திருவள்ளுவர் – ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளராக

முனைவர் நிர்மலா மோகன்


திருக்குறள் தேசியக் கருத்தரங்கம்
தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்
608002


இரு வகையான அணுகுமுறைகள்

அணுகுமுறையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, எதையும் நம்பிக்கையோடு பார்ப்பது; உடன்பாட்டு நோக்கில் அணுகுவது. இதனை ஆங்கிலத்தில்
‘Optimism’ என்றும், ‘Positive Thinking’ என்றும் குறிப்பிடுவர். இன்னொன்று, எல்லாவற்றையம் நம்பிக்கை இல்லாமல் பார்ப்பது; எதிர்மறையான நோக்கில் காண்பது. இதனை ஆங்கிலத்தில் ‘Pessimism’ என்றும், ‘Negtive Thinking’ என்றும் சுட்டுவர்.

ஆல்பர்ட் சுவைட்சரின் புகழாரம்

திருவள்ளுவர் ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளர்; உலகைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ, பெண்ணைப் பற்றியோ, இல்லறத்தைப் பற்றியோ அவர் தம் நூலில் எந்த இடத்திலும் எதிர்மறையான சிந்தனைகளை வெளியிடவில்லை. மருந்துக்குக் கூட அவரிடம் எதிர்மறையான அணுகுமுறை காணப்பெறவில்லை. ஜெர்மன் நாட்டுப் பேரறிஞர் – இசை, தத்துவம், மருத்துவம் என்னும் மூன்று துறைகளில் ஆழ்ந்த பயிற்சியும் பழுத்த புலமையும் வாய்க்கப் பெற்ற சான்றோர் – ஆல்பர்ட் சுவைட்சர் ‘இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்’
(Indian Thought and its Development) என்ற நூலில் இவ்வுண்மையைத் தக்க சான்றுகள் காட்டி நிலைநிறுத்தியுள்ளார்; திருக்குறளைப் பிற மொழி நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து ‘ஒப்புயர்வற்ற நூல்’ என உளமாரப் போற்றியுள்ளார்; ‘உலக இலக்கியத்தில் இவ்வளவு உயர்ந்த மெய்யுணர்வு ததும்பும் அறவுரைக் கொத்து வேறொன்று இருக்கக் காணோம்’ (There hardly exists in the literature of the world a collection of maxims, in which we find so much lofty wisdom – Albert Schweitzer, Indian Though and its Development, p.203) எனவும் அறுதியிட்டு உரைத்துள்ளார்.

திருக்குறளில் காணப்பெறுவது ‘உலகம் மாயை’ என்ற எதிர்மறைக் கொள்கை அன்று; உலகு மற்றும் வாழ்வு பற்றிய மறுதலைக் கொள்கை
(World, Life Negation Theory) அன்று; உலகமும் வாழ்வும் மெய் என்ற உடன்பாட்டுக் கொள்கை (World, Life Affirmation Theory) ஆகும். இக் கருத்தியலின் ஒளியில் திருவள்ளுவரை ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளராக அடையாளம் காண்பது இக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

வாழ்க்கை பற்றிய வள்ளுவரின் உடன்பாட்டுச் சிந்தனை

‘இல்வாழ்க்கை’, ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் உடன்பாட்டுச் சிந்தனையைப் பறைசாற்றுவன ஆகும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.”
(50)

என்பது ‘இல்வாழ்க்கை’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இறுதிக் குறட்பா ஆகும். இக் குறட்பாவின் முதற்சொல்லே வள்ளுவரின் உடன்பாட்டு அணுகுமுறையைப் புலப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது. மனிதனை ‘வையத்துள்’ வாழச் சொல்கிறார் வள்ளுவர்; உலகை விட்டுக் காட்டிற்குச் சென்று கடுந்தவம் இயற்றச் சொல்லவில்லை. அடுத்து, ஏனோ தானோ என்று வாழாமல், வாழும் முறைப்படி வாழுமாறு அவர் வழிகாட்டுகின்றார்; ‘வாழ்வாங்கு’ என்ற சொல்லாட்சி இவ்வகையில் சிந்திக்கத்தக்கது. மூச்சு விடுவது மட்டும் வாழ்க்கை அன்று; ஓர் உயரிய குறிக்கோளை – இலக்கினை – வகுத்து, அதன்படி கடைசி மூச்சு வரை வாழ்ந்து காட்டுவதற்குப் பெயர்தான் ‘வாழ்க்கை’. வள்ளுவரின் அகராதியில் ‘வாழ்வாங்கு வாழ்பவன்’ எவனோ அவனே மனிதன். மூன்றவதாக, வள்ளுவர் வலியுறுத்துவது இம் மண்ணுலகிலேயே வானுலக வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம் என்பதை. ‘வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ என்னும் இக் குறட்பாவின் முடிப்பு முத்தாய்ப்பானது. ஆண் பெண்ணாக மாறுவது போல், மனிதன் தெய்வமாக மாறிவிடலாம் என்று வள்ளுவர் கூறவில்லை; ‘தெய்வத்துள் வைக்கப் படும்’ என்கிறார்; அதாவது, வையத்துள் – வாழ்வாங்கு வாழும் மனிதன் – இவ்வுலகிலேயே – மண்ணுலகிலேயே – வாழ்ந்தாலும், வானுலகில் உள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவானாம். வாழ்க்கையை நெறிமுறைப்படி, தூய்மையாக வாழ்பவன் மக்களுள் சிறந்தவனாக – தேவனாக – மதிப்பில் உயர்வான் என்பது வள்ளுவர் மொழிந்துள்ள விழுமிய உடன்பாட்டுச் சிந்தனை ஆகும்.

இல்வாழ்க்கை பற்றிய வள்ளுவரின் உடன்பாட்டுச் சிந்தனை

மொழி ஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர் தம் ‘திருக்குறள் மரபுரை’யில் குறிப்பிடுவது போல், இரு வகை அற வாழ்க்கைகளுள், இயல்பானது – பெரும்பான்மையானது – உலக நடப்பிற்கு இன்றியமையாதது – துறவறத்திற்கும் இன்றியமையாத துணையாவது – உலகில் உள்ள ஐம்புல இன்பமும் நுகர்வது – முறைப்படி கடைப்பிடிக்கப் பெறின், வீடு பேற்றையும் தருவது – நல்லறம் என்று உயர்ந்தோரால் சிறப்பிக்கப் பெறுவது இல்லற வாழ்க்கை (ப
.77). இல்லற வாழ்க்கையின் இன்றியமையாமையையும் சிறப்பையும் உடன்பாட்டு நோக்கில் திருவள்ளுவர் ‘இல்வாழ்க்கை’ அதிகாரத்தில் எடுத்துக் கூறுகிறார். இயல்பாகவும் முறைப்படியும் வாழும் இல்வாழ்க்கையினை ‘நல்லாறு’ (41) என்றும், ‘அறத்தாறு’ (46) என்றும் அவர் சுட்டுவது நோக்கத்தக்கது. இன்னும் ஒரு படி மேலாக, அறத்தினின்று தவறாத இல்லற வாழ்க்கை, தவ வாழ்க்கையை விட வல்லமை பொருந்தியது என்கிறார் வள்ளுவர்:

“ . . . . . . அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து”
(48)

சமணமும் பௌத்தமும் துறவறத்திற்கே முதன்மை தந்து இல்லறத்தைப் பழித்துப் பேச, வள்ளுவரோ,

“அறன்எனப் பட்டதே இல்வாழக்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று”
(49)

என முடிந்த முடிபாக மொழிவது மனங்கொளத்தக்கது.

வள்ளுவரின் கருத்தில் பிறரால் பழிக்கப்படாத வகையில் தூய்மையுடன் நடத்தப்படும் இல்லற வாழ்க்கையே அறம் என்று சிறப்பித்துச் சொல்லத் தக்கதாகும். “இல்லற மல்லது நல்லறமன்று” என்னும் ஔவைப் பெருமாட்டியின் கூற்றும் இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

தவ வாழ்க்கைக்கும் துறவு நெறிக்கும் மேலான ஒன்றாக இல்வாழ்க்கையை வைப்பது வள்ளுவரது உடன்பாட்டுச் சிந்தனையின் மணிமுடி ஆகும்.

முத்தாய்ப்பாக, ‘ஒருவன் அறநெறிப் படி இல்வாழ்க்கையை நடத்தி வாழ்வா-னானால், அத்தகையவன் அதற்கு மறுதலையான துறவு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன உள்ளது?’ என்பது வள்ளுவர் தொடுக்கும் பொருள் பொதிந்த கூரிய வினா.

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?”
(46)

பெரியபுராணம் சுட்டும் சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடு பெற்றவர் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

பெண்ணின் பெருமையைப் பேசும் திருவள்ளுவர்

‘ஒரு பெண் நேரடியாக வீடு பேற்றினை அடைவது என்பது முடியாது; மறு பிறப்பில் ஆணாகப் பிறந்து, அதன் பிறகே அவள் வீடு பேற்றினை எய்த முடியும்’ என்பது சமணர்களின் தனிப்பட்ட கொள்கை. பெண்ணுக்கு எதிரான இத்தகைய கொள்கைகளைத் திருவள்ளுவரிடம் ஒருபோதும் காண முடியாது. மேலும் ‘பெண் புத்தி பின் புத்தி’ என்றோ, ‘பெண்ணறிவு என்பது பெரும் பேதைமைத்து’ என்றோ, ‘பெண் எனும் மாயப் பிசாசு’ என்றோ, ‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே’ என்றோ பெண்ணினத்தை இழித்தும் பழித்தும் பேசுவதில் திருவள்ளுவரிடம் சற்றும் உடன்பாடு இல்லை. பெண்ணின் பெருமை பேசுவதில் – பெண்மையின் ஒளி மிகுந்த பக்கத்தைக் காட்டுவதில் உடன்பாடான சிந்தனைகளைக் கொண்டவராகவே அவர் காணப்படுகின்றார். முதற்கண், ‘வாழ்க்கைத் துணை’ என அவர் மனைவியைச் சுட்டுவதே கூர்ந்து நோக்கத்தக்கது. மேலும், ‘இல்லாள்’ என மனைவியைக் குறிப்பிடும் வள்ளுவர், ‘இல்லது என் இல்லவள் மாண்பானால்?’
(53) என வினவுவதும் குறிப்பிடத்தக்கது. ‘ஒருவனுடைய மனைவி நற்பண்பு உடையவள் ஆனால், அவனது வாழ்க்கையில் இல்லாதது எதுவும் இல்லை’ என்பது அவரது உறுதியான கருத்து. ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ (60) என்றும், ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும், ஒண்தொடி கண்ணே உள’ (1101) என்றும், ‘தம்இல் இருந்து தமது பாத்து உண்டற்றால், அம்மா அரிவை முயக்கு’ (1107) என்றும், ‘தாழ்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?’ (1103) என்றும் பெண்ணின் நல்லாள் தரும் இன்பத்தினை வள்ளுவர் போற்றிப் புகழ்ந்துள்ளார். திருக்குறளின் மூன்று பால்களிலும் பெண்ணின் பெருமையையே அவர் விதந்து பேசியுள்ளார். ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள?’ (54) என ஓர் இடத்தில் வினவும் வள்ளுவரே, ‘பெண்ணின் பெருந்தக்கது இல்’ (1137) எனப் பிறிதோர் இடத்தில் விடையிறுப்பதும் கருதத்தக்கது.

‘கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதி வாய்ந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்’ என்பது வள்ளுவர் பெண்மைக்குச் சூட்டும் புகழாரம்.

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
(56)

உடன்பாட்டுச் சிந்தனையின் உச்சம்

“வள்ளுவம் மானிட முயற்சியின் மாண்பு போற்றும் நூல்... மனித முயற்சியைப் போற்றுவதில் வள்ளுவர் இமயமென உயர்ந்து நிற்கிறார்... ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன், மெய் வருத்தக் கூலி தரும்’ என்கிறார். மனித முயற்சியை இதை விடவும் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசும் ஒரு பழங்கால அறிஞரை நாம் காண இயலாது” (வாழும் வள்ளுவம், பக்.
85-86) எனத் திருவள்ளுவரைப் போற்றி மொழிவார் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி.

‘அழுக்காறாமை’ அதிகாரத்தில் வரும் பின்வரும் குறட்பா உடன்பாட்டுச் சிந்தனை நோக்கில் நுண்ணிதின் நோக்கத்தக்கது:

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.”
(169)

நாம் இன்றும் நடைமுறையில் பார்க்கும் ஒரு கசப்பான உண்மை இது: நல்லவர்கள் நலிவுற்று வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகிறார்கள்; பொறாமை நெஞ்சமும் வஞ்சனையும் சூதும் வாதும் கொண்ட தீயவர்களோ மாடு மனை, தோட்டம் துரவு, காடு கன்று என அனைத்து வசதிகளுடனும் வாய்ப்புகளுடனும் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள். இதற்கான காரணம் யாது என வினவினால், ‘நினைக்கப்படும்’ – அதாவது ‘ஆராயப்பட வேண்டியது’ என்கிறார் வள்ளுவர். கடவுள், தலைவிதி, வினைப்பயன் ஆகியவற்றின் அடிப்படையில் இங்கே விளக்கம் தராமல், நாம் இன்னும் இதனை ஆராய வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவியல் பார்வையையும் உடன்பாட்டுச் சிந்தனையையும் ஒருங்கே தெளிவுபடுத்துகின்றது. வள்ளுவரின் அணுகுமுறையைப் புலப்படுத்துவதற்கு இதை விட ஏற்ற ஒரு குறளைக் காண்பது அரிது எனலாம்.

உலகம் குறித்த வள்ளுவரின் உடன்பாட்டுச் சிந்தனை

‘இன்னாது அம்ம இவ்வுலகம்’ என உலகின் கொடுமையை எடுத்துக்காட்டிய சங்கச் சான்றோர் பக்குடுக்கை நன்கணியார் அத்துடன் நின்று விடாமல், ஒரு படி மேலே சென்று, ‘இனிது காண்க இதன் இயல்பு ணர்ந்தோரே’ (புறநானூறு, 194) என அறிவுறுத்தி இருப்பது உடன்பாட்டுச் சிந்தனையின் அழுத்தமான வெளிப்பாடு ஆகும். ‘உலகம் கொடியது’ என்றோ, ‘உலகம் பொல்லாதது’ என்றோ வள்ளுவர் தம் நூலில் எங்கும் உலகம் பற்றிய எதிர்மறைச் சிந்தனையை எடுத்துரைக்கவில்லை; உலகத்தைக் குறித்து இழிவாகவோ, உலகின் மீது பழி சுமத்தியோ எங்கும் கருத்துக் கூறாத வள்ளுவர், ‘ஊழ்’ அதிகாரத்தில் வரும் ஒரு குறட்பாவில் உலகத்தின் இரு வேறுபட்ட இயற்கையை எடுத்துக்காட்டுகிறார். செல்வம் உடையவராதாலும் வேறு, அறிவு உடையவராதலும் வேறு என்கிறார் அவர்.

“இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.”
(374)

‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பதில் திருவள்ளுவர் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவரது கண்ணோட்டத்தில் உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்பதே இன்றியமையாதது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ (140) என இதனைச் சுட்டுகின்றார் அவர். இம் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர் என்பது அவரது அழுத்தமான கருத்து.
‘அறிவு உடைமை’ அதிகாரத்தில் இடம்பெறும் குறட்பா ஒன்றில், ‘உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வதே சிறந்த அறிவு’ (‘உலகம் தழீஇயது ஒட்பம்’,
425) என உரைக்கும் வள்ளுவர், ‘உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்’ என மொழிவது கருத்தில் கொள்ளத் தக்கதாகும்:

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.”
(426)

மேலும், ‘பண்புடைமை’ அதிகாரத்தில் உடன்பாட்டு நோக்கில், ‘பண்பு உடைய-வரிடத்தில் பொருந்தி இருப்பதாலேயே உலகம் உள்ளதாய் இயங்குகின்றது’ என வள்ளுவர் இரத்தினச் சுருக்கமாக மொழிந்துள்ளார்.

“பண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம்”
(996)

என்னும் அவரது வாக்கு இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

உலகத்தின் மீது பழி சுமத்தும் வகையில் எதுவும் பேசாத வள்ளுவர், உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் போதும், மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் ஆகிய புறக்கோலங்கள் வேண்டியதில்லை எனப் பறைசாற்றுகின்றார்.

“மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்தது ஒழித்தது விடின்”
(280)

என்பது அவரது உரத்த சிந்தனை ஆகும்.

உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்

எதையும் உடன்பாடாகச் சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், வாழ்வில் எப்போதும் உயர்வாகவே சிந்திக்க வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் திருவள்ளுவர். ‘எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது’ என்பது அவரது தெள்ளத் தெளிந்த கருத்து,

“உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”
(596)

என்பது ‘ஊக்கம் உடைமை’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஓர் அரிய குறட்பா ஆகும்.
வாழ்வில் எப்போதும் ஒருவர் மேற்கொள்ளும் இலக்கு – குறிக்கோள் – உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்; கொண்ட இலக்கை – குறிக்கோளை – அடைவது என்பது அடுத்தது. இலக்கை அடைய முடியாவிட்டாலும் – குறிக்கோள் கைகூடாவிட்டாலும் – உயர்வான ஒன்றை இலக்காக – குறிக்கோளாக – கொள்வதிலே ஒருவர் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது.

“கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது”
(772)

எனப் ‘படைச் செருக்கு’ அதிகாரத்தில் வரும் குறட்பா இவ் வகையில் நினைவு கூரத் தக்கது. ‘காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறி தவறாமல் எய்த அம்பினை ஏந்துதலை விட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது’ என்பது இக் குறட்பாவின் பொருள்.

நகைச்சுவை உணர்வைப் போற்றும் திருவள்ளுவர்

உடன்பாட்டுச் சிந்தனையும் நகைச்சுவை உணர்வும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. உடன்பாட்டுச் சிந்தனையாளர்கள் எப்போதும் நகை முகத்தினராகவே காட்சி அளிப்பார்கள்; வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால், நகைச்சுவை உணர்வு படைத்தவர்கள் எதையும் உடன்பாட்டு நோக்கிலேயே அணுகுவார்கள்.

‘இடுக்கண் அழியாமை’ அதிகாரத்தின் முதல் குறட்பாவில், ‘துன்பம் வரும் போது அதற்காகக் கலங்காமல் நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப் போன்றது வேறு இல்லை’ என்கிறார் வள்ளுவர்.

“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்துஊர்வது அஃது ஒப்பதுஇல்.”
(621)

ஒருவர் வாழ்க்கையில் தம்மைத் தாக்க வரும் துன்பத்தையும் கலங்காமல் நின்று, நகைமுகத்துடன் அதனை எதிர்கொள்வது என்றால், உடன்பாட்டுச் சிந்தனை ஒன்றாலேயே அது இயலும்.

‘நகல்வல்லர்க்கு உலகம் ஒளிபடைத்ததாகவே தோன்றும்!’

நம்பிக்கைப் பார்வை – உடன்பாட்டு நோக்கு – வாழ்வில் என்றென்றும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொலுவிருக்கச் செய்யும். எதிர்மறைச் சிந்தனை வாழ்வில் அவநம்பிக்கையையும் விரக்தியையும் கொண்டு வந்து சேர்க்கும். ‘பிறரோடு கலந்து பழகி மகிழும் திறம் இல்லாதவர்க்கு, மிகப் பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகத் தோன்றும்’ என வள்ளுவர் பெருமானும் ‘பண்புடைமை’ அதிகாரத்தில் வரும் குறட்பா ஒன்றில் எதிர்மறை வாய்பாட்டால் இக்கருத்தினை எடுத்துரைப்பார்:

“நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.”
(999)

எனவே, ‘பிறரோடு கலந்து உரையாடி மகிழ முடிந்தவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம் எப்போதும் ஒளி படைத்ததாகவே தோன்றும்’ என்பது விளங்கும். இத்தகையோரை ‘நகல் வல்லர்’ என்னும் அழகிய தொடரால் குறிப்பார் வள்ளுவர்.

திருவள்ளுவரின் நோக்கில் உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு

உடம்பைப் பொறுத்த வரையில், வள்ளுவர் ‘காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா!’ என்னும் கருத்துடையவர் அல்லர். நம் முன்னோர் உடம்பினைச் சுட்டுவதற்கு உண்மை என்ற பொருளைத் தரும் ‘மெய்’ என்னும் சொல்லைக் கையாண்டிருப்பதே அவர்களது சிந்தனைத் திறத்தினையும் தெளிவினையும் ஒருங்கே புலப்படுத்துவதாகும். வள்ளுவரும் ‘காதற் சிறப்பு உரைத்தல்’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறட்பா ஒன்றில் தலைவனின் கூற்று வடிவில் உடம்புக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை – தொடர்பினை – தெளிவு-படுத்துகின்றார்:

“உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.”
(1122)

‘உடம்புக்கும் உயிருக்கும் என்ன உறவு, அன்ன உறவு இவளுக்கும் எனக்கும்’ என இங்கே தன் காதற் சிறப்பினை எடுத்துரைக்கின்றான் ஒரு தலைவன்.

உடம்பு மட்டும் இருந்து, உயிர் இல்லை என்றால் அது ‘பிணம்’; உயிர் மட்டும் இருந்து, உடம்பு இல்லை என்றால் அது ‘பேய்’. எனவே, உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு என்பது காதலர் உறவுக்குப் பல்லாற்றானும் பொருந்தி வரும் ஓர் அற்புதமான உவமை ஆகும்.

காமத்துப் பாலில் ‘காதற் சிறப்பு உரைத்தல்’ அதிகாரத்தில் உடன்பாட்டு நோக்கில் உடம்பொடு உயிரிடை உள்ள நட்பு குறித்துக் கருத்துரைத்த வள்ளுவர், அறத்துப் பாலில் ‘நிலையாமை’ அதிகாரத்தில் தத்துவ நோக்கில் ஒரு குறட்பாவினை யாத்துள்ளார். அக் குறட்பா வருமாறு:

“குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.”
(338)

‘உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு, தான் இருந்த கூடு தனியே இருக்க, அதை விட்டு வேறு இடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது’ என்பது இக் குறட்பாவின் தெளிவுரை.

திருவள்ளுவர் போற்றும் மன நலம்

உடம்பொடு உயிருக்கு உள்ள நல்லுறவு குறித்து இரு குறட்பாக்களில் பேசிய வள்ளுவர், மன நலத்தின் அருமையும் பெருமையும் பற்றிப் பல குறட்பாக்களில் கூறியுள்ளார். ‘மனம் ஒரு குரங்கு’ என்றோ, ‘மனம் என்னும் அடங்கா மாடு’ என்றோ குறிப்பிடாமல், ‘மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’
(457) என அவர் இரத்தினச் சுருக்கமாக மொழிந்துள்ளார். ‘மனநலத்தின் ஆகும் மறுமை’ (459) என்றும், ‘மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி’ (453) என்றும், ‘மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்’ (456) என்றும் மன நலத்தின் மேன்மையை ஒல்லும் வகை எல்லாம் அவர் புலப்படுத்திச் சென்றுள்ளார். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்’ (34) என அவர் ‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்தில் அறுதியிட்டு உரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல மனம் பெற்ற மாந்தரை ‘மனம் தூயார்’ (356) என்னும் அழகுத் தொடரால் போற்றுகின்றார் வள்ளுவர்.

உடல் – உள்ளம் – உயிர் மூன்றும் இயைந்து நல்லுறவுடன் வாழும் வாழ்வே வள்ளுவரின் நோக்கில் விழுமிய வாழ்வு; நிறைவான வாழ்வும் கூட.

திருவள்ளுவரின் கருத்தில் உறங்குவது போல்வது இறப்பு

‘சாதலும் புதுவது அன்றே’ (புறநானூறு,
192) என்பார் சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். சாவைக் குறித்து அஞ்சி அஞ்சி வாழாமல், செத்துச் செத்துப் பிழைக்காமல், சாவை இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. ‘நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான்’ என்று சொல்லப்படும் நிலையாமையை இவ்வுலகின் பெருமையாகக் கருதுவார் அவர்.

“நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.”
(336)

வள்ளுவரின் வாக்கில் மரண பயத்திற்குச் சிறிதும் இடம் இல்லை. அவரது நோக்கில், ‘இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது’:

“உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.”
(339)

‘மூச்சுத் தொடரின் முற்றுப்புள்ளி’யான சாவையும் கூட உறக்கமாகக் காணும் வள்ளுவரின் பார்வை இயல்பானது; உடன்பாட்டு நோக்கில் அமைந்தது.

திருக்குறளின் தொடக்கமும் முடிவும்

‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்துடன் தொடங்கும் திருக்குறள், ‘ஊடல் உவகை’ அதிகாரத்துடன் நிறைவு பெறுவதிலும் உடன்பாட்டுச் சிந்தனையின் தாக்கத்தினைக் காண முடிகின்றது.

“அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு”
(1)

எனக் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற உலகம் பற்றிய சுட்டுடன் தொடங்கும் திருக்குறள்,

“ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்குஇன்பம்
கூடி முயங்கப் பெறின்”
(1330)

எனக் காதல் வாழ்க்கையில் ஊடலுக்குப் பின் கூடித் தழுவுதலில் கிடைக்கும் இன்பம் பற்றிய குறிப்புடன் நிறைவடைவது சிறப்பு. ‘அகர’த்தில் தொடங்கும் திருக்குறள் ‘னகர’த்தில் முடிவது பிறிதொரு நயம். “குறளுக்கும், அதற்கு
400 ஆண்டுகளுக்கு முன் எழுந்த மனு ஸ்மிருதிக்கும் உள்ள வேற்றுமை என்னே! என்னே! பின்னையதில், பிராமணக் கொள்கையின் ஆட்சியின் கீழ், உலகையும் வாழ்வையும் பொய்யெனக் கொள்ளும் உலகு – வாழ்வு மறுதலைக் கொள்கையாம் ‘எதிர்மறைக் கொள்கை’யோடு – அவற்றை மெய்யெனக் கொள்கையும் ‘உடன்பாட்டுக் கொள்கை’யும் ‘போனாற் போகிறது’ என்று விட்டு வைக்கப்பட்டிருக்கின்றது. குறளிலோ ‘உலகு-வாழ்வு மறுதலைக் கொள்கை’ வானத்தே தொலைவில் தோன்றும் மப்புப் போலவே கிடக்கின்றது. காமத்துப் பாலில் வரும் 250 குறள்களில் – இவையே நூலின் முடிவான பகுதியாக அமைந்துள்ளன – உலக நிலைக் காதல் போற்றப்பெறுகிறது” (மொழி-பெயர்ப்பு: தெ.பொ.மீனாட்சிசுந்தரன், நீங்களும் சுவையுங்கள், ப.6) என்னும் ஆல்பர்ட் சுவைட்சரின் மேற்கோளுடன் இக் கட்டுரை நிறைவு பெறுவது சாலவும் பொருத்தமாக இருக்கும்.

 

முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்
தமிழ்த்துறை
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்