'தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ?'

முனைவர் இரா.மோகன்


ரு குழந்தையின் ஆளுமை உருவாக்கத்தில் தாய்க்கும் தந்தைக்கு சரி நிகர் சமானமான பங்கு உண்டு. 'ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே' எனத் தாயின் தலையாய கடமையைச் சுட்டிக்காட்டும் சங்கப் பெண்பாற் புலவர் பொன்முடியார், 'சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே' (புறநானூறு, 312) எனத் தந்தையின் இன்றியமையாத பங்களிப்பினையும் அடுத்து எடுத்துரைப்பது நோக்கத்தக்கது. வள்ளுவர் பெருமானும் மகனை 'அவையத்து முந்தி இருப்பச் செய்யும்' (திருக்குறள், 67) – அவையில் முந்தி இருக்கும்படி அறிவினை அளிக்கும் - தந்தையைப் போற்றுவதோடு நின்றுவிடாமல், 'தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் அவனை ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ச்சி' (திருக்குறள், 69) அடைவதையும் பதிவு செய்வார். 'தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை' (கொன்றை வேந்தன், 38) என உரைக்கும் ஒளவைப் பெருமாட்டி, 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' (கொன்றை வேந்தன், 37) என மொழிவதும் இங்கே மனங்கொள்ளத்தக்கதாகும். 'மகன் அறிவு தந்தை அறிவு' (301) என்பது பழமொழி நானூறு உணர்த்தும் ஓர் அடிப்படையான வாழ்வியல் விழுமியம்ளூ அறம்.


தந்தை சொல்லை மந்திரமாகப் போற்றிய இராமன்


தந்தை-மகன் எனும் பாசப் பிணைப்புக்கு - 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்னும் மூத்தோர் அமுத மொழிக்கு - நல்லதோர் இலக்கியமாக விளங்குபவன் 'அறத்தின் நாயகன்' இராமன்.

'தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ, நெடுமொழி அன்றோ?'


             (மதுரை காண்டம்: ஊர்காண காதை, அடி.
46-49)

என்பது நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் கோவலனுக்குக் கூறும் ஆறுதல் உரை. 'தந்தை தயரதனின் ஏவலைத் தாரக மந்திரமாக ஏற்று தன் மனைவியான சீதையோடு காட்டுக்குச் சென்று, அங்கே அவளைப் பிரிந்து, கடுந்துயரில் வருந்தியவன் இராமன்' என்னும் கவுந்தியடிகளின் கூற்று தனது தந்தையான தயரதனின் சொல்லுக்கு இராமன் தரும் மலையினும் மாணப் பெரிய மதிப்பினைத் தெளிவுபடுத்தும்.


கண்ணனைத் தந்தையாகப் பாடிய பாரதி



'கண்ணன் பாட்'டில் கண்ணனைப் பல்வேறு உறவு நிலைகளில் நோக்கிப் பாடியுள்ள பாரதியார், 'கண்ணன்-என் தந்தை' என்னும் தலைப்பில் படைத்துள்ள பாடல் சிறப்பானது.

'எங்கள், தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே'


என்றும்,

'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே'


என்றும் பாரதியார் தம் பாடல்களில் தந்தைக்குச் சூட்டியுள்ள புகழ் மொழிகள் குறிப்பிடத்தக்கவை.

உலகப் பழமொழிகளில் தந்தையின் பெருமை


தந்தையின் பெருமையைப் போற்றும் பழமொழிகளும் பொன்மொழிகளும் உலகெங்கும் காணப்படுகின்றன.

'ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேல் ஆவார்' (ப.ராமஸ்வாமி, உலகப் பழமொழிகள், ப
.94) எனத் தந்தைக்குப் புகழாரம் சூட்டுகின்றது இங்கிலாந்துப் பழமொழி ஒன்று.

'கடவுள் உயரே இருக்கிறார், பூமியில் தந்தை இருக்கிறார்' (ப
.96) எனக் கடவுளக்கு நிகராகத் தந்தையைப் போற்றி உரைக்கின்றது ஒரு ரஷ்யப் பழமொழி.

'தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம்' (ப
.94) என எச்சரிக்கை விடுக்கின்றனது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி.

'ஒரு தந்தை பத்துக் குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம். பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேணுவது அரிது' (ப
.94) என்பது சீனப் பழமொழி உணர்த்தும் அனுபவ உண்மை ஆகும்.

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித் தரவில்லை. அவன் வாழ்ந்தான், அதை உடனிருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்!' (கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்), 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம் தான், எங்களைத் தந்தை மகனாக இணைத்தது!' (எழுத்தாளர் ஓரான் பாமுக்) ஜமேற்கோள்: நா.முத்துக்குமார், வேடிக்கை பார்ப்பவன், பக்.
29224ஸ என்பன தந்தையரின் மாண்பினைப் பறைசாற்றும் சான்றோர் வாக்குகள் ஆகும்.


தந்தைப் பாசத்தை வெளிப்படுத்தும் தொன்மையான பாடல்


புறநானூற்றின்
112-ஆம் பாடல் பாரி மகளிர் பாடியது. 'பாரி பாடிய பாடல் எதுவும் கிடைக்கவில்லைளூ அவன் பாடுதல் வல்லானாய் இருந்திருக்கவும் கூடும்ளூ பாடு புகழாளனாக இருந்தமை வெளிப்படை. ஆனால், அவன் தன் மகளிரைப் பாடுதல் வல்லாராய் வளர்த்த பெருமை, அவன் பெருமைக்குப் பெருமை சேர்ப்பதாம்' (புறநானூறு: மக்கள் பதிப்புளூ ப.223) என்பது மூதறிஞர் இரா.இளங்குமரனார் இப் பாடலுக்கு எழுதிய உரை விளக்கத்தில் தரும் சிறப்புக் குறிப்பு.

பாரி இறந்து ஒரு திங்கள் ஆன நிலையில், ஒரு நாள் முழு நிலவில் பாரி மகளிருக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் எழுந்து, அவர்களை வாட்டுகின்றன. அவர்கள் தங்களது ஆழ்ந்த மனவருத்தினை ஒரு பாடலில் இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்: 'ஒரு திங்களுக்கு முன் முழு நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்த நாளில், நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்ளூ எங்கள் பறம்பு மலையையும் எவரும் கொள்ளவில்லை. அதே போல், இன்றும் முழுநிலவு ஒளி வீசுகின்றது. ஆனால், வெற்றி முரசு கொட்டும் பகை வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்ளூ நாங்கள் எங்கள் தந்தையை இழந்தவர் ஆனோம்'.

பாரி மகளிர் கூற்றாக அமைந்த உள்ளத்தை உருக்கும் அப் புறநானூற்றுப் பாடல் இதோ:

'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்ளூ எம் குன்றும் பிறர் கொளார்ளூ
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்ளூ யாம் எந்தையும் இலமே.'


தமிழ் இலக்கிய வரலாற்றில் தந்தைப் பாசத்தின் தனிப்பெருந் தகைமையைப் பறைசாற்றும் தொன்மையான பாடல் இதுவாகவே இருக்கும். பாரி மகளிர் இப் பாடலைப் புனைந்திருக்கும் திறம் நினைந்து நினைந்து மகிழவும் நெகிழவும் செய்வதாகும். வெற்றி முரசு கொட்டும் மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெற்றி கொள்ள முடியவில்லை. அவர்கள் அவனைச் சூழ்ச்சியாலேயே வெற்றி கொள்ள முடிந்தது. ''வென்றெறி முரசின் வேந்தர்' என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு' (இர.பிரபாகரன், புறநானூறு: மூலமும் எளிய உரையும், ப
.256) என்பர்.


'அப்பா என்றால் அறிவு'


தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப் பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் நூல் 'அணிலாடு முன்றில்'. 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக வெளிவந்த இந்நூலில் அம்மா தொடங்கி மகன் வரையிலான இருபது உறவுகளைப் பற்றிய நினைவுகளைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் நா.முத்துக்குமார். 'இந்த நூல்.. என்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய அப்பா நாகராஜனுக்கும், நான் உலகிற்கு அறிமுகப்படுத்திய மகன் ஆதவன் நாகராஜனுக்கும்...' காணிக்கையாக்கப்-பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந் நூலில் அப்பா பற்றிய நா.முத்துக்குமாரின் உணர்ச்சி மிகு பதிவு இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது.

'உங்களுக்குப் புத்தகங்கள் மீது அலாதியான பிரியம் இருந்தது. தமிழாசிரியர் ஆக சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டு, வீடு முழுக்க ஒரு லட்சம் புத்தகங்களை நீங்கள் சேகரித்து வைத்திருந்தது இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது... நீங்கள் அடிக்கடி சொல்லும் வாகசம் 'எனக்குத் தமிழ் மட்டும் தெரிஞ்சதால தான், தமிழ்ப் புத்தகம் மட்டும் வாங்கினேன். அதனால் கடனாளியா மட்டும் இருக்கேன். ஆங்கிலமும் தெரிஞ்சிருந்தா... நாம எல்லாம் நடுத்தெருவுல தான் நின்னிருப்போம்'' எனத் தமது தந்தையின் புத்தகக் காதலைக் குறித்து நினைவுகூர்ந்து கவிஞர் எழுதி இருக்கும் பகுதி படிப்பவர் உள்ளத்தைத் தொடுவதாகும்.

'என் அப்பா
ஒரு மூட்டை புத்தகம்
கிடைப்பதாக இருந்தால்
என்னையும் விற்றுவிடுவார்'


என நா.முத்துக்குமார் ஒரு முறை தம் தந்தையைப் பற்றி எழுதி இருந்த குறுங்-கவிதை சுவையானது.

புத்தகங்கள் படிக்கும் போது தமக்குப் பிடித்த வரிகளின் கீழே சிவப்பு மையால் அடிக்கோடு இடுவது கவிஞரது தந்தையாரின் வழக்கமாம். 'எதற்கு அடிக்கோடு இடுகிறீர்கள்?' என்று கோபத்தோடு கேட்டால் அவர் அமைதியாக இப்படிச் சொல்வாராம்:
'எங்கோ இருக்கும் இதை எழுதிய எழுத்தாளனுக்கு நான் இங்கு இருந்தே கைகுலுக்குகிறேன்.'

கட்டுரையின் தொடக்கத்தில், 'எல்லாப் பிள்ளைகளுக்கும் அப்பாதான் முதல் கதாநாயகன் என்பார்கள். அப்பா என்றால் அறிவு. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்' எனத் தந்தையைக் குறித்த தமது மகிழ்வான நினைவினை நெகிழ்வோடு பகிர்ந்து கொண்டிருக்கும கவிஞர் நா.முத்துக்குமார்,

'அப்பா... உங்கள் உயிரின் ஒரு துளியில் இருந்து என் உலகம் தொடங்கியது. இன்று, இவ்வேளையில் அளவில்லா அன்புடன் என் கண்ணீரில் சில துளிகளை உங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்!



இப்படிக்கு,
உங்கள் மகன்'


எனத் தம் கட்டுரையினை உருக்கமாக முடித்திருப்பது முத்தாய்ப்பு.

'வேடிக்கை பார்ப்பவன்' என்னும் தலைப்பில் எழுதிய தன்வரலாற்று நூலிலும் கவிஞர் நா.முத்துக்குமார் தமது ஆளுமை உருவாக்கத்தில் தந்தையார் பெற்றிருந்த சிறப்பான இடத்தைப் பதிவு செய்துள்ளார்: 'அம்மா இறந்த பிறகு, இவள் அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். இந்த உலகைப் பகலில் சூரியன் வழி நடத்துகிறதுளூ இரவில் சந்திரன் வழி நடத்துகிறது. பகலிலும் இரவிலும் வழிநடத்துவது தகப்பனின் கைவிரல்களே என்பதை இவன் அறிந்து கொண்ட காலம் அது. இவன் தந்தையின் விரல்கள், இவனைப் பல்வேறு திசைகளுக்கு அழைத்துச் சென்றன' (ப
.29)

'கவிதை அப்பா': கண்ணீர் தாஜ்மகால்

'தமிழுக்கு அன்னமிட்ட கை அண்ணன் மீராவின் கை... ஒரு தந்தையாக நின்று தமிழ்நாட்டுக்குத் தந்த அற்புதமான கவிதை அவருடைய மகள் செல்மா' (தமிழுக்கு 'அன்னம்' இட்ட கை, கவிதை அப்பா, ப
.17) என்பார் கவிஞர் மு.மேத்தா. அருமை மகள் செல்மா தனது தந்தை கவிஞர் மீரா குறித்துச் சொற்களால் கட்டி முடித்திருக்கும் கண்ணீர் தாஜ்மகால் 'கவிதை அப்பா'. 'காதலிக்காக ஆயிரம் காவியங்கள் மலர்ந்திருக்கின்றன. தாய் பற்றிக் கூடப் பலர் பாடியிருக்கிறார்கள். ஆனால் தந்தைக்காக ஒரு கவிதை நூல் எனக்குத் தெரிந்து கண்மணியின் நூலாகத் தான் இருக்கும்' ('மணிக்காக அழும் கண்', கவிதை அப்பா, ப.7) எனக் கவிக்கோ அப்துல் ரகுமான் தமது அணிந்துரையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'கவிதை அப்பா' தொகுப்பில் 'தந்தை எனும் பாசக் கதகதப்பு' பதமாய் வெளிப்பட்டு நிற்கும் ஓர் இடம்: கடவுள் வந்து, 'எல்லோருக்கும் ஒரு வரம் தருகிறேன், கேளுங்கள்' என்றாராம். ஆளுக்கொரு வரம் கேட்டார்களாம். சிலர் பொன் கேட்டார்களாம். பலர் பொருள் கேட்டார்களாம். வேறு சிலரோ 'சஞ்சலம் இல்லா வாழ்வு' எனும் வரம் வேண்டி நின்றார்களாம். இன்னும் பலரோ அளவுக்கு அதிகமாய் சொத்து சேர்த்து அது பிடிபட்டு விடாமல் இருக்க வீட்டின் வாயிலை பலப்படுத்தச் சொன்னார்களாம். ஆனால், செல்மா கடவுளிடம் கேட்ட வரம் என்ன தெரியுமா? இதோ 'தந்தைப் பாசம்' ததும்பி நிற்கும் அவரது வரிகள்:

'இவர்கள் எல்லோரையும் விட
நான் பேராசைக்காரி
உங்களுக்கே மீண்டும்
மகளாய்ப் பிறந்திடும்
வரத்தைக் கேட்டுள்ளேன்'
(ப
.45)

செல்மாவைப் பொறுத்த வரையில், 'அப்பா மீண்டும் கண்முன் வந்து தோன்றினால், அவரது உயிர் ஈர்ப்புச் சக்தி மீண்டும் வந்தது போல் ஆகிவிடுமாம்!' (ப.
63) இன்னும் ஒரு படி மேலே சென்று பிறிதொரு கவிதையில், 'அதியனுக்குக் கிடைத்த நெல்லிக்கனி / என் கைக்குக் கிடைத்திருந்தால் / இல்லை அதியன் இருந்தால் / சற்றும் யோசிக்காமல் / ஒளவைக்குப் பாதி / என் அப்பாவுக்குப் பாதி / என்று யாசித்திருப்பேன் / நிச்சயம் மீட்டிருப்பேன்' (ப.90) என செல்மா மொழிவது அவரது பாச உணர்வின் அற்புதமான வெளிப்பாடு ஆகும்.


தந்தையே மந்திரமாக...

'வைகையாற்றில் / கள்ளழகர்
காவிரியாற்றில் / ரங்கநாதர்
திருவையாற்றில் / பஞ்சநதீஸ்வரர்
நட்டாற்றில் / ஜனங்கள்' (மனத்தடி நீர்,
.63)

என 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த முத்திரைக் கவிதை வாயிலாக எழுத்துலகில் பேசப் பெற்றவர் தெ.வெற்றிச் செல்வன். 'மெய்யாக வாழ்ந்த கதை' என்பது அவரது தந்தையர் ப.தெட்சிணாமூர்த்தி பற்றிய நினைவலைகளின் நெகிழ்வான பதிவு ஆகும். கவிஞர் யுகபாரதி குறிப்பிடுவது போல், 'குறிப்பிட்ட வயது வரை ஒவ்வொருவருக்கும் அவருடய தகப்பனாரே முதல் அதிசயம்ளூ முதல் கதாநாயகன்ளூ முதல் புத்திசாலி. தலைசீவிக் கொள்வதில் தொடங்கி பேச்சின் உச்சரிப்பு வரை இது தொடரும்.'

ப.தெட்சிணாமூர்த்தி வேளாங்கண்ணியை அடுத்த பெரியதும்பூரைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியப் பணி ஆற்றியவர்ளூ பொங்கல் பண்டிகையை விரும்பிக் கொண்டாடியவர்ளூ ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தமது உயிராய் நினைத்தவர், நடந்தவர், ஒவ்வொரு விஷயத்திலும் கண்டிப்பாக இருந்து தமது பிள்ளைகளைச் செதுக்கியவர்ளூ உருகி வழியும் அன்பு, பெருகி நிறையும் கருணை, விரிந்து பரந்த சிந்தனை மூன்றையும் தமது தனிப்பெரும் ஆளுமைக் கூறுகளாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர்ளூ 'பகுத்தறிவுப் பகலவன்' பெரியார் மீது ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்ளூ 'இந்திரனுக்கு / உடம்பெல்லாம் கண்களாம் / எங்கள் சட்டையெல்லாம் இந்திரன்கள்' என்றாற் போல் கவதை வடிக்கும் படைப்புத் திறமும் கைவரப் பெற்றவர்ளூ 'எல்லோரையும் நம்பிவிடாதே. யாரிடமும் பயன் கருதிப் பழகாதே. பண்பாளன் என்ற பெயரெடு' என அவ்வப்போது எழுதிய கடிதங்கள் வாயிலாக அருமையான வாழ்வியல் விழுமியங்களை இளைய தலைமுறையினருக்கு வலியுறுத்தி;யவர். முத்தாய்ப்பாக, அவர் எழுதி வைத்துவிட்டுப் போன ஆறு பக்க அளவில் அமைந்த உயில் - தெ.வெற்றிச்செல்வனின் சொற்களில் குறிப்பிடுவது என்றால், 'அப்பா உயில் இல்லை அது. உயிர்... உங்கள் உயிர்...' (மெய்யாக வாழ்ந்த கதை, ப
.36) – வையத்துள் வாழ்வாங்கு வாழ விழையும் மனிதன் பொன்னே போல் போற்றிப் பின்பற்ற வேண்டிய தாரக மந்திரம் ஆகும். அவ்வுயிலில் இடம்பெற்றிருக்கும் உயிர்ப்பான சில வரிகள் வருமாறு:

'மனைவி மக்கள் உட்பட யாரும் என் பிரிவினால் அழுது புலம்ப வேண்டியதில்லை. மனிதன் இயற்கை நிலையை அடைவது சர்வ சகஜம் என்ற உணர்வும் சமாதானமும் கொள்ளவும்.

என் பிரேதம் தூக்கப்படும் போதோ அல்லது சவ ஊர்வலத்திலோ 'கோவிந்தா கோவிந்தா' என்று கண்டிப்பாய் கூவக் கூடாது. 'தமிழ் வாழ்க!', 'தமிழ்நாடு தன்னாட்சி பெறுக!' என்று கோஷங்களை முழக்குக...

நேர்மையுடன் நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு வாழ்ந்ததால் என்னால் எந்தவித செல்வத்தையும் திரட்ட முடியவில்லை... நேர்மையுடன் நல்ல பண்பாளர்களாகவும் இருக்கத் தக்க வகையில் என் பிள்ளைகளை வளர்த்துள்ளேன். இதுவே சிறந்த சொத்தாக நான் கருத முடியும்' (பக்
.32-33).

தெ.வெற்றிச்செல்வன் நூலினைப் படித்து முடித்ததும் எவரது மனத்திலும் தோன்றும் எண்ணம் இதுவாகத் தான் இருக்கும்: 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்ளூ ஆனால் சிலருக்கோ தந்தையின் வாழ்வே மந்திரமாக மாறிவிடும் நற்பேறு வாய்த்து விடுகிறது!'


'அப்பா': கவிஞர் ச.சுப்பையாவின் மலரும் நினைவுகளின் தொகுப்பு


கவிஞர் நெல்லை ச.சுப்பையாவின் நான்காவது படைப்பு 'அப்பா' (2014). இது நல்லவராய் வல்லவராய் நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, நானூறு ஆண்டுகளின் சாதனையைச் செய்து காட்டிய ஒரு தந்தைக்குத் தனயன் புதுக்கவிதை வடிவில் செய்துள்ள புகழ் அஞ்சலிளூ நெஞ்சாரச் செலுத்தியுள்ள நன்றிக் கடன். இந்நூலுக்கு எழுதிய வாழ்த்துரையில் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதகிருஷ்ணன், 'எனக்குத் தெரிந்த வரை அப்பாவைப் பாடியிருக்கிற முதல் நூல் இதுவாகத் தான் இருக்கும். அதற்காக அப்பாவைப் பாட யார்க்கும் மனமில்லை என்பதில்லை. அம்மாவைப் பாடத் தொடங்கினால் பாடி முடிக்க முடியாது, பாடிக் கொண்டே இருந்து விடுவோம் என்பது தான் அப்பாவை அதிகமாய்ப் பாடாதிருக்கிற காரணம். அது மட்டுமல்ல, புள்ளை உருப்பட வேண்டும் என்று உருட்டுகிற தந்தை எந்தக் குழந்தைக்கும் எப்போதும் வில்லன்தான், ஆனால் சுப்பையா போன்றவர்களுக்குத் தான் கதாநாயகன்' (p.ii) எனக் குறிப்பிடுவது கருத்தில் கொள்ளத் தக்கது.

குடும்பத்தில் கொண்டிருந்த நிறைவான ஈடுபாடு, உறவினர்கள் மீது காட்டிய பரிவு, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியதில் வெளிப்பட்ட பொறுப்புணர்ச்சி, வங்கிப் பணி மற்றும் தொழிற் சங்கப் பணிகளில் காட்டிய ஆர்வம் என்றாற் போல் கவிஞரின் தந்தையாரான என்.எஸ்.எஸ்.சங்கரனின் பன்முகத் திறன்களை இந் நூலில் திறம்படப் பதிவு செய்துள்ளார் சுப்பையா. 'ஈரப் பதமாய் எப்போது நினைத்தாலும் இனிக்கும்' அவரது இளமைக் காலப் பதிவு ஒன்று:

'புகழ் பெற்ற தந்தையின் ... / ... கரங்களில் இருந்த
அந்த நொடி இன்பங்களுத்தாய் / ஏங்கும் என் முதுமை...'
(ப
.3)

கவிஞரின் படப்பிடிப்பில் தந்தை சங்கரன், 'தாத்தாவின் அறிவும் / பாட்டியின் ஆற்றலும் / கலந்த பரிமாணம்' (ப.17)ளூ 'மிகச் சிறுவயதிலேயே / மரணம் எடுத்துக்-கொண்ட / மிகச் சிறந்த மாமனிதர்' (ப.30)ளூ 'கண்ணதாசனும் ஜெயகாந்தனுமாய் அவரது சிந்தனையின் உயிரோட்டங்கள்' (ப.125)ளூ 'முல்லை மலர் நினைவுகளாய்... தினம் தினம் வளர்ந்த திருநெல்வேலி' (பக்.17ளூ
150).

'தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ?'

தமிழ் திரை உலகில் தாய்ப் பாசத்தின் அருமையினையும் பெருமையினையும் வியந்து போற்றும் விதத்தில் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுந்துள்ளன. ஆயின், தஞ்சை ராமையாதாஸ் தந்தையின் பெருமையைப் போற்றும் வகையில் 'தாய்க்குப் பின் தாரம்' (1956) திரைப்படத்திற்காக ஓர் அருமையான பாடலைப் பாடி ஒரு புதிய செல்நெறியினைத் தொடங்கி வைத்துள்ளார்.

'தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ? – ஒரு
மகனுக்குச் சர்வமும் அவர் என்றால் விந்தை உண்டோ?'


எனத் தொடங்கும் அப் பாடல், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்னும் ஒளவைப் பெருமாட்டியின் பொன்மொழியினை நினைவுபடுத்தி, தந்தை மகன் மீது காட்டிய பாசத்தினை வானளாவப் போற்றுகின்றது. தொடர்ந்து,

'உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி – என்
வாழ்வின் இன்பமே எதிர்பார்த்த தந்தை எங்கே? – என்
தந்தை எங்கே?'


எனத் தந்தையை இழந்து தவிக்கும் மகனது உணர்வுகளைப் பதிவு செய்கின்றது.

'கண்ணிமை போல என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா?
காரிருள் போல பாழான சிதையில்
கனலானார் விதிதானா? – தந்தை
கனலானார் விதிதானா?'


               (தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள்: தொகுதி
2, ப.287)

என்ற வரிகள் தந்தை என்ற கடமை உணர்வோடு கண்ணிமை போலே மகனைக் காத்து வளர்த்த பான்மையைப் பறைசாற்றுபவைளூ எவரையும் காதலாகிக் கசிந்து உருக வைத்து, கண்களில் நீர் மல்கச் செய்பவை.
'அடிமைப் பெண்' படத்திற்காகக் காவியக் கவிஞர் வாலி எழுதியுள்ள வெற்றிப் பாடலின் தொடக்க வரிகள் இவை:

'அம்மா என்றால் அன்புளூ
அப்பா என்றால் அறிவுளூ
ஆசான் என்றால் கல்விளூ
அவரே உலகில் தெய்வம்!'
(திரை இசைப் பாடல்கள், ப
.24)

'அசல்' திரைப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள பாடல் ஒன்றும் வித்தியாசமான முறையில் தந்தையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கின்றது. 'சிங்கம் என்றால் என் தந்தை தான், செல்வம் என்றால் என் தந்தை தான்' எனத் தொடங்கும் அப்பாடல், 'எல்லோருக்கும் அவர் விந்தை தான்' எனத் தந்தையை வியந்து போற்றுகின்றது. அவர் கண்ணிலே விண்மீன்கள் கடன் கேட்குமாம்ளூ அவர் சொல்லிலே வேல் வந்து விளையாடுமாம்ளூ அவர் பேரைச் சொன்னாலே பகை நீங்குமாம். அவர் 'வீரத்தின் மகன்' என்று விழி சொல்லுமாம்ளூ 'வேழத்தின் இனம்' என்று நடை சொல்லுமாம்ளூ 'நிலையான மனிதன்' எனப் பேர் சொல்லுமாம். இருந்தாலும் இறந்தாலும் அவர் யானை தானாம். முத்தாய்ப்பாக, 'ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே!' எனத் தனித்தன்மை துலங்கத் தந்தைக்குப் புகழாரம் சூட்டுகின்றார் வைரமுத்து.

தாயினும் மேலாகத் தந்தையின் பாசத்தினையும் பெருமையினையும் போற்றி இசைப்பதில் எப்போதும் மோனையைப் போல் முன்னிற்பவர் நா.முத்துக்குமார் ஆவார்.

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே'


என்னும் அவரது திரைப்பாடல் வரிகள் இவ்வகையில் நினைவுகூரத் தக்கவை. 'என் உயிரணுவின் வரம் உன் உயிர் அல்லவா? மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா?' எனத் தொடங்கும் அப் பாடல் 'நமக்கெனவே வந்த நண்பன் தந்தை' என்னும் முத்தான வாசகத்தோடு நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

'தமிழ் இலக்கியம் போற்றும் தந்தையர் மாண்பு' என்பது தனிநூலாக விரிந்து எழுதத் தக்க ஒரு சிறந்த ஆய்வுப் பொருள். அதற்கான ஒரு தொடக்கப் புள்ளியே - முதல் காலடியே - இக் கட்டுரை.




 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021