ஈழத்தமிழர் வாழ்வில் நாட்டார் அரங்கக் கலைகள்

பேராசிரியர் இ.பாலசுந்தரம்


ரினத்தின் வரலாற்றை மீளாய்வு செய்து எழுதுவதற்குரிய ஆவணங்களில் கல்வெட்டுக்கள், புதைபொருட் சான்றுகள், பிறநாட்டார் குறிப்புக்கள், பண்டைய இலக்கியங்கள், நாட்டார் இலக்கியங்கள், நாட்டார் கலைகள், இடப்பெயர்கள் முதலானவை முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில்,நாட்டார் கலைகளை மக்கள் தம்வாழ்க்கையோடு இணைத்துக்கொண்டனர். குறிப்பிட்ட இனத்தவரின் அல்லது பிரதேச மக்களின் வரலாறு,சமூக நடைமுறைகள், மரபுகள், சமயஒழுக்கங்கள், பழமரபுக் கதைகள், அரசியல் நடவடிக்கைகள் முதலான பல்வேறு விடயங்களை அறிந்து கொள்வதற்கு நாட்;டார் அரங்கக் கலைகள் பற்றிய ஆய்வு துணைசெய்கின்றது.குறிப்பாக நாட்டுக்கூத்து மற்றும் கிராமிய நடனங்கள் பற்றிய ஆய்வுகள் இலங்கைத் தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம், மக்கள் வாழ்வியல் முறைகள்,அரசியற் பின்புலம்,நாட்டுக் கூத்துகளுடன் தொடர்புடைய சமுதாயப் பின்னணி என்பனபற்றி அறியத்தக்க தரவுகளைக் கொண்டனவாக இக்கலைகள் உள்ளன. இக்கட்டுரையில் நாட்டார் கலை வடிவங்கள் - ஈழத்தமிழரின் பண்பாட்டு வரலாற்றில் எத்தகு முக்கியத்துவம் பெறுகின்றன எனபதுபற்றியதாக அமைகின்றது.

ஆதித் திராவிடர்
Pro-Dravidians)  இலங்கையின் தொல்குடிகளாக்; வாழ்ந்திருக்கிறார்கள். பண்டை நாள் தொடக்கமாக ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பல்வேறு அடிப்படையிலான தொடர்புகள் இருந்து வந்துள்ளன. தென்னிந்தியாவின் பல பகுதிகளிருந்தும் வௌ;வேறு காலக்கட்டங்களில் தமிழர் குடியேற்றங்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. ஈழத்து இடப்பெயர்களில் திராவிடமொழிக் குடும்ப மொழிகளின் அடிச்சொற்கள்; பதிவாகியுள்ளமை இக்குடியேற்றக் காலங்ளில் அவர்கள் இட்டு வழங்கிய பெயர்களால் அறியப்படுகின்றன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடக்க காலத்தில் தமிழரும் சிங்களவரும் இலங்கை முழுவதையும் மாறி மாறி அரசாண்டு வந்துள்ளனர். இடைக் காலத்தில் இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழ் மன்னராலும், தென்னிலங்கை சிங்கள மன்னராலும் ஆளப்படடு வந்தன.இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சி நிலவியபோது, இவ்விரு ஆட்சிகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன் விளைவாக விளைவாக இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட அனர்த்தங்கள் சொல்லில் அடங்காதவை.இலங்கை வரலாற்றில் மறைந்தும் மறைக்கப்பட்டும் வரும் வரலாற்று உண்மைகளை நாட்டார் கலைகள்,இடப்பெயர் ஆராய்ச்சி என்பனவற்றிக் மூலமும் வெளிப்படுத்தப்படக் கூடிய வாய்ப்புள என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் சிங்களர் வரலாறு விஜயன் வருகையுடன் தொடங்குவதாக மகாவம்சம், சூளவம்சம் முதலான நூல்கள் கூறுகின்றன. அதற்கும் பல்லாயிர ஆண்டுகள் காலத்தால் முற்பட்டதே ஈழத்திராவிடர் வரலாறாகும். தென்னிந்தியாவில் வரலாற்றுத் தொடக்க காலத்தில் நிலவிய பெருங்கற் பண்பாடே
Megalithic Culture) இலங்கையின்; தொன்மைக்கால வரலாற்றிலும்; காணப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆதிக்குடிகள் பெருங்கற் பண்பாட்டிற்கு உரியவர்கள் என்பதையும், பௌத்தத்தின் வருகைக்கு முன்பே அவர்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர் (பொ. இரகுபதி அவர்களின் Early Settlement in Jaffna - A Archaelogical Survey. 1987 எனவே இலங்கையில்; பெருங்கற் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழர் குடியிருப்புக்கள், இலங்கையின் கரையோர மாநிலங்களில் ஊர்கள் à நகரங்கள் à அரசுகள் என காலப்போக்கில் தோற்றம் பெறலாயின. பொன்பரிப்பு, ஆனைக்கோட்டை, கந்தரோடை, பூநகரி, வல்லிபுரம், வவுனியா, கந்தளாய், மாத்தளை,பட்டிப்பளை, கதிர்காமம் முதலான இடங்களில் கிடைத்துள்ள தொல்பொருட் சான்றுகள் ஆதித் திராவிடப் பண்பாட்டில் தமிழரின் இருப்பினைக் குறிப்பதாகும்.

இராவணன்,இலங்காபுரியைத் தலைநகராகக்கொண்டு; ஆட்சிபுரிந்த செய்தியும், வரலாற்றுக்கு முற்பட்ட காலம்முதலாக இலங்கையின் கரையோரங்களில் திருக்கோணேஸ்வரம், மாமாங்கேஸ்வரம், மண்டூர், திருக்கேதீஸ்வரம், முன்னீஸ்வரம், நகுலேஸ்வரம், தென்கோடியிலுள்ள திருமால்கோயில், கதிர்காமம் முதலான இந்து ஆலயங்கள் அமைந்திருந்தமையும், பண்டைக் காலம் முதலாக இலங்கைத்தீவின் கரையோரப் பகுதிகள் முழுவதிலும் தமிழர் குடியிருப்புக்களும் அவர்களது ஆட்சியும்,பண்பாடும்,கலைகளும் நிலைபெற்றிருந்தமையைச் சான்றுபடுத்துகின்றன. ஈழத்தில் தென்னிந்தியக் குடியேற்றமும் அரச ஆதிக்கமும் காலத்திற்குக் காலம்இடம்பெற்றமையும் அறியப்பட்டுள்ளன. கி. பி.
500 களுக்குப் பின்னர்,பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோரின் ஆக்கிரமிப்புக்கும்,ஆட்சிக்கும் இலங்கை உட்பட்டிருந்தது என்பதும் வரலாறாகும்.இலங்கையின் பல பாகங்களிலும் தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை யாவற்றையும் துணைக்கொண்டு நோக்கும்போது பண்டைக்காலம் முதலாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் தமிழர் வாழ்ந்தமை நிரூபிக்கப்படுகிறது. பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை,சங்க இலக்கியங்களை ஆராய்ந்து, இயற்கை சார்ந்த தரவுகளின் அடிப்படையில், சம காலத்தில் ஈழத்தில் மாத்தளை, குருநாகல் முதலான பகுதிகளிலும் தமிழ் மக்களும் புலவர்களும்; பண்டை நாட்களில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளமை காண்க. .

இலங்கையில் சிங்கள பௌத்த ஐதீகமும், தம்மதீபக் கோட்பாடும் தோன்றியதன் விளைவாக மகாவம்சம், சூளவம்சம் முதலிய நூல்கள் எழுதப்பட்டன. அந்நூல்களில் பழைய தமிழ் இடப்பெயர்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளமைக்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. ஆதித்திராவிடருடன் தொடர்புடைய நாகர் இனத்தவர் இலங்கையில் பண்டைக் காலத்தில் வாழ்ந்து வந்தனர் என்பதும்,ஈழத் தமிழர்கள் இராவணன் வழித் தோன்றல்களே என்பதும்,அவர்களின்; வரலாற்றைச் சான்றுபடுத்துவனவாக சீதா எலிய, சீதவாக்கை,நாகதீபம், நாகர்கோவில்,இரத்தினபுரி முதலான இடப்பெயர்கள் இலங்கையிலுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். பண்டைக்காலம் முதலாக,ஈழத்தின் பல பாகங்களிலும் தமிழர் பரந்து வாழ்ந்து வந்த போதிலும், கால ஓட்டத்தில் பல்வேறு காரணங்களால் வடக்கும் தெற்கும் தமிழர் பாரம்பரியத் தாயகம் என அதன் பரப்பஎல்லை சுருக்கப்படுவதாயிற்று. இத்தகைய பண்டைய வரலாற்றுப் பின்னணியில் நாட்டார் கலைகள், நாட்;டார் இலக்கியங்கள் தரும் தரவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

[பகுதி–II ]


ஆடலும் பாடலும் மனித குலத்தின் முதற்கலை வடிவங்களாகும். அக்கலை வடிவங்கள் மனிதரது தேவைகளுக்கும், அவர்கள் வாழ்ந்த சூழல்களுக்கும், அவர்களது நம்பிக்கைகளுக்கும் ஏற்ப, அக்கலைகளின் பொருளும் வடிவங்களும் மாற்றம் பெற்றுவரலாயின.மேற்குலக நாடுகளில் குறிப்பாக முதன் முதலாக நாட்டார் கலை - இலக்கியங்கள் அழிந்து போகாமல் அவற்றைத் தேடித் தொகுத்துப் பேணி, அவற்றின் முக்கியத்துவத்தை உலகுக்கு வெளிப்படுத்தியோர் ஜேர்மன் நாட்டு கிறீம் சகோதரர்கள் ஆவர்
;(Grimm Brothers). பின்னாட்களில்நாட்டார் வழக்கியல் - இனவியல் ( Folklorist and Ehnologist) சார்ந்த அறிஞர்கள் நாட்டார்கலை-இலக்கிய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை உலகமயப்படுத்தினர். குறிப்பிட்ட பிரதேச மக்களின் மரபுகள், வழக்காறுகள், பண்பாட்டுப் பாரம்பரியங்கள், நாட்;டார் கலை - இலக்கியங்கள் என்பன இன்றைய பண்பாட்டின் ஆணிவேரை அறிந்துகொள்ளப் பெரிதும் துணையாகின்றன. அனைத்து நாடுகளிலும் முதலில் தோன்றிய நாட்டர் கலை இலக்கியங்களே அவ்வந் நாட்டு மக்களின் செவ்வியல் பண்பாட்டுக்குப் பெரிதும் முன்னோடியாக அமையலாயின.

தமிழகத்திலும் ஈழத்திலும்
1950 களிலிருந்து நாட்டார் கலை - இலக்கியங்களைச் சேகரித்துப் பதிப்பிக்கும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டுவரலாயினர். ஈழத்தில் இம்முயற்சியில் முதன் முதலாக மட்டக்களப்பில் கல்வி அதிகாரியாகச் செயற்பட்ட தி. சதாசிவஐயர் 'மட்டக்களப்பு வசந்தன் பாடல் திரட்டு' (1940) என்ற நூலைவெளியிட்டார். அவ்வாறு 1940 களில் தொடங்கிய ஈழத்து நாட்டார் கலை - இலக்கியச் சேகரிப்பு, பதிப்பு முயற்சிகள் 1960 களில் விரிவும் வேகமும் பெற்றன. அவற்றின் அடுத்த கட்டமாக 1970 முதலாக நாட்டாரர் இலக்கியம் (இ.பாலசுந்தரம்),கூத்துக்கலை (சி.மௌனகுரு, காரை சுந்தரம்பிள்ளை)என்பன பற்றிய ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் இடம்பெறலாயின.

ஈழத்து நாட்டார்கலைப் பாரம்பரியத்தில் கூத்து, வசந்தன், விலாசம்,கும்மி, கரகம், காவடிமுதலிய ஆடற்கலைகள் இடம்பெறுகின்றன. ஈழத்தில் கூத்துக்கலை,சமூக – சமயப் பின்னணியில் இயங்குநிலை உடையனவாக வழங்கிவந்துள்ளன. தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களானயாழ்ப்பாணம், மன்னார், வன்னி,கிழக்கிலங்கை ஆகிய பகுதிகளில் கூத்துக்கலை பெரிதும் பேணப்பட்டு வந்துள்ளமையை உன்னிப்பாக நோக்க வேண்டும். கூத்தின் ஆடல்முறைகள்,பாடல்; வகைகள் என்பவற்றின் நுட்பங்களை ஆராயும்போது கூத்துக்கலையின் பழைமையும் அவற்றின் சிறப்பம்சங்களும், அவை மக்கள் வாழ்க்கையுடன் பிணைந்திருப்பதும் அறியப்படுகின்றன. கேரளத்தில் கதகளி,கர்நாடகத்தில் குச்சுப்பிடி,ஆந்திராவில் யகஷகானம் - மற்றும் பாகவதமேளா முதலான நாடகங்கள் தேசியக் கலைவடிவங்கள் என அவ்வந்நாட்டு மக்களால் போற்றப்படுதல் நோக்கத்தக்கது. அவ்வகையில் 'ஈழத் தமிழரின் தேசியக்கலை வடிவம் கூத்து என்பதே நியதியாகின்றது.

சங்க இலக்கியங்களில் பண்டைய கூத்துக்கலை பற்றிய தரவுகள் இடம்பெற்றள்ளன. கூத்தர், விறலியர் என ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூத்துக்கலையைப் பேணிவந்துள்ளனர். கூத்துக் கலைஞரை மன்னரும் வள்ளல்களும் ஆதரித்தனர். சிலப்பதிகாரத்தில் கூத்துக் கலையின் நுட்பங்களும் - அவை தெய்வ வழிபாட்டிற்குப் பயன்பட்டமையும் அறியப்படுகின்றன. வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்பன தெய்வ வழிபாட்டுக்குரிய கூத்துக்களாக விளங்கின.சோழர் காலத்தில் (கி.பி
.900-1200) கூத்துக்கலை நன்கு வளர்ச்சி பெற்றிருந்தமையை சோழர் காலக்கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. 1200-1800 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம் என்ற கூத்துக்கள் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தன. 18ஆம் நூற்hண்டு முதலாக கூத்துக்கலை சமூக – அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில் நிலப் பிரபுத்துவர்களால்கூத்துக்கலை அழியா வண்ணம் பேணப்பட்டு வந்தமை அறியப்படுகிறது. கூத்துக்கலையினூடாக நிலமானிய சமூகத்தின்சமூக பொருளாதார கட்டமைப்புகளும் இணைவதாயின. சும்மட்டியார், வயற்போடியார் முதலிய நிலமானியப் பிரபுத்துவர்களின் ஆதரவில் கூத்துக்கலை வளர்ந்து வந்தமையை அறியக்கூடியதாக உள்ளது.

ஈழத்தமிழரின் கூத்துக்கலை தனித்துவமான நாடக பாரம்பரியங்களை உள்ளடக்கியதாகும். கூத்துக்களில் ஆடல், பாடல், கதையமைப்பு, தாளக்கட்டு,உடை அலங்காரம்,கதாபாத்திரங்கள் பயன்படுத்தும்வில், கதாயுதம், வாள் முதலான ஆயுதங்கள் என்பனவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கூத்துக்களின் ஆடல்,பாடல்,தாளம் முதலானவற்றின் அடிப்படையில் இவற்றை இருவகையாக வகைப்படுத்துவர். இவற்றை யாழ்ப்பாணத்தில் வடபாங்கு-தென்பாங்கு என்றும், வன்னியில் மன்னார்ப்பாங்கு-வன்னிப்பாங்கு என்றும், மட்டக்களப்பில் வடமோடி-தென்மோடி என்றும் வழங்குவர். வடமோடிக் கூத்துக்களின் கதையமைப்பிலேபோர்த்தன்மை மிகுந்தும், தென்மோடிக் கூத்துக்களில் சிருங்காரச் சுவை மேம்பட்டும் காணப்படும். உதாரணமாகஇராம நாடகம் (போர்த்தன்மை) வடமோடியிலும், அலங்காரரூபன் நாடகம் (காதல்) தென்மோடியிலும் அமைந்த கதைப்ப்போக்கினைக் கொண்டனவான அமைந்திருக்கும். உலக நாடகங்கள் துன்பியல்;, இன்பியல் என்ற வகைமையில் அடங்குவன போன்றே,ஈழத்துக் கூத்துக்களும் துன்பியல் - இன்பியல் போக்குகளைக்; கொண்டமைந்து உலக நாடகப்பொதுத்தன்மையையும் பெற்றுள்ளன.

வடமோடி – தென்மோடிக் கூத்துக்கள் என்ற வகைமையிலிருந்து வேறுபட்டதும்,இசையையே முதன்மையாகக் கொண்டு ஆடப்படுவதுமான விலாசம் என்ற ஒருவகைக் கூத்தும் வடஇலங்கையில் வழக்கத்திலுள்ளது. விலாசக்கூத்து வகை வடஇலங்கையில்குறிப்டபிடத்தக்க வகையில் வளர்ச்சி பெற்றிருந்தது.யாழ்ப்பாணத்தில் கர்நாடக இசை பயில்நெறியும். பரீச்சயமும் மக்கள் மத்தியில்; செல்வாக்கும் பெற்றிருந்தமையால், இசைப்பாங்கான விலாலசக் கூத்தும் யாழப்பாணத்தில் ஏற்றம் பெறுவதாயிற்று. இவற்றக்கு உதாரணமாக மயான காண்டம், சத்தியவான் சாவித்திரிமுதலான இசை நாடகங்;களைக் குறிப்பிடலாம். நடிகமணி வி.வைரமுத்து அவர்கள் விலாசக் கூத்து வடிவத்தைப் பெரிதும் பயன்படுத்தியதோடு, அதனை மக்கள் மயப்படுத்திப் பெரும் புகழீட்டியவராவர். இவ்வகையில்காத்தவராயன் சிந்துநடைக் கூத்து, யாழ்ப்பாணம், வன்னி, மன்னார், மட்டக்களப்புப் பிரதேநசங்களிலும் வழங்கி வருவதாயிற்று.

கூத்துப் பயிற்றுவிக்கும் கலைஞர் (ஆசிரியர்)'அண்ணாவியார்' எனப் பெயர் பெறுவார். அண்ணாவியார் கூத்து ஆடுவோருக்குரிய தாளக்கட்டுக்களை தாள லயத்தோடு;சல்லரி மத்தளம் முதலான பக்க இசைக்கருவிகளின் ஒத்திசையோடு பாடுவார்.பாடல்-தாளம் என்பனவற்றக்கு ஏற்ப கூத்தர் பல்வகையான ஆடல்களை நிகழ்த்துவர். அந்த ஆடல்முறைகள் வருமாறு பெயர்பெறும்: வரவு ஆட்டம், தாளம் தீர்த்தல், அடந்தை, அரைவீசாணம், எதிர்வீசாணம், உலா, நாலடி, எட்டடி, ஒய்யாரம், சுழன்றாடல், பாய்ந்தாடல், குந்திச் சுழல்தல், குந்துநிலை, குத்துமிதி, தட்டிநிலைமாறல், இரண்டாம் - மூன்றாம் - நாலாம் வாட்டி ஆட்டம், பாம்பென வளைந்தாட்டம், பின்னல் ஆட்டம் எனப் பல்வேறு ஆடல்கள் நாட்டுக் கூத்தில் இடம்பெறும். வடமோடி – தென்மோடி என்ற வகைமைக்கு ஏற்ப, ஆடல் - பாடல் என்பவற்றிடையே வேறுபாடுகளும் காணப்படும். வடமோடிக் கூத்திலும்விட தென்மோடிக் கூத்திலே அதிக நுணுக்கமும் கடினமும் உள்ள ஆட்டங்கள் காணப்படும். வடமோடிக் கூத்தில் ஒரு கதாபாத்திரம் முதலில் தோன்றும்போது அவரது வரவு ஆட்டம்,

'தகதிதா தெய்யத் தெய்தெய் - தாத்தெய்யத்தோம் தகதிகதா...' எனவும்

'தாத்தெய்த் தெய் தக்கச்சந்தரிகிட தெய் 'தாத்தெய்த் தெய் தக்கச்சந்தரிகிட தெய்...'


எனவும் பல்வேறுபட்ட தாளக்கட்டுக்களுக்குஏற்ப ஆமைதியாக ஆடுவர். ஆனால் தென்மோடியில் வரவு ஆட்டக்காரர் களைத்துச் சோர்ந்து போகும் அளவுக்கு அவரது ஆட்டம் மிகத் துரிதமும் நுணுக்கமும்; கவர்ச்சியும் உடையனவாகக் காணப்படும். உதாரணமாக,

'ததித்தளாதக ததெய்யதிமிதக தாதிமிதத்தித்தெய்யேஇருக்கும்.
'ததித்தளாதக ததெய்யதிமிதக தாதிமிதத்தித்தெய்யே...'

ஏன்ற தாளக்கட்டுப் போன்ற பல்வேறுபட்ட தாளக்கட்டுக்களுக்கு ஏற்ப வேகமாகவிதம் விதமான ஆட்டங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதுபோன்றே பாடல்முறையிலும் இவற்றிடையே வேறுபாடுகளுள. வடமோடியில் வரவு விருத்தங்களை அதிகம் நீட்டி இசைத்துப் பாடுவதில்லை. ஆனால் தென்மோடியில் அதனை ஓசைநயத்துடன் நீட்டி இசைத்துப் பாடுவர். கூத்தருக்;குப் பக்கத்துணையாக செயற்படுவோர் 'சபையோர்' (அணியிசைக்கலைஞர்) எனப்படுவர். இவர்கள் மத்தளம், சல்லரி, உடுக்கு,ஆர்மோனியம்,பிற்பாட்டு எனப் பலவாறு பின்னணியிசை வழங்குவர். மட்டக்களப்பிலே பெருவழக்காக ஆடப்படும் வடமோடிக் கூத்துக்களாக இராமநாடகம், குசலவ நாடகம், தருமபுத்திரநாடகம்,பப்பிவாகன் நாடகம்,
14 ஆம்போர், பாண்டவர் வனவாசம் எனப் பலவாகும். தென்மோடியில் பிரபலம் பெற்றவையாக அலங்காரரூபன் நாடகம், பவளவல்லி நாடகம், வாளபிமன் நாடகம், அநிருத்த நாடகம் என அவற்றின் வரிசை நீண்டு செல்லும்.

போர்த்துக்கேயரது வருகையுடன் ஈழத்துக் கூத்துகலை மேலும் வளம்பெறுவதாயிற்று. சைவ மக்கள்;,தம் கோயில் திருவிழாக்காலங்களிலே புராணக்கதை தழுவிய கூத்துக்களை நடத்தியதையும். அதனைப் பல நூற்றுக் கணக்கான மக்ககள் இரவு முழுநேரமும் கண்விழித்திருந்து பார்த்து இரசிப்பதையும்அவதானித்த கத்தோலிக்க மதகுருமார்,தமது மதப்பிரச்சாரத் தேவைக்கு நாட்டுக்கூத்துவடிவத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர். அந்த அடிப்படையில் பைபிள் கதைகளை அண்ணாவிமாரைக் கொண்டு கத்தோலிக்கக் கூத்துக்களாக எழுதுவித்தனர். அக்கூத்துக்களைப் பழக்கி,தேவாலயத் திருவிழாக் காலங்களில்; இடம்பெறச் செய்தனர். அவ்வiகையில்ஞானசவுந்தரி, எண்றீக்குஎம்பரதோர், கிறிஸ்தோப்பர் முதலான பல்வேறு கத்தோலிக்கக் கூத்துக்;கள் மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அண்மைக் காலம்வரை ஆடப்பட்டு வந்துள்;ளன. அக்கூத்து மரபுகளுடன் தொடர்படையவர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் கத்தோலிக்கக் கூத்துக்களைத் தொடர்ச்சியாக மேடை ஏற்றி கூத்துக்கலை மரபைப் பேணி வருகிறார்கள்..

ஈழத்தில் நாட்டுக்கூத்துக்கு மிகவும் பெயர்பெற்றதுமட்டக்களப்புத் தமிழகமாகும். அப்பிரதேச மக்களதுவாழ்க்கை முறையில் நாட்டார் கலைகள்,கிராமிய வழிபாட்டுமுறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், நாட்டார் இலக்கியங்கள் (பாடல் - கதை – பழமொழி,விடுகதை), நாட்டுவைத்தியம், மந்திரக்கலை முதலான பல்வேறு நாட்டார் வழக்கியல் கூறுகள் உயிர்ப்புடன்; வழங்கிவருகின்றன. 'மீன்மகள் பாடுகிறாள் வாவிமகள் ஆடுகிறாள் அழகான மட்டுநகர் நாடம்மா..... இங்கு கூத்தொலியும் குரவைஒலியும் எங்கும் கேட்கலாம்' எனக் கவிஞர் காசி ஆனந்தன் பாடியதுமட்டக்களப்பின் யதார்த்த நிலையாகும். பாரதம், இராமாயணம் மற்றும், காவியங்கள், புராணம், பைபிள், வரலாறு ஆகியவற்றை தழுவிய கதைகளை வைத்து கூத்துக்கள் ஆடப்பட்டன. மட்டக்களப்புப் பிரதேசத்தில் வடமோடி– தென்மோடியில் அமைந்த பல நூறு கூத்துக்கள் கிராமங்கள் தோறும் ஆடப்பட்டுவந்தன. இவற்றில் காரைதீவு, கழுதாவளை, வந்தாறுமூலை, பழுகாமம்என்பன கூத்துக்கலைக்கும், அண்ணாவிமாருக்கும் பெயர்பெற்ற கிராமங்களாகும்.

கூத்துக் கலைக்குப் பல்கலைக்கழக நிலையில் மகிமை சேர்த்தோர் வரிசையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன்,பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியர் இ. பாலசுந்தரம் பேராசிரியர் சி.ஜெயசங்கர் ஆகியோர் குறிப்பிடப்படுவர். 1960 களில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு வடமோடியில் அமைந்த கூத்துக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மெருகூட்டி,நவீன அரங்குகளில் மேடையேற்றத் தக்கவகையில் அரங்கக் கலையாகச் செப்பனிட்டார். இதில் நேரச்சுருக்கம் முக்கியமானது. முழு இரவும் ஆடப்பட்டு வந்த ஒரு நாட்டுக்கூத்தை ஒன்றரை அல்லது இரண்டு மணித்தியாலஅளவுடையதாகச் சுருக்கினார். அத்துடன் கிராமங்களில் வெளியிடங்களில் வட்டக்களரியில் ஆடப்பட்டு வந்த கூத்து மரபை,உள்ளரங்குகளில் பார்வையாளரின் வசதிக்கேற்பவும், நவீன அரங்கங்களுக்கு அமைவாகவும்,ஒருபக்கம் திறந்த அரங்கில் ஆடத்தக்கதாகவும் ஒழுங்குபடுத்தினார். கூத்து ஆடுவோருக்குக் கலையுணர்ச்சி,பாவம், நடிப்பு, குரல்வளம் என்பன ஒழுங்குபெற மிகுந்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. பின்னணியிசை வழங்கும் மாணவருக்கு (பிற்பாட்டுக்காரர) கூத்துப் பாடல்களைச்செப்பமுறப்பாடும் இசைப்பயிற்சியும் அளிக்கப்ட்டது. ஆடல், பாடல்,நடிப்பு,ஒப்பனை, நவீன ஒளி, ஒலி அமைப்பு என்பனவற்றிலும் கவனம் செலுத்தப்;பட்டது. இத்தகைய பரிசோதனை முயற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு,கர்ணன்போர்
(1962), நொண்டி நாடகம் (1963), இராவணேசன் (1964), வாலிவதை (1967) என்பன பேராசிரியர வித்தியானந்தனின் தயாரிப்பில் பல தடவைகளில் மேடையேற்றம் பெற்றன. இவை பேராதனை, கண்டி, மட்டக்களப்பு. திருகோணமலை,மன்னார், யாழப்பாணம் எனப் பலவிடங்களிலும்; மேடைஏற்றம்; பெற்று,பல்லோரது பாராட்டுதல்களையும் அக்கூத்துகள் பெற்றுக்கொண்டன.

பேராசிரியர் வித்தியானந்தனுக்குப் பின்னர் அவரது மாணவர்களாகிய கலாநிதி இ. பாலசுந்தரம். கலாநிதி சி.மௌனகுரு ஆகிய இருவரும் இக்கலையைப் பல்கலைக் கழகங்களில் வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்நாட்டார் வழக்கியல் கழகத்தின் ஊடாக கலாநிதி. இ. பாலசுந்தரம்பல்கலைக்கழக மாவகளைக்கொண்டு; காத்தவராயன் நாடகம், சத்தியவான் சாவித்திரி நாடகம் என்பவற்றை நவீன அரங்கிற்கேற்பத் தயாரித்து
(1989-1990), இளைய சமுதாயத்தினரிடையே கூத்துக்கலைக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தினார். இவற்றில் காத்தவராயன் நாடகம் யாழ்ப்பாணம், திருகோணமலை. மன்னார், முல்லைத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களில் 49 தடவைகள் மேடையேற்றப்பட்டதோடு. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தில் பி.விக்னேஸ்வரன் அவர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு,பல ஆண்டுகளாக ரூபவாகினியில் ஒளிபரப்பப்பட்டு வந்தமையும் சாதனையாகும். கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி சி. மௌனகுரு அவர்கள் நாட்டுக்கூத்துக்கலையில் பல்வேறுபரீட்சாத்த முறைகளைக் கையாண்டு பல கூத்துக்களைத் தயாரித்து மேடையேற்றியதோடு,; நாட்டுக் கூத்துக்கலைக்குப்புதிய பரிமாணங்களைப் பெற்றுக்கொடுத்தவர் என்ற பெருமைக்கும் உரியவர். இவ்விருவரது மாணவர்கள் தொடர்ந்தும் நாட்டுக்கூத்துக் கலைக்கு உயிரூட்டி வருகின்றனர் என்பதையும் பதிவுசெய்தல் பொருத்தமாகும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின்; நுண்கலைத்துறையினர் மிக வேகமாவும் ஆழமாகவும் நாட்டார்கலைத்துறையில் ஆய்வுகள், பயிற்சிகள், மேடை ஏற்றங்கள் நிகழ்த்தி வருகின்றனர் ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு, பேராரிரியர் சி.ஜெய்சங்கரின் மேடை ஏற்றங்களும் ஆய்வுகளும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

கூத்துக் கலைவடிவம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியில் குறிப்பாக ஜேர்மனி, பிரான்சு, ரொறன்ரோ ஆகிய இடங்களிலும் பேணப்பட்டுவருதல் குறிப்பிடத்;தக்கது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியிலே இளைய தலைமுறையினரால் கூத்துக்கலை முன்னெடுக்கப்பட்டு வருதல் நல்லதொரு எதிர்காலத்தைக் குறிக்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தின்போது,
1990 - 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில்,சமகால அரசியல் - சமூகம் தழுவிய சூழல்களைக் கதைகளாக எழுதி; அரசியல் பரப்புரை செய்வதற்கும் கூத்து வடிவம் பெரிதும் பயன்படுத்தப்பட்டதுமையும் குறிப்பிடத்தக்கது.

கோலாட்டம் என்னும் ஆடல்முறையை மட்டக்களப்புப் பிரதேசத்தில் வசந்தன் - வசந்தன்கூத்து என வழங்குவர். பண்டை நாளில் கூத்து வடிவமாக வழங்கிய வசந்தன், பின்னாளில் நடனமாக மட்டும் அமைவதாயிற்று. வசந்தன் கூத்திலே பாடப்படும் பாடல்கள்; தெய்வ வணக்கம்;, தொழில்முறைகள், சமூகஅமைப்பு, விளையாட்டு, இலக்கியக்கதைகள் முதலான பல்வேறு விடயங்களைச் சித்திரிப்பனவாக,இன்னிசை ததும்பும் விதம் விதமான தாளலயங்களுடன் பாடப்படுவன.மட்டக்களப்பிலே வாய்மொழி வழக்கிலும் ஏடுகளிலும் வழங்கிவந்த வசந்தன் பாடல்களை'வசந்தன் கவித்திரட்டு' என்ற தொப்பிளே காணலாம். பாடசாலை மாணவர்கள், இளைஞர் மன்றத்தினர், கலைக்கழக உறுப்பினர்கள் முதலியோர் விழாக் காலங்களில் வசந்தன் கூத்து ஆடுவது வழக்கமாகும். ஆயினும் இக்கலையைப் பயில்வார் அற்ற நிலையும், இக்கலை பேணப்படாத ஒரு சூழலுமே இப்போது காணப்படுகின்றன. 'இன்று நாம் அந்தப் பழங்கலையை மறந்துவிடும் நிலையில், ஆடலும் அறியாது, பாடலும் தெரியாது, அதன் பெருமைகளைச் சிந்தியாது வாழ்கின்றோம்' என
1964 இல் வி. சீ. கந்தையா அவர்கள் 'மட்டக்களப்புத் தமிழகம்' என்ற நூலிற் குறிப்பிடுவர். இவற்றுடன் கரகம், காவடி, மலையகத்து காமன் கூத்து என்பன தெய்வ வழிபாட்டுன் இணைந்து கொண்டமையால் தமிழர் தமது வழிபாட்டு நடைமுறைகளோடு இணைத்து,இந்நடனங்களைப் பேணிவருகின்றனர். அதனால் இக்லைகள்;; இன்றும் இயங்கு நிலையிலுள்ளன.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு: மலையகம் ஆகிய பிரதேசங்களில் வழக்கிலிருந்து வந்துள்ள நாட்டார்கலைகள் பற்றி ஆய்வும், நாட்டார் கலை இலக்கியங்களைச் சேகரித்துப் பேணும் முயற்சிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியனவாகும். கால ஓட்டத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பானதே. ஆதனால் பழையனவாகிய நாட்டார்கலைகள் ஒதுக்கப்பட்டு நவீன நாடகம் - திரைப்படம் என்பன கலையுலகில் இப்போதுஆக்கிரமித்துள்ளமை காலத்தின் நியதியாகிறது. இந்நிலையில் இவற்றைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அரசுக்கும் உரியது. நாட்டார் கலைகளைப் பொறுத்த வரையில் தமிழகத்திலும் இதேநிலைதான் காணப்படுகிறது. ஆனால் அங்கு தூய-சவேரியார் கல்லூரியில்
1988 இல் அமைக்கப்பட்டுள்ள 'நாட்டுப்புறவியல் ஆய்வு மையம்'அமெரிக்க போர்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நாட்டார்கலைகளைப் பேணும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. அதுபோன்று யாழ்ப்பாணணப்பல்கலைக்கழகத்திலும் 1989 இல் ஆரம்பிக்கப்ட்ட'நாட்டார் வழக்கில் கழகம்'பல முயற்சிகளில் செயற்பட்டுவருகின்றது. இலங்கை முழுவதிலுமுள்ள நாட்டார்கலைஞர்களுடன் தொடர்புகொண்டு, இக்கலைகளைப் பேணுவது மட்டுமன்றி, பல்கலைக்கழக ஆய்வுத்துறையாகவும் இதனை அமைத்தால் ஈழத்து நாட்டார்கலைகள் பேணப்படும் நிலைமை உருவாகலாம்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர் இக்கலைகள் தாயகத்தில் அழியாமல் பேணப்படுவதற்கு உதவலாம். பாடசாலை மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கலைக்கழகங்கள் என்பன தமது தாயகப் பாடசாலைகளுக்கு நிதியுதவி அளித்து,நாட்டார்கலைகளைப் பேணும்;படி ஊக்கப்படுத்தினால் மீண்டும் நாட்டார் கலைகள் மிடுக்குடன் புத்துயிர் பெற வாய்ப்புண்டு. வடக்கிலும் கிழக்கிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் நாட்டார்கலைப் பாரம்பரியத்துக்குப் புதுப்பரிமாணம் கொடுத்து,ஈழத்தமிழரின் தேசியக் கலைவடிவமாம் நாட்டுக்கூத்தை உலகறியச் செய்யும் கலைத் திட்டங்களை வகுத்துச் செயற்படுதல் தேசியத்தின் கடப்பாடாகிறது.

 

பேராசிரியர் இ.பாலசுந்தரம்
தமிழ்த்துறைத் தலைவர்,
அண்ணாமலைப் பல்பலைக்கழகம்,
கனடா வளாகம்