சங்க இலக்கியத் தொன்மங்களில் 'செல்வி'

முனைவர் இரா.செல்வி


முன்னுரை:

ன்மம் என்பது பெரும்பான்மையும் புராணக்கதையைத்தான் குறிக்கின்றது.Mith என்ற சொல்லுக்குப் புராணக்கதை, மக்கட் பழங்கதை இயற்கையிறந்த நிகழ்ச்சிகள், இயற்கை தொடர்பான செய்திகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிர்கள் பற்றிய கதைகள் எனத் தொன்மம் வரையறைச் செய்யப்பட்டுள்ளது. சங்கத் தமிழில் வடவரின் தொன்மம், தமிழருக்கேயுரிய தொன்மம், வடவர் தொன்மமும் தமிழர் தொன்மும் கலந்த தொன்மம் எனத் தமிழில் தொன்மம் மூன்று நிலையில் தொன்மங்கள் நிலவுகின்றன. பெண்ணிய நோக்கில் ' ஆற்றல் மிக்க பெண் தெய்வம் (கணவன் இல்லாத பூர்வீகத்தாய் தாய்) என்ற நிலையில் உலகலாவிய பெண்மையத் தொன்மமும் விளங்குகிறது. அந்தத் தொன்மத்தின் நாயகியாகச் 'செல்வி' என்னும் தாய்த் தெய்வம் திகழ்கிறாள். ஆகவே இக்கட்டுரை,

  •  தமிழரின் பெண்மயத் தெய்வம் செல்வி

  •  ஆண்மையத் தொன்மக்கலப்பும் செல்வியும்

  •  தொன்மைநாகியாய்ச் செல்வி.

ஆகிய தலைப்புகளில் செல்வி என்னும் பெண்மையத் தொன்மம் சங்ககால இலக்கியங்களில் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அத்தொன்மம் அடைந்த மாற்றத்தையும் ஆராய்கிறது.

தமிழரின் பெண்மயத் தெய்வம் செல்வி

சங்கத்தமிழரின் பெண்மையத் தெய்வமாய்ச் செல்வி விளங்குகின்றாள.; இத்தெய்வம் காடுறை தெய்வமாக, மலையுறை தெய்வமாக, கடல் உறை தெய்வமாக மொத்தத்தில் இயற்கை அன்னையாக விளங்கியுள்ளாள்.

'ஓங்குபுகழ் கானமர் செல்வி' (அகம்
345)

'கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு'(அகம்
370)

' விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலி' (குறுந்
218)

'பெருங்காட்டுக் கொற்றி' (கலித்தொகை
89)

சூலி என்ற பெயரும் கொற்றி (கொற்றவை) என்ற பெயரும் செல்வியைக் குறிக்கும் பிற பெயர் சொற்களாகும். மேலும் துணங்கையஞ் செல்வி(பெரும்பாணாற்றுப்படை
(459) என்ற பெயரும் நிலவுகிறது. செல்வி என்ற சொல் கன்னித் தெய்வத்தைக் குறிப்பதாகக் கருத வேண்டும். செல்வி என்ற சங்ககாலப் பெயருக்கு நேராகப் பின்னர் குமரி, கன்னி என்ற சொற்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.செல்வி என்ற பெயர் செல்லி என்று மாறி செல்லியம்மன் முதலிய தாய்த்தெய்வப் பெயர்களில் இன்றும் வழங்குகிறது. எனகிறார் பி.எல் சாமி அவர்கள் ( தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு ப.58).

இதே கருத்தை செல்வி திருச்சந்திரனும் தனது நூலில் வலியுறுத்தியுள்ளார் செல்வி என்ற அடைமொழி மூலம் கன்னித்தன்மை திரும்பத் திரும்ப உணர்த்தப்படுகின்றது. தாய்த்தெய்வத்தின் பாலியல் தூய்மை பற்றிய படிமம் இதன் மூலம் பேணப்படுகிறது என்கிறார்(தமிழ்வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு ப.
4)

தாய்த் தெய்வம் இவ்வாறு கன்னித்தெய்வமாகப் போற்றும் மரபு உலகளாவிய மரபு. ' ஆற்றல் மிக்க பெண் தெய்வம் கணவன் இல்லாத பூர்வீகத்தாய்' எலலாப் புராணத் தொகுதிகளையும் தன் முழுக்கட்டுப் பாட்டில் வைத்திருந்தாள். இது உலகம் தழுவிய ஓர் உண்மை என்பதை நவீனகாலக் கற்றறி; வாளர்கள் ஓத்துக்கொண்டுள்ளனர்'(ரோஸலின்ட் மைல்ஸ், ராதாகிருஷ்ணன் (த.ஆ) உலகவரலாற்றில் பெண்கள் ப
.35)

இந்த உலகம் தழுவிய மரபு தொன்மமாய்ச் சங்கப்புலவர் சிந்தையிலும் விளங்கி அவர் தம் பாடல்களிலும் வெளிப்பட்டுள்ளது. ஆதிப் பழங்குடி வழிபாட்டுத்; தெய்வமான செல்வி போகம் இல்லாத புனிதத் தாய்மையைக் கொண்டவள். உடல்பரமாக இல்லாததொரு தாய்மைப் பண்பே பெண்ணின் உன்னத பிம்பமாகக் கருதப்பட்ட உயர்மரபு, மனித குலத்துக்குத் தாய்ச் சமுதாய காலத்துத் தாய்ம்மையிலிருந்துதான் உதித்திருக்கமுடியும.;; இந்த மரபை தந்தையாண் மரபினர் வீழ்த்தியுள்ளனர் என்ற ராஜம்;கிருஷ்ணனின் கூற்றும் ஈண்டு நோக்கத்தக்கது. (காலந்தோறும் பெண். ப
.26)

செல்வி காட்டுக்கு உரிவளாய் மலைக்கு உரியவளாய் கடலுக்கு உரியவளாய் விளங்க, தொல்காப்பியர்

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே'


                                                    (தொல். பொருள். அகம்
.5)

என்று நிலத்தெய்வங்களாக ஆண்தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார்.
 
திருமாலுக்கு முன்பு காட்டுக்கு உரிய தெய்வமாக (கானமர் செல்வி) முருகனுக்கு முன்பு மலைக்கு உரிய தெய்வமாக (சூலி) வருணனுக்கு முன்பு கடல் அன்னையாக (கடல்கெழு செல்வி) என்று நிலத்தெய்வமாய்ச் தாய்த்தெய்வம் செல்வி விளங்கியுள்ளதைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர.; 'தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே' என்று தொன்மத்துக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் ஆதி தொன்மமான பெண்மையத் தொன்மத்தை விடுத்துப் பின்னால் தோன்றிய ஆண் தெய்வங்களைக் கூறியிருப்பது அவர் காலத்தில் சங்கத் தமிழகத்தில் ஆரியத் தொன்மம் ஏற்படுத்தியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கத்தைப் புலப்படுத்துகிறது. இந்த ஆரிய ஆண்மையத் தொன்மம் முற்றிலும் பெண்மையத் தொன்மத்தை வுPழ்த்திவிடவில்லை. பாலை நிலத்தின் தொன்ம நாயகியாய்க் கொற்றவை போற்றப்பட்டாள். தமிழரின் தொன்மைப் பெண்மையத் தெய்வமாய் விளங்குகிறாள்.


ஆண்மையத் தொன்மக் கலப்பும் செல்வியும்

'வெண் துரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற
மைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு
துணங்கையஞ் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு
தண்டா,ஈகைநின் பெரும் பெயர் ஏத்தி'


                                                  (பெரும்பாணாற்றுப் படை:
457-460)

இப்பாடல் வரிகளில் செல்வி முருகனின் அன்னை எனச் சித்திரிக்கப்பட்டுள்ளாள்.

'ஆல்கெழு கடவுட் புதல்வ,மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி'


                                              (திருமுருகாற்றுப்படை:
255-259)

இந்தப் பாடல் வரிகளில் கானமர் செல்வி முருகனுக்கு அன்னையாக மட்டும் அன்றிச் சிவனுக்கு மனைவியாகவும் சித்திரிக்கப்படுகின்றாள்.

'முருகன் குறிஞ்சியின் திணைத் தெய்வமாக இருந்து மருதநிலச் சமூக வளர்ச்சியால் எழுந்த அரசு உருவாக்கச் சூழலில் வெற்றித் தெய்வமாக மாறிய சூழலில் வெற்றித் தெய்வமான கொற்றவையுடன் இணைத்துப் பேசப்படுகிறான்.தொண்டைமான் இளந்திரையினைப் பற்றிய பெரும்பாணாற்றுப் படையில்தான் கொற்றவை (துணங்கையஞ் செல்வி) மகனாய்ச் சுட்டப்பெறுகிறான். மேலும் அயிரை வழிபாடு செல்வாக்குப் பெற்றிருந்த (பெரும்பாணாற்றுப்படைக்கு முற்பட்ட) முன்பழந்தமிழ் இலக்கியக் காலங்களில் முருகன் அயிரையோடு எங்குமே இணைத்துப் பேசப்படாததும் கொற்றவை மகன் என்பது பிற்காலச் சிந்தனை என்பதைக் காட்டுகிறது என்கிறார் பெ.மாதையன். ( வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும்.ப
.74)

காடுகிழாளாகிய கொற்றவைக்கு உரிமையாக இருந்த மலைக் காடுகளின் உரிமை மருத நில ஆண்வழிச் சமூக ஆதிக்கத்தில் முருகனின் கைக்கு மாறியிருக்க வேண்டும். அதற்கேற்றப்படி புனையப்பட்ட தொன்மமே முருகனின் பிறப்புப் பற்றிய தொன்மக் கதை.

மேற்கூறிய பெரும்பாணாற்றுப் பாடலில் இடம் பெற்ற அணங்கு என்பது காடமர் செல்வியின் படைகளாகக் கருதப்படுகிறது. இந்த அணங்கு சூர,; சூரரமகளிர,; பேய் என்றும் அழைக்கப்படுகிறது. ஆணாதிக்கப் பார்வையால் இந்த அணங்கு அச்சம்தருபவையாகக் கருதப்பட்டும் அழிக்கப்படவேண்டியவை எனக்கருதப்பட்டும் சூரசம்காரம் என்ற தொன்மப் புனைவும் தோன்றியுள்ளது. இந்த அணங்கு, சூர் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் ஏராளமாக நிலவுகின்றன.அணங்குடை நெடுங்கோடு (அகம்
272) அணங்குடைச் சிலம்பு (அகம்198) அணங்குடைச்சாரல் (பெரும்பாணாற்றுப்படை 493) சூர் மகள் (நற்றிணை 34) சூர் இருந்த புறவு (அகம் 297) - இப்படிப் பட்டியல் நீளும்.பெரும்பாணாற்றுப்படையில் அணங்கு செல்வியைப் புகழ்வதாகத்தான் சித்திரிக்கப்பட்டுள்ளது. செல்விக்கு ஆதரவாக இருந்த அணங்கு என்ற சூர்மகளைத்தான் முருகன் அழித்திருக்க வேண்டும். மலையின் உரிமையை முருகன் கைப்பற்றியிருக்க வேண்டும் என்று யூகிக்க இடம் இருக்கிறது.பரிபாடலிலும் திருமுருகாற்றுப்படையிலும் முருகன் சூரபன்மாவை அழித்து ஒழிப்பதாகப் புராணம் புனையப்பட்டுள்ளது. இது குறித்து பெ.மாதையன் கூறுகையில் முருகனுக்குப் பகைவன் ஒருவன் கற்பிக்கப்பட்டான். திராவிடக்கூறான சூர் முருகனின் எதிரியாய் உருவகிக்கப்பட்டது. சூர்மகள் ஆணாக மாற்றம் அடைந்தாள். இது முருகவழிப்பாட்டில் பின்னாளில் ஏற்பட்டதோர் மாற்றமாகும் என்கிறார்( மேலது. ப.80)

பெண்மையத் தொன்மங்கள் ஆண்மையத் தொன்மங்களால் திரிந்தோ அழிந்தோ தன் மகத்துவம் இழந்திருப்பதற்குச் சான்றுகளாக மதுரை மீனாட்சி அம்மனைச் சொக்கேசன் மணந்த கதையையும் உமைக்கும் சிவனுக்கும் இடையே நடைப்பெற்ற போட்டி நடனம் பற்றிய கதையையும் கூறலாம்.

பண்டைக்காலத்தில் மதுரையில் கடம்பவனத்தில் இருந்த கானமர் செல்வி மதுரை மீனாட்சியாக இருக்க வேண்டும் என்றும் அவளோடு சிவபெருமானுக்கு உறவு கற்பித்த பிற்காலத்தில் சொக்கேசர் மதுரை மீனாட்சியை மணந்ததாகக் கூறுகின்றனர் என்றும் தொன்மங்களை விமர்சிக்கும் பி.எல் சாமி மீனாட்சிக்கு மூன்று மார்புகள் இருந்ததாகக் கூறுவது தாய்த்தெய்வத்தின் செழிப்புத்தன்மையை மிகுத்துக் கூறுவதாகும் சிவனைப் பார்த்ததும் ஒரு மார்பு மறைந்ததாகவும் சிவன் மீனாட்சியை வில் வலியில் வென்றதாகவும் கூறினது தாய்த்தெய்வ வழிபாட்டைப் பின்னர் ஆண் தெய்வ வழிபாடு வென்றதாகப் பெண்ணிநோக்கில் ஆராய்ந்துள்ளார் (மு.நூல் ப
.45-46) சங்க காலத்தில் ஆரியரின் ஆணாதிக்கத் தொன்மம் கலந்து பெண்ணியத் தொன்மங்கள் சிதைந்ததைப் பெண்ணிய ஆய்வாளர்கள் மட்டும் அன்றிச் சமூகச்சிந்தனையாளர்களும்;; தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். ஒரு சமூகத்ததை மாற்றும் வல்லமை தொன்மங்களுக்கு இருக்கிறது. தாய்வழிச் சமூகம் தந்தையாண் சமூகமாக மாற்றம் அடைந்ததற்கும் ஆணாதிக்கம் ஆழமாக வேரூன்றியதற்கும் காரணம் ஆண்மையத்தொன்மங்களே காரணமாகும்.

தொன்ம நாயகர்கள் என்று எதிர்காலத்தைக் கணிக்கும் இயல்பினோர் வீர ஆளுமையுடையோர், புதிய கொள்கைப்படைத்தோர,; ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குத் தலைமையேற்றுத் தம் எழுத்தாற்றலாலோ பேச்சாற்றலாலோ வழிநடத்திச் சென்றோர் எனத் தொன்ம நாயகர்கள் விளங்குகின்றனர் என்று கூறும் கதிர்மகாதேவன் தொன்ம நாயகர்கள் என்று வசிட்டர,; விசுவாமித்திரர், இராமன,; இராவணன், வாலி, அனுமன், கரணன், அருச்சுனன், அகத்தியர,; புத்தர், மகாவீரர் எனப் பட்டியலிடுகின்றார் அதேபோல் தொன்மநாயகிகள் எனச் சீதை, வள்ளி, இலக்குமி, மீனாட்சியம்மை, கொற்றவை ஆகியபெயர்களைக் குறிப்பிடுகின்றார். பன்னெடுங்காலமாக ஆண்தெய்வம் உயர்ந்ததா? பெண்தெய்வம் உயர்ததா? என்ற போராட்டம் நிலவுகிறது. காலப்போக்கில் இப்போராட்டம் தந்திர உத்தியில் வீழ்ச்சி அடையுமாறு சமய அறிஞர்கள் செய்தனர் என்கின்றார் எடுத்துக்காட்டாக உமையொருபாகனைச் சுட்டுகின்றார் சமத்துவத்தை வலியுறுத்தும் அர்த்தநாரீசன் தொன்மம் என்பது சைவசமயப் புரட்சி என்கின்றார் (தொன்மம் இந்தியப் புராண வகைகள் ஒப்பாய்வு ப.
37-38

ஆனால் இத்தகைய ஆண்மையத் தொன்ம உற்பத்தியை ரோசலின்ட் மைல்ஸ,; ராஜம்கிருஷ்ணன், செல்வி திருசந்திரன் ஆகயோர் ஆணாதிக்கத் தந்திரங்கள் எனத் தமது ஆய்வுகளில் விரிவாக ஆராய்ந்துள்ளனர் அணுவிலும் அண்டத்திலும் சுழன்றாடும் சக்தி வடிவை இந்த நாயகக் கடவுளுடன் போட்டி நடனம் ஆடவைக்கும் கதைகள் தோன்றின. ஆணுடன் போட்டி நடனம் ஆடவந்தபோது இறைவி தோற்றுப்போனதாகக் கூறுவது பெண்ணினத்தை அடிமைப் படுத்தும் செயல் என ராஜம்கிருஷ்ணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. (காலந்தோறும் பெண் ப.
28)

தொன்மநாகியாய்ச் செல்வி

ஆண்மையத் தொன்மக்கதைகளால் எந்தப் பாதிப்பும் இன்றி இன்றுவரை கன்னித் தெய்வமாகச் செல்யாண்டியம்மன் விளங்கக்காண்கிறோம். செல்லாண்டி அம்மன்
2000 ம் ஆண்டு பழமை வாய்ந்த தாய்த் தெய்வம் ஆகும். மூவேந்தர்கள் வழிபட்ட காட்டில் உறைந்த இத்தாய்த் தெய்வம் இன்று நாட்டார் சமய வழிப்பாட்டில் சிறு தெய்வ வழிபாட்டு நெறியாக வணங்கப்படுகிறது.

பழமைக்கும் பழமையாய் விளங்கும் கானமர் செல்வியின் தொன்மத்தை வீழ்த்த ஒருபுறம் ஆண்மையத் தொன்மங்கள் தோன்றினாலும் மீனாட்சியாக, உமையாகப் பெயர் சூட்டப்பட்டுப் புதிய புதிய கதைகள் உருவானாலும் இன்னொரு புறம் செல்விக்கே உரித்த பாலியல் தூய்மை என்னும் படிமம் தமிழரின் தொன்ம உணர்வாய் ஆதிப் பழங்குடிகள் முதல் இன்றைய நாள்வiர் தன்னியல்புடன் வாழ்ந்து வருகிறது. இது தமிழினத்தின் அழிக்கமுடியாத மரபாகும்.

'ஓர் இனம் காலங்காலமாக இந்நிலவுலகில் வாழ்ந்ததினால் உருவாகிய பண்பாட்டின் விளைவால் தொன்மங்கள் தோன்றின. எனவே பழங்கதைகளாம் தொன்மங்கள் கூட்டுக் கற்பனையாலும் கூட்டு அனுபவத்தாலும் கிளர்ந்து எழுந்தவை. இவை ஒரு நாளில் உருவாகியவை அல்ல' ( பெ.மாதையன் மு.நூல் ப.
3) என்ற கூற்றுப்படி செல்வி சங்ககால இலக்கியங்களுக்கு முன்பே தமிழர்தம் உள்ளத்தில் கருக்கொண்டு வளர்ந்து பின்னாளில் சங்கப் புலவர் பாடல்களில் காட்சி தருகிறாள்.

மலைமகள் என்ற நிலையில் 'ஏழிற் குன்றம்' 'அயிரை மலை' போன்ற மலையுறை தெய்வாய் செல்வி விளங்கியதை அகப்பாடல்களும் புறப்பாடல்களும் தெரிவிக்கின்றன. இம் மலைகள் தமிழகத்தில் நிலவிய பசுமையான மலைகள் ஆகும்.

'கானமர் செல்வி அருளலின் வெண்கால்
புல்படைப் புரவி எய்திய தொல்லிசை
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழிற் குன்றத்து'
(அகம்.
345)

இப்பாடலை இயற்றியவர் குடவாயிற் கீரத்தனார். இக்குன்றத்தில் உறையும் கானமர் செல்வி; இக்குன்றத்தைப் பாடிய சிறந்த புலவன் ஒருவனுக்குக் குதிரைகளைப் பரிசிலாக அளித்த செய்தி இப்பாடலில் இடம்பெறுகிறது. இங்குச் செல்வி மலையரசியாய் வள்ளல் குணம் கொண்டவளாய்க் காட்சி தருகிறாள்.

அயிரை மலையில் உறையும் செல்வியைப் பதிற்றுப்பத்துப் பாடல்களில் காணமுடிகிறது.

'அணங்குடை மரபின் கட்டில் மேல் இருந்து
கடவுள் அயிரையின் நிலை,
கேடு இலவாக பெரும நின் புகழே.'
(பதிற்றுப்பத்து:
79)

இப்பாடல் வரிகள் பெருஞ்சேரல் இரும்பொறையைப்பற்றி அரசில்கிழார் பாடிய எட்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன. ஆற்றல் மிக்க செல்வியாம் கொற்றவை உறையும் அயிரைமலைபோல் நின்னுடைய புகழ் அழிவில்லாமல் விளங்குக என்று அரசர் மன்னனை வாழ்த்துகிறார்.

இந்த அயிரைமலையில் உறையும் செல்வி குறித்து மூன்றாம் பத்துப் பதிகப் பாடலும் குறிப்பிட்டுள்ளது.

'அயிரை பரை, ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்க நல் இசை உயர்ந்த வேள்வி
(மூன்றாம் பத்துப் பதிகம்)

பல்யானைச் செல்கெழு குட்டுவன் அயிரை மலையில் உள்ள கொற்றவையைத் தன் குலத்துள்ளார் செய்து வரும் வழிபாடு கெடாமல் தானும் வழபட்டு ஆற்றல்மிக்க வலிமையோடு வாழ்ந்தான் என்று பதிகம் குறிப்படுகின்றது.

'முன்பழந்தமிழ்கால வீரயுகச் சூழலில் கொற்றவையைப் பெரும்பாணாற்றுப் படை முருகனின் தாயாக்குகின்றது, இச்சூழலிலும் கொற்றவை (துணங்கை அம் செல்வி) செல்வாக்குப் பெற்ற தெய்கமாகவே காட்டப் படுகிறாள். இதற்குப்பின்னர் பின்தமிழ் இலக்கியங்களில் முருகனின் தாய் என்பதுடன் கொற்றவை சிவனின் மனைவயாகவும் காட்டப்படுகிறாள். என்று கூறும் பெ.மாதயன் ஆண்தெய்வங்களைப்பற்றிய தொன்மங்கள் விரிவாய் இடம்பெற்றுள்ளன. ஆனால் பெண்தெய்வங்கள் பற்றி விரிவான தொன்மங்கள் இடம்பெறவில்லை. இப்பெண்தெய்வங்களின் சார்புநிலைகளைக்காட்டும் தொன்மங்கள் சுருக்கமாய் இடம்பெற்றுள்ளன. இப்பெண்தெய்வங்கள் குறித்துத் தனிப்பாடல்கள் பாடப்பெறவில்லை. ஒட்டு மொத்த்தில் ஆண்வழிச் சமூகம் சார்ந்தோராய்ப் பெண்டிர் மாறிப்போன சமூக இருப்புநிலையைச் சங்கப் பெண்தெய்வங்களும் காட்டுவனவாய் உள்ளன என்று தனது ஆய்வில் ஆராய்துள்ளார்(மு.நூல் ப.
293)

அதே சமயம் சேர மன்னர்களின் வழிபடுதெய்வமாக விளங்கிய செல்வி அன்று போலவே இன்றும்; செல்லாண்டியம்மன் என்ற பெயரில் தனித்தெய்வமாய் கொங்கு நாட்டு மக்களால் வழிபடப்படுகிறாள.; அன்றைய காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டவர்களாகச் சேரமன்னர்கள் ஆண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குச் சான்றாக விளங்குறது பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தினைப் பாடிய பாலைகவுதமனார் பாடலின் பதிகம்.

பெரும்பான்மையான கொங்கு நாட்டு மக்களுக்குக் குலதெய்வமாகச் செல்லாண்டியம்மன் விளங்குகிறாள்.போகம் இல்லாத புனிதத்தாய்மைப் பண்பே பெண்ணின் உன்னத பிம்பம். தாய்வழிச் சமூகத்தில் உயர்மரபாக விளங்கிய இந்த உன்னத பிம்பத்தை இன்றைய செல்லாண்டியம்மன் வழிபாட்டிலும் காணமுடிகின்றது.பெரும்பான்மையான மாரியம்மன் கோயில்களில் 'கம்பம் போடுதல்' என்னும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இக்கம்பம் மாரியம்மனின் கணவனாகக் கருத்படுகிறது.கம்பம் போடும் முதல் நாளில் மாரியம்மனுக்குத் தாலி அணிவிக்கப்படுகிறது. இந்த நாட்டார் சமயவிழா எட்டுநாள் இல்லை என்றால் பதினைந்து நாட்கள் கொண்டாடப்படுகிக்றன. விழா முடியும் நாளில் கம்பத்தைப் பிடுங்கும் சடங்கு நடைபெறும். கணவன் இறந்ததாகக் கருதி மாரியம்மனுக்கு அணிவிக்கப்பட்ட தாலியையும் கழற்றிவிடுகின்றனர் அதன் பிறகு மாறியம்மன் விதவையாகக் கருதப்படுகிறாள் இத்தகைய சடங்கு செல்லாண்டியம்மன் கோயிலில் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் பெண் தெய்வம் குறித்து பி.எல் சாமி அவர்களின் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

'இன்று புகழ்ப்பெற்று விளங்கும் காளியம்மன்களான கீரனூர் செல்வி வடக்குவாய்ச் செல்வி (எல்லையம்மன்) ஆகிய தெய்வங்களின் பெயர்களில் செல்வி என்ற பெயர் பயில்வதைக்காணலாம்;. தமிழ்நாட்டு மூவேந்தர்களுடைய நாடுகள் சந்திக்கும் எல்லையில் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செலல்;லாண்டியம்மன் கோயில் மதுக்கரை என்ற ஊரில் இருந்ததாகக் கூறுவர். இந்தச் செல்லாண்டியம்மன் பெயரிலும் செல்வி என்ற சங்கப்பெயர் பயில்கிறது. பண்டைக்காலத்தில்; சேர சோழ பாண்டியர்களுகளுக்குத் தெய்வமாகச் செலவி என்கிற தாய்த்தெவமே இருந்திருக்க வேண்டும். செல்வி என்றாலே செழிப்பு என்ற பொருள் தோன்றுகிறது. தாயத்தெய்வங்கள் செழிப்புத் தெய்வங்களாகும். படைப்புச் சக்தி தெய்வங்களாகும்' (தமிழ் இலக்கியங்களில் தாய்த் தெய்வங்கள் பக்.
58-59) பெண் தெய்வங்கள் யாவும் இந்தச் செல்வியின் அவதாரங்கள் என்றால் மிகையில்லை.

மதுக்கரை கோயில்; இன்றும் கரூரில் இருக்கிறது. கொங்குநாட்டின் பல பகுதிகளிலும் செல்லாண்டியம்மன் கோயில்கள் உள்ளன. மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் அமர்ந்துதான் மூவேந்தரகள் தமிழ் நாட்டைச்; பாகம் பிரித்தனர். அப்போது அவர்களுக்குக் குழப்பம் நேர்ந்தது. இக் குழப்பத்தை அங்கு வந்த கோலாத்தாக் கவுண்டர் செல்லாண்டியம்மன் அருளாளே தீர்த்தார்.சரியாகப் பாகம் பிரித்துத் தந்தார் என்று கொங்கு நாட்டுப் புறக்கதையான அண்ணன்மார் சாமி கதையும் கூறுகிறது. ஆகவே செல்வி தமிழரின் ஆதி தெய்வமாகத் தொன்மை வாய்தவளாக விளங்கித் தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றுகிறது எனலாம்.

முடிவுரை:

சங்க இலக்கியங்களில் தமிழரின் தொன்மநாயகியாகச் செல்வி என்னும் தாய்த்தெய்வம் திகழ்கிறது.

ஆரியர் வருகைக்கு முன்னதாக எழுதப்பட்ட முன்பழந்தமிழ் இலக்கியங்களில் கணவன் இல்லாத செல்வியாகச் கொற்றவையாகச் சித்திரிக்கப்படுகின்றாள்.

இடைப்பட்ட நிலையில் தோன்றியதான பெரும்பாணாற்றுப் படையில் முருகனின் தாயாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள்.

பின் பழந்தமிழ் இலக்கியமான திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் முருகனின் அன்னையாகவும் சிவனின் மனைவியாகவும் செல்வி என்னும் தொன்மம் படிமலர்ச்சி அடைந்துள்ளது.

கானமர் தெய்வமாக,மலையுறை தெய்வமாக விளங்கிய நிலையில் தாய்த் தெய்வமான செல்வி காட்டுரிமையையும் மலையுரிமையையும் பெற்றிருந்தாள்.

தந்தைவழிச் சமூகம் தோன்றிய நிலையில் அவ்வுரிமைகளைப் படிப்படியாக இழக்கின்றாள்.

பாலியல் தூய்மை என்ற கன்னித் தன்மையிலிருந்த செல்வி என்ற பெண்மையத் தொன்மம் ஆணாதிக்கத் தொன்மங்கள் கலந்ததால சார்புநிலைத் தொன்மாகியுள்ளது.
ஆணாதிக்கத் தொன்மங்கள் பாதிக்காத நாட்டார் மனங்களில் இன்றுவரை செல்வி என்னும் பெண்மையத் தொன்மம் கன்னித்தன்மையுடன்; தமிழினத்தின் ஆன்மாவாக விளங்குகின்றது.


துணை மேற்கோள்நூற் பட்டியல்:

  • 1.இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் கழக வெளியீடு, சென்னை.(1982).
     

  • 2.ஆலிஸ். அ., முதலியோர்; பதிற்றுப்பத்து (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை-600098. (2004).
     

  • 3.சாமி.பிஎல்., தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, நியூசெஞ்சுரி
    புக்ஹவுஸ் சென்னை-
    600098. (1986).
     

  • 4.சுப்பிரமணியன் முதலியோர், பரிபாடல் மூலமும் உரையும்., நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600098, (2004).
     

  • 5.செயபால் இரா முதலியோர், அகநானூறு மூலமும் உரையும் தொகுதி 2, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600098, (2004).
     

  • 6.செல்வி திருச்சந்திரன், தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு, குமரன் பதிப்பகம், 79 முதல் காலன் தெரு வடபழனி சென்னை. 26 (1997).
     

  • 7.நாகராசன் வி.முதலியோர் குறுந்தொகை (மூலமும் உரையும்) (மூலமும் உரையும்) நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை-600098 (2004).
     

  • 8.பாலசுப்பிரமணியன் கு.வெ.நற்றிணை(மூலமும் உரையும்) (மூலமும் உரையும்) நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை-600098 (2004).
     

  • 9.மாதையன் பெ. வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-5(2001).
     

  • 10. மோகன் இரா முதலியோர், பத்துப்பாட்டு (மூலமும் உரையும்) முதல் தொகுதி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை-600098 (2004).
     

  • 11.விசுவநாதன்.அ. முதலியோர், கலித்தொகை (மூலமும் உரையும்) நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை-600098 (2004).
     

  • 12.ராஜம் கிருஷ்ணன,; காலந்தோறும் பெண், நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா ஏ-5 கிரீன்பார்க், புது தில்லி-110016, (1994).
     

  • 13.ரோஸலின்ட்மைல்ஸ், ராதாகிருஷ்ணன் (த.ஆ), உலகவரலாற்றில் பெண்கள், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600098 (2001).

 

முனைவர் இரா.செல்வி
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி
பீளமேடு
- 641014.