உளவியல் அடிப்படையில் அமைந்த குறுந்தொகைப் பாடல்

முனைவர் இரா.மோகன்

'சங்க இலக்கியத்திற்குப் பிறிதொரு பெயர் சூட்டுக என்று கேட்டால், தயங்காமல் 'உளவியல் இலக்கியம்' எனக் குறிப்பிடலாம். அகத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு நூறும் புறத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு எழுபத்தைந்தும் 'உளவியல்' பற்றியனவே ஆகும். ஏதேனும் ஒரு மனநிலையை மட்டுமே அல்லது அம் மனநிலை விளைவுக்குரிய சூழலை மட்டுமே அவை பாடுபொருளாய்க் கொண்டவை' (சங்க இலக்கிய ஒப்பீடு: இலக்கியக் கொள்கைகள், ப.212) என மொழிவார் மூதறிஞர் தமிழண்ணல். அவரது கூற்றுக்கு நல்லதோர் உதாரணமாய் விளங்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்றினை ஈண்டுக் காணலாம்.

நல்ல குறுந்தொகையில்
75-ஆம் பாடல். படுமரத்து மோசிகீரனார் இயற்றியது; தலைவி கூற்றாக அமைந்தது. 'தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது' என்பது அப் பாடலின் துறைக் குறிப்பு.

பிரிந்து சென்ற தனது தலைவனின் வரவைப் பலமுறை எதிர்பார்த்து ஆர்வத்தோடும் ஏக்கத்தோடும் காத்திருக்கிறாள் ஒரு தலைவி. தலைவனோ திரும்பி வந்த பாடில்லை. தலைவிக்குச் சலிப்பு தோன்றுகின்றது; கவலை மிகுகின்றது. இந்நிலையில் தலைவனது வரவைப் பற்றிக் கூறுகிறான் ஒரு பாணன். தலைவி அப் பாணனிடம் வினவுவதாக அமைந்த குறுந்தொகைப் பாடல் இதோ:

'நீகண் டனையோ? கண்டார்க் கேட் டனையோ?
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ!
வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்!
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே?'


'பாணனே! நம் தலைவர் திரும்பி வருவதை நீயே உன் கண்ணால் நேரில் பார்த்தாயா? அல்லது அவர் திரும்பி வருவதைக் கண்டவர்கள் யாராவது கூறக் கேள்விப்பட்டாயா? அங்ஙனம் பிறர் சொல்லக் கேட்டாய் என்றால், யார் வாயிலாகக் கேட்டாய்? உண்மை எது என இரண்டில் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். ஆதலின், பதில் சொல்வாயாக. அப்படி நீ சொன்னால், வெண்ணிறத் தந்தங்களை உடைய யானைகள் சோணை ஆற்றில் படிந்து விளையாடும் பொன் மிக்க பாடலிபுத்திரம் என்னும் நந்தரது தலைநகரத்தையே பரிசிலாகப் பெறுவாயாக!' என்பது இப் பாடலின் தெளிவுரை.

'தலைவனுடைய வரவைப் பலகால் எதிர்பார்த்தும் வாராமையாற் சலிப்புற்றனளாதலின், பாணன் மொழியை ஐயுற்று, நீ கண்டனையோ-வென்றும், கேட்டனையோவென்றும், யார் வாய்க் கேட்டனையென்றும் வினவினாள். இங்ஙனம் அடுத்துப் பலமுறை கேட்டது தலைவன் வரவினிடத்து அவளுக்குள்ள ஆதரவைப் புலப்படுத்தியது. தான் ஆற்றியிருத்தற் பொருட்டுப் பலகாலும், வருவர் வருவரெனத் தோழி முதலியோர் கூறியதைக் கேட்டுக் கேட்டு அவர்கள் மொழிகளில் உறுதி பெறாதவளாதலின் அவர் கூறினரோ-வென்னும் ஐயுறவினால் 'யார் வாய்க் கேட்டனை?' என்றாள்' (குறுந்தொகை மூலமும் உரையும், ப.
153) என இப் பாடலுக்கு வரைந்த உரை விளக்கத்தில் குறிப்பிடுவார் 'பதிப்பு வேந்தர்' உ.வே.சாமிநாதையர்.

நீண்ட நாட்களாக நடக்காதா என்று நாம் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று, விரைவில் நடக்க இருப்பதாக – நடந்து விட்டதாக – யாரேனும் ஒருவர் வந்து நல்ல செய்தியைச் சொன்னால், அந்தச் சூழலில் நாம் எப்படி எல்லாம் எதிர்வினை ஆற்றுவோம்? முதலில் அந்தச் செய்தி உண்மையானது தானா அறிந்து கொள்ள நம் மனம் விரையும்; அடுத்து, செய்தி சொன்னவரிடம் பலமுறை மறித்துக் கேள்விக் கணைகளைத் தொடுத்து, கிடைத்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முனைப்புடன் ஈடுபடும். தலைவரது வருகையைக் குறித்துக் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது தான் உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில், நல்ல செய்தி சொன்னவருக்கு எதையாவது பரிசிலாகத் தர வேண்டும் என நம் மனம் நன்றிப் பெருக்கோடு நினைத்துப் பார்க்கும். படுமரத்து மோசிகீரனார் பாடிய ஐந்து வரிக் குறுந்தொகைப் பாடலில் இந்த உளவியல் பாங்கே அழகுற வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.

'பொய்யாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே!' எனப் பட்டினப்பாலையில் வரும் தலைவன் கூறுவது போல்,வாழ்த்துவது உணர்ச்சியின் உச்சநிலை ஆகும்.

'முன்னிரு வரிகளில் மகிழ்ச்சிக்குக் காரணமான செய்தி உண்மை தானா என அறிந்து கொள்ளத் துடிக்கும் உள்ளம் சித்திரிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வரிகளில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. அச் செய்தி சொன்னவர்க்குப் பாடலிபுத்திர நகரத்தையே கொடுத்துவிடலாம் என்று உள்ளம் ஓங்கிப் பறக்கிறது. இருப்பினும் 'செய்தி உண்மை தானா?' என்ற ஐயம் இன்னும் விட்டுப் போகவில்லை. 'யார் வாய்க் கேட்டனை?' என்று அது கேட்கிறது. யாரேனும் பொய் சொல்லியிருந்தால்...? அதனால் தான் சொன்னவர் யார் என்று கேட்டு முடிக்கிறாள். ஐந்து வரிக்குள் உறுதிப்படுத்த விழையும் மனத்தையும், உறுதிப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியுற்றுப் பரிசிலை நீட்டும் மனத்தையும், மீண்டும் உண்மை தானா என்று ஆராய்ந்து நன்கு உறுதிப்படுத்தத் தாவும் மனத்தையும் இவ்வாறு மாறி மாறி பாட்டுக் கட்டமைப்புடன் இணைத்துப் பாடியுள்ள பாங்கு உன்னற்பாலது. இத்தகைய பாடல்களை ஏன் 'உளவியல் அடிப்படைப் பாடல்கள்' என்று கொள்ளக்கூடாது?' (சங்க இலக்கிய ஒப்பீடு: இலக்கியக் கொள்கைகள், ப.215) என்னும் மூதறிஞர் தமிழண்ணலின் கருத்து இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

உளவியல் பாங்கினைத் தவிர, உற்று நோக்கி அறிய வேண்டிய பிறிதொரு சிறப்பும் இக் குறுந்தொகைப் பாடலில் உள்ளது. இதில் குறிப்பிடப்படும் சோணை என்பது ஓர் ஆறு. இதன் வடகரையில் இருப்பது பாடலிபுத்திரம் என்னும் நகரம். பழங்காலத்தில் மகத நாட்டின் தலைநகரமாக இது இருந்தது. பாடலி எனவும் இது வழங்கப்படும். பொன்னால் சிறப்புப் பெற்ற இந் நகரம் பற்றிய செய்தி அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும்
(265: 4-6) இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீரிய உளவியல் பாங்கும், அரிய வரலாற்றுக் குறிப்பும் ஒருசேரப் பெற்றுப் பொலியும் அழகிய குறுந்தொகைப் பாடல் இது எனலாம்.

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021