'உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்' கண்ணதாசன்

முனைவர் இரா.மோகன்
 

கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்: 24.06.2015

கி.மு., கி.பி. என்பது போல், க.மு., க.பி. எனத் தமிழ்த் திரை உலகில் வழங்கி வரும் இரு சுருக்கக் குறியீடுகள் உண்டு. 'கண்ணதாசனுக்கு முன்', 'கண்ணதாசனுக்குப் பின்' என்பன அவற்றிற்கான விளக்கங்கள் ஆகும். தமிழ்த் திரை உலகில் கண்ணதாசனுக்கு முன் பாடல் இயற்றி வந்தவர்கள் பெரும்பாலும் வட சொற்களைக் கலந்து, 'வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ' என்றும், 'சம்சாரம் சம்சாரம், சகல தர்ம சாரம் - சுக ஜீவன ஆதாரம்' என்றும், 'சரச ராணி கல்யாணி - சுக, சங்கீத ஞான ராணி மதிவதனி' என்றும் வடசொற்களைக் கலந்து பாடல்கள் எழுதி வந்தனர். இங்ஙனம் வடசொற்களை மிகுதியாகக் கலந்து எழுதும் போக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, 'கட்டான கட்டழகுக் கண்ணா! - உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?... பட்டாடை கட்டி வந்த மைனா! - உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?' என்றாற் போல் இயல்பான - எளிய - அழகிய - தமிழ்ச் சொற்களைக் கையாண்டு பாடல் எழுத முற்பட்டார் கண்ணதாசன். 1948-ஆம் ஆண்டில் திரைக்கு எழுதிய முதற் பாடலிலேயே, 'கலங்காதிரு மனமே - நீ கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என நம்பிக்கை விதையைக் கேட்பவர் நெஞ்சில் ஆழமாக ஊன்றிய கவிஞர் அவர்.

'கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா - அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!'


என்று கண்ணதாசன் காதலைப் பாடிய போது, அது 'இளமையின் தேசிய கீதமானது!'

'காலமகள் கண் திறப்பாள் சின்னையா - நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா - அதில்
நமக்கு ஒரு வழி இல்லையா என்னையா?'


என்று கண்ணதாசன் சோகத்தைப் பாடிய போது, அது 'ஆயிரம் கண்ணீருக்கு ஆறுதல் ஆனது!'

'வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்!'


என்று கண்ணதாசன் தத்துவம் பாடிய போது 'வாழ்க்கை தனது முகமூடியைக் கழற்றி முகத்தைக் காட்டியது!'

இலக்கியத் தகுதியும் தரமும்

திரைப் பாடலுக்கு இலக்கியத் தகுதியைத் தேடித் தந்ததில் கண்ணதாசனுக்குப் பெரும்பங்கு உண்டு. முக்தா வி.சீனிவாசன் குறிப்பிடுவது போல், 'திரைப்படப் பாடல்களில் இலக்கிய நயத்தைக் கொண்டு வந்த முதல் கவிஞர் கண்ணதாசன்... கன்னித் தமிழுக்குக் கவிதைப் பட்டாடை உடுத்தினவர் கண்ணதாசன்'. பக்தி, காதல், தத்துவம், தாலாட்டு, நகைச்சுவை என எந்தப் பாடல் பாடினாலும் அதில் கண்ணதாசன் முத்திரை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதிந்திருக்கும்.

'உழைக்கும் கைகள் எங்கே
உண்மை இறைவன் அங்கே!
அணைக்கும் கைகள் யாரிடமோ
ஆண்டவன் இருப்பது அவரிடமே'


என்று கண்ணதாசன் பக்தியைப் பாடிய போது, பக்திச் சுவைக்கே ஒரு புதிய பரிமாணம் சேர்ந்தது.

'கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை - அந்தக்
காயத்திலே உடம்பு துடிக்கவில்ல - நீ
கண்ணால் அடித்த அடி வலிக்குதடி - அந்தக்
காயத்திலே மனது துடிக்குதடி!'


என்று கண்ணதாசன் காதலைப் பாடிய போது அங்கே கண்ணியமும் கட்டுப்பாடும் கைகுலுக்கிக் கொண்டன.

'ஆண்: நான் காதலெனும் கவிதை சொன்னேன்
     கட்டிலின் மேலே...
பெண்: அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
     தொட்டிலின் மேலே'


என்று கண்ணதாசன் இல்லறமாம் நல்லறத்தின் இனிமையை இசைத்த போது அங்கே இங்கிதம் கோலோச்சி நின்றது.

'கள்ளம் இல்லாப் பிள்ளை உள்ளம்
நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே
யார் தந்தது?
எல்லை யில்லா நீரும் நிலமும்
நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம்
ஏன் வந்தது?'


என்று ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்த கடவுள், கண்ணில் கண்ட மனிதனிடம் கேட்பதாகக் கண்ணதாசன் பாடிய வைர வரிகள் பொட்டில் அடித்தாற் போல அமைந்து நம்மை உலுக்கின் உசுப்பின!

கண்ணதாசன் செய்து காட்டிய புரட்சி

சங்க இலக்கியம், திருக்குறள், தேவாரம், கம்ப ராமாயணம், திருக்குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம், சித்தர் இலக்கியம் முதலான முன்னைப் பழைய இலக்கியங்களின் கருத்துக்களைப் பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிமைப்-படுத்திக் கூறும் கலையிலும் கைதேர்ந்தவராக விளங்கினார் கண்ணதாசன்.

'இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயா கியர்எம் கணவனை
யானா கியர்நின் நெஞ்சு நேர்பவளே'


என்று சங்க இலக்கியம் ஒரு பெண்ணையே பேச வைத்தது. கவியரசு கண்ணதாசன் தான் முதன்முதலில் இப்போக்கினை அடியோடு மாற்றி ஓர் ஆண்மகனைப் பின்வருமாறு பேச வைத்தார்:

'இங்கேயே காலமெல்லாம் கடந்துவிட்டாலும் - ஓர்
இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்
மங்கை உனைத் தொட்டவுடன் மறைந்துவிட்டாலும் - நான்
மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!'


இது கண்ணதாசன் திரைப்பாடல் வரலாற்றில் செய்து காட்டிய ஓர் அரிய புரட்சி ஆகும்.

பாட்டுத் திறம்

அருமையும் எளிமையும் அழகும் ஆற்றலும் பொருந்திய சொற்களை இரத்தினச் சுருக்கமான முறையில் கையாண்டு மணி வார்த்தைகளை - பொன்மொழிகளை - படைப்பதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே ஆவார். சொர்க்கம் எங்கே இருக்கிறது தெரியுமா? இதோ, அவரது சொற்களிலேயே அதனைக் காண்போம்:

'தங்கக் கட்டி போலே மனைவியுண்டு!
சிங்கக் குட்டி போலே மழலையுண்டு!
வீட்டுக்கு நடுவே சொர்க்கமுண்டு!'


கவிதைக்கும் கருவினில் வளரும் மழலைக்கும் அடிநாதம் துடிப்புத்தான்; ஆனால் சிறுவேறுபாடு உண்டு. இதனை கண்ணதாசன் தமக்கே உரிய பாணியில் ஒரு பாடலில் கச்சிதமாகப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:

'ஒருவரின் துடிப்பினிலே
விளைவது கவிதையடா!
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா!'


புதிய கற்பனை

பெண்ணின் இடைக்கு இதுவரை எத்தனையோ கவிஞர்கள் எத்தனை எத்தனையோ உவமைகளைக் காட்டியுள்ளனர். கண்ணதாசனும் தம் பங்கிற்குச் 'சின்ன இடை', 'மின்னல் இடை', 'சிறுநூலென்ற இடை' என்றாற் போல் பலவாறு பெண்ணின் இடையழகை வருணித்துப் பாடியுள்ளார். ஆனால் ஓர் இடத்தில்,

'இடையென்ன ஏழை இடை தானே?'

என்று கண்ணதாசன் பாடி இருப்பது, உண்மையில் இதுவரை வேறு யாரும் பாடாத புதிய கற்பனை ஆகும்.

கண்ணதாசன் படைக்கும் காதலன் ஒருவன் தன் உள்ளம் கவர்ந்த காதலியின் கூந்தலைத் தொடுகின்றான்; கண்களைத் தொடுகின்றான்; இதழ்களைத் தொடுகின்றான். ஆனால், அவளது இடையை மட்டும் தொடவில்லையாம். என்ன காரணம் என்று தெரியுமா?

'தொட்டால் ஓடியுமென்று இடையை மட்டும் தொடாமல்
விட்டானாம்!'


வரைவிலக்கணம் தருதல்

வரைவிலக்கணம்
(Definition) தருவது போன்ற பாங்கில் சொல்ல வந்த பொருளைச் சுருங்கக் சொல்லி, விளங்க வைக்கும் திறமும் நன்கு கைவரப் பெற்றவர் கண்ணதாசன். படித்தவுடன் படிப்பவர் இதய சிம்மாசனத்தல் ஏறி அமர்ந்து கொள்ளும் சில சான்றுகள் இதோ:

'நல்ல மனைவி நல்ல பிள்ளை
நல்ல குடும்பம் தெய்வீகம்!'

• 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?'

• 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'

• 'இல்லறம் என்பது என்ன?
அது இருவர் அமைத்திடும் கோயில்!'

• 'வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்?'


பழைய பாடலும் புதிய பாடலும்

கவியரசு கண்ணதாசன் நிறுத்தி நிதானமாகப் பாடியதையே, இன்றைய பாடலாசிரியர்கள் வேக வேகமாகப் பாடியுள்ளனர்; கண்ணதாசன் ஒரு முறை சொன்னதையே இன்றைய பாடலாசிரியர்கள் மூன்று முறை அடுக்கிச் சொல்லி-யுள்ளனர்.

'அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே?'

என்பது கண்ணதாசன் 'பழநி' என்ற படத்திற்காக எழுதிய ஒரு புகழ் பெற்ற பாடல். இதையே வேறு சொற்களில் வேகமாக,

'அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்குப் பதிலை'


என்று பாடுகின்றது இன்றைய புதிய பாடல் ஒன்று.

'இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி,
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி'


என்னும் கண்ணதாசனின் வரிகளே இன்றைய புதிய பாடலில்,

'நீ பாதி நான் பாதி கண்ணே,
அருகில் நீயின்றித் தூங்காது கண்ணே'

என்று புதுக்கோலம் பூண்டுள்ளன.

இன்றைய புதிய திரையிசைப் பாடல் என்பது உலகம் வியக்கும் அழகி ஐஸ்வர்யா ராய் மாதிரி; கருத்தாழமும் சொல் நயமும் களிநடம் புரிந்து நிற்கும்; கண்ணதாசனின் பழைய பாடலோ உலகம் போற்றும் அன்னை தெரசா மாதிரி. ஆம்! இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாது, உறவைப் பிரிக்க முடியாது - நம்மிடம் இருந்து கவியரசு கண்ணதாசனின் கருத்தாழமும் கற்பனை வளமும் மிக்க திரையிசைப் பாடல்களையும் தான்!.


பேராசிரியர்; இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.