அரங்க. பாரியின் கவிதை உலகம்

முனைவர் இரா.மோகன்


'மகனே
நீ இருக்க
என் கருவறை இருந்தது
நான் இருக்க
ஒரு அறை கூடவா இல்லை
உன் வீட்டில்'

                     
(கண்ணீர் கண்ணீர், ப
.9)

என்னும் உருக்கமான குறுங்கவிதையின் வாயிலாகத் தமிழ்க் கவிதை உலகில் அடையாளம் காணப்பெற்றவர் அரங்க.பாரி. 'இன்றைய சூழலில்... இந்தக் கவிதையை உலகின் அனைத்து மொழிகளிலும் பெயர்த்து நெரிசல் மிக்க பகுதிகளில் மனசாட்சியைப் பிடித்துலுக்கும் விளம்பரப் பலகைகளாய் வைக்கலாம்' ('நெருப்பின் குழந்தை', கண்ணீர்; கண்ணீர், ப.
4) என இக் கவிதையைக் குறித்து விதந்து மொழிவார் கவிஞர் அறிவுமதி. அவரே பிறிதோர் இடத்தில் குறிப்பிடுவது போல், 'இலக்கியங்கள் சொல்லித் தருகிறவர்களுக்கு எழுதும் ஆற்றல் இயல்பானது. ஏனோ பெரும்பகுதிப் பேராசிரியர்கள் அனைத்திந்தியத் தமிழாசிரியர் மன்றத்திற்கான கருத்தரங்கக் கட்டுரைகள் எழுதுபவர்களாகவே நின்றுகொள்கின்றனர்' (ப.3). பொதுவான இவ் விதியை மீறி, மீரா, அப்துல் ரகுமான், நா.காமராசன், சிற்பி, மு.மேத்தா ஆகிய பேராசிரியர்களின் அடிச்சுவட்டில் நிகழ்தமிழ் இலக்கியப் படைப்பாளியாக விளங்கிக் கவிதைத் துறைக்குப் பெருமையும் பங்களிப்பும் நல்கியுள்ள அரங்க.பாரி வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டிய ஒரு பேராசிரியர் ஆவார். இவ் வகையில் 2004-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள அவரது 'கண்ணீர் கண்ணீர்', 'காதல் நேரம்' என்னும் இரு கவிதைத் தொகுப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. முதல் தொகுதிக்கு 'நெருப்பின் குழந்தை' என்னும் தலைப்பில் கவிஞர் அறிவுமதியும், இரண்டாம் தொகுதிக்குக் 'காதல் என்பது...' என்னும் தலைப்பில் கவிஞர் பா.விஜய்யும் அணிந்துரைகள் தந்துள்ளனர்.

கண்ணீரின் பன்முகங்கள்

கவிப்பேரரசு வைரமுத்து 'தண்ணீர் தேசம்' தந்தது போல், கவிஞர் அரங்க.பாரி 'கண்ணீர் தேசம்' தந்துள்ளார்; இத் தொகுப்பில் கண்ணீரின் பல்வேறு முகங்களைக் கவிதைகளாக நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

'எதை எதையோ
எழுதி விட்டு
என் பெயரை வைக்கிறீர்களே...'
(ப
.8)

என்னும் 'கவிதையின் கண்ணீ'ருடன் தொடங்கும் இத் தொகுப்பு,

'எனது
வடிவில்
இருப்பதாலா
ஈழத்தில்
இவ்வளவு
கண்ணீர்?'
(ப.
60)

என்னும் 'கண்ணீரின் கண்ணீர்' கவிதையுடன் நிறைவு பெறுவது சிறப்பு; நயம். கவிஞர் சிற்பி 'கண்ணீர்த் துளித் தீவு' (சிற்பியின் கவிதைகள்: தொகுதி 1, ப.618) என ஈழத்தைச் சுட்டியிருப்பதும் இங்கே நினைவு கூரத் தக்கதாகும்.

தமிழின் கண்ணீர்

'தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திட வேண்டும்' என்றும், 'அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாச் செயல்பாடுகளும் தமிழ் மொழியில் நடந்திட வேண்டும்' (பாரதியார் கட்டுரைகள், பக்.
297 ரூ 320) என்றும் கனவு கண்டார் கவியரசர் பாரதியார். அவர் கனவு இன்று வரை நனவாகவில்லை; நடைமுறைக்கு வரவில்லை; 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற நிலை இன்னும் உருவாகவில்லை. இதனைத் தமக்கே உரிய பாணியில் ஒரு கவிதையாக்கி உள்ளார் அரங்க.பாரி. அக் கவிதை வருமாறு:

'தமிழ்நாட்டில்
எல்லாம் இருக்கிறது
என்னைத் தவிர...'
(ப
.59)

என்று தமிழே கண்ணீர்; வடிக்கின்றதாம்!


மானுடத்தின் கண்ணீரும் மதத்தின் கண்ணீரும்


இன்று சாதியின் பெயரால் நடக்கும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும், மதத்தின் பெயரால் நிகழும் கலவரங்களுக்கும் பூசல்களுக்கும் அளவே இல்லை. இவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்து மானுடமும் மதமுமே கண்ணீர் வடிக்கின்றன என்கிறார் கவிஞர்.

'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' (பாரதியார் கவிதைகள், ப.
268) என்று பாடிய பாரதியாரே இன்று இருந்திருந்தால், 'சாதிகள் இருக்குதடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் லாபம்' என்று நாட்டு நடப்பைப் பார்த்து உள்ளது உள்ளபடியே படம்பிடித்துக் காட்டி இருப்பார்.

'சாதிப் பட்டியலில்
பிள்ளைமார், முதலியார்,
கள்ளர், வன்னியர்
... ...
எல்லாச் சாதிகளும்
இடம் பெற்றிருக்கின்றன
எம்மைத் தவிர'
(ப
.46)

என மானுடமே கண்ணீர் வடிப்பதாகக் கவிதை படைத்துள்ளார் அரங்க.பாரி.
இதே போல, 'மதத்தின் கண்ணீர்' என்னும் தலைப்பிலும் நல்லதொரு கவிதையை வடித்துள்ளார் அரங்க.பாரி.

'தயவு செய்து
பெயரை
மாற்றிக் கொள்ளுங்கள்
மதம் பிடித்து ஆடும்
உங்களுக்குப் பெயர்
மனிதர்கள்...
எங்களுக்குப்
பெயர்
மதமா?'
(ப.
45)

என்று மதமே மதம் பிடித்து அலையும் - ஆடும் - மனிதர்களைப் பார்த்து பெயரை மாற்றிக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது, கூர்மையான கேள்விக் கணையினை மனிதர்களிடம் தொடுக்கின்றது.

கண்ணகியும் காவிரியும்

'நம் நாட்டில் அரசியலைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் அரசியல் இருக்கிறது' என்னும் கூற்று விசித்திரமானதாகத் தோன்றும்; ஆனால், அதுதான் அப்பட்டமான உண்மை. 'இது இல்லாத துறை இல்லை அவனியில்' என்னும் அளவிற்கு இன்று அனைத்துத் துறைகளிலும் அரசியல் தலையீடு நீக்கமறக் காணப்படுகின்றது. இப்போக்கு 'உயர்ந்தோர் ஏத்தும் உரைசால் பத்தினி'யாம் கண்ணகி சிலையையும் விட்டு வைக்கவில்லை. கண்ணகிக்குப் பூம்புகாரில் வாழ வழி இல்லையாம்; மதுரையில் பிழைக்க வழி இல்லையாம்; சென்னைக் கடற்கரைச் சாலையிலோ சிலை வடிவில் நிற்பதற்குக் கூட நாதி இல்லாமல் போயிற்றாம் கண்ணகிக்கு!

'வாழ வழியில்லை பூம்புகாரில்
பிழைக்க வழியில்லை மதுரையில்
சிலையாக நிற்கக்கூட வழியில்லை
சென்னையில்...'
(ப.
10)

என்பது தமிழ் உணர்வுடையோரை உசுப்பும் - உலுக்கி எடுக்கும் - உயரிய கவிதை ஆகும்.

அரசியல் காரணங்களால் காலங் காலமாகத் தீர்க்கப் படாமல் இருந்து வரும் காவிரிப் பிரிச்சினையையும் கவிஞர் அரங்க.பாரி பாடத் தவறவில்லை.

'எப்போது
போவேன்
புகுந்த வீட்டிற்கு...'
(ப.
55)

எனக் கண்ணீர் சிந்திக் கலங்கி நிற்கின்றாளாம் காவிரித் தாய்!
கவிஞர் தங்கம் மூர்த்தி தம் ஹைகூ கவிதை ஒன்றில் குறிப்பிடுவது போல், 'சிரிக்காமலே குழி விழும் நிலையில் தான் நம் ஊர்ச் சாலைகள் இருக்கின்றன' (முதலில் பூத்த ரோஜா, ப.
33). அரங்க.பாரியோ குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் கண்ணீர் அரும்பி நிற்கும் கண்களோடு ஆட்சியாளர்களை நோக்கிக் கேட்பதாக ஒரு கவிதை படைத்துள்ளார். அக் கவிதை இதோ:

'ஆட்சியாளர்களே!
உங்களுக்கு
உள்ளங்களே இல்லையா?
எங்களின்
பள்ளங்களைச் சரி செய்ய...'
(ப
.35)

பெண்களின் கண்ணீர்


'பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்!'
(பாரதியார் கவிதைகள், ப.
344)

எனப் பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டதால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்காகக் கசிந்துருகிப் பாடுவார் பாரதியார். அவரை அடியொற்றிச் சமுதாயத்தின் அடித்தட்டில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பழிக்கும் தூற்றுதலுக்கும் ஆளாகி, கேட்பாரற்று, நாதியற்று, நலிவுற்று, வாடி வருந்தும் பெண்களின் கண்ணீரைக் கவிதைகளாக வடித்துள்ளார் அரங்க.பாரி. இவ்வகையில் மலடிகள், விதவைகள், அலுவலகப் பெண்கள், முதிர்கன்னிகள், விலைமகளிர் ஆகியோரது அவலங்களை - அவர்களது கண்ணீர்த் துளிகளை - அவர் பாடுபொருள் ஆக்கியுள்ளார்.

குழந்தை பெறாத ஒரு மலடியின் மீது சமுதாயம் - ஊர்ப் பெண்கள் - சுமத்தும் பழிச்சொற்களுக்கும் வசைமொழிகளுக்கும் அளவே இருக்காது. இவற்றிற்கு ஆளாகி ஒரு மலடி அல்லற்பட்டு ஆற்றாது அழுது சிந்தும் கண்ணீர்க் கவிதை இது:

'மடியில் கனமில்லை
வழியில் பயமில்லை
என்பார்கள்...
என் மடியில் கனமில்லை
ஆனால்
வழியெல்லாம் பயம்...'
(ப
.16)

இங்கே தமிழ் மக்கள் நாவில் தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு பழமொழியைக் கையாண்டு மலடிக்கு எதிராகச் சமுதாயம் இடித்துரைக்கும் பழமொழியின் தீவிரத்தைப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர். ''விதவை' என்று எழுதுகிறேன் / எழுத்தில் கூட என்னால் / பொட்டு வைக்க முடியவில்லை / சமுதாயம் மட்டுமல்ல / தமிழ்மொழி கூடத்தான் / உங்களை ஒதுக்கி வைத்துவிட்டது!' என்பது நிர்மலா நரேந்திரன் படைத்துள்ள ஓர் அருமையான புதுக்கவிதை. அரங்க.பாரியோ,

'குளியலறைச்
சுவர்களிலும்
ஆளுயரக்
கண்ணாடிகளிலும்
ஸ்டிக்கர் பொட்டுகள் ...
எப்போது
எங்கள் நெற்றியில்...?'
(ப.
17)

என்று கேட்டு விதவைப் பெண்கள் கண்ணீர் வடிப்பதாகக் கவிதை புனைந்துள்ளார். கவிஞரின் பிறிதொரு கவிதையில் 'விதவைகளுக்கும் / எங்களுக்கும் என்ன பகை...' (ப.52) என்று கேட்டுப் பூக்கள் கண்ணீர் விடுகின்றன.

பொருளாதாரத் தேவைகளுக்காக இன்று வேலைக்குப் போகும் அலுவலகப் பெண்களின் அவலமோ வேறு விதம்; தனி ரகம். அவர்களைப் பொறுத்த வரையில் -

'வழியெல்லாம்
வாலிப முட்கள்
அலுவலகத்திலோ
வயதான முட்கள்...'
(ப.
18)

முட்களாக இருந்து பெண்களை வருத்துவதில் - துன்புறுத்துவதில் - வயது வித்தியாசமே இல்லையாம்; வாலிபர், வயதானவர் இருவருமே இவ்வகையில் ஒன்று தானாம்!

'மாத விலக்கே
நிற்கப் போகிறது...
இனி
மாமன் வந்தால்தான் என்ன,
மச்சான் வந்தால்தான் என்ன...'
(ப.
19)

என்பது முதிர்கன்னியர் கண்ணீர் மல்க விடும் ஏக்கப் பெருமூச்சு.

'விளக்கை
அணைத்தால் தானே
எங்களுக்கு
வெளிச்சம்...'
(ப.
21)

என்பது விலைமகளைப் பற்றிய வித்தியாசமான கண்ணீர்க் கவிதை.

காலண்டரின் கண்ணீர்

காலண்டர் கண்ணீர் வடிக்கின்றதாம். எதற்காக என்கிறீர்களா? இதோ, கவிஞரே காரணம் கூறுகின்றார், கேளுங்கள்:

'நீங்கள்
ஒன்றையும்
சாதித்துக் கிழிக்காமல்
என்னை மட்டும்
கிழித்தெறிகிறீர்களே...'
(ப.
13)

பணம் படைத்த கோடீசுவரராக இருந்தாலும் சரி, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாத அன்றாடங்காய்ச்சியாக இருந்தாலும் சரி, ஒரு நாள் என்றால், எல்லோருக்கும் சரிநிகர் சமானமாக இருபத்திநான்கு மணிநேரம் தான். ஒரு மனிதன் ஒரு நாளில் - வாழ்நாளில் - வாழ்வாங்கு வாழ்ந்து ஏதேனும் சாதனை படைக்க வேண்டுமே ஒழிய, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் வேடிக்கை வாழ்வு வாழ்ந்து மடியக் கூடாது. 'வாழ்நாளில் ஒன்றையும் சாதித்துக் காட்டாமல் - கிழிக்காமல் - காலண்டர் தாளை மட்டும் கிழித்தெறிவதற்கு மனிதனுக்கு என்ன தகுதி இருக்கிறது?' என்று கேட்கிறார் கவிஞர். இனி, ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்து காலண்டரில் தாளைக் கிழிக்க முற்படும் போதெல்லாம் கவிஞரின் இக் கவிதை நம் நினைவுக்கு வராமல் போகாது. 'எல்லாந்தான் படிச்சீங்க - என்ன பண்ணிக் கிழிச்சீங்க?' என்னும் ப(h)ட்டுக் கோட்டையாரின் திரைப்பாடல் வரிகளும், 'என்ன செய்து கிழித்தாய் ஃ நாள்தோறும் கேட்கும் ஃ நாட்காட்டி' (சின்ன நதிகள், ப.82) என்னும் பல்லவனின் ஹைகூ கவிதையும் இங்கே ஒப்புநோக்கி மகிழத்தக்கவை.

வித்தியாசமான கண்ணீர்க் கவிதைகள்

கவிஞரின் உலகமே தனி. அவர் ஆணையிட்டால் எதுவும் நடக்கும்; கூப்பிட்ட குரலுக்கு எல்லோரும் செவி சாய்ப்பார்கள். புத்தகம் பேசும்; வெங்காயம் கண்ணீர் வடிக்கும்; தொலைபேசி தன் சோகத்தைச் சொல்லும்; நரை முடியும் தன் ஆதங்கத்தை எடுத்துரைக்கும். குப்பைத் தொட்டியும் கண்ணீர் மல்கக் கெஞ்சும்; செருப்புகளும் தங்கள் உணர்வை வெளியிடும். உயர்திணை மக்களின் கண்ணீரை மட்டுமன்றி, அஃறிணை உயிர்களின் - பொருள்களின் - கண்ணீர்த் துளிகளுக்கும்; இடம் தந்திருப்பது கவிஞரின் கருணை உள்ளத்தைப் பறைசாற்றுவதாகும். 'படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' என்பார் கவியரசர் கண்ணதாசன். அது போல், உலகில் புத்தகங்களைப் படித்து விழிப்புணர்வைப் பெறுவோர் உண்டு; புத்தகங்களைக் கையில் எடுத்த மறுகணமே தூக்கத்தால் தழுவப் பெறுவோரும் உண்டு.

'நாங்கள் என்ன
தூக்க மாத்திரைகளா...
தூக்கம்
வரவில்லை என்றால்
உடனே
எடுக்கிறீர்களே...'
(ப
.29)

என்று புத்தகங்கள் கண்ணீர் மல்க மனிதர்களிடம் கேட்கின்றனவாம்.

'திருப்பதிக்கே லட்டா?', 'திருநெல்வேலிக்கே அல்வாவா?', 'பழநிக்கே பஞ்சாமிர்தமா?' என்பது போல் கவிஞரின் கற்பனையி;ல் வெங்காயமே - உரிக்கும் போது அடுத்தவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வெங்காயமே - கண்ணீர் வடிக்கின்றது. வேறு ஒன்றும் இல்லை, அதன் நியாயமான ஆதங்கமே இது தான்:

'துச்சாதனன் போல் - என்
துகில் உரிக்கத் தான்
எல்லோரும் வருகிறார்கள் ...
கண்ணனைப் போல்
காப்பாற்ற யாரும்
வருவதில்லையே...'
(ப.
55)

ஒருவருக்கு வயதாகிறது என்பதைக் காட்டும் அறிகுறி - அடையாளம் - நரை. எனினும், நரை தோன்றுவதை உலகில் எவரும் விரும்புவதில்லை; யாரேனும் அதைச் சுட்டிக் காட்டினாலும் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. நரை, திரை, மூப்பை மறைத்து இளமையோடு தோன்றுவதற்காக இன்றைய மனிதன் எடுத்துக் கொள்ளும் முயற்சி இவ்வளவு, அவ்வளவு இல்லை. கவிஞரின் எழுதுகோல் 'வெள்ளி முடி' எனப்படும் வெள்ளை முடியின் கண்ணீரையும் ஒரு சுவையான கவிதையாக வடித்துள்ளது:

'நீங்கள்
அழகாயிருக்க
என் மீதா
கரி பூச வேண்டும்...'
(ப.
50)

'கரி பூசுதல்' என்னும் வழக்குத் தொடரின் ஆட்சி இங்கே கவிஞரின் ஆற்றல் மிகு கருத்துப் புலப்பாட்டிற்குக் கைகொடுத்துள்ளது.

கவிஞரின் கற்பனையில் தொலைபேசியும் கண்ணீர் விட்டுத் தன் மனக் குமுறலை வெளியிடுகின்றது.

'எப்போதும்
பேசியே தீர்ப்பவர்கள்
நான் எப்போதாவது
மௌனமாக இருக்கும் போது மட்டும்
'டெட்' ஆகிவிட்டதாகச் சொல்லி
சாகடிக்கிறார்கள்
என்னை...'
(ப.
40)

என்னும் தொலைபேசியின் உணர்ச்சி வெளிப்பாடு நியாயத்தின் அடிப்படையில் பிறந்ததே ஆகும்.

முத்தாய்ப்பான கண்ணீர்

சிந்திக்கத் தூண்டும் ஒரு நகைச்சுவைத் துணுக்கு: இறைவன் பக்தனிடம் கேட்கிறான்: 'பக்தா, கல்வி அவதாரம் எடுக்கலாமா இப்போது?' பக்தன் பதறிப் போய் இறைவனிடம் இப்படிக் கூறுகிறான்: 'வேண்டாம் சாமி, நீங்கள் முன்பு எடுத்த இராமாவதாரமே இங்கே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது...', 'ஓர் இல் ஒரு வில் ஒரு சொல்' என மண்ணில் வாழ்ந்து காட்டிய அவதாரம் இராமாவாதாரம். 'அறத்தின் நாயகன்' எனப் போற்றப் பெறுபவன் இராமன். அவனுக்குக் கோயில் கட்டுவதில் இத்தனை வன்முறைகள் நிகழலாமா?

'எனக்குக்
கற்கோயில்
கட்ட
இத்தனைக்
கல்லறைகளா
எழ வேண்டும்?'
(ப.
31)

என்னும் இராமனின் கேள்வி பொருள் பொதிந்தது; சிந்திக்கத் தூண்டுவது.

காதலின் மெல்லிய தருணங்கள்

'கண்ணீர் கண்ணீர்' தொகுப்பில் கண்ணீரின் பன்முகங்களைக் காட்டிய அரங்க.பாரி, 'காதல் நேரம்' என்னும் அடுத்த தொகுப்பில் மலரினும் மெல்லிய காதல் உணர்வின் மேலான தருணங்களைப் பதிவு செய்துள்ளார். 'ஆதலினால் காதல் செய்வீர்' என உலகத்தவர்க்குக் கவியரசர் பாரதியார் அழைப்பு விடுத்தது போல் அரங்க.பாரியும் தம் பங்கிற்குக் காதலுக்கு முன்னுரிமை தந்து இங்ஙனம் முழங்குகின்றார்:

'சரி... சரி...
நேரம்
ஆகிவிட்டது
எல்லோரும்
காதலிக்கப் போகலாம்
இது காதல் நேரம்...'
(ப.
64)

மரபும் புதுமையும்

அரங்க.பாரியின் காதல் கவிதைகளில் முன்னைய மரபின் தாக்கமும் படிந்துள்ளது; பின்னைய புதுமைப் பெற்றியும் காணப்படுகின்றது. வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால் மரபும் புதுமையும் ஒன்றிணைந்த கூட்டுக் களியாக அவரது காதல் கவிதைகள் நடை பயில்கின்றன.

அரங்க.பாரி படைக்கும் காதலன் ஒருவன் தன் உள்ளங்கவர் காதலியிடம் இவ்வாறு உரைக்கின்றான்:

'நீ
மெய்யாக இரு...
நான்
உயிராக வருகிறேன்
தமிழாக வாழ்வோம்...'
(ப.
40)

காதலி மெய்; காதலன் உயிர். உயிருக்கு உயிராக - உயிர் மெய்யாக - இவர்கள் கொள்ளும் காதல் மெய்யானது. இருவரும் இணைந்து வாழும் வாழ்வோ தமிழ் அனையது!

மடலேறுதலும் உடன்போக்கும் சங்க இலக்கியக் களவுத் திணைப் பாடல்களில் பயின்று வரும் கலைச்சொற்கள். இவற்றைத் தம் காதல் கவிதைகளில் திறம்படப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் அரங்க.பாரி. காதலன் காதலியிடம் மொழிவதாக அவர் இயற்றியுள்ள பின்வரும் இரு கவிதைகள் இவ் வகையில் குறிப்பிடத் தக்கவை:

'மடல் எழுதி
மணக்கவா?
இல்லை
மடல் ஏறி
மணக்கவா?'
(ப.
22)

'உன் பெற்றோர்கள்
உடன்பட்டால்
பார்ப்போம்...
இல்லையெனில்
உடன்போக்கில்
பார்ப்போம்...'
(ப.
23)


'அழகின் சிரிப்பே!
என்
இருண்ட வீட்டில்
குடும்ப விளக்கு
ஏற்ற
எப்போது வருவாய்...'
(ப.
24)

என்பது அரங்க.பாரியின் முத்திரைக் கவிதை. இங்கே காதலைச் சொல்வதற்குக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு', 'இருண்ட வீடு', 'குடும்ப விளக்கு' என்னும் நூல்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாகும். 'பாவேந்தரின் பாவிருந்து' குறித்துத் தனி நூலே எழுதியுள்ள அரங்க.பாரியின் படைப்பாளுமையில் பாவேந்தரின் தாக்கம் காணப்பெறுவது இயல்பே ஆகும்.

நயமும் நுட்பமும்

காதலைப் பாடுவது என்பது எளிதினும் எளிது; ஆனால், காதல் உணர்வினை நயமும் நுட்பமும் நாகரிகமும் விளங்கப் பாடுவது என்பது அரிதினும் அரிது.

காதலி அருவியில் குளித்துக் கொண்டிருக்கிறாள். நெஞ்சை அள்ளும் அக் காட்சியைக் காணும் காதலனுக்கு ஓர் ஐயம் எழுகின்றது. அதை எப்படித் தீர்;த்துக் கொள்வது? பேசாமல், காதலியிடமே கேட்டுத் தெளிவு பெற்று விடலாமா? இதோ காதலியை நோக்கி அவன் விடுக்கும் கேள்வி:

'பெண்ணே!
நீ அருவியில் குளிக்கிறாயா?
இல்லை
உன்னைப் பார்க்க
அருவி குதிக்கிறதா...'
(ப.
9)

பாம்பு என்றால் படையும் நடுங்குமாம்! அது போல் அழகிய பெண் என்றால் அருவியும் துள்ளிக் குதித்து ஓடி வருமோ?

காதலுனுக்கு எதை அல்லது யாரைப் பார்த்தாலும் காதலியாகவே தோன்றும். இது காதலின் இயற்கை. 'நோக்குவ எல்லாம் அவையே போறல்' (தொல்காப்பியம், 1046) - பார்ப்பவை எல்லாம் காதலர் போலத் தோன்றும் - என்பார் தொல்காப்பியர். அரங்க.பாரியோ வழிவழி வரும் இந்தக் காதல் சித்திரிப்பிலும் ஒரு நுட்பத்தைச் சேர்க்கிறார். நுட்பமான அவரது காதல் ஓவியம் வருமாறு:

'யாரைப் பார்த்தாலும்
உன்னைப் போல்
தோன்றுகிறது...
உன்னைப் பார்த்தால்
யாரையும் போல்
தோன்றவில்லையே...'
(ப.
12)

ஓ, இதற்குப் பெயர் தான் 'ஒற்றுமையில் வேற்றுமை'யோ?

மென்மையும் மேன்மையும்

மலரினும் மெல்லிய உணர்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையே காதல் தன்வயப்பட்டவரை மேன்மைப்படுத்தும் என்பதும்.

சிறுவயதில் கையெழுத்துத் திருந்துவதற்கு ஆசிரியர்கள் பயிற்சி தருவார்கள்; திரும்பத் திரும்ப எழுதிப் பார்க்குமாறு பணிப்பார்கள். ஆனால், கையெழுத்து அழகாவதற்குக் காதல் நோக்கில் ஒரு புதிய வழியைக் கற்றுத் தருகிறார் அரங்க.பாரி.

'உன் பெயரை
எழுதி
எழுதித்தான்
என்
எழுத்தே
அழகானது...'
(ப.
15)

எனக் காதலன் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலம் இளைய தலைமுறையினர் கருத்தில் கொள்ளத் தக்கது.

காதலன் நெஞ்சில் ஓர் ஐயம் எழுகின்றது; காதலி அழகா? இல்லை, அவளது பெயர் அழகா? ஒரு பட்டிமன்றம் வைத்துப் பார்க்கலாமா? சரி, இரு அணிகளாகப் பிரிந்து வாதம் செய்தால், முடிவில் பட்டிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? இதோ, கவிதை வடிவில் கவிஞரின் மறுமொழி:

'நீ
அழகா?
உன் பெயர்
அழகா?
தீர்ப்பை
ஒத்தி வைக்கிறது
மனது...'
(ப.
16)

சொல்லாடலும் சுவை நலமும்

அரங்க.பாரியின் காதல் கவிதைகளில் சொல்லாடலும் இலக்கியச் சுவையும் இனிய விருந்தினர் போல் இயல்பாக வருகை தந்து சிறப்பிக்கக் காண்கிறோம்.

காதல் உலகில் கடைக்கண் பார்வைக்கும் புன்முறுவலுக்கும் மௌனத்திற்கும் உள்ள ஆற்றலே தனி. இல்லாவிட்டால், 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி-விட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்' (பாரதிதாசன் கவிதைகள், ப.4) என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடி இருப்பாரா?

காதலன் காதலியிடம் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போல் கேட்பதெல்லாம் இதுதான்:

'பெண்ணே
நீ
சிரிக்கிறாயா?
என்னைச்
சிதைக்கிறாயா?'
(ப.
30)

உலக நடப்பில் உள்ளது போல் இச் சிதைவு கடுமையானது அன்று; கொடுமையானதும் அன்று; மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளக் கூடிய, பொறுத்துக் கொள்ள இயலும் சிதைவே.

'ஒரே
இடத்திலேயே
நின்று கொண்டிருக்காதே...'


எனக் காதலியிடம் வேண்டுகோள் விடுக்கும் காதலன் அதற்குக் காட்டும் காரணம் சுவையானது:

'சிலை என்று
எவனாவது
கடத்திவிடப் போகிறான்...'
(ப
.21)

காதலி தன் வீட்டு வாசலில் நின்று கோலம் போடுகிறாள். அதைக் காணும் காதலன் மனமோ தாளம் போடுகின்றதாம்!

'பெண்ணே
நீ
கோலம் போடுகிறாய்...
என் மனது
தாளம் போடுகிறது...'
(ப.
32)

கோலம் ஒ தாளம்: சுவையான சொல் விளையாட்டு!

அந்தப் பெண் வந்தது என்னவோ படிக்கத் தானாம்! ஆனால், நடந்ததோ அவளைப் பார்த்த மாத்திரத்தில் இளைஞனின் மனம் பறிபோய்விட்டதாம்! இந் நிலையில்,

'பெண்ணே!
நீ
படிக்க வந்தாயா?
என்
மனதைப்
பறிக்க வந்தாயா?'
(ப
.35)

எனப் பெண்ணிடம் வினவுகின்றான் இளைஞன். 'படிக்க வந்தாயா? இல்லை, பறிக்க வந்தாயா?' என்னும் அந்த இளைஞனின் வினாவில் இளமைக்கே உரிய குறும்பும் துள்ளலும் களிநடம் புரிந்து நிற்கின்றன.


முகம் காட்டும் தமிழ்ப் பேராசிரியர்


கவிஞர் அரங்க.பாரியின் ஆழ்மனத்தில் குடியிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் அவரது காதல் கவிதைகளில் ஆங்காங்கே மூன்றாம் பிறையாய் முகம் காட்டி நிற்பதைக் காண முடிகின்றது. பதச்சோறு ஒன்று:

'நீ என்ன
தமிழ் இலக்கியம்
படித்தவளா?
இவ்வளவு
வெட்கப்படுகிறாய்?'
(ப.
18)

'ஆசை வெட்கம் அறியாது' என்பார்கள். ஆனால், காதலி இவ்வளவு வெட்கப்படுகிறாள் என்றால், அவள் உறுதியாகத் தமிழ் இலக்கியம் பயின்றவளாகத் தான் இருக்க வேண்டும். ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் முதலாக இன்றைய திரைப்பாடல் ஆசிரியர் கண்ணதாசன் வரை பெண்ணின் நாணத்தை - வெட்கத்தை - போற்றிப் பாடாத கவிஞர்கள் இல்லை.

'திருக்குறள்
பிடிக்கும்'

என உலகப் பொது மறையாம் திருக்குறளை உயர்த்திப் பிடிக்கும் காதலன் தொடர்ந்து, இன்னும் ஒரு படி மேலாக,

'இருந்தாலும்
உன் குரல்
அதிகம்
பிடிக்கும்...'
(ப.
41)

எனத் தன் உள்ளம் கவர்ந்த காதலியின் குரலைப் போற்றுவது இவ் வகையில் நினைவுகூரத் தக்கது.

பிறிதொரு காதலனோ,
'செய்யுள்
நடையை விட
உன்
நடையில் தான்
அதிகம்
மலைத்துப் போனேன்!'
(ப.
58)

எனத் தமிழ்ச் செய்யுள் நடையை ஒப்புமை காட்டித் தன் காதலியின் நடை நலத்தைப் பாராட்டி மொழிகின்றான்.

கவிஞர் பா.விஜய் குறிப்பிடுவது போல், ''காதல் நேர'த்தில் நிறையக் கவிதை ஈரம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. தமிழின் ஆளுமை அழகாய் இருக்கிறது... முதல் பதிவே நல்ல மழைக் காலம் முடிந்த பிறகு நட்ட மரமாய் சல்லென்று துளிர்த்துச் சில்லென்று பூத்திருக்கிறது' ('காதல் என்பது...', கவிதை நேரம், ப
.4).

அரங்க.பாரியின் 'கண்ணீர் கண்ணீர்', 'காதல் நேரம்' என்னும் இரு தொகுப்புக்களும் வெளிவந்து பதினோரு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. இன்று அரங்க.பாரி, 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா., 'யாழ் நூல்' தந்த விபுலானந்த அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி மு.கதிரேசனார், 'எம்.எல்.பிள்ளை' எனச் சிறப்பிக்கப்படும் கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.சுப.மாணிக்கனார், க.வெள்ளைவாரணர் முதலான தமிழ் இமயங்கள் கோலோச்சிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் என்னும் உயரிய பொறுப்பில் வீற்றிருப்பவர்; அண்மையில் ஒரே நேரத்தில்
351 தமிழறிஞர்களைப் பற்றிய நூல்களை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பவர்; 'செய்வினை முடித்த செம்மல் உள்ள'த்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர். அவர் பேராசிரியப் பணியோடும் பதிப்புப் பணியோடும் நின்று விடாமல் - அமைதி அடைந்து விடாமல் - மீண்டும் படைப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே கவிதை ஆர்வலர்களின் நட்பு முறையிலான வேண்டுகோள். இது அவருக்கு மட்டும் விடுக்கப் பெறுவது அன்று. கேரளம், கன்னடம், வங்காளம் போன்று தமிழகத்திலும் பேராசிரியப் பெருமக்கள் படைப்புத் துறையில் முனைப்புடன் ஈடுபட வேண்டும், வகுப்பறைகள் படைப்பாற்றல் கொண்ட இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்ற வேட்கையின் அடிப்படையில் ஒட்டு- மொத்தக் கல்வி இயலாருக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் முன்வைக்கப் பெறும் கருத்தியல் ஆகும்.


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.