தேய்புரி பழங்கயிற்றினார்

முனைவர்.இரா.குணசீலன்


யிர்களின் படிநிலை வளர்ச்சியில் உயர்நிலை அடைந்தவன் மனிதன். மனம் இருப்பதாலேயே மனிதன் என்றழைக்கப்பட்டான். இந்த மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

எந்த வேலை செய்தாலும் இந்த மனம் இடையில் வந்து பேச ஆரம்பித்துவிடுகிறது. மனம் சொல்வதை அறிவு கேட்பதில்லை. மனத்துக்கும் அறிவுக்கும் நடக்கும் இந்த விவாதத்தை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்திருப்போம். சில நேரங்களில் அறிவு, மனத்தை வென்றுவிடுகிறது சில நேரங்களில் மனது அறிவை வென்றுவிடுகிறது..

மனதுக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தைத் தள்ளி நின்று பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா....?

இங்கு ஒரு தலைவன் தன் மனதுக்கும்,  அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைத் தள்ளி நின்று பார்க்கிறான்.

தன்னை ஒரு பழங்கயிறாகவும் மனம், அறிவு ஆகிய இரண்டையும் இரு யானைகளாகவும் எண்ணிக்கொள்கிறான். பழமையான கயிறாகிய தன்னை இருபுறமும் யானைகள் பற்றி இழுக்கின்றன. கயிறாகிய தான் எப்போது வேண்டுமானாலும் அறுந்து போகலாம் என்பரே தலைவனின் நிலையாகவுள்ளது.

இப்படி ஒரு உணர்வை நற்றிணைப் பாடல் பதிவு செய்துள்ளது.

'புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே'


284 பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்


பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள்தேடச் சென்றிருக்கிறான். அவன் மனமோ உடனே சென்று தலைவியைப் பார்...!
உனது பிரிவை அவள் தாங்கமாட்டாள்..!
என்கிறது.
அறிவோ பொருள் தேடிய பின்தான் செல்ல வேண்டும் என்றது.
மனமும் அறிவும் பேசிக்கொள்ளும் உரையாடலை தள்ளிநின்று தலைவன் பார்க்கிறான்.

தாழ்ந்த இருண்ட கூந்தலையும், மையுண்ட கண்களையும் கொண்ட தலைவியின் மீது கொண்ட அன்பால் என் நெஞ்சம் அவளிடம் செல்ல வேண்டும் என்கிறது.!
அறிவோ தொடங்கிய செயலை முடிக்காமல்ச் செல்வது அறியாமை, இகழ்ச்சி என்கிறது.!

நெஞ்சம் அறிவு என்னும் இரு யானைகளும் தேய்ந்த பழமையான கயிறான என்னை எப்போது வேண்டுமானாலும் அறுத்துவிடலாம்...!
என்று எண்ணிக் கொள்கிறான்.

இப்பாடலில் தலைவனின் இருவேறு மனநிலையை இரு யானைகளாகவும், அதனால் ஏற்பட்ட தன்னிலையை தேய்ந்த பழங்கயிற்றோடும் ஒப்பிட்டமை எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது.

இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில். இவ்வழகிய உவமையே புலவருக்குப் பெயராகிவிட்டது. தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில் இப்புலவரும் தேய்புரி பழங்கயிற்றினார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்




gunathamizh@gmail.com