புதுக்கவிதையில் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கம்


பேராசிரியர் இரா.மோகன்


உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
'புதுக்கவிதையும் தமிழ் வளர்ச்சியும்'
கருத்தரங்கு:
03.10.2015


'தி
றந்த வெளிக் கவதை', 'விலங்குகள் இல்லாத கவிதை', 'கருத்துக்களை தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறை', 'சொற்கள் கொண்டாடும் சுதந்திர தின விழா', 'முரட்டுத் தோல் உரித்த பலாச்சுளை', 'வறட்டுக் கோஷா எறிந்த மங்கை', 'எண்ணத்தை அதன் பிறப்பிடத்திலேயே பிடித்துவிடும் கவிதை' என்றெல்லாம் அழைக்கப்பெறும் புதுக்கவிதை காலத்தின் கோலம்; தேவை; கட்டாயம். அது காலத்தைக் காட்டும் இலக்கியம்; காலத்திற்கு ஏற்ற இலக்கியம்; 'பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையி னானே' என்னும் விதிக்கு ஏற்பக் காலம் உரிய பருவத்தில் கணக்காகப் பெற்றெடுத்த படைப்பு. புதுக்கவிதையில் பழந்தமிழ் இலக்கியத்தின் - முன்னை மரபின் - தாக்கம் உண்டு; பின்னைப் புதுமைக் கூறும் உண்டு. பழம்புதுமை உண்டு; புதுப்பழமையும் உண்டு. மரபின் செழுமையும் புதுமை விழிப்பும் கொண்ட கவிதையே சிறந்த கவிதையாகும்; வேறு சொற்களில் கூறுவது என்றால், முன்னை மரபும் பின்னைப் புதுமையும் கைகுலுக்கிக் கொள்ளும் கவிதையே சீரிய கவிதையாகும். இக்கட்டுரை புதுக்கவிதையில் பழந்தமிழ் இலக்கியத்தின் தாக்கம் - முன்னை மரபின் தாக்கம் - இடம்பெற்றிருக்கும் பாங்கினை ஆராய முற்படுகின்றது. 'மரபு' என்ற சொல் 'கருத்து' அல்லது 'பொருள்' (ஊழவெநவெ) என்ற அடிப்படையில் இக்கட்டுரையில் ஆளப்பட்டுள்ளது. பேராசிரியர் கா.செல்லப்பன் குறிப்பிடுவது போல் 'மரபைப் பலர் சாதாரண நிலையில் ஏற்றுச் சென்று விடுகிறார்கள்; ஆனால் சிலர், அதை மாற்றி வளர்க்கிறார்கள்; சிலர், அதை மறுத்தும் வளர்க்கிறார்கள்' (இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும், ப.
14).

1). மரபினை மாற்றல்

மரபுக் கருத்தினைத் தற்காலப் போக்கிற்கு - உலக நடப்பிற்கு - ஏற்ற வகையில் மாற்றிப் பாடும் பாங்கினை இன்றைய புதுக்கவிஞர்களிடம் பரவலாகக் காண முடிகின்றது. இப் போக்கு முதலில் மரபுக் கவிதை எழுதிப் பிறகு புதுக்கவிதைக்கு மாறிய கவிஞர்களிடம் - இலக்கியப் பயிற்சியும் புலமையும் உடைய கவிஞர்களிடம் - மேலோங்கிக் காணப்படுகிறது.

' யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே'
(
40)

என்பது நல்ல குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள நயமான ஒரு பாடல். இப் பாடலில் இடம்பெற்ற சிறந்த உவமை காரணமாகப் பாடலை இயற்றிய புலவர் 'செம்புலப் பெயல் நீரார்' என்ற பெயராலேயே சுட்டப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகை என்றதுமே இலக்கிய ஆர்வலர் அனைவரது நினைவிலும் மோனையைப் போல் ஓடிவரும் இக் குறுந்தொகைப் பாடலின் அடிச்சுவட்டில் நவயுகக் காதலின் இயல்பினைத் தம் கவிதை ஒன்றில் திறம்படப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் மீரா. 'நவயுகக் காதல்' என்னும் தலைப்பில் அமைந்த அக் கவிதை இதோ:

' உனக்கும் எனக்கும் / ஒரே ஊர் / வாசுதேவ நல்லூர்...
நீயும் நானும் ஒரே மதம்... / திருநெல்வேலிச் சைவப்
பிள்ளைமார் வகுப்பும் கூட...
உன்றன் தந்தையும் / என்றன் தந்தையும் சொந்தக்காரர்கள் -
மைத்துனன்மார்கள்
எனவே / செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே'
(ஊசிகள், ப
.50)

ஊர் பார்த்து - உறவு பார்த்து, சாதி பார்த்து - மதம் பார்த்து, சொந்தம் பார்த்து - சொத்து பார்த்து உருவாகும் இன்றைய நவயுகக் காதலின் இயல்பினைச் சங்க காலத்துச் செம்புலப் பெயல் நீராரின் குறுந்தொகைப் பாடலின் அடிச்சுவட்டில் நறுக்கான ஒரு நையாண்டிப் போலி (Pயசழனல) வடிவில் படைத்துக் காட்டியுள்ளார் மீரா.

'யாண்டு பல ஆக, நரை சில ஆகுதல் யாங்கு ஆகியர்?' என வினவிய போது, 'மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர், யான் வாழும் ஊரே' (புறநானூறு, 191) என மறுமொழி கூறினார் சங்கச் சான்றோர் பிசிராந்தையார். சங்க காலத்து வாழ்க்கை நிலை, யாண்டு பல ஆகியும் ஒரு நரை கூடத் தோன்றாத அளவிற்கு அகத்திலும் புறத்திலும் மகிழ்ச்சி மிக்கதாக இருந்தது. மாண்பு பொருந்திய மனைவி - மக்கள், உள்ளக் குறிப்பறிந்து பணி புரியும் ஏவலர், நன்னடை நல்கும் வேந்தான், அரம் போலும் கூரிய அறிவும் மக்கட் பண்பும் ஒருங்கே பொருந்திய சான்றோர் ஆகியோரால் சூழப்பட்டு, அமைதியும் இன்பமும் களிநடம் புரிவதாக இருந்தது. ஆயின், இன்றைய வாழ்க்கைச் சூழலோ முற்றிலும் மாறி விட்டது. துன்பமும் தொல்லையும், சிக்கலும் போராட்டமும் மலிந்ததாக ஆகிவிட்டது. 'யாண்டு சில ஆக, நரை பல ஆகுதல் யாங்கு ஆகியர்?' எனக் கேட்கும் நிலை இன்று உருவாகிவிட்டது. 'இலிநரை' என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதையில் இந்நிலைக்கான காரணங்களைப் பட்டியல் இடுகின்றார் இன்றைய கவிஞர் சிவசக்தி.

' யாண்டு சிலவே ஆகியும் / நரை பல ஆகுதல்
யாங்கு ஆகியர் என / வினவுதிர் ஆயின்,
மாண்பிலா மனைவி / தறுதலைத் தனயர்
சுரண்டிடும் சுற்றம் / கடுஞ்சொல் மேலாளர்
நன்றியிலா நண்பர் / அரசியல் பேய்கள்
ஆகியோர் உறை காடு / யான் வாழும் நாடே!'

(இன்னமும் இனிக்கிறது, ப
.46)

நாம் வாழும் நாடு இன்று நாடாக இல்லை; மாண்பிலா மனைவி, தறுதலைத் தனயர், சுரண்டிடும் சுற்றம், கடுஞ்சொல் மேலாளர், நன்றி இல்லா நண்பர், அரசியல் பேய்கள் ஆகியோர் உறையும் காடாக விளங்குகின்றது. நாம் வாழும் வாழ்க்கையோ இன்று நல்வாழ்க்கையாக இல்லை; கவலையும் சிக்கலும் எந்நேரமும் குடி-கொண்டிருக்கும் 'சில்வாழ்க்கை' ஆகிவிட்டது. 'வரிசைப் பாட்டு' எனப் போற்றப்பெறும் சங்கச் சான்றோர் பிசிராந்தையாரின் ஆற்றல்சால் புறப்பாடலை இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மாற்றி நல்லதோர் நையாண்டிப் போலியாகப் (Pயசழனல) பாடியுள்ள புதுக்கவிஞரின் திறம் நனிநன்று. முரண்பாடுகளின் மொத்த உருவமாக மாறிவிட்ட இன்றைய வாழ்க்கைப் போக்கினைக் குறிப்பாகச் சுட்டும் வகையில் கவிதைக்கு 'இலிநரை' எனத் தலைப்பிட்டிருப்பதும் சிந்திக்கத் தூண்டுவதாகும்.

'முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே, அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே!' என்னும் பட்டினத்தாரின் பாடல் இன்றைய சமுதாயப் போக்கிற்கு ஏற்ப இரு புதுக்கவிதைகளாக மாற்றம் பெற்று வெளிவந்துள்ளது. 'முன்னை இட்ட தீ வியட்நாமிலே, பின்னை இட்ட தீ வெண்மணியிலே, மன்னையிட்ட தீ அடி வயிற்றிலே, நாமும் இட்ட தீ மூள்க மூள்கவே' என்பது 'புரட்சித் தீ' என்னும் தலைப்பில் ஏ.தெ.சுப்பையன் பாடிய கவிதை (முறையீடு, ப.
12). 'முன்னை இட்ட தீ அடிமை வாழ்விலே, பின்னை இட்ட தீ தேயிலைத் தோட்டத்திலே, இன்னும் இட்ட தீ இன வெறுப்பிலே, அன்னை லங்கையின் ஆத்மா வேகுதே! புத்தம் கரணம் கச்சாமி, தருமம் மரணம் கச்சாமி, சங்கம் வரணும் கச்சாமி!' என்பது 'கண்ணீர்த்துளித் தீவு' என்னும் தலைப்பில் சிற்பி பாடிய கவிதை (புன்னகை பூக்கும் பூனைகள், ப.103). பட்டினத்தார் புராண நோக்கில் (முப்புரம், தென் இலங்கை) தீயைப் பாட, சுப்பையனும் சிற்பியும் சமுதாய நோக்கில் (வியட்நாம், வெண்மணி, புரட்சித்தீ, அடிமை வாழ்வு, இனவெறுப்பு, சங்கம்) தீயைப் பாடியுள்ளனர். பார்வையில் - பாடுமுறையில் - முனைப்பான வேற்றுமை காணப்படினும் 'தீயிடல்' என்ற அடிப்படையில் மூன்று கவிஞர்களும் ஒன்றுபடக் காண்கிறோம்.

2). மரபின் தூண்டுதலால் படைத்தல்

முன்னைய மரபின் தூண்டுதலால் பிறக்கும் புதுக்கவிதைகளும் உண்டு. 'ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய், இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய், ஒரு நாளும் என்நோவு அறியாய், இடும்பை கூர் நல்வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது' என வயிறு படுத்தும் பாட்டை - வயிற்றால் மனிதன் படும் பாட்டை - பாடினார் அன்றைய ஒளவையார். ஒளவையாரின் இந் 'நல்வழி'ப் பாடலின் சாயலில் ஷண்முக சுப்பையா என்னும் இன்றைய கவிஞர் 'வயிறு' என்ற தலைப்பில் ஒரு புதுக்கவிதை பாடியுள்ளார். அக்கவிதை வருமாறு:

' தலையைச் சொறி! / நாக்கைக் கடி!
பல்லை இளி! / முதுகை வளை!
கையைக் கட்டு! / காலைச் சேர்!
என்ன இது? / வயிற்றைக் கேள்,
சொல்லுமது!'
(ஷண்முக சுப்பையா கவிதைகள், ப.
59)

மனிதன் தன் வயிற்றுப்பாட்டிற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது! தலையைச் சொறிந்து, நாக்கைக் கடித்து, பல்லை இளித்து, முதுகை வளைத்து, கையைக் கட்டி, காலைச் சேர்த்து, வாயைப் பொத்தி எப்படியெல்லாம் வாழ வேண்டியிருக்கிறது! இந்தக் கசப்பான உண்மையை ஷண்முக சுப்பையாவின் கவிதை நயமாக எடுத்துக்காட்டுகின்றது. ஒரு சாண் வயிறு, ஆறறிவு படைத்த மனிதனைப் படுத்தும் பாட்டைப் பாடுவதில் இரு கவிஞரும் ஒத்துச் செல்கின்றனர்.

3). மரபை வளர்த்தல்

இன்றைய புதுக்கவிதைகள் பழந்தமிழ் இலக்கிய மரபை வளர்ப்பதிலும் சிறந்து விளங்குகின்றன. கவிஞர் அப்துல் ரகுமானின் 'கண்ணும் எழுதேம்' என்ற கவிதை இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

'கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும், எழுதேம் கரப்பாக்கு அறிந்து' என்பது காமத்துப் பாலில் வரும் ஒரு குறள்
(1127). 'எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார்; ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுத மாட்டோம்!' எனத் திருவள்ளுவர் படைக்கும் காதலி ஒருத்தி தான் கண்களில் மை தீட்டாமைக்கு ஒரு நுட்பமான - கற்பனை நயம் வாய்ந்த - காரணத்தினைக் கூறுகின்றாள். அப்துல் ரகுமான் படைக்கும் காதலியோ தான் கண்களில் மை தீட்டாமைக்கு ஆறு காரணங்களை அழகாக அடுக்கிக் கூறுகின்றாள். அவளது வாய்மொழி வருமாறு:

' 1. கண்ணுக்குள் என் / காதலர்;
அவர் முகத்தில் / கரி பூசலாமா?
2. என் சூரியன் மீது / இருட்டைத் தடவுவதோ?
3. வீட்டிற்குள்ளே அவர்; / வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம்?
4. அவரையே தீட்டி / அழகு பெற்ற கண்ணுக்கு
மையலங்காரம் / வேண்டுமா?
5. கண்ணை விட மென்மையானவர் / காதலர்
கோல் பட்டால் வலிக்காதா?
6. அவரை வைத்த இடத்தில் / வேறொன்றை வைப்பது
கற்புக்கு இழுக்கல்லவா?' (நேயர் விருப்பம், பக்.89-90)

இங்ஙனம் மரபை வளர்க்கும் பாங்கில் அமைந்த புதுக்கவிதைகள் பல உள்ளன.

4). மரபினைப் புதுக்கல்

கவிக்கோ அப்துல் ரகுமானின் கண்ணோட்டத்தில் சிலப்பதிகாரம், 'பால் நகையாள் வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகி தன் கால் நகையால், வாய்நகை போய், கழுத்து நகை இழந்த கதை' (நேயர் விருப்பம், ப.
91).

இயல்பான நகைச்சுவை உணர்வு கொலுவிருக்கும் ஓர் அற்புதமான புதுக்கவிதை பெ.சிதம்பரநாதனின் 'மாமனாரும் சிலப்பதிகாரமும்'. ஒரு மாமனாரின் பார்வையில் சிலப்பதிகாரம் உணர்த்தும் செய்தி (ஆநளளயபந) எதுவாக இருக்கும்? இதோ, கவிஞரின் சொற்களிலேயே அக் கவிதை:

'கிளை முறிந்து விழுந்தது போல / கோவலன் தலை முறிந்து விழுந்தது.
நெடுமரம் போல திடுமென / நெடுஞ்செழியன் சாய்ந்தான்.
கூவியழுத கோப்பெருந்தேவியும் / உயிர் பிரிந்தாள்.
கண்ணகியோ விண்ணுலகு விரைந்தாள்; / மாதவியோ மகளோடு
சந்நியாசியானாள்.'


கோவலன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டது, தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் மாண்டது. கோப்பெருந்தேவியும் உடனே உயிர்-விட்டது, கண்ணகி விண்ணுலகு சென்றது, மாதவி தன் மகள் மணிமேகலையோடு துறவு பூண்டது ஆகிய துயர நிகழ்வுகள் எல்லாம் அடுக்கடுக்காக, அடுத்தடுத்து எதனால் நிகழ்ந்தன என மாமனார் தன் மருமகனிடத்தில் இப்படி விளக்குகிறாராம்:

' எல்லாம் எதனால் என்று
மருமகனிடத்தில் மாமனார் விளக்கினார்:
'மனைவியின் நகையை விற்றதால் தானே?''

(அரண்மனைத் திராட்சைகள், ப
.21)

நியாயமான கேள்விதான் இது! ஆயிரம் தான் இருந்தாலும் நகை மாமனார் அரும்பாடு பட்டுத் தேடிய செல்வத்தில் செய்து போட்டது அல்லவா? மாமனாரின் பார்வையே தனிப்பட்டது தான்! அவர் சிலப்பதிகாரத்தை அணுகும் முறையே அலாதி தான்! கவிஞர் சிற்பி குறிப்பிடுவது போல, 'தரமான நகைச்சுவையைக் கவிதையில் தரும் போதே அதன் அடியாழத்தில் சமூக அவலங்களின் குரூரத்தையும் கலந்து கொடுக்கும் திறன் கவிஞர் சிதம்பரநாதனைத் தனிமைப்படுத்திக் காட்டுகின்றது'.

5). மரபின் சாயலில் படைத்தல்

'புதுக்கவிதை' என்று அழைக்கப்பட்டாலும், அதில் பழந்தமிழ் இலக்கியத்தின் - முன்னைய மரபின் - தாக்கம் அல்லது சாயல் படிந்திருக்கவே செய்கின்றது. மரபைப் புறக்கணித்த அல்லது மீறிய புதுக்கவிதைகளை விட, மரபினைத் தழுவி அல்லது மரபின் அடியில் மலர்ந்த புதுக்கவிதைகளே மிகவும் சிறந்து விளங்குகின்றன. வேறு வகையாகவும் இக் கருத்தை விளக்கலாம். இன்று புதுக்கவிதைத் துறையில் பெயரும் புகழும் பெற்றிருக்கும் கவிஞர்களுள் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் மரபுக் கவிதை எழுதியவர்களே ஆவர். நா.காமராசன், மீரா, மு.மேத்தா, அப்துல் ரகுமான், தமிழன்பன், சிற்பி முதலானோர் இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

பழந்தமிழ் இலக்கியத்தின் சாயலில் புது வண்ணத்தில் பாடும் பாங்கினையும் இன்றைய புதுக்கவிஞர்களிடம் சிறப்பாகக் காண முடிகின்றது. இக் கருத்தினை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம்.

'ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்,
     ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்;
வாடக் காண்பது மின்னார் மருங்கு,
   வருந்தக் காண்பது சூலுளை சங்கு;
போடக் காண்பது பூமியில் வித்து,
     புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து;
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி,
     திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே'


எனத் திருக்குற்றாலக் குறவஞ்சியில் வரும் குறத்தி, பாட்டுடைத் தலைவியான வசந்தவல்லியிடம் தன் நாட்டு வளம் கூறுவாள் (பா.
9).

கவிஞர் தமிழ்நாடன் இக்குறவஞ்சிப் பாடலின் அமைப்பினை எடுத்துக் கொண்டு, இன்றைய நாட்டு நடப்பைப் பாடற் பொருளாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளார். 'கு(ற்)றவஞ்சி' என்னும் தலைப்பில் அமைந்த அக்கவிதை வருமாறு:

' ஓடக் காண்பது / என்னவர் மானம்
ஒடுங்கக் காண்பது / ஒரு ஜான் வயிறு
வாடக் காண்பது / தேசீய உணர்வு
வருந்தக் காண்பது / விடுதலை வீரர்
போடக் காண்பது / ஜால்ரா குல்லாய்
புலம்பக் காண்பது / தேர்தலில் தோற்றோர்
தேடக் காண்பது / உழைக்காத செல்வம்
திருடர் மலிந்த / நவபாரத நாடே...'
(மண்ணின் மாண்பு, ப
.2)

திரிகூடராசப்பக் கவிராயரின் குறவஞ்சிப் பாடலையும், தமிழ்நாடனின் புதுக்கவிதையையும் ஒருங்கு வைத்து ஆராயும் போது, பழந்தமிழ் இலக்கியக் கருத்து காலச் சூழலுக்கு ஏற்பப் புதுமை வண்ணத்தை - வனப்பை - ஏற்றுக் கொள்ளும் பாங்கினை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

6). மரபினை மீறல்

இன்றைய புதுக்கவிஞர்கள் தேவை ஏற்படின் மரபினை மீறுவதற்கும் தயங்குவதில்லை. அவர்கள் நோக்கில் மரபு என்பது படைப்பு மனத்தைக் கட்டுப்படுத்தும் தளையன்று; மரபினைச் சிறகாகக் கொண்டு, தேவைப்படின் மரபினை மீறி, உயரப் பறக்கவும் அவர்கள் தவறுவதில்லை. காட்டாக, இன்றைய புதுக்கவிதையில் தாலாட்டுகள் இடம்பெறும் பாங்கினைச் சுட்டலாம்; அவற்றில் தாலாட்டின் பழைய மரபுகள் மீறப்பட்டு, புதிய நோக்கில் சமூக உணர்வோடு பாடும் போக்கு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

கவிஞர் வைரமுத்து படைக்கும் தாய் ஒருத்தி தன் மகனுக்கு 'வித்தியாசமான ஒரு தாலாட்'டைப் பாடுகின்றாள். 'தப்பிப் பொறந்தவனே, தரித்திரமே, வெறும் பயலே!' எனக் குழந்தையை விளித்துப் பேசுகிறார் கவிஞர் புவியரசு. இங்கே குழந்தையின் அருமையையும் அழகையும் போற்றுதல் என்ற பழைய தாலாட்டுப் பாடல் மரபு மீறப்பட்டுள்ளது. முன்னைய தாலாட்டுகள் சீரும் சிறப்பும் மிக்க தாய் மாமனைக் காட்ட, இன்றைய தாலாட்டுக்களோ 'சல்லிக்காசும் சம்பளமாய் வாங்காத மாம'னை அறிமுகம் செய்கின்றன (அறிவுமணி, கறுப்பு மை, சிவப்பு எழுத்து, ப.
72).

7). புதிய மரபினை உருவாக்கல்

சங்க இலக்கியம் தலைமக்களுக்கே முதன்மை இடத்தினைத் தந்தது; அடியோர், வினைவலர் முதலானவர்களைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. காப்பிய இலக்கியமும் தன்னேரிலாத் தலைவனுக்கே சிறப்பிடம் தந்தது. சமய இலக்கியமோ எல்லாம் வல்ல இறைவனையே போற்றிப் புகழ்ந்ததோடு, 'மானுடம் பாடேன்' என்றும் அறிவித்தது. பதினேழாம் நூற்றாண்டில்தான் இலக்கியம் மக்களை நோக்கி நடைபோடத் தொடங்கியது. குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம் முதலான இலக்கியங்கள் எளிய நிலையில் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுந்தன. இருபதாம் நூற்றாண்டின் விடியலிலே பாரதியார், 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு' ஆகியவற்றை உடைய பாடல்களைப் புனைந்து தமிழ் மொழிக்குப் புதிய உயிரையும் ஊட்டத்தையும் தந்தார். இச்சூழலில் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய புதுக்கவிதை சாதாரண மனிதர்களின் சாதாரண உணர்ச்சிகளுக்கும் இடம் தந்தது; அவற்றுக்குக் கவிதை மதிப்பினையும் கலை வடிவினையும் தந்து வெளியிட்டது. 'எவரும் பாட்டுடைத் தலைவராக இருக்கலாம், எதுவும் பாடுபொருளாக அமையலாம்' என்னும் ஒரு புதிய மக்களாட்சி முறையினை - 'அழகை மட்டுமல்ல, அழுக்கையும் மூடி மறைக்காமல் கலை நயத்துடன் வெளியிடலாம்' என்னும் செல்நெறியினை (வுசநனெ) புதிய போக்கினை - இலக்கிய உலகில் தோற்றுவித்தது புதுக்கவிதையே ஆகும். இங்ஙனம் பாடுபொருளில் புதுமையைப் புகுத்தியதோடு, பாடும் முறையிலும் புரட்சியை நிகழ்த்தியது.

 புதுக்கவிதை.

மரபுக் கவிஞர்கள் அழகைப் பாடினார்கள்; அழகை அழகாகப் பாடினார்கள்; அழகுக்கு அழகு சேர்த்தார்கள். இன்றைய புதுக்கவிஞர்களோ அழுக்கைப் பாடுகிறார்கள்; அழுக்கையும் அழகாகப் பாடுகிறார்கள்.

' அழகா யில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகி விட்டாள்'
(மற்றாங்கே, ப.
6)
என்னும் கலாப்பிரியாவின் புதுக்கவிதை மனித மனத்தின் அழுக்கை - சிறுமையை - வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

'கருப்பு வளையல் / கையுடன் ஒருத்தி
குனிந்து வளைந்து / பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு / மனசு குப்பையாச்சு'
(புலரி, ப
.27)

என்னும் கல்யாண்ஜியின் புதுக்கவிதையும் இவ்வாறே மனித மனத்தின் இழிந்த மூலையை - இருண்ட பக்கத்தை - படம்பிடித்துக் காட்டுகின்றது.
'மங்கல அணி' என்றும், 'ஈகையரிய இழையணி' என்றும் முன்னை இலக்கியங்கள் மாங்கல்யத்தை - தாலியை - போற்றும். கவிஞர் தமிழன்பன் 'அவனே அறிவான்' என்னும் தம் கவிதையில்,

' மாங்கல்ய மகிமையை / மனைவி அறிவாள்;
மணவாளன் அறிவான் / இவர்கள் இருவரை விட
மார்வாடியே / அதிகமாய் அறிவான்' (தோணி வருகிறது,
ப.
95)

எனப் புதிய கோணத்தில் - நடப்பியல் பாங்கில் - 'மாங்கல்யத்தின் மகிமை'யை உணர்த்துகிறார்.

'பழமை இருந்த நிலை நன்கறிவார்!'

'பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை - கிளியே பாமரர் ஏதறிவார்?' என நடிப்புச் சதேசிகளைப் பழித்தறிவுறுத்துப் பாடுவார் பாரதியார். மரபின் செழிப்பும் புதுமையின் விழிப்பும் ஒருங்கே கொண்ட கவிதைகளைப் படைக்கும் இன்றைய புதுக்கவிஞர்கள் - பழமை, பழமை என்று பாவனை பேசுவதில்லை; அவர்கள் பழமை இருந்த நிலையை நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாரார், சாதாரண நிலையில் பழமையை ஏற்றுப் போற்றுகிறார்கள்; மற்றொரு சாரார், இன்றைய சூழலுக்கு ஏற்பப் பழமையை மாற்றிப் புதுக்கி வளர்க்கிறார்கள்; இன்னொரு சாரார், பழமையை மறுத்தும் - மீறியும் - வளர்க்கிறார்கள். கவிஞர் தணிகைச் செல்வனின் 'பழசும் புதுசும்' என்ற கவிதையோடு இக்கட்டுரை நிறைவு பெறுவது பொருத்தமாக இருக்கும்.

'பழத்தை யாருக்குக் / கொடுப்பது என்று
பார்வதிக்கும் பரமனுக்கும் / திண்டாட்டம் வந்ததால்
புதுக்கவிதைக்கும் / மரபுக் கவிதைக்கும்
பந்தயம் வைத்தார்கள்; / 'மரபு' மயில் வாகனமேறி
உலகைச் சுற்றி வந்து / பார்த்த போது
'புதுசு' பழத்தைச் / சாப்பிட்டுக் கொண்டிருந்தது'
(பூபாளம், ப.
74)
 

பேராசிரியர் இரா.மோகன்
'அறிவகம்'
78/1, ஆழ்வார் நகர்
நாகமலை
மதுரை
625 019.