ஐங்குறுநூற்றின் முதற்பாடலில் துலங்கும் நயமும் நுட்பமும்

பேராசிரியர் இரா.மோகன்

சங்க அக இலக்கியங்களில் ஐங்குறுநூறு தனிச்சிறப்பு வாய்ந்தது 'அன்பின் ஐந்திணை' எனப்படும் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை ஆகிய ஐந்து திணைகள் பற்றி, ஓரம்போகியார, அம்மூவனார, கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்னும் புலவர்கள் ஐவர் பாடிய, ஐந்து நூறு பாடல்களின் தொகை நூல் அது.

ஐங்குறுநூற்றில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது மருதத் திணை. இத் திணைக்கு உரிய நூறு பாடல்களையும் பாடிய புலவர் ஓரம்போகியார். மருதத் திணையின் முதல் பத்தாக அமைந்திருப்பது வேட்கைப் பத்து. இப் பாடல்கள் யாவும் தோழி கூற்று ஆகும். பதச்சோறாக, ஐங்குறுநூற்றின் மருதத் திணையில் வேட்கைப் பத்தில் தோழி கூற்றாக அமைந்த முதற் பாடலை ஈண்டுக் காணலாம்:

'வாழி ஆதன்! வாழி அவினி!
நெல்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!'
எனவேட் டோளே யாயே; யாமேஇ
'நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' எனவேட் டேமே.'
(1)

புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைமகன், தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது என்பது இப் பாடலின் துறைக் குறிப்பு ஆகும்.

தலைவன் தன் இல்லத்தையும் தலைவியையும் விடுத்துப் புறத்தே சென்று பரத்தையுடன் பொருந்தி வாழ்வது புறத்தொழுக்கம் ஆகும். இதில் நீண்ட நாள் கழித்த தலைவனுக்கு ஒரு நாள் இந்த ஒழுகலாறு தகாதது என்ற தெளிவு பிறந்தது. உடனே அவன் புறத்தொழுக்கத்தினைக் கைவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பி தலைவியுடன் வாழ்ந்து வரலானான். இந்நிலையில் ஒருநாள் தோழியைப் பார்த்து, 'நான் தகாத ஒழுக்கம் மேற்கொண்டிருந்த பொழுது நீங்கள் (தோழியும் தலைவியும்) என்ன நினைத்தீர்கள்?' என்று கேட்டான் தலைவன். அவன் கேள்விக்குப் பதில் கூறும் பாங்கில் இப்பாடல் இயற்றப் பெற்றுள்ளது.

இனி, தொல்காப்பியர் வகுத்துத் தந்துள்ள நோக்குக் கோட்பாட்டின் வழி நின்று இப்பாடலில் துலங்கும் நயத்தினையும் நுட்பத்தினையும் காண்போம். தலைவன் பிரிந்து சென்று பரத்தையொடு வாழ்ந்த காலத்தில் தலைவி எதனை விரும்பி இருந்தாள் என்பதைப் பாடலின் முற்பகுதியும், தோழி எதனை விரும்பி இருந்தாள் என்பதைப் பாடலின் பிற்பகுதியும் புலப்படுத்தி நிற்கின்றன.

''நாட்டினை ஆளும் வேந்தன் ஆதன் நெடுங்காலம் வாழ்க, அவினி நெடுங்காலம் வாழ்க! நாட்டில் நெல் நன்கு விளைந்து பொலிவு தருக. பொன் மிகுதியாக வாய்த்துச் சிறப்பதாக!' என்று என் தாய் போன்ற தலைவி (தோழி தலைவியை 'என் அம்மா' என்னும் பொருள்படும் வண்ணம் 'யாய்' எனச் சுட்டுதல் சங்க கால மரபு) விரும்பி இருந்தாள். மலர்களை உடைய காஞ்சி மரங்களும் சினைகளை (முட்டைகளை) உடைய சிறுமீன்களும் ஒருங்கே வாழ்வதற்கு இடமாகிய, புதுவருவாய் பொருந்திய ஊரன் ஆகிய மருத நிலத்துத் தலைவன் தீதின்றி வாழ்க! அவன் நண்பன் ஆகிய பாணனும் வாழ்க!' என்று யாம் (தோழி – சுழலயட றுந) விரும்பி இருந்தோம்' என்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி.

தலைவன் தன்னைப் பிரிந்து புறத்தொழுக்கம் மேற்கொண்ட கொடிய காலத்திலும், தலைவி உயரிய குறிக்கோளுடன் விளங்கினாள் என்பதை இப் பாடலின் முற்பகுதி புலப்படுத்துகின்றது. ''காவற் பொருட்டு அரசன் வாழ்க; விருந்தாற்றுதற் பொருட்டு நெற்பல பொலிக; இரவலர்க்கு ஈதற் பொருட்டுப் பொன் உண்டாகுக' என யாய் (தலைவி) இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது பிறிது நினைத்திலள்' எனப் பெயர் அறியப்படாத பழைய உரையாசிரியர் தரும் விளக்கம் பண்டைத் தமிழ்ப் பெண்களின் இல்லற மாண்பினைப் பறைசாற்றுவதாகும்.

தலைவியின் துன்பத்தைக் கண்டு தானும் துன்புறும் தோழியின் உயரிய உளப்பாங்கையும், தலைவனைத் திருத்த வேண்டும் என்பதில் அவள் காட்டும் உறுதிப்பாட்டையும் பாடலின் பிற்பகுதி குறிப்பாகப் புலப்படுத்துகின்றது தலைவனது ஊரில் உள்ள கருப்பொருள்களை எடுத்துக்காட்டி, அவற்றின் வாயிலாக உணர்த்தும் பொருள் பொதிந்த குறிப்பு மொழி தலைவனை உறுதியாகத் திருத்தும் என்று கருதுகிறாள் தோழி. 'நறுமணம் கமழும் காஞ்சி மலரையும் புலால் நாறும் சிறுமீனையும் உடைய ஊரினன் நீ! காஞ்சி மலர் போன்ற உயர்ந்த பண்பு நலன் வாய்ந்த தலைவியையும், மீன் போன்ற இழிந்த நலம் கொண்ட பரத்தையினையும் ஒரு நிகராகக் கொண்டு ஒழுகியவன் நீ!' எனத் தலைவனிடம் அவனது நிலத்தின் கருப்பொருள்களைக் கொண்டு உள்ளுறைப் பொருள் அமைத்துத் தலைவனிடம் உரையாடுகிறாள் தோழி. இதனால் தலைவனின் புறத்தொழுக்கமாகிய கொடுமை சாடப்படுவதுடன், அவன் விரைவில் தன் குற்றத்தினை உணர்ந்து திருந்துவான் என்ற குறிப்பும் புலனாகின்றது. மேலும், தலைவனின் பரத்தைமை இழுக்கத்திற்கு உடந்தையாக இருந்த பாணனையும் 'வாழ்க!' என்று இகழ்ச்சிக் குறிப்பினால் தோழி வாழ்த்துவதும் நோக்கத் தக்கது.

மூதறிஞர் சோ.ந.கந்தசாமி குறிப்பிடுவது போல, 'தலைவனை இடித்துக் கூறும் பொழுது கூட, சொல் நாகரிகத்தினைப் பேணியவள் தோழி' (உலகச் செம்மொழிகள் இலக்கியம்: முதல் தொகுதி, ப
.80) என்பதும், 'உலக நலத்தில் நாட்டம் கொண்ட தலைவியும், தலைவியின் நலத்தில் நாட்டம் கொண்ட தோழியும் சிறந்த அகமாந்தராகப் படைக்கப் பெற்றுள்ளனர்' (ஐந்குறுநூறு ஆராய்ச்சித் தெளிவுரை, ப.11) என்பதும் இப் பாடலால் தெளிவாகின்றன.

 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.