மூன்று பொருள் தோன்றியதும் உன்னிடமோ?

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ

தினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திரிகடுகம் முத்துமுத்தாய் மும்மூன்றாய் அறிவுரைகளை அள்ளித்தருகின்றது.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு


அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இன்மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.


சுக்கு, திப்பிலி, மிளகு மூன்றினால் கடுகம் ஒருவர் உடல் நோய்களை மாற்றி இன்பம் புரிவது போல் இல்வாழ்வானொருவனுக்கு துன்பம் அகற்றி இன்பம் விளைத்தலால் அவை உவமைகளாயின.

சுவாமிமலையில் சுந்தரமாய்க் காட்சி தரும் அருள் மிகு சுவாமிநாத சுவாமியை வணிகச் செட்டியாராகப் பாவித்து இருபொருள்படும்படி பாடல் ஒன்றை இயற்றியுள்ளார் சொக்கநாதப் புலவர்.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – மங்காத
சீரகத்தைக் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே!


செரியாமையைப் போக்க மிளகு, சீரகத்தாலான ரசம் சாப்பிட்டு குணமடைவதைப் போல, உடம்பு தளரும்போது நம் ஆன்மாவுக்கு மோட்சத்தைத் தரவல்லது சுவாமிநாத சுவாமியின் பேரருள் மட்டுமே என்று இருவேறு பொருள் கொள்ளலாம்.

நல்லாதனார் என்ற இந்நூலாசிரியர் காப்புச் செய்யுள் உட்பட,
101 வெண்பாக்கள் இயற்றியுள்ளார். இந்நூல் இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதென அறிகிறோம்.

மூடரோடு இணங்கியிருத்தலும், கற்புடை மனைவியை அடித்துத் துன்புறுத்தலும், சிற்றறிவினரை வீட்டுள் அழைத்து உபசரித்தலும் கேட்டைத் தரும் என்பதை,

கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகழும் இம்மூன்றும்
அறியாமை யான் வருங் கேடு


என்று நல்லாதனார் நவில்கிறார்.

நூறு வெண்பாக்களும் அறிவுரையும் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துவற்காக இயற்றப்பட்டுள்ளன. இவற்றின் வழி மனிதகுலம் ஒழுகினால் சமூகம் வளம் பெறும். சகோதரத்துவம் மிளிரும் என்றால் மகையல்ல.

 

worldnath_131149@yahoo.co.in