தமிழர் பண்பாட்டு வரலாற்று ஆவணம் - பெரிய புராணம்'

பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம்லகமெலாம் பரந்து வாழும் தமிழினத்தின் பண்பாட்டுப் பேணுகை 20 ஆம் நூற்றாண்டு முதலாகப், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நவீன தொடர்பு சாதனங்களும் தொழில் நுட்ப வசதிகளும், பண்பாட்டு உணர்வுமிக்க மக்களின் மன எழுச்சியும் இம்முயற்சிக்குப் பின்னணியாக உள்ளன. ஆனால் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்னும் பெரும் புலவர் தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் பேணிக்காத்து, அவற்றுக்கு உயிர்ப்பூட்டும் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் என்பதையும், அவற்றின் விளைவாக பெரியபுராணம் என்னும் தமிழர் தேசியப் பெருங்காப்பியம் ஒன்றைத் தந்துள்ளார் என்பதையும் குறிப்பிடுதல் பொருத்தமாகும். தமிழர் பண்பாட்டு வரலாற்றிலே களப்பிரர்களும் பல்லவர்களும், சமணரும் பௌத்தரும் சேர்ந்து தமிழ் மொழிக்கும் சைவத்திற்கும் எதிராக மேற்கொண்ட தீய செயல்களுக்கும் தடைகளுக்கும் எதிராகப் போராடிய செயல்வீரர்களை - பண்பாட்டுக் காவலர்களை – புரட்சி வீரர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில், அவர்களது வரலாறுகளைத் தேடித், திரட்டிப் பாடிய பெரு நூலே பெரியபுராணம். இப்பெருங்காப்பியம் தமிழ்மொழியின் நிலைப்பாடு பற்றியும், தமிழர் சமயம் அடைந்த இடர்ப்பாடுகள் பற்றியும் எடுத்தியம்புகின்றது.

சேக்கிழார் இக்காவியத்தைப் பாடியதன் நோக்கம் பற்றி ஆராயும்போது, பல உண்மைகள் வெளிப்படுகின்றன. சேக்கிழாரின் காலத்தில் தமிழர் பண்பாடு சீரழிந்து சரிந்து கொண்டிருந்தது; தமிழர் பண்பாட்டுக்கு எழுச்சியூட்ட வேண்டிய தேவை இருந்தது; இவற்றிற்கு ஈடு செய்யம் வகையில், பல்லவர் காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் நடத்திய சமயப் பண்பாட்டு புரட்சியை தனக்குக் கருவியாகக் கொண்டு வரலாற்றுக் காப்பியமாக இதனைப் படைத்துள்ளமை புலனாகும். வடமொழியைப் பல்லவரும் சோழரும் ஆட்சிமொழியாகக் கொண்டு அதற்கு ஏற்றம் கொடுத்திருந்தனர். 'களப்பிரருக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்த தமிழ்மொழியும், தமிழ் நாகரிகமும் எழுந்திராமல் இருப்பதைக் கண்டு, இத்தமிழ்ச் சாதியைத் தட்டி எழுப்பவும், இதற்குப் பகையாய் இருப்பவர்களிடம் போரிடவும் தோன்றிய புரட்சி வீரராகக் காண்கிறார் சேக்கிழார்.
7 ஆம் நூற்றாண்டில் இப்போராட்டத்தை நடத்திப் பிள்ளையார் (சம்பந்தர்) வெற்றிகொண்டிராவிடில், 12 ஆம் நூற்றாண்டில் சைவம் என்பதும், தமிழ் என்பதும் பொய்யாய்க் கனவாய்ப் போயிருக்கும் என்பதைச் சேக்கிழார் நன்றாக அறிந்திருந்தார்' எனப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் கூறுவது ஈண்டு நோக்கத்தக்கது (1999:பக், 137).

11 ஆம் நூற்றாண்டில் இராஜராஜசோழன் தனது அரச அதிகாரத்தையும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் ஆட்பலத்தையும் பயன்படுத்தி, பழந்தமிழ் ஏடுகளைத் திரட்டி, இலக்கியங்களைப் பாதுகாத்தமை ஈண்டு நினைவுகொள்ளத்தக்கது. அதுபோன்றே, 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், தான் கொண்டிருந்த தமிழ் உணர்வுக்கும், சைவ மதப்பற்றிற்கும் ஏற்றம் கொடுக்கும் நோக்குடன், தமிழ் நாடு முழுவதும் தகவல்களை நேரடியாகச் சென்றும், தமது அமைச்சின் அதிகாரப் பின்னணியில் அதிகாரிகள், உதவியாளர்கள் மூலமாகவும் சைவத்திற்கும் தமிழ் மொழிக்கும் சேவைகள் செய்த தொண்டர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் தேடித்தேடிச் சேகரித்தார். இத்தகவல்களில்; சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்த்தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி, மற்றும் மூவர் தேவாரங்கள், காரைக்கலம்மையார் பாடல்கள், சேரமான் பெருமாள் நாயனார் பாடல்கள் என்பனவும் அவரது காப்பியத்திற்குரிய மூலநூல்களாகக் கிடைத்தன. சேக்கிழார் இத்தொண்டர்களின்; வரலாற்றையும், அவர்களுடன் தொடர்புடைய சமய – சமூக – அரசியல் வரலாற்றுச் செய்திகளையும் திரட்டிப் பாதுகாத்தார். தொண்டர்கள் வரலாறும் அவர்களோடு தொடர்புடைய சமய – சமூக – அரசியல் வரலாறுகளும் இக்காப்பியத்தில் தரப்பட்டிருப்பதால், தமிழர் பண்பாட்டு; வரலாறு கூறும் முதல் நூலாக இப்பெருங்காப்பியம் அமைந்துள்ளது.

பெரியபுராணம்:
12 சருக்கங்களாக அமைந்து, 4286 பாடல்களில் 63 தனிஅடியார்களதும், 9 தொகை அடியார்களதும் வரலாற்றைக் கூறுகின்றது. இவற்றில் சம்பந்தருக்கு மட்டும் 1256 பாடல்கள் ஒதுக்கியள்ளமை ஆராய்ந்து அறிய வேண்டியதாகும்.

காப்பிய இலக்கணம் கூறும் தண்டியாசிரியர். 'காப்பிய நிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று, ஏற்புடைத்தாகி முன்வரவியன்று நாற்பொருள் பயக்கு நடைநெறித்தாகித் தன்னிகரில்லாத தலைவனை யுடைத்தாய் .........' எனப் பலவகையான இலக்கணக் கூறுகளை காப்பிய இலக்கணமாகத் தருகின்றார். இதன் அடிப்படையில்
12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தோன்றிய இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுத்து சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாவதி, குண்டலகேசி என்பனவற்றை ஐம்பெருங் காப்பியங்களாகவும், சூளாமணி, நீலகேசி, உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், யசோதரகாவியம் ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்களாகவும் வகுத்துக்கொண்டனர். ஆனால் இதன் பின்னர் தோன்றிய பெரியபுராணம், கம்பராமாயணம், கந்தபுராணம் என்பனவற்றுக்குரிய தகுதியைப் பின்னர் வந்த இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருத்திற்கொள்ளாமை பெருங்குறையே. எவ்வாறாயினும் பெரியபுராணம் தமிழரின் தேசியப் பெருங் காப்பியம் எனக் கொள்ளுதல் சாலவும் தகும்.

சேக்கிழாரின் காவியத் தனித்துவச் சிறப்புப் பற்றி நோக்கும்போது, முன்னைய காபியங்களில் காப்பியத் தலைவன் / தலைவி; இடம்பெற, பெரியபுராணத்தில் காப்பியத் தலைமைப் பண்பாகத் - தொண்டு – அமைகின்றது. சைவத் தொண்டர்கள் (திருக்கூட்டத்தினர்) பல்வேறு தியாகங்களின் மத்தியில் கடவுள் பக்தி என்ற அடிப்படையில், மக்களுக்கும் சைவத்திற்கும் தமிழ்மொழிக்கும் செய்த அரும்பெருந் தொண்டுகளை, அப்பெருந் தொண்டுகளில் சாதனை புரிந்த வீரர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை சமூச – சமய – அரசியல் பின்னணிகளுடன் தொண்டர்சீர் பரவும் வகையில் வரலாற்றுக் காப்பியமாக சேக்கிழார் பாடியுள்ளார். பெரியபுராணத்தின் மகிமையை அறிந்து, அதனைப் பாடிய சேக்கிழாரைப் பாராட்டும் வகையில் உமாபதிசிவாச்சாரியார் 'சேக்கிழார் புராணம்' இயற்றினார், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை - சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடியதோடு, 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' என்று ஏற்றமும் அளித்தார். திரு. வி.கலியாணசுந்தரனார்: 'பெரியபுராணம் ஓர் அன்புக் கடல்' என வருணித்தார்.

சைவத் தமிழருக்கு திருமுறை தந்த தேவார முதலியாக - நாயனாராக சம்பந்தர் தென்படுகிறார். ஆனால் சேக்கிழாரோ, சம்பந்தரை சைவம் - தமிழ்மொழி; - பண்பாடு ஆகியவற்றைப் பேணிக்காத்த ; போராட்டத் தலைவனாகவே; சித்திரிக்கின்றார். சம்பந்தர் சமயப் போராட்டம் செய்யவே பிறந்தார் என்றே சேக்கிழார் பாடுகிறார்:

'திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல
அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக'...
( மேலது
24);

களப்பிரரின் ஆட்சியில் அழிந்த சைவத்தை எழுச்சிபெறச் செய்த போர்த் தளபதியாகவே சம்பந்தர் பெரிய புராணத்தில் படைக்கப்பட்டுள்ளார். சம்பந்தரும் அப்பரும் சேர்ந்து பல்லவரையும் சமண பௌத்தரையும் வடமொழியையும் எதிர்த்துப் போராடிய செயல் வீரர்கள் என்பதைப் பெரியபுராணம் நன்றாகவே பாடியுள்ளது.

இது போன்றே, தமிழ்மொழியைப் பாதுகாத்து ஏற்றம் கொடுக்கும் முயற்சியையும் சேக்கிழார் மேற்கொண்டுள்ளார். சேக்கிழார்
150 க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழின் பெருமை பேசுகிறார்;. சம்பந்தர் தாம் பாடிய 4000; பாடல்களில் 500 க்கும் மேற்பட்ட பாடல்களில் 'நற்றமிழுக்கு இன்துணை ஞானசம்பந்தன்...' என்றவாறு, தமிழின் பெருமையைக் காக்க வந்த தலைவன் என ஆணையிடுகிறார். சம்பந்தர் வடமொழி வேதத்தையும் பிராமணரையும் எதிர்த்துப் பாடினார். வேதத்திற்கு எதிர்பிரச்சாரமாக, நமச்சிவாய மந்திரத்திற்கு முதன்மை அளித்தார்.


'காதலாகிக் கசிந் கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
(சம்பந்தர்)

இதுபோன்றே, சுந்தரரையும் தமிழ் மொழிப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் காட்;டுகிறார் சேக்கிழார்.

1) 'மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை, நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்'
(தடுத்தாண்ட புரா.
70)

புரட்சி வீரர்களாகவே அடியார்களைச் சேக்கிழார் படைத்துள்ளார். அடியார்கள் அனைவரும் சமய – சமூகப் போராட்டம் நடத்திய வீரர்கள் என நிறுவுவதே சேக்கிழாரின் காவிய நோக்கமாகும். சம்பந்தர் தன்னைத் தலைவனாகவே கருதுகிறார் - மக்களுக்குத் தன்னை புகலி வேந்தர். காழி வேந்தர், காழியர் கோன், தமிழ் நாதன்... என அறிமுகப்படுத்தி நம்பிக்கை ஊட்டுகிறார். மதுரையில் இடம்பெற்ற அனல்வாதம் -- புனல்வாதம் - மன்னன் சமணரைக் கழுவேற்றல் முதலான் செய்திகளும்,

'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்ட தனோடு நேர்:
(குறள்:
550); என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப நடைபெற்றுள்ளதாக சேக்கிழார் கூறுகின்றார்.

பல்லவர், சோழர் முதலியோரின் அரசியல் வரலாற்றைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஆயினும் அடியார்களின் வரலாற்றுடன் தொடர்புடைய மன்னர் பற்;றிய செய்திகள் குறைவாகவே உள்ளன. அந்த வெற்றிடத்தைப் பெரியபுராணம் நிரப்பும் வகையிலான பல அரசியல் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது.
11 மன்னர்களின் வரலாறு இக்காப்பியத்தில் விரிவாகக் கூறப்படுகிறது: சேரமான் பெருமாள் நாயனார் (சேரர்), கோச்செங்கணான் - புகழ்ச்சோழன் (சோழன்), நின்றசீர் நெடுமாறன் (பாண்டியர்), ஐயடிகள் காடவர்கோமான் - கழற்சிங்கன் (பல்லவர்), மெய்ப்பொருள், இடங்கழியார், நரசிங்கமுனையார், பெருமிழலைக்குறும்பர் (சிற்றரசர்கள்), கூற்றுவர் (களப்பிரர்)ஆகிய அரச வரலாற்றுச் செய்திகள் பெரியபுராணத்தில் இடம்பெறுகின்றன. 'களப்பிரர் சைவத்தை எதிர்த்தவர்கள், தமிழ்ப் பண்பாட்டை விரும்பாதவர்கள். தமிழை எதிர்த்தவர்கள் - தமிழ்மொழி வளர்ச்சியைத் தடை செய்தவர்கள்.' அதனால் சேக்கிழார் அவர்களைப் பற்றிப்பெரிதும் குறிப்பிடவில்லை'.(அ.ச.ஞா:1999:பக்.3)

பெரிய புராணத்தில் சமய வரலாறு - சமூக வரலாறு - தனிமனித வரலாறு - தமிழர் பண்பாட்டு வரலாறு எனப் பல வரலாற்றுச் செய்திகள் இடம்பெறுகின்றன. பக்தி இயக்கம் எத்தகைய சமய சமூகப் பின்னணிகளை எதிர்த்ததோ, அதே சமூகப் பின்னணிகளையே சோழர் காலத்தில் பெரியபுராணமும், சைவசித்தாந்த இலக்கியங்களும் எதிர்த்தன. சோழப் பேரரசு தனது நிர்வாகத்தின் மையமான கோயில்களிலும் சாதிகளின் கட்டமைப்பைப் பேணியது. பெரியபுராணத்திலே
12 அந்தணர்கள், 6 வணிகர், 13 வேளாளர், 4ஆதிசைவர், மற்றும் பரதவர், இடையர், வேடர், குயவர், பறையர் சாலியர், பாணர், சாணார். மாமாத்தியர் என பத்து வகையான சாதிகள் பற்றிய செய்திகள் கூறப்பட்ட போதிலும் சாதிகளைச் சாடும்நிலையே காணப்படுகின்றது. அவ்வகையில் பெரிய புராணம் சமூகப் புரட்சி வரலாற்று நூல் எனக் கொள்ளலாம்.

சாதி சமத்துவப் புரட்சி செய்கிறார் சேக்கிழார். உயர் சாதியான திருநீலநக்க நாயனார் வீட்டில் சமூக அடிமட்டத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணரும் மனைவியும் தங்கும் கதை முக்கியமானது. மேலும், சோழர் காலத்திலே பிராமணர் ஆதிக்கம் - பிராமணர் அல்லாதோர் ஆதிக்கம் என்ற இருநிலைப்பட்ட சமூகச் செல்நெறிகளை அவதானிக்கலாம். இப்பாதிப்பு பெரியபுராணத்திலே தெளிவாகக் காணப்படுகிறது, பெரியபுராணமும் அக்காலத்தில் தோன்றிய சைவ சித்தாந்த நூல்களும் சாதியம் பற்;றிய தரவுகளைத் தருகின்றன. ஆனால் சாதியால் வரும் தீட்டு உடலுக்கே உரியது. ஆன்மாவுக்கு உரியதல்ல என்ற வாதம் நிலைபெற்றிருந்தது. இதனை பெரியபுராணத்தில் இடம்பெறும் பல நாயன்மார்களின் வரலாறு நன்கு சான்றுபடுத்துகின்றன. பெரியபுராணத்தில் சைவசித்தாந்தம் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற
4 வழிபாட்டு மார்க்கங்களும், அதனாற் பெறக்கூடிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற 4 முத்திநிலைகளும் விளக்கப்படுகின்றன. இம்முத்தி நிலைகளிலும்கூட சமத்துவம் காணப்படவில்லை என்பதை சேக்கிழார் காட்டுகிறார். பெரியபுராணம் கூறும் நாயன்மார்களிற் பலர் கோயிலுக்குட் புகமுடியாதுள்ளனர். ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த சைவ சித்தாந்திகள் 'சாதிகள் உடலோடு அழியும்' எனச் சமாதானம் கூறினர்.

சோழர்கால அரசியல் முறைமையிலும் சமூக அமைப்பிலும் 'அடிமை முறைமை' பேணப்பட்டது. இதனைச் சுந்தரர் வரலாறு கூறும் தடுத்தாண்ட புராணம் நன்கு விளக்குகின்றது. இதுபற்றி பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் வருமாறு கூறுவர்:-'அன்றைய சனத்தொகையில் குறிப்பிடத்தக்க அளவு பகுதி - சிறப்பாக விவசாயத் தொழிலாளர் மத்தியில் கணிசமானோர், அடிமை வாழ்க்கைக்கு அணித்தான நிலைமையில் வாழ்ந்தமையை அக்கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. மக்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு ஒரு புறமிருக்க, அவர்களைப் பொருள்கள் போல விற்று வாங்கும் முறை -, தனிச்சொத்து உரிமையிலேயே சகிக்க முடியாத வழக்கமாக – அன்று நிலவியது என்பதற்குப் பல கல்வெட்டுக்களும் சான்று தருகின்றன'. சோழர் காலத்திலே சமூக அடிநிலை மக்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள் என்பதை ஆதனூர் சேரி பற்றிய செய்திகள் சான்றுபடுத்துகின்றன.
சோழர் காலக் கல்வெட்டுக்களில் அக்கால நீதி நிர்வாக முறை பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும் பெரியபுராணத்திலே சுந்தரர் திருமணத்தில் ஏற்பட்ட வழக்கத் தொடர்பாகக் கூறப்படும் செய்திகள் மிக முக்கியமானவை மட்டுமன்றி, அக்கால நீதி நிர்வாகத்துடன் ஒத்திருத்தலையும் கண்டறிதல் பொருத்தமாகும்.

'ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோலை மூலஓலை
மாட்சியிற் காட்ட வைத்தேன்' என்றனன் மாயை வல்லான்.


                   (தடுத்தாட்கொண்ட புராணம் –
56)

சாட்சி, ஆவணம், ஆட்சி என்ற மூவகைப்பட்ட நீதிமன்ற வழக்க விசாரணை நெறிமுறைகள் கூறப்படுதல் நோக்கத்தக்கது. உலகில் நீதி நிலைக்க வேண்டும் என்ற பரந்த நோக்குடன் மனுநீதிச் சோழன் வரலாறு பற்றியும் சேக்கிழார் பாடுகிறார். மேலும், சடங்குகள், பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள், தொழில்முறைகள். பலதாரமணம் - கலப்புத் திருமணம், ஊர்வரலாறு முதலான பல பண்பாட்டுச் செய்திகளும் பெரியபுராணத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

நிறைவாக, 'பெரியபுராணம் சைவசமய அடியார்களின் வரலாறுகளைப் பேசும் நூல் என்றுதான் இதுவரை கருதப்பெற்று வந்தது.
7ஆம் நூற்றாண்டில் எழுந்த புரட்சியின் முடிவாக அதனை வலியுறுத்தும் காப்பியமாய், தமிழர்களைத் தட்டி எழுப்பும் அறநூலாய்த் தோன்றிற்று என்பதையும், இந்நூல் தமிழர் அனைவரும் போற்ற வேண்டிய நூல் என்பதையும் தமிழர்கள் ஏனோ நினைக்க மறந்து விட்டனர்!' என அ.ச.ஞானசம்பந்தன் (1999:பக்.08) கூறுவதைத் தமிழ் உலகு ஆழ்ந்து நோக்குதல் பயனளிப்பதாகும்.

துணை நூல்கள்:

 • 1. பெரியபுராணம் (மூலம்) திருப்பனந்தாள் மடத்துப் பதிப்ப ஈ1995
   

 • 2. பேராசிரியர் அ. சு. ஞானசம்பந்தன்- பெரிய புராணம் ஓர் ஆய்வு, கங்கை புத்தக நிலையம், 1999
   

 • 3. முனைவர். மா. இராசமாணிக்கனார் -பெரியபராண ஆராய்ச்சி, பாரி நிலையம், சென்னை,
  பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம்
  தமிழ்த்துறைத் தலைவர்
  அண்ணாமலை கனடா வளாகம்