சான்றோர் கடமைக்குக் கட்டளைக் கல்லாகத் திகழும் புறநானூற்றுப் பாடல்

முனைவர் இரா.மோகன்

சோழ நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவன் கோப்பெருஞ்சோழன். புவி ஆளும் வேந்தனாக விளங்கிய அவன், கவி புனையும் புலமை படைத்தவனாகவும் திகழ்ந்தமை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. அவன் பாடியவனாகக் குறுந்தொகையில் நான்கு பாடல்களும் (20,53,129,147), புறநானூற்றில் மூன்று பாடல்களும் (214-216) காணப்பெறுகின்றன. பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரைச் சார்ந்த புலவரான பிசிராந்தையாருடன் கோப்பெருஞ்சோழன் காணாமலே கொண்டிருந்த நட்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. உணர்ச்சி ஒத்த நட்புக்கு நல்லதோர் உதாரணமாக விளங்கிய நட்பு அது. பரிமேலழகர் 'உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பு' என அதனைப் போற்றுவார். பொத்தியார், கண்ணகனார், புல்லாற்றூர் எயிற்றியனார் ஆகியோர்க்கும் உயிர் நண்பனாக விளங்கியவன் கோப்பெருஞ்சோழன். உயிர் துறக்கும் நிலையிலும் உயிர் நண்பர்கள் தம்மோடு வடக்கிருக்கும் பெருநிலை கோப்பெருஞ்சோழனுக்கு வாய்க்கப் பெற்றது. இது கோப்பெருஞ்சோழனின் வாழ்வில் காணப்பெற்ற ஒளி படைத்த பக்கம்.

நிலவுக்கு வாய்த்த களங்கம் போலக் கோப்பெருஞ்சோழன் வாழ்வினைச் சூழ்ந்த ஓர் இருண்ட பக்கமும் உண்டு. அது கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய இரு மகன்களுக்கும் இடையே மூண்ட பகைமை ஆகும். அப் பகைமையின் காரணத்தால், கோப்பெருஞ்சோழன் தன் மக்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். அந்நிலையில், புல்லாற்றூர் எயிற்றியனார் கோப்பெருஞ்சோழனுக்குத் தக்க அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்; அவன் மனங்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்:

'மிகுந்த வலிமையோடும் கடிய முயற்சியோடும் பகைவர்களைப் போரில் கொன்று, வெண்கொற்றக் குடையுடன் விளங்கும் வெற்றி பொருந்திய வேந்தனே! கடல் சூழ்ந்த, இந்தப் பரந்த உலகத்தில், உன்னை எதிர்த்து வந்த இருவரையும் எண்ணிப் பார்த்தால், அவர்கள் நெடுங்காலமாக உன்னுடன் பகைமை கொண்ட, வலிமை பொருந்திய சேரரோ பாண்டியரோ அல்லர்; போரில் வெற்றி பெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து வந்தவர்கள், சற்று சிந்தித்துப் பார்த்தால், நீயும் அவர்களுக்கு மாறுபட்ட பகைவனும் அல்லன் என்பது அவர்களுக்குத் தெரியும். பகைவர்களை வெல்லும் யானைகளை உடைய தலைவனே! பெரும் புகழை அடைந்து, நீ தேவருலகத்திற்குச் சென்ற பிறகு, உன் நாட்டை ஆளும் அரசுரிமை அவர்களுக்கு உரியது தானே? அதனால், அவ்வாறு ஆதலும் நீ அறிவாய். நான் சொல்வதை இன்னும் நன்றாகக் கேட்பாயாக் புகழை விரும்புபவனே! உன்னோடு போர் செய்யப் புறப்பட்டு வந்திருக்கும் ஆராயும் திறனும் அறிவும் இல்லாத உன் மக்கள் தோல்வியுற்றால், உனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை அவரை விடுத்து வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறாய்? போரை விரும்பும் தலைவனே, நீ அவரிடம் தோற்றால் உன் பகைவர்கள் அதைக் கண்டு மகிழ்வார்கள்; மற்றும், பழி தான் மிஞ்சும். ஆதலால், நீ போரை விடுத்து விரைவில் புறப்படுவாயாக. அஞ்சியவர்க்குப் பாதுகாப்பாக உனது நிழல் இருக்கட்டும். பெறுதற்கு அரிய விண்ணவர் உலகம் உன்னை விரும்பி வரவேற்று, விருந்தினனாக ஏற்றுக்கொள்வதை நீ விரும்பினால், நல்ல செயல்களை மனம் மயங்காமல் செய்தல் வேண்டும். உன் உள்ளம் வாழ்வதாக!' எனத் தருக்க நெறி நின்று எயிற்றியனார் நிரந்தினிது கூறிய அறிவுரையை மதித்து ஏற்றுப் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான் கோப்பெருஞ்சோழன்.

புல்லாற்றூர் எயிற்றியனாரின் விழுமிய அறிவுரையைத் தன்னகத்தே கொண்ட புறநானூற்றுப் பாடல் வருமாறு:

'மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறழ்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுஉறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர் எழுந்தவர்;
நிறையுங் காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி, மற்றுநீ
உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்,
நின்பெரும் செல்வம் யார்க்குஎஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீஅவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தை,நின் மறனே! வல்விரைந்து
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே – வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்துஎதிர் கொளற்கே.'
(213)

'எயிற்றியனார் பாடிய இப்பாட்டு ஒவ்வொரு குடிப்பிறந்தார்க்கும் பயிற்றப்பட வேண்டிய பாட்டாம். பெற்றோர்க்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பிளவால் நாடு அல்லல் படாமல் காத்த சால்பு பெரிதாம். சான்றோர் கடமைக்குக் கட்டளைக் கல்லாகத் திகழ்வது இப் பாட்டு' (புறநானூறு: மக்கள் பதிப்பு, ப
.352) என்னும் மூதறிஞர்; இரா.இளங்குமரனின் சிறப்புக் குறிப்பு இங்கே மனக்கொளத் தக்கதாகும். கணினி யுகத்திலும் குடும்பச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முற்படும் எவருக்கும் சங்கச் சான்றோர் புல்லாற்றூர் எயிற்றியனாரின் பொன்னான இவ் அறிவுரை என்றும் பயன் விளைவிக்கும்.

'யார், எப்படிப் போனால் நமக்கென்ன வந்தது' என்று வாளா இராமல் தந்தைக்கும் மக்களுக்கும் இடையே நிகழ இருந்த போரினைத் தடுக்க முனைப்புடன் முயன்ற புலவர் எயிற்றியனாரின் சான்றாண்மையை எண்ணி வியப்பதா? நல்லெண்ணத்தோடு புலவர் கூறிய அறிவுரையை ஏற்றுப் போர் புரிய இருந்த எண்ணத்தைக் கைவிட்ட மன்னன் கோப்பெருஞ்சோழனின் பெருந்தகைமையை நினைந்து போற்றுவதா? சங்கச் சான்றோர் பொத்தியார் மொழியில் குறிப்பிடுவது என்றால், 'வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே!'; உண்மையில் வியக்குந்தோறும் வியக்குந்தோறும், வியப்பின் எல்லையையே கடப்பதாகும்!.

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021