கங்காரு நாட்டின் கவின்மிகு கவிஞர்

முனைவர் இரா.மோகன்


லகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் எம்.ஜெயராம சர்மாவை முதன்முதலாகச் சந்தித்து உரையாடும் நல்வாய்ப்புக் கிட்டியது. 'சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை!' எனக் கூறும் அளவிற்கு அவரது சிவந்த மேனியும் சிரித்த முகமும் செவ்விய பண்பும் நகைச்சுவைப் பேச்சும் எவரையும் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும். 'முதல் மனப் பதிவே நனிசிறந்த பதிவு' (The first impression is the best impression)  என்பார்கள். அது சர்மா அவர்களைப் பொறுத்த வரையில் நூற்றுக்கு நூறு பொருந்தி வரும் ஓர் உண்மை ஆகும். அவர் ஒரு கவிஞர் என அறிந்த போது என் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆயிற்று. அதிலும் வெளிவர உள்ள 'உணர்வுகள்' என்னும் தமது கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்க வேண்டும் சர்மா அவர்கள் கேட்ட போது என் அகமும் முகமும் 'மும்மடங்கு பொலிந்தன!' இத் தொகுப்பு இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் 14.09.2015 அன்று வெளியிடப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

'உள்ளத்தில் உள்ளது கவிதை - இன்பம்
               உருவெடுப்பது கவிதை;
 தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
               தெரிந்து உரைப்பது கவிதை'


எனக் கவிதைக்கு வரைவிலக்கணம் வகுப்பார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவ் வரைவிலக்கணத்திற்கு ஏற்பக் கெழுதகை நண்பர் ஜெயராம சர்மாவின் கவிதைகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'மணி ஓசை' என்னும் முதல் கவிதையே இக் கூற்றுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றது. 'மணி ஓசை கேட்டவுடன், மனமெல்லாம் மகிழ்கிறது, துணிவெல்லாம் பிறக்கிறது, தூய நிலை வருகிறது' எனத் தொடங்கும் அக் கவிதை, மால்மருகன் கோவில் மணி, வேலவனின் கோவில் மணி, சிவனாரின் கோவில் மணி, மாதாவின் கோவில் மணி, விகாரையின் கோவில் மணி எனப் பல்வேறு கோவில் மணிகளை நிரல்படுத்திக் கூறி வந்து,

'கோவில்மணி ஓசை கேட்டால்
         குணமெல்லாம் மாறும் ஐயர்
குவலயத்தில் நாம் வாழக்
         கோவில்மணி உதவும் ஐயா!'


என முத்தாய்ப்பாக நிறைவு பெறுகின்றது. 'ஆதலினால் காதல் செய்வீர், அனைவரும் கோவில் தன்னை!' என்பது கவிஞரின் இரத்தினச் சுருக்கமான வாக்கு.

'யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே!'


என முருகப் பெருமானிடம் வேண்டுவார் சங்கச் சான்றோர் கடுவன் இளவெயினனார். அவரை அடியொற்றி நம் கவிஞரும் கந்தவேளிடம் வேண்டுவது இதுதான்:

'குறையுடை வாழ்க்கை தன்னை
குமராநீ அகற்ற வேண்டும்;
நெறியுடன் நின்று வாழ
நீயெனக்கு அருள்வாய் ஐயா!'


'கருணையுடன் கேட்டுப் பாருங்கள்', 'ஆணவத்தை அகற்றிப் பாருங்கள்', 'நாணயமாய் நடந்து பாருங்கள்', 'உணர்வு கொண்டு பாடிப் பாருங்கள்', 'தெளிவுடனே தினமும் தேடுங்கள்', 'ஏழ்மைதனை இரங்கிப் பாருங்கள்', 'தோழமையாய் இருந்து பாருங்கள்', 'சினமதனை அகற்றிப் பாருங்கள்', 'தனிமையிலே இருந்து பாருங்கள்', 'காதலுடன் பாடிப் பாருங்கள்', 'சோதியென நினைத்துப் பாருங்கள்', 'நெறியுடனே நின்று பாருங்கள்', 'பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்' - இறைவன் காட்சி தந்து, சுகம் அனைத்தும் தந்து நின்றிடுவான் என்கிறார் கவிஞர். ஒரே பாடலில் மனிதன், மாமனிதன்
(Superman)  ஆவதற்கான உயரிய விழுமியங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் கவிஞரின் சதுரப்பாடு போற்றத்தக்கது.

அன்னைத் தமிழ் மீது கவிஞர் கொண்டிருக்கும் பற்று அளப்பரியது. அவரே ஒரு கவிதையில் குறிப்பிடுவது போல், 'சும்மாவா சொன்னார்கள், சுந்தரத் தமிழ் என்று?' ஆங்கிலத்தைப் படிப்பதிலும் அழகாகப் பேசுவதிலும் தவறு ஏதும் இல்லை; அதற்காகத் 'தங்கம் நிகர்த்த தமிழ் மொழி'யைத் தமிழன் மறந்து – துறந்து – வாழ்வதில் கவிஞருக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

'அருமைமிகு அம்மாவை
'மம்மி'என அழைத்து,
பெருமைமிகு அப்பாவை
'டாடி'என விளித்து,
கருவினிலே உருவான
கன்னித் தமிழ் மறந்து,
உருமாறி உரைப்பதிலே
உயர்வென்ன இருக்கிறது?'


என்பது கவிஞர் தொடுக்கும் பொருள் பொதிந்த வினா.

'எங்குநாம் வாழ்ந்தாலும்
என்றுமே தமிழர்நாம்
என்கின்ற எண்ணமதை
எள்ளளவும் மறக்காதீர்!'


என்பது உலகத் தமிழர்க்குக் கவிஞர் விடுக்கும் கனிவான வேண்டுகோள் ஆகும்.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பது ஆன்றோர் அமுத மொழி. இதனைத் தம் வாக்கில் பொன்னே போல் போற்றிக் கையாண்டுள்ளார் கவிஞர்.

'மெய்யான தெய்வமெனில்
மேதினியில் அம்மாதான்!'

என அன்னைக்குப் புகழாரம் சூட்டும் கவிஞர்,

'பிரசவத்தில் தாய் அழுவாள்,
பிறந்தவுடன் நீ அழுவாய்;
பெண்ணாகப் பிறந்து விட்டால்
பெற்றவரும் அழுதிடுவார்'


என இன்றைய சமூக நடப்பையும் கூடவே சுட்டிக்காட்டுவது நோக்கத்தக்கது. சுட்டிக்-காட்டுவதோடு நின்று விடாமல், 'ஆண்பிள்ளை, பெண்பிள்ளை அத்தனையும் எம் பிள்ளை, ஆதலால் பிள்ளைதனில் அன்னியத்தைக் காட்டாதீர்!' எனப் பெற்றோர்க்கு அறிவுறுத்தவும் தவறவில்லை கவிஞர்.

'கனவு நீ காண்பதில்லை, காரணம் கண்மூடவில்லை;
நினைவெல்லாம் பிள்ளையென நீவாழ்ந்து நின்றாயே!'


எனத் தாய்ப்பாசத்தின் தனிப்பெருஞ் தகைமையை ஆராதிக்கும் கவிஞர், தந்தையின் உயர்பண்புகளையும் பிறிதொரு கவிதையில் உளமுருகிப் போற்றுகின்றார்.

'உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்' என மகாகவி காளிதாசனைப் போற்றிப் பரவுவார் கண்ணதாசன், நம் கவிஞரும்,

'உணர்வுகள் எப்போதும்
உள்ளுக்குள் இருப்பதில்லை;
உயிருள்ள மனிதர்க்கு
உணர்வுகளே உயர்வாகும்!'


என நல்லுணர்வுகளைப் போற்றுகின்றார்.

'போதனை' என்னும் பகுதியில் கவிஞர் தந்திருக்கும் அறிவுரைகள் மனிதர் என்றும் தலைநிமிர்ந்து செம்மாந்து வாழ்வதற்கான நெறிமுறைகளைப் புலப்படுத்துவன. மண்ணிலே நல்ல வண்ணம் வாழ வேண்டுமானால்,

'உன்னை நீ உணர வேண்டும், உண்மையை அறிய வேண்டும்'

என அறிவுறுத்தும் கவிஞர், அன்பு மனத்துடன், என்றும் - காலம் முழுதும் - உழைத்து, வாழ்வில் உயருமாறு வலியுறுத்துகின்றார்.

'மனசைப் பா(ர்)த்துக்க நல்லபடி!' என்னும் கவியரசர் கண்ணதாசனின் வாக்கினை நினைவூட்டுவது போல் நம் கவிஞரும் 'மனமெலாம் மாறல் வேண்டும்!' என்கிறார்; 'சாதியால் சண்டை செய்வோர், சமயத்தால் சண்டை செய்வோர், போதிய அறிவைப் பெற்றால், பூக்குமே நல்ல வாழ்வு!' என அறுதியிட்டு உரைக்கின்றார்.

'வறுமையில் வாழு(டு)ம் போதும்
வாய்மையை மனதில் கொண்டு
நெறியோடு வாழ்வோம் ஆயின்
நிம்மதி வந்தே சேரும்!'


என்பது கவிஞரின் தாரக மந்திரம்; வெற்றி மொழி,
சாதி, சமய வேறுபாடுகள், ஊழல், கலப்படம், புகை, குடிப் பழக்கம் முதலான சமூக அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் எதிராகக் கவிஞர் தம் கவிதைகளில் ஆங்காங்கே எழுப்பி இருக்கும் குரல் அழுத்தமானது; ஆழமானது,

'வசைபாடி நிற்பதில்லை
வண்ணமிகு தாரகைகள்;
வம்பு தும்பு செய்வதில்லை
நீலநிற முகிற்கூட்டம்;
நிந்தனையும் செய்வதில்லை...
சுட்டெரிக்கும் சூரியனும்
சுடுசொற்கள் சொல்வதில்லை'


-இவற்றைச் சுற்றி நிற்கும் மனிதர்கள், நீள்புவியில் வாழ்பவர்கள் நினைத்துப் பார்த்து, கற்றுக் கொள்ள வேண்டாமா எனக் கவிஞர் கேட்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

'சாதனை' என்னும் பகுதியில் கவிஞர் வடித்துத் தந்திருக்கும் கவிதைகள் ஆளுமை வளர்ச்சி
(Personality Development) நோக்கில் மிகவும் இன்றியமையாதவை; இன்றைய இளைய தலைமுறையினர் மனம் கலந்து பயின்று வாழ்வில் பின்பற்ற வேண்டியவை. இராமகிருஷ்ண பரமஹம்சர், வீரத்துறவி விவேகானந்தர், அன்னை தெரசா, அறிஞர் மு.வ., வீரமாமுனிவர், கவிமணி, காந்தியடிகள், நேரு பெருமகனார், தனிநாயக அடிகளார், புதுநெறி காட்டிய கவிஞர் பாரதியார், தமிழ்த் தாத்தா உ.வே.சா., கவியரசர் கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து, நடிகர் திலகம் சிவாஜி, இசைக் குயில் பி.சுசீலா, உலகு புகழ் தலைவர் நெல்சன் மண்டேலா, டொமினிக் ஜீவா, இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, இசை ஞானி இளையராஜா, திருமுருக கிருபானந்த வாரியார் முதலான பல்வேறு துறைகளில் தடம் பதித்த ஆற்றல்சால் ஆளுமையாளர்களைக் குறித்துக் கவிஞர் தீட்டி இருக்கும் கவிதைகள் அருமையும் எளிமையும் அழகும் ஆற்றலும் கொலுவிருப்பவையாகும்.
பதச்சோறாக, அன்னை தெரசா பற்றிக் கவிஞர் எழுதி இருக்கும் வைர வரிகளை இங்கே காண்போம்:

'எள்ளளவும் இரக்கமின்றி எச்சில் உமிழ்ந்தார்கள்,
இன்முறுவல் கொண்டு அவர் ஏந்தியதைப் பெற்றார்;
கள்ளமில்லா உள்ளம் அவர் கொண்டிருந்ததாலே
காறி உமிழ்ந்தவரே கைநிறையக் கொடுத்தார்'


'தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்தார், தனக்குவமை இல்லாமல் தானுவமை ஆனார்' என்னும் உயிர்ப்பான வரிகளில் அன்னை தெரசாவின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே அழகிய சொல்லோவியம் ஆக்கியுள்ளார் கவிஞர்.

இயற்கையில் இருந்து மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் எவ்வளவோ உண்டு. கவிஞரின் கண்ணோட்டத்தில் அவற்றுள் ஒன்று வருமாறு:

'விழுகின்ற மலர் பார்த்து
விழுதழுதல் மட்டோம்;
விழுவது எழுவதற்கென
விழித்தெழுந்து நிற்போம்!'


மலர் சொல்லும் இம் மணிமொழியை ஏற்று மனித குலம் வாழ முற்பட்டால் போதும், உலகம் இன்பம் விளையும் பூந்தோட்டம் ஆகும் என்பது உறுதி.

கவிஞரின் கருத்தில், 'அன்பென்றும் அகம் புகுந்தால், அனைவர்க்கும் தீபாவளி!' எனவே, மண்ணிலே உள்ளோர் எல்லோரும் மனங்களில் நிறைவோடு வாழ்வதற்கு ஏதுவாக, 'அன்பு கொள்வோம் வாருங்கள்!' என அழைப்பு விடுக்கின்றார் கவிஞர்.

தைப் பொங்கலே ஆனாலும் கவிஞரைப் பொறுத்த வரையில் தமிழரது தலை நிமிர்ந்து இருத்தல் வேண்டும், தமிழேறி அரசாள வேண்டும். அதற்குத் தைப் பொங்கல் உதவிட வேண்டும்; அப்போது தான் உண்மையில் தைப் பொங்கல் விளங்கிடும்.

நிறைவாக, 'ஆதலினால், காதல் செய்வீர்!' என உலகத்தவர்க்கு அறைகூவல் விடுத்த பாட்டுக்கொரு புலவர் பாரதியாரின் அடிச்சுவட்டில் கவிஞர் ஜெயராம் சர்மாவும் காதலைப் போற்றிப் பாடுகின்றார்; 'குழல் இனிது, யாழ் இனிது, குழந்தை மொழி அதனின் இனிது எனும் வரிசையில் காதலும் இனிது' என மொழியும் கவிஞர்,

'ஆண்டவன் எமக்குத் தந்த
அருங்கொடை காதல் அன்றோ?
ஆதலால் காதல் தன்னை
அணைத்துமே நிற்போம் வாழ்வில்!'


என முழங்குகின்றார்.

ஒற்றை வரியில் உரைப்பது என்றால், 'உணர்வுகளில் திட்பமும் தூய்மையும், உயர்வும் உறுதியும் கொண்டு, அன்பினை ஆராதித்து, நெறியுடன் நின்று, விழிப்புடன் வாழ முற்பட்டால், உச்சம் தொடுவது, சாதனை படைப்பது உறுதி' என்பதே இத் தொகுப்பின் வாயிலாகக் கவிஞர் மனித குலத்திற்கு உணர்த்தியுள்ள தலையாய செய்தி ஆகும்.

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021