அகராதி இது. மக்கள் அதிகம் விரும்பிப் பயன்படுத்திய பெருமையுடையது. அதனால் அடுத்தடுத்துப் பல பதிப்புகளையும் கண்டது.

1937ல் மதுரைத் தமிழ்ப் பேரகராதி வெளிவந்தது. பண்டிதர் பலர் இணைந்து உருவாக்கிய இவ் வகராதியை மதுரைப் புத்தக வணிகர் இ.ம.கோபாலகிருட்டினக் கோனார் வெளியிட்டார். சதுரகராதியின் அமைப்பில் பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி ஆகிய நான்குவகைப் பிரிவுகளையும் கொண்டது இது.

இருமொழி அகராதிகள்

தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிற் பொருள் சொல்லும் தமிழ்-தமிழ் அகராதிகள் வெளியிடப் பெற்ற அதேவேளை இருமொழி அகராதிகளும் வெளியிடப்பட்டன.

வேற்று மொழியார் தமிழ் பயில்வதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து இருமொழி அகராதிகள் வெளிவரத்தொடங்கின. இத்துறையில் ஈடுபட்டவர் வெளிநாட்டுப் பாதிரிமார் களேயாவர். அவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் வீரமாமுனிவர். அவர் தமிழ்-இலத்தீன், தமிழ்-போர்ச்சுக்கீசு ஆகிய அகராதிகளை வெளியிட்டவர். அவர் வழியில்
1779ல் பெப்ரிசியசு என்பவர் தமிழ்-ஆங்கிலச் சிற்றகராதி ஒன்றை வெளியிட்டார். இராட்லர் என்பவர் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றை நான்கு பகுதிகளாக வெளியிட்டார். அவை 1834க்கும் 1841க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வெளியிடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து 1862ல் வின்சுலோ அகராதியும் 1897ல் தரங்கம்பாடி அகராதியும் வெளிவந்தன. இவற்றுள் வின்சுலொ அகராதி 67,000 சொற்களைக் கொண்ட பெரிய அகராதியாவுள்ளது.

எனினும் தமிழ்-ஆங்கில அகராதிகளில் மிகவும் பெயர்பெற்ற பேரகராதியாக
விளங்கிவருவது சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் என்னும்
அகராதியாகும். பல அறிஞரின் உழைப்பின் பயனாக உருவாகிய இப்பேரகராதி ஆறு தொகுதிகளைக் கொண்டது. அவற்றையும் அவற்றுடன் ஓர் இணைப்புத் தொகுதியையும் பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை பதிப்பித்தார்.
1935ல் தொடங்கப்பெற்ற இந்தப் பதிப்பு முயற்சி 1939ல் முற்றுப்பெற்றது.

பல்துறை அகராதிகள்
அகராதி முயற்சிகள் முற்றுப்பெறாது தொடர்ந்தவண்ணம் இருந்தனளூ தொடர்ந்தும் வருகின்றன.

1940ல் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் கழகத் தமிழ்க்
கையராதி,
1950ல் யாழ்ப்பாணம் ந.சி. கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதி, 1957ல்
வித்துவான் பாலூர். து. கண்ணப்பமுதலியாரின் தமிழ் இலக்கிய அகராதி,
1964ல் கழகத் தமிழகராதி, 1979ல் மணிமேகலைத் தமிழகராதி என்பன வெளிவந்தன.

சொல்லுக்குப் பொருள் விளக்கும் அகராதிகளுடன் பழமொழி அகராதி, தொகைப்பெயர் அகராதி, மொழியியல் அகராதி, இலக்கிய வரலாற்று அகராதி, சொற்பிறப்பு அகராதிகள், கலைச்சொல் அகராதிகள், தமிழ் - ஆங்கில அகராதிகள் போன்றவற்றையும் அறிஞர் பெருமக்கள் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.


அகரமுதலி

அகராதி என்ற சொல்லில் உள்ள ஆதி வடமொழிச் சொல் என்ற காரணத்தால் அகராதிக்கு அகரமுதலி என்று பெயரிட்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தமிழ்-தமிழ் அகரமுதலி ஒன்றை
1985ல் வெளியிட்டுள்ளது. அகரமுதலி என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்திக் காட்டியவர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் ஆவர். எனினும் பிற அகராதி ஆசிரியர் தமது தொகுதிக்கு அச்சொல்லைப் பயன்படுத்திய தில்லை. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமே அகராதி ஒன்றுக்கு அகரமுதலி என்று பெயர் வைத்த முதல் அமைப்பாகும். இதன் தொகுப்பாசிரியராக மு. சண்முகம்பிளை அவர்களும் மேலாய்வாளர்களாகப் பேராசிரியர்கள் அ.ச. ஞானசம்பந்தன் அ.மு.பரமசிவானந்தம், கொண்டல் சு.மகாதேவன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

இவ்விதம் வெளியில் தூய தமிழ்ப்பெயரைக் கொண்டு விளங்கும் இவ் வகராதி உள்ளே அந்த அளவுக்குத் தூய்மையைப் பேணவில்லை. பாசு என்ற சொல்லுக்குப் பிற பொருள்களோடு தேர்வு முதலிவற்றில் தேர்ச்சி, வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ பொருள் கொண்டு போவதற்கோ கொடுக்கப்படும் அனுமதிச் சீட்டு என்ற பொருள்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
Pass என்ற ஆங்கிலச் சொல் தமிழர் மத்தியில் பாசு என்று வழங்கிவருவது உண்மைதான். அதற்கு அகராதி அங்கீகாரம் அளிக்கலாம் என்றால் வள்ளுவர் பெருமான் பயன்படுத்தியிருக்கும் ஆதி என்ற சொல்லை ஏன் பயன்படுத்தக் கூடாது?

2005ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்து அகராதிப் பிரிவுக்குச் சென்று அங்குள்ள அறிஞருக்கு இக் கட்டுரை ஆசிரியர்; இந்த முரண்பாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளார். அதற்குச் சாட்சியாக இருந்தவர் காந்தளகம் பதிப்பக அதிபர் மறன்புலவு திரு. சச்சிதானந்தன் அவர்கள்.

இதுகாறும் வீரமாமுனிவர் முதலாக அகராதிகளை ஆக்கி அளித்துத் தமிழ்மொழியை வளர்த்த அறிஞர்கள்பற்றிய பல தகவல்களைப் பார்த்தோம். காற்றைச் சுவாசிப்பவர் காற்றைப்பற்றிச் சிந்திப்பது குறைவு. அதுபோலத் தமிழைப் பேசுகின்றவர் அதனை வளர்த்தவரை நினைத்துப் பார்ப்பது குறைவு. அதுபோலவே அகராதிகளைப் பயன்படுத்து கின்றவரும் அவற்றைத் தொகுத்தவர்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அவர்களும் எமது பெருமதிப்புக்குரியவர்கள்ளூ நன்றியுடன் நாளும் நினைவுகூரத் தக்கவர்கள்.


---------------------
குறிப்பு: இக்கட்டுரையின் பெரும்பான்மையான தகவல்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
1985ஆம் ஆண்டு வெளியிட்ட தமிழ்-தமிழ்-அகரமுதலி என்ற அகராதியிலிருந்து பெறப்பட்டவை.