மு.வ. பெரிதும் போற்றிய தமிழ்ச் சான்றோர்கள்

பேராசிரியர் இரா.மோகன்

ருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர்களில் தனிச்சிறப்புக்கு உரியவராக விளங்குபவர் மு. வரதராசனார் (1912-1974) ஆவார். 'மு.வ.' என்ற ஈரெழுத்துக்களின் விரிவு 'முன்னேற்ற வரலாறு' என்பதாகும். தாசில்தார் அலுவலக எழுத்தராகத் தொடங்கிய அவரது வாழ்க்கை, படிப்படியே உயர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தராக நிறைவு பெற்றது. குறுகத் தறித்த தமது 62 ஆண்டுக் கால வாழ்க்கையில் அவர் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 85 நூல்களை எழுதித் குவித்தார். 'திரு வேறு, தௌ;ளியர் ஆதலும் வேறு' என்னும் வள்ளுவர் வாய்மொழியையே பொய்யாக்கி, திருவும் தெளிவும் ஒருங்கே கொலு வீற்றிருக்கும் ஆளுமையாளராக மு.வ. தம் வாழ்வில் விளங்கினார்; 'இவர் தொடாத துறை இல்லை; தொட்டுத் துலங்காத துறையும் இல்லை' என இலக்கிய உலகம் போற்றும் அளவிற்குப் பல்துறை சார்ந்த படைப்புக்கள் பலவற்றைப் படைத்து எழுத்துலகில் முத்திரை பதித்தார். இனி, ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரான மு.வ.வின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த தமிழ்ச் சான்றோர்களைக் குறித்து இக்கட்டுரையில் சுருங்கக் காண்போம்.

'சங்க இலக்கியம் எமது இலக்கியம்'

மு.வ.வின் உள்ளத்தில் சங்கச் சான்றோர்களுக்குத் தனி இடம் உள்ளது. அவர் சங்கச் சான்றோர்களின் மீதும் அவர்கள் பாடி அருளிய பாடல்களின் மீதும் மலையினும் மாணப் பெரிய மதிப்பினை வைத்துள்ளார். 'காதல் பாட்டுக்களை நெறிப்படுத்தி முறையுற வகுத்த பெருமை, பழந்தமிழ் இலக்கியத்தின் சிறப்பியல்பாகும். அவ்வாறு நெறியும் முறையும் போற்றி வளர்த்த காரணத்தால் தான், பழைய காதல் பாட்டுக்களில் கலைச்செல்வம் மிளிர்வதுடன் நுட்பமும் தூய்மையும் குன்றாமல் விளங்குகின்றன. மற்றவர்கள் உடலின் பசியைப் புனைந்துரைத்துக் களித்துக் திரிந்த அந்தக் காலத்தில், தமிழ்ச் சான்றோர் உள்ளத்தின் உணர்வைத் தெரிந்தெடுத்துக் கலைத்தொண்டு ஆற்றிய சிறப்புக் காரணம் அதுவே ஆகும்' (முல்லைத் திணை, ப.
3) என்னும் அவரது கூற்று இவ்வகையில் மனங்கொளத் தக்கதாகும்.

காதலைப் பற்றிச் சங்கச் சான்றோர் பாடிய பாடல்களில் பெண்களின் உடல் வருணனை மிகுதியாக இல்லை; காமச் சேர்க்கையைப் பற்றிய குறிப்புக்களும் மிகுதியாக இல்லை. காதலரின் உள்ளத்து உணர்வு பற்றிய பாடல்களே மிகுதியாக உள்ளன. இதுவே சங்கச் சான்றோர்களை மு.வ. பெரிதும் போற்றுவதற்கான முதன்மைக் காரணம் ஆகும். இக் கருத்தினை நிறுவும் வகையில் தக்க சான்றுகள் பலவற்றை அவர் சங்க இலக்கியம் பற்றிய தம் ஆய்வு நூல்களிலும் கட்டுரைகளிலும் காட்டியுள்ளார். அவற்றுள் இரு உயிர்ப்பான இடங்கள் இதோ:

1. அகநானூற்றுத் தலைவன் ஒருவனின் கருத்தில் உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பு போன்றது காதல். உயிர் உடம்பில் வாழ்தல் போன்றதாம் காதல். உயிர் உடம்பை விட்டுப் பிரியும் சாதல் போன்றதாம் பிரிவு. காதலியைப் பிரிவது என்பது அவ்வளவு துன்பம் தருவதாம்.

'யாக்கைக்கு
உயிர்இயைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவறி யோளே'.

2. நற்றிணையில் வரும் ஒரு தலைவி, 'தோழி! நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்து விட்டால், பிறகு வேறு பிறப்பும் எடுத்தால், அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்' எனத் தோழியிடம் கூறுகிறாள்.

'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவ தாயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே'.


இத்தகைய பீடும் பெருமையும் சான்ற சங்க இலக்கியம் என்றால் என்ன என்று அறியாதவரும், ஆற்றல்சால் ஆளுமையாளர்களான சங்கச் சான்றோர்களைப் பற்றிக் கேட்டறியாதவரும் பலர் இன்று உலகில் காணப்படுகின்றனர். இந்த நிலை தமிழகத்தில் இனியும் நீடித்தல் நன்றன்று எனக் கருதுகின்றார் மு.வ. 'சங்க இலக்கியம் என்றால் எமது எமது என்று பெருமிதத்துடன் எண்ணும் நெஞ்சமும், கூறும் நாவும் இனி மிகுதல் வேண்டும்' (முன்னுரை, நெடுந்தொகை விருந்து, ப.3) என்பது மு.வ.வின் விழுமிய கனவு; உயரிய குறிக்கோள்.

'உள்ளத்தால் திருவள்ளுவரின் மகன்!'

'நான் உடலால் என் தந்தையின் மகன்; உள்ளத்தால் திருவள்ளுவரின் மகனாக இருக்கிறேன் (நெஞ்சில் ஒரு முள், ப.445) என மு.வ.வின் 'நெஞ்சில் ஒரு முள்' என்னும் புதினத்தில் வரும் அறவாழி கூறுவார். இக் கூற்று பேராசிரியர் மு.வ.வின் வாழ்விலும் நூற்றுக்கு நூறு பொருந்தி வருவதாகும். 'திருக்குறள் தெளிவுரை'யைக் கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு எழுத்துலகில் சாதனை படைத்த மு.வ.வின் குறிப்பிடத்தக்க பிறிதொரு சிறப்பான நூல் 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்' என்பது. தமிழ்த் தென்றல் திரு.வி.க. அருளிய அணிந்துரையுடன் வெளிவந்த நூல் அது. 'நூல் இரு வகை: தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று; நம் காலத்திற்குத் தான் வந்து உதவுவது மற்றொன்று . . . புலவருலகில் நின்று இலக்கியமாக மட்டும் போற்றப்படும் நூல்கள் முதல் வகையைச் சார்ந்தவை. இரண்டாம் வகை நூல்களோ, எல்லா மக்களுக்கும் பயன்படுவனவாய், ஆட்சி புரியும் சட்ட நூல்களை விடச் செல்வாக்கு உடையனவாய், மக்களின் உள்ளங்களே கோயில்களாய் வாழ்வன. திருக்குறள், பகவத் கீதை, கன்பூஷியஸ் நூல், பைபிள், குர்ஆன் முதலியன இவ்வகையைச் சார்ந்தவை' (திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம், ப.
22) என அந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுவார் மு.வ.

பகவத் கீதையைப் பற்றிக் காந்தியடிகள் எழுதும் போது, 'இந்த நூலை மூளை கொண்டு கற்காமல் இதயம் கொண்டு உணர வேண்டும்' என்று குறித்துள்ளார். திருக்குறளையும் அவ்வாறே இதயம் கொண்டு ஓதி உணர வேண்டும் என்பது மு.வ.வின் நீண்ட கால வேட்கை; தனிப்பட்ட கருத்து. இதன் விழுமிய வெளிப்பாடே 'திருக்குறள் அல்லது வாழ்க்கை' என்னும் உயரிய நூல் ஆகும்.

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பதே திருக்குளின் பால்வைப்பு முறை. பேராசிரியர் மு.வ.வோ இவ்வைப்பு முறையைத் தலைகீழாக மாற்றுகிறார்; காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என அமைத்துச் செல்கிறார். 'காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள், அறமே வாழ்க்கையின் உயர்நிலை' என்பதை உணர்த்தும் நோக்கில் இவ் வரிசை முறையில் தம் நூலினை எழுதிச் சென்றுள்ளார் மு.வ.

மு.வ.வின் கருத்தியலில் திருக்குறளின் உயிர்ப்பாக ஒளிரும் கருத்து ஒன்று உண்டு. அது வருமாறு:

'மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம் பொது வாழ்க்கை; மனம் வாழும் இடமே தனிவாழ்க்கை' (திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், ப.276). இக்கருத்தினை, 'திருவள்ளுவர் காமத்துப்பாலில் காதல் வாழ்க்கையை விளக்கி, காதல் கொண்டவரிடம் கலந்தும் கரைந்தும் மனம் பண்படும் வகையைக் கூறியுள்ளார்; பொருட்பாலில் பொது வாழ்க்கையை விளக்கி, அறிவின் வழி இயங்கிப் பொதுகடமையைச் செய்து மனம் பயன்படும் வகையைக் கூறியுள்ளார்; அறத்துப்பாலில் தனிவாழ்க்கையை விளக்கி, அன்பை வளர்த்து அறத்தைப் போற்றி மனத் தூய்மை பெற்று வாழும் வகையைக் கூறியுள்ளார்' (திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பக்.276-277) என மேலும் விரித்தும் விளக்கியும் எழுதியுள்ளார் மு.வ.

ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட சான்றோர்

'தமிழகத்தின் முழுமணிகளாய் விளங்கி உலகிற்கு ஒளி பரப்பி வருவன சில. அவற்றுள் இங்குக் குறிக்கத் தக்கன இரண்டு: ஒன்று, திருவள்ளுவரின் திருக்குறள்; மற்றொன்று, கண்ணகியின் கற்புக் காவியம்' (முகவுரை, கண்ணகி, ப.3) என உலகிற்கு நல்வழி காட்டும் உயரிய நூல்களைப் படைத்த சான்றோர்களாகத் திருவள்ளுவரையும் இளங்கோவடிகளையும் குறிப்பிடுவார் மு.வ.

சங்கச் சான்றோர்களுக்கும் திருவள்ளுவருக்கும் அடுத்து மு.வ.வின் உள்ளத்தை மிகவும் கவர்ந்த சான்றோர் இளங்கோவடிகள் ஆவார். 'தமிழும் தமிழ்நாடும் வாழப் பிறந்த தமிழர், இளங்கோவடிகள்' (இளங்கோவடிகள், ப.5) என்பது இளங்கோவடிகளைப் பற்றிய மு.வ.வின் இரத்தினச் சுருக்கமான அறிமுகம் ஆகும். தமிழர், கலைஞர், அறவோர் என மூன்று நிலைகளில் இளங்கோவடிகளின் தனித்தன்மைகளை மு.வ. 'இளங்கோவடிகள்' என்னும் தம் நூலில் நன்கு அடையாளம் காட்டியுள்ளார்.

சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு எனத் தனித்தனியே நோக்காமல் தமிழ்நாடு என ஒரு நாடாக நோக்கும் ஒற்றுமை நோக்கத்தினை வலியுறுத்திக் காப்பியம் படைத்தவர் இளங்கோவடிகள். முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரிய ஒரு காப்பியத்தினைத் தமிழகத்தின் பொதுக் காப்பியமாகவே ஆக்கித் தந்திருப்பது இளங்கோவடிகளின் தனிச்சிறப்பு ஆகும். 'தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட தமிழ்ச் சான்றோர் இளங்கோவடிகளாவர்' (இளங்கோவடிகள், ப.31) என்பது மு.வ., அடிகளுக்குச் சூட்டும் புகழாரம். 'இளங்கோ யாராயினும் ஆகுக் எந்த நூற்றாண்டினர் ஆயினும் ஆகுக. சங்க காலத்தை அடுத்து வாழ்ந்த தமிழர் ஒருவர் - மூன்று சிறு வேறுபாடுகளுக்கு இடையே ஒரு பெரிய நாடு விளங்குவதை உணர்ந்த ஒருவர் - அந்த ஒற்றுமை நோக்கம் தழைத்து ஓங்க வேண்டும் என்று பாடித் தந்த தமிழ் அறிஞர் ஒருவர் - அவரே இளங்கோவடிகள். அவரே சிலப்பதிகாரம் என்னும் கலைச்செல்வம் நல்கிய கலைஞர்; அவரே செங்கோலின் சிறப்பும் கற்பின் பெருமையும் ஊழின் வலிமையும் உணர்ந்து அறநெறி உணர்த்திய அறவோர் என்று உணர்தல் போதும். அதுவே உலகம் உள்ள அளவும் தமிழ் உள்ள அளவும் நிலைக்க வல்ல உண்மையாகும்' (இளங்கோவடிகள், ப.32) என மேலும் இக் கருத்தினை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைப்பார் மு.வ.

இங்ஙனம் பேராசிரியர் மு.வ.வின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த சான்றோர்களாகச் சங்கப் புலவர்களும் திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் விளங்குகின்றனர்.
 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.