பரணரின் அகநானூற்றுப் பாடல் சுட்டும் பறவைகளின் பாதுகாவலன்

பேராசிரியர் இரா.மோகன்

டாக்டர் சலீம் அலி (1896-1987) உலகம் போற்றும் ஓர் ஒப்பற்ற பறவையியல் மாமேதை; மும்பை நகரைச் சார்ந்தவர். 'ஆசியாவின் பறவையியல் மனிதர்' என சிறப்பிக்கப் பெற்றவர். அவர் ஒரு முறை தமது தோட்டத்தின் மரத்தில் இருந்த ஒரு சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை நோக்கிச் சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர், அந்தக் கணமே பறவைகளின் ஆராய்ச்சிக்காகப் பின்னாளில் தம் வாழ்நாளையே அர்ப்பணிப்பது என்ற முடிவினை எடுத்தாராம்! ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பறவைகள் பாதுகாப்புக்காகப் பாடுபட்ட சலீம் அலிக்கு உலக வன வாழ்வு அமைப்பினர் பரிசளித்துப் பாராட்டியது; இந்திய அரசு 'பத்ம பூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

சலீம் அலியைப்
(Salim Ali) போன்றே பறவைகளின் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டவனாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திலேயே ஆய் எயினன் என்பான் இருந்துள்ளான். அவனைப் பற்றிய அரிய தகவலைப் சங்கச் சான்றோர் பரணர் தம் அகநானூற்றுப் பாடல்கள் மூன்றில் (142, 181, 208) பதிவு செய்துள்ளார். மூதறிஞர் தமிழண்ணல் குறிப்பிடுவது போல், 'ஆஅய் எயினன் பறவைகளின் நண்பனாய் வாழ்ந்த செய்தி மிகப் பெரிய வியப்புக்களில் ஒன்றாகும்... அக்காலத் தமிழர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்று மட்டும் அல்லாமல், உறவு கொண்டாடியும் வாழ்ந்தமையை இவை போன்ற செய்திகளால் அறியலாம்' (அகநானூற்றுக் காட்சிகள், பக்.142-143).

அகநானுற்றின் 142-ஆம் பாடலில்,

'புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகன்'


என ஆய் எயினன் பறவைகளுக்குப் பாதுகாவலனாக விளங்கின பான்மையைக் குறிப்பிட்டுள்ளார் பரணர். இப் பாடலில் இடம்பெற்றிருக்கும் அதிகன் என்பது, ஆய் எயினனுக்கு உரிய வேறு பெயர் போலும் என்பர் உரையாசிரியர்.

அகநானூற்றின் மணிமிடை பவளத்தில்
181-ஆம் பாடலாக இடம் பெற்றிருப்பதும் பரணர் இயற்றியதே. 'இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது' என்பது தலைமகன் கூற்றாக அமைந்த அப்பாடலின் துறைக் குறிப்பு ஆகும்.

வினைமேற் செல்லும் தலைவன் இடைவழியிலே தலைவியை நினைத்து மீளக் கருதிய தன் நெஞ்சிற்குப் பின்வருமாறு சொல்கிறான்:

'நெஞ்சே! நெருங்குவதற்கு அரிய காட்டைக் கடக்கவும் துணிகின்றாய் இல்லை; பின்னே நின்று மீண்டும் நம் தலைவிபால் செல்லவும் கருதிவிட்டாய்; அவ்வாறு மீண்டிட நீ நினைத்து விட்டாய் என்றால், தலைவி தங்கி இருக்கும் குன்றத்தை அடைந்து, எனது இந் நிலையினை அவளுக்கு எடுத்துக் கூறுவாயாக!

மிஞிலி என்பவன் போர் செய்வதில் வல்லவன்; பகைவர் பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்தவன்; மிகப் பெரிய சேனைகளை உடையவன். அவனுடன் முருகனை ஒத்த வலிமையை உடைய ஆய் எயினன் என்பவன், இரத்தத்தால் போர்க் களம் சிவக்கும் படி கடுமையாகப் போரிட்டான்; இறுதியில் பகைவனது வேலால் தாக்குண்ட அவன் களத்திலேயே வீழ்ந்தான்.

எயினன் பறவைகளின் பாதுகாவலன், உயிர் நண்பன் ஆதலால், அப் பகுதியில் இல்லாத புதிய பறவைகளின் பெரிய கூட்டம் எல்லாம் ஒருங்கு கூடி ஞாயிற்றின் ஒளி பொருந்திய கதிர்களின் வெப்பம் அவன் உடலைத் தாக்கா வண்ணம் வானத்தி;ல் வட்டமிட்டன.

மகரக் கொடியினை உச்சியில் கொண்ட வானைத் தொடும் மதிலையும், உச்சியைக் காண முடியாதவாறு ஓங்கி உயர்ந்துள்ள நல்ல மாடங்களையும் உடைய காவிரிப்பூம் பட்டினத்தைக் கொண்டது சோழ நாடு ஆகும். அந் நாட்டில் ஆலமுற்றம் என்னும் ஊர் புது வருவாயை உடைய ஊர்களைக் கொண்டது; வளம் மிக்க சோழ மன்னர்களால் பாதுகாக்கப்படும் சிறப்பினைப் பெற்றது; அகன்ற துறையினை உடைய காவிரி ஆற்றின் மிக்க வேகத்துடன் ஓடிவரும் நீரானது, நுண்ணிய மணலைக் கொண்டு வந்து குவித்து மேடாக்கிய வெள்ளிய மணற் குவியல்களை உடையது. உலகம் யாவும் போற்றும் நல்ல புகழை உடைய நான்கு வேதங்களால் ஆன பழம்பெரு நூலைத் தந்து அருளிய மூன்று கண்களை உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் சிறப்பினது.

அவ்விடத்துப் பொய்கை சூழ்ந்த சோலையில் அமைந்த வீட்டில் பேதைப் பெண்கள் ஒன்றுசேர்ந்து சிறுபாவைகளை வைத்து விளையாடுவர். ஆய் எயினனை வட்டமிட்டுப் பாதுகாத்த பறவைகள் அங்கே வந்து தங்கும்.

அத்தகைய சிறப்புக்களைக் தன்னகத்தே கொண்ட சோழ நாட்டில் தான், ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்ட நறுமணம் மிக்க கூந்தலினையும், மூங்கில் போலத் திரண்ட அழகிய தோளினையும் கொண்டு காண்பாரை வருத்தும் நம் தலைவி தங்கி இருக்கும் பெரிய குன்றம் அமைந்துள்ளது'.
இங்ஙனம் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுவதாக அமைந்த அழகிய அகநானூற்றுப் பாடல் வருமாறு:

'துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின்நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,
என்நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
ஓம்புஅரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவிற்கு உடைஇ,
முருகுஉறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம் புதைய, ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
பூவிரி அகன்துறைக் கனைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர்கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளம்கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்,
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய் புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல்
புகாஅர் நல்நாட் டதுவே; பகாஅர்
பண்டம் நாறும் வண்டுஅடர் ஐம்பால்,
பணைத்தகைத் தடைஇய காண்புஇன் மென்தோள்,
அணங்குசால் அரிவை இருந்த
மணம்கமழ மறுகின் மணற்பெருங் குன்றே.'


இப் பாடலில் இடம்பெற்றிருக்கும் சங்க காலத்தில் பறவைகளின் பாதுகாவலனாக விளங்கிய ஆய் எயினைப் பற்றிய அரிய தகவலும், சிவபெருமான் ஆல முற்றத்தில் எழுந்தருளி இருப்பதாக வரும் சிறப்புக் குறிப்பும் மனங்கொளத் தக்கவை.

' . . . . . . மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தெனப் புள்ஒருங்கு
அம்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமைச் சிறகரின் கோலி
நிழல் செய்து ...'


என அகநானூற்றின் பிறிதொரு பாடலிலும்
(208) பரணர் தம் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்த அரிதினும் அரிய இந் நிகழ்வினைச் சுட்டி இருத்தல் நோக்கத்தக்கது. இங்ஙனம் ஆய் எயினனது அருள் மேம்பாட்டினை அஃறிணையாகிய பறவைகள் தாமும் வெளிப்படுத்தி இருக்கும் திறத்தினைச் சங்கச் சான்றோர் பரணர் தமது முத்தான மூன்று அகநானூற்றுப் பாடல்களில் குறித்திருக்கும் பாங்கு பயில்வோர் நெஞ்சை அள்ளுவதாகும். சங்க மொழியிலேயே சுட்ட வேண்டும் என்றால். 'எம்முளும் உளன் ஒரு பறவையின் பாதுகாவலன்!' என உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டும் போல் தோன்றுகின்றது!
 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.