திருவள்ளுவரும் கபீரும்

பேராசிரியர் இரா.மோகன்
 

ஒப்பியல் நோக்கில் உலக மொழி இலக்கியங்கள்
கருத்தரங்கக் கட்டுரை

திருவள்ளுவரும் கபீரும்

தமிழில் ‘தெய்வப் புலவர்’ என்ற சிறப்புச் சுட்டுக்கு உரிய மூவருள் ஒருவர் திருவள்ளுவர் (மற்ற இருவர் கம்பரும், சேக்கிழாரும் ஆவர்). அவர் படைத்த திருக்குறள், குறள் வெண்பாவால் இயன்றது; அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுள் முதல் மூன்றையும் பற்றி 1330 குறட்பாக்களால் விளக்குவது. 3 பால்கள் – 133 அதிகாரங்கள் – அதிகாரத்திற்குப் பத்துப் பத்துக் குறட்பாக்கள் – என்றாற் போல் திட்டமான ஓர் அமைப்பு முறை பொருந்தியது திருக்குறள்.

“தாளும் மசியும் தொடவில்லை; பேனாவையும் தொடவில்லை; நாலு யுக பக்தன் கபீர் நாவால் நல்லுரை மொழிந்தான்” (பாரஸ்நாத் திவாரி, கபீர், ப.40) எனப்படும் கபீர், வட இந்தியாவில் கி.பி.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வாய்மொழிக் கவிஞர் (Oral Poet). ஆயிரக்கணக்கான பாடல்கள் கபீரின் பெயரால் வழங்கி வந்தாலும், இப்போது அறிஞர்கள் ஏறத்தாழ 1,600 பதங்களையும், 4,500 சாகிகளையும் (ஈரடிப் பாக்கள்), 134 ரமைனிகளையும் கபீர் பாடியனவாக அடையாளம் கண்டுள்ளனர்; கபீர் ஆய்வாளர்களுள் குறிப்பிடத் தக்கவரான பாரஸ்நாத் திவாரி இவற்றுள் இருந்து ஐயத்திற்கு இடமின்றி 200 பதங்கள், 750 சாகிகள் (ஈரடிப் பாக்கள்), 20 ரமைனிகள் கொண்ட தொகுப்பினைக் ‘கபீர் கிரந்தாவளி’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். கபீரின் அருள் வாக்குகள் ‘பீஜக்’ (Bijak) என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளன.

திருவள்ளுவரையும் கபீரையும் ஒப்பியல் நோக்கில் காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

திருவள்ளுவரும் கபீரும்

தமிழில் தோன்றிய நீதிநூல்களுள் தலையாயது திருக்குறள். அதை இயற்றிய புலவரின் இயற்பெயரும் தெரியாது; அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும் எதுவும் உறுதியாகத் தெரியாது.  ‘திருவள்ளுவர்’ என்ற குடிப் பெயர் அல்லது தொழில் பற்றிய பெயர் இப்போது வழங்கி வருகிறது. அவரைப் பற்றிப் பல கதைகள் அவ்வப்போது கட்டப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், பல நூல்களைக் கற்றவர், இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தி மகிழ்ந்தவர், அரசியலில் தேர்ந்த அறிவு பெற்றவர், நீண்ட நாள் அமைதியாக வாழ்ந்தவர், பல சமயத்தாரோடு பழகினாலும் பொதுமை நாட்டமே உடையவர், அறத்தில் அசையாத நம்பிக்கை உடையவர், சமய வேடங்களையும் மூட நம்பிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்தவர் முதலான குறிப்புகள் அவருடைய நூல் வழியே நமக்குத் தெரிய வருகின்றன. அறிஞர் மு.வ. குறிப்பிடுவது போல், “பல நூற்றாண்டுகளுக்கு முன் விளங்கிய ஒருவர், எல்லாச் சமயத்தாரும் போற்றக்கூடிய வகையில் எல்லார்க்கும் பொதுவான ஒரு நூல் எழுதியிருப்பது பெரிய வியப்பாகும். எவ்வகைச் சார்பையும் கடந்து, மனித உள்ளத்தின் இயல்பைத் துருவித் துருவி ஆராய்ந்து, உண்மையை மட்டும் தெளிவாக எடுத்துரைத்திருப்பது நூலின் மற்றொரு சிறப்பாகும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அடிப்படையான உண்மையைக் கண்டு உணரவும் உணர்த்தவும் அந்த ஆசிரியர்க்கு முடிந்தது” (தமிழ் இலக்கிய வரலாறு, பக்.62-63).

திருவள்ளுவரைப் போலவே கபீரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் உறுதியாக ஒன்றும் சொல்ல முடியாத வகையில் பற்பல கதைகள் வழங்கி வருகின்றன. ஏறத்தாழ ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கி.பி. 1455-ஆம் ஆண்டில் ஆனி மாதத்து முழுநிலா நாளில் – காசி நகரத்து நெசவாளியான நீரு என்பானும் நீமா என்னும் அவனது மனைவியும், லஹர்தாரா என்னும் இடத்தில் உள்ள ஒரு குளத்தில் கண்டெடுத்த குழந்தையே கபீர். இஸ்லாமிய நெசவாளிக் குடும்பத்தில் வளர்ந்த அவர், இராமன், கோவிந்தன், அரி என்னும் இந்துக் கடவுளரின் பெயர்களைக் கூறுவதில் இன்பம் கண்டார்; வடநாட்டு வைணவர்களின் வழக்கப்படி நெற்றியில் சந்தனமும் கழுத்தில் துளசி மாலையுமாகக் காட்சியளித்தார். வேதங்கள், உபநிடதங்கள், கீதை, பாகவதம் ஆகியவற்றின் சாரத்தை அவர் அறிந்திருந்தார். இவற்றில் எதையும் அவர் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றவில்லை என்பது அவருடைய தனிச்சிறப்பாகும். பாரஸ்நாத் திவாரி குறிப்பிடுவது போல், “எளிய குடியில் பிறந்த கபீர் மகா பக்தராய் விளங்கினார். பக்தி ரசம் சொட்டும் பாடல்களை விட்டுச் சென்றார். பிறப்பால் அன்றி செயற்கரிய செயலால் மாந்தர் பெரியார் ஆவார் என்பதற்குக் கபீரே சான்று” (கபீர், ப.53). தமது இறுதிக் காலத்தில் அவர் காசியை விட்டு, மக்ஹர் என்னும் இடத்திற்குச் சென்று இறந்தார்.

இங்ஙனம் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அடிப்படையான உண்மைகளைக் கண்டு உணர்வதிலும் உணர்த்துவதிலும் திருவள்ளுவரும் கபீரும் பெரிதும் ஒன்றுபடுகின்றனர்.

1. கடவுட் கொள்கையில் பொதுமை நோக்கு

திருவள்ளுவரின் கடவுட் கொள்கை பொதுவானது. அவர் தம் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் எந்த ஒரு சமயக் கடவுளின் பெயரையும் தனிப்பட்ட முறையில் சுட்டி ஆளவில்லை; ‘ஆதி பகவன்’, ‘வாலறிவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’, ‘இறைவன்’, ‘பொறி வாயில் ஐந்தவித்தான்’, ‘தனக்குவமை இல்லாதான்’, ‘அறவாழி அந்தணன்’, ‘எண் குணந்தான்’ என்றாற் போல் பொதுவான தொடர்களாலேயே கடவுளைச் சுட்டியுள்ளார் அவர். மேலும், குறிப்பிட்ட ஒரு சார்புக்கு வழிவகுக்கும் கடவுளின் முகத்தினை எங்கும் சுட்டாமல், ‘அடி’, ‘மாணடி’, ‘தாள்’, ‘நற்றாள்’ என்றாற் போல் தம் பொதுமை நோக்கம் விளங்கக் கடவுளின் திருவடியினையே அவர் பெரும்பாலும் குறிப்பிட்டுள்ளார். இது வள்ளுவரின் கடவுட் கொள்கையில் காணலாகும் ஒரு தனிச் சிறப்பாகும்.

கபீர் பிறந்து வளர்ந்தது இஸ்லாமிய நெசவாளிக் குடும்பத்தில்; அவர் உச்சரித்ததோ இராம நாமத்தை; அவர் கழுத்தில் அணிந்திருந்ததோ வைணவர்களுக்கு உரிய துளசி மாலையை. என்றாலும் அவருடைய இராமன், இந்துக்களின் இராமன் அல்லன். இதோ, அவரது இறைக் கொள்கையைப் புலப்படுத்தும் பதம் ஒன்று.

“ …செபமும் என்ன, சடங்கும் என்ன,

   மசூதியில் மண்டி இடுவதும் என்ன

   நெஞ்சில் கவடின் நமா]{ சொல்வாய்

   என்ன பயன் பின் ஹஜ்ஜுப் பயணம்?

   பார்ப்பான் ஏகாதசி நோன்பி ருப்பான்,

   காஜி ரம்ஜான் மாதம் நோன்பாம்,

   பதினொரு திங்கள் பயனற் றிருக்க

   பலனெல் லாமும் ஒருதிங் களிலோ?

   சூதாதான் மசூதியில் இருந்திட டலாலே

   ஊரின் மற்றப் பகுதியில் எவனோ?

    தலங்கள் சிலைகளில் இராமன் இருந்தால்

   இரண்டிலும் அவனைக் கண்டார் யாரோ?

   அரியின் வாசம் கிழக்கேயாம்,

   அல்லா முகாமும் மேற்கேயாம்,

   நெஞ்சில் தேடு நெஞ்சில் தேடு

   ராமனும் அங்கே, ரகீமும் அங்கே!”        (கபீர், ப.74)

கடவுட் கொள்கையைப் பொறுத்த வரையில், வள்ளுவர் அடையாளங்களைக் கடந்த நிலையில் அடிப்படையான உண்மையைக் கண்டு உணர்த்தியுள்ளார்; கபீரோ அடையாளங்களின் ஊடே நிலவும் அடிப்படையான உண்மையைக் கண்டு உணர்த்தியுள்ளார்.

2. சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சாடல்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் கண்மூடிப் பழக்க வழக்கங்களிலும் உள்ள பகட்டையும் பாசாங்கையும் அம்பலப்படுத்தி, அவற்றை உடைத்தெறிவதிலும் திருவள்ளுவருக்கும் கபீருக்கும் இடையில் மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது.

உலகம் பழிக்கும் தீயவொழுக்கத்தை விட்டுவிட்டால், மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் ஆகிய புறக்கோலங்கள் வேண்டா என்பது வள்ளுவரின் முடிந்த முடிபு.

“ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
            பழித்தது ஒழித்து விடின்”      
      (280)

என்பது ‘கூடா ஒழுக்கம்’ அதிகாரத்தில் இடம்பெறும் இறுதிக் குறட்பா. வள்ளுவர் வஞ்சனை இல்லாத நெஞ்சினையே – மாசில்லாத மனத்தினையே – மலையினும் மாணப் பெரிதாகப் போற்றுகின்றார்; வஞ்சித்து வாழ்வாரின் வானுயர் தோற்றத்தினை அவர் ஒரு சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. மேலும், அறம் என்பதற்கு அவர் தரும் விளக்கமும் இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

‘ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத் தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை. அவை வெளிப் பகட்டுகள் ஆகும்’. இக்கருத்தினைக் தன்னகத்தே கொண்ட அழகிய குறட்பா வருமாறு:

“ மனத்துக்கண் மாசிலன்ஆதல்; அனைத்துஅறன்;
              ஆகுல நீர பிற.”     
                    (34)

‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்தில் நான்காவதாக இடம் பெறும் இக்குறட்பா, அறத்தின் இயல்பு இன்னது என்பனை இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைப்பதாகும்.

வள்ளுவரைப் போலவே கபீரும் மனத் தூய்மைக்கே முதன்மை தந்துள்ளார்; வெளி வேடங்களையும் பகட்டுகளையும் அவர் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அவரது ஈரடிப் பாக்கள் வருமாறு:

“ நாலு  மாலை போட்டுக்கொண்டு சாமியாராய்

          ஆனால்என்,

   வெளிப்புறத்தில் வண்ணம் மினுக்க,

          உள்ளே குப்பை கிடக்குமே!

   மயிர் புரிந்த குற்றம் என்ன,

          மீண்டும் மீண்டும் மழித்திடுவீர்,

   பல விகாரம் மண்டி உள்ள,

          மனத்தை மொட்டை அடித்தால்என்?”      (கபீர், ப.89)

கபீரின் கருத்துப்படி, மீண்டும் மீண்டும் மயிரை மழிப்பதிலே பயன் ஏதும் விளையப் போவது இல்லை; பலவிதமான விகாரங்கள் மண்டிக் கிடக்கும் மனத்தை மொட்டை அடித்தல் வேண்டும். இதுதான் ஒருவர் செய்ய வேண்டிய அடிப்படையான -இன்றியமையாத - செயற்பாடு ஆகும்.

3. ‘அன்பின் வழியது உயிர்நிலை’

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதில் திருவள்ளுவருக்கும் கபீருக்கும் இடையில் ஒத்த கருத்து உள்ளது. ‘அன்புடைமை’யின் அருமையையும் பெருமையையும் வலியுறுத்தி வள்ளுவர் ஓர் அதிகாரமே படைத்துள்ளார். அதன் இறுதிக் குறட்பாவில், ‘அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ அன்பின் வழியது உயிர்நிலை; அஃதுஇலார்க்கு

   என்புதோல் போர்த்த உடம்பு.”             (80)

வள்ளுவரின் இவ்வாய்மொழியை நினைவூட்டும் வண்ணம், கபீர் அன்பு குறித்துக் கூறியிருப்பது வருமாறு:

“எந்த உடலில் அன்பு இல்லையோ அதை மயானம் என்று அறி. கொல்லன் துருத்தி போல அது மூச்சு விடும்; உயிர் இருக்காது” [தி.சேஷாத்ரி (தமிழாக்கம்), கபீர் அருள் வாக்கு, ப.28].

4. பிறர் நலம் பேணுவோரே பெரியோர்!

வள்ளுவரின் கருத்தில் தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.

“ உற்றநோய் நோன்றல், உயிர்க்குஉறுகண் செய்யாமை

   அற்றே தவத்திற்கு உரு”                       (261)

என்பது அவர் வாக்கு. மேலும், ‘அந்தணர்’ என்பதற்கு வள்ளுவர் தரும் விளக்கமும் இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

“ அந்தணர் என்போர் அறவோர்;மற்று எவ்வுயிர்க்கும்
            செந்தண்மை பூண்டு ஒழுகலான்.”    
     (30)

கபீரும் பிறர் நலம் விழைபவர்களையே ‘சாதுக்கள்’ எனச் சுட்டுகிறார். அவரது கருத்தில் பணத்துக்காக ஏங்கி அலைபவர்கள் சாதுக்கள் அல்லர். “சாது இவ்வண்ணம் இருத்தல் வேண்டும்; தாம் துயர்படவும் கூடாது, பிறருக்கு வருத்தம் தரவும் கூடாது. தோட்டத்திலேயே இருத்தல் வேண்டும்; இலையையும் பூவையும் தொடக்கூடாது” என்பார் அவர் (கபீர் அருள் வாக்கு, ப.81).

5. வள்ளுவரும் கபீரும் வேறுபடும் இடம்

திருவள்ளுவர் பெண்மைக்குத் தந்திருக்கும் இடம் சிறப்பானது; உயர்வானது. ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்ற பெயரில் அவர் ஓர் அதிகாரமே பாடியுள்ளார். ஒரு குறட்பாவில் ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும், திண்மையுண் டாகப் பெறின்’ (54) என வினவிய வள்ளுவர், பிறிதொரு குறட்பாவில் ‘கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்’ (1137) எனப் பெண்ணின் பெருமையை அறுதியிட்டு உரைத்துள்ளார். ‘வாழ்க்கைத் துணை’, ‘மனைமாட்சி’ என்னும் சொல்லாட்சிகள் பெண்மைக்கு அவர் அளித்துள்ள உயர்வைப் புலப்படுத்துவனவாகும். கபீரோ இவ்வகையில் திருவள்ளுவரிடம் இருந்து வேறு-படுகின்றார்; பொன்னும் பெண்ணும் (கனகமும் காமினியும்) மனிதனுக்குத் தொல்லை தருவதிலே ஒரு நிகரானவை எனக் கருதுகின்றார் அவர். “பாம்பு(க்கடி), தேள்(கடி) இவற்றிற்கு மந்திரம் உண்டு. விஷத்தை இறக்கி விடலாம். பெண்ணின் உறவு தொந்தரவு, நெஞ்சைக் கடித்துத் தின்றுவிடும்” (கபீர் அருள் வாக்கு, ப.129) என்பது கபீர் ஆண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. மேலும், அவர் “பொன், பெண் இரண்டும் ஏற முடியாத கரைகள் (துறைகள்). இவ்விரண்டின் காரணமாகக் கரை ஏறுவதே-யில்லை ஒருவரும்” (கபீர் அருள் வாக்கு, ப.128) என அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார்.

இங்ஙனம் திருவள்ளுவரையும் கபீரையும் பல்வேறு கோணங்களில் – பல்வேறு தளங்களில் - விரிவாகவும் விளக்கமாகவும் ஒப்பிட்டுக் காண்பதற்கு நிறையக் களங்கள் உள்ளன. இக் கட்டுரை அவ்வகையில் ஒரு கோலப் புள்ளியே ஆகும்.


பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.