தொல்காப்பியரது கடவுட் கொள்கை

முனைவர். திருமதி. செ. ஸ்ரீதாஸ்


மிழ் மக்களின் வாழ்வியலின் அனைத்து அங்கங்களினதும் மூலத்தை அறிவதற்கு நாம் இன்று நாடும் ஒரே ஆவணம் தொல்காப்பியம். ஒரு மொழியின் பழமையை, பெருமையை எடுத்துரைக்கும் ஆவணங்களுள் முதன்மையானது அம் மக்கள் விட்டுச் சென்ற இலக்கியங்களாகும். அவை,அம் மக்கள் வாழ்ந்த காலத்துப் பண்பாட்டின் சான்றுகளாகும். இவ்வகையில்,முழுவளர்ச்சி அடைந்திருந்த தமிழ்மொழியின் சிறப்பை இன்று உலகிற்கு எடுத்துக் காட்டுவது தொல்காப்பியம் என்னும் நூலாகும். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் எழுத்து, மொழி (சொல்); இலக்கணத்தை முறையே எடுத்துரைக்க, பொருளதிகாரம் அக்கால மக்களின் வாழ்வியல் இலக்கணத்தை விளக்குகிறது. உலகிலேயே வாழ்வின் இலக்கணத்தை வரைந்த ஒரே இனம் நாமாகத்தான் இருக்கமுடியும். மொழி அடைந்திருந்த செறிவை, அவர்கள் வாழ்ந்த உயரிய வாழ்க்கையைக் காலம் கடந்த நிலையில் தமது வாரிசுகளுக்கு எடுத்துக் கூறும் நூல் ஒன்று அற்ற நிலையை நினைத்துப் பார்த்தால் அதன் உயர்வு தெளிவாகும்.

தொல்காப்பியருக்குப் பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் அனைவருமே ஏறக்குறைய 90 விழுக்காடு, தொல்காப்பியர் கூறியவற்றையே மீண்டும் அவரவர் கால நடையில் கூறி வைத்திருக்கிறார்கள். தமிழ் மொழி பல நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் கட்டுக் குலையாமல் இருப்பதற்குத் தொல்காப்பியம் முக்கிய காரணம்.
தொல்காப்பியம், தொல்காப்பியர் என்னும் ஒரு தனிமனிதனது ஆக்கமாக இருந்த போதிலும் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து எடுத்துவரப்பட்ட கோட்பாடுகளின் தொகுப்பே தொல்காப்பியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. இக் கட்டுரையை மேலே தொடர்வதற்கு முன்னர் சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்து அவற்றின் அடிப்படையிலேயே இக் கட்டுரை தொடர்கிறது என்பதைக் கூறிக் கொண்டு தொடர்வது பொருத்தமாக அமையும்.

  • 1.தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய கி. மு.7 ஆம் நூற்றாண்டுஎன்றுகுறித்துக் கொள்ளலாம்.
     

  • 2.எட்டுத்தொகைப் பாடல்கள், பல காலப் பகுதியில் வாழ்ந்த பல நூற்றுக் கணக்கான புலவர்களால் பாடப்பட்டவை.
     

  • 3.பத்துப்பாட்டுப் பாடல்களில் பெரும்பாலானவை, பாடிய புலவன், பாட்டுடைத் தலைவன், அப் புலவனால் பாடப்பட்ட பிற தலைவர்கள், அத் தலைவர்களைப் பாடிய பிற புலவர்கள் என்றுசங்கிலித் தொடர் போல ஆராய்ந்து செல்லும் போது,குறிப்பிட்ட ஒரு மூன்று நூற்றாண்டு காலப் பகுதியில், அதாவதுஏறக்குறைய, கி. மு. முதல் மூன்று நூற்றாண்டு காலப்பகுதியில் பாடப்பட்டிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது.
     

  • 4.எனவே தொல்காப்பியர் காலத்திற்கும் சங்கப் பாடல்கள் பாடப்பட்ட காலத்திற்கும் இடையில் ஆகக் குறைந்தது மூன்று நூற்றாண்டு கால இடைவெளி இருந்திருக்கலாம்.


1. கடவுள் பற்றிய அறிவு:

ஆதியில் மனிதன் இயற்கையின் ஆற்றலுக்குத்தலை வணங்கினான் என்னும் பொதுக் கருத்துக்குத் தமிழரும் விலக்கல்ல. இயற்கையின் ஆற்றலே காலப்போக்கில் கடவுளாக மாற்றம் பெற்றது. உதாரணமாக தொடக்க காலத்தில் மழையாகிய மாரியை வழிபட்டனர். பிற்காலத்தில் தாய்த் தெய்வங்களின் ஆளுமை விரிந்தபோது (வெப்பம், நோய், வழப்பம் இவற்றை மிகுதியாக்குபவளும் குறைப்பவளும் என்ற இரட்டை நிலைத் தன்மை வரை விரிந்தபோது) மழையாகிய மாரி 'மாரியம்மன்' ஆனாள். 'வழிபட்டால் நன்மையும் தவிர்த்தால் சீற்றமும் காட்டும்' என்னும் இரட்டை நிலைப் பண்புடன் விளங்கும் மற்றொரு தெய்வம் 'காளி'. கருப்பு என்னும் பொருளுடைய 'கார்' என்பதிலிருந்து திரிந்ததே காளியாகும். என்று இவ்வாறு தமிழ்த் தெய்வங்களின் தொடக்கம் பற்றி பக்தவத்சல பாரதி அவர்கள் பொன். கோதண்டராமனை மேற்கோள் காட்டி விளக்குகிறார்.

வரலாற்றை நாம் அறியும் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் சமய நிலையைத் தொல்காப்பியம் வாயிலாக ஓரளவிற்கு அறியமுடியும். பாடல் பாடும் புலவனுக்கு வழிகாட்டுவதற்காக இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், உலகியல் பொருட்கள் அனைத்தையும் முதல், கரு, உரி என்னும் முப்பொருளில் அடக்கினார். உயிர் வாழ்வதற்கு அமைந்தநிலத்தையும் காலத்தையும் 'முதற் பொருள்' என்றும்,முதற் பொருளைச் சார்ந்து கருக்கொண்டு தோன்றும், தெய்வம் முதலான அனைத்து உயிருள்ளனவற்றையும் உயிரற்றனவற்றையும் 'கருப் பொருள்' என்றும், மக்களுக்குரிய அகம், புறமாகிய ஒழுக்கங்களை 'உரிப் பொருள்' என்றும் வகுத்தார். இம் முப்பொருட்களுள் எமது கவனத்தை ஈர்ப்பது கருப் பொருளாகும்.

'தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப'. -
தொல். பொருள். நூ.
20.

தொல்காப்பியர் காலத்தில் 'தெய்வம்' வாழ்வின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.மக்கள் வாழ்ந்த நிலத்திற்கும், காலத்திற்கும், அவரவர் தேவைக்கும் ஏற்ப அவர்கள் கடவுள் வழிபாடு அமைந்திருந்தது.

சங்க காலத்தில் அகமும் புறமுமே வாழ்க்கையின் அடிநாதமாக இருந்த போதிலும்,சமயத்துக்கு அடிப்படையான கருத்துக்களும் இருந்திருக்கின்றன, ஆனால் அவை யாவும் சமயம் உருவாவதற்கான தொடக்க நிலையையே குறிக்கின்றன என்றே கொள்ளலாம்.

காடும் காடு சார்ந்தமுல்லை நிலத்தில் வாழ்ந்தமக்கள் மாயோனையும்,மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள்சேயோனையும்,வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள்வேந்தனையும்,கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் வருணனையும் என்று தாம் வாழ்ந்த நிலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப வழிபடு தெய்வங்களாகக் கொண்டனர்.

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.'–
தொல். பொருள். அகம். நூ.
5.

நால்வகை நிலத்திற்கும் உரிய தெய்வங்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியர், பாலை நிலம் பற்றியோ அல்லது பாலைக்குரிய தெய்வம் பற்றியோ இந் நூற்பாவில் குறிப்பிடாததுபாலைக்கு நிலம் அற்ற காரணத்தாலா?நானிலத்திற்கும் நான்கு தெய்வங்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியர்,இத் தெய்வங்களிடையே உயர்வு, தாழ்வு இருந்ததாகக் குறிப்பிடவில்லை.

முல்லை நில மக்களின் முக்கிய தொழில் ஆநிரை மேய்த்தலாகும். ஆநிரைகளை மேய்ச்சல் நிலம் தேடி, இடம் விட்டு இடம் கொண்டு செல்லும் போது இடையூறுகளைச் சந்தித்தார்கள். தமது நாளாந்த இடர்களைக் களைந்து தமது ஆநிரைகளைக் காக்கும் தலைவனாக, தம்மில் ஒருவனாக, தம்மிலும் பலசாலியாக மாயவனை உருவாக்கி,மாயவன் வழிபாட்டை வளர்த்துக் கொண்டார்கள். மாயவன், மாடு மேய்ப்பவன், இடையன், பசுக்களுக்குத் துன்பம் நேரிட்ட போதெல்லாம் துன்பம் துடைத்து துயர் களையும் பாதுகாவலனாகக் கருதப்பட்டான்.இவ்வாறே குறிஞ்சிக் கடவுளான சேயோனும் வளர்த்தெடுக்கப்பட்டான். பிற்காலத்தில்,இவ்விரு தெய்வங்களும் வடநாட்டார் சேர்க்கையால் திருமாலாகவும், முருகனாகவும் மாற்றமடைந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறியலாம்.உழவு முதலாய தொழில்களை வேந்தனே தலைவனாக நின்று காத்தான். மன்னனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட 'வேந்தன்' என்னும் பதம், தொல்காப்பியர் காலத்தில் காத்தற் கடவுளைக் குறிக்கப் பயன்பட்டிருக்கவேண்டும். பிற்காலத்தில் இவ் வேந்தனும் (இந்திரன்) வருணனும் தமது முக்கியத்துவத்தை இழந்து சிறு தெய்வ நிலையை அடைந்திருக்கவேண்டும்.

'மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணைப் புறனே'–
தொல். பொருள். புறம். நூ.
4.

போரற்ற காலத்தில் முரசுக்கட்டில் மூடிப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் முழவு,போரின் தொடக்கத்தில்,வழிபட்டுப் பாவனைக்கு எடுக்கப்படுவது அக்கால வழக்கமாக இருந்திருக்கிறது,வெற்றி வேண்டி, முரசை வழிபடுகின்ற துடிநிலையும், கொற்றவையை வழிபடும் கொற்றவை நிலையும் பற்றித் தொல்காப்பியர் போர் பற்றி விளக்கும் புறத்திணைப் பகுதியில் குறிப்பிடுகிறார். இந் நூற்பாவில் 'துடிநிலை' என்பதற்கு 'குடிநிலை' என்று இளம்பூரணரும்,'துடிநிலை' என்று நச்சினார்க்கினியரும் 'கொடிநிலை' என்று நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் பாடம் கொண்டிருக்கிறார்கள். எமது தேவைக்கு 'முரசை வழிபடும் வழக்கம்'அக்காலத்தில் இருந்திருக்கிறது என்னும் பொருள் போதுமானது. 'துடிநிலை' என்று கொண்டால்,'துடி' பாலைக்குரிய முரசு எனக் கொள்ளலாம். சங்கப் பாடல்களில் கொற்றவை பாலைத் தெய்வமாகப் பாடப்பட்டிருக்கிறாள்.

இவ்வழிபாட்டு முறைகள், ஆநிரை கொள்வோருக்கும் அவ் ஆநிரைகளை மீட்போருக்கும் பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறது என்று கொள்ளக் கிடக்கிறது. இவ்வழிபாட்டு முறை மேலே குறிப்பிடப்பட்ட மாயோன், சேயோன், வேந்தன், வருணன் முதலிய தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு முற்றிலும் வேறானதாய், வெற்றி வேண்டி மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறையாகும். தொல்காப்பியர்,கொற்றவைநிலை, துடிநிலை என்பவற்றிற்கு தனியாக விளக்கம் கூறவில்லை.

நில அடிப்படையில் தெய்வங்கள் வேறுபட்டுக் காணப்பட்டாலும் அவை அனைத்தும் முழுமுதற் கடவுள் ஒருவனையே குறிப்பிடுகின்றன.தாம் வாழ்ந்த சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் மனிதனால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட வழிபாட்டு முறையே பண்டைய தெய்வ வழிபாடாகும்.நில அடிப்படையில் உருவாக்கப்பட்ட தெய்வம், நிலம் கடந்த நிலையில் எல்லைகளைத் தாண்டிய தனிப்பெரும் தெய்வமாக 'கடவுள்' என்னும் பெயரால் தொல்காப்பியத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.கடவுளை, கட + உள் எனப் பிரிக்கலாம். கட என்றால் கடந்து நிற்பது, இடம், காலம், அறிவுமுதலிய கட்டுப்பாடுகளைக் கடந்து நிற்பவன் கடவுள். மேலே கூறப்பட்ட திணைக்குரி தெய்வங்கள் தம் எல்லைகளைக் கடந்து சென்றிருக்கிறார்களா? எல்லைகளைக் கடந்த கடவுள் பற்றிய கருத்துப் பழங்காலத்தில் இருந்ததா? இருந்தது.

2. முழுமுதற் கடவுள் என்னும் கொள்கை:

இந்தமுழுமுதற் கடவுளுக்குத் தொல்காப்பியர் பெயர் கொடுக்கவில்லை, திணைக்குரிய தெய்வங்களுக்கு மேலாக எல்லாவற்றையும் கடந்ததாக, முழுமுதலாக இருக்கின்ற ஒன்றைக் கடவுள் என்கிறார். இந்த முழுமுதலை,சிறந்தது என்ற சொல்லாலும் குறிக்கிறார்.

'காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.'–தொல். பொருள். கற்பு. நூ. 51.

இங்கு,எல்லாவகையாலும் சிறந்தது, முதியது, முழுமுதல் என்று பொருள் தருகிறது. சிறந்த அந்த ஒன்றை வழிபடுவது தான் இதுவரை வாழ்ந்ததன் பயன் என்கிறது இந்நூற்பா. கடவுள் சிறந்தது என்னும் தொடர்களால் திணைக்குரித் தெய்வங்களைத் தாண்டி முழுமுதற் கடவுள் பற்றிய சிந்தனை தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்கிறது.

தொல்காப்பியர், கடவுள் என்ற சொல்லைக் 'கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' (தொல். பொருள். புறம். நூ.
27) என்று புறத்திணையியலில் குறிப்பிடுகிறார். கடவுள்,மனிதனது நம்பிக்கையில்,மனிதனால் உருவாக்கப்பட்டவன் என்பதை அறிவியல் உறுதி செய்கிறது. சமயம் → கடவுள் →வழிபாடு →சடங்குகள் என்று இந்தப் படிமுறையில் கடவுள் பற்றிய நம்பிக்கை வளர்ந்து வந்திருக்கிறது. சமயம் கடவுளை அடியாகக் கொண்டது, கடவுளை முன்னிறுத்திய வழிபாட்டு முறைகளும், அதனையொட்டிச் சடங்குகளும் வளர்ந்ததால் சமயம் வளர்ந்தது. கடவுளை ஒப்புக் கொண்டு, கடவுளை வழிபடும் வழிபாட்டு முறைகளை அறிந்து அதன்படி ஒழுகுவது சமயம் என்பர்.கடவுள் என்றால்; என்ன? கடவுள் என்று ஒருவர், நமது அறிவுக்குப் புலனாகும் காலத்தில், தமிழ் நாட்டில் தமிழர்களால் வழிபடப்பட்டவராக இருந்திருக்கிறாரா? இல்லையா? என்பதெல்லாம் மேலும் ஆய்வுக்குரிய வாதங்கள். வழிபாட்டிற்கு உரியவராக இருந்திருக்கிறார் என்கிறது தொல்காப்பியம்.

தொல்காப்பியர் காலச் சமயம் எது? சங்ககாலச் சமயம் எது? சமயம் சார்ந்த செய்திகளைத் தொல்காப்பியம் எந்த அளவுக்குத் தந்திருக்கிறது? தொல்காப்பியர் கூறும் சமயத் தகவல்களைச் சங்க இலக்கியங்கள் எந்த அளவுக்கு உறுதிப்படுத்துகின்றன?தொல்காப்பியம் என்று நாம் இங்கு எமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது தொல்காப்பிய நூற்பாக்களை மட்டுமே என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.

தொல்காப்பியத்திற்குக் கண்ட முதலாம் உரை கி. பி
9 ஆம் நூற்றாண்டிற்கு உரியது. ஏறக்குறைய 16 நூற்றாண்டுகள் பின்னர் எழுதப்பட்ட உரைகளில் தொல்காப்பிய நூற்பாக்களுக்குச் சங்க இலக்கியங்களையே உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். தொல்காப்பியம் →சங்க இலக்கியம் →தொல்காப்பிய உரைகள் என்று இவற்றிடையே காணப்படும் கால இடைவெளி மிகப் பெரியது. உலகம் கையடக்கத் தொலைபேசியில் அடங்கியுள்ள இன்றைய காலத்தைப் போல அல்லாமல் மிக மெதுவாக ஆமை வேகத்தில் சென்றது என்று எடுத்துக் கொண்டாலும், வடநாட்டார் வருகை, கருத்து மாற்றம், அரசியல், பொருளாதார மாற்றங்கள், நம்பிக்கை மாற்றங்கள் என்று இப்படியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். எனவே உரையாசிரியர்கள் கையாண்டுள்ள சங்க இலக்கிய உதாரணங்களை மட்டும் எமது தேவைக்கு ஏற்ப இங்கு கொள்வது பொருந்தாது. தொல்காப்பிய நூற்பாக்களையும் அவற்றை நிறுவக் கூடியதான புதைபொருள் ஆதாரங்களையுமே இவ்வாய்வில் கொண்டிருக்கிறேன்.

3. உருவ வழிபாடு:

தொல்காப்பியர் காலத்தில் உருவ வழிபாடு இருந்ததற்கான சான்றுகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. 'மாயோன்','சேயோன்' எனத் தெய்வங்களுக்கு நிறம்பற்றிப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது, தெய்வங்களுக்கு உருவம் அமைத்து வழிபட்டிருக்கக் கூடும் என்னும் கருத்தை வலியுறுத்துவதாக இருக்கிறது.'இத் தெய்வங்களுக்குத் திருவுரு அமைத்து வழிபடும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட தொன்மையுடையது' என்கிறார் வெள்ளைவாரணனார்.

வீரமும்; காதலுமே சங்ககால ஒழுக்கங்களாகப் போற்றப்பட்டிருக்கின்றன. காதல் எந்த அளவுக்குப் பேசப்படுகிறதோ அந்த அளவுக்கு வீரமும் பேசப்பட்டிருக்கிறது. 'குழந்தை இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன்று என்று வாளில் தப்பா' மரபு பேசப்பட்ட காலம் அது.

'ஈன்று புறம் தருதல் என் தலைக் கடனே'–என்று பொன்முடியார் என்னும் சங்கச் சான்றோர் பாடிய புறநானூற்றுப் பாடலின் (312) இறுதி அடிகள்,'ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.'என முடிகின்றன.

காளையின் கடன் அக் காலத் தேவையை முடித்து வைத்தலாகும். அத்தகைய முயற்சியில் இறந்துபடும் காளைக்கு ஆற்றப்படும் கடன்களுள் ஒன்றாக 'நடுகல் நாட்டி வழிபடுதல்'கூறப்படுகிறது.

'காட்சி கல்கோள் நீர்ப்படை நடுதல்.............
சீர்த்தகு மரபில் கல்லொடு புணர....'– தொல். பொருள். புறம். நூ 5: 19-20.

போரில் இறந்த வீரனைக் கல்லில் தெய்வமாக நிறுத்தும் பொருட்டு அதற்குரிய கல்லைத் தேடிக் காண்பது 'காட்சி'. கல் தேடிச் செல்லும் போது உடம்பில் தெய்வத்தை நிறுத்தித் தேடுவதாகக் கூறப்படுகிறது. ஏற்ற கல் ஒன்றை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பார்;கள். தேடிக் கண்ட கல்லைச் சகல மரியாதைகளுடனும் வண்டியில் ஏற்றி வீரன் இறந்த இடத்திற்குக் கொண்டு செல்வார்கள். கல்லை வீரன் இறந்த இடத்திற்கு இட்டு வருதல் 'கல்கோள்'(கால்கோள் என்னும் பாடமும் உண்டு) எனப்படும். கொண்டு வரப்பட்ட கல்லை முறைப்படி நீராட்டித் தூய்மை செய்து வழிபாட்டிற்கு உரியதாக ஆக்குவது 'நீர்ப்படை'. தூய்மை செய்யப்பட்ட கல்லை, உரிய இடம் தேர்ந்து நடுவது 'நடுகல்'. இவ்வாறு நட்ட கல்லுக்குப் படையல் இடுவதும் கோயில் கட்டுவதும் 'பெரும்படை'. அக் கல்லில் வாழும் வில்லும் வரைதலும்,வீரனை வாழ்த்தி வழிபடுதலும் வழக்கமாகும்.

நடுகல் வழிபாட்டு முறை மிகவும் தொன்மையானது. இவ் வழக்கு கி.மு 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இருந்து வந்ததைத் தொல்காப்பியம் காட்டுகிறது. இக் கல்லை ஆங்கிலத்தில் 'ர்நசழ ளுவழநெ'என்று குறிப்பர். தமிழ் நாடெங்கும் எண்ணிறந்த நடுகற்கள் காணப்படுகின்றன.நடுகல்லாக நாட்டுவதற்கு நீண்டு உயர்ந்த கற்களையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு யானை போல் காட்சியளிக்கும், யாத்திரீகர்கள் இதன் நிழலில் தங்கி இளைப்பாறுவார்கள், இக் கல் முன்பாக கேடயம், வேல் முதலியன நாட்டப்பட்டிருக்கும்,இக் கல்லில் வீரனது பெயரும், பெருமையும் பொறிக்கப்படும் வழக்கம் இருந்திருக்கிறது என்றெல்லாம் அறியப்படுகிறது.

'இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி ஊட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் ........' -
புறநானூறு
329.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடிய பாடல் இது. சீறூரில் வாழும் சிறு குடிகளேயாயினும் அவர்கள் வீர மறக்குடியினர். நடுகல்லை வழிபட்டு நாட்பலியூட்டும் நற்செயலாளர்கள். தாமும் நடுகல்லில் நின்ற தம் முன்னோரைப் போல மறத்துறையில் விளங்க வேண்டும் என்னும் விருப்புடையவர்கள். நடுகல்லை நீராட்டி, வாசனைப் புகைகாட்டி, நெய்விளக்கு ஏற்றும் வழக்கமும் அக்காலத்தில் இருந்திருக்கிறது என்பது இப்பாடல் வாயிலாகத் தெரியவருகிறது. மக்கள் தாம் உயர்வாகக் கருதிய கிடாய், கள்ளு முதலியவற்றையும் நடுகல்லாயினானுக்குப் படைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கின்றது. பெண்கள் தம் முன்னோர் கற்களை வணங்குவர். இறந்த கணவனின் கல்லைக் கைமை நோன்பு நோற்கும் மனைவி வணங்குவாள்.

காட்டுவழியில் ஆங்காங்கே நடுகற்கள் காணப்படும். மறவர் அவ்வழியே போகும் போது தம் அம்புக்ளை நடுகற்களில் தேய்த்துக் கூராக்கிச் செல்வர். அப்படி அம்புகள் தேய்த்துத் தேய்த்து நடுகல்லில் பொறிக்கப்பட்டிருந்த இறந்தோரின் பெயரும் பெருமையும் எழுதிய எழுத்துக்கள் தேய்ந்து உருக்குலைந்து போயின. அவ்வழியே செல்லும் பயணிகள், நடுகல்லில், பொறிக்கப்பட்டு உருமாறியிருந்த பெயரையும் பெருமையையும் பொறுமையாக நின்று பார்க்காது செல்கின்றனர் என்பதை அகநானூற்றுப் புலவர் பதிவு செய்கிறார்.

'கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎம்முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்' -
அகநானூறு
297.

சங்க காலத்தில் காணப்பட்ட மிகப் பழமையான நடுகற்களை இப்பாடல் காட்டி நிற்கிறது. மதுரை மருதன் இளநாகனார் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றும் இதே கருத்தை வெளிப் படுத்துகிறது. காட்டு வழியில் உமண் வண்டிகள் வருவதும் போவதுமாக இருந்திருக்கின்றன. வண்டிச் சக்கரம் உராய்ந்து உராய்ந்து நடுகல்லின் இடைப்பகுதியில் கூரிய உளியால் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் தேய்ந்து இனம் தெரியாது போயின. அவ் வழியே செல்லும் வழிப்போக்கர்களுக்கு அவை வேறு பொருள் பயப்பனவாக அமைந்திருந்தன என்கிறார்.

'மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
கண்பொரி கவலைய கானத்து ஆங்கண்'–
அகநானூறு
343.

நடுகற்கள் காணப்படும் இடங்கள் பெரும்பாலும் பாலை நிலத்தை அண்டியதாகவே காணப்படுகின்றன. நடுகற்கள் நாட்டப்பட்ட இடங்களைக் குறிப்பிடும் பொழுது, வெஞ்சுரம், அருஞ்சுரம், அருமுனை, சிறுவழி, அரிதுண்கூவல், அங்குடிச் சீறூர், வன்புலச் சீறூர், போக்கறு கவலய புலவுநாறு அருஞ்சுரம், பிறர் கொள்ளாச் சிறுவழி என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

சுமார்
10 முதல் 15 டன் எடை கொண்ட கற்களைக் கொண்டு இப் பெருங்கற்படைச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது, இவை ஒரு தனி மனிதனால் உருவாக்கப்படவில்லை என்பதும் ஒரு சமுதாயமே முழமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. நீத்தாருக்கு முயன்று அழியாத கருங்கற்களால் நினைவுச் சின்னங்களை எழுப்பிய மக்கள் தாம் வாழ்ந்ததற்கு அறிகுறியாக இலக்கியங்கள் கூறும் மாடமாளிகைகளை அழியாப் பொருட்களால் ஆக்கி வைத்திருக்கவில்லை. இதற்கு மன்னர் பரம்பரைகளும் விலக்கல்ல. பின் ஒரு காலத்தில் தமது வரலாற்றை அவை பேசும் என்று நினைத்திருந்தால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.

4. தெய்வத்திற்குக் கொடுக்கப்பட்ட உயரிய இடம்:

அகத்திணையியலில், உள்ளுறை உவமத்திற்குரிய கருப்பொருட்களை வரையறுக்குமிடத்து,'உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம்எனக் கொள்ளும்' (தொல். பொருள். அகம். நூ.
50) என்று தெய்வம், உள்ளுறை உவமத்தில் கருப்பொருளாகக் கொள்வது தவிர்க்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டிற்குரிய தெய்வத்தைக் கருப்பொருளாகக் கொண்டு புகழ்வது போலப் பழிப்பதும், அங்கதமாகப் பாடுவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தெய்வம் உயரிய இடத்தில் வைத்து எண்ணப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடப்படுக்கிறது.

'காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன.'
தொல். சொல். கிளவி. நூ.
57.

சொல்லதிகாரம்,
1 ஆம் நூற்பா, உயர்திணை அஃறிணைப் பாகுபாட்டை,'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே' என்று விதந்து கூறுகிறது. எனவே,இந் நூற்பாவில்,காலம் முதலாகக் கூறப்பட்ட பத்தும் அஃறிணையாகக் கொள்ளப்பட வேண்டியவையாகும். இப் பத்துச் சொற்களுள், உலகம், உயிர், உடம்பு ஆகிய மூன்றும் தவிர்ந்த ஏனைய ஏழும் தெய்வத்தைக் குறிப்பவை. இங்கு எமது ஆய்வுக்குப் பயனுள்ளதாகக் கொள்ளப்படுபவை:

  • 1.தெய்வம், உயர்திணையா அஃறிணையா என்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
     

  • 2.காலம் என்பது காலக் கடவுள் என்றும்,பால்வரை தெய்வம் என்பதுஇருவினை வகுக்கும் தெய்வம் என்று நச்சினார்க்கினியரும், அறத்தெய்வம் என்று சேனாவரையரும்,வினை என்பது ஊழ் என்றும்,பூதம் என்பது ஐம்பூதங்கள் என்றும்,ஞாயிறு என்பது சூரியன் என்றும்,திங்கள் என்பது சந்திரன் என்றும்,சொல்என்பது நாமகள் என்றும் தெய்வங்களையே குறித்து நிற்கின்றன.எனவே தெய்வம் பற்றிய கருத்து தொல்காப்பியர் காலத்தில்,விரிந்து பரந்து செல்வதையும் இங்கு குறிப்பிட்ட தெய்வங்கள் யாவும் மனிதன் தனக்கு மிஞ்சிய சக்திகளாகக் கருதியவை என்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
     

  • 3.பால்வரை தெய்வம் என்னும் சொல் இறைவனாகிய முழுமுதற் பொருளையே குறிக்கும் என்பதில் உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.
    காலம், இருவினை, ஊழ், ஐம்பூதங்கள், ஞாயிறு,திங்கள், நாமகள் போன்ற கடவுளர் பற்றிய கருத்துக்கள் தொல்காப்பியர் காலத்தில் நன்கு கால் பதித்து விட்டதைக் காணக்கூடியதாக உள்ளது.

5. ஒரு கடவுள் கொள்கை:

மரபியலில், முதல்நூல் பற்றிக் கூறுமிடத்துக் கடவுளின் தன்மை தெளிவாகக் கூறப்படுகிறது.

'வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்'. –
தொல். பொருள். மரபு. நூ.
96.

இங்கு முழுமுதற் கடவுளானவன் வினையின் நீங்கிய தூய அறிவே வடிவானவன் என்பதும் அவன் ஒருவனே என்ற ஒரு கடவுள் கொள்கையும் கூறப்படுகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே மக்கள்,உலகு, உயிர், கடவுள் என்னும் முப்பொருள் பற்றியும் ஐம்பூதங்கள் பற்றியும் அறிந்திருக்கிறார்கள். தொல்காப்பியர், மரபியலில்,ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம் என்கிறார்.

'நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்...'–
(தொல். பொருள். மரபு. நூ.
91) என்கிறார்.

இன்றைய விஞ்ஞான உலகிற்கும் ஏற்றதாக அமைந்திருககும் இத் தொல்காப்பியக்; கோட்பாடு வியக்கத் தக்கதாக உள்ளது. பண்டைய தமிழரின் கடவுள் கொள்கை கண்மூடித்தனமானது என்றோ, விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்றோ கூறுவதற்கு அடிப்படை இல்லை.

6. கடவுள் நம்பிக்கை:

'வெறியறி சிறப்பின் வௌவாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தள்'


என்று புறத்திணையுள் தெய்வம் பற்றிய செய்தி மேலும் கூறப்படுகிறது. இறைவனைத் தன் மெய்யில் நிறுத்திக் குறி சொல்லுபவன் இவ் வேலனாகையால் தொல்காப்பியர் இதனைத் தெய்வத் துறையாகக் கொண்டார் எனலாம்.

இவை தவிரவும் வள்ளிக் கூத்து என்னும் ஒருவகைக் கூத்தும் கூறப்படுகிறது. ஆதியில் மக்கள் வள்ளிக் கிழங்கை உண்டிருக்கிறார்கள். தமக்கு உயிர் காக்கும் உணவுப் பொருளான வள்ளிக்கிழங்கை வள்ளித் தெய்வம் என்று கொண்டாடி வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

உன்னநிலை என்னும் துறை பற்றியும் தொல்காப்பியர் கூறுகிறார். கொடிய வேனிற் காலத்திலும் வாடாத உன்னமரம் வாடினால் அதனை நாட்டிற்குக் கேடு வரும் சகுனமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.இது பின் வரும் நிகழ்வொன்றை முன்கூட்டியே அறியத்தரும் நிகழ்வாதலால் இதனையும் தெய்வத்துறையாகக் கொள்வார்கள்.

தொல்காப்பியர், மன்னனைப் பாடும் பாடாண்திணைப் பகுதியில், புறநிலை வாழ்த்துப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

'வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழி வழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே'. –
தொல். செய்யுளியல் நூ.
106.

இங்கு தெய்வ வழிபாட்டின் நோக்கம் வெளிப்படவே கூறப்பட்டிருக்கிறது. மன்னன் வழிபடும் தெய்வம் பற்றிக் கூறப்படுகிறது.

சமயத்தை முன்நிறுத்திப்போருக்குச் செல்லுதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைக்கும் வழக்கத்தை வடநாட்டிலிருந்து வந்த ஆரியரேமுன்வைத்தார்கள். படிப்படியாக மன்னர்கள், தமது போர் வெற்றிக்கு அடையாளமாக, யாகம் முதலிய சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சங்க இலக்கிய காலத்தில் மன்னர், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற பெயர்களால் தம்மை யாகத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டதன் பலனாக, யாகம் சமயத்திலும் சமூகத்திலும் ஓர் அங்கமாகியது. இத்தகைய மரபு தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.

'திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும்' என்று சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப் பாடலுக்குக் கூட தொல்காப்பியத்திலேயே மூலத்தைதக் காணலாம். அது மட்டுமல்ல, உலா, பிள்ளைத்தமிழ் போன்ற பிரபந்த வகைகளைத் தொல்காப்பியரே கூறிவைத்திருக்கிறார்.

7. ஊழ்வினை பற்றிய கோட்பாடு:
'ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே'–
தொல். பொருள். களவு. நூ.
2.

ஊழ்வினையைக் கருவியாகக் கொண்டு தொழில் ஆற்றும் தெய்வத்தின் செயலை 'பாலினது ஆணை' என்கிறார் தொல்காப்பியர். தலைவனும் தலைவியும் இணைவதும் பிரிவதும் கூட அவரவர் செய்து கொண்ட வினைப்பயன் என்ற கருத்து நன்கு வேரூன்றிய காலத்திலேயே தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அவர்கள் வாழ்க்கை அமையும் என்னும் தத்துவம் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. 'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என்னும் கொள்கையின் மூலத்தைத் தொல்காப்பியத்தில் காண்கிறோம்.

இதன் தொடர்ச்சியை,'வகுத்தான் வகுத்த வகை' என்று திருவள்ளுவர் கூறுகிறார். இதனையே 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' (சிலப்பதிகாரம், பதிகம்) என்று இளங்கோவடிகளும் கூறியிருக்கிறார்கள். சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் எழுவதற்கு 'ஊழ்வினை' காரணமாக இருந்திருக்கிறது.

8. முடிவுரை:

தொல்காப்பியர் காலத்தில் மக்கள் தமக்கு மேலான சக்தி ஒன்று உண்டு என்பதை நம்பினார்கள். தமது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை வாழ்த்தி வணங்குவதன் மூலம் அவற்றைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியும் என்றும்அதனைத் தம் வெற்றிக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்றும் நம்பினார்கள். எத் தொழிற்பாட்டிற்குப் புறப்பட்டுப் போகும் போதும் கடவுளை வணங்கி, விருச்சி கேட்டுச் செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இயற்கையோடு அமைந்த,சூழலுக்கு ஏற்ற வழிபாட்டு முறையையே தொல்காப்பியம் காட்டிச் செல்கிறது. பிற்காலத்தில்,சைவம், வைணவம் என்று தனித்தனியே பிரிந்து வளர்ந்த சமயங்களின் தொடக்கம் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னதாக இருந்தாலும் அம் மதங்கள் பிரிந்து தனித்தனியே வளரத் தொடங்கியது மிகப் பிற்பட்ட காலத்திலேயேயாகும்.

தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய சங்க இலக்கியங்களிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் நோக்குவதன் மூலம் நூற்றாண்டுகள் கடந்த நிலையில்,சங்க காலத்தில்,தமிழ் மக்களின் சமயநிலை எவ்வாறு இருந்தது என்பதை ஓரளவுக்கு அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

'ஏற்றுவல னுயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையுமேனி
அடர்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி ஒண்செய் யோனுமென'–
புறநானூறு
56: 1-8

நக்கீரர், எரிமருள் அவிர்சடை மணிமிடற்றோனான சிவனையும், அடர்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனான பலராமனையும், விண்ணுயர் கருடக் கொடியோனான திருமாலையும், மாறா வெற்றியையுடைய சேயோனையும் அவரவருக்குரிய அடையாளங்களால் குறிப்பிட்டிருக்கிறார். இவை யாவும் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிகளே. தொல்காப்பியர் காலத்தில் கடவுளுக்குக் கோவில் அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை, இருந்து அழிந்தும் இருக்கலாம்.

சங்க இலக்கிய காலத்தில் சிவன் கோயில்கள் புகார், காஞ்சி, மதுரை ஆகிய நகர்களில் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

கி. பி.
6 ஆம் நூற்றாண்டளவில் நாயன்மாரும் ஆழ்வார்களும் தோன்றித் தமிழ் நாட்டில் அழியும் நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்த மதஉணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறார்கள். அழிந்து போகும் நிலையில் இருந்த கோவில்கள் தோறும் அப்பரும் சம்பந்தரும் சென்று பதிகங்கள் பாடிச் சிவ வழிபாட்டிற்குப் புனர் வாழ்வு கொடுத்தனர். கவனிப்பாரற்றுக் காடு மண்டிக் கிடந்த சைவக் கோயில் பிரகாரங்களை அப்பர் உழவாரத் தொண்டு செய்து மக்கள் நடமாட்டத்திற்கு உரியவையாக்கினார். சம்பந்தர் மட்டுமே 200 க்கும் மேற்பட்ட தலங்களைப் பாடியிருக்கிறார். இக் கோயில்கள் அனைத்தும் ஒரு சிறு காலப்பகுதியில் எழுந்திருக்க முடியாது என்பதைப் பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் கோயில்களின் தொடக்கம் அறியப்பட முடியாவிட்டாலும் பன்னெடும் காலமாகக் கட்டப்பட்டு வந்திருக்கவேண்டும் என்ற முடிவிற்கே வரக் கூடியதாகவுள்ளது.