தமிழரின் வாழ்வியல் மரபு ஒரு நோக்கு

த.சிவபால
 

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்னும் தத்துவத்தின் பாற்பட்டது தமிழர் வாழ்வியல்.. “அகம், புறம் என இருவகையாகப் பகுத்து விளக்குகின்றது தொல்காப்பியம். “ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் கலந்து வாழும் குடும்பவாழ்வினை அகவாழ்வென்றும். இவ்விதம் இணைந்த குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய அரசியல் வாழ்வினைப் புறவாழ்வென்றும் வகுத்துரைத்தல் தமிழ் மரபாகத் தொல்காப்பியம் தொட்டு சங்க இலக்கியங்கள் வழியாகப் பயின்று வந்துள்ளமை நோக்கற்பாலது. அறம், பொருள், இன்பம் இவை மூன்றும் மனித வாழ்வியலின் அடித்தளம் எனப் பாராட்டிப் போற்றினர் தமிழர். இன்பத்திற்கான அடிப்படை பொருள். அந்த பொருளை ஈட்டுதற்குரிய நெறிமுறை அறம் எனப்பட்டது. எனவே இன்ப வாழ்விற்கு பொருளை அறநெறியில் நின்று திரட்டுவது வேண்டும் என்பது தமிழர் சால்பு. ஆனால் அந்த அறம் எனப்பட்டது மனித குழுக்களிடையே அவர்கள் வாழ்ந்த இயற்கையை ஒட்டியதாக அமைந்திருந்தது. வேட்டையாடி, கிடைத்தவற்றைப் பகுத்துண்டு வாழ்வதும் தமிழர் சால்பு,

கொல்லான் புலான் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் –
(குறள்
260)

ஏனைய எல்லா உயிர்களிடத்தும் அன்பும். கருணையம் உள்ளவனாக வாழ்பவனெ மனிதப்பண்புடையவன் என்பது தமிழர் அறம் எனப் போற்றிய நெறியாகும். எனவே அறம் என்பது காலம், இடம் கருதி மாறுபாடுடையதாக அமைகின்றமையையும் நோக்கலாம்.

அக ஒழுக்கத்தை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணை, மற்றும் கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழு வகையான ஒழுக்க மரபினைச் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்தனர் என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

திருமணத்தைக் கரணம் எனக்குறிப்பிடுவர் தொல்காப்பியர். அந்தக் கரணம் எவ்விதம் நிகழ்கின்றது என்பதனையும் அவர் குறிப்பிடுகின்றார். பெற்றோர் பேசிச் செய்யும் திருமண முறையினை பின்வரும் பொருளியற் சூத்திரத்தால் காணலாம்:

கற்பு எனப்படுவது கரணமொடு புணர
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே.
(தொல்.பொருள் -
1)

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி யாரும் அறியாவண்ணம் கூடி பின்னர் பெற்றோரறியாமல் சென்று கணவன் மனைவியாக வாழும் முறையும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இடம்பெற்றுள்ளமையை அவர் பின்வரும் சூத்திரத்தால் எடுத்துரைக்கின்றார்:

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன் போகிய காலையான.
(தொல்.பொருள்.-
2)

அன்பின் ஐந்திணை ஒழுக்கம் “களவு, கற்பு” என இரு வகைப்படும். உரு, திரு, உணர்வு என்பனவற்றால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும் விதியின் வழி தாமே ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டு, அன்பினால் உளம் விரும்பி ஒருவர்க்கொருவர் வேண்டப்படுவோராய் உலகத்தார் அறியாவண்ணம் கரந்தொழுகுதல் ‘களவொழுக்கம்’ ஆகும். “இருளில் நிகழும் ஒழுகலாறு’ அதாவது பிறர் அறியா வண்ணம் கூடி இன்பம் பெறுதல் களவொழுக்கம் எனப்பட்டது. இவ்விதம் மறைந்தொழுகுதலைத் தவிர்த்து பெற்றோர் உடன்பாடு பெற்று இருவரும் உலகத்தால் அறிய மணம் கண்டு மனையறஞ் செய்தலே ‘கற்பு”எனப்படும். களவொழுக்கத்தில் இணைந்த இருவர் ஊரறிய இணைந்து வாழ்வது கற்பொழுக்கம். ஆகவே ‘களவும் கற்றுமற’ என்னும் பழமொழியின் வழி களவொழுக்கம் கற்பொழுக்கம் என்னும் நிலைக்கு மாற்றம் பெறுகின்றதனைத் தமிழர் போற்றினர், ஏற்று வாழ்ந்தனர். களவொழுக்கமும்
கற்பொழுக்கமேயாகக் கொள்ளப்பட்டது,

கணவன் மனைவி இருவருள் ஒருவர் மட்டும் விருப்புடையவராகக் மற்றவர் விருப்பின்றிக் கூடி வாழ்தல் ‘கைக்கிளை’யாகும். கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். ஒருவனும் ஒருத்தியும் தம்முள் அன்பில்லாதவராய்ப் பிறரால் பிணைக்கப்பட்டு அன்பின்றிக் குடும்பம் நடத்துதல் பெருந்திணையாகும். இந்த நிலையினை தமிழர் சமூகத்தில் இன்றும் காணமுடிகின்றது. பெண்ணோ அல்லது ஆணோ விரும்பாவிட்டாலும் பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகத் திருமணம் செய்துவைக்க்பபட்டு அதன் வழி வாழும் பண்பினை கைக்கிளை என இலக்கியம் பாகுபடுத்தியுள்ளது.

பண்டு தொட்டுத் தமிழரிடையே நிலவி வந்த வழக்காறுகள், வாழ்க்கை முறைகளைப் பற்றி

அன்புடமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடமை என்னும் வழக்கு
(குறள் –
992 )

என்னும் திருக்குறள் பண்பாட்டின் ஆணிவேரைத் தொடுகின்றது. ஆன்ற குடி என்பது தமிழ்க்குடி என்பதனை நாம் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். எனவே தமிழ்பண்பு என்பது ஆன்ற குடியின் பயின்றுவந்த நெறிமுறை. தமிழனின் மரபணுவில் ஊறிவளர்ந்தது தமிழர் சால்பு. இதனைப் பின்வரும் தொல்காப்பியச் சூத்திரம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

“பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு
உருவு, நிறுத்த காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”
(தொல் பொருள்.
488)

அன்பும் அறனும் உடையதே தமிழர் பண்பாடு என்பதனைப் பல்லாண்டு காலமாகப் போற்றிப் புகழ்ந்து பாராட்டி வருகின்றோம். அதனை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
(குறள் -
45)

என்று வள்ளுவர் மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்திருப்பது தமிழர் வாழ்வியல் நெறியை எடுத்துக்காட்டுகின்றது.
1956ல் 'தமிழர் திருமணம்' என்னும் நூலை எழுதிய தேவநேயப் பாவாணர் 'இல்லறமாகிய நல்லறம் பூணும் மக்கள் வாழ்க்கையில் திருமணமே தலைசிறந்த மங்கல நிகழ்ச்சி ஆதலலாலும், நிண்ட காலமாக தமிழுக்கும், தமிழனுக்கும் இழுக்கு நேரும் வண்ணம் ஆரிய முறையில் பெரும்பால் தமிழ திருமணங்கள் நடைபெற்று வருவதாலும், அண்மையில் யான் நடத்திவைத்த பலதிருமணங்களில் யான் உணர்ந்த குறையை நிறைத்தற்கொருட்டும் இந்நூல் எழுதப் பெற்றது' எனக்குறிப்பிடுகின்றார். பண்டைய தமிழர் திருமண முறைகளில் சடங்குகள் பெரிதும் இடம்பெறாத நிலை இருந்துள்ளமையையும் அதன் பின்னர் திருமணச் சடங்குகள் வகுக்கப்பட்டதற்கான காரண காரியங்களையும் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
                                                                                                                   
(தொல்.பொருள்.
4)

இல்லற வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதன் பயன் என்ன? ஏன் இல்லற வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகள் எம்முன்னே எழுவது இன்று யதார்த்தமாகிவிட்டது. கல்லடி வேலன் என்பவர் இளைஞர்களே திருமணம் செய்யாதீர்கள் என நகைச் சுவை ததும்பும் கவிதையொன்றைப் பாடியுள்ளமை நினைவுக்கு வருகின்றது. நங்கையரே நம்பியரே செய்யாதீர் திருமணம் .... என அவர் எடுத்தியமபுவதனை இன்று அனுபவ வாயிலாகக் காண்கின்றோம். ஆனால் தொல்காப்பியர் வாழ்ந்த சமுதாயத்தில் தமிழர் மத்தியில் துறவு நிலை இருந்ததற்கான சான்றுகள் இல்ல. ஆனால் மூப்பெய்திய காலை, தம்பிள்ளைகள் சுற்றத்தாரோடு இருந்து நல்வாழ்விற்கான அறம்புகட்டுதல் முதியோரின் கடமையாக இருந்துள்ளது. காம வாழ்வை நீக்கி இல்லறமாம் நல்லறத்தை இளையோர்க்குப் புகட்டடும் அறத்தொடு நிற்றல் மூத்தோரின் செயலாக அமைந்திருந்தமையை மெய்ப்பிப்பதாக பின்வரும் சூத்திரம் அமைந்துள்ளதைக் காணலாம்:

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்பரி சுற்றமொடு கிழவுனும் கிழத்தியும்
சிறந்து பயிற்றல் இறந்ததன் பயனே
(தொல். கற்பியல்
4,51)

இறப்பு என்பது ததுறுவு நிலையைக் குறிக்கின்றது. இச்செய்யுள் இல்லற வாழ்வு தமிழர்களிடையே மிக முக்கியமான, உயர்ந்த நிலையில் இருந்துள்ளமையை அறியமுடிகின்றது. தமிழர்களிடையே திருமணச் சடங்குகள் வருவதற்குக் காரணம் ஆரியர்கள்தான் என்பதனை தொல்காப்பியம் நிலைநிறுத்தவதாக பல தமிழறியர்கள் குறிப்படுகின்றனர். ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்னும் 147வது தொல்காப்பியச் சூத்திரத்தின் படி தலைவனும தலைவியும் களவொளுக்கத்தின்பால் ஒழுகி அதன் பின்னர் தலைவன் ஏமாற்றிவிட்டுச் செல்கின்ற முறை இந்த கழவொழுக்கத்தின் காரணமாக் கொள்ளப்படுவதனால் திருமணத்தினை வெளிப்படையாகச் செய்யவேண்டிய நிலை தோன்றியது என்கின்றார் தொல்காப்பியர். அதாவது களவு வழி மெய்யுறப் புணர்ச்சியானதால் ஆண்மகன்; மனம்மாறித் தலைவியைக் கைவிட்ட போது அவனோடு மெய்யுறு புணர்ச்சியில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் இன்மையால் அதனைத் தவறு என்று இடித்துரைக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் சாட்சியம் இன்றித்தானெ களவொழழுகம் நிகழமுடியுமாதலின் அதற்குச் சாட்டியத்தை எப்படி அவளால் காட்டமுடியும்? அவள் ஏமாற்றப்படுகின்றாள். இதனால்தான் திருமண முறைமையை அந்தணர் வகுத்துக் கொண்டனர் எனப்படுகின்றது. அந்தணர் என்பத பிராமணரைக் குறித்ததாக தொல்காப்பியர் சொன்னாரா? என்ற வினாவிற்குப் பல்வேறுபட்ட கருத்துக்களை ஆய்வாளர்கள் தருகின்றனர். திருமணத்தை முன்னின்று செய்யும் பங்களிப்பினை சமூதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற கற்றறிந்தவர்கள் – நல்லொழுக்க சீலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது (அதுவும் உயர் குலத்தவருக்கே அந்தச் சடங்கு முறைகள் உள்ளன என்பதனையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆரியரின் வழக்கின்படி திருமண முறைகள் எட்டு எனக் குறிப்பிடுகின்றது தொல்காப்பியம். ஆனால் ஆரிய களவொழுக்கத்தை ஒத்ததாகவே தலைவனும் தலைவியும் விரும்பிச் செய்யும் திருமணத்தைக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.

மனிதன் இவ்வுலகில் தோன்றிய காலந்தொட்டு அவன் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மாற்றம் என்று குறிப்பிடும்போது அது வாழ்வியலின் முன்னேற்றத்தைக் குறிப்பதாக. நாகரிக வளர்ச்சி காரணமாக மனித நடத்தைகளில் ஒழுக்கவியல் விழுமியங்களில் மாற்றங்களை மனத இனம் ஏற்றுக்கொண்டு பண்பட்ட நிலையைத் தனதாக்கிக்கொண்டது. விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதன், காட்டுமிராண்டியாக, வேட்டையாடி, இயற்கைக்கு முழுதும் வயப்பட்டவனாக வாழ்ந்து வந்தான். ஆனால் இன்று அவன் நாகரீகமடைந்து நல்லது கெட்டது எது என்பதனைப் பகுத்தறிந்து பகுத்துண்டு வாழுகின்ற பண்பாடு கண்டவனாக முன்னேற்றம் கண்டுள்ளான் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். அந்தப் நாகரிக கருவூல வளர்ச்சியின் பயனே நாம் இன்று எமக்கென ஒரு தனித்துவமான பண்பாடு, ஒழுகலாறு வாழ்வியல் கோலங்களைக் கொண்டவர்களாக வாழ்வதற்குக் காரணம் என்பதனை எவரும் மறுக்கவோ அன்றி மறைக்கவோ முடியாது. இவ்வித பண்பாடு கண்ட மனித இனத்துள் முன்தோன்றி மூத்தகூடியாக பண்டைய பாரம்பரியம் மிக்க இனமாக எமது தமிழினம் முதன்மை பெறுகின்றது. இதனைத்தான் சங்க இலக்கியத்தில் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி’ என ஐயனாரிதனார் பாடியுள்ளமை. உலகில் நாகரிகம் தோன்ற முன்னர் தமிழினம் நாகரிகம் கண்டுள்ளது என்பதனை எடடுத்துக்காட்டுகின்றது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தரவாரா . . .
என சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் எடுத்துரைத்தமையை உலகநாடுகள் அமையத்தில் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் தமிழனின் பண்பார்ந்த தத்துவத்தைக் மேற்கோளாக்கித் தமிழரின் உயரிய பண்பாட்டை உலகறியச்செய்தார். இந்தப் பாடல் தமிழனின் பரந்தநோக்கை, பண்பை, மேன்மையை பறைசாற்றி நிற்கின்றது. மனிதம் என்ற பொருள் உணர்த்தும் பண்பை முன்கூறிவைத்து அதன் நெறிவாழ்ந்தவன் தமிழன் என்பதற்கு இந்தச் சான்று ஒன்றே போதாதா? மொழி, மதம், நாடு, இனம் என்ற வரையறைகளைக் கடந்து மனிதத்தை நேசிப்பவர்கள் நாம். அதனால்த்தான் நாம் உலக நாடுகள் எங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றோம். விட்டுக்கொடுத்தல், இணைந்துபோதல், தன்னலமின்மை, உற்றோருக்கும் மற்றோருக்கும் உதவுதல் போன்ற பரந்த பண்பாட்டை பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் கைக்கொண்டு வருகின்றார்கள். அது அவர்களின் இரத்தத்தில் என்றுமே ஓடிக்கொண்டிருக்கும் மரபணுத் தாக்கத்தின் பாற்பட்டத எனத்துணிந்து கூறுலாம். அதனை நாம் நேரடியாகவே இன்றும் புலம்பெயர்ந்து வாழும் நாடான கனடாவில் காண்கின்றோம். அடக்கம் அமரருள் உய்த்துவிடும் என்பதற்கேற்றப அடக்கத்தோடும், பணிவோடும், நன்றிக் கடப்பாட்டோடும் வாழுகின்ற இனம் தமிழ் இனம், கனடாவில் பல்வேறு பண்பாட்டுக் கோலங்களோடு எமது தனித்துவத்தையும் நாம் விட்டுக்கொடுக்காதும் விட்டுக் கொடுக்கவேண்டிய சிலவற்றில் விட்டுக்கொடுத்தும் வாழுகின்ற பண்பு தமிழர்களிடம் இல்லை என்று யாராவது மறுத்துரைக்க முடியுமா? 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்றால் உண்மையில் நாமே எமது வாழ்வியலுக்கு முற்றுமுழுதான பொறுப்பை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றர்வள். தன்மானம் மிக்க இனம் தமிழ் இனம். ‘தமிழர் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கொரு குணம் உண்டு’ என்பது காலாகாலமாக நாம் பின்பற்றி, கைக்கொண்டு, போற்றி வருகின்ற வாழ்வியல் நெறிமுறைகள், மரபுகளை அடிப்படையாகக் கொண்டது.

‘துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் . . . "


என இளம்பெருவழுதி என்னும் சங்ககாலப் புலவர் தமிழரின் சிறப்பு நிறை பண்பை எடுத்துக் கூறுவதை நாம் கவனிக்கும் போது தமிழனின் வாழ்வு எத்தகையது, அவனது வாழ்க்கை நெறி எத்தகையது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதாவது சோம்பேறிகளாக இருப்பவன் தமிழன் அல்லன் பெருமைசேருமாயின் உயிரையும் கொடுப்பான் ஆனால் பழியுள்ள பொருட்களாயின் உலகத்தளவு பெரிதெனினும் கொள்ளமாட்டான் என்று குறிப்பிடும் உயரிய பண்புநெறி கொண்டது தமிழரின் வாழ்வு என்று கொள்ளக்கிடக்கின்றது. ஆனால் இன்றைய நிலையினை நோக்கும்போது தமிழன் இழிநிலைக்குச் சென்றுவிட்டானா? என எண்ணத்தோன்றுகின்றது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” எனப் பொருள் தேடி இல்லிருந்து சென்று வருபவன் தலைவன். வாழ்க்கைக்குப் பொருள் தேவை. அதனால் இன்பத்தை அடையலாம். அதற்காக அறநெறி பிறழ்ந்து பொருள் கொள்ளும் பண்பைத் தமிழர்கள் மேற்கொள்ளலாமா? எமது வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்படக் காரணிகள் என்ன? என்பதனை ஆராயவேண்டிய எமது வாழ்வியலைச் செப்பனிடவேண்டிய கட்டாய தேவை ஒன்று எம்முன்னே இருக்கின்றது. அதனைக் காணாது விட்டுவிடுதல் தமிழர் சால்பாகுமா? சிந்தித்துச் செயற்படவேண்டியது முக்கியமானது.

தமிழர்களின் சால்பில் படை, குடி, கோல், நாடு என்பன முக்கியம் பெறுகின்றன. நல்ல ஒழுக்கம் நிறைந்த மேன்மைமிக்க குடிமக்கள், நாட்டை எந்த இடரிலிருந்தும் பாதுகாப்பதற்கான நற்படை, நீதி தவறாத நெறிமுறை கொண்ட செங்கோல் ஓசச்சும் பூருண இறைமைமிக்க அரசு, வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டுள்ள நாட்டினையே சிறந்த நாடு எனப்போற்றினர் சான்றோர். தமிழர் சால்பில் மனுநீதி கண்ட சோழப் பெருமகனின் கதை தன்மகனையெ தேர்க்காலில் நெரியுண்டு இறக்க நீதியை நிலைநிறுத்தியவன் எமது வாழ்க்கை நெறிக்கு தக்க எடுத்துக் காட்டு. அது மட்டுமன்றி குற்றம் செய்தல் இயல்பு ஆனால் குற்றம் புரிந்தவன் அதனை உணர்ந்து கொண்டு தனக்கே தண்டனை அளிக்கும் பண்பும் நம்தமிழர்களிடையே நிலவி வந்துள்ளது. கொற்கைப் பாண்டியன் தனது கையையே துண்டித்துக் கொண்ட கதை இதனை உலகறியச் செய்கின்றது, தனது அவைப் புலவர் ஒருவர் வெளியூர் சென்ற வேளை அவரின் வீட்டிற்குப் பாதுகாப்பு வழங்க இரவுவேளை மாறுவேடத்தில் சென்ற அரசனின் காதில் புலவரின் வீட்டிலிருந்து ஆண் குரல்வரவே அவர் அந்தக் கதவில் தட்டியிருக்கின்றார். அங்கிருந்தது வேறு யாருமல்ல புலவர்தான் என்றதனை அறிந்ததும் தலைமறைவாகி விட்டார் அரசர். அரசரிடம் புலவர் முறையிட்டார். வீட்டுக் கதவில் தட்டிய கள்ளவனுக்கு என்ன தண்டனை என அரசன் வினவியபோது புலவர் இக்குற்றம் மீண்டும் நிகழாவண்ணம் அவனின் கையைத் துண்டிக்கவேண்டும் என்றார். அதன்படி தனது கையையே துண்டித்துக் கொண்டவன் கொற்கைப் பாண்டியன். இவையனைத்தும் தமிழரின் சால்பு. அதுமட்டுமன்றி

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யானுயிரென்ப தறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே”
(புறம்
-186)

என சங்கப் புலவர் மோசிகீரனாரின் பாடல்மூலம் வீரம் நிறைந்த தமிழரின் வாழ்வுமுறை சித்தரிக்கப்படுகின்றது. உயிருள்ளனவோ இல்லாதனவோ அனைத்தையும் ஒரே தன்மையில் மதிக்கின்ற பண்பு தமிழரிடம் காணப்பட்ட உயரிய பண்பாகும். கொழுகொம்பற்றி துவுண்டு கிடந்த முல்லைக்கொடிக்குத் தனது தேரையே விட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து நடந்தே சென்ற பாரிமன்னன். குளிர் நடுங்கி விறைத்துப்போயிருந்த மயிலுக்குத் தன்மேலாடையை எடுத்துப் போர்த்த மன்னன் பேகன் போன்ற மன்னர்களின் அறந்திறம்பத் திறத்தை வியக்காமல் விடலாமா?, அரசனை இடித்துரைக்கும் பாங்கு கொண்டவர்கள் சங்கப்புலவர்கள். அவர்கள் மன்னனிலும் மேலானவர்கள் என மதிக்கப்பட்டார்கள் என்றால் அக்காலச் சமுதாயத்தில் நிலவிய சமூக நிலை எத்துணை மாண்புபொருந்தியது என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

காதல் வயப்பட்டவனாக தனத தலைவியின் எண்ணம் மீதூரப்பெற்று விரைந்த வந்த தனது குதிரைகளின் மணியொலி தலைவி இருக்கும் மலர்ச்சோலைக்கண் தேனுண்டு மிழ்திருக்கும் பறவைகள் தனது குதிரைகள் எழுப்பும் மணியொலிக்குப் பயந்து நடுங்கும் என எண்ணித் தனது குதிரைகளின் மணியின் நாக்குக்களை ஒலியெழுப்பாது செய்துவிட்டு வருகின்றான் என்றால் அவன் எத்துணை கருணை உள்ளம் கொண்டவன் என்பதனை உணரமுடிகின்றது.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறுல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாணவிணைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்.
– குறுங்குடி மருதனார். (ஆகநா-
4)

தன்னுயிர்போல் மன்னுரையயும் மதித்தது வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்குச் சங்கச் சான்றாதாரங்கள் அநேகம் உள்ளன.


சாதி, சமய, ஏற்றத்தாழ்வற்ற வாழ்வியலைப் பண்டைய தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. தொழில் வயப்பட்ட பெயர்கள் நாளடைவில் அவர்களன் சாதியப்பெயராக மாற்றம் பெற்றமை சமதர்மத்திற்கு மாறாக அமைந்தவிட்டது. இந்தச் சாதிய அமைப்பிற்கு எதிராக சான்றோர் குரல் கொடுத்துள்ளனர். அதனை நாம் இன்றும் வள்ளுவரின் பொய்யா மொழியின் மூலமும், ஒளவையாரின் நீதி நெறிநூல்கள், எட்டுத்தொகை பத்துப்பாட்டுப் போன்றவற்றின் மூலமும் அறிகின்றோம்.

சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி –
(நல்வழி –ஒளவையார்)

என ஒளவையார் பாடியிருப்பது தமிழரின் வாழ்க்கை நெறிபற்றிய நிலைமையை எமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது. சாதி என்பது ஏது என்பதற்கு சாதி பேதமற்ற சமத்துவ சமூக அமைப்பினைக் கண்டவர்கள் தமிழர்கள் அவர்களின் பண்பாடு அத்தகைய நெறிமுறைகளைக் கொண்டுள்ளது என்பதனை மறுக்கமுடியுமா என ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும். அன்னியரின் தலையீடு காரணமாக எம்மவர்களிடையே சாதிகள் பொருளாதார மற்றும் தொழில் நிலை சார்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்று கனடிய மண்ணில் மட்டுமன்றி மேலைநாடுகளில் அருகிவருவதனை நாம் காண்கின்றோம். செய்யும் தொழிலே தெய்வம் எனப் போற்றி வாழ்ந்தவன் தமிழன். அந்தவழியில் வந்தநாம் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் இன்று சாதியத்தின் சாயல்கள் தகர்ந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். திருமண பந்தங்கள் சாதித்துவம் தாண்டி இன்று இடம்பெறுவது கனடிய மண் எம்மவருக்குப் புகட்டித்தந்த பாடமாகத்தான் கொள்ளவேண்டும்.

உலகில் கிடைக்கின்ற பண்டைய நீதி நெறி நூல்களில் முதன்மையானது வள்ளுவம். அது மனித வாழ்க்கைக்கான உயரிய ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது. ‘பொதுமறை’ என அழைக்கப்படுகின்றது. அறம், பொருள், இன்பம் என முப்பாலாக வகுத்து மொத்தமாக
1330 குறட்பாக்களில் மன்பதையின் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்து அழகாக இரத்தினச் சுருக்கமாகத் தந்தவர் திருவள்ளுவர். துமிழரின் வாழ்வியல் நெறிகளை அறிந்துகொள்ளவேண்டுமா நீங்கள் திருக்குறளைப் பாருங்கள். எக்காலத்திற்கும், எத்திறத்தினருக்கும் ஏற்புடையதாக வகுத்துநீதிநெறியினை இராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தந்து தமிழரின் பெருமையை அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளைத் தந்துள்ளார் எனின் தவறேது.

எனவே வள்ளுர் வாய்மொழி போற்றுகின்ற தமிழரின் வாழ்வியல் நெறிமுறை உலகில் சிறந்ததும் உயர்ந்ததும் என்பதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்|, 'யாதும் ஊரே யாவரும் கேளிர், 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே|, 'தீதும் நன்றும் பிறர்தர வாரா!, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”. ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களது பண்பாடு ஆரியரின் வருகையால் சிதைந்தது பல சாதி, பல தெய்வம் என்னும் அறியாமை தமிழரிடையே புகுந்துகொண்டது என்னனும் கருதுத்தும் இன்று உண்டு எனினும் அது தமிழர்களின் பண்பாடு அல்ல என்பதை தமிழர்கள் உணர்ந்துகொண்டனர். அதன்வழி வாழவும் தலைப் படுகின்றனர்.

குடும்பம் ஒரு கோயில் என்பது தமிழரின் வாழ்வியல் காட்டும் உன்னத நிலை. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குப் பரம்பரை பரம்பரையாக பழக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இன்றும் தமிழர்கள் ஒன்றாக முதியவர்களோடு வாழ்ந்துவருவதனை காண்கின்றோம். பிள்ளைகள் பெற்றோரை அவர்களது முதுமையிலும் மனங்கோணாது வாழ வழிசமைத்துக் கொடுக்கின்றனர். ஒரு சில புறநடைகள் இருப்பினும் எமது இளந்தலைமுறையினர் தங்களது பெற்றோரைப் போற்றியும் ஏற்றியும் வருவதனைக் காண்கின்றோம். அன்பையும் அறத்தையும் இல்வாழ்வில் போற்றிவருபவன் தமிழன், தனது பெற்றோரிடம் கற்றுக்கொண்ட பாடங்களைத் தனது பிள்ளைகளுக்கு தாய்ப்பாலோடு ஊட்டி வளர்ப்பவர்கள் பெற்றோர். இளமையில் தான் கற்றுக்கொண்டவற்றைத் தனது வாழ்க்கை முழுமையும் மறந்துவிடாது பின்பற்றும் பண்பு தமிழர்களுக்கு உண்டு. கனடாவில் வாழும் தமிழர்களிடமும் நாம் இந்தப் பண்புகளைக் காண்கின்றோம்.

எங்கு சென்றாலும் அந்தந்தச் சூழலுக்கேற்ப வாழ்ந்து வரும் பண்பைப் பெற்றுக்கொண்டு தனித்துவப் பண்புகளைப் போற்றித் தமிழர் சால்பையும் வாழ்வியல் விழுமியங்களையும் கைவிடாது வாழ்ந்து வரும் நெறிமுறை தமிழர்களிம் உண்டு. அதனை எமது எதிர்காலச் சந்ததியினருக்குத் தரவேண்டிய பொறுப்பு முதியோராகிய எம்மிடம் உண்டு. பரம்பரை பரம்பரையாக நாம் பின்பற்றி வந்த ஒழுக்க விழுமிங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் மறைந்துபோக விடலாகுமா? எப்படியாவது வாழ்ந்தால் போதும் என வாழலாகுமா?

'என்றுங் குன்றா அன்பின் விளைவாய்
அறத்தொடு புணர்ந்த காதல் வாழ்வே
களவுத் திணை _
(தொல்.பொரு. விளக்கம் நாவலர் சோமசுந்தரப் பாரதியார்.)

என தமிழரின் வாழ்வியலைப் போற்றுகின்றார் நாவலர் சோமசுந்தரப்பாரதியார். அதனை திருக்குறள் மிகச்சீரிதாகத் தருகின்றது.

'அறனீனும், இன்பமு மீனும், திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்' (
குறள் :
754)

எனும் குறளிற்காண்க. அறத்தொடு நின்று பாவழியிலன்றி நல்லமுறையிலே பொருளைத் துடிக்கொள்ளத் தலைப்பட்டால் அதனால் ஒரரு தததுன்பமமுமு; வந்ததுசேராதது மாறாக இன்பம் கிடைக்கும் அதனால்தான் பொருளிலார்க்கு இவ்வுலகில்லை என்றார் வள்ளுவர். ழிகாமப் பெருங்'காமம்' என்பற்கு அன்பென்றே நச்சினார்க்கினியர் பொருள் கொள்ளுதலுமறிக. இவ்வியலில் தலைவனைக் காமக்கிழவனெனக் கூறுதலும் இதனை வலியுறுத்தும். பொருளைச் சேர்ப்பதற்கும் அறவழியைப் பின்பற்றவேண்டும். வட்டிக்குப் பணம் கொடுக்காது மாண்பு சில சமயத்தவர்களால் பின்பற்றப்படுகின்றது. இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்துப் பின் பெற்றுக்கொள்ளுவது அறத்தின் பாற்படும். ஆனால் கொடுத்ததற்கு வட்டி, பின்னர் வட்டிக்கு வட்டி எனப் பொருளைப் பெருக்கிக் கொள்ளுவது பொருள் தேடுவது என்னும் பொருளைக் கொள்ளாது. அது மற்றவனின் உதிரத்தைச் சுரண்டுவதாக அமையும். அவ்விதம் கிடைக்கும் பொருள் இல்வாழ்வில் இன்பத்தைத் தராது. மாறாக துன்பந்தான் மிஞ்சும்;. இது தலைவன் தலைவியரிடையே மனமொத்த காதல் இன்பத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். எனவே அறத்தொடு பொருள் தேடுதல் இன்பத்திற்கு வித்தாக அமையும், வாழ்வில் மன உளைச்சல் இல்லாத பேராண்மையைத் தரும் என்பதனைத் தமிழர்’ வாழ்வியல் எமக்குப் புகட்டி நிற்கின்றது.