புதுக்கவிதையில் தேர்தல் சிந்தனைகள்

முனைவர் இரா.மோகன்


நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு சம கால வாழ்வைச் சந்திப்பதும் அது குறித்து ஆழமாகச் சிந்திப்பதும் இன்றைய புதுக்கவிஞர்களின் சிறப்பியல்பும் தனிப்பண்பும் ஆகும். கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிடுவது போல், 'புதிய யுகத்தின் சிக்கல்களை, பரிணாம வளர்ச்சியில் விரிந்து கொண்டு போகும் மனித அகப்புற உலகங்களின் ஆழ உயரங்களை அனுபவ பூர்வமாக உணர்த்துகிற போதுதான் அது உள்ளடக்கத்திலும் புதுக்கவிதையாகும்'. நக்கீரரைப் போல் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறுவது இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களின் தனிப்பண்பு எனலாம். இவ்வகையில் இன்றைய புதுக்கவிதைகளில் தேர்தலைப் பற்றிய சிந்தனைகள் இடம்பெற்றிருக்கும் பாங்கினைக் குறித்து இங்கே காணலாம்.

'விரலில் குத்தும் கரும்புள்ளி'

சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நோயாளியின் நிலையை மருத்துவர் ஆராய்வது போல், தேர்தலுக்கு முன்னும் பின்னும் வேட்பாளர், வாக்காளர் ஆகிய இருவரது நிலைகளையும் ஆராய்ந்தால் எத்தனையோ உண்மைகள் நமக்கு விளங்கும். தேர்தலுக்கு முன்-தேர்தல் காலத்தில் - வேட்பாளர் பற்பசை விளம்பரங்களிலே வருவது போல் சிரித்த முகத்தோடு, கும்பிட்ட கையோடு, திறந்த வண்டியிலே வலம் வருவார்ளூ தெருத்தெருவாக அலைந்து திரிந்து, வீடு வீடாக ஏறி இறங்கி, வாக்காளப் பெருமக்களிடம் 'வாக்குப் பிச்சை' கேட்பார்ளூ அப்போது அவரது 'கால் வண்ண'த்தை நாம் காணலாம். தேர்தலில் வெற்றி பெற்று, ஒருவேளை அமைச்சராகவும் ஆகி-விட்டால், பிறகு அவரைத் தொகுதிப் பக்கமே பார்க்க முடியாதுளூ அவரது 'கை வண்ண'த்தைத் தான் அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும். அவரை நம்பித் தம் வாக்கினை அளித்த வாக்காளப் பெருமக்களின் கதி 'அதோகதி' தான். இதனைக் கவிஞர் வைரமுத்துவின் 'சகுனம்' என்னும் கவிதை சரியாக எடுத்துக் காட்டுகின்றது.

'வாக்களித்தவனின்
விரலில் குத்தும் / கரும்புள்ளி
பின்னால் / அவன்
முகத்தில் பூசும் கரிக்கு
முன்னுரையல்லவா?'


தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளப் பெருமக்களுக்குக் கிடைப்பது பெரிதாக ஒன்றும் இல்லையாம், விரலில் ஒரு கரும்புள்ளி மட்டும் தானாம்!

'ஐந்தாண்டுக்கு ஒரு முறை'

கவிஞர் அப்துல் ரகுமான் 'ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை' என்னும் தலைப்பில் குறியீட்டுப் பாங்கில் தேர்தலைக் குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.

'புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி'

என்னும் அக்கவிதையில் அவர் இன்றைய நாட்டு நடப்பை நன்கு எடுத்துக்-காட்டியுள்ளார். சுயம்வர மண்டபம் - தேர்தல் களம்ளூ போலி நளன்கள் - வேட்பாளர்கள்ளூ கையில் மாலை - வாக்குச் சீட்டுளூ குருட்டுத் தமயந்தி - வாக்காளப் பெருமக்கள் - என ஒன்று மற்றொன்றை - ஒருவர் மற்றொருவரைக் குறிக்கும் குறியீட்டு முறையில் கச்சிதமாக அமைந்துள்ளது இக்கவிதை. தனி ஒருவருக்கே - அவரது உள்ளத்து உணர்வுக்;கே - சிறப்பாக உரியது அகத்திணைளூ உலகத்திற்கே உரிய பொதுத் தன்மை வாய்ந்தது, வெளியே உரைக்கத் தகுந்தது புறத்திணை. எனவே 'புறத்திணைச் சுயம்வர மண்டபம்' எனக் குறித்துள்ளார் கவிஞர். தேர்தல் களத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் வேட்பாளர்களின் அந்தரங்கமான ஆசை - உள்ளார்ந்த நோக்கம் - எதையும் விலையாகக் கொடுத்து, எப்படியும் வெற்றி பெறுவது தான்ளூ 'உள் ஒன்று வைத்து புறம் ஒன்று' பேசித் திரியும் அவர்களைக் கவிஞர் 'போலி நளன்கள்' எனக் குறித்திருப்பது அருமை. அங்கே கையில் மாலை - இங்கே கையில் வாக்குச் சீட்டுளூ பொருத்தமான ஒப்புமை. பழமையிலிருந்து புதுமையில் ஒரு மாற்றம்ளூ அங்கே சுடர்மிகும் அறிவுடன் கூடிய தமயந்திளூ இங்கே 'குருட்டுத் தமயந்தி' இடம் பெற்றிருக்கிறாள். 'கஞ்சி குடிப்பதற்கு இலாத, அதன் காரணமும் அறியாத' வாக்காளப் பெருமக்களுக்குக் 'குருட்டுத் தமயந்தி' சரியான குறியீடு. இக்குறியீடு வாக்காளர்களின் அறியாமை, கண்மூடித்தன்மை, செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலை முதலான அத்தனைப் பண்புகளையும் அழகுற உணர்த்தி நிற்கின்றது.

'நான் உங்கள் ஜாதிக்காரன்!'

'ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?' என்று கேட்பார் பாரதியார். இன்று 'ஆயிரம் உண்டு எங்கள் ஜாதியில் - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?' என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளதுளூ 'நம் சாதி, நம் சாதியல்லாத பிற சாதி' எனச் 'சாதி இரண்டொழிய வேறில்லை' எனக் கூறும் சூழல் தோன்றியுள்ளது. இன்று ஊருக்கு ஊர் சாதிகளின் பேரால் சங்கங்கள் எழுந்துள்ளனளூ ஒரு வகையில் பார்த்தால் இதுதான் 'சங்க காலம்!' சாதிப் பயிரை எருவிட்டு, நீரூற்றி வளர்ப்பவர்கள் அரசியல்வாதிகள் தான்ளூ நாட்டில் தொண்ணூறுக்கு மேற்பட்ட சாதிகள் இருப்பது தேர்தல் காலத்தில்தான் தெளிவாகத் தெரிகின்றது. வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல் என மூன்று அதிகாரங்களை அன்றைய அரசியலுக்கு வகுத்தார் வள்ளுவர்ளூ ஆள் பலம், பண பலம், சாதி பலம் என மூன்று பலங்கள் இன்று தேவைப்படுவதை நடைமுறை அரசியல் நமக்கு உணர்த்துகின்றது. கவிஞர் வாலியின் 'வாக்காளப் பெருமக்களுக்கு' என்னும் கவிதை இன்றைய அரசியலில் சாதி பெறும் முக்கிய இடத்தை – சாதிக்கு உள்ள செல்வாக்கை – அங்கதச் சுவையோடு எடுத்துக்காட்டுகின்றதுளூ 'இது நல்ல ஆளு' என்று பார்த்து வாக்களிக்காமல், 'இது நம்ம ஆளு' என்று தெரிந்து வாக்களிக்கும் நிலை இன்றைய சமுதாயத்தில் காணப்படுவதைக் குறிப்பாகப் புலப்படுத்துகின்றதுளூ இன்றைய வேட்பாளர்கள் வாக்காளப் பெருமக்களின் நெஞ்சில் சாதியுணர்வு ஊற்றெடுக்குமாறு செய்வதைச் சாதுரியமாகக் கோடிட்டுக் காட்டுகின்றது.

'வாக்காளப் பெருமக்களே!
நான் உங்கள் வேட்பாளன்
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால் -
ஜாதிகளை ஒழிப்பேன்
வீதிகளில் உள்ள ஜாதிகளின் பெயர்களை அழிப்பேன்ளூ
ஜாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை அகராதியலிருந்து கிழிப்பேன்ளூ
'நீ அந்த ஜாதி... நான் இந்த ஜாதி...' என்று பேசுவோரால் தான்'
தேசம் கெட்டுவிட்டது!
எனவே –
ஜாதியில்லாத சமுதாயத்தை அமைக்க...
எனக்கே ஓட்டுப் போடுங்கள்!
நினைவில் இருக்கட்டும்...
நான் உங்கள் ஜாதிக்காரன்'


சாதிகளை 'அழிப்பேன்' என்றும், 'ஒழிப்பேன்' என்றும், 'கிழிப்பேன்' என்றும் வாய்ச் சொல் வீரம் பேசிய வேட்பாளர் - 'சாதி இல்லாத சமுதாயத்தை அமைப்பேன்' என்று வாய்ப் பந்தல் இட்ட வேட்பாளர், இறுதியில் மெல்லிய குரலில் - கெஞ்சுகின்ற பாவனையில் - 'நினைவில் இருக்கட்டும் - நான் உங்கள் சாதிக்காரன்!' என்று வாக்காளப் பெருமக்களுக்கு நினைவுபடுத்துவது நல்ல முரண்ளூ அருமையான அங்கதம்ளூ நடைமுறை அரசியலின் நயமான படப்பிடிப்பு.

'அழகு மண் குதிரைகள்'

நாடு இதுவரை எத்தனையோ பொதுத் தேர்தல்களையும் இடைத் தேர்தல்-களையும் பார்த்தாகிவிட்டதுளூ நாமும் எத்தனையோ தேர்தல் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் பார்த்து விட்டோம், கேட்டு விட்டோம். இதுவரையில் ஆட்சியில் அமர்ந்திருந்த கட்சிகளும் எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியிருக்கின்றன. என்றாலும் ஒட்டுமொத்தமாக என்ன பயன் விளைந்திருக்கிறது? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியது போல் 'காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்?' என்று கேட்கும் அவல நிலையில்தானே இன்னமும் நாம் இருக்கிறோம். பாரதியார் கனவு கண்டது போல், ஒருவேளை 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' ஆகி என்ன பயன்? 'எல்லோரும் இந்நாட்டு மந்திரிகள்' ஆனால் நம் பாடு கொண்டாட்டம் ஆகலாம்ளூ 'நாலு காசு' பார்க்கலாம். கவிஞர் கந்தர்வனின் 'மண் குதிரைகள்' என்னும் கவிதை ஆற்றல் சான்ற ஒரு குறியீட்டின் வாயிலாக இந்திய நாட்டுக் குடிமகனின் எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. அக்கவிதை வருமாறு:

'ஐந்தாண்டிற்கொரு முறையும் / சில சமயம் அவசரமாகவும்
வர்ண மண் குதிரைகளில் / வாக்குறுதிகள் அமர்ந்து
அக்கரையில் வந்து / அமர்க்களமா யிறங்கும்
இக்கரையில் நாங்கள் நின்று / ஏக்கமுடன் பார்த்திருப்போம்
ஆற்றில் இறங்கிய / அழகு மண்குதிரைகள்
ஆறேறி வந்ததில்லை / அழுத முகம் பார்த்ததில்லை
கும்பிட்ட கரங்களோடு / குதிரைகளை இறக்கியவர்
மீண்டும் இறக்குவார் / மண் குதிரை மாறி
இன்னும் ஒரு / மரக் குதிரை கூட வரவில்லை
என்று வரும் / ஒரு உயிர்க் குதிரை?'


இக் கவிதையில் இடம்பெற்றுள்ள 'ஐந்தாண்டிற்கொரு முறை', 'சில சமயம் அவசரமாக' என்னும் தொடர்கள் குறிப்பாகத் தேர்தலை உணர்த்தி நிற்கின்றனளூ 'வர்ண மண்குதிரைகள்', 'அழகு மண் குதிரைகள்' என்னும் தொடர்கள் தேர்தல் காலத்தின் போது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் கவர்ச்சியான சலுகைகளை - வாக்குறுதிகளை - நலத்திட்டங்களை - புலப்படுத்தி நிற்கின்றனளூ மேலும், இக்கவிதையில் கும்பிட்ட கரங்களோடு குதிரைகளை இறக்குபவர் வேட்பாளராகவும், 'அழுத முகத்துடன் ஏக்கமுடன் பார்த்திருப்பவர்' வாக்காளராகவும் குறியீடு செய்யப் பெற்றுள்ளனர். 'அக்கரையில் வந்து அமர்க்களமாய் இறங்கிய வர்ண மண்குதிரைகள் - அழகு மண் குதிரைகள் - ஆறேறி இக்கரைக்கு வந்ததில்லைளூ இன்னும் ஒரு மரக்குதிரை கூட வரவில்லைளூ என்று வரும் ஒரு உயிர்க் குதிரை?' இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள மண்குதிரை, மரக்குதிரை, உயிர்க்குதிரை என்னும் மூன்று குறியீடுகளால் கவிஞர் முறையே தேர்தல் காலத்தில் கட்சிகள் அமர்க்களமான வாக்குறுதிகள், ஆர்ப்பாட்டமான அறிக்கைகள், நடைமுறைப் படுத்த முடியாத நலத்திட்டங்கள் ஆகியவற்றை அறிவித்தல், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பின் அவற்றை நடைமுறைப்படுத்தாமை, எத்தனையோ கட்சிகள் வந்து எத்தனையோ ஆட்சிகளை நடத்தியும் இன்னும் எல்லா மக்களுக்கும் ஒளிமயமான - உத்தரவாதமான - அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய - வாழ்க்கையை அளிக்க முடியாமை ஆகியவற்றை அழகுற எடுத்துக் காட்டியுள்ளார்.

'வாக்குறுதி மந்திரத்த வா(ய்)கிழியச் சொன்னாக!'

'குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு' என்பது போல, தேர்தல் காலத்தில் வேட்பாளர்களால் வாக்காளப் பெருமக்களை நோக்கி அள்ளித் தெளிக்கப்படும் - அரசியல் கட்சிகளால் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வாரி இறைக்கப்படும் - வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் முடிந்ததுமே - தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சராகி, பதவியில் அமர்ந்த மறுகணமே காணாமல் போய்விடும்ளூ 'பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப் போய்விடும்!' இதனை ஒப்பாரி மெட்டில் அமைந்த சுந்தரபாண்டியனின் புதுக்கவிதை ஒன்று தனக்கே உரிய நறுக்-சுருக் பாணியிலே பதிவு செய்துள்ளது:

'வந்தாக போனாக / வாசலுல நின்னாக
வாக்குறுதி மந்திரத்த / வா(ய்)கிழியச் சொன்னாக,
வா(ய்)கிழியச் சொல்லிவிட்டு / வாக்குகள கேட்டாக
வாக்குகள வாங்கிவிட்டு / வந்தவழி போனாக
போனவுக காணலியே / போட்டதெல்லாம் பொய்யாச்சே!'


'தேர்தல் பண்டிகை'

நம் நாடு பண்டிகைகளுக்குப் பேர் பெற்ற நாடுளூ தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, சரஸ்வதி பூஜை, விஜய தசமி, வைகுண்ட ஏகாதசி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் என மாதந்தோறும் வரும் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. என்றாலும் 'பண்டிகைக்கெல்லாம் பண்டிகை'யாக நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது 'தேர்தல்'. நம் நாட்டில் 'தேர்தல் பண்டிகை'க்கு உள்ள ஆற்றலே தனி. ஊரெல்லாம் ஒலி பெருக்கி, சுவரொட்டி, கூட்டம்! தெருவெல்லாம் தேர்தல் முழக்கம்! அடேயப்பா, எத்தனை அமர்க்களம்! எத்தனை ஆரவாரம்! கவிஞர் சக்திக்கனல் 'தேர்தல் பண்டிகை' என்னும் கவிதையில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் போடும் கொண்டாட்டத்தையும், தேர்தலுக்குப் பின் ஏழை மக்கள் படும் திண்டாட்டத்தையும் ஒருங்கே சித்திரித்துள்ளார். அவ்வழகிய கவிதை இதோ:

'மாரியம்மன் கோயிலிலே மாவிளக்குப் பொங்கல் - அது
வருஷமஞ்சு போனதுமே வந்துவந்து பொங்கும்!
ஒலிபெருக்கி வால்போஸ்டர் ஊர்முழுதும் கூட்டம்
ஒரு நாளில் ஊர்கூடித் தேரிழுக்கும் ஆட்டம்!
முத்திரையைக் குத்திவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தால்
மூன்றாம்நாள் ஊர்முழுதும் பழைய குப்பை கூளம்!
எத்தனைநாள் இதைக்கூட்டிப் பெருக்குவது தம்பி?
ஏழைமக்கள் வயிறுகளோ இருப்பது இதைநம்பி!'


'மக்களே தோற்கும் சூதாட்டம்'

புதுக்கவிதை மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், 'தேர்தல்' என்பது –

'எப்போதும்
மக்கள் தோற்கும்
சூதாட்டம்'


இச் சூதாட்டம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறதுளூ தோல்வியுறப் போவது தெரிந்தும் - விளையாட்டு விதிப்படி 'வெற்றி பெறுவது முக்கியமல்ல, கலந்து கொள்வது தான் முக்கியம்' என்று எண்ணியோ என்னவோ – மக்களும் சலிக்காமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள்ளூ 'கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்' என்ற நம்பிக்கையில் சோர்வடையாமல் தொடர்ந்து பங்குகொண்டு வருகிறார்கள்.


 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021