தொல்காப்பியர் காலச் சமயமும் அதன் படிமுறை வளர்ச்சியும்

முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்

மயம்,சங்க காலத்தின் பிற்பகுதியில் தான், சமூக வாழ்க்கையின் ஒரு அங்கமாக இடம் பெற ஆரம்பித்தது. பின், பல்லவர் காலத்தில் சமயம் சமூகத்தின் இன்றியமையாத பகுதியாக ஆகிவிட்டது. சங்க காலத்தில் அகமும் புறமுமே வாழ்க்கையின் அடிநாதமாக இருந்து வந்தது. அக்காலத்தில் சமயத்துக்கு அடிப்படையான கோட்பாடுகள்; இருந்தன, ஆனால் அவை யாவும் சமயம் உருவாவதற்கான தொடக்க நிலை என்றே கொள்ளலாம். சமயத்தை முன்நிறுத்திப்போருக்குச் செல்லுதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைக்கும் வழக்கத்தை வடநாட்டிலிருந்து வந்த ஆரியரேமுன்வைத்தார்கள். படிப்படியாக மன்னர்கள், தமது போர் வெற்றிக்கு அடையாளமாக, யாகம் முதலிய சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மன்னர், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற பெயர்களால் தம்மை யாகத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டதன் பலனாக, யாகம் சமயத்திலும் சமூகத்திலும் ஓர் அங்கமாகியது.

சங்ககாலத்தில் முல்லைக்கு மாயோனும், குறிஞ்சிக்குச் சேயோனும், மருதத்திற்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும் என்று திணை நிலத் தெய்வங்களாக நால்வகை நிலங்களிலும் வழிபடப்பட்டிருக்கிறார்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. திணைக்குரிய தெய்வங்கள் தவிரக் கொற்றவை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களும் தெய்வமாகப் வழிபடப்பட்டிருக்கிறாள்.

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.'
தொல்காப்பியம்,அகத்திணையியல்
5.

சமயம் என்று ஒன்று சங்ககாலத்தில் இருந்ததா? அப்படி ஒன்று இருந்திருக்குமானால்,சங்ககாலத்துச் சமயம் எது? சமயக் கருத்துக்களைச் சங்க இலக்கியங்கள் எவ்வளவுக்கு எடுத்து வந்திருக்கின்றன? சமயம் என்றதும், அது எந்தச் சமயமாக இருந்தாலும், எமது நினைவுக்கு வருவது, கடவுள். கடவுள் என்றால்; என்ன? கடவுள் என்று ஒருவர், நமது அறிவுக்குப் புலனாகும் காலத்தில்,தமிழ் நாட்டில் தமிழர்களால் வழிபடப்பட்டவராக இருந்திருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் வாதங்கள், காரண காரியங்களை முன்வைக்கும் வாதங்கள்.

சமயச் சார்பற்ற இலக்கியம் சங்க காலத்திற்கே உரியதாக இருந்திருக்கிறது. சங்ககாலத்தில் காதலும் வீரமும் பெற்ற இடத்தைச் சங்ககாலப் பிற்பகுதியில் சமயம் சிறிது சிறிதாக பெறத் தொடங்கியது. இத்தகைய ஒரு காலகட்டத்தில் தான் பரிபாடல் பாடப்பட்டிருக்கவேண்டும். இதனை,'மரபு மாற்றம்' என்று நாம் கூறுகிறோம். ஆனால் அது மரபின் தொடர்ச்சியையே குறித்து நிற்கிறது. சங்க காலத்தில் காதலைப் பாடக் கையாண்ட அகத்திணை மரபு சங்ககாலப் பிற்பகுதியில் மாறத் தொடங்கிப் பல்லவர் காலத்தில் பக்தியைப் புலப்படுத்தக் கையாளப்பட்டது.

சமயம் என்பதும் கடவுள் என்பதும் மனிதனது நம்பிக்கையே. கடவுள், மனிதனது நம்பிக்கையில்,மனிதனால் உருவாக்கப்பட்டவன் என்பதை அறிவியல் உறுதி செய்கிறது. சமயம் → கடவுள் →வழிபாடு →சடங்குகள் என்று இந்தப் படிமுறையில் கடவுள் பற்றிய நம்பிக்கை வளர்ந்து வந்திருக்கிறது. சமயம் கடவுளை அடியாகக் கொண்டது, கடவுளை முன்னிறுத்தி வழிபாட்டு முறைகளும், அதனையொட்டிச் சடங்குகளும் வளர்ந்ததால் சமயம் வளர்ந்தது. கடவுளை ஒப்புக் கொண்டு,கடவுளை வழிபடும் வழிபாட்டு முறைகளை அறிந்து அதன்படி ஒழுகுவது சமயம்.

கடவுளைக் கட
+ உள் எனப் பிரிக்கலாம். கட என்றால் கடந்து நிற்பது, இடம், காலம், அறிவுமுதலிய கட்டுப்பாடுகளைக் கடந்து நிற்பவன் கடவுள். மேலே கூறப்பட்ட திணைக்குரி தெய்வங்கள் தம் எல்லைகளைக் கடந்து சென்றிருக்கிறார்களா? எல்லைகளைக் கடந்த கடவுள் பற்றிய கருத்துப் பழங்காலத்தில் இருந்ததா? இருந்தது.


தொல்காப்பியர் கடவுள் என்ற சொல்லைக் 'கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' என்று புறத்திணையியலில்
(27) கூறியிருக்கிறார்.

கடவுள் என்ற சொல், பரவலாக அனைத்துச் சங்க இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. காடாயிருந்த இடங்களெல்லாம் கடவுள் உறையும் கோயில்களாயின என்று பதிற்றுப்பத்தும்
(13:20). 'புற்றுடைச் சுவர புதல்இவர் பொதியில்,கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து' என்று அகநானூறும் (307: 11-12),என்று இவ்வாறு சங்க இலக்கியங்கள் கடவுள் என்னும் சொல்லைப் பொதுப்படத் தெய்வம் என்னும் பொருளில் கையாண்டிருக்கின்றன.

இந்தக் கடவுளுக்குத் தொல்காப்பியர் பெயர் கொடுக்கவில்லை, திணைக்குரிய தெய்வங்களுக்கு மேலாக எல்லாவற்றையும் கடந்ததாக, முழுமுதலாக இருக்கின்ற ஒன்றைக் கடவுள் என்கிறார். இந்த முழுமுதலை,சிறந்தது என்ற சொல்லாலும் குறிக்கிறார்.

'காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.'
கற்பியல்
51.

எல்லாவகையாலும் சிறந்தது, முதியது, முழுமுதல் என்று பொருள்படும். சிறந்த அந்த ஒன்றை வழிபடுவது தான் இதுவரை வாழ்ந்ததன் பயன் என்கிறது இந்நூற்பா. கடவுள் சிறந்தது என்னும் தொடர்களால் திணைக்குரித் தெய்வங்களைத் தாண்டி முழுமுதற் கடவுள் பற்றிய சிந்தனை தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்கிறது.

சைவம், சைவசமயம், சைவநெறி என்பவை யாவும் ஒன்றையே குறிக்கும். இவை யாவும் சிவனோடு தொடர்புடையது. சிவனுடைய தொடர்புடையது. சிவன் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் எங்கும் கையாளப்படவில்லை. முதன்முதலாக மணிமேகலையில் தான் சிவன் பற்றிக் கூறப்படுகிறது.

நமக்கு மிக மிகப் பழக்கமான ஒன்றைப் பற்றிப் பேசும்போது அதனோடு தொடர்புடைய ஒன்றன் தன்மையைக் குறிப்பிட்டால் போதும் அதனை அடையாளம் காண்பதற்கு. சிவனைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் சிவன் என்பதற்குப் பதிலாக அவன் இயல்புகள் தான் கூறப்பட்டிருக்கின்றன.

'பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே.'
புறநானூறு
6: 17-18.

இப்பாடல்,'முனிவர் வணங்கும் முக்கட் செல்வர் நகர்வலம் செய்யும் ஒரேயொரு வேளையில் மட்டும் நின் குடை தாழட்டும்' என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குக் காரிக்கிழார் அறிவுரை கூறுவதாக அமைகிறது. இங்கு முக்கட் செல்வர் என்னும் சொல் முழுமுதற் கடவுளாகிய சிவனைக் குறிப்பதாக அமைகிறது.இங்கு சிவன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சிவனுக்குரிய முக்கண் பற்றிக் குறிப்பிடப்படுவதால் இது சிவனையே குறிக்கிறது என்பதும், மக்கள் மத்தியில் சிவன், சிவனது தோற்றம் பற்றிய அறிவு பரவலாக இருந்திருக்கிறது என்பதும் தெளிவு.

'ஆலமர் கடவுளன்னநின் செல்வம்' என்று ஒரு தொடர் புறநானூற்றில்
(198:9) வருகிறது.சிவன் ஆலகால விடமுண்ட கதையைக் குறிகும்,மறுமிடற்று அண்ணல், கறைமிடற்று அண்ணல், நீலமணிமிடற்று அண்ணல் என்னும் சொற்தொடர்களும்; புறநானூற்றில் பேசப்படுகிறன. மக்களால் அதிகம் அறியப் பட்டமையாலேயே உவமையாக இத் தொடர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 'நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே.' (புறநானூறு 91:6-7) என்று அதியமானை ஒளவையார் வாழ்த்தியிருக்கிறார். இங்கு, சிவன் என்னும் பெயரோ குறிப்போ இல்லை. எனவே, சிவன் என்னும் பெயரால் குறிப்பிடப்படாவிட்டாலும்,சங்ககால மக்களால் சிவன் மிகவும் அறியப்பட்ட தெய்வமாக இருந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

புறநானூற்று
56 ஆம் பாடலில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர், எரிமருள் அவிர்சடை மணிமிடற்றோனாகிய சிவனையும் அடர்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனாகிய பலராமனையும் விண்ணுயர் கருடக் கொடியுடைய திருமாலையும் மாறா வென்றிச் சேயோனையும் அவரவர் அடைகளால் குறிப்பிட்டிருக்கிறார். பாடல் வரிகள் வருமாறு:

'ஏற்றுவல னுயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையுமேனி
அடர்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி ஒண்செய் யோனுமென'–
புறநானூறு
56: 1-8

'முதுமுதல்வன்' என்னும் சொல் புறநானூற்றில் வருகிறது. சிவன் முழுமுதற் கடவுளாகக் கருதப்பட்டான் என்பதற்கு, மதுரைக்காஞ்சியில்
(455 ஆம் அடி) 'மழுவாள் நெடியோன் முதல்வனாக' என்று ஒரு அடி வருகிறது. இதனால் எல்லாம் சிவன் முழுமுதற் கடவுளாகக் ஏற்றுக் கொள்ளப்பட்டான் என்று அறிகிறோம். சிலப்பதிகாரம் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்றும்,'நுதல்விழி நாட்டத்து இறையோன்' என்று மணிமேகலையும் கூறுகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது சங்க இலக்கிய காலத்தில் சிவன் கோயில்கள் புகார், காஞ்சி, மதுரை ஆகிய நகர்களில் இருந்தன என்று தெரிகிறது. சிவபெருமானடைய இயல்புகளாக,'தொடங்கற்கட் தோன்றிய முதியவன் முதலா' என்னும் கலித்தொகைப் (2) பாடலில் இராவணன் கயிலையைப் பெயர்த்த போது சிவன் தனது பெருவிரலால் அழுத்தி அவனை நிலைகுலையச் செய்த கதை கூறப்படுகிறது. ஆக, சிவன் பற்றிய கதைகளை மக்கள் அறிந்திருந்தனர், சிவன் பற்றிய புரிதல் மக்கள் மத்தியில் பரவலாக இருந்திருக்கிறது.

முழுமுதற் கடவுள் என்ற ஒரு கோட்பாடு: முழுமுதற் கடவுள் சிவன் என்ற எண்ணம், சிவனை வழிபடவேண்டும் என்ற எழுச்சி, சிவனுக்குக் கோவில்கள் கட்டவேண்டும் என்ற எண்ணம், அதனால் கோவில்கள் கட்டப்பட்டமை, மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டமை இவை அனைத்தையும் சங்க இலக்கியங்கள் மூலமும் பின்வந்த இலக்கியங்கள் மூலமும் அறிகிறோம். ஆக, சிவவழிபாடு என்பது தமிழ் நாட்டில் மிகத் தொன்மையானது. சங்கமருவிய காலத்து இலக்கியங்களும் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.

சங்க காலத் தமிழர், இவ்வுலக இன்பம் கருதியே கடவுளை வழிபட்டனர். கடவுளருக்கு உருவம் அமைத்ததும், விழா எடுத்ததும், வேண்டுதல் செய்ததும், யாவுமே இம்மை இன்பம் வேண்டிய செயலாகவே காணப்படுகிறது. மறு பிறவி எண்ணத்துடன் சங்கத் தமிழர் கடவுளரை வழிபட்டதற்கான சான்று காணப்படவில்லை. சங்க காலப் பிற்பகுதியில் பிற மதக் கொள்கைகளும் பிற மத ஆதிக்கமும் ஏற்பட்டதன் பின்னரே, தமிழர், மறுமை இன்பம் வேண்டிக் கடவுளை வழிபடத் தொடங்கினார்கள் எனலாம். சங்கத் தமிழர் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்னும் நோக்கில் வாழ்ந்தவர்கள்.

கி. பி.
3 ஆம் நூற்றாண்டிலிருந்து 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதி தமிழர் வரலாற்றில் இருண்ட காலமாகும். இந்தக் காலகட்டத்தில் மக்கள் பௌத்தம், சமணம் ஆகிய புதிய மதங்களின் கொள்கைகளால் கவரப்பட்டார்கள், மதமாற்றம் விரைவாக நடந்தது. மக்கள் மதமாற்றத்திற்கு, அக் காலத்தில், இம் மதங்களுக்கு அரசர்களிடையே இருந்த செல்வாக்கும் பிறிதொரு காரணம். தமிழரது மொழி, இனம், பண்பாடு பெரிதும் பாதிக்கப் பட்டது. தமிழரின் பாரம்பரிய கோவில்கள் பராமரிப்பாரின்றிப் போயின. வழிபாட்டு முறைகளும் அற்றுப் போயின.

இப்படியானதொரு நாட்டுச் சூழலில், கி. பி.
6 ஆம் நூற்றாண்டளவில் சமயகுரவர்களும் ஆழ்வார்களும் தோன்றித் தமிழ் நாட்டில் அழியும் நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்த மதஉணர்ச்சியைத் தட்டி எழுப்பினார்கள். இதனைப் பக்தி இயக்கம் என்றும் சொல்வார்கள். அழிந்து போகும் நிலையில் இருந்த கோவில்கள் தோறும் அப்பரும் சம்பந்தரும் சென்று பதிகங்கள் பாடிச் சிவ வழிபாட்டிற்குப் புனர் வாழ்வு கொடுத்தனர், கவனிப்பாரற்றுக் காடு மண்டிக் கிடந்த சைவக் கோயில் பிரகாரங்களை அப்பர் உழவாரத் தொண்டு செய்வதன் மூலம் மக்கள் நடமாட்டத்திற்குரியவையாக்கினார். இது மக்கள் இயக்கம் ஆக்கப்பட்டது. கோவில்கள் மீண்டும் மக்கள் சென்று வழிபடுவதற்கு வாய்ப்பான தலங்களாக மாற்றி அமைக்கப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் பக்தி இயக்கம் மிகப் பெரிய அளவில் வளர்ந்தது. குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் கவனிப்பாரற்று மூடிக்கிடந்த தலங்கள் எல்லாம் பாடல் பெற்று அடியார்கள் தினமும் வழிபடுவதற்கு வாய்ப்பாகக் அமைக்கப்பட்டன.

அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் பக்தி இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நாடு முழவதும் சமய எழுச்சியை உண்டாக்கினார்கள்.

  • பழைய கோயில்கள் திருத்தி அமைக்கப்பட்டன.
     

  • மகேந்திரவர்மன் போன்ற பல்லவ மன்னர்கள் புதிய கோவில்களைக் கட்டி எழுப்பினார்கள்.
     

  • மக்கள் மனம் கொள்ளும் வகையில் வழிபாட்டு முறைகள் மாற்றியமைக்கப்பட்டன,உருவாகின.
     

  • அடியார்கள் கோவில்களில் தொண்டாற்றத் தொடங்கினார்கள். கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்தல், மாலைகட்டுதல், நந்தவனம் அமைத்தல் முதலாய கோவில் தொண்டுகளில் மக்கள் ஈடுபட்டனர்.
     

  • கோவில்களில் தேவாரப் பதிகங்களைப் பண்ணோடு பாடினார்கள்.மக்கள் மனம் கவரும்படியான இறைவனைப் பாடி வழிபடும் வழக்கம் தொடங்கியது. அப்பரும் சம்பந்தரும் அடியார்களுடன் கோவில்கள் தோறும் சென்று பதிகங்களைப் பாடினார்கள். இதனால் தலங்கள், பாடல் பெற்ற தலங்கள் சிறப்புப் பெற்றன. தலங்களுக்கு ஓர் அடையாளம் உண்டாயிற்று.அவர்கள் பாடிய பதிகங்கள், கோவிலை ஒரு முறை சுற்றிப் பாடுவதற்கு வாய்ப்பான முறையில் பத்துப் பத்துப் பாடல்களாக அமைந்திருந்தன. முத்தாய்ப்புப் பாடல், பாடுகின்ற பக்தனுக்குப் பலன் சொல்வதாக அமைந்திருந்தது மக்களுக்குப் பிடித்திருந்தது.
     

  • இசை, நடனம் முதலாய கலைகளுக்கு எதிரான சமண பௌத்த மதங்களுக்கு எதிராகப் பண்ணோடிசை பாடியது மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
     

  • நாயன்மார்கள்,அன்புவழியால் இறைவனை அடையலாம் என்று மக்களுக்;கு எடுத்துக் கூறினார்கள். பௌத்த, சமண மதங்களின்,துறவுவழியே இறைவனை அடையும் வழி என்னும் கருத்துக்கு மாறாகச் சம்சாரியாக இருந்தும் அன்புவழியில் இறைவனை அடையலாம் என்ற கருத்து மக்களுக்குப் பிடித்திருந்தது.
     

  • பெண்களே உலகின் அனைத்துத் தீமைகளுக்கும், பாவங்களுக்கும் தொடக்கம் என்று கூறிப் பெண்களை வெறுத்து ஒதுக்கிய சமண பௌத்த மதங்களின் கொள்கைகளுக்கு மாறாக ஒருவன் சம்சாரியாயிருந்தே இறையன்பை அடையலாம் என்ற கொள்கை மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
     

இவற்றால் எல்லாம் மக்கள் தாம் இழந்த வாழ்க்கையைப் பண்பாட்டை மீளப்பெற்றனர்.

திருஞானசம்பந்தர்பாடல் பெற்ற தலங்கள்
219. இவர் பாடல் பெற்ற பெருநிலப் பிரிவுகள், சோழ நாட்டுத் தலங்கள் (காவிரிக்கு வடக்கேயும், தெற்கேயும்),ஈழநாட்டுத் தலங்கள், பாண்டிய நாட்டுத் தலங்கள், கொங்கு நாட்டுத் தலங்கள், நடு நாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டுத் தலங்கள், துளுவ நாட்டுத் தலங்கள், வடநாட்டுத் தலங்கள் ஆகியவை. இவற்றில் ஈழத்தை, சம்பந்தர் தமிழ் நாட்டிலிருந்தே பாடினார். அவ்வாறே வடநாட்டுத் தலங்களையும் பாடியிருக்கலாம். ஏனைய தலங்களை அவர் நேரடியாகவே சென்று பாடியிருக்கவேண்டும்.

கி. பி.
6 ஆம் நூற்றாண்டளவில் சம்பந்தர் பாடிய 219 கோயில்களும் கவனிப்பாரற்ற நிலையில், ஆனால் அழியாமல் இருந்திருக்கின்றன. இந்த 219 கோவில்களும் பக்தி இலக்கிய காலத்தில் கட்டப்பட்டவை அல்ல. நிச்சயமாக, சமண பௌத்த ஆதிக்கம் பெற்று அன்னியர் ஆதிக்கத்தில் இருந்த சங்க மருவிய காலத்தில் கட்டப்பட்டிருக்க முடியாது. இதன் மூலம் நாம் அறியக் கிடப்பதாவது,சங்ககாலத்தில் மக்களின் வழிபாட்டுத் தலங்களாக இருந்த ஏராளமான கோவில்கள் சங்ககாலத்தின் பின் பராமரிப்பார் அற்று, அழிவுற்ற நிலையில் தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் இருந்திருக்கின்றன.

சங்ககாலத்தில் கோவில்கள் பல இருந்தன, அவை மன்னர்களால் ஆதரிக்கப்பட்டன என்பதைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது என்பதனை இங்கு உறுதி செய்து கொள்ளலாம்.

பரிபாடல், சொல்லமைதியாலும் பொருளமைதியாலும் வடமொழிப் புராணக் கதைகளைக் கூறிச் செல்லும் தன்மையாலும் எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது என்று துணிந்து கூறலாம். இந் நூல் வழி நாம் காணும் சமூக நிலையும் சங்ககாலத்தின் கடைக்கூற்று வாழ்க்கை முறையைத் தான் காட்டி நிற்கிறது.

பரிபாடல் காட்டும் பக்தி மரபு:

தொல்காப்பியர்,பரிபாட்டு என்னும் பாவகை,அகத்திணையைப் பாடுவது என்று கூறியிருக்கிறார், இன்று எமக்குக் கிடைத்திருக்கும் பரிபாடல் பாடல்களில் (22), திருமாலுக்கு 6, முருகனுக்கு 8 என்று மொத்தம்
14 பாடல்கள் இறைவனைப் பாடுவதாக அமைந்திருக்கின்றன. வையையைப் பாடும் 8 பாடல்கள் மட்டுமே அகத்திணை சார்ந்து காணப்படுகின்றன. இறைவனைப் பாடும் மரபு தொல்காப்பியர் காலத்திற்குப் பிந்தியது. அண்மைய ஆய்வு தொல்காப்பியத்தை கி.மு. 7 ஆம் நூற்றாண்டிற்கு இட்டுச் செல்கிறது. தொல்காப்பியர் காலத்திற்குக் கூறப்பட்ட பா இலக்கணத்தை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளின் பின் வந்த பக்தி இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்த்தல் ஏற்றதாகாது. தொல்காப்பியர் அகத்திணை பாடுவதற்குரியதாக வகுத்த 'கலி பரிபாடல்' என்னும் பாவகைகளில் வேறான ஆசிரியப்பாவிலேயே சங்க இலக்கியங்களிலே பெரும்பாலானவை பாடப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியர் காலத்தின் பின், சிறிது சிறிதாக மாறத் தொடங்கிய பா மரபு சங்க காலப் பிற்பகுதியில் பக்தியை நோக்கித் திசை திரும்பியது. பா வகைகள், மக்களின் தேவைக்காகவே தவிர, மக்கள், பா வகைகளின் தேவகைகாக அல்ல. எதையும் தீர்மானிப்பது காலமும் கருத்தாவுமே.பக்தி இலக்கிய காலத்தில் தேவார, திவ்யப் பிரபந்தங்கள் பரிபாடலைப் பின்பற்றியே பாடப்பட்டன.

பரிபாடல், பிற சங்க இலக்கியங்கள் போலல்லாமல் வடமொழிப் புராணக் கதைகள், வடநாட்டு வழிபாட்டு மரபுகள் முதலியவற்றை மிகுதியாகக் கொண்டுள்ளது. வடநாட்டார், பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் சிறுகச் சிறுக, பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்கள் செல்வாக்கின் உச்சம் பரிபாடலில் வெளிப்பட்டிருக்கிறது.

பாடல் மரபும் பெருமளவுக்குப் பரிபாடலில் மாறியிருக்கிறது. மனிதக் காதலுக்குப் பதிலாகக் தெய்வக் காதல் பெருமளவுக்குப் பாடு பொருளாக அமைந்திருக்கிறது. இன்று கிடைத்திருக்கும் பரிபாடல் பாடல்களுள், திருமால், முருகன் மேல் பாடப்பட்ட 14 பாடல்களும் சங்க இலக்கியப் பாடுபொருள் மரபுக்கு மாறாகப் பக்தியைப் பாடுபொருளாகக் கொண்டு பாடப்பட்டவை.

ஆரியக் கலப்பால்,'மாயோன் மேய காடுறை உலகமும்' என்று முல்லைக்குக் கடவுளாகக் கூறப்பட்ட மாயோனே காலக் கிரமத்தில், வடமொழிக் கதைகளின் கூட்டுச் சேர்க்கையால் திருமாலாகி, வடநாட்டுக் கதைகள் அனைத்தையும் தனதாக்கிக் கொண்டவராகக் காணப்படுகிறார்.இயல்பு வாழ்வில், சங்ககாலத்தில் ஒரு மன்னனை அலங்கரித்த,ஆயுதங்கள், படை, போர், கொடி, கோவில் முதலியன திருமாலுடன் இணைக்கப்பட்டு, திருமால், சங்கு சக்கரங்களுடன் தனியான வாகனம், கொடி முதலியனவும் உடையவராக ஆக்கப்பட்டார். திருமால் பற்றிய வடநாட்டு மரபுக் கதைகளும் அற்புதங்களும் மாயோனுடன் இணைக்கப்பட்டு அவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. திருமால் பக்தி நன்கு வளர்ந்திருந்த ஒரு காலகட்டத்தில் தான் பரிபாடல் பாடல்கள் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

சங்ககாலத்தில், முருகனுக்கும் திருமாலுக்கும் குன்றின் மேல் திருக்கோவில் அமைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இது குன்றவர்களுக்கும் இத் தெய்வங்களுக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுவதாக அமைகிறது. தென்னவர்; வழிபாட்டில் பண்ணோடிசை பாடி வழிபடும் மரபைப் பரிபாடல் ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும் அல்லது அத்தகைய மரபுகளைக் காட்டி நிற்கும் நூல்களில் பரிபாடலே எமக்குக் கிடைத்திருக்கிறது என்று கொள்ளக் கிடக்கிறது.

சங்ககாலத்தில் குறிஞ்சிக் கடவுளாக இருந்த மாயோன் பரிபாடலில் திருமாலாகிப் பெற்ற மாற்றங்களுள் சில கீழே தரப்படுகின்றன.

  • தொழுவதற்கும் அவன் அருள் வேண்டும், எனவே அவன் அருளை வேண்டியும்,
     

  • தீமையை அழித்து உயிரினங்களைக் காப்பவனாகிய திருமாலின் (காத்தற் கடவுளாகிய) படை, கொடி, சங்கு முதலியவற்றைப் போற்றுவனவாகவும்,
     

  • கருடன், பனை, கலப்பை, யானை என்னும் இவற்றைக் கொடிகளாகக் கொண்டாலும், இவற்றுள் சிறந்து விளங்கும் கருடக் கொடியைப் போற்றுவதாயும்,
     

  • பஞ்சபூதங்களுக்கும் முதல்வனாகியும், அவையே தானாகியும், அவற்றைக் கடந்து தனித்து நிற்பவனாகியும் விளங்குபவன் திருமால் ஒருவனே (ஒப்பற்ற ஒரே கடவுள்) என்றும்,
     

  • திருமாலே, கண்ணனாகவும் பலராமனாகவும் அவர்களுக்கும் முற்பட்டவனாகவும், அவரவர் நினைப்புக்கு ஏற்பத் தோன்றி அருள்பவனாயுமுள்ள அவனுக்குக் குறிப்பிட்ட உருவெல்லாம் மாயத் தோற்றமே எனவும்,
     

  • 'கோட்டிற் கொண்டு நிலமகளை மணந்த காலத்து, மார்பில் மறுப்போலச் செய்யவளைக் கொண்டிருந்த சிறப்பாகுமோ?' என்றும்,
     

  • திருமால் சாதாரண மக்களுக்குச் சிலை வடிவாகவும்,அந்தணருக்கு வேள்வித்தீச் சுடரிடையிலும், யோகிகட்கு அவர் உள்ளத்திலும், சித்தர்களுக்கு எங்கும் எதனிடத்ததுமாக நின்று காட்சியளிப்பான் என்றும், அவரவர் எண்ணங்களுக்கும் நிலைகளுக்கும் ஏற்ப அவ்வவ் வடிவினனாகத் திகழ்தலன்றித் தனக்கென வடிவமாக ஏதும் இல்லாதவன் திருமால் என்றும்,
     

  • உலகின் தோற்றத்திற்கு ஆதி காரணமானவன்,மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி என்றும்,
     

  • உலகு மீண்டும் தோன்றும் காலத்தே 'தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், நீயென மொழியுமால் அந்தணர் அருமறை' என்னும் புராணக்கதையையும், தாயின் அடிமைத் தளையை அறுக்கக் கருடன் தேவரை வென்று அமுதத்தைக் கொணர்ந்தான் என்னும் கருடபுராணக் கதையையும்,வாமனனாகி மாவலியிடம் மூவடி இரந்து பெற்றதையும், ஊழிக் காலத்திதே,'ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு,கேழலாய் மருப்பினால்;' எடுத்து வந்ததையும், ஊழிப் பெருமழை வெள்ளம் வற்றும்படியாக,அன்னச் சேவலாகிச் சிறகினால் விசிறிக் காத்தமை பற்றியும், இன்னும் இவை போன்ற திருமால் பற்றிய பல வடநாட்டுக் கதைகளைக் கூறியும்,
     

  • 'நடுவுநிலை திறம்பிய நயமில் ஒரு கை' என்று, தேவர் அசுரர் என்னும் இருசாராருக்கும் அமுதத்தைச் சமமாகப் பகிர்ந்து கொடாது தேவர்களுக்கே கொடுத்து நடுவுநிலை திறம்பிய கை பற்றியும்,

    • 'அன்னையென நிலைஇ நின்னடி தொழுதனெம்,
    பன்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்,
    முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால்,
    இன்னம் இன்னுமெம் காமம் இதுவே.'
    பரிபாடல்
    13.

    தொல்காப்பியத்தில் 'சேயோன் மேய மைவரை உலகமும்' என்று பாடப்பட்ட முல்லை நிலத்துத் தமிழ்க் கடவுளான சேயோனது வடிவமும் வரலாறும், வடநாட்டார் தாக்கத்தால் சிறிது சிறிதாக மாற்றுருப் பெற்று மக்கள் மத்தியில் செவ்வேளாகி வடநாட்டுச் சுப்பிரமணியருக்குரிய கதைகளைத் தாங்கி நிற்பதைப்பரிபாடல் காட்டுகிறது. சேயோன்,
     

  • அவுணரை அழித்த வெற்றி வேலையுடையவன், எனவே எம்மைக் காக்க வல்லவன் எனவும்,
     

  • ஊழிக்காலத்தின் முடிவில் அனைத்தையும் அழித்துத் தானே தனியனாக நிற்கும் கடவுளாகிய சிவனது குமாரனே எனவும்,செம்மேனியனே எனவும்,
     

  • 'வேலவன் ஏத்தும்' வெறியாட்டு களத்தில் நீ பூசாரியிடம் தோன்றி வருதல் உண்மையல்ல, ஏனெனில் நீ அவற்றை எல்லாம் கடந்த பரம்பொருள், ஆதலால் நீ தான் அங்கும் தோன்றி அவர்க்கும் அருளுவதால் அவை பொய்யானவையும் அல்ல, வேலன் அழைப்புக்கு இணங்கித் தோன்றி அருள் புரிபவன் என்றும், (இங்கு சங்க காலத்தில் பெரு வழக்காக விளங்கிய வேலன் வெறியாட்டிற்குப் புதிய வடிவம் கற்பிக்கப்படுகிறது.)
     

  • திரிபுவனத்தானாகிய சிவன், சினம் தணிந்து உமையுடன் கலந்து உண்டாகிய சிசுவை, இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிவன் சிதைத்ததையும்;, சிவகரு முடிவில் வளர்ந்து ஆறு குமாரர்களாகிப் பின் அறுவரும் ஓர் உருவாகி முருகனாகிய,முருகனின் பழம் பிறப்புப் பற்றிய செய்தியும்,

    போரில் தோற்றோர், வென்றவனுக்குத் திறை கொடுத்துத் தமது அடிமைத் தன்மையைப் புலப்படுத்துவர். அவ்வாறே தேவர்கள் முருகனுக்குச் சேவலும் மயிலும் அளித்தார்கள் என்பதையும் (சங்ககாலத்துப் போரும் போரின் இறுதியில் திறை செலுத்தலுமாகிய மரபு இங்கு இறைவன் மேல் ஏற்றிக் கூறப்படுகிறது.)

    • உயிர்க் கொலை செய்வோரும், அறனில் வாழ்க்கை வாழ்வோரும், தவஒழுக்கத்தை நீத்தவர்களும் உன்னை மறந்தவர்களும் உன்னை ஒருக்காலும் அடையமாட்டார்கள் என்றும் (இங்கு நல்லொழுக்கம் வலியுறுத்தப்படுகிறது.)

    • அறநெறியில் நின்று, முருகன் பால் அன்பு செலுத்தி, அவனருளைப் பெற்று நிலையான பேரின்பத்தைப் பெற விரும்புபவர்கள் அவற்றை முறையே வேண்டிநிற்பர் என்றும்,

    • '..................யாம் இரப்பவை
    பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்,
    அருளும் அன்பும் அறனும் மூன்றும்'
    – பரிபாடல்
    5 (செவ்வேள்).திருக்குறள் கருத்துக்கள் இங்கு காணப்படுகின்றன.

    • திருமால், சிவன், நான்முகன், ஆதித்தர் பன்னிருவர், தேவ மருத்துவர்கள் இருவர், பதினொரு உருத்திரரும், திசைகளைக் காக்கும் இந்திரன் முதலாய எண்மரும், மற்றுமுள்ள தேவர்களும், வேதங்களைக் கற்ற சிறந்த தவமுதல்வர்களாகிய எழுவரும், உன்னைக் கண்டு போற்றும் பொருட்டு திருப்பரங்குன்றத்திற்கு வருவர். ஆதலினால், இப் பரங்குன்றம் சிவன் குடிகொண்டிருக்கும் இமயமலையாகிய திருக்கயிலாயத்தை ஒத்து விளங்குகின்றது என்றும்,

    • சரவணப்பொய்கையுடன் திருப்பரங்குன்றத்திலுள்ள அருவி ஒப்பிடப்படுகிறது என்றும்,

    • சேயோனுக்குத் தந்தை, தாய், மனைவி என்று உறவுகள் பெருகின என்றும்,

    இவை போன்ற இன்னும் பல செய்திகளும் சேயோனுடன் இணைக்கப்பட்ட நிலையைப் பரிபாடலில் காண்கிறோம். வரலாறு,மனிதக் காதல் என்னும் அகத்திணை மரபைக் கடந்து தெய்வக் காதல் என்னும் பக்தி மரபுக்கு அடியெடுத்து வைக்கும் ஒரு திருப்புமுனையாகத் தான் பரிபாடலைக் காணக்கூடியதாக உள்ளது.

    பரிபாடல் வையைப் பாடலிலிருந்து சங்ககாலப் பிற்பகுதியில், அக்கால மேட்டுக்குடி மக்களிடையேயும் ஓரளவுக்குப் பொது மக்களிடையேயும் நிலவிய பண்பாட்டு விழுமியங்களைப் பிரித்து எடுக்கக் கூடியதாக இருக்கிறது. அக்காலத்தில் சமயம் மக்களின் அன்றாட வாழ்வில் இடம்பெற்றுவிட்ட நிலையைப் பரிபாடல் காட்டுகிறது. நல்லந்துவனார் பாடிய வையைப் பாடல் ஒன்றில் தைநீராடலும் ஆதிரை நாள் விழாச் சிறப்பும் பாடப் பட்டுள்ளன. நல்வழுதியாரது பாடலிலும் அம்பா ஆடல் பற்றிய குறிப்பொன்று வந்துள்ளது.

    ஆதிரை நாளில், பனிப் பெய்யும் விடியற்காலையில் கன்னிப் பெண்கள், காமக் குறிப்பற்று, தமது தோழிமாருடன், புலன்களை அடக்கித் தவம் செய்வது போலத் தம் தாய்மார்கள் அருகில் நின்று வையையில் நீராடித் திருவாதிரை நோன்பு நோற்பதாகக் கூறப்படுகிறது.

    'கணவன் பிரியாது இருக்க வேண்டும்.
    இளமை நீங்காது இருக்க வேண்டும்.
    வான்முகில் வழாது பெய்ய வேண்டும்.
    மலிவளம் சுரக்க வேண்டும்.'


    என்பன போன்ற பல வேண்டுதல்களை நோன்பிருக்கும் அம் மகளிர் தைநீராடலின் போது செய்வார்கள். 'வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க' என்னும் பக்தி இலக்கிய காலப் பாடல் அடிகள் நினைவிற்கு வருகின்றன.

    பெண் தன் காதலைக், குறிப்பாலன்றி வெளிப்படையாகக் கூறமாட்டாள், கூறக் கூடாது என்பது தொல்காப்பியர் கால மரபு.'தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல், எண்ணுங் காலை கிழத்திக்கில்லை' (களவியல்
    28). இந்த மரபு பக்தி இலக்கிய காலத்தில் மீறப் படுகிறது. ஆண்டாள் திருவரங்கநாதன் மேல் கொண்ட ஒருதலைக்காதலை வெளிப்பாடாக வாய்விட்டு வெளிப்படுத்துகிறாள். அரங்கநாதர் வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகப் பாடும் ஆண்டாள் பாடலில் இருவகை மரபு மாற்றங்களைக் காணலாம்.

    1. காதலைத் தலைவி தானே கூறலாகாது என்ற தொல்காப்பியர் மரபுக்கு எதிராக ஆண்டாள் தன் காதலை வாய்விட்டுக் கூறுகிறாள்.

    2. திருமணச் சடங்கு மாற்றம்.

    'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதன்வந்து என்கைத்
    தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்.'


    கண்ணனைத் தான் அடைய முடியாத நிலையில்,'நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்' என்று தன்னைக் கண்ணன் இல்லுக்கு இரவில் இட்டுச் செல்லும்படி வேண்டுகிறாள்.

    'தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனிவழி போயினாள் என்னும் சொல்லு
    வந்தபின்னைப் பழிகாப்பரிது மாயவன் வந்து உருக் காட்டுகிறான்
    கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
    நந்தகோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்'
    – நா.தி.பி.
    619.

தலைவன் வீட்டிற்குச் செல்வது, அந்த வகையில் உடன்போக்கு, ஆனால் தலைவனுடன் போவதில்லை, அந்த வகையில் உடன்போக்கில்லை. இவ்வாறாகத் தமிழ்க் கவிதை மரபு பல்லவர் காலத்தில் தெய்வக் காதலாக மலர்ந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. வரலாற்று நீரோட்டத்துடன் செல்வதே கவிஞனின் இயல்பு. இதற்குப் பக்தி இலக்கிய ஆசிரியர்களும் விலக்கல்ல.
 

முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
விரிவுரையாளர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
கனடா வளாகம்.