சங்க காலத்தில் பெண்மை நலம் நுகர்ந்து கைவிட்ட கயவனுக்கு விதிக்கப்பெற்ற கடுந்தண்டனை!

முனைவர் இரா.மோகன்

ரத்தைமை இழுக்கம் மேற்கொண்ட ஒரு தலைவன் தன் வீட்டிற்குள் திரும்பவும் விறுவிறுவென்று நுழைந்து விட முடியாது; தலைவியின் இசைவைப் பெற்ற பிறகே வீட்டிற்குள் அவன் காலடி எடுத்து வைக்க முடியும். தலைவி தலைவனுக்கு வீட்டினுள் நுழைய இசைவு தருதல் 'வாயில் நேர்தல்' எனப்படும்; இசைவு தராமை 'வாயில் மறுத்தல்' எனப்படும். மருதத் திணையில் இவ்விரு துறைகளும் பயின்று வருவன ஆகும். விழுமிய நோக்கில் இத்துறைகள் உணர்த்தும் ஒரு நுண்ணிய குறிப்பு உண்டு. 'பரத்தை வழிப்பட்ட பின்பு, ஒரு தலைவன் தன் வீட்டிற்குள் புக அஞ்சுகின்றான், புகும் உரிமையை இழக்கின்றான், கேட்டுப் புக வேண்டிய நிலைக்குத் தாழ்கின்றான் என்பது' (தமிழ்க் காதல், ப.102) என இதனைத் தெளிவு படுத்துவார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்.

அகநானூற்றின்
256-ஆம் பாடல் மருதத் திணையில் அமைந்தது. இதனைப் பாடியவர் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார். 'தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது' என்பது இப் பாடலின் துறைக் குறிப்பு. ஒரு தலைவன் தனது தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிச் சென்று, வையை ஆற்றில் அவளுடன் நீராடி மகிழ்ந்தான். இதனைக் கேள்விப்பட்ட தலைவி, தலைவன் மீது ஊடல் கொண்டாள், இந் நிலையில் தலைவன் தோழியை அணுகி தலைவியின் ஊடலைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினான். தோழி அவனது வேண்டுகோளை ஏற்க மறுத்துக் கூறுவதாக அமைவது கடுவன் மள்ளனாரின் அகநானூற்றுப் பாடல்.

'உனது ஊரில் வயலுக்கு அருகில் வள்ளைக் கொடி வளர்ந்து தூறுகளுடன் பின்னிக் கிடக்கும். வலிய நகத்தினை உடைய ஓர் ஆமை அதன் அடர்ந்த இலைகளின் நிழலில் அயர்ந்து உறங்கிக் கிடந்தது. பிறகு, சோம்பிக் கிடக்கும் அந் நிலையை வெறுத்து, பரற்கற்கள் நிறைந்து கிடக்கும் வழியாகச் சென்று, அகன்ற நீர்த் துறையை அடைந்தது. அதன் கரையில் கள் அருந்திக் கொண்டிருந்தவர்கள் சிந்திய துளிகளை உண்டு, அந்த மயக்கத்தோடு தள்ளாடியவாறு நடந்தது; இனிய பெரிய வயல்களைக் கலக்கியது. களைப்புடன் அருகில் இருக்கும் குளத்தில் மென்மையான ஆம்பல் இலைகளுக்கு இடையே சென்று மீண்டும் ஒடுங்கியது. அத்தகைய ஊரில் வாழ்பவனே!

நீ பொய் சொல்லாதே; உன் வஞ்சனையான செய்கையை நான் அறிவேன்; நான் மட்டுமா? இந்த ஊருக்கே அது நன்கு தெரியும். ஆனால் நீ அறியாய் போலும்! மை தீட்டப் பெற்ற, ஆளை விழுங்கும் அழகிய கண்களை உடைய இளம் பரத்தையுடன் நேற்று வையை ஆற்றின் புதுவெள்ளத்தில் உரிமையுடன் நீராடி மகிழ்ந்திருக்கிறாய். உன் செயலைப் பரத்தையின் தோழிமார் ஊரார் அறியாமல் மறைக்க முயன்றும் முடியாது போகவே, அந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது. இன்று, அதுவே பெரிய பேச்சாக இருக்கிறது.

கள்ளூர் என்னும் ஊர் அழகு தங்கப் பெற்றது; பழமைச் சிறப்புடன் புகழ் மிக்கது; காண்பதற்கு இனிய பல வகையான பூக்கள் நிறைந்த அழகிய வயல்-களையும், கரும்புத் தோட்டங்களையும் உடையது. அவ்வூரில் ஒரு வழக்கு நடந்தது. அழகிய நெற்றியினை உடைய இளம்பெண் ஒருத்தி, ஊர் அவையத்தில் நெறி தவறிய ஆண்மகன் ஒருவன் மீது குற்றம் சாட்டினாள். தனது பெண்மை நலத்தை அவன் நுகர்ந்து, பின்னர் கைவிட்டு விட்டான் என்றாள். அவனோ தனக்கு அவளைத் தெரியவே தெரியாது என்றான், அறவோர் முன்னர் பொய்யான சூளும் உரைத்தான். அவையத்தார் சாட்சிகளை முறைப்படி விசாரித்து, அவன் சொன்னது பொய் என்று அறிந்து, அவனுக்குத் தண்டனை வழங்கினர். அதன் படி, தளிர்கள் நிறைந்ததும் மூன்று கவடுகளாய் உள்ளதுமான மரக்கிளைகளின் நடுவே அவனை இறுகக் கட்டி வைத்து, அவன் தலையில் சுண்ணாம்பு நீற்றைக் கொட்டினர். அந்த வேளையில் அவையத்தில் கூடியிருந்த மக்கள் அத்தண்டனை தக்கதே என மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். அந்த ஆரவாரத்தை விட, இப்பொழுது பரத்தையோடு நீ புனலாடியதால் உன்னைப் பற்றி இவ்வூரில் எழுந்த பழிச்சொல் ஆரவாரம் பெரிதாக இருந்தது. அதனால் உன் வஞ்சனையை யான் அறிவேன்!' எனத் தலைவனிடம் கூறுகிறாள் தோழி.

தோழியின் இக் கூற்றினைத் தன்னகத்தே கொண்ட கடுவன் மள்ளனாரின் அகநானூற்றுப் பாடல் வருமாறு:

'பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பில்
மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை
நொடிவிடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
உகுவார் அருந்து மகிழ்புஇயங்கு நடையொடு
தீம்பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல்அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால், அறிவென்நின் மாயம்; அதுவே
கையகப் பட்டமை அறியாய்; நெருநை
மைஎழில் உண்கண் மடந்தையொடு வையை
ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்புஅமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன், 'அறியேன்' என்ற
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்,
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி,
நீறுதலைப் பெய்த ஞான்றை,
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.'


இவ்வாறு தலைவனிடம் தோழி கூறிய செய்தி அவனுக்கும் விடுக்கும் ஓர் எச்சரிக்கை போல் உள்ளது.

'வள்ளைக் கொடியின் இலைச் செறிவில் துயிலினை வெறுத்த யாமை, பரற்கற்களின் மீது ஒலியுண்டாகச் சென்று, கள்ளினைத் தன் பகுவாய் நிறைய உண்டு, மயங்கிய நடையோடு பழனம் உழக்கி, அருகேயிருக்கும் ஆம்பலின் இலைச் செறிவில் ஒடுங்கும் என்றது தலைவன் தன் வீட்டில் துயிலுவதை வெறுத்துச் சென்று, பரத்தையர் சேரியில் அவரோடு மகிழ்ந்தாடி இன்பம் நுகர்ந்து, செருக்கிய நடையோடு இற்பரத்தைபாற் சென்று தங்குவான் என்பதைப் புலப்படுத்தியது' (அகநானூறு மூலமும் உரையும், ப.770) என இப்பாடலில் விளங்கும் உள்ளுறையுவம நயத்தினைச் சுட்டுவர் உரையாசிரியர்.

சங்க காலத்தில் சிற்றூர்களில் நீதிமன்றகளாக அவையங்கள் செயல்-பட்டமையை இப் பாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவை 'அறங்கூறு அவையம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டன. அதில் அவையத்தார் தக்க சாட்சிகளைக் கொண்டு வழக்குகளை முறையாக விசாரித்தனர்; பொய்ச் சூள் கூறியதற்குத் தண்டனையாக மூன்று கவடாக உள்ள மரக்கிளைகளின் நடுவே குற்றவாளியைக் கட்டி வைத்து, அவன் தலையில் சுண்ணாம்பு நீற்றினை ஊற்றினர். சங்க காலத்தில் காதலித்து ஏமாற்றிய கயவனுக்குக் கொடுக்கப்பட்ட இக் கடுமையான தண்டனையை மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் இப் பாடலில் உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்தில் இளையோர் காதல் தொடர்பான இத்தகைய நிகழ்வுகளைத் தேர்ந்து தெளிந்து முறை செய்வதற்கு ஆற்றல் வாய்ந்த நிலையம் இருந்தது என்பதனை 'வீறுசால் அவையம்' என்ற தொடராலும், அறம் பிறழ்ந்து அடாச்செயல் புரிந்திடும் கயவர்களுக்கான தண்டனைகளை ஊரார் அறிய நிகழ்த்தினர் என்பதனை 'ஆர்ப்பினும் பெரிது' என்ற தொடராலும் அறியலாம்.

கண்டவரை மயக்கும் பரத்தையின் அழகினை 'மைஎழில் உண்கண் மடந்தை' என்னும் தொடராலும், கற்பு நலம் சான்ற பெண்ணின் நலத்தினைத் 'திருநுதற் குறுமகள் அணிநலம்' என்னும் தொடராலும் கடுவன் மள்ளனார் இப்பாடலில் நுட்பமாகச் சித்திரித்திருக்கும் திறமும் கூர்ந்து நோக்கத்தக்கது.

கடுவன் மள்ளனாரின் அகநானூற்றுப் பாடலால் ஒன்று மட்டும் உறுதியாகின்றது: காதலிப்பது போல நடித்து ஓர் இளம்பெண்ணின் பெண்மை நலத்தினை அனுபவித்து விட்டு, பின்னர் அவளை அறியேன் என்று அறம் பிறழ்ந்து வாதிடும் கயவர்கள் இன்று மட்டும் அல்ல, அன்றும் இருந்திருக்கிறார்கள்; ஊர்ப் பெருமக்கள் உண்மையை ஆராய்ந்து அத்தகைய கயவர்களை மரக்கிளையில் கட்டி வைத்து அவர்களது தலையில் சுண்ணாம்பு நீற்றினை ஊற்றிக் கடுமையாகத் தண்டித்திருக்கிறார்கள். எனினும், பட்டுகோட்டையாரின் சொற்களைச் சற்றே மாற்றி, 'கயவர்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் கயமையை ஒழிக்க முடியாது' எனக் கூற வேண்டும் போல் தோன்றுகிறது.முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021