தமிழ்மொழியின் தொன்மை

செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
 

பொய் அகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி


என்று புறப்பொருள் வெண்பா மாலையிலே ஐயனாரிதனார் என்கின்ற புலவர் தமிழ் இனத்தின் தொன்மை பற்றி விளம்புகின்றார்.

முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்றால், முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழியல்லவா? அத்தகைய முந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதிலே, செந்தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் என்பதிலே நாம் சிந்தை மகிழ்ந்து பெருமைப்படவேண்டும்.

உலகிலே நாகரிகமடைந்த முதல் மனித இனம் தோன்றிய இடம் லெமூரியாக் கண்டம் என்று சொல்கிறார்கள். லெமூரியாக் கண்டம் என்பதே குமரிக்கண்டம் என்று சொல்கிறார்கள்.

அந்த லெமூரியாக் கண்டத்திலே-அந்த குமரிக்கண்டத்திலே தோன்றிய மனித இனம் மேலும் வளர்ச்சியடைந்தபோது, நாகரிகமடைந்தபோது தோன்றிய முதலாவது மொழி தமிழ்மொழியே என்று சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் யார் சொல்கிறார்கள். அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எந்த அறிஞர்கள் சொல்கிறார்கள்? நம் சொந்தநாட்டு அறிஞர்கள் மட்டுமா? இல்லை மேலை நாட்டு அறிஞர்களே மிகவும் சிறப்பாகச் சொல்கிறார்கள். எப்படிச் சொல்கிறார்கள்- ஆண்டாண்டுகாலமாக அரும்பாடுபட்டுச் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளாகச் சொல்கிறார்கள். ஆதாரங்களோடு சொல்கிறார்கள்.

ஆதியிலே அனல்பிழம்பாக இருந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்தது. கால ஓட்டத்திலே வெப்பம் தணிந்தது. அவ்வாறு முதன்முதலில் வெப்பம் தணிந்த பகுதி குமரிமுனைக்குத் தெற்கே நில நடுக்கேட்டிற்கு இருபகுதியும் இருந்த நிலப்பரப்பே என்றும், அதுவே லெமூரியாக்கண்டம் என்றும், அதுவே மக்களினம் முதன்முதலில் தோன்றிய பகுதி என்றும் புவியியல் அறிஞர் ஹெக்கேல் அவர்கள் அறிக்கையிட்டுள்ளார்.

லெமூரியாக் கண்டமென குறிப்படப்படுகின்ற குமரிக்கணடத்தில்தான் முதல்மனிதன் பிறந்தான் என்றும், அந்த மனித இனம் பேசிய மொழி தமிழே என்றும் மனிதவியல் ஆய்வாளரான அறிஞர் எலியட் கூறியுள்ளார்.

ஆதிமனிதன் தோன்றிய இடம் தமிழீழம் உட்பட்ட இலெமூரியாக் கண்டமே. எல்லாக் கண்டங்களுக்கும் தாயகமாக இருப்பதும் லெமூரியாக் கண்டமே என்று மொழியறிஞர் கார்வே அவர்கள் மொழிந்துள்ளார்.

உலகமொழிகள் எல்லாவற்றிலுமே மிகவும் பழமையான மொழி தமிழ்தான் என்பதைத் தனது ஆய்வின் மூலம் நிறுவிக்காட்டினார், உலகின் சிறந்த மொழியியல் அறிஞரான நோம சோம்ஸ்கி அவர்கள்.

கடலால் மூழ்கடிகக்கப்பட்ட இலெமூரியாக் கண்டத்திலே வாழ்ந்த இனமே உலகின் முதல் மனித இனம் என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் பேராசிரியர் பெஸ்ருகோவ் (
Prof.Bezrukov) தலைமையிலான ரஷ;ய நாட்டு மொழிஆய்வுக்குழுவினர் அறிக்கையிட்டுள்ளனர்.

'அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசையாண்ட தென்னவன் வாழி'

                                                             (சிலப்பதிகாரம்- நாடுகாண்காதை
17-22)

என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து' என்கிறது தொல்காப்பியம். இதிலிருந்து ஐயாயிரம் ஆண்டுகளுக்க முன்னர், வேங்கடத்தை வடக்கு எல்லையாகக் கொண்டு தெற்கே கடல் எல்லைவரை விரிந்து பரந்த பூமி முழுவதும் வழங்கியிருந்த மொழி தமிழ் மட்டுமே என்பதை அறிய முடிகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகின்ற சிந்துவெளிநாகரிகத்திலே, சிறந்துவிளங்கியதாகக் கூறப்படும் மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் நகரங்கள் இருந்த இடங்களிலே செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட சித்திர எழுத்துக்கள் பழந்திராவிட மொழியாகிய தமிழ்மொழிக்குரியன என்று பூனா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஹென்றி ஹீராஸ் பாதிரியார் அவர்கள் தக்க சான்றுகளோடு கூறியுள்ளார்.

தமிழ்மொழியே மனிதன் பேசிய முதல் மொழி என்று தமிழிசை ஆராய்ச்சி அறிஞர் இராவ்சேகிப் ஏபிரகாம் பண்டிதர் அவர்களும், தவத்திரு தனிநாயகம் அடிகளார் அவர்களும் தக்க சான்றுகளோடு கூறியுள்ளார்கள்.

தமிழ் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி தந்த சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள், வடமொழி, ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் முதலிய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் திகழ்வது சுமேரிய மொழியென்றும், அந்தச் சுமேரியமொழிக்கும் தாய்மொழி தமிழே என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகமொழிகள் அனைத்தும் ஒருமொழியிலிருந்துதான் தோன்றியுள்ளன அம்மொழிதான் தமிழ் மொழி என்று தனது மொழிஆராய்ச்சியின் முடிவாக சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

கி.மு. பத்தாயிரம் ஆண்டுகளுக்க முன்னரே குமரிக்கண்டத்தில் தமிழ் என்னும் பெயர் ஏற்பட்டு விட்டது என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் கூறுகின்றார்.

தமிழே உலகின் ஆதித் தாய் மொழி என்பதை, 'பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி' என்று தமிழ்விடுதூது பகர்கின்றது.

'சதுமறையா நியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே'
என்று மனோன் மணியம் முழங்குகின்றது.

தமிழ்மொழி மிகத்தொன்மையானது என்கிறோம் உலக மொழிகளிலேயே அதுதான் முதலில் பிறந்தது என்பதால் !
சைவசமயம் மிகவும் தொன்மையானது என்கிறோம், உலக வணக்கமுறைகளிலேயே அதுதான் முதலில் எழுந்தது என்பதால் !
தமிழ் இனம் மிகத்தொன்மையானது என்கிறோம,; உலகத்திலே மனித இனமாக அதுதான் முதலில் மலர்ந்தது என்பதால் !

இப்பொழுது வாழுகின்ற மதங்களுக்கும், வளருகின்ற மொழிகளுக்கும் தோன்றிய வரலாறு உண்டு. ஆனால் அந்த வரலாறுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே வனப்போடு வாழ்ந்து கொண்டிருந்த மொழி தமிழ் மொழி.

இவ்வாறெல்லாம் நாம் பேசுகின்றபொழுதும் எழுதுகின்றபொழுதும் நம்மில் சிலருக்கே அது பிடிக்கவில்லை. தவறுதலாக இவர்களெல்லாம் தமிழராய்ப் பிறந்துவிட்டார்களோ என்று தெரியவில்லை.

நாம் பழம்பெருமை பேசுகிறோம் என்று நகைக்கிறார்கள். இப்போது எதற்கு இந்த வீண்பேச்சு என்று முறைக்கிறார்கள். நாம் பழமைபேசவில்லை. நமது பழமையைப்பற்றிப் பேசுகின்றோம். நமது இன்றைய நிலைமையை நினைத்து கூசுகின்றோம். அதனால் ஆதாரங்களை அள்ளி வீசுகின்றோம்.

நமது இனத்தின் இருப்பை நிலைப்படுத்தும் முயற்சி இது.
நமது மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் முயற்சி இது.
நமது மொழியைத் திட்டமிட்டுச் சிதைத்துக்கொண்டிருப்பவர்களும்
நமது இனத்தைக் கூறுபோட்டு அழித்துக்கொண்டிருப்பவர்களும்
நமது நிலத்தைத் தந்திரமாக எடுத்துக்கொண்டிருப்பவர்களும்
நமக்கெதிராக வைக்கின்ற வாதங்கள், நமது மொழி முந்திப் பிறந்தது அல்ல என்பது-
நமது நிலம் நமக்குச் சொந்தமாக இருந்தது அல்ல என்பது-
நமது இனம் வந்தேறு குடிகள் என்பது,
நமக்குத் தாயகம் என்று ஒன்று உலகிலே எந்தக்காலத்திலும் இருந்ததேயில்லை என்பது

எனவே நமது இனத்திற்கெதிராக எழுப்பப்படுகின்ற வாதங்களை,
நமது நிலத்திற்கெதிராக விடுக்கப்படுகின்ற வாதங்களை,
நமது மொழிக்கெதிராக முன்வைக்கப்படுகின்ற வாதங்களை
எதிர்கொள்ளவேண்டுமென்றால், இல்லாதொழிக்கவேண்டுமென்றால்,
நமது மொழியின் தொன்மையை, அந்த மொழியோடு இணைந்த நம் இனத்தின் தன்மையை, தொன்றுதொட்டு சொந்தமாக நாம் வாழ்ந்து வருகின்ற நமது நிலத்தின் உண்மையை ஆதாரங்களோடு எடுத்தியம்பவேண்டியது அவசியமானது.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் மிகமிக அவசியமானது.
இவை மறைவாக நமக்குள்ளே பேசுகின்ற பழங்கதைகளல்ல.
மாற்றாரின் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க வீசுகின்ற வாதங்கள்.
இதனால் நமக்கென்ன சேதங்கள்? இதிலே நமக்குள்ளே ஏன் வீணான பேதங்கள்?

உலகிலே
6000 இற்கும் அதிகமான மொழிகள் இருப்பதாக அறியப்படுகின்றது. அவற்றுள் இலக்கிய, இலக்கணமுடைய மொழிகள் ஏறத்தாழ 3000 என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் தொன்மையான மொழிகள் ஆறு. ஆவற்றிலே தமிழ்மொழியும் ஒன்று என்பது நாம் செய்த பேறு.

உலகில் வழங்கப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளிலே ஆறே ஆறு மொழிகள்தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியவை என்று மொழியாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆறும் செவ்வியல் மொழிகள் என யுனெஸ்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.இந்திய அரசும் சில வருடங்களுக்கு முன்னர் தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்துள்ளது.

மனிதசிந்தனைகளை, உணர்வின் நுட்பங்களை மிகத்தெளிவாகவும், அழுத்தம்திருத்தமாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் இந்த ஆறு செம்மொழிகளிலும் தமிழ்மொழிக்கே மிகச்சிறப்பாக உள்ளதென்று மொழியியலின் தந்தை எனப்போற்றப்படும் கலாநிதி. ஏமினோ அவர்கள் கூறியுள்ளார்.
தமிழால் தனித்து இயங்க முடியும் என்பதை,
தமிழே உலகில் மனிதன் பேசிய முதல்மொழி என்பதை,
தமிழே திராவிடமொழிகளுக்குத்தாயும், ஆரியமொழிக்கு முலமும் ஆகும் என்பதை, தமிழ்மொழி அறிவியல் அடிப்படையில், மொழியியல் அடிப்படையில் முறையாக வளர்ந்து வளமான மொழி என்பதை,
ஆதாரங்களோடு இந்த உலகிற்கு நிரூபித்துக்காட்டினார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள்.

இன்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீரோடு இருந்த மொழி, சிறப்போடு வளர்ந்த மொழி, வளத்தோடு வாழ்ந்த மொழி, வனப்போடு அமைந்த மொழி நமது செந்தமிழ் மொழி.
தமிழ் மொழியில் இன்று கிடைக்கப்பெறும் மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியம் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தொல்காப்பியரால் எழுதப்பட்டது. தமிழின் முழுமையான எழுத்துவடிவங்களைக் கூறும் இந்த இலக்கணநூல் தோன்றியது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரென்றால், அதற்கு எவ்வளவு காலத்திற்கு முன்னர் தமிழ்மொழி வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஊகித்துப் பார்த்தல் வேண்டும்.
இலக்கியத்திற்குத்தானே இலக்கணம்? இலக்கிய வளர்ச்சிக்குப்பின்னர்தானே அதற்கு இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கும்.

ஐயாயிரம் வருடங்களுக்குமுன்னால் இலக்கணம் வகுத்தநூல் எழுதப்பட்டது என்றால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் இலக்கியங்கள் தோன்றியிருக்கும் என்பது சொல்லாமலே புரிகின்ற உண்மையல்லவா?

தொன்மையானது- முன்மையானது, எண்மையானது- ஒண்மையானது, இனிமையானது- தனிமையானது, இளமையானது- வளமையானது,
இறைமையானது, மறைமையானது, தாய்மையானது- தூய்மையானது, அம்மையானது- செம்மையானது, இயன்மையானது- வியன்மையானது

என்கின்ற இத்தகைய பதினாறு அற்புதப் பண்புகளைக்கொண்ட உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழியாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இந்திமொழிக்குத் தாய்மொழி சமஸ்கிருதம். மராத்திய மொழிக்குத் தாய்மொழி சமஸ்கிருதம். இந்தியும் வாழ்கின்றது. மராத்தியும் வாழ்கின்றது. ஆனால் சமஸ்கிருதம் இறந்துவிட்டது. இலத்தீன் மொழிதான் ஆங்கிலத்திற்கும், பிரெஞ்சுக்கும், ஜெர்மனுக்கும் எழுத்துக்களை வழங்கியது. அந்த இலத்தீன் எப்போதோ பேச்சுவழக்கில் இல்லை என்றாகிவிட்டது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ். இந்திக்கும், சிங்களத்திற்கும் ஏராளமான சொற்களைத் தந்தது தமிழ். ஆயினும் அது இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

அதனால்தான்,

பல்லுயிரும் பலவாகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்
இருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன்உதரத்து உதித்து எழுந்தே
ஒன்றுபலவாயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு
அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே


என்று மனோன்மணியம் தமிழ்மொழியைப் போற்றுகின்றது.

முன்னைய காலங்களில் கன்னடம் கருநாட்டுத் தமிழ் என்று அழைக்கப்பட்டது. துளு நாட்டுத் தமிழ் என்று துளு குறிப்பிடப்பட்டது. மலையாளம் மலைநாட்டுத் தமிழ் என்றும் சேரத் தமிழ் என்றும் வழங்கப்பட்டது.

தமிழ்மொழியிலிருந்தே உலகின் பல மொழிகள் தோன்றியிருக்கின்றன.

சீனமொழிமிகத் தொன்மையானமொழி. அந்தச் சீனமொழிக்கும் மூத்த மொழி தமிழ் மொழி. சிந்துவெளிநாகரிகக் காலத்தைய தமிழ்மொழியின் எழுத்துக்கள் பட எழுத்துக்கள் என்பது ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்டு, அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம். சிந்துவெளித் தமிழர்களின் ஒருபகுதியினர் இடம்பெயர்ந்து சீனப்பகுதியில் குடியேறினார்கள் என்பது அறிஞர்களது ஆராய்ச்சி முடிவு. எனவே சிந்துவெளித் தமிழ் எழுத்துக்களே சில மாற்றங்களைப்பெற்று இன்றைய சீனமொழியாகத் திகழ்கின்றது என்பது அறிஞர்களது தீர்மானம். சீன எழுத்துக்கள் பட எழுத்துக்களாக இருப்பதும் அதற்கோர் ஆதாரம்.

எனவே செந்தமிழ் மொழியின் தொன்மையைச் சிந்தை கொள்வோம்.
அந்த மொழியைப் பேசுவதில் பெருமை கொள்வோம்
எந்த மொழியும் எம்மொழிக்கு நிகரல்ல வென்று இறுமாந்து நிற்போம்.
வந்தனை செய்வோம் நமது மொழியை வணங்கி நிற்போம்
மற்றைய மொழிகளையும் மதித்து நடப்போம்.
முடிந்தால் படித்துச் சிறப்போம்.
வாழ்க தமிழ். வணக்கம்.



srisuppiah@hotmail.com