உலகப் பழமொழிகளிற் பருவகாலங்கள் - ஓர் ஒப்பு நோக்கு

பேராசிரியர் இ.பாலசுந்தரம்


1.0 பழமொழிகள்:


'அநுபவத்தின் குழந்தைகளே பழமொழிகள்' என்பது ஆங்கிலப் பழமொழி. அவை மக்களின் பழுத்த அநுபவப் படிமம் அல்லது பிழிவு எனலாம். மானுடத்தின் பல்வேறு வாழ்க்கை அநுபவங்களின் வாயிலாகப் பெறப்பட்ட உண்மைகளின் வெளிப்பாடே பழமொழிகள். அவை மனித குலத்திற்கு அறிவு புகட்டும் அறிவுக் களஞ்சியங்கள். வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாகப் பிறருக்கு எடுத்துரைக்கப்பட்டு, பழமொழிகள்; வழங்கி வந்துள்ளன. ஒவ்வொரு பழமொழியும் அநுபவத்தின் முத்திரை. பல்துறைப்பட்ட அறிவையும் அநுபவங்களையும் குறுகிய வடிவில், மனத் திரையில் படியும் வண்ணம் எடுத்தரைப்பதே பழமொழிகளின் சிறப்பியல்பாகும்.

பழமொழிகள் பழைமை வாய்ந்தவை எனினும், அவை பல்வேறு தேவைகளின் அடிப்படையில் இன்றும் உயிர்த்துடிப்புடன் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பயன்படுத்தப்பட்டே வருகின்றன. உலகின் பல பாகங்களிலுமிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்தித்தாள்கள், வார-மாத இதழ்கள், ஆராய்ச்சிச் சஞ்சிகைகள் முதலியவற்றிலும் பழமொழிகள் பெரிதும் எடுத்தாளப்பட்டு வருவதைக் கவனிக்கலாம்.

உலகப் பழமொழிகள் பற்றிய ஒப்பாய்வுகள்;மூலம் அவற்றிடையே காணப்படும் பல்வேறு பொதுவியல்புகள் நிறுவப்பட்டுள்ளன. பழமொழிகள் பொதுவாக மக்களின் வளர்ச்சிப் படிநிலைகளோடு தொடர்புடையவை; பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள் என்பவற்றோடு சம்பந்தப்பட்டவை; பொது உண்மைகளைக் கூறுபவை; நடைமுறை வாழ்க்கை அநுபவங் களைச் சித்தரிப்பவை; அறிவுரை கூறுபவை; உடல்நலம் பற்றியவை; தொழில்களுடன் சம்பந்தப்பட்டவை; இயற்கைக் கூறுகள், பருவ காலங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இக் கட்டுரையிற்; பல்வேறு மொழிகளில் வழங்கும் பழமொழிகளில்; பருவகாலங்கள் பற்றி எத்தகைய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்பதுபற்றி விளக்கப்படுகின்றது.

2.0 பருவ காலங்கள்:

பருவ கால மாற்றங்கள், அவற்றின் விளைவுகள் முதலியனபற்றி விஞ்ஞான அடிப் படையில் கணித்து முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வாய்ப்பு இப்போது உண்டு. ஆனால் இவ்விடயங்களை விஞ்ஞான வசதிகள் வருவதற்கு முன்பாகவே தமது வாழ்க்கை அநுபவங் களினூடாக பண்டைக் கால மக்கள் அறிந்திருந்தனர். முக்கியமாக விவசாயம், கடற்றொழில் சம்பந்தமாக, பருவகால மாற்றங்களின் விளைவுகளில் மக்கள் அதிக அக்கறை கொண்டி ருந்தனர். இயற்கையின் நிகழ்வுகளை அநுபவவாயிலாக அறிந்து கொண்ட மக்கள் அதற் கேற்பத் தமது வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டனர்.

பருவ காலங்களும் அவற்றின் செயற்பாடுகளும் மனிதவலுவிற்கு அப்பாற் பட்டவை. இதனாலேயே 'கற்றோர்; காலக் கணிப்பைச் செய்து கொள்கிறார்கள்; கடவுள் பருவ காலங்களை உருவாக்குகிறார்' என்ற ஆங்கிலப் பழமொழி வழங்குவதாயிற்று. 'காலநிலையையும் மக்களையும் மனிதன் அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ற ஸ்பானியமொழியும் இதனையே விளக்குகிறது.

இயற்கைக் கூறுகளும் அவற்றின் செயற்பாடுகளும் இறை செயல்களே என்பது பல்சமய நம்பிக்கை. பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் சக்தியை விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது. 'காலம்தான் உலகின் ஆன்மா' என்கிறது கிறீஸ் பழமொழி. 'காலம் கடவுளுடையது; நம்முடையதன்று' என்பது இந்தியப் பழமொழி. பருவ காலங்களின் மாற்றங்களும் அவற்றின்; விளைவுகளும் இயற்கைச் சக்திகளின் செயற்பாடுகளே.

'பருவ காலங்களில் நல்லதும் கெட்டதும் வந்தே தீரும்' என்பது ஹவாய் நாட்டுப் பழமொழி. இயற்கையோடு இணைந்து வாழத் தொடங்கிய மனிதன்;, பருவ காலங்களின் தோற்றத்தையும் அவ்வக் காலங்களின் செயற்பாடுகளையும் பட்டுணர்வுகளின் மூலம் நன்கறிந்து அதற்கேற்ப வாழக் கற்றுக்கொண்டான். 'காலத்தைப்போல் நன்கு பழிவாங்குவது வேறெதுவுமில்லை' என்ற இலத்தீன் பழமொழியின் உண்மையை அம் மொழி பேசும் மக்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற தமிழ்ப் பழமொழிக்கு அமைவாகப், பருவகாலங்களின் மாற்றங்களுக்கேற்ப எவ்வாறு நடந்துகொண்டால் நன்மை யடையலாம் என்பதையும் மக்கள் உணர்ந்துகொண்டனர். அதுவே மனித நாகரிகத்தின் வெற்றியுமாகும். இவ்வுண்மைகளைப் பின்வரும் பழமொழிகளும் விளக்குகின்றன:

'நம்பிக்கையே உலகை இயக்கி வருகிறது' (இந்தியப் பழமொழி)
'காலத்தை எதிர்பார்த்திரு,; காலம் எவனுக்காவது காத்திருப்பதில்லை'


பருவ காலம் ஒவ்வொன்றும் எப்போது தொடங்கும், எப்போது முடிவுறும் என்பதை மனிதப் பண்பாட்டு வரலாறு கணிப்பிட்டுத் தந்திருக்கிறது. நாகரிக வளர்ச்சி தொடங்கிய காலம் முதலாகப் பருவகாலங்கள் பற்றிய சிந்தனை உடையவர்களாகவே மக்கள் வாழ்ந்துவந்துள்ளனர். பருவ காலங்களின் மாற்றங்கள்;, அம் மாற்றங்களுக்குரிய அறிகுறிகள்;, அவற்றின் விளைவுகள், பக்க விளைவுகள் முதலியவற்றையும் அவர்கள் கவனித்தே செயற்பட்டுள்ளனர். பருவகால அறிகுறிகளும் அவற்றின் மாற்றங்களும் நன்மையாகவும் தீமையாகவும் செயற் பட்டன. ஆயினும், அவை மனித வாழக்கையை நெறிப்படுத்துவன வாகவே அமைந்தன. உலகின் மூதாதையர்கள் தமது வாழ்க்கை அநுபவங்களின் மூலம் அவற்றின் நன்மை, தீமைகளை நன்கறிந்து, அவற்றை அநுபவித்துத் தம் அநுபவங்களைப் பழமொழிகளாக எதிர்காலச் சந்ததியினர்க்கு அளித்துள்ளனர்.

சுற்றுவட்டத்தில் வந்துகொண்டிருக்கும் பருவகாலங்களில் மனித வாழ்க்கைக்குச் சில சாதகமாகவும் அமையலாம,; பாதகமாகவும் அமையலாம். அப் பருவகாலச் சுற்று வட்டத்திற்கமைவாக வாழ்க்கையை வளமாக அமைத்துக்கொள்ள வேணடடிய பொறுப்பு மனிதனுடையது. எனவே பருவ காலத்தையும் சூழலையும் வென்று மனிதன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையைப் பின்வரும் பழமொழி உணர்த்துகிறது:

'சீரற்ற காலநிலையை யன்னலூடாகப் பார்ப்பவனுக்கு அது
எப்போதும் தீயதாகவே தென்படும்.'
(ஆங்கிலம்)

பருவகால மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் பெரிதும் எதிர்பார்த்து வாழ்ந்தோர் மண்ணையும் விண்ணையும் நம்பிய விவசாயிகளே. அவர்களுக்கு அடுத்த படியாகக் கடலோடிகளையும் கடற்றொழிலாளர்களையும் குறிப்பிடலாம். விவசாயம், கடற் றொழில் சம்பந்தமான பழமொழிகளில் அனேகமானவை பருவ காலங்களுடன் தொடர்புடை யனவாகவே காணப்படுகின்றன. இயற்கையை முற்றுமுழுதாக நம்பிய விவசாயிகளிடம் நாளும் கோளும், நேரமும் சகுனமும் பார்த்துச் செயற்படும் போக்கே பெரிதும் காணப்பட்டது. இது, விவசாயத்துடன் தொடர்புடைய உலகப் பழமொழிகளின்; பொதுப் பண்புகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. புனித தினங்களும் புண்ணிய நாட்களும் விவசாயத்திற்குரிய தொடக்க நாட்களாகக் கைக்கொள்ளும் போக்கும் உலக விவசாயிகளின்; பொதுப்பண்பு என்பதைப் பழமொழிகள் சான்றுபடுத்துகின்றன.

காலப்போக்கில் மொழிவளர்ச்சி, பண்பாட்டுவளர்ச்சி என்பவற்றுக்கேற்ப பருவகாலச் சடங்குகள், விழாக்கள் என்பன தோன்றலாயின. ஏர்மங்கலம், ஏர்நாள் விழா, அறுவடைவிழா, புதிர்உண்ணல் முதலான மரபுகள் ஏற்படலாயின. அவற்றோடு தொடர்புடை யனவாக, நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், புராணக்கதைகள் என்பனவும் பருவகாலச் சடங்குகளுடன் இணையலாயின.


3.0 மாரி காலம் (மழையோடு தொடர்புடைய பழமொழிகள்)


'வானம் சுரந்தால் தானம், தவம் சிறக்கும்' என்ற பழமொழி மழையின் சிறப்பைக் குறிப்பதாகும். இப் பழமொழியின் பொருளையே வள்ளுவர் வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் விளக்குகிறார்.

' விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது'.
(குறள் :
16)

இப் பூவுலகில் அனைத்து உயிர்களும் நிலைத்து வாழ்வதற்கு அடிப்படையாக அமைவது மழை என்பதை வள்ளுவர் இக் குறளில் வலியுறுத்துகிறார்.

'பருவத்தே பயிர் செய்' என்ற பழமொழி பருவகால வருகையையும் அதன் சிறப்பையும் சுட்டி, உரிய காலத்தில் பயிர்செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குறிக்கின்றது. மரபுவழிப்பட்ட விவசாயம் மழையை நம்பியே நடைபெற்று வந்தது. 'வானம் பார்த்த பூமி', 'மானாவாரி' என்னுந் தொடர்கள் இதனை நினைவூட்டும். மழைவளம் குன்றியபோது மழை வேண்டி நடாத்தும் கொடும்பாவி எரித்தல், கொம்பு முரித்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல் போன்ற சடங்குகளும், அவற்றுடன் தொடர்புடைய மழை வேண்டிப் பாடும் பாடல்களும் உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் இடம்பெற்றே வந்துள்ளன. தமிழ்; மக்கள் பல்வேறுபட்ட மழைச் சடங்குகளை நடாத்துவர். அச் சடங்குகளில், 'நாடு தழைக்க வேணும் தம்பிரானே, நல்ல மழை பெய்ய வேணும் தம்பிரானே......' போன்ற பல்வேறு பாடல்களைப் பாடுவர்.

மழைநீரைத் தேக்கிவைத்து, அதனைத் தக்கநேரத்தில் தகுந்த முறையில் பயன் படுத்தும் நீர்ப்பாசன விவசா யநாகரிகம் காலப்போக்கில் ஏற்படுவதாயிற்று. அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகப் பழமொழிகளும் வழங்கலாயின.

' மழை பெய்யும்போது நீரை ஏந்திக்கொள்' (துருக்கி)
' மாசி மழையைத் தேக்கிவைக்க அணையை உயர்த்திக் கட்டு'
(ஆங்கிலம்)

உரிய காலத்தில் மழை பெய்யாதுவிட்டால் நாட்டில் வறுமையும் நோயும் ஏற்படுதல் இயல்பே. இவ்வுண்யை பழமொழிகளும் எடுத்துரைக்கின்றன.

'மாசியில் மழைபொய்த்தால் புல்லோ தானியமோ முளைக்காது' (ஆங்கிலம்)
'மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத சேயும் சுணக்கமாக இருக்கும்'.(தமிழ்)

பருவகால மழை நல்ல விளைச்சலைத் தரும்; என்பதில் விவசாயிகள் அசையாத நம்பிக்கை வைத்திருந்தனர்.

'பெரிய வெள்ளியில் மழை பெய்தால் வருடம் முழுவதும் வளம் செழிக்கும்';
'ஆனியில் மழை நல்விளைச்சலைத் தரும்';
'சித்திரையில் மழைபெய்தால் வைகாசியில்; பூப்பூக்கும்'
(ஆங்கிலம்)

மன்னுயிர்களுக்கெல்லாம் நன்மை செய்வது மழை. அதேவேளையில் அது ஆபத்தாக அமைந்து விடுவதுமுண்டு. பருவகாலம் தப்பிய மழையும், அதிவேகம்கொண்ட கடும் மழையும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் அழிவையே கொடுக்கும். 'கடுங் காற்று மழையைக் கூட்டும், கடும் பகை அழிவையூட்டும்' என்ற தமிழ்ப் பழமொழியும் ஈண்டு நோக்கத் தக்கது. 'காலத்தைப்போல் பழிவாங்குவது வேறெதுவமில்லை' என்ற இலத்தீன் பழமொழி மழைக் காலத்திற்கும் பொருந்துவதாகும். எல்லைமீறிய மழை காட்டு வெள்ளமாகப் பெருக்கெடுத்து வளங்களை அழித்துச் செல்வதுண்டு. வெள்ளத்து அழிவுகள் பற்றிப் பல்நாட்டு மக்கள் மத்தியிலும்; பழமொழிகள் வழங்கிவந்துள்ளமையைப் பின்வருவன சான்றுபடுத்துகின்றன.

'வானம் காய்ந்து கெடுக்கும் மழை பெய்து கெடுக்கம்'. (தமிழ்)
'காலமும் வெள்ளமும் எவருக்கும் காத்திருப்பதில்லை'. (ஆங்கிலம்)
'முத்துமழை பெய்ததென்று வாளிஎடுத்துவர மண்மழை பெய்யலாயிற்று.'(தமிழ்)
'வசந்தம் தாய்போல் மெல்ல வருகின்றது; மாரிகாலம் பகைவனைப்போல் மூர்க்கமாய் வருகின்றது.' (துருக்கி)
'மாரிகாலம் மாற்றாந் தாய் போன்றது.' (போலந்து)

மாரிகாலத்தில்; தொடர்ந்து மழை பெய்தல் வழக்கம். அதனை அடை மழை| என்பர். அப் பருவ காலத்தில் விவசாயம், காட்டுத்தொழில,; கடற்றொழில் என்பனவற்றை நம்பி வாழ்க்கை நடத்துவோர் நிலைமை பொதுவாகக் கஷ்டமானதே. எனவே மாரி காலத்தில் வசதியாக வாழ்வதற்குத் தேவையான சேமிப்புக்களைக் கோடை காலத்தில் ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய தேவை ஏற்படுகின்றது. இந்த வாழ்வியல் நடைமுறை உண்மையைப் பின்வரும் பழமொழி நினைவூட்டுகின்றது:

'மாரிகாலம் வந்தால் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கும் கோடைகாலம் முழுவதும் நீ என்ன செய்துகொண்டிருந்தாயென்று.' (ஸெக்கோசலவேக்கியா)

கோடைகால வரட்சியைப் போக்க மழை அவசியமாகின்றது. 'கோடைமழை பெய்ய வேணும் குடிமக்கள் வாழவேணும்..' என்ற தொடக்கத்தனவாகிய உழவர் வழிபாட்டுப் பாடல்களும் இந்த அடிப்படையில் தோன்றியனவே. ஆடியில் பெய்யும் மழையையும் ஆற்றுநீர்ப் பெருக்கையும் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று 'ஆடிப் பெருக்கு' என்ற பெயரில்; தமிழ் நாட்டினர் விழாக் கொண்டாடுவர்.

கோடை காலத்தில் மழை அருமையாகவே பெய்யும். கடவுள் அருளாலேயே அம் மழை கிடைக்கப்படுகிறது என்பது மக்கள் நம்பிக்கை. இதனைப் பின்வரும்; பழமொழி சுட்டிக்காட்டுகின்றது.

'மாரியில் எங்கும் மழைபெய்யும்; கோடையில்
கடவுள் விரும்பிய இடங்களில் மட்டுமே பெய்யும்.'
(பிரஞ்சுமொழி)

மனித நடைமுறை வாழ்க்கை அநுபவங்களின் வெளிப்பாடே நம்பிக்கை. மழையை எதிர்பார்த்திருந்து, அதனைப் பயன்படுத்தி, அது அளவுக்கு மீறியபோது அதனால் அல்லற்பட்டு, மழைதேவைப்பட்டபோது மழைச் சடங்குகள், வழிபாடு முதலியவற்றால் மழையை வருவித்து வாழ்ந்து வந்த மக்களின் மத்தியில், மழையோடு தொடர்புடையனவாக நிலவிய பல்வேறுபட்ட நம்பிக்கைளைப் பழமொழிகள் வெளிப்படுத்துகின்றன. சான்றாகச் சில பழமொழிகளை நோக்கலாம்:

'அந்தி மழை அழுதாலும் விடாது.' (தமிழ்)
'அந்தியிற் செவ்வானம் தோன்றினால் அப்போதே மழை.' (தமிழ்)
'காலையில் தொடங்கிய மழை நண்பகலுக்கு முன் ஓய்ந்துவிடும்.' (ஆங்கிலம்)
'கீழ்த்திசையால் வந்த மழை இரு நாட்களாயினும் நீடிக்கும்.' (ஆங்கிலம்)
'வெயிலோடு சேர்ந்த மழை அரை மணிக்குமேல் நீடிக்காது.' (ஆங்கிலம்)

'கிழக்கே வானவில் தோன்றினால் மறுநாள் மழை வெளிக்கும்,
மேற்கே வானவில் தோன்றினால் மழைநீர்ப் பெருக்கெடுக்கும்.'
(சீனம்)
'மதியநேர வானவில் உடன் மழைக்கு அறிகுறி.'(ஆங்கிலம்)
'புல்லில் பனியிருந்தால் மழை அங்கு போவதில்லை.'(ஆங்கிலம்)
'புனித ஜோன் தினத்தில் மழைவேண்டி வழிபட்டால் தப்பாமல் மழை பெய்யும்.' (ஆங்கிலம்)
'புனித ஸ்வித் தினத்தில் மழைபெய்தால்
40 நாட்கள் தொடரும்.'(ஆங்கிலம்)
'மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை.'(தமிழ்)

மழையை அடிப்படையாகக் கொணடு தத்துவக் கருத்துக்களும் பழமொழிகளினூடாக வழங்கி வந்துள்ளன.

'மழை ஒருவரது கூரையில் மட்டும் பெய்வதில்லை'. ( மலேமொழி)
'நல்லமழை மதபோதகரைப் போன்றது; அதற்கு எப்போது நிறுத்த வேண்டும் என்பது தெரியாது'. ( மலேமொழி)
'மழை நீரைக் குடத்தில் அடக்க முடியாது'. (மலேமொழி)
'நீரில் மூழ்கியவனை மழை ஒன்றும் செய்யாது.' (பேர்சியன்)
'ஏற நனைந்தவனுக்குக் கூதலென்ன? குளிரென்ன?' (தமிழ்)
'கடவுளின் அழுகையே மழை' (கனடா)

மழை அளவுமீறித் தொடர்ந்து பெய்யுமேயானால் ஆறு, குளம், நீர்த்தேக்கங்கள் யாவும் நிறைந்து வெள்ளம் பெருக்கெடுத்தல் வழக்கம். அவ் வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டும் பழமொழிகள் தோன்றியுள்ளன.

'வெள்ளம் வரமுன் அணைபோட வேண்டும்'. (தமிழ்)
'வெள்ளத்தோடு வந்ததெல்லாம் வடியும்போது போய்விடும்.'(ஆங்கிலம்)
'வெள்ளம் போய்விடும் வண்டலே தங்கி நிற்கும்.' (துருக்கி)
'காலமும் வெள்ளமும் எவருக்கும் காத்திருப்பதில்லை.' (ஆங்கிலம்)

மழை, காற்று, புயல் என்பன ஒன்றோடொன்று தொடர்புடையவை. பருவக்காற்று மழையைக் கொண்டுவருகின்றது. பருவ மாற்றங்களும் வளிமண்டல அமுக்கங்களும் புயலுக்குக் காரணமாகின்றன.

'புயலுக்கு முன்பாக முகில்கள் திரள்கின்றன'. (ஆங்கிலம்)
'காற்றை விதைத்தால் புயலை அறுவடை செய்யலாம்.'(எஸ்டேனியா)
'எதற்கும் அஞ்சாத மாவீரன் றொபின்கூட் புயலுக்கு அஞ்சுவான்.'(ஆங்கிலம்)
'தேவகன்னியர் உருண்டால் புயல் வீசும்' (கனடா)
'புயலுக்குப் பின் அமைதி' (தமிழ் , ஆங்கிலம்)


4.0 பனிக் காலம்


குளிர்வலயப் பிரதேசங்களில் வாழ்வோர் பனியை மிக மகிழ்ச்சி யுடனேயே வரவேற்கின்றனர். நத்தார்ப் பண்டிகையில் பார்க்குமிடமெல்லாம் பனிப்படலம் காணப்படுதல், பிறக்கும் புதுவருடத்தின் நற்சகுனமாகும். 'நத்தார்ப் பண்டிகையில் பெரும்பனி பெய்தால் பின்னாளில் நாட்டில் விழாக்கள் சிறக்கும்' என்பது ஆங்கிலப் பழமொழி. 'ஆண்டவனின் உதிர்ந்த சருமமே பனி'; 'தாய் அன்னத்தின் உதிர்ந்த சிறகுகளே பனி' எனனும் கனேடியப் பழமொழிகள் பனியை உருவகித்துக் கூறுவதைக் காணலாம்.

குளிர்வலய மக்களுக்குப் பனிக்காலம் மிகவும் கஷ்டம் நிறைந்த காலமாகும். அப் பிரதேசங்களில் குளிரின் கடுமையைப் பனிக் காலத்தில் கண்டநுப விக்கலாம். 'பத்து நாளில் சூடாக்கியது ஒரே நாளில் குளிர்ந்துவிடும்' என்ற ஜப்பானியப் பழமொழி குளிரின் வேகத்தை உணரவைக்கின்றது. பனிக்குளிரின் கடுமையைத் தாவரங்களே தாங்கிக்கொள்ள முடியாது தம்மை ஒடுக்கிக்கொள்கின்றன என்பதை இலையுதிர் காலம் சான்றுபடுத்துகின்றது. சில தாவரங்கள் பனிக் குளிரின் கடுமையால் மடிந்தே போகின்றன. 'கோடைகாலம் விட்டுச் சென்றதைப் பனிக்காலம் கண்டுகொள்ளும்' என்ற ஆங்கிலப் பழமொழியும்; ஈண்டு நோக்கத்தக்கது. பனிக்காலக் குளிரிலிருந்து மனிதன் போர்வைகளால் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான். 'குளிர் வந்துவிட்டால் அழுக்குத்துணியும் அவசியம்' என்ற ஜப்பானியப் பழமொழியும் இப் பின்னணியில் தோன்றியிருக்கலாம்.

மார்கழி, தை மாதங்களில்; தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் குளிர் இருப்பதுண்டு. சைவ சமயத்தர்களின் திருவெம்பாவை வழிபாடு தொடர்ச்சியாக
21 நாட்கள் அக் குளிர் நாட்களில் நடைபெறும். வாடைக்காற்றின் குளிர்வேகத்தையும் பொருட்படுத்தாது அதி காலையில் நீராடி, ஊர்வலமாகச் சென்று கோயில் வழிபாடு செய்வதன் மூலம் கூடிய பயனைப் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. இதுபோன்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் 'குளிர்காலத்தில் கோயிலுக்குப் போகாதவன் கோடை காலத்தில் நரகத்தை அடைவான்' என்ற பின்னிஷ் பழமொழியும் தோன்றியிருக்கலாம்.

'வெள்ளியில் தொடங்கிய பனிக்காலம் புயலுக்குத் தாயாகின்றது' என்கிறது ஆங்கிலப் பழமொழி. பனிக்காலத்தில் பொதுவாகக் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுதல் வழக்கம். 'பனிக்காலத்தில் காற்று அமைதியாக இருந்தால் அது பனிப் புயலுக்குத் தாய்மையாகின்றது' என்னும் ஆங்கிலப் பழமொழியும் வழங்குகிறது. சில வேளைகளில் பனிப்புயல் பேரழிவுகளை ஏற்படுத்துவது முண்டு. அதனால் மக்கள் பேரிழப்புக்களுக்கு ஆளாக நேரிடுதலுமுண்டு. இதனையே 'பனிப்புயல் ஏழைக்கு மரணம் செல்வந்தனுக்குப் பட்டினி' என்ற ஆங்கிலப் பழமொழி விளக்குகிறது. 'பனிக் காலத்தில் பனிப்புயல் வீசினால் கோடைகாலம் அற்புதமாக அமையும்' என்பதும், 'இலையுதிர் காலத்தில் புயல் வீசின் பனிக் காலத்தில் பனி குறையும்' என்பதும் நோர்வேஜியன் பழமொழிகள் கூறும் உண்மைகளாகும். 'பிந்தி வீசும் பனிப்புயல் ஏழைகளின் வயல்களுக்கு உரமாகின்றது' என்பது அமெரிக்க நாட்டுப் பழமொழி.

'பனி கண் திறந்தால் மழை கண் திறக்கும்' என்ற தமிழ்ப் பழமொழி உலர்வலயச் சூழலைக் குறிப்ட்டாலும், அது குளிர்வலயச் சூழலுக்கும் பொருந்துவதாகும். கடும்பனி பெய்தால் அதனைத் தொடர்ந்து வரும் கால மாற்றத்தின்போது பெருமழை பெய்யும் என நம்பப்படுகிறது. உலர்வலய மக்கள் எவ்வாறு மழையை விரும்புகின்றனரோ அவ்வாறே குளிர்வலய மக்கள் பனியை விரும்புகின்றனர். கடும்பனி பெய்தால் கோடைகாலம் நீடித்த இன்பம் தரும் என்பது அவர்களது நம்பிக்கை. பனிக்காலத்தில் மூடுபனி எங்கும் பரந்து காணப்படுதல் வழக்கம். அதனால் எண்ணற்ற வீதி விபத்துக்கள், விமான விவத்துக்கள் ஏற்படுதல் தவிர்க்க முடியாத தாகின்றன. வீதியிலுள்ள பனியை அகற்றி வீதிப் போக்கவரத்தைச் செம்மைப்படுத்த முடியும். ஆனால் விண்ணையும் மண்ணையும் மூடிநிற்கும் மூடுபனியை எவ்வாறு அகற்றலாம்? இதனாற்போலும் 'மூடுபனியை விசிறியால் விரட்ட முடியாது' என்ற ஆங்கிலப் பழமொழி தோன்றிற்று.

பனிக்காலத்தில் அடிக்கடி காலநிலை மாற்றமடைவது வழக்கம். அதன் வெளிப்பாடாக 'பனிக்காலத்துப் பருவநிலையும் பெண்கள் சிந்தனையும் விரைவில் மாறும்' என்ற ஆங்கிலப் பழமொழியும் வழங்குவதாயிற்று. குளிர்வலயப் பிரதேசங்களில் மே மாத இறுதியிலும் பருவநிலை திடீரென மாற்றமடைந்து குளிர் வீசுவதுமுண்டு. இதன் விளைவாகத் தோன்றியதே 'மேமாதம் முடியும் வரையும் உமது போர்வையை அகற்றாதே' என்ற ஆங்கிலப் பழமொழி.

5.0 வசந்த காலம்


பருவ காலங்களில் வசந்தமே சிறந்தது. பங்குனி முதல் வைகாசி வரையுமுள்ள காலப்பகுதி வசந்தம் எனப்படும். மரம், செடி, கொடிகள் யாவும் இலையுதிர் காலத்;தில்; தம் இலைகளை யெல்லாம் உதிர்த்தி, பனிக்காலக்; குளிரில் ஒடுங்கி, பொலிவிழந்து காணப்படும். அவை மீண்டும் உயிர்ப்புப் பெற்று, தழைத்துத் துளிர்த்துப் பூத்துப் பொலிவுற்று விளங்கும் அழகுக் காட்சியே வசந்த காலத்தின் எழிற் கோலமாகும். 'கிழக்குத் திசையில் சூடான காற்று வீசினால் வசந்தம் விரைந்து வரும்' என்பது கோர்ணிஷ; பழமொழி. ஆனால் 'வசந்த காலம் பிந்தித் தோன்றுதல் இறைவனின் ஆசியாகும்' என ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது.

பங்குனி மாதத் தொடக்கத்தில் காற்றுக் கடுமையாக வீசுவதும், அம் மாத முடிவில் வசந்தம் வீசத் தொடங்குவதும் வழக்கம்;. இக் காற்றின் வேகத்தையும் மென்மையையும் உருவகப் படுத்தி, 'பங்குனி வரும்போது சிங்கம், முடிவுறும்போது செம்மறியாடு' என ஆங்கிலப் பழமொழி வருணிக்கிறது.

'மழையோடு சேர்ந்த பனிக்காலம்; இன்பமான கோடைகாலத்தைத் தரும்' என்பது அமெரிக்க நாட்டுப் பழமொழி. உறைபனி மழையினால் கரைந்து பயிர்களுக்கு நீராகின்றது. அதனால் விரைவில் தாவரங்கள் பயன்தரத் தொடங்குகின்றன. 'பங்குனிக் காற்றுக்கும் சித்திரை மழைக்கும் வைகாசியில் பூப்பூக்கும்'; 'சித்திரையில் மழைபெய்தால் வைகாசியில் பூமலரும்' என்பன ஆங்கிலப் பழமொழிகள். அதுபோன்றே 'பனிக்காலத்தின் தொடக்கத்தில் புயல் வீசுமாயின் வசந்தம் நேரகாலத்துடன் வந்துவிடும்'; 'வசந்த காலப் புயல் குளிரைக் கொண்டுவரும்' என்ற நோர்வேஜியன் பழமொழிகளும் ஈண்டு நோக்கத்தக்கன.

6.0 கோடை காலம்:


கோடை பொதுவாக வெயிற் காலமாகும். இக் காலப்பகுதியிலேயே மனிதன் தனக்குத் தேவையான வளங்களைப் பெருக்கிக் கொள்கிறான். 'தை பிறந்தால் வழி பிறக்கும்'; என்பது தமிழர் நம்பிக்கை. தமிழர் வாழ்ந்துவரும் பாரம்பரியப் பிரதேசங்களில் தைமாதத்தின் பின்பு பயிர்வளம் செழிப்பதால் இப் பழமொழி தோன்றியிருக்கலாம். குளிர் வலயப் பிரதேசங்களில் வைகாசி முதல் புரட்டாதி வரையுமுள்ள காலப் பகுதியிலேயே பயிர் விளைச்சல் கூடுதலாகக் காணப்படுகிறது. ஆங்கு ஆனி மாதத்தில் அறுவடை தொடங்கி விடும். 'காற்றலைவற்ற ஆனியில் சோளன் அறுவடை சிறக்கும்' என்பது அமெரிக்க நாட்டுப் பழமொழி. 'வரண்ட வைகாசியும் துளிமழை பெய்யும் ஆனியும் சிறந்த அறுவடையைத் தரும்' என்பது ஆங்கிலப் பழமொழி. இப்பிரதேசங்களிலுள்ள பழத்தோட்டங்கள் புரட்டாதி வரையும் நல்ல விளைச்சலை வழங்கிக் கொண்டிருக்கும். 'புரட்டாதிக் காற்று அமைதியாக வீசும் வரையும் மரத்தில் பழக்குலையும் உயரத்தே தொங்கும்' என்ற ஆங்கிலப் பழமொழி, அப்பிள், பியர்ஸ் முதலிய பழமரங்களின் பயன்பாட்டு எல்லையைச் சுட்டிக்காட்டுகின்றது.

'பனிக்காலம் நன்றாய் அமைந்தால் கோடைகாலம் சிறக்கும்' என்பது ஆங்கிலப் பழமொழி.; 'கோடையில் இரு நாட்கள் மிகச் சிறப்பாக இருந்தால் அடுத்து இடிமுழக்கத்துடன் மழை' என்ற பழமொழி பிரித்தானியாவில் வழங்குகிறது. 'கோடை நீடிப்பதில்லை' என்ற ஆங்கிலப் பழமொழியும் நோக்கத் தக்கது.

'சேவல் கூவி பொழுது விடியுமா' என்பது தமிழ்ப் பழமொழி. ஆனால் சேவல் கூவுதல் பொழுது விடிதலுக்கு அறிகுறி. வசந்தத்தின் வருகையைக் குயிலோசை அறிவிப்பதாக இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன. இதுபோன்றே ஸ்வலோ
(swallow) என்னும் பறவைகளின் ஓசை கோடைகாலத்தின் வருகையைக் அறிவிப்பதாகப் பண்டைக் கிரேக்கப் பண்பாட்டில் நம்பப்பட்டது. இப் பின்னணியில் தோன்றியதே 'ஒரு ஸ்வலோப் பறவை கோடையை வரவழைக்க முடியாது' என்ற ஆங்கிலப் பழமொழி. இருப்பினும் இயற்கை நியதிகளை மாற்ற முடியாது என்பதே இப்பழமொழிகள் உணர்த்தும் உண்மையாகும்.

7.0 இலையுதிர் காலம்:


தொல்காப்பியனார் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்காலம் எனக் குறிப் பிடுவர். இது தென்திசைச் செல்லும் சூரியன் புவியின் நடுநேர்க்கோட்டினைக் கடக்கும் காலமாகும். குளிர்வலய நாடுகளில் இப் பருவகாலத்தை இலையுதிர் காலம் எனக் குறிப் பிடுவர். அக் காலப் பகுதியில் ஆங்குள்ள மரம், செடி, கொடிகள் தம் இலைகளை உதிர்த்தி மொட்டையாகவே காட்சி தரும். புல், பூண்டுகள் குளிர் தாங்க முடியாமல் காய்ந்து போய்விடும். வனப்பு மிக்க பூஞ்சோலைகள் இலையுதிர் காலத்தில் வெறுமைமிக்க காய்ந்த மரக் காடாகவே காட்சி அளிக்கும். வர்ணப்பட்டுச் சேலையுடனும், பூவும் பொட்டுடனும், மற்றும் பல அணிகலன்களுடனும் பொலிவுற்று விளங்கிய தமிழ்ப் பெண்மணி ஒருத்தி, விதவையானதும், மரபுவழி எவ்வாறு பொலிவிழந்து காணப்படுவாளோ, அதுபோன்றே இலையுதிர் காலத்து மரங்களும் தோற்றமளிக்கும். இலையுதிர் காலத்தின் கோலத்தை உருவகித்து, 'கைம்பெண் இலையுதிர் காலம்' எனச் சித்திரிக்கிறது போலந்து நாட்டுப் பழமொழி.

இலையுதிர் காலத்தை அடுத்து பனிக் காலம் இடம் பெறும். 'இலையுதிர் காலம் பிந்துமாயின் பனிக்காலம் கடுமையாக இருக்கும்' என்ற அமெரிக்க நாட்டுப் பழமொழி பருவ காலங்கள் தத்தம் கால எல்லையை மீறித் தொடருமானால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

8.0 முடிவுரை:

இக் கட்டுரையில் உலக மொழிகள் அனைத்திலுமிருந்து பழமொழிகளை எடுத்துக் காட்டக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆயினும் இயன்றவரை ஒப்பு நோக்கில் சில மொழி களிலிருந்து பழமொழிகள் உதாரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பழமொழிகள் மக்களின் அநுபவவாயிலாகப் பெறப்பட்ட உண்மைகளின் வெளிப்பாடே என்பதும், பருவகால நிகழ்வு களும் அவற்றின் செயற்பாடுகளும் உலக மக்கள் அனைவரது வாழ்க்கை நெறிகளோடு தொடர்புடையனவாகவே அமைந்துள்ளன என்பதும், பருவ காலங்கள் பற்றி மக்கள் முழுமையான அநுபவங்களையும், வருவது உரைப்பதிலும், அதற்கேற்ப நடந்து கொள்வதிலும் திடமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதும் உதாரணங்கள் மூலம் இங்கே விளக்கப்படடுள்ளன. இக் கட்டுரையில் வகுத்துக் காட்டப்பட்டுள்ளவாறு பருவகாலங்கள் ஒவ்வொன்றுடனும் தொடர்புடைய பழமொழிகள் உலக நோக்கில் ஆராயப்படும்போது மனிதப் பண்பாட்டு வரலாற்றின் அறிவியல் வளர்ச்சியைக் கண்டு கொள்ள வாய்ப்புண்டு.


துணை நூல்கள்:

ராமஸ்வாமி, ப. (பதிப்பு) , உலகப் பழமொழிகள். வள்ளுவர் பண்ணை, சென்னை, 1987.

Balasundaram, E. A Study of Tamil Folk Dance : Stick Dance.  Cintanai- New Series,

Journal of Arts Faculty, University of Jaffna, Sri Lanka, Vol 3 ; 2+3, July-Aug. 1985.

Fowke, Edith.  Canadian Folklore: Perspective on Canadian Culture. Toranto, 1988.

Gergen, K.J. Proverbs, Pragmatics and Prediction. Canadian Psychology.V.31 :3, July 1990

Houghton, Patricia. The Vassell Book of Proverbs, Cassell ,  London, 1981.

Mieder, Wolfgang. Proverbs are Never Out of Season - Popular Wisdom in the

                                  Modern Age.              Oxford University Press, Oxford, 1993.

Mieder, Wolfgang. Encyclopedia of World Proverbs. The Printice -Hall, New Jersey.1985.

Simpson, John. The Concise Oxford Dictionary of Proverbs. New edition, Oxford, 1993.

 

...................................................

ஆறாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு - கனடா