அ.வெண்ணிலா: 'உள்ளத் தீயாகக் கிளர்ந்தெழும் கவிதைகளைப் பாடிய கவிஞர்'

முனைவர் இரா.மோகன்


'ஒவ்வொரு கணத்திலும் கவிதை என்னுடனேயே பயணிக்கிறது. என்னுள் இருக்கிறது. நானாக இருக்கிறது... கவிதையே என்னை வடிவமைத்தது; என்னின் அசலே என் கவிதைகள்' ('கவிதையும் நானும்', துரோகத்தின் நிழல், ப.4) என்னும் ஒப்புதல் வாக்குமூலம், வெண்ணிலாவின் உள்ளத்தில் கவிதை பெற்றிருக்கும் தனியிடத்தை அடையாளம் காட்ட வல்லதாகும். 'இப்பொழுதும் சூரியன் தவறாமல் உதிக்கிறது; பூக்கள் செடியில் மலர்கின்றன் சுவாசிக்கக் காற்று இருக்கிறது; தவறாமல் மனசு அன்பென்ற மந்திரத்தை ஜெபிக்கிறது. இதை விட வேறென்ன வேண்டும் கவிதையெழுத?' ('கவிதையும் நானும்', துரோகத்தின் நிழல், ப.5) என்னும் வெண்ணிலாவின் கூற்றும் அவரது கவி உளத்தைத் திறந்து காட்டுவதாகும். 'நீரில் அலையும் முகம்' என்னும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு 2001-ஆம் ஆண்டில் வெளிவந்தது; 'ஆதியில் சொற்கள் இருந்தன' (2002), 'கனவைப் போலொரு மரணம்' (2007), 'இசைக் குறிப்புகள் நிறையும் மைதானம்' (2008), 'இரவு வரைந்த ஓவியம்' (2010), 'துரோகத்தின் நிழல்' (2012) ஆகியன அடுத்தடுத்து வெளிவந்த அவரது கவிதைத் தொகுப்புக்கள் ஆகும். வெண்ணிலாவின் கவிதைத் தொகுப்புக்கள் பல பதிப்புக்கள் கண்டிருப்பதும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசு, கவிதை உறவு, கவிஞர் சிற்பி, கவிஞர் தேவமகள் அறக்கட்டளை, தமுஎச, கவிஞர் வைரமுத்து, ஏலாதி இலக்கிய விருதுகள் என்றாற் போல் பல்வேறு பரிசுகளும் விருதுகளும் அவரது கவிதைத் தொகுப்புக்களுக்கு வழங்கப் பெற்றிருப்பதும் கவிதைத் துறைக்கு அவர் தொடர்ந்து நல்கி வந்துள்ள சிறப்பான பங்களிப்பைப் புலப்படுத்தப்; போதுமானவை ஆகும்.

உள்ளத் தீயாகக் கிளர்ந்தெழும் கவிதை

'அவரவர் வாழ்வு, அவரவர் கவிதையாகிறது... அவரவர் உள்ளத் தீயாகக் கிளர்ந்தெழும் கவிதை, அவரவர்க்கு வழிகாட்டும். கவிதையும் சுயமும் மாறுபடாத நேர்க்கோட்டில் வாழ்க்கை பயணப்படத் துவங்குமானால், மிகப் பெரிய கவிதை இயக்கமாகக் கவிதை உருமாற வாய்ப்புள்ளது' ('காட்டு இலைகளின் மறைவில்...', ஆதியில் சொற்கள் இருந்தன, ப.80) என்னும் வெண்ணிலாவின் கூற்று, அவரது கவிதைக் கொள்கையைத் தெளிவுபடுத்தும். அவர் பெரிதும் போற்றுவது கவிதையை வாழ்வாக்குகிற கவிதை இயக்கத்தையே; இக் கவிதை இயக்கம் பெண்களுக்குக் கனிந்து கை கூடும் என்றும் அவர் ஆழமாக நம்புகின்றார்.

'குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண், அடிமைச் சங்கிலியை விரும்பி அணியும் படியாகப் பழக்கப்படுத்தப்பட்டு விடுகிறாள்' என்னும் நெஞ்சைச் சுடுகின்ற உண்மையை நடைமுறை உதாரணங்கள் கொண்டு வெண்ணிலா சொல்லி இருக்கும் பாங்கு தனித்தன்மை வாய்ந்தது:

'உள்ளே வீசப்படும்
செய்தித் தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்,
கீரை விற்பவள் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக் கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலே'


'பிரம்பினால் கூடை முடையும் லாவகம் போல' (இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை, ப.260) இங்கே கவிஞர் உண்மை ஒளி மிளிரப் படைத்திருப்பதாகப் போற்றுவார் வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.


தலைப்புகள் வைக்கப் பெறாத கவிதைகள்


'என் கவிதைகளுக்காக நான் தலைப்புகளை வைப்பதில்லை. ஒரு வரியோ, ஒரு வார்த்தையோ, ஓர் அனுபவமோ, எதுவொன்று எதிர்பாரா கணத்தில், எதிர்பாரா இடத்தில் வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் என்று கூற முடியாது. கவிதையின் எவ்வரியில் சிறகு பொதிந்துள்ளது, இதமான வருடல் உள்ளது, ரத்தம் பீச்சிட வைக்கும் கூர் ஆயுதம் உள்ளது என்பது என்னை விட வாசகருக்கே தெரியும். எனவே தலைப்பிட்டு ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட வாசிப்பை நான் தவிர்த்து வந்துள்ளேன்' ('கவிதையும் நானும்', துரோகத்தின் நிழல், பக்.
4-5) என வெண்ணிலா தம் 'துரோகத்தின் நிழல்' என்னும் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் மொழிவது நோக்கத்தக்கது. 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்பது போல், வெண்ணிலாவின் கவிதைகளில் இடம்பெற்றுள்ள இரு உயிர்ப்பான இடங்களைக் கொண்டே கவிதைக்குத் தலைப்பிடல் பற்றிய அவரது கருத்தியலை அலசி ஆராயலாம்.

'ஓரெழுத்து மந்திரம்
ஈரெழுத்து பிரணவம்
மூன்றெழுத்து வேதம்
வாழ்வில் எல்லாம் அன்பு'

                                  
(துரோகத்தின் நிழல், ப.
83)

எனத் தம் கவிதை ஒன்றில் அன்பை ஆராதிக்கும் வெண்ணிலா, பிறிதொரு கவிதையில் இப்படிப் பாடுகின்றார்:

'எதிலிருந்து கிளைக்கிறது
உடலா, மனசா
ஆசையா, விருப்பமா
பசியா, அழுகையா
காமமா, காதலா
பந்தமா, பிடிமானமா
தொப்புள் கொடி பிணைப்பா
எதிலிருந்தாவது கிளைக்கட்டும்
நித்தம் கொல்லும்
அன்பெனும் சனியனைக்
கொன்று புதையுங்கள்
பிறப்பிடம் தெரியாமல்'


                           (துரோகத்தின் நிழல், ப
.86)

'அன்பெனும் சனியனை' என இக் கவிதையில் இடம்பெற்றிருக்கும் தொடர் உயிர்ப்பானது; தனித்தன்மை வாய்ந்தது; வாசகரின் பன்முக வாசிப்பிற்கு இடம் தந்து நிற்பது. வாழ்வின் இளமைப் பருவத்தில் மனிதன் அன்பில் கலந்து - கரைந்து - நனைந்து - மூழ்கி நிற்கும் பொழுதுகள் உண்டு; முதுமைப் பருவத்தில் அன்புக்காக ஏங்கித் தவிக்கும் தருணங்களும் ஒருவருக்கு வாய்ப்பது உண்டு; கவிஞரே பிறிதோர் இடத்தில் குறிப்பிடுவது போல், 'அன்பு எல்லாம் தரும் / அன்பு எல்லாம் கொல்லும்' (துரோகத்தின் நிழல், ப
.80). சிலரது வாழ்வில் அன்பு அம்பாக மாறி, இதயத்தைத் துளைத்து, அவர்களைப் படாத பாடு படுத்தும் போது, 'அன்பெனும் சனியன்' என அன்பின் மீது வசை பாடவே தோன்றும். குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இக் கவிதைக்கு வைக்கப் பெறாதது, வாசகரைத் கவிதையின் உள் நுழைந்து, ஊடுருவி, உன்னதத்தைத் தரிசிக்க வழிவகை செய்கின்றது.

பெண் கவிதை மொழியின் கூறுகள்

'பெண்ணெழுத்து அல்லது பெண் கவிதை மொழியின் கூறுகளாக நான் கருதுபவை, தன்னைப் பிணைத்திருக்கும் தளையை மீறல், சுதந்திர வேட்கை, தன் மனதையும் உடலையும் உணர்ந்து கொள்ளுதல், தனக்கு வழங்கப்பட்ட ஒப்பனை முகங்களைப் புறக்கணித்தல், தனக்குத் தானம் செய்யப்பட்ட பின்னணிக் குரலைத் துறத்தல், தனது படைப்பாற்றலை நிறுவுதல், மானுடப் பெருக்கின் பகுதியாகத் தன்னை அறிதல்' (ப
.13) என லீனா மணிமேகலையின் 'ஒற்றையிலையென' என்னும் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுவார் கவிஞர் சுகுமாரன். இக் கருத்தியலின் ஒளியில் வெண்ணிலாவின் கவிதையுலகினை அலசிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக அமையும்.

'பெண்ணே பேசு
தெறிக்கும் உன்னின் ஒரு சொல்
பூமியைப் பிளக்கட்டும் ...
உன்னின் சொல்
யுகத்தின் சொல்'

                            (துரோகத்தின் நிழல், பக்.38-39)

எனப் 'பேசா மடந்தை'யாக இருந்த நிலையைப் புறந்தள்ளி, 'யுகத்தின் சொல்' எனத் திகழும் வண்ணம் பெண்ணைப் பேசுமாறு கவிஞர் வெண்ணிலா அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!' என்னும் கவிமணியின் கவிதை வரிகளைப் பாடத் திட்டத்தில் படித்து மகிழலாம்; ஆனால் நடைமுறையில், 'பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால், பெரும் பீழை இருக்குடி தங்கமே தங்கம்' என்னும் பாரதியாரின் பாடல் வரிகளே நிதர்சனம். ஆணாதிக்கம் மேலாண்மை செலுத்தும் இந்தச் சமுதாயத்தில் பெண் குழந்தையாய்ப் பிறப்பது என்பது அவலத்தில் பேரவலம்; கொடுமையில் பெருங்கொடுமை. ஒரு தாய்க்கும் அவளது பெண் குழந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல் வடிவில் இதனை வெண்ணிலா தம் கவிதை ஒன்றில் கலைநயத்துடன் பதிவு செய்துள்ளார். அக் கவிதை இதோ:

'குளித்து விட்டு அப்படியே ஓடி வரக் கூடாது மகளே
துண்டு கட்டியிருக்கேம்மா
இடுப்பிலிருந்து துண்டை நெஞ்சு வரை ஏற்று
மேல் சட்டை அணிந்து தூங்கு
கசகசன்னு இருக்கும்மா
புழுங்கிக் கசங்கினாலும்
காற்றாட முடியாது மகளே
நம்ம வீடு தானேம்மா
செங்கல் சுவருக்கும் கண் உண்டு மகளே
குழந்தையில்லையாம்மா நான்
குழந்தைதான் தங்கமே
பெண் குழந்தை.

                                         ' (இரவு வரைந்த ஓவியம், ப.60)


'குழந்தை தான் தங்கமே, பெண் குழந்தை' எனத் தாயின் கூற்றாக வரும் இக் கவிதையின் முடிப்பு முத்தாய்ப்பானது.

பெண்ணுக்கே உரிய மாதவிடாய் நிகழ்வினையும் வெண்ணிலா தம் கவிதை ஒன்றில் உணர்ச்சிமிகு மொழியில் எடுத்துரைத்துள்ளார்:

'தேதி மாறாமல்
திட்டமிடப்பட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றைச்
சந்தித்தாற் போல்
அதிர்கிறது மனசு'

                      
(ஆதியில் சொற்கள் இருந்தன, ப.
56)

பிறிதொரு கவிதையிலும் தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழும் உரையாடல் வடிவிலும் பெண்ணின் பூப்பு அனுபவத்தைக் கவிதைப் பொருள் ஆக்கியுள்ளார் வெண்ணிலா:

'ஏம்மா ரத்தம் வந்துக்கிட்டே இருக்கு
நீ பூக்கத் துவங்கி விட்டாய் மகளே
பூ பூத்தால் வாசனை தானே வரும்
ரத்தம் வருது
ரத்தப்பூ
ஆதியில் உன் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டி
சூரியனை விழுங்கி விட்டாள்
சூரியப் பூ
சிகப்பு
சூரியனை ஏன் விழுங்கணும்
நிலாவை விழுங்கியிருக்கலாம்
சூரியந்தாண்டா உயிர்
நீ உயிர்த்தலின் அம்சம்
சூரியனை பிரசவிக்கும் மகளே
வலி சுகி.'

                       (இரவு வரைந்த ஓவியம், ப.59)

இன்று குடும்பத்தின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு வேலைக்குப் போகும் பெண்கள் தங்கள் வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சொல்லி மாளாது; சொல்லில் வடித்தாலும் தீராது. அதிலும் குறிப்பாக, தாய்மைப் பேற்றினை அடைந்த பெண்கள் அலுவலகத்தில் அனுபவிக்க நேரும் அவலங்கள் அலாதியானவை. இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க வெண்ணிலாவின் கவிதை ஒன்று:

'மணமிக்க
பூச்சூடிக் கொள்கிறேன்
கூடுதலாய்
முகப் பவுடரும்
புடவைகளுக்குக் கூட
வாசனைத் திரவியம்
பூசி வைத்துள்ளேன்
வியர்வையைக்
கழுவிக் கழுவி
சுத்தமாய் வைத்திருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன்
என்னை
அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
தாயின் வாசம்
சொட்டு சொட்டாய்
கோப்புகளில் இறங்குகிறது
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து
பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்று அலரும்
குழந்தையின் அழுகுரல்.'

                        (நீரில் அலையும் முகம், ப.44)

பூவின் நறுமணம், முகப் பவுடர், வாசனைத் திரவியம் ஆகிய எல்லாவற்றையும் மீறி, ஆடைகளுக்குள் இருந்து, தாயின் - தாய்மையின் - வாசம் சொட்டுச் சொட்டாய் அலுவலகக் கோப்புகளில் இறங்குகிறதாம்! அவசரமாய் அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து பீச்சி விடப்படும் தாய்ப் பாலில் பசியைத் தின்று அலறும் குழந்தையின் அழுகுரல் தெறிக்கிறதாம்! பெண்ணிய எழுத்து அதற்கே உரிய கூர்மையுடனும் துல்லியத்துடனும் வெளிப்பட்டிருக்கும் இடம் இது!

'தமிழில் பெண் மொழி தனக்கான இடத்தைக் கண்டறிந்துள்ளது என்பதை வெண்ணிலாவின் கவிதை வரிகள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன' ('வெண்ணிலாவின் கவிதையுலகு', துரோகத்தின் நிழல், ப.
103) என்னும் ந.முருகேச பாண்டியனின் விமர்சனக் கூற்றுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன வெண்ணிலாவின் பின்வரும் கவிதை வரிகள்:

'முதல் ரத்தம் பார்த்து
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்
ஒரு செவிலித் தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்.'


                                  (துரோகத்தின் நிழல், ப.
11)


'மார்புக் காம்புகளும்
வயிற்றுச் சுருக்கங்களும்
சொல்லும்
என் பிள்ளைப் பிறப்பின்
அடையாளத்தை
பிறகெதற்கு
எதிர்பார்க்கிறீர்கள்
என் அடையாளத்தை
தாலிக் கயிற்றிலும்
கால் மெட்டியிலும்
வகிட்டுச் சிவப்பிலும்'


                                  (நீரில் அலையும் முகம், ப.
52)


குழந்தை உலகம்


வெண்ணிலா படைக்கும் குழந்தைகள் உலகம் இயல்பானது; இனிமையானது; கள்ளங் கரவு அறியாதது; சூது வாது இல்லாதது. அதைப் பற்றிய ஓர் அழகான படப்பிடிப்பு இதோ:

'துண்டொன்றைக்
கட்டிக் கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்.
குழந்தையாக முடியாமல்
அல்லற்பட்டுக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்'

                       (ஆதியில் சொற்கள் இருந்தன, ப.34)


ஒரு வகையில் பார்த்தால், பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கம் போன்றது தான், குழந்தைகள் மீது பெற்றோர் செலுத்தும் ஆதிக்கமும். இதனைத் தமக்கே உரிய கவிதை மொழியில் வெளியிட்டுள்ளார் வெண்ணிலா:

'சப்தம் போடாமல்
விளையாடுங்கள்
கூச்சமே இல்லாமல்
சொல்கிறார்கள்
குழந்தைகளிடம்'


                          (ஆதியில் சொற்கள் இருந்தன, ப.
48)


'பல்லு தேய்ச்சியா
பால் குடிச்சிட்டியா
ஹோம் ஒர்க் எழுதிட்டியா
யூனிபார்ம் போட்டாச்சா
ரிக்ஷா வந்திடுச்சா
பென்சில் எடுத்துக்கிட்டியா
விளையாட மாட்ட தானே
அடிக்காம வந்தியா யாரையும்
கைகால் கழுவிக் கிட்டியா
சாப்பிட்டியா
தூங்கப் போ நேரமாச்சு'


இப்படி நாள்தோறும் பெற்றோர்கள் குழந்தைகள் மீது தொடுக்கும் அல்லது விடுக்கும் கேள்விக் கணைகள் தான் எத்தனை, எத்தனை! அவற்றை நிரல்படுத்திக் கூறிவிட்டு, வெண்ணிலா அந்தக் கவிதையை முடித்திருக்கும் பாங்கு 'நச்!'


'கேள்விகளால்
கழற்றி விடப்படுகின்றன
குழந்தைகள்
உலகம்'

                       (ஆதியில் சொற்கள் இருந்தன, ப.76)


வெண்ணிலாவின் கண்ணோட்டத்தில் 'புன்னகைக்காமல் துவங்கும் எந்த உரையாடலும் சவ ஊர்வலமே' (ஆதியில் சொற்கள் இருந்தன, ப
.25) ஆகும். 'புன்னகையைச் சேகரிக்கும் நாளாக' அறிவித்துக் கொண்டதும், முதல் வரவாய் அவர் சேகரித்துக் கொண்டது 'குழந்தை ஒன்றின் புன்னகையை'யே (ஆதியில் சொற்கள் இருந்தன, ப.54). 'குழந்தை அழத் துவங்குவதற்கான / முந்தைய கணம்' (இசைக் குறிப்புகள் நிறையும் வானம், ப.21) ஒரு கவிதையில் கவிஞரால் பதிவு செய்யப் பெற்றுள்ளது. 'பின்னிருந்து ஓடி வந்து / கை தொட்டு அழைக்கும் குழந்தையைப் போல்...' (இசைக் குறிப்புகள் நிறையும் மைதானம், ப.24), 'அம்மாவிடம் சண்டையிட்டு / கதவிடுக்கில் மறைந்திருக்கும் / குழந்தையைப் போல்' (துரோகத்தின் நிழல், ப.69) என்றாற் போல் வெண்ணிலாவின் உவமை ஆட்சியிலும் குழந்தைகளின் வருகை இடம் பெறக் காண்கிறோம்.

'கால் தவறி
லேசாக மிதித்து விட்டேன்
பொம்மையை
அடித்ததை விட
அதிகமாக அழுகிறாள்
மகள்'

                            (இரவு வரைந்த ஓவியம், ப.44)


என்னும் வெண்ணிலாவின் கவிதை கள்ளங்;கரவு இல்லாத குழந்தை உள்ளத்தின் மென்மையை - மேன்மையை - பறைசாற்றுவது; இக் குழந்தையை 'அம்மாக் குழந்தை' என்னும் அழகிய தொடரால் கவிஞர் சுட்டியிருப்பது சிறப்பு.

'மகளுக்காக
வாய்ப்பதில்லை
தாயுமான தந்தை
பேத்திகளுக்காக
மாறுகிறார்கள்
தந்தையாக தாத்தாக்கள்'

                                     (இரவு வரைந்த ஓவியம், ப.
54)


என்னும் கவிதை மனித உறவுகளின் காலச் சுழற்சியில் சித்திக்கும் வித்தியாசமான பரிமாணத்தை – பக்கத்தினை – படம் பிடிப்பது.


நட்பின் பரிமாணம்


மனித வாழ்வில் நட்பு எனும் விழுமியம் பெறும் இடம் உண்மையானது; உயர்வானது; உறுதியானது. இல்லை என்றால், வள்ளுவர் தம் நூலில் நட்புக்கு என்று 'நட்பு', 'நட்பாராய்தல்', 'பழைமை', 'தீ நட்பு', 'கூடா நட்பு' என ஐந்து அதிகாரங்களை
(79-83) - ஐம்பது குறட்பாக்களை - அமைத்திருப்பாரா? இரு ஆண்களுக்கு இடையிலான நட்பு, இரு பெண்களுக்கு இடையிலான நட்பு, ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான என்னும் நட்பின் மூன்று நிலைகளுள் முன்னைய இரண்டும் இயல்பானவை; மூன்றாவது அலாதியானது. இதனை வெண்ணிலா தம் கவிதை ஒன்றில் நடப்பியல் பாங்கில் எடுத்துரைத்துள்ளார்.


'சுக இருப்புக்காக
கால் மேல் உள்ள காலைக் கண்களால்
நெருடிப் போகாத
பார்வையைச் சந்தித்தவுடன்
சரியாய் இருக்கும்
முந்தானையைக் கூட
இழுத்துவிட்டுக் கொள்ள வைக்காத
குழந்தைக்குப் பாலூட்டும்
விநாடிகளில் ...
தரை பிளந்து உள் நுழையும்
அரைப் பார்வை வீசாத
காற்றில் ஆடை விலகும்
நேரங்களில்
கைக்குட்டை எடுத்து
முகம் துடைத்துக் கொள்ளாத
ஆண்களுக்கு
நண்பர்கள் என்று பெயர்'

                              (நீரில் அலையும் முகம், ப.54)


ஓர் ஆண் பெண்ணிடம் கொள்ளும் உயர்வான நட்புக்கு நல்லதோர் உதாரணம் காட்ட வேண்டுமா? எதிர்மறை வாய்பாட்டால் அமைந்த வெண்ணிலாவின் இக் கவிதை ஒன்றே போதுமானது, ஆண்களில் உண்மையான, உயர்வான நண்பர்கள் யார், உள்ளத்தில் கள்ளத்தனம் கொண்ட நண்பர்கள் யார் என அடையாளம் காட்ட.


வாழ்க்கை பற்றிய மெய்யியல் நோக்கு


வெண்ணிலாவின் கவிதைகளில் காணலாகும் ஒரு சிறப்புக் கூறு வாழ்க்கை பற்றிய அவரது மெய்யியல் நோக்கு ஆகும்.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா
117-ஆவது இடத்தில் இருப்பதாக ஆய்வில் கிடைத்த அண்மைப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது. இத் தருணத்தில் நினைவு கூரத் தக்க வெண்ணிலாவின் கவிதை இது:

'எதிர்ப்படும் நண்பரின்
முகம் பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை'

                         (ஆதியில் சொற்கள் இருந்தன, ப.3)

பொன்னும் பொருளும் போகமும் தரும் மகிழ்ச்சியை விட, எளிமையான புன்னகை மனிதனுக்குத் தரும் மகிழ்ச்சி மேலானது என்பது கவிஞரின் கருத்து.

வாழ்க்கையின் பரிமாணங்கள் பிடிபடுவது - பாடங்கள் புரிவது - புத்தகங்கள் படிப்பதால் அல்ல் அவ்வப்போது இலவசமாகக் கிடைக்கும் அறிவுரைகளாலும் அல்ல. பின், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் எப்போது, எப்படி, யாரிடம் இருந்து கிடைக்கும் என்பதற்குக் கவிஞர் தரும் இரத்தினச் சுருக்கமான விடை இதோ:

'வாழ்க்கை
கற்றுத் தருவதில் அல்ல
கற்றுக் கொள்வதில் தான்'


                                                       (இரவு வரைந்த ஓவியம், ப.
55)

'இலக்கா? பாதையா? இலக்கு, பாதையைத் தீர்மானிக்கிறதா? அல்லது பாதை, இலக்கைத் தீர்மானிக்கிறதா?' என்னும் அரிய வினாவுக்குக் கவிஞர் வெண்ணிலா தத்துவப் பாங்கில் தரும் உரிய விடை:

'இலக்கும் பாதையும்
ஞானம் தரும்
ஞானம் தொலைத்தலே ஞானம்.'

                                                     
(துரோகத்தின் நிழல், ப.
50)


'நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு'
(
336)


என்று நிலையாமை குறித்துப் பாடினார் வள்ளுவர். வெண்ணிலாவோ,

'சாக்லேட்
வாங்கி வருவதாய்
கூறிச் சென்ற தந்தை
பிணமாய் வீடு திரும்புகிறார்
நெடுஞ்சாலைகளில் தூக்கியெறியப்படுகிறார்கள்
மனிதர்கள்
பைக்குள்
திடப்பொருள் ஒன்றாய்
உட்கார்ந்திருக்கிறது மரணம்'

                                                         (கனவைப் போலொரு மரணம்)


எனக் கணப்பொழுதில் மனிதனின் வாழ்க்கையைப் பறித்துக் கொள்ளும் மரணத்தின் இரக்கமில்லாத கொடுமையைக் கவிதைப் பொருள் ஆக்கியுள்ளார். தந்தை கூறிச் சென்றதோ இனிக்கும் 'சாக்லேட்'டை வாங்கி வருவதாக் அவர் வீடு திரும்பியதோ உயிரற்ற பிணமாக, ஓ, இந்த முரண் தான் வாழ்க்கையின் இயல்போ? மரணம் மனிதர்களின் சட்டைப் பைக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறதோ?


குமிண் சிரிப்பினைப் போன்ற குறுங்கவிதைகள்


வெண்ணிலாவின் குறுங்கவிதைகள் குமிண் சிரிப்புக்கு நிகரானவை; ஒரு முறை படித்தாலே படிப்பவர் இதய அரியணையில் ஒரு குழந்தையைப் போல் ஏறி அமர்ந்து கொள்ளும் இயல்பினவை. நெஞ்சை அள்ளும் ஓர் எடுத்துக்காட்டு:

' பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்குப் பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்'

                                             (கனவைப் போலொரு மரணம்)


ஒரு வேளை, பரிணாம வளர்ச்சி (
?) என்பது இதுதானோ? பாட்டி - அம்மா - கவிஞர் - மகள்: இவர்களுக்கு முறையே, மண்குடம் - பித்தளைப் பானை - பிளாஸ்டிக் குடம் - வாட்டர் பாக்கெட்: அருமையான படிநிலை மாற்றம்!

என்னதான் 'உள்ளப் புணர்ச்சி' என்றும், 'அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே' (குறுந்தொகை,
40) என்றும் காதலில் உள்ளம் பெறும் இடத்தை உயர்த்திப் பிடித்தாலும், உண்மைக் காதலில் உடம்பிற்கும் ஓர் இடம் இருக்கவே செய்யும். தொல்காப்பியரும் களவொழுக்கத்தில் தலைவனுக்கு நிகழும் கூற்று வகைகளைத் தொகுத்துக் கூறும் நூற்பாவில் 'மெய் தொட்டுப் பயிறல்' (1048) என்பதையே முதலில் சுட்டுவார். 'தலைவன் தலைவியின் உடலைத் தொட்டுப் பழகிக் கூச்சத்தைப் போக்குதல்' என்பது இத் தொடரின் பொருள். வெண்ணிலா காதலில் உடல் பெறும் இடத்தை தமக்கே உரிய பாணியில் நுட்பமாகப் புலப்படுத்தியுள்ளார்:

'உள்ளங்களில் இருந்து
நம் காதல் தோன்றியதாக
நம்பினாலும்
நம்மால்
உதடுகளால் மட்டுமே
முத்தமிட்டுக் கொள்ள முடிகிறது'


                                              (கனவைப் போலொரு மரணம்)


வாழ்க்கையை ஒரு தத்துவ நோக்கில் காணும் பக்குவமும் வெண்ணிலாவுக்கு வசப்பட்டுள்ளது என்பதற்குப் பதச்சோறு பின்வரும் அவரது குறுங்கவிதை:

'வாழ்வு பெரிதா
மரணம் பெரிதா
பிறப்பைப் பேறாக்க
மரணம் வேண்டும்
மரணத்தை வீழ்த்திச் சாய்க்க
பிறப்பு வேண்டும்'

                                             (கனவைப் போலொரு மரணம்)


வித்தியாசமான உவமைகளின் ஆட்சி

வித்தியாசமான உவமைகளின் ஆட்சியை வெண்ணிலாவின் கவிதைகளில் ஆங்காங்கே காண முடிகின்றது. இவ் வகையில் மனங்கொளத் தக்க வெண்ணிலாவின் உவமைகள் ஒரு சில வருமாறு:

•'காலம் -
வால் சுருட்டிய
நாயொன்றைப் போல்
மௌனித்திருந்தது'

                                      (இசைக் குறிப்புகள் நிறையும் வானம், ப.46)

•'அழுது ஓய்ந்த
பெண்ணொருத்தியின்
கலங்கிய கண்களைப் போல் இருந்த
என் வானம்...'

                                      (இசைக் குறிப்புகள் நிறையும் வானம், ப.62)


•'எப்படித் தான் முடிகிறதோ உனக்கு
சட்டை போட்ட வள்ளலார் போல்
கருணை ததும்பும் விழிகளுடன்
வீதிகளில் நடமாட?'

                                      (இரவு வரைந்த ஓவியம், ப.24)

•'இரவு
ஒரு வரைந்த ஓவியத்தைப் போல்
சலனமற்று நிற்கிறது'

                                    (இரவு வரைந்த ஓவியம், ப.35)

•'கிராமத்து ஒற்றையடிப் பாதை
என் தந்தை
நகரத்து நெடுஞ்சாலை
உன் தந்தை'

                                        (துரோகத்தின் நிழல், ப.62)

எனக் கவிஞர் கையாண்டுள்ள இரு உவமைகளே தந்தையர் இருவரது வேறுபட்ட ஆளுமைப் பண்புகளையும் வாசகர்களுக்குத் திறம்பட அடையாளம் காட்டி விடுகின்றன.

வெண்ணிலாவின் உவமைகள் நுண்ணாய்வுக்கு உரியவை.


இளைய தலைமுறைக்கு வெண்ணிலாவின் செய்தி


'வாசிப்பு, எழுத்து இவையெல்லாம் தூர தேசத்து விஷயங்கள் என்றிருப்பவர்கள் மத்தியிலிருந்து நான் எழுத வந்திருக்கிறேன்' ('ஒவ்வொரு கணமும்...', நீரில் கலையும் முகம், ப.
64) எனத் தன்வரலாற்றுக் குறிப்பினை வெளிப்படையாகத் தெரிவித்துள்ள வெண்ணிலா, ஏறத்தாழ 18 ஆண்டுக் காலக் கவிதைப் பயணத்தின் ஊடே பல்வேறு பரிமாணங்களையும் பரிணாம வளர்ச்சி-நிலைகளையும் பெற்று, தமது ஆளுமையைச் செதுக்கிக் கொண்டிருப்பது போற்றத்தக்கது. 'நான் மற்றும் நீ' என்னும் கவிதையில் அவர் வடித்துள்ள பின்வரும் வரிகள், வாழ்வில் முத்திரை பதிக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கு விடுக்கும் அறைகூவலாகவும் செய்தியாகவும் விளங்குகின்றன:

'கால்களை அகட்டி நட
பூமியை அள
கைகளால் காற்றைப் பிடி
சூரியனைத் தின்று செரி
வெயிலை
சுருண்டு விழச் செய்
நிலவை விழுங்கு
பிரபஞ்சம் உனதென்று கூவு
உணர்ச்சி செரி
அனுபவம் சுகி
ஆளுமை பேசு
வரலாறு படை'


                            (இசைக் குறிப்புகள் நிறையும் மைதானம், ப.
56)

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட புதுமைப் பெண்ணைப் படைத்துப் புதுநெறி காட்டிய கவியரசர் பாரதியார், குடும்ப விளக்காக மட்டுமன்றி, குன்றத்து விளக்காகவும் ஒளிர வேண்டும் எனப் பெண்மையை உயர்த்திப் பிடித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரது அடிச்சுவட்டில் நடை பயிலும் ஓர் ஆற்றல்சால் கவிஞராகவும் இவ் வரிகள் வெண்ணிலாவை அடையாளம் காட்டி நிற்கின்றன.
 


.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021