தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை

கவிஞர் வி.கந்தவனம்


"தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை" இது அவ்வைப் பிராட்டியாரின் கொன்றைவேந்தன் கூற்று. |ஒரு மகனுக்கு அல்லது திருமணமாகாத மகளுக்குத் தந்தையின் அறிவுரைக்கு மேலான வலிமை மிக்க மொழி வேறில்லை| என்பது இதன் பொருள்.

மந்திரம் என்ற சொல்லைக் கவனித்தல் வேண்டும். தொல்காப்பியர் பின்வருமாறு விளக்குகின்றார்:

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.
(செய்யுளியல்
171)

இதற்கு |நிறைவான மொழியினையுடைய மேலோர் ஆணையிட்டுக் கூறிய மறைவான மொழியே மந்திரம் என்று அறிஞர் கூறுவர்| என உரையாசிரியர் பொருள் சொல்வர்.

ஆணையிற் கிளந்த மறைமொழி - அறுதியிட்டுக் கூறிய மறைமொழி. மறைமொழி - மறைமுகமாச் சொல்லப்பெற்ற நிறைமொழிளூ மந்திர மொழி. |மந்திராலோசனை| என்ற சொற்பிரயோகம் பிரபலியமானது. அக்காலத்து அரச வழக்கிலிருந்து வந்தது. இது மன்னன் தனக்கு நம்பிக்கையானவரோடு செய்யும் மறைமுக(அந்தரங்க) ஆலோசனையைக் குறிப்பதாகும். காலப்போக்கில் மந்திராலோசனையிற் சம்பந்தப்பட்டவர்கள் மந்திரிகள் என்ற பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும்.

வேத வாக்கு

மந்திரங்களைப் புகட்டுவன வேதங்கள். மறை என்ற சொல்லுக்கு வேதம் என்ற பொருள் சங்க காலத்திலிருந்தே நிலவி வந்திருக்கின்றது. அதனால் மறைமொழி வேதவாக்கு ஆகின்றது. வேத வாக்கு - மாற்றமுடியாத வாக்கு - ஆணையிற் கிளந்த வாக்கு.

வேதங்கள் இறைவனால் சொல்லப்பெற்றவை. அதனால் வேத வாக்குத் தெய்வ வாக்கு என்னும் பொருளிலும் வழங்கப்படுகின்றது. தெய்வ வாக்கு நிறைவானதுளூ முடிந்த முடிவானதுளூ நன்மை தருவது. அது மிகுந்த வல்லமையுடையது. அதுவே மந்திரமாகும். இக் கருத்தே தெல்காப்பியர் கூறும் |மறைமொழி|க்கும் பொருந்திவரக் காணலாம்.

இனி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரும் தெய்வ சக்தியுடையவராவர். இவர்களில் துறவற வாழ்வின் நெறிமுறை நிற்கும் முனிவர்கள் முதன்மையானவர்கள். புலன்களை அடக்கி உலகப் பற்றுக்களைத் துறந்த முனிவர் மொழிகளும் மறைமொழிகளாகும். திருக்குறளில் நீத்தார் பெருமையின்கீழ் வரும்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


என்னும் குறளிலுள்ள மறைமொழிக்கு பரிமேலழகரும் மணக்குடவரும் தொல்காப்பியர்வழி மந்திரம் என்றே பொருள் கூறினர்.

எனவே மந்திரம் என்பது வேதவாக்கு அல்லது சக்திமிக்கச் சொல் என்பது தெளிவா கின்றது. சக்தி அல்லது வல்லமை என்பது பயன்பாட்டால் வருவது. அதனால் மந்திரம் சித்திக்கும் என்பர். சித்தித்தல் - பயன்செய்தல். நிறைமொழி மாந்தர் பயனில் சொல் பாராட்டாதவர். அவர்கள் நினைப்பதை அவர்கள் சொல்லே செயற்படுத்த வல்லது. அதனாலேயே மந்திரம் என்பது நினைப்பவரைக் காப்பது என்ற நம்பிக்கையும் வளர்ந்தது.

நாயன்மார் வாழ்க்கையிலும் அவர்கள் திருவாய் மலர்ந்த சொற்கள் செய்த அற்புதங்கள் பலவற்றைப் பார்க்கின்றோம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருநீற்றுப் பதிகம் நல்ல சான்று. இது |மந்திரம் ஆவது நீறு| என்று தொடங்குகின்றது. மந்திரம் ஆவது - பாதுகாப்பு ஆவது. நீறு ஒருவரைப் பாதுகாக்க வல்லது. இது திருநீற்றின் சக்தி. சிவ சக்தி. இச் சக்தியின் பயன்பாடுகளை வெந்துயர் தீர்ப்பது, புன்மை தவிர்ப்பது, முத்தி தருவது, பத்தி தருவது, சித்தி தருவது என்றெல்லாம் விரித்துரைக்கின்றார் திருஞான சம்பந்தர். சொல்லளவில் மட்டுமன்றிப் பாண்டியனின் வெப்பு நோயைத் திருநீற்றால் மாற்றி அதன் சக்தியைச் செய்முறையாகவும் நிரூபித்துக் காட்டுகின்றார்.

தந்தை சொல்

தந்தை சொல்லுக்கும் சக்திகள் உண்டு. தாம் பெற்ற பிள்ளைகள் நல்லாய் வரவேண்டும் என்று மனதார நினைப்பவர் பெற்றோர். அவருள்ளும் தந்தையின் கடன் பிள்ளைகளைச் சான்றோர் அக்குதல்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
(புறம்
312)

என்று என்றோ பாடிவைத்தார் பொன்முடியார்.

சான்றாண்மை என்பது நல்லொழுக்கம், குணநலம், அன்பு, நாணம், பிறருக்கு உதவுதல், இரக்கம், வாய்மை, பணிவு, துணிவு, தோல்வியை ஒப்புக்கொள்ளுதல், ஒருவரையும் பொல்லாங்கு சொல்லாமை, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல், நடுநிலை தவறாமை, தனது குடும்பத்துக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் செய்யவேண்டிய கடமைகளை உணர்ந்து செய்தல் முதலாய இயல்புகளோடு பொருந்தியது. இவ்வித நல்லியல்புகளைப் பெற்றெடுத்த மக்களிடத்தில் வளர்த்தல் தந்தையின் கடமையாகும்.

நற்குண நற்செய்கைகள் கல்வியறிவின்றி முழுமை பெறமுடியா. எனவே, முறையான கல்வியை அளிக்கும் பொறுப்பும் தந்தைக்கு உரியது.

பொன்முடியார் மக்களை ஆளாக்குவதில் தந்தைக்குரிய பெரும் பொறுப்புகளை ஒரு சிறு வரிக்குள் பொதிந்து தந்த விதம் போற்றுதற்குரியது.

பொன்முடியாரிலும் வள்ளுவர் பெருமான் ஒருபடி மேலே சென்று மக்களைச் சான்றோர் ஆக்கினால்மட்டும் போதாது, அவர்களுக்கு உயர்ந்த கல்வியை அளித்து அறிஞர் அவையில் முதன்மையான இடம் வகிக்கும் வகைசெய்தல் தந்தை மக்கட்குச் செய்யும் பெரிய உதவியாகும் என்கிறார்.

தந்தைமகற் காற்றும் உதவி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
(
7:7)

என்பது அவரது திருக்குறள்.

இந்தக் கடமையுணர்வு எந்தத் தந்தைக்கும் இயல்பாய் இருப்பது. இந்த உணர்வின் அடிப்படையிலேயே தந்தையின் அறிவுரைகள் அமையும். அவற்றை மக்கள் கேட்டு நடத்தல் வெண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே,

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை

என்றார் அவ்வைப் பிராட்டியார். அவர் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்ளூ
நீதி நியாயங்களை நன்கறிந்தவர்ளூ நிறைமொழிப் பிராட்டியார். அவர் ஒன்று சொன்னால் அதற்கு மேன்முறையீடு என்பது கிடையாது. அவரது ஆணையிற் கிளந்ததை யாவரும் பின்பற்றக் கடவர்.

அவ்வைப் பிராட்டியார் தமிழரின் தாய். தாய் சொல்கிறார் தந்தை சொல்லை வேத வாக்காகக் கொள் என்று. அவரது வாக்கைத் தலைமேற் கொண்டு தந்தையின் சொல்லைக் கேட்டு நடந்தால் பிள்ளைகள் நன்மையடைவார்கள்ளூ வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேறுவார்கள்.