இரா.காமராசுவின் கவிதை உலகு

முனைவர் இரா.மோகன்


'பெயருக்கேற்ற பொதுநலவாதி.
கட்சி அரசியலில் காயம் பாடாத காரியவாதி.
முற்போக்கு இலக்கியங்கள் இவரது இயக்கம்.
'இயக்கம்' இவரது வாழ்க்கை.
இளமைக்குள் இவருக்கு வசப்பட்ட வாழ்க்கை
எங்களின் பிரமிப்பு'

என்பது கவிஞர் இரா.காமராசுவின் ஆளுமைத் திறன் பற்றிய டாக்டர் இரா.இளங்கோவனின் அழகிய சொல்லோவியம் ஆகும். மார்க்சிய அறிஞர் நா.வானமாமலை பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்ற இவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையில் பணியாற்றி வருபவர். புதுதில்லி சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் என்னும் உயரிய பொறுப்புக்களில் வீற்றிருந்து பேராசிரியர் இரா.காமராசு ஆற்றி வரும் அரும்பணிகள் பலவாகும். இலக்கியச் சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர், சிறுகதை, கவிதை, திறனாய்வு என்னும் முத்துறை சார்ந்த நூல்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 'கணவனான போதும்...'
(1997), 'ஙப்போல் வளை' (2003) என்பன காமராசு வெளியிட்டுள்ள இரு கவிதைத் தொகுப்புகள் ஆகும். முன்னைய தொகுப்பிற்குக் கவிஞர் பாலா 'வாழ்வின் முகவரி' என்னும் தலைப்பில் அணிந்துரை அளித்துள்ளார்; அடுத்த தொகுப்பிற்குப் கவிஞர் சிற்பி 'அசல் கவிதை' என்னும் தலைப்பில் முன்னுரை நல்கியுள்ளார். இனி, காமராசுவின் கவிதை உலகு குறித்து இங்கே சுருங்கக் காண்போம்.


கவிஞரின் ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு


'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்னும் ஆன்றோர் அமுத மொழியினை வாழ்வில் பொன்னே போல் போற்றி, பின்பற்றி வருபவர் கவிஞர் காமராசு. 'என் குண உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்திடும் படிப்பறியா தந்தையின் நினைவுகள் எப்போதும்'
(p.xii)  என 'ஙப்போல் வளை' என்னும் தொகுதிக்கு எழுதிய நன்றியுரையில் கவிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. மேலும் 'கணவனான போதும்...' என்னும் தம் முதல் கவிதைத் தொகுப்பினை, 'எல்லையில்லா நேசத்தை / என்னுள் விதைத்திட்ட / அம்மா அருமைக்கண்ணு / அப்பா இராமசாமி / இருவருக்கும்...' (p.iv) காணிக்கையாக்கி இருப்பது பெற்றோர் மீது கவிஞருக்கு உள்ள ஆழ்ந்த பற்றையும் பாசத்தையும் புலப்படுத்துவதாகும்.

'அம்மா கைப்பக்குவம் / மனசு நிறைக்கும்.
வேலிகள் தாண்டிய / அம்மிச் சத்தம்
தெருவை மணக்கச் செய்யும் / கொதிக்கும் குழம்பு
பசி ருசியறியாது என்கிறாள் சகி
குக்கரில் / அவித்து எடுக்கும் வாழ்க்கை
உணவு வேளைகளில்
உலா வரும் அம்மாவின் நினைவுகள்'
(ஙப்போல் வளை, ப.
2)

எனத் தம் கவிதை ஒன்றில் அன்னையைப் பற்றிய பசுமையான நினைவுகளை உருக்கமான மொழியில் பதிவு செய்துள்ளார் கவிஞர். உணர்வு நோக்கில் மட்டுமன்றி, உணவு நோக்கிலும் இக் கவிதை கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.

கவிஞர் சித்திரிக்கும் குழந்தைகள் உலகம்

'ஙப்போல் வளை' என்னும் தலைப்பில் கவிஞர் இரா.காமராசு படைத்துள்ள
11 கவிதைகள், மெல்லிய நகைச்சுவை உணர்வு இழையோடக் குழந்தைப் பருவ நினைவுகள் பொதிந்து வைக்கப் பெற்ற வாழ்வின் சாரங்களாக விளங்குகின்றன. மூத்த கவிஞர் சிற்பி குறிப்பிடுவது போல் இக் கவிதைகள் 'ஆசிரியர் பிரம்படி போல் அல்ல - சிவபிரான் பட்ட பிரம்படி போல் மனதில் தளும்பித் தழும்பாகின்றன' ('அசல் கவிதை', ஙப்போல் வளை, p.viii). இத் தலைப்பில் இடம்பெற்றுள்ள முதல் கவிதை பள்ளிக்குச் சென்ற முதல் நாளன்று குழந்தைக்கு ஏற்பட்ட அனுபவத்தை இயல்பான நடையில் பதிவு செய்துள்ளது:

'பள்ளிக்குப் போன முதல் நாள்
ஒரு விரல் காட்டிப் போகத்
துணிச்சலற்று / அடக்கியடக்கி
சாப்பாட்டு மணியில்
ஒன்னுக்குப் போன போது
இரண்டுக்கும் வந்து தொலைய
யாருக்கும் தெரியாமல்
டவுசரில் துடைத்து / வீட்டுக்குப் போகையில்
அம்மா உணர்ந்தாள் / படிப்பு வாசனை'
(ப.
67)

கவிதையின் முடிப்பு, முத்தாய்ப்பு. உண்மையில் படித்தாலும் - கேட்டாலும் - நினைத்தாலும் 'மணக்கும்' கவிதை என்பது இது தான்!

குழந்தைகள் உலகம் கள்ளங்கரவு இல்லாதது; சூதுவாது அறியாதது; கேள்வி கேட்பதில் ஆர்வம் காட்டுவது. இதனை நடப்பியல் பாங்கில் உள்ளது உள்ளபடி கவிஞர் காமராசு தம் கவிதைகளில் சித்திரித்துள்ளார். இவ் வகையில் குறிப்பிடத் தக்க சில கவிதைகளை இங்கே சுட்டிக்காட்டலாம்.

'அறம் செய விரும்பு...
ஒளவைப் பாட்டியின் / ஆத்திசூடியை
ராகமாய்ச் சொன்ன பொழுதில்
'இயல்வது கரவேல்னா என்ன டீச்சர்?'
'இயல்வது கரவேல்னா
இயல்வது கரவேல்தான் உக்காருடா!'
சொன்ன டீச்சர் முகத்தின்
பதட்டம் சொல்லி மாளாது'
(ப.
69)

குழந்தைகள் உளவியலை மட்டுமன்றி, ஆசிரியர்களின் இயல்பினையும் தோலுரித்துக் காட்டும் அற்புதமான கவிதை இது! பொதுவாக, மாணவர்கள் வகுப்பில் கேள்வி கேட்பது என்பதே ஆசிரியர்களுக்குப் பிடிப்பது இல்லை; அதுவும், உடனடியாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியை மாணவர்கள் கேட்டுவிட்டால்...? ஆசிரியர்கள் பதட்டமோ கோபமோ கொள்வதற்குச் சொல்லவா வேண்டும்?

'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே' என எந்த முகூர்த்தத்தில் சங்கச் சான்றோர் பாடினாரோ, அத்தனையும் அப்பட்டமான உண்மையே, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் கவிதை இது:

'சாருக்கு காலில் முள் எடுக்க
டீ, வடை வாங்க
டீச்சருக்குக் / கத்தரிக்காய், முருங்கைக்காய் வாங்க
பிள்ளை பார்த்துக் கொள்ள
பள்ளியைத் திறக்க, மூட
பொருள்கள் துடைக்க, எடுக்க
ஓடும் பிள்ளையாயிருந்து போனஸ் மார்க்கில் பாஸானது
அரசியலில் குதிக்க அச்சாரமானது'
(ப.
75)

சும்மா சொல்லக் கூடாது, அரசியலில் குதிப்பதற்கான அச்சாரம் உறுதியானது தான்! உத்தரவாதமானது தான்! யாரும் எளிதில் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது!

'தவிப்பு' என்னும் கவிதையில் குழந்தையின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் - வீட்டிலும் பள்ளியிலும் ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் குழந்தைகள் படும் பாடுகளையும் - நடப்பியல் பாங்கில் பதிவு செய்துள்ளார் கவிஞர். 'காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு, கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு – என்று, வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!' என்று பாப்பாவுக்கு அறிவுறுத்தினார் பாரதியார். ஆனால், இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் நிலையோ வேறு; 'காலை / ஆறிலிருந்து ஏழு வரை / ஆங்கிலம்; / ஏழிலிருந்து / எட்டு வரை கணக்கு; / மாலை / ஐந்து வரை / வகுப்பறைச் சிறை / மறுபடியும் / டியூஷன்... டியூஷன் / வீட்டுப் பாடம்! / வீட்டில், பள்ளியில் / எங்கும் எப்போதும் / படிடா படிடா... / வேத உபதேசம்.' இந்நிலையில், பாவம், குழந்தைகள் தான் என்ன செய்யும்? எதை நினைக்கும்? இதோ, கவிஞரின் மறுமொழி:

'மனசென்னவோ / பரணில் கிடக்கும்
கிட்டிப்புல், பம்பரத்தில் / விடுமுறை எப்ப வரும்?'

                                        (கணவனான போதும்..., ப.
1)

குழந்தையின் மனமெல்லாம் பரணில் கிடக்கும் கிட்டிப் புல்லையும் பம்பரத்தையும் நினைத்துப் பார்த்து, விடுமுறை எப்பொழுது வரும், ஆசை தீர விளையாடலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றதாம்!

கவிஞரின் கவிதைகளில் கொலுவிருக்கும் மனித வாழ்க்கை

'இரா.காமராசுவின் கவிதைகளிலும் கதைகளிலும் அங்கிங்கெனாதபடி மனித வாழ்க்கை கொலுவிருக்கிறது' ('அசல் கவிதை', ஙப்போல் வளை,
pp.iv-v) என்பார் கவிஞர் சிற்பி. இக் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்க்கை பற்றிய கவிஞரின் தெறிப்பான சிந்தனைகள் சிலவற்றை இங்கே காண்போம்.

'மழைக்காலத்துப் பின்னிரவு வானம் போல்
வெறுமைகளால் / இயற்கை இன்னிசை வனப்புகளால்
நிறைந்து நீள்கிறது வாழ்வுத் தடம்'
(ஙப்போல் வளை, ப.
1)

என மனித குலத்தின், நெடிய வாழ்வுத் தடத்தினைச் சுட்டிக் காட்டித் தொடங்குகிறது ஒரு கவிதை. பிறிதொரு கவிதையில், 'எதிலும் அடங்கா / வாழ்வின் இலட்சணம் வியந்து பார்' (ஙப்போல் வளை, ப
.52) என வாழ்வின் அளக்க இயலாத பெரும் பரப்பினை விதந்து மொழிவார் கவிஞர்.

''இந்த உலகமே பொய்' என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது... குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா?... நமக்குத் தந்தை வைத்து விட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலை போலே நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய் தானா?... நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குல தெய்வம் பொய்யா?' (பாரதியார் கவிதைகள், ப
.126) எனப் 'பொய்யோ? மெய்யோ?' என்னும் வேதாந்தப் பாடலுக்கு எழுதிய மகுடக் குறிப்பில் அடுக்கடுக்காக வினவுவார் பாரதியார். இக் கருத்தியலின் தொடர்ச்சியைக் காமராசுவிடம் காண முடிகிறது.

'துயில், கனவு, விழிப்பு, சுழிப்பு,
உழைப்பு, உணவு, புணர்வு
அரட்டை, வழிபாடு, பயணம்,
சேமிப்பு, நோவு, சாவு ...
அட்டவணை போட்டுப் பார் / அடங்குமா வாழ்க்கை?'


என்னும் பொருள் பொதிந்த வினாவினால் மானுட வாழ்வின் அளக்கலாகாப் பரப்பினைச் சுட்டிக்காட்டும் கவிஞர்,

' பூமியில் முளைக்கும் / புல்லுக்கும் பாலூட்டும்
மண் இருக்கும் வரை / மாயை என்பதே மாயை
வாழ்ந்து தான் பாரேன்'
(ஙப்போல் வளை, பக்.
3-4)

என வாழ்ந்து பார்க்குமாறு நம்பிக்கை ஊட்டுகின்றார். வாழ்க்கையை எதிர்மறையான நோக்கில் அணுகாமல், உடன்பாடாகப் பார்க்கும் கவிஞரின் கருத்தியல் - சிந்தனைப் போக்கு - இதனால் விளங்கும்.

'பிறப்புக்கு முன்னும் / இறப்புக்குப் பின்னுமான
மனித வாழ்வின் அனைத்திலும்'
(ஙப்போல் வளை, ப.
10)

என்னும் வரிகள் கவிஞரின் மெய்யியல் சிந்தனையைத் தெளிவுபடுத்துகின்றன. பிறிதொரு கவிதையில் அவர்,

'இருட்டுக்கும் / வெளிச்சத்துக்கும் இடையே
சிக்கித் தவிக்கும் வாழ்வு'
(ஙப்போல் வளை, ப
.20)

என வாழ்வினை அடையாளம் காட்டுவதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

'வாழ்வின் அடையாளம்' என்னும் தலைப்பிலேயே கவிஞர் ஒரு கவிதை படைத்துள்ளார். அக் கவிதையின் இரத்தினச் சுருக்கமான முடிப்பு வரி இது:

'சாவில் தெரியும் வாழ்வின் அடையாளம்' (ஙப்போல் வளை, ப.
25)

'நீறில்லா நெற்றி பாழ்' என்பது போல், 'எதிரிகள் இல்லா உலகம் பாழ்' என்கிறார் கவிஞர் காமராசு. நமக்கு உற்றுழி உதவுவது நண்பர்கள் என்றால், நமது ஆளுமைப் பண்பினை உருவாக்குவது நம் எதிரிகள் - பகைவர்கள் - என்பார்கள். 'நாசம் வந்துற்ற போது நல்லதோர் பகையைப் பெற்றேன்' என்னும் கம்ப ராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனான இராவணனின் கூற்று ஈண்டு மனங்கொளத்-தக்கது. 'நீதி மன்றங்கள், நாடாளுமன்றங்கள், விளையாட்டுப் போட்டிகள், தேர்தல்கள், தேர்வுகள், சாமிகள், சனங்கள்... எதிரிகளால் இயங்கும் உலகம்' என உலகில் எங்கும் எதிரிகளே மேலாண்மை செலுத்துவதை எடுத்துக்காட்டும் கவிஞர்,

'எதிரிகள் அற்றவர்கள் / அல்லது
எதிரிகளை வென்றவர்கள் / யார் சொல்?'


என வினவி விட்டு, முடிவாக,

'முளைத்து எழும்
எதிரிகளால் அடையாளப்படும் வாழ்வு'
(ஙப்போல் வளை, பக்.
46-47)

எனக் கவிதையை நிறைவு செய்வது குறிப்பிடத்தக்கது. 'வாழ்வின் அடையாளமே எதிரிகளை எதிர்கொள்வதில்தான் அடங்கியுள்ளது' என்பதே கவிஞரின் முடிந்த முடிபு.

கவிஞரின் படைப்பாளுமையில் கொலுவிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்


'தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சதால் காணப் படும்'
(
114)

என 'நடுவுநிலைமை' அதிகாரத்தின் நான்காம் குறட்பாவில் மொழிவார் வள்ளுவர். இதில் இடம்பெற்றுள்ள 'எச்சத்தால்' என்னும் சொல்லுக்கு உரையாசிரியர் பலரும் பலவாறு பொருள் கூறுவர். 'எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும்' என்பது இச்சொல்லுக்குப் பேராசிரியர் மு.வ. தரும் பொருள்; 'வழியினரால்' என்பது மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் காட்டும் பொருள்; 'மக்களால்' எனத் தம் மரபுரையில் எடுத்துரைப்பார் பாவாணர். எனிலும், உலக நடைமுறையை உற்று நோக்கினால் புலனாகும் வாழ்வியல் உண்மை ஒன்று உண்டு. அது, ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் இயல்பினை அவரது மரணத்திற்குப் பின் நிகழும் இறுதி ஊர்வலத்தில் உய்த்துணர்ந்து கொள்ளலாம் என்பதே ஆகும். இதனை உணர்த்தும் இரா.காமராசுவின் கவிதை வருமாறு:

'பிணத்துக்குப் பின்னால்
எத்தனைப் பேர் / எவர் எவர் முகம்
கண், வாய் கட்டவிழ்த்துக் / கைகளை உதறி
உடம்பைத் தூக்கி / எட்டிப் பார்க்கிறேன்
'இவனுக்கு இவ்வளவு தூரம் போதும்'


எவனோ சொல்ல / மீண்டும் பிணமானேன்' (ஙப்போல் வளை, ப.
19)

கவிஞர் இக் கவிதைக்கு 'எச்சங்கள்' எனத் தலைப்பு இட்டிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது; அவரது படைப்பாளுமையில் கொலுவிருக்கும் தமிழ்ப் பேராசிரியரை அடையாளம் காட்டுவது.

'பாலிதீன் பைகளில் பயிர் வளர்ப்பு' என்னும் கவிதையில், 'செம்புலப் பெயல் நீராய் / அன்புடை நெஞ்சம் தாம் கலந்த / சங்கத் தமிழ்க்குடியின் / சந்ததி உருவாக்கம் இது காண்!' (ஙப்போல் வளை, பக்.
57-58) என்பதை விளக்கிக் கூறி இருப்பார் கவிஞர்.


மீண்டும் ஒரு சுதந்தரப் போருக்குக் கவிஞரின் அறைகூவல்


'மீண்டும் ஒரு சுதந்தரம்!' என்னும் கவிதை சுதந்தர இந்தியா பற்றிய கவிஞரின் விமர்சனம் ஆகும். கவிஞரின் கருத்தில் 'சுதந்தரம் / வருடத்திற்கு / ஒரு நாள் வரும் / திவசம் அல்ல.' பாரதியார் கனவு கண்டது போல் ஆனந்த சுதந்திரம் - இன்ப சுதந்திரம் - வீர சுதந்திரம் கிடைக்கும் என்று அல்லவா எண்ணி இருந்தோம்? ஆனால், நடந்தது என்ன? 'விடுதலை கிடைத்ததும் / கைகள் / இறக்கைகள் ஆகும் / என நம்பினோம் / கால்களும் அல்லவா / முடமாகிப் போயின?' எனக் கவலையோடு வினவுகின்றார் கவிஞர். நியாய விலைக் கடைகளின் நெரிசலில் - சாதிச் சான்றிதழ் பெறுவதற்காகக் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருக்கும் நீண்ட வரிசையில் - விடிந்தால் கோடீசுவரன் ஆகிவிடலாம் என்ற கனவில் மிதக்கும் 'லாட்டரி' வாழ்க்கையில் - மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாட முயலும் காலிக் கும்பலின் இடையே சிக்கி – உதிரம் சிந்திப் பெற்ற சுதந்தரம் இன்று மூச்சுத் திணறி, திக்கு-முக்காடிக் கொண்டிருக்கின்றதே! 'இழிவுத் தேமல்களே / இந்தியத் தேகத்தை ஆக்கிரமித்துக் கொண்டன!' இந் நிலையில்,

''மனித' கங்கையின்
புனித நீரால்
தேசத்தை நீராட்டுவோம்!'


என அழைப்பு விடுக்கின்றார் கவிஞர். அப்படியும் அழுக்குகள் தொலையவில்லை என்றால்,

'மீண்டும் - ஒரு
சுதந்தரப் போருக்கு
தயாராவோம்!'
(கணவனான போதும்..., பக்.
16-17)

என முடிவாக அறைகூவல் விடுக்கின்றார் கவிஞர்.


சுமைதாங்கிகளாய் விளங்கும் பெண்களின் தோள்கள்


'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!' என்று கவிமணி பாடியது கனவு; குறிக்கோள். 'பெண்ணென்று பூமிதனில் பிறந்து-விட்டால் - பெரும்பீழை இருக்குதடி தங்கமே தங்கம்!' என்று பாரதி பாடியதே இன்றைய நடப்பு; கசப்பான உண்மை. கவிஞர் காமராசு 'கணவனான போதும்...', 'முதல் ஆக்கிரமிப்பு' என்னும் இரு கவிதைகளில் பெண்ணியம் தொடர்பான தமது தனிப்பட்ட சிந்தனைகளைத் திட்டவட்டமாகவும்  தெள்ளத்  தெளிவாகவும் வெளியிட்டுள்ளார். 'மகாத்மாக்களும் மாகவிகளும் / பார்க்க விரும்பியது - / சுதந்திரப் பெண்களை!' ஆனால், 'இன்று / சுமைதாங்கிகளாய் / பெண்களின் தோள்கள்!' விளங்குவதை 'முதல் ஆக்கிரமிப்பு' என்னும் கவிதையின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டும் கவிஞர், 'கல்வியில் / வேலையில் / கவனம் பெற்றாலும் / வடிவ மாற்றமாய் / வந்து தொலைகிறது / அடிமைச் சங்கிலி!' என எடுத்துரைக்கின்றார். உடன்கட்டை (சதி), கைம்மை (விதவை) முதலான பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு இன்னமும் சமுதாயத்தில் முற்றுப்புள்ளி வைக்கப் பெறாமையைப் புலப்படுத்தி, 'அடுப்புப் புகை / கக்கிய இருள் / பெண்களில் மனங்களில்...' படிந்து கிடப்பதைக் குறிப்பிடுகின்றார்.

'பண்ணைகள் / ஆண்டைகள்
அய்யாக்கள் / அத்தனைப் பேரின்
முதல் ஆக்கிரமிப்பு –
ஏழைப் பெண்களின் / இடுப்புத் துணிகளே!'


எனக் கவிஞர் கூறுவது, கருத்தில் கொள்ளத் தக்கது. கல்விச் சாலைகளிலோ, கடை வீதிகளிலோ இன்றளவும் பெண்கள் பார்க்கப்படும் விதமே தனி.

முப்பத்து மூன்று விழுக்காடோ, மந்திரி சபை, நாடாளு, சட்ட மன்றங்கள் மட்டுமோ பெண்களுக்கு முழுமையாக விடுதலையைத் தந்து விடாது என ஆழமாக நம்பும் கவிஞர்,

'பெண்களை
தெய்வங்களாக்க வேண்டாம்.
மனித ஜீவனாக
மரியாதை கொடுப்போம்!'
(கணவனான போதும்..., பக்.
38-39)

எனப் பறைசாற்றுகின்றார்.

கவிஞர் படைக்கும் பெண்ணிடம் 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்பது போன்ற பத்தாம்பசலித் தனமான சிந்தனைகள் எதுவும் இல்லை. மாறாக,

'என் பிரியமான தோழனே!
கருத்துக்களில் மட்டும்
எனக்கானவை சில உண்டு
நீ கணவனான போதும்'
(கணவனான போதும்..., ப
.37)

எனக் கணவனைத் தோழனாகக் கொண்டு, தனது தனித்தன்மை விளங்கக் கணவனிடம் உரையாடும் பெண்ணையே கவிஞர் காட்டியுள்ளார்.


விளைநிலங்கள் விலைநிலங்களாக மாறிப் போன அவலம்


விளைநிலங்கள் எல்லாம் இன்று விலைநிலங்களாக மாறிப் போன அவலத்தினைக் கவிஞர் 'கள்ளிகள்' என்னும் கவிதையில் உணர்வு ததும்பி நிற்கும் உருக்கமான மொழியில் சித்திரித்துள்ளார். 'அப்பனும் பாட்டனும் / நிலத்தைக் கீறி / தானியப் புதையல் எடுத்த / கலப்பைகள் யாவும் / விறகுகளாகப் பரணில்' கிடக்கின்றனவாம். 'குதிரைகளை விடவும் / குளம்புகள் பெருத்த / மச்சக் காளைகள் / அடிமாடுகளாய்ச் சந்தையில்' விற்கப்படுகின்றனவாம். 'நெல்லும் கரும்பும் வாழையும் / காய்த்துக் குலுங்கிய வயல்களில் / கள்ளிகளாய் / ரியல் எஸ்டேட் பலகைகள்' காணப்படுகின்றனவாம். 'எங்கும் எங்கும் / திட்டுத் திட்டாய் / காங்கிரீட் கட்டிடங்கள்' காட்சியளிக்கின்றனவாம். இங்ஙனம் கவிதையை வளர்த்துக் கொண்டே வந்த கவிஞர்,

'இவை / மனிதர்களின் கூடுகளா?
இல்லை / பயிர்களின் கல்லறைகள்'
(கணவனான போதும்..., ப
.3)

என முடித்து வைக்கின்றார். முன்னம் விளைநிலங்கள் பச்சைப் பசேல் என வளர்ந்து இருந்த இடத்தில் இன்று மனிதர்களின் கூடுகள் போல் எழுந்து நிற்கும் காங்கிரீட் கட்டிடங்கள், கவிஞருக்குப் 'பயிர்களின் கல்லறைக'ளாகத் தோன்றுகின்றன!


'உலக மய ஆத்திசூடி'


தமிழ் மூதாட்டி ஒளவையாரின் அடிச்சுவட்டில் கவியரசர் பாரதியார் 'புதிய ஆத்திசூடி' படைத்தார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 'இளையோர் ஆத்திசூடி' இயற்றினார்; மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் 'தமிழ்சூடி' புனைந்தார்; பேராசிரியர் தமிழண்ணல் 'ஆய்வு சூடி' தந்தார்; பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் 'அறவியல் சூடி' எழுதினார். இவர்களை அடியொற்றி இரா.காமராசு 'உலக மய ஆத்திசூடி' என்னும் தலைப்பில் வித்தியாசமான ஓர் ஆத்திசூடியைப் படைத்துள்ளார். அச் சூடி வருமாறு:


'அதிகாரமே அரசு
அணுவுடை தறி
ஆலமர ஊஞ்சல் தொலை
இலவசங்கள் ஒழி
இளிச்சவாயனாய் இரு
ஈ உணவு கொள்
உலக மயம் ஜிந்தாபாத்
ஊளையிடல் தடை செய்
எதுவுமற்று இரு
எய்ட்ஸை இறக்குமதி செய்
ஏழைகளை ஏற்றுமதி செய்
ஏர்கலப்பை நினைவுச் சின்னமாக்கு
ஐநாவை அப்புறப்படுத்து
ஒன் மேன் ஷோ நடத்து
ஓ போடு தேசிய கீதமாக்கு
வி.ஆர்.எஸ்.ஸில் தொலைந்து போ
சி;.ஆர்.எஸ். சினேகம் கொள்
சங்கம் சமாதி
போராட்டம் வேரறு
பங்கு வர்த்தகம் பயில்
முட்டை இல்லாக் கோழி வளர்
விதையில்லாக் காய்கனி பயிரிடு
பந்து மட்டை விளையாட்டு ரசி
வட்டி கட்டுவது வாழ்க்கை நெறி
கடன் வாங்குவது தேச ஒழுக்கம்
போர்ப் பொருளாதாரம் பயில்
ஸார்சில் சங்கமமாகு
என்.ஆர்.ஐ. பெருக்கு
டாலர் சாப்பிடு
வாஷிங்டன் வணங்கு'
(ஙப்போல் வளை, பக்.
59-60)


இந்த ஆத்திசூடியில் உலக மயமாக்கலின் பண்பையும் பயனையும் தாக்கத்தையும் விளைவையும் அங்கதச் சுவை இழையோட வித்தியாசமான மொழியில் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


ஆழ்ந்திருக்கும் கவியுளம்


'மதங்கள் கடந்த / மனிதம்
வாழ்க்கையாகும் / காலம் வருமா?'
(கணவனான போதும்..., ப
.12)

என மதங்களின் பெயரால் இன்று நடந்து வரும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போதும்,

'எல்லாம் சரிதான்
வண்ணத்துப் பூச்சியாய்
வாழ்வது எப்போது?'
(கணவனான போதும்..., ப
.13)

எனத் தத்துவ நோக்கில் வாழ்வியல் சிந்தனையை வெளியிடும் போதும்,

'வயிறில்லாமல்
வாழ்வில்லை;
வயிறே வாழ்வல்ல'
(கணவனான போதும்..., ப
.15)

என அறுதியிட்டு இலட்சியத்தினை உரைத்திடும் போதும்,

'மனிதனை விடவும்
மரங்களே புனிதமானவை
ஏனெனில்
எந்த மரமும் அடித்துக் கொள்வதில்லை
எந்த மரமும் சுரண்டுவதில்லை
எந்த மரமும் அடிமைப்படுத்துவதில்லை'
(கணவனான போதும்..., ப
.23)

என மரங்களின் மாண்பினை விதந்து மொழிந்திடும் போதும்,

'நாளைய உலகிலேனும்
மனிதக் கைகளும் / மானிடக் கால்களும்
மனித மனமும் / வானமாய் விரியும்
வாழ்க்கையை அமைப்போம்'
(கணவனான போதும்..., ப
.35)

என நம்பிக்கையோடு முழங்கும் போதும்,

'விவசாயியின் மகன் நீ
நாற்காலியின் மக்களிடம்
எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்'
(ஙப்போல் வளை, ப
.42)

எனச் செத்துப் போன தமது பாட்டியின் சொல்லைப் பதிவு செய்யும் போதும்,

'காதல் போயின் / சாதல் கூடாது
வாழ்ந்து காட்டலே / காதலை / கௌரவப்படுத்தும்...
காதல் / வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல'

                                                           (கணவனான போதும்..., ப
.47)


எனத் தோல்வியுற்ற நிலையிலும் காதலைச் சிறப்பிக்க வாழ்ந்து காட்டுமாறு இளைய தலைமுறையினருக்கு வலியுறுத்தும் போதும்,

'காலண்டரைத் தாண்டியும்
காலம்
வாழும் தானே?'
(கணவனான போதும்..., ப
.64)

எனக் காலத்தின் பெருமையைப் பேசும் போதும்,

ஆணாய் - ஜாதிக்காரனாய் - மதத்துக்குச் சொந்தக்காரனாய் - வெள்ளைச் சட்டைக்காரனாய் பிறந்ததும் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதை மறுதலித்து,

'இலட்சியத்தோடு வாழ
துடிதுடிக்கிறது மனசு'
(கணவனான போதும்..., ப
.59)

எனப் பெருமிதத்துடன் பறைசாற்றும் போதும்,

'நூறு குடைகள் / சேர்ந்து நிற்பது போல்
விரிந்து நின்ற ஆலமரம்'
(கணவனான போதும்..., ப.70)

எனப் படிமப் பாங்கில் ஆலமரத்தின் அழகினைச் சித்திரிக்கும் போதும்,

'வழி விடுங்கள்
இனி எங்களின் காலம்' (கணவனான போதும்...,
.80)

என நந்தனின் சாம்பல் மேட்டில் இருந்து உரத்து முழங்கும் போதும்,

'பிணத்துக்கான மரியாதையில்
உயிர்த்தெழுந்தது மனிதம்'
(ஙப்போல் வளை, ப
.32)

என வாழ்ந்த மனிதரான தமது தந்தையின் மரணத்தின் போது தெருவில் உள்ளோர் அனைவரும் எந்த வேறுபாடும் பாராமல் திரண்டு வந்து காரியங்கள் ஆற்றியதைப் படம்பிடித்துக் காட்டும் போதும், அணிசெய் இக் கவிதை வரிகளின் ஊடே ஆழ்ந்திருக்கும் கவியுளம் அழுத்தமாகவும் திருத்தமாகவும் வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.


காமராசுவின் கவிதை உலகு

'வாழ்வின் முகவரி' என்னும் தலைப்பில் கவிஞர் காமராசுவின் 'கணவனான போதும்...' என்னும் தொகுதிக்கு எழுதிய அணிந்துரையில் பேராசிரியர் பாலா குறிப்பிடுவது போல், 'பாசாங்குகள் அற்ற கிராமியமும், இளமை உணர்வுகளின் நேர்ப் பேச்சும் நிறைந்த உலகு இந்தக் கவிஞரின் கவிதை உலகு' (p.viii). இக் கருத்தினை சற்றே விளக்கிக் கூற வேண்டும் என்றால், கவிஞர் சிற்பியின் சொற்களில் இப்படிச் சொல்லலாம்:

'பச்சை அறுகம் புல்லில் ஒரு பரவசமான மணம் இருக்குமே, அதை நுகர வைக்கிறது கவிதை ஒவ்வொன்றும். மனித வாழ்வோடும், சொந்த மண்ணோடும் அகலாத பாசம் இளநீரைப் போல் ஒவ்வொரு கவிதையிலும் நிரம்பி ஆத்ம சுகத்தை வழங்குகிறது' ('அசல் கவிதை', காமராசுவின் ஙப்போல் வளை,
p.v). 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021