தனித்துவம் துலங்கிடும் நன்னூல்!

முனைவர் இரா.மோகன்


'புரியாமல் எழுதிப் பயனேது? மக்கள்
புரிந்து பயனுறல் இலக்கியம்'
(புதுக்குறள்: முதல் தொகுதி,
18:2)

என்னும் கொள்கை முழக்கத்தோடு கையில் எழுதுகோலை ஏந்திக் கவிதையும் சிறுகதையும் படைத்து வருபவர் பெரணமல்லூர் சேகரன். அவரது கண்ணோட்டத்தில் இலக்கியம் எனப்படுவது 'மக்கள் நலன் சார்ந்தது'
(18:1); 'நெம்புகோல் ஆவது' (18:4); 'இலக்குடன் இயங்குவது' (18:5); 'மானுடர் பொல்லாங்கு எதிர்ப்பது' (18:8); 'மாற்றம் கொணர வல்லது' (18:10). இலக்கியத்திற்கு இங்ஙனம் சிறந்த வரைவிலக்கணம் வகுப்பதோடு நின்றுவிடாமல், இவ் வரைவிலக்கணத்திற்குப் பொருந்தி வரும் வகையில் சீரிய இலக்கியமும் படைத்துக் காட்டும் ஆற்றல்சால் படைப்பாளியாக நடை பயின்று வருகின்றார் பெரணமல்லூர் சேகரன். ந.சேகர் என்னும் இயற்பெயரினைக் கொண்ட இவர், தமிழ் முதுகலை பயின்றவர்; ஊரக வளர்ச்சித் துறையில் உதவித் திட்ட அலுவலராகப் பணியாற்றி வருபவர். தமிழ்நாட்டு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்னும் உயரிய பொறுப்பில் வீற்றிருக்கும் சேகரன், இலக்கியப் பணியிலும் முனைப்புடனும் முழுமூச்சுடனும் ஈடுபட்டு வருவது வரவேற்கத் தக்கது; போற்ற வேண்டியதும் கூட.

சிறிய வடிவில் பெரிய செய்திகள்

'தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி...' என்பது திருவாசகத்தில் வரும் ஒரு வாசகம். அது போல, 'அழகிய குறள் வடிவத்தில் எளிய முறையில் மக்களைச் சென்று சேரும் வண்ணம் புதுக்குறள் படைக்க வேண்டும்' என்னும் எண்ணம் மனத்தில் தோன்றிப் பல்லாண்டுகளாகத் தமது சிந்தனையைச் சீண்டிக் கொண்டிருந்ததாகவும், அதன் விளைவாக 2002-ஆம் ஆண்டில் 'புதுக்குறள்' என்னும் 118 அதிகாரங்கள் கொண்ட படைப்பினை வெளியிட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் பெரணமல்லூர் சேகரன். 'புதுக்குறள்' முதல் தொகுப்பிற்கு அணிந்துரை நல்கிய மூத்த எழுத்தாளர் 'இலக்கியச் செல்வர்' வல்லிக்கண்ணன், 'சாதாரண மக்களும் படித்துப் பயனடையத் தக்க விதத்தில் இக் குறட்பாக்களை இயற்றியிருப்பது வரவேற்புக்குரிய நற்பணியாகும்' (ப.5) எனப் பாராட்டி இருந்தது கவிஞரை ஊக்கப்படுத்தியது; மேலும் சிந்திக்கவும் செயல்படவும் உந்துசக்தியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் காலத்திற்கு ஏற்ற புதிய தலைப்புக்களில் புதுக்குறள் படைக்கும் முயற்சியில் கவிஞர் பெரணமல்லூர் சேகரன் முனைப்புடன் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் கருவாகி, உருவாகி, இப்போது நம் கைகளில் தவழ்வதே 'புதுக்குறள்' நூலின் இரண்டாம் தொகுப்பு ஆகும். இதில் 'அதிகார வர்க்கம்' தொடங்கி 'வேலை நிறுத்தம்' வரையிலான 83 அதிகாரங்கள் இடம்-பெற்றுள்ளன.

'மக்களுக்கான கலை இலக்கியம் மிகச் சாதாரண மக்களைச் சென்றடைவது தானே அதன் முழுவெற்றியாக அமையும்? எனவே எளிமையான சொற்களைக் கொண்டு புதுக்குறள் படைக்க வேண்டும் என மனதில் ஊன்றிய வித்து, முளைத்து செடியாகி விருட்சமாய் வளர்ந்து உங்கள் முன்பு நிற்கிறது. இலக்கண நெறிப்படி புதுக்குறள் அமைய வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. எதுகையும் மோனையும் இயல்பாய் அமைந்திருக்கலாம்... சிறிய வடிவில் பெரிய செய்திகளை எளிமையாகப் பெரும்பான்மையான மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதே என் இலக்காகி விட்டது' (பக்.
6-7) எனப் 'புதுக்குறள்' முதல் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் கவிஞர் பெரணமல்லூர் சேகரன் தம் இலக்கினையும் நோக்கினையும் தெளிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

'எவ்வளவு சிறப்பு வாய்ந்த இலக்கியமாயினும் அதன் எதிர்காலம், கற்கும் மக்களைப் பொறுத்தே அமைகின்றது. ஒருபுறம், அதனை ஆழ்ந்து கற்று உணரும் புலவரும் வேண்டும். மற்றொரு புறம், அதன் கருத்தை உணர்ந்து போற்றிப் புகழும் பொதுமக்களும் வேண்டும். பொதுமக்களின் உள்ளத்தில் இடம்பெறாமல், புலவர் நெஞ்சில் மட்டும் வாழும் வாழ்வு போதாது. பொதுமக்களின் புறக்கணிப்பு, இலக்கியத்தின் எதிர்கால வாழ்வுக்கு இடையூறாகும்' (நெடுந்தொகை விருந்து, ப
.3) என்னும் பேராசிரியர் மு.வரதராசனாரின் கருத்து இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

திருவள்ளுவரின் அடிச்சுவட்டில் நடை பயிலல்

'தந்தையின் பொருளை உரிமையோடு மகன் எடுத்துக் கொள்வது போல, திருவள்ளுவர் தொல்காப்பியரின் சொற்செல்வத்தைப் பொருட்செல்வத்தோடு அள்ளிக் கொள்ளுகின்றார்' (தொல்காப்பியக் கடல், ப
.60) என மொழிவார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம். இக் கூற்று பெரணமல்லூர் சேகரனுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தி வரக் காண்கிறோம். அவர் தம் 'புதுக்குற'ளில் திருவள்ளுவரின் சொற்களையும் தொடர்களையும் கருத்துக்களையும் நடைக் கூறுகளையும் பொன்னே போல் போற்றிக் கையாண்டுள்ள இடங்கள் பலவாகும்.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்'
(1062)

என 'இரவச்சம்' என்னும் அதிகாரத்தின் இரண்டாம் குறட்பாவில் உலகைப் படைத்தவனையே கடுமையாகச் சாடுவார் வள்ளுவர். வள்ளுவரின் அடிச்சுவட்டில் நடை பயிலும் சேகரனோ,

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
அழிக அரசு எந்திரமே'
(127:7)

என அரசு எந்திரத்தினைச் சாடுகின்றார். சாடுவதோடு நின்று விடாமல் ஒரு படி மேலே சென்று, 'தொலைநோக்கில் சொல்லும் செயலும் இருப்பின், அரசே அகற்றும் இரத்தல்' (127:9) என அரசுக்கு உரிய நல்வழியினையும் காட்டுகின்றார் கவிஞர்.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை'
(555)

என்பது 'கொடுங்கோன்மை' அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஓர் அரிய குறட்பா. இதில் 'கொடுமை தாங்காது குடிகள் அழுத கண்ணீர் அரசை அடியோடு அழிக்கும் படையாகும்' என்பார் வள்ளுவர். இக் குறட்பாவின் சாயலில் பெரணமல்லூர் சேகரன் 'அதிகார வர்க்கம்' அதிகாரத்தில் படைத்துள்ள புதுக்குறள் வருமாறு:

'விளிம்புநிலை மாந்தரின் விழிநீர் துடைத்து
களிப்புறச் செய்தலே அழகு'
(119:8)

இங்கே 'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்' என்னும் திருக்குறள் தொடர், சேகரனின் கைவண்ணத்தில் 'விளிம்பு நிலை மாந்தரின் விழிநீர்' எனப் புதுக்கோலம் பூண்டிருக்கக் காணலாம். குடிமக்கள் அழுத கண்ணீரை அரசையே அடியோடு அழிக்கும் படையாக வள்ளுவர் குறிப்பிட்டிருக்க, சேகரன் உடன்பாட்டு நோக்கில், 'விழிநீர் துடைத்து களிப்புறச் செய்தலே அழகு' என அதிகார வர்க்கத்திற்கு அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

'வாய்மை எனப்படுவது யாதெனின்...'
(291) எனத் தொடங்கி வரைவிலக்கணம் தருவார் வள்ளுவர். இக் கருத்துப் புலப்பாட்டு நெறியின் தாக்கத்தினைப் 'புதுக்குற'ளிலும் காண முடிகின்றது. ஓர் எடுத்துக்காட்டு:

'கணக்குஎனப் படுவது யாதெனின் அஃதும்
அறிவியல் என்றே அறிக.'
(141:1)


முப்பெருங் கவிஞர்களின் தாக்கம்
 

தமிழ்ச் சித்தர் மரபின் முன்னவரான திருமூலர், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் முன்னோடியான பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகிய மூவரது தாக்கம் பெரணமல்லூர் சேகரனின் படைப்பாளுமையில் அழுத்தமாகவும் ஆழமாகவும் படிந்திருக்கக் காண்கிறோம்.

'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
உடம்பைப் பேணல் வேண்டும்
(131:1)

என்பது 'உடம்பு' பற்றிய கவிஞரின் 'புதுக்குறள்'. இதன் முதல் அடியில் திருமூலரின் வாக்கினைப் பொன்னே போல் போற்றிக் கவிஞர் கையாண்டிருப்பது நெற்றித் திலகம்.


'ஒன்றுபட்டால் உண்டு வெற்றி யாண்டும்
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்'
(136:1)

என்பது 'ஒற்றுமை' அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள தலைக்குறள். 'சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரச் சித்திரக் கைத்தறிச் சேலை' என்பது போல பாரதியாரின் சொல்லையும் தொடரையும் கொண்டே இக் குறட்பாவினை யாத்துள்ளார் சேகரன்.

'மனத்தில் உறுதி வேண்டும் மாந்தர்க்கு
வெற்றி இறுதி பெறவே'
(134.1)

என்னும் 'புதுக்குற'ளிலும் பாரதியாரின் தாக்கம் மூன்றாம் பிறை போல் முகம் காட்டி நிற்கக் காண்கிறோம்.

'கல்வியிலா மாந்தர் களர்நிலம் ஆதலால்
கல்லாமை இல்லாமை வேண்டும்'
(142:1)

என்பது 'கல்லாமை' அதிகாரத்தில் வரும் 'புதுக்குறள்'. இதன் முதல் அடியில் பாவேந்தர் பாரதிதாசனின் மேற்கோளினைப் பொருத்தமாகக் கையாண்டுள்ளார் சேகரன்.

புரட்சிக் கவிஞரின் முத்திரைப் பாடல் 'உலகப்பன் பாட்டு'. இப் பாட்டின் மீது சேகரனுக்குத் தனி ஈடுபாடு உள்ளது.

'ஓடப்பர் ஏழையப்பர் உயரப்பர் ஒப்பப்பர்
ஆவது உழைப்போர் இலக்கு'
(128:9)

என்னும் 'புதுக்குறள்' ஒன்று போதும் இக் கருத்தினை நிலைநாட்ட.

தமிழ் மக்களின் நாவில் தொன்றுதொட்டு வழங்கி வரும் பழமொழிகளையும் கவிஞர் சேகரன் தம் கருத்திற்கு அரணும் அணியும் சேர்க்கும் வiயில் கையாண்டுள்ளார். இரு சான்றுகள் வருமாறு:

'காற்றுள்ள போதே தூற்றுதல் போல
கழிவறை கட்டுக கண்ணாய்'
(143:6)

'ஆற்றிலே போட்டாலும் அளந்து போடுதல்
வாழ்விலே கொளத்தகு கணக்கு'
(141:7)


முற்போக்குச் சிந்தனைகள்


தனிவாழ்விலும் படைப்பாளுமையிலும் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டவராகப் பெரணமல்லூர் சேகரன் விளங்கி வருகின்றார். 'அவரது வாழ்வும் வாக்கும் ஒன்றே, அதுவும் நன்றே' என ஒற்றை வரியில் மதிப்பிட்டு விடலாம்.

'புதுக்குற'ளில்
138-ஆவது அதிகாரமாக இடம்பெற்றிருப்பது 'கடவுள்', இது கவிஞரை ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக அடையாளம் காட்டி நிற்கின்றது. 'கடவுளை மற் மனிதனை நினை' என்பார் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார். இக் கருத்தினையே சற்று விரித்து,

'இல்லாத கடவுளுக்குக் காலம் தொலைத்து
இருக்கும் மாந்தரை மறவாதே'
(138:1)

என முரசறைகின்றார் சேகரன். அவரைப் பொறுத்த வரையில், 'அன்னை தந்தையைப் பேணுதல் போதும், முன்னைக் கடவுள் இவர்கள்'
(138:6). 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்னும் ஆன்றோர் வாக்கு இங்கே மனங்கொளத் தக்கதாகும். 'மனத்துக்கண் மாசிலன் ஆதலே போதும்' (138:3) எனத் தேற்ற ஏகார நடையில் வள்ளுவரை வழிமொழிவார் சேகரன்.

எத்தன்மைத்து ஆயினும் அதனைப் பகுத்தாய்ந்து கொள்ள வேண்டும், எவர் உரைப்பினும் அதனை மதிநுட்ப ஆய்வில் அலசி ஆராய்ந்தே தெளிய வேண்டும் என்பன கவிஞர் சேகரனின் உயிர்க் கொள்கைகள் ஆகும். 'காரண காரியம் நோக்கி, அறிவியல் கண் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுக்கு வருவதே மேலானது' என்பது கவிஞரின் அழுத்தம் திருத்தமான கருத்து. 'பகுத்தறிவில் இழையோடும் மனிதம்'
(175:9) என ஆழமாக நம்பும் கவிஞர்,

'பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவு
மானுடச் சிகரம் உணர்'
(175:8)

என முழங்குகின்றார். பிறிதொரு 'புதுக்குற'ளிலும் அவர், 'பகுத்தறிவு என்னும் விழிப்புணர்வு வேண்டும்'
(185:10) என வலியுறுத்துகின்றார்.

கவியரசர் பாரதியார் தமது 'புதிய ஆத்திசூடி'யில் 'சோதிடந்தனை இகழ்' என ஆணித்தரமாக உரைப்பார். அவரை அடியொற்றி சேகரனும், 'சோதிடம் நம்புதல் வீண்' (156:1) எனக் குறிப்பிடுகின்றார். 'சோதிடம் பார்த்தலும் சடங்குகள் செய்தலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழமை' (156:9) என்பது கவிஞரின் திடமான கருத்து. ராசி, நட்சத்திர பலன்கள், இராகு காலம், எம கண்ட நேரம் போன்றவற்றை எல்லாம் புறந்தள்ளி, தன்னம்பிக்கையோடு தீயெனச் செயல்பட்டு வாழ்வில் சாதனை படைக்குமாறு வழிகாட்டுகின்றார் கவிஞர்.

'பகுத்து அறிந்து மூடப் பழக்கம்
தகர்த்து எறிதல் தகும்'
(103:8)

எனப் 'புதுக்குறள்கள்' முதல் தொகுப்பிலும் மூட நம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார் கவிஞர்.


மண்ணுக்கு ஏற்ற மார்க்சிய அமலாக்கம்


பெரணமல்லூர் சேகரனின் கொள்கைப் பற்றையும் பிடிப்பையும் ஒருங்கே புலப்படுத்துவது 'புதுக்குற'ளின்
189-ஆவது அதிகாரம். 'மார்க்சியம்' என்னும் தலைப்பில் அமைந்த அதில், மார்க்சியத்தின் அடிப்படையான பண்பையும் பயனையும் தெளிவுற மொழிந்துள்ளார் கவிஞர். 'மனித குலத் தோற்றமும் வளர்ச்சியும் அறிவியலாய், மனித குலம் பெற்றது மார்க்சியத்தால்' (189:1) என ஆழமாக நம்பும் கவிஞர், 'மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை நிறுவும் தேற்றத் தத்துவம்' (189:8) என மார்க்சியத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார். 'மானுட ஒற்றுமையைத் தகர்க்கும் மதத்தினை அபினி என்று அறைவது மார்க்சியம்' (189:5) என மார்க்சியத்தின் கொள்கையைச் சுட்டிக்காட்டும் கவிஞர், 'கற்கக் கசடற மார்க்சியம்' (189:10) என அறிவுறுத்துகின்றார். மேலும் அவர்,

'மண்ணுக்கு ஏற்றபடி மார்க்சிய அமலாக்கம்
மண்ணில் சொர்க்கம் கொணரும்'
(187:8)

எனக் குறிப்பிடுவது அடிக்கோடு இட வேண்டிய ஓர் அற்புதமான கருத்தியல் ஆகும். பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தியல்கள் அவை தோன்றிய வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படாமல், மண்ணுக்கு ஏற்றபடி அமலாக்கம் செய்யப் பெற வேண்டும் என்பதே நடுநிலையாளர் யாவரும் உடன்படுகின்ற அறிவியல் அடிப்படையில் அமைந்த நெறி ஆகும். இதனைக் கவிஞர் சேகரன் 'புதுக்குறள்' ஒன்றில் பதிவு செய்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


புதுப் பொருள்களின் ஆட்சி


இன்று அறிவுலகில் பரவலாகப் பேசப்பட்டு வரும் புதுப்புதுப் பொருள்களைக் குறித்தும் சேகரன் புதுக்குறள்களை வடித்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும். இது வளர்ந்து வரும் இன்றைய உலகப் போக்கினை ஒட்டி சேகரன் சிந்திக்கின்றார் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது. பதச் சோறாக, இந் நூலில்
124-ஆம் அதிகாரமாக இடம்பெற்றிருக்கும் 'ஆளுமை' என்பதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

கவிஞரின் கருத்தில் ஆளுமைத் தன்மை (Pநசளழயெடவைல) என்பது 'மானுடர்க்கு அழகு'
(124:1). அது ஆண், பெண் என்னும் இரு பாலர்க்கும் பொதுவானது; இன்றியமையாதது (124:2); அனுபவ ஞானத்தால் வசப்படுவது (124:3). அரசியல், சமூகம், பொருளியல் மூன்றிலும் ஆளுமைப் பண்பைப் பேணுமாறு அறிவுறுத்தும் (124:4) கவிஞர்,

'அடக்கி ஆளுதல் ஆளுமை அன்று
அன்பின் ஆட்கொளல் நன்று'
(124:6)

என ஆளுமையின் அடிப்படைப் பண்பினை ஒரு புதுக்குறளில் சுட்டிக்காட்டுவது நோக்கத்தக்கது. 'உழைக்கும் மாந்தரை ஓரணியில் திரட்டும், உயர்ந்த ஆளுமை முழுமை'
(124:9) எனத் தாம் உயிரெனப் போற்றும் கருத்தியலையும் கவிஞர் இங்கே பதிவு செய்யத் தவறவில்லை.

'புதுக்குற'ளில்
126-ஆவது அதிகாரமாக இடம்பெற்றிருப்பது 'இணையம்'. இதில் 'மானுடம் கண்ட வளர்ச்சி' (126:1) என்றும், 'விரல்நுனி உலகை இணையம் அளிக்கும்' (126:5) என்றும் இணையத்தைப் போற்றும் கவிஞர் சேகரன்,

'அல்லவை ஒதுக்கி நல்லவை சேர்த்து
உள்ளவை வளர்க்க இணையம்'
(126:8)

என இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துவது கருத்தில் கொள்ளத்தக்கதாகும் 'இணைய நுண்மாண் நுழைபுலம் அவசியம், கற்கவும் கற்றபின் நிற்கவும்' (126:10) என்பது கவிஞரின் முடிந்த முடிபு.

மூன்றாம் பாலின மாந்தரான திருநங்கையர் குறித்தும் கவிஞர் தம் 'புதுக்குறள்' இரண்டாம் தொகுப்பில் ஓர் அதிகாரத்தினைப் படைத்திருப்பது வரவேற்கத் தக்கதாகும். 'கல்வியில் கேள்வியில் சிறந்து விளங்கும், வல்லமை பெறுவர் திருநங்கையர்'
(161:6) எனப் போற்றும் கவிஞர், அவர்பால் நாம் காட்ட வேண்டியது அன்பும் அரவணைப்புமே என்பதையும் வலியுறுத்தத் தவறவில்லை. 'எங்கும் எதிலும் சிறந்து வாழ்வர், தங்கு தடையின்றி திருநங்கையர்' (161:10) என்பது கவிஞரின் மனம் நிறைந்த வாழ்த்து ஆகும்.
'நேர மேலாண்மை' என்னும் அதிகாரம் (
174) கவிஞரின் புதிய பார்வைக்கும் சிந்தனைக்கும் தக்க சான்றாகத் திகழ்கின்றது. 'குழந்தைத் தொழிலாளர்' (90), 'தனியார் மயம்' (63), 'தாராள மயம்' (64), 'பாலியல்' (86), 'வேலையின்மை' (118) என்னும் தலைப்புக்களில் 'புதுக்குறள்' முதல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அதிகாரங்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.


விழிப்புணர்வு ஊட்டும் விழுமிய சிந்தனைகள்

படிப்பவர்க்கு எழுச்சியும் நம்பிக்கையும் ஊட்ட வல்ல விழுமிய சிந்தனைகள் கவிஞர் சேகரனின் 'புதுக்குற'ளில் பரக்கக் காணப்படுகின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சிலவற்றை இங்கே காணலாம்.

உடல் வலிமையினும் ஆற்றல் மிக்கது மன வலிமை.

'எத்தனை இடர்கள் வரினும் மனவலிமை
அத்தனை தகர்க்கும் காண்'
(194:6)

என மன வலிமையின் திறத்தினைத் தம் 'புதுக்குறள்' ஒன்றில் எடுத்துரைக்கின்றார் கவிஞர்.

'அரசியல் சமூகம் பொருளியல் அனைத்திலும், விழிப்புணர்வு வேண்டும் மாந்தர்க்கு' (197:1) என விழையும் கவிஞர்,

'விழித்தலும் எழுதலும் சமூக மாற்றம்
தழைத்தலுக்கு இருகண்கள் அறிக'
(197:8)

என 'விழிப்புணர்வு ஞானம்' ஊட்டுவது நோக்கத்தக்கது. வீரத் துறவி விவேகாநந்தர் ஓயாது உழைத்து குறிக்கோளை அடைவதற்கு முன்னோட்டமாக விழித்தலையும் எழுதலையுமே
(Awake, Arise!) முன்னிறுத்துவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.

'வெற்றி-தோல்வி' பற்றிய கவிஞரின் கண்ணோட்டமும் சிறப்பானது. 'வெற்றி-தோல்வி' இரண்டையும் சமமாய்க் கருதுமாறு அறிவுறுத்தும் கவிஞர், இரண்டில் எது வரினும் இயல்பாய் ஏற்று முன்னேறுமாறு இளைய தலைமுறைக்கு வழிகாட்டுகின்றார்.

'வெற்றியால் நிலைதடு மாறலும் தோல்வியால்
விரக்தி மேவலும் வேண்டாம்'
(200:4)

என்னும் 'புதுக்குறள்' இவ் வகையில் கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

'முயற்சி திருவினை ஆக்கும்' (
616) எனத் திருக்குறள் முன்மொழிய, 'புதுக்குறள்' திட்டமிட்ட பயிற்சியை வழிமொழிகின்றது:

'எப்பணி ஆயினும் பயிற்சி அவசியம்
அப்பணி சிறக்கும் அதனால்'
(177:1)

பயிற்சியும் முயற்சியும் இணைந்தால் வெற்றி வசப்படுவது உறுதி என அறுதியிட்டு உரைக்கின்றார் கவிஞர் சேகரன்.

'மதியை அழிக்கும் மதுவை உண்டு, மதியை இழத்தல் மடமை'
(185:3) எனச் சாடும் கவிஞர்,

'மதுவெனும் நஞ்சை அரசே விற்றல்
ஏற்க இயலாக் கொடுமை'
(185:1)

என முழங்குவது அவரது உரத்த சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.

'பிறரை நகல்எடுக்கும் வழிவேண்டா யாண்டும்
தமக்குஎனும் தனித்துவம் வேண்டும்'
(132:2)

என்பது இளைய தலைமுறையினருக்குக் கவிஞர் விடுக்கும் செய்தி ஆகும்.


சிரிப்பின் சிறப்பைச் சீர்தூக்கிச் செப்பல்


தொல்காப்பியர் எண் வகை மெய்ப்பாடுகளின் வரிசையைச் சுட்டும் நூற்பாவில் நகைக்கு முதல் இடத்தினைத் தருவார். திருவள்ளுவர் 'இடுக்கண் வருங்கால் நகுக' (
621) என வாழ்வின் அனுபவப் பொருள் விளங்க எடுத்துரைப்பார். 'கறுப்பா, வெளுப்பா என்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடி சிரிப்பு... இதைத் துணையாய் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனிச்செழிப்பு!' (உடுமலை நாராயண கவி பாடல்கள், ப.168) எனச் சிரிப்பின் சிறப்பினைப் போற்றிப் பாடுவார் உடுமலை நாராயண கவி. 'எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வ தேச மொழி சிரிப்பு' (பெய்யெனப் பெய்யும் மழை, ப.56) என்பது வைரமுத்து சிரிப்புக்குச் சூட்டும் புகழாரம். 'பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர் புன்னகை' (நேயர் விருப்பம், ப.93) என்பது அப்துல் ரகுமானின் சித்திர மின்னல்.

வாழையடி வாழை எனத் தொடர்ந்து இங்ஙனம் நகைச்சுவை உணர்வின் இன்றியமையாமையை – தேவையை – வலியுறுத்தி வரும் கவிஞர்களின் வரிசையில் பெரணமல்லூர் சேகரனும் சேர்ந்துள்ளார். அவர் தம் 'புதுக்குற'ளில் 'சிரிப்பு' (
150) என ஓர் அதிகாரமே படைத்துள்ளார். அதில் 'நவரசம் யாவினும் சிகரம் சிரிப்பே' (150:9) எனச் சிரிப்புக்குப் புகழாரம் சூட்டும் கவிஞர், 'உடலும் உள்ளமும் புதுப்பொலிவு பெற்றிட' (150:4), 'பகலவன் கண்டு மறையும் பனிபோல், துன்பம் தொலைந்திட' (150:10), 'வாய்விட்டுச் சிரிக்கப் பழகு' (150:1) என மனித குலத்திற்கு அறிவுறுத்து-கின்றார்; முத்தாய்ப்பாக, இரத்தினச் சுருக்கமான மொழியில்,

'சிரிக்க வாழ்தல் நன்று' (
150:5)

எனவும் எடுத்துரைக்கின்றார்.

நிறைவாக, மானுட நலனை இலக்கெனக் கொண்டு (
173:9) – மாந்தர் மனங்களிலும் சமூகத்திலும் மாற்றம் விளைவிக்கும் நோக்குடன் (173:6,2) – கவிஞர் பெரணமல்லூர் சேகரன் படைத்துத் தந்திருக்கும் நன்னூலே 'புதுக்குறள்' எனலாம். மொத்தத்தில்,

'இயங்குதல் இடைவிடாது மானுடர்க்கு அவசியம்
இயங்குதல் வாழ்வின் அடையாளம்'


                             (புதுக்குறள்: முதல் தொகுதி,
15:1)

என்னும் மணிமொழிக்கு ஏற்ப எப்போதும் இடைவிடாமல் - இமைப்போதும் சோராமல் - இயங்கிக் கொண்டே இருக்கும் கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ஆவார்.



 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021