மு.வ. எனும் இரண்டு எழுத்து இனியவர்

கவிஞர் இரா.இரவிமு.வரதராசன் எனும் மு.வ. அவர்கள் மிகச்சிறந்த ஆளுமையாளர். இன்றைய இளையதலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டிய பண்பாளர். மு.வ. அவர்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை முனைவர் இரா.மோகன் அவர்கள் மூலம் நிறையவே படித்து இருக்கிறேன்.

இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் வட ஆற்காடு, திருப்பத்தூர் வட்டம், ‘வேலம்’ என்ற சிறு கிராமத்தில் முனுசாமி, அம்மாக்கண்ணு பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ‘திருவேங்கடம்’. தாத்தா பெயர் வரதராசன். அப்பெயரே நிலைத்தது.

தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராக பணி தொடங்கி படிப்படியாகவே வாழ்வின் உச்சம் தொட்டவர். 1939ல் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி, பேராசிரியர், இப்படியே உயர்ந்து 1945ல் தமிழ்த்துறைத் தலைவரானார். 1948ல் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முதன்முதலில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார். 1939 முதல் 1961 வரை வரலாற்று சிறப்புமிக்க பச்சையப்பன் கல்லூரியிலேயே பெரும்பணி செய்தார். தமிழ்த்துறைத் தலைவராக முத்திரை பதித்தார். 1971 முதல் 1974 வரை புகழ்மிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.

மு.வ. அவர்கள் திரு.வி.க. அவர்களின் மீது அளவற்ற அன்பும், மரியாதையும், பாசமும் மிக்க இனியவர். மு.வ. அவர்கள் தன்னுடைய ஒவ்வோரு பிறந்த நாளின் போதும் திரு.வி.க. அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். திரு.வி.க. மறைந்ததும் பாரி நிலையம் அருகிலிருந்த பம்மல் சம்பந்தன் அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று வந்தார். மு.வ. அவர்களின் மூன்று மகன்கள் மருத்துவராக இருந்த போதும் ஆங்கில மருத்துவம் ஏற்காமல் இறுதி வரும் வரை இயற்கை மருத்துவமே ஏற்றுக் கொண்டார். திரு.வி.க. வரலாறு நூல் எழுதினார். காந்தியடிகள், அறிஞர் பெர்னாட்ஷா, கவிஞர் தாகூர் மு.வ. மிகவும் மதித்த நால்வர் பற்றியும் வரலாறு நூல் எழுதினார். கீதாஞ்சலியை 100 முறை படித்து இன்புற்றவர்.

மு.வ. அவர்களின் வீட்டில் இடைஞ்சலாக உள்ளது என மாதுளம் மரத்தை வெட்ட முற்பட்ட போது, உடன் தடுத்து விட்டார். காரணம் அவர் மிகவும் மதிக்கும் திரு.வி.க. அவர்கள் மு.வ. இல்லம் வந்தபோது துப்பிய விதையால் முளைத்த மரம் அது. குருவின் எச்சில் பட்ட விதை பிரசாதம் என்று போற்றினார்.

தான் வாழ்ந்த சென்னை செனாய் நகர் பூங்காவிற்கு திரு.வி.க. பெயர் சூட்ட வேண்டுமென்று அப்போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அண்ணாவும் அதனை நிறைவேற்றினார். மு.வ. மறைந்ததும் மு.வ. படத்தை பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா திறந்து வைத்தார்.

மு.வ. தான் தொடங்கிய பள்ளிக்கு திரு.வி.க.வின் பெயர் சூட்டினார். தான் எழுதிய நூல்களுக்கு வந்த ஆசிரியர் உரிமைத் தொகையை பள்ளிக்கு வழங்கினார்.

மு.வ. அவர்கள் எழுதிய நூல் 1939ம் ஆண்டு குழந்தைப் பாடல்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்பாக வந்தது. திரு.வி.க. அவர்கள் மு.வ.-விடம் சொந்தமாக நூல் பதிப்பித்திட ஆலோசனை வழங்கினார். பயனுள்ள ஆலோசனை இது.

1944ம் ஆண்டு வெளிவந்த ‘செந்தாமரை’ நாவல் மு.வ. அவர்களின் மனைவி ராதா அம்மையாரின் நகையை அடகு வைத்து சொந்தமாகப் பதிப்பித்தார். விற்பனை உரிமையை மட்டும் பாரி நிலையத்திற்கு வழங்கினார். பாரி நிலையம் செல்லப்பன் அவர்களும், மு.வ. அவர்களும் இணைபிரியாத நட்பை இறுதி வரை தொடர்ந்து, நட்பிற்கு இலக்கணம் வகுத்தனர். மு.வ.-வால் பாரி நிலையம் வளர்ந்தது. பாரி நிலையத்தால் மு.வ. வளர்ந்தார்.
மு.வ. அவர்களின் இல்லத் திருமணங்களை பாரி நிலைய செல்லப்பன் அவர்கள் முன்நின்று நடத்தினார். அதே போல் செல்லப்பன் அவர்களின் மகன் இராதாகிருஷ்ணன் திருமணத்திற்காக சோவியத் ரசியாவில் இருந்த மு.வ. அவர்கள், தமிழகம் வந்து சென்றார். அந்த அளவிற்கு இருவரது நட்பும் சிறந்து விளங்கியது. மு.வ. மறைந்த பின்னும் அவருக்கு நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு சிறப்பித்தது பாரி நிலையம். இன்றும் மு.வ. நூல் கிடைத்திட காரணமாக இருப்பது பாரி நிலையம்.

மு.வ. அவர்கள் தான் குருவாக மதிக்கும் திரு.வி.க. மீது மட்டும் அன்பு செலுத்தவில்லை தனது சீடர்கள் மீதும் அன்பு செலுத்தினார். நூலிற்கு அணிந்துரை தன்னை விட தகுதி மிக்க பெரியவர்களிடம் தான் எல்லோரும் வாங்குவார்கள். ஆனால், மு.வ. அவர்கள் தன்னிடம் பயின்ற மாணவர்கள், ம.ரா.போ. குருசாமி, ரகு நாயகம், வேங்கடசாமி, சீனிவாசன் ஆகில் நால்வர்களிடம் அணிந்துரை வாங்கி அவர்களுக்கு புகழ் சேர்த்தார். பெரிய உள்ளம் பெற்றவர் மு.வ..

செல்லப்பிள்ளை தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்கள் மீதும் அன்பு செலுத்தினார். தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களைக் காதலித்து மணம் முடித்த போது வாழ்த்தி வரவேற்றார். “தமிழ் உன்னை வளர்த்தது, நீ தமிழை வளர்க்க வேண்டும்” என்று எழுதி வாழ்த்தி உள்ளார்.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் தன் குரு

மு .வ . போலவே நூல்கள் எழுதிக் குவித்து வருகிறார் .130 நூல்கள் எழுதி விட்டார். முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களை மற்றுமொரு மு .வ .என்றால் மிகையன்று .மு .வ .போலவே கதை ,கவிதை ,நாவல் ,கட்டுரை என தெளிந்த நீரோடைப் போன்று, நல்ல தமிழில் எழுதி வருகிறார் .இன்று மு.வ .பரம்பரை வளர்ந்து வருகின்றது .

மு.வ. அவர்கள் தன் குரு திரு.வி.க. மீது அன்பு செலுத்தியது போலவே, தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் தன் குரு மு.வ. மீது அன்பு செலுத்தி வருகிறார். சாகித்ய அகதெமி சார்பில் மு.வ. வாசகம் என்ற நூல் எழுதி பெருமை சேர்த்தார். மு.வ. பற்றி பல நூல்கள் எழுதி உள்ளார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்க்கு கவிதை பரம்பரை உருவானது போல மு.வ. அவர்களுக்கும் மு.வ. பரம்பரை என்று உருவாகி உலகம் முழுவதும் பரந்து விரிந்து தமிழ் பரப்பி வருகின்றனர்.

மு.வ. அவர்கள் தான் என்ற அகந்தை இல்லாத எளியவர், இனியவர், அவர் ஒரு சகலகலா வல்லவர். பேராசிரியர் பணி செய்து கொண்டே எழுத்துத் துறையில் உள்ள அத்தனை வகைகளிலும் எழுதியவர், நாவல், கவிதை ,சிறுகதை, கட்டுரை, சிறுவர் பாடல், கடித இலக்கியம், பயண இலக்கியம், வரலாற்று நூல், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்ற சகலமும் எழுதிக் குவித்த வல்லவர். அவருடைய முதல் நாவலுக்கு ‘முருங்கை மரம்’ என்றே பெயரிட்டார். மு.வ.வின் மாணவர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் ‘செந்தாமரை’ என்று பெயர் சூட்டலாமா? என்று கருத்து சொன்ன போது, தனது மாணவர் தன்னை விட சிறியவர் என்று எண்ணாமல் உடனே அக்கருத்தை ஏற்று ‘செந்தாமரை’ என்று பெயர் சூட்டினார்.

பேராசிரியர் க. அன்பழகன், செந்தாமரை நாவல் மிகவும் பிடித்த காரணத்தால் தன் மகளுக்கு தாமரை என்று பெயர் சூட்டினார். ஒரு விழாவில் அவரே சொன்ன செய்தி இது. பொதுவாக நாவல்கள் பிரபல இதழ்களில் தொடராக வந்து கடைசியில் நூலாக வரும். ஆனால் மு.வ. அவர்கள் எழுதிய 13 நாவல்களில் பாவை, அந்த நாள் மட்டும் லோகோபகாரி, தமிழ்முரசு இதழ்களில் தொடராக வந்து நூலானது. மற்ற 11 நாவல்களும் நேரடியாகவே நூலாக வந்து விற்பனையில் சாதனை படைத்தது.

திருக்குறளுக்கு உரை பலர் எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள், ஆனால் இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரைக்கு ஈடான உரை, இதுவரை வரவில்லை, இனி வரப்போவதும் இல்லை. மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரை விற்பனையில் சாதனை படைத்தது. 200-க்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளது என்றாலை அதன் தரம் நன்கு விளங்கும்.

சமஸ்கிருதம் கலந்து எழுதி வந்த காலத்தில் நல்ல தமிழில், தெளிந்த நீரோடை போல எழுதியவர் மு.வ. அவர்கள்.. இன்றைய சில எழுத்தாளர்கள் போல பேச்சுநடையில் எழுதி தமிங்கிலம் கலந்து தமிழ்க்கொலை புரிவதில் மு.வ. அவர்களுக்கு உடன்பாடு இல்லை. நல்ல தமிழிலேயே நாவல் படைத்தார். கடித இலக்கியமும், பயண இலக்கியமும் யாவும் மிக நல்ல நடை. படித்த பண்டிதர்களுக்கும் புரியும். புதிதாகப் படித்து பழகுவோருக்கும் பிடிக்கும். மு.வ. அவர்களின் நூல் இல்லாத இல்லம் இல்லை என்ற அளவிற்கு மு.வ. வின் வாசகர் வட்டம் மிகப்பெரியது. நாவலில் வரும் பாத்திரங்களின் பெயர்களை தனது குழந்தைகளுக்கு வைத்திட்ட வரலாறும் உண்டு.

கலை என்பதற்கு மு.வ. அவர்கள் தரும் விளக்கம் மிகவும் அருமை. கலையின் பயன் இரண்டு : “ஒன்று – கிடைக்கும் சிறு ஓய்வு காலத்தை இன்பமாக்க் கழிக்கச் செய்வது, மற்றொன்று – நம்மை அறியாமல் வாழ்க்கையைத் திருத்தி உயர்த்துவது” இன்றைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். நாம் படைக்கும் படைப்பு என்பது வாசகரை திருத்துவதாகவும், உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும். அதுதான் சிறந்த படைப்பு. அப்படி படைத்ததால் தான் மு.வ. அவர்கள் நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாசகர் மனங்களில் நிலைத்து நிற்கிறார்.

மு.வ. எழுதிய ‘காந்தியடிகள் நூல்’ படித்தால், காந்தியடிகள் பற்றி பிம்பம் மேலும் மேலும் உயர்த்துவதாக இருக்கும். மதுரை வந்த போது காந்தியடிகள் அரையாடை அணிந்த வரலாற்று உண்மையை அப்படியே நூலில் பதிவு செய்துள்ளார்.

மு.வ. அவர்கள் எழுதிய ‘கவிஞர் தாகூர் நூல்’ படித்தால் கீதாஞ்சலி, நோபல் பரிசு கிடைத்தது தகும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

மு.வ. அவர்கள் மிகவும் மதித்த மிகச் சிறந்த ஆளுமை திரு.வி.க. அவர்கள் பற்றி நூல் படிக்கும் போது திரு.வி.க.வின் உயர்ந்த உள்ளம் சிறந்த பண்பு யாவும் விளங்கும்.

மு.வ. அவர்கள் எழுதிய அறிஞர் பெர்னாட்ஷா பற்றி நூல் படித்தால், மு.வ. அவர்களை தமிழகத்தின் பெர்னாட்ஷா என்று அழைத்த்து முற்றிலும் பொருத்தம் என்ற முடிவுக்கு வரமுடியும்.
கடித இலக்கியம் என்ற பகுதியை தமிழகத்தில் தொடங்கி வைத்தவர் மு.வ. என்றால் மிகையன்று. ‘தங்கைக்கு’ என்ற நூலில் படி படி என்கிறார். சிலப்பதிகாரம் படி, கஸ்தூரிபாய் காந்தியைப் படி. வரலாறு படி, பிறரிடம் அன்பு செலுத்தி என்கிறார்.

‘தம்பிக்கு’ என்ற நூலில் தமிழ்ப்பற்று விதைத்துள்ளார். “தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்த வல்லது.. தமிழ் ஆட்சிமொழியாகவும் ஆனால் தவிர தமிழுக்கு எதிர்காலம் இல்லை, ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும்”

மு.வ. அவர்களுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேதகிரி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மை தான். நோபல் பரிசு பெறும் தகுதி மு.வ. அவர்களுக்கு முற்றிலும் உண்டு.

வரலாற்று சிறப்பு மிக்க மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரை நூலில் இருந்து பதச்சோறாக ஒன்று மட்டும்.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்
தின்னும் அவர்ககாணல் உற்று
குறள் 1244

கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக ! அவரைக் காண வேண்டுமென்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

திருக்குறள் தெளிவுரை பல உரைகள் படித்துப் பார்த்தேன். மு.வ. அவர்கள் எழுதியது போன்று எவருமே எழுதவில்லை. ஒரு காதலி மனநிலையில் இருந்த மு.வ. அவர்கள் விளக்கவுரை எழுதி உள்ளார். காதல் கவிதைகள் எழுதிடும் பலருக்கும் முன்னோடி திருவள்ளுவர் என்றால் அதனை எளிமைப்படுத்தி வழங்கியவர் மு.வ. அவர்கள்.

மு.வ. அவர்கள் பொறுப்பில் இருந்த போது மிகச்சிறந்த தமிழ்அறிஞர்களை அழைத்து அவர்களது சிறந்த நூலை பாட நூலாக்கி அதில் இருந்து வரும் பெருந்தொகையை அவர்களது மகளுக்கு திருமணம் செய்து வையுங்கள், வீடு கட்டுங்கள் என்று சொல்லி வறுமையில் வாடிய பல தமிழறிஞர்களை வளமையாக்கியவர். அவர் எழுத்தில் அடிக்கடி எழுதிடும் வாசகம். நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் வாழ வேண்டும்’ என்பார். மு.வ. அவர்கள், அவர் எழுதியபடியே நல்லவனாகவும், வல்லவனாகவும் வாழ்ந்து காட்டியவர்.

பயண இலக்கியத்தில் இலங்கை சென்று சுற்றிப்பார்த்து வடித்த நூல் அற்புதம். அதில் இலங்கை பற்றி எழுதிய வரிகள், “அந்த நகரத்தில் அறிவுக்கும், திறமைக்கும் புகழ் பெற்றவர்கள் தமிழர்களாக இருக்கக் கண்டேன்” என்று எழுதி உள்ளார்.

மு.வ. அவர்கள் பேராசிரியராக இருந்த போது பேராசிரியர் பணி மட்டும் பார்க்கவில்லை. மனித நேயத்தோடு, வறுமையோடு போராடிய பல மாணவர்களுக்கு பணஉதவி செய்து கல்வி கற்க உதவி உள்ளார். அவரால் பயன் பெற்றோர் பலர். இன்று நல்ல நிலையில் உயர்ந்த பதவிகளீல் இருக்கின்றனர். மு.வ. என்ற இரண்டு எழுத்து இனியவர் பற்றி அவரது மாணவர்கள் பலர் பாராட்டி உள்ளனர். அவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் அனுபவம் மறக்க முடியாத அனுபவம் என்றும் பாராட்டி உள்ளார்.

மு.வ. அவர்கள் மறைந்தவுடன் அவரிடம் உதவி பெற்ற மாணவர்கள் மு.வ. இல்லம் சென்று அவரது மனைவி இராதா அம்மையாரிடம் மு.வ. அவர்கள் தந்த பணம் பிடியுங்கள் என்று கொடுத்த போது, இராதா அம்மையார் அந்தப் பணத்தை வாங்கவில்லை. என் கணவர் என்ன நினைத்து உங்களுக்கு கொடுத்தாரோ? நான் வாங்குவது முறையன்று. இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நன்றாக இருங்கள்’ என்று வாழ்த்தி உள்ளார். மு.வ. அவர்களின் மனைவி இராதா அம்மையார் மு.வ.வை விட ஒரு படி இந்த இடத்தில் உயர்ந்து ,ஓங்கி நிற்கிறார்.

மு.வ.-வின் செல்லப்பிள்ளை முனைவர் இரா. மோகன் அவர்களின் மொழியிலேயே முடிக்கின்றேன்.

“மலர் போன்ற இரக்க நெஞ்சமும்,
மலை போன்ற உறுதியும் கொண்ட ஒரு பண்பாளரை,
பலருக்கு அறிவுத் தந்தையாய்,
அன்புள்ள தாயாய் விளங்கிய ஒரு நல்ல மனிதரை
இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு
அளவோடு நெறி வகுத்து வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை
இன்றும், இனியும் பார்க்க முடியுமா?