ரெ.கார்த்திகேசுவின் ‘விமர்சன முகம்’

பேராசிரியர் இரா.மோகன்


முனைவர் ரெ.கார்த்திகேசு இலக்கியக் கருத்தரங்கக் கட்டுரை


‘ரெ.கா.’ என்னும் ஈரெழுத்துக்களால் மதிப்போடும் மரியாதையோடும் அழைக்கப்பெறும் ரெ.கார்த்திகேசு பன்முக ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்ட ஓர் ஆளுமையாளர்; சிறுகதை எழுத்தாளர், புதினப் படைப்பாளி, திறனாய்வாளர், வானொலி ஒலிபரப்பாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர் என்றாற் போல் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றவர் அவர். ஒருவர் படைப்பாற்றலும் திறனாய்வு நோக்கும் ஒருங்கே கைவரப் பெற்றவராக விளங்குவது என்பது அரிதினும் அரிது. இவ் வகையில் ரெ.கார்த்திகேசு டி.எஸ்.எலியட்டைப் போல படைப்பாற்றலும் திறனாய்வு நோக்கும் சிறந்து விளங்கும் ஓர் ஆற்றலாளராக விளங்குகிறார். இக் கட்டுரை ரெ.கார்த்திகேசுவின் பன்முகங்களுள் ஒன்றான ‘விமர்சன முக’த்தின் தரத்தினையும் திறத்தினையும் அடையாளம் காணவும் காட்டவும் முற்படுகின்றது.



தீவிரமான அறிவுப் பயணம்


“ குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்”
(
514)

என்னும் வள்ளுவர் வாக்கு ஒரு வகையில் திறனாய்வுக் கலைக்கும் பொருந்தி வருவதே ஆகும். ஒரு தேர்ந்த திறனாய்வாளர் முதலில் ஒரு படைப்பில் துலங்கும் குணங்களையே நாடுவார்; பிறகு அதில் காணப்படும் குற்றங்களைக் காண்பார்; இரண்டிலும் எது மிகையாக உள்ளது என்று சீர்தூக்கிப் பார்த்து, முடிவாக அப் படைப்பினைப் பற்றிய தம் மதிப்பீட்டினை எடுத்துரைப்பார். “எனது விமர்சனங்கள் குறை கூறும் முயற்சிகள் அன்று. அவை பெரும்பாலும் படைப்புக்களை விளக்குவன தான். ஓரிரு இடங்களில் தவிர்க்க முடியாமல் நான் குறை கூறியிருந்தாலும் அது அந்தப் படைப்பின் நோக்கத்தை முழுமைப்படுத்துவதற்காகத் தான் நிகழ்ந்திருக்கும்” (முன்னுரை, விமர்சன முகம் –
2, p.iv) என்னும் ரெ.கார்த்திகேசுவின் ஒப்புதல் வாக்குமூலம் இங்கே நினைவுகூரத் தக்கதாகும். மேலும், விமர்சனம் என்பது ரெ.கார்த்திகேசுவின் கருத்தியலில் ஒரு தீவிரமான அறிவுப் பயணம்; மனத்தையும் அறிவையும் விரிவு படுத்தும் ஒரு பயனுள்ள செயல். இதனை, “சிறந்த படைப்புகளின் நுணுக்கங்களைக் கண்டுபிடித்துச் சொல்வதென்பது ஒரு தீவிரமான அறிவுப் பயணம் ஆகிவிடுகிறது. படைப்பின் பரிமாணங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து புரிந்து கொள்ளும் போது என் மனமும் அறிவும் விரிவடைவதையும் நான் காண்கிறேன். ஆகவே விமர்சனம் என்பது எனக்குப் பயனுள்ள ஒரு செயல் என்றே தெரிகிறது” (முன்னுரை, விமர்சன முகம், ப.4) என்னும் அவரது கூற்று தெளிவுபடுத்தும்.

‘விமர்சன முகம்’ என்னும் தலைப்பில் ரெ.கார்த்திகேசுவின் இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன; இவற்றில் கட்டுரைகள், விமர்சனங்கள், முன்னுரைகள், மனிதர்கள், கடிதங்கள், நேர்காணல்கள் என்னும் உட்பிரிவுகளில் மொத்தம் 68 கட்டுரைகள் (முதல் தொகுப்பில் 30, இரண்டாம் தொகுப்பில் 38) இடம் பெற்றுள்ளன. இனி, இக் கட்டுரைகளில் விளங்கும் நயங்களும் நுட்பங்களும் குறித்து இங்கே சுருங்கக் காணலாம்.


விமர்சனத்தின் அடிப்படை ஆழ்ந்த, இனிமையான வாசிப்பு அனுபவம்


‘வான் கலந்த மாணிக்க வாசக, நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்...’ என்பாரே வள்ளலார், அது போல் எந்தப் படைப்பையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து பயிலும் போது தான் அதன் தரமும் திறமும் தெற்றென விளங்கும். ஒரு திறனாய்வாளரிடம் இருக்க வேண்டிய அடிப்படையான, தலையாய பண்பு இது. இப் பண்பு ஒரு திறனாய்வாளார் என்ற முறையில் ரெ.கார்த்திகேசுவிடம் சிறந்து காணப்படுகின்றது.

இரா.முருகனின் ‘மூன்று விரல்’ நாவலை ‘இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்’ எனக் கலை நயத்துடன் சுட்டும் ரெ.கார்த்திகேசு, “‘மூன்று விரல்’ நாவல் படித்து முடித்தது ஒரு ரசனையில் தோய்ந்த அனுவம்” (விமர்சன முகம்
-2, ப.60) எனத் தம் விமர்சனக் கட்டுரையைத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் அளித்த சுவையான வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையிலேயே நாவலைப் பற்றிய தம் கண்ணோட்டத்தினைக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார் ரெ.கார்த்திகேசு.

“பீர் (சை.பீர் முகமது) உற்சாகமான மலேசிய இலக்கியவாதி. மலேசியத் தமிழ் இலக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். அவர் பரபரப்பூட்டும் இலக்கியவாதியும் கூட. எந்தக் கூட்டத்திலும் அவர் குரல் ஆதரித்து ஒலிக்கும் அளவுக்கு எதிர்த்தும் ஒலிக்கும். ஆக்கம் ஊட்டுவது ஒரு பக்கம் என்றால் கலகம் செய்வதும் ஒரு பக்கம். ஆனால் அனைத்துமே மலேசியத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வத்தில் செய்யப்படுபவை...” (விமர்சன முகம்-
2, ப.67) என சை.பீர்முகமதுவின் படைப்பாளுமை குறித்து ஒரு கட்டுரையில் மதிப்பிடும் ரெ.கார்த்திகேசு, “தமிழ் நவீன இலக்கியம் என்னும் பெருங்கடலில் பெரிய மீன்களுக்-கிடையே சுதந்திரமாக நீந்திக் களிக்கும் இந்த நெத்திலி மீனை எனக்கு மிகவும் பிடிக்கிறது” (ப.70) என பீர் முகமதுவின் நூல் பற்றிய தம் விமர்சனத்தைக் கலையழகு மிளிரும் வரிகளுடன் முடித்திருப்பது முத்தாய்ப்பு.

“மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு இளஞ்செல்வனின் அளிப்புகள் மிக முக்கியமானவை” (ப.
108).

“நா.கோவிந்தசாமி சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கையின் ஒரு முக்கிய அடையாளம். அவருடைய ஆளுமை பன்முகத் தன்மை கொண்டது” (ப.
109).

“மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் வெகு காலத்திற்கு முன்னாலேயே தமிழ்-நாட்டோடு இருந்த தொப்புள் கொடியை அறுத்துக் கொண்டு தங்கள் சுய அடையாளங்களைப் பெறத் தொடங்கின என்பதற்கு சாரதா கண்ணனின் எழுத்துக்கள் நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகலாம்” (ப.
136).

“செ.கோபாலன் நல்ல எழுத்தாற்றலும் சமுதாயப் பார்வையும் உடையவர். அவரால் மிக்க நல்ல கதைகளை எழுத முடியும். தொடர்ந்து எழுதி, தன் கதை சொல்லும் ஆற்றலை மெருகு படுத்திக் கொள்வதும் எழுதும் கருப்பொருள்களைப் பலவகைப்படுத்துவதும் முக்கியம்” (விமர்சன முகம், ப.
80) - என்றாற் போல் இரத்தினச் சுருக்கமான மொழியில் – ஓரிரு வரிகளில் – தமது நேரிய விமர்சனத்தைப் பதிவு செய்யும் வல்லமை படைத்தவராகத் திகழ்கிறார் ரெ.கார்த்திகேசு.


மாற்றுக் கருத்துக்களுக்கு எதிர்வினை ஆற்றுவதில் நயத்தக்க நனிநாகரிகம்


ரெ.கார்த்திகேசு மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்வதில் காட்டும் நயத்தக்க நாகரிகம் இங்கே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவ் வகையில் மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம் குறித்துத் தமிழவனுக்குக் கடித வடிவில் அவர் தந்திருக்கும் மறுமொழி சிந்திக்கத் தக்கது. அது வருமாறு:

“புத்திலக்கியத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை தமிழ்நாட்டு இலக்கியத்தின் கருப்பொருள்களிலிருந்து நாங்கள் தொப்புள் கொடியறுத்துக் கொண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன... அவருக்கு (தமிழவனுக்கு) எங்கள் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளும் வேட்கை இருக்குமானால் இந்த மண்ணிலேயே பிறந்து இந்த மண்ணிலேயே தமிழ் படித்து இந்த மண்ணின் இயல்போடு தமிழில் நீண்ட நாள் எழுதிக் கொண்டிருக்கும் இந்த எளிய எழுத்தாளனோடு தொடர்பு கொள்ள வேண்டுகிறேன் (விமர்சன முகம்
-2, பக்.194-195).

இங்ஙனம் மாற்றுக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றுவதோடு நின்று விடாமல், ‘மலேசியத் தமிழ் இலக்கியம் என்பது துடிப்பானதும் வளமானதுமாக இருந்து வருகிறது’ என்னும் தம் கருத்தினை நிலைநாட்ட வேண்டும் என்பதில் ரெ.கார்த்திகேசு காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும், உறுதியையும் முனைப்பையும் இவ் வரிகள் நன்கு வெளிப்படுத்தி நிற்பது நெற்றித் திலகம்.


நல்ல எழுத்தில் இருக்க வேண்டிய விழுமியங்கள்


ரெ.கார்த்திகேசுவைப் பொறுத்த வரையில் தமது ஆழ்ந்த, நெடிய அனுபவத்தின் ஒளியில் பெரிதும் போற்றும் விழுமியங்கள்
(values) இரண்டு. ஒரு நேர்காணலில் அவரே அவற்றைக் குறித்துள்ளார்:

“எழுத்தில் இரு விழுமியங்கள் இருக்க வேண்டும். முதலாவது இன்புறுதல். இங்கு எழுத்தால் துன்புறுதலும் இன்புறுதலே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கதை படித்து அழுத பின்னர் ‘நல்ல கதை’ என்று சொல்கிறோமல்லவா! இரண்டாம் விழுமியம் மனதை உயர்த்துதல். வாழ்க்கையில் நம்பிக்கையுறச் செய்தல். இது இரண்டையும் வைத்துக் கொண்டு ஜெகஜாலப் புரட்டுக்கள் செய்யலாம்” (விமர்சன முகம்-
2, ப.220).

எழுத்து என்பது வாசகர் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக
(Simplification) இருப்பதோடு, சில வேளைகளில் ஒரு சொகுசு மொழியும் (Sophistication) தேவை தான் எனக் கருதுகின்றார் ரெ.கார்த்திகேசு. இன்னமும் கூர்மைப்படுத்திக் கூற வேண்டும் என்றால், அவரது பார்வையில் “எழுத்தாளன் வாசகனின் மட்டத்துக்கு வருவது பெரும்பாலும் தேவை; வாசகனை எழுத்தாளனின் உயரத்துக்கு உயர்த்துவதும் சில சமயங்களில் தேவை” (விமர்சன முகம்-2, ப.221).

ரெ.கார்த்திகேசுவின் நோக்கில், விமர்சனம் என்பது ‘விமர்சினமாக’ ஆகிவிடக் கூடாது; ‘தனி மனிதர் தாக்குதலிலும் தூற்றலிலும் ஈடுபடக்கூடாது’ (விமர்சனம்-
2, ப.224). இதே போல, ஒரு நல்ல படைப்பாளியின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் ரெ.கார்த்திகேசுவுக்கு ஆழ்ந்த கருத்து உள்ளது. ஒரு நல்ல எழுத்தாளர் என்பவர், ‘தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். பிறருக்குத் தீமை செய்யாதவராக இருக்க வேண்டும்... தமது வாசகர்களுக்கு அவர் ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தை வழங்க வேண்டும்’ (விமர்சன முகம்-2, ப.230).

நிறைவாக...

‘விமர்சன முகம்’ என்னும் இரு தொகுப்பு நூல்களின் வாயிலாக தமது நீண்ட, நெடிய படைப்பு மற்றும் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் ரெ.கார்த்திகேசு படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் முன்மொழிந்துள்ள வழிகாட்டுதல்கள் வருமாறு:

  • 1. நம் இலக்கியத்திற்குப் புதிய போர்க் களங்கள் தேவை: நம் இலக்கியத்திற்கு இனிப் புதிய பாதைகள் வேண்டும். மனித உள்ளத்தின், மனித சமுதாயத்தின் உள்ளார்ந்த, நயமான பகுதிகளைப் பார்த்து, புதிய ஆழங்களை அது தொட வேண்டும்.

  • 2. சமுதாய நடப்புகளையும் அவற்றின் அவலங்களையும் புதுக்கவிதை நன்றாகச் சொல்ல முடியும்.

  • 3. சொல்லித் தெரிய வைப்பதை விட, சொல்லாமல் தெரிய வைப்பது நல்ல கவிதை.

  • 4. தமிழில் புதியதாக வந்து சேர்ந்திருக்கும் இலக்கியச் செல்வங்களில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதும் தமிழ் இலக்கிய விமர்சகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருப்பதும் புலம் பெயர்ந்தோர் இலக்கியமாகும்.

  • 5. புலம் பெயர்ந்தோரின் இலக்கியப் படைப்புகளில் கவிதைகள் மிகக் காத்திரமானவையும் உக்கிரமானவையும் ஆகும்.

  • 6. நல்ல நமக்களிக்கும் உன்னதமான வாசிப்பு அனுபவத்தில் ஒரு முக்கியக் கூறு, தேடல். ஏதாகிலும் ஒரு தேடல் இருந்தால்தான், அந்த நாவல் நல்ல ஆன்மாவை உடையதாக இருக்கிறது.

  • 7. புத்தகங்களை உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். மனித நண்பர்கள் உங்களைக் கைவிட்டாலும் புத்தக நண்பர்கள் கைவிட மாட்டார்கள்.
    (விமர்சன முகம், பக்.
    27; 45; 52; 139; 150; 190; 35).

  • 8. நிறைவாக, ‘குறுகத் தரித்த குறளின் சொற்கூர்மை, தாம் ஆளும் சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்த பயிற்சி, உலக நோக்கு, துணிவு முதலான ஆளுமைப் பண்புகள் கொண்ட தேர்ந்த படைப்பாளிகளும், புரிதல் திறனுள்ள வாசகர்களும் பெருக வேண்டும் என்பதே ஒரு திறனாய்வாளர் என்ற முறையில் ரெ.கார்த்திகேசுவின் முதன்மையான வேட்கையும் கனவும் ஆகும்.
     

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.