திரு.வி.க. எனும் ஆளுமை: 'தமிழனாகப் பிறந்தார்; இந்தியனாக வாழ்ந்தார்!' (1883-1953)

பேராசிரியர் இரா.மோகன்
 

திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த நாள்: 26.08.2016

'தொழிலாளர் அன்னை; பெண்கள்
உயர்விற்கே உழைக்கும் தோழி;
செழுந்தமிழ்ப் பெரியார்; தென்றல்;
தீஞ்சுவைப் பேச்சின் தந்தை;
விழிநகர் திராவி டத்தின்
விடுதலை விழைந்த வீரர்...'


ன்பது கவிஞர் வாணிதாசன், திரு. வி. கலியாணசுந்தரனார் குறித்துத் தீட்டி இருக்கும் அழகிய சொல்லோவியம். இலக்கிய உலகில் ஒரு பெரும் புலவராக - சமய உலகில் ஒரு சான்றோராக - அரசியல் உலகில் ஒரு தலைவராக - பத்திரிகை உலகில் ஒரு வழிகாட்டியாக - தொழிலாளர் உலகில் ஒரு தனியரசராகக் கோலோச்சியவர் அவர். பேராசிரியர் மு.வ. குறிப்பிடுவது போல், 'திரு.வி.க.வின் தனி வாழ்க்கை திருக்குறளின் அறத்துப் பாலுக்கு ஒரு விளக்கம் எனலாம். அவ் வாழ்க்கையில் பாயிரம் உண்டு; இல்லறம் உண்டு; துறவறம் உண்டு; ஊழ்வலியும் உண்டு. திரு.வி.க. இல்லறத்தின் சிறப்பை உணர்ந்தவர்; துறவறத்தின் தூய்மையைப் பெற்றவர். அன்பு அருளாய்க் கனிந்த வாழ்வு அவர்தம் வாழ்வு எனச் சுருங்கக் கூறலாம்.'

இயற்கைக் கல்வி பயிலல்

இளமையில் திரு.வி.க.வின் பள்ளிக் கல்வி தடைப்பட்டது. அவர் பட்டத்திற்காகவும் பதவிக்காகவும் படிக்கும் கல்வியைத் துறந்தார்; இயற்கைக் கல்வி பயிலத் தொடங்கினார். 'யான் மாணாக்கன்; இயற்கைக் கழகத்தில் பயில்கிறேன்' என அவரே தம் 'வாழ்க்கைக் குறிப்புக்க'ளில் ஓர் இடத்தில் இது குறித்துப் பதிவு செய்துள்ளார்.

'பள்ளிப் படிப்பாம்! பதவியாம்! பட்டமாம்!
தள்ளி எழு; செம் முறையைத் தாங்கு...
இயற்கையில் நேரே இயைந்து இறங்கிக் கற்கும்
பயிற்சி பெருகுதல் பண்பு'


என 'இருளில் ஒளி' என்னும் கவிதை நூலில் திரு.வி.க. பாடி இருப்பதும் இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

'மனைவி ஒருத்தி தானே?'

திரு.வி.க.வின் இல்வாழ்க்கை நீண்ட காலம் நிலவவில்லை; ஆறே ஆண்டு நடைபெற்றது. அவரது குடும்ப வாழ்க்கை குழந்தைச் செல்வம் இரண்டினைப் பெற்று இழந்தது. அருமைத் துணைவியார் கமலாம்பிகை அம்மையார் எலும்புருக்கி நோயால் தாக்குண்டு இறந்து போனார். அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குள் திரு.வி.க.வின் சுற்றத்தினர் மறுமணப் பேச்சினை எடுத்தனர். 'பெருஞ்செல்வம்; ஒரே பெண். 'தேச பக்த'னைப் போலப் பத்துத் 'தேச பக்த'னைச் சொந்தத்தில் நடத்தலாம்' என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறிப் பார்த்தனர். திரு.வி.க.வின் நலனை உண்மையாகவே நாடும் உயிர் நண்பர்கள் சிலரும், 'இப்பொழுது வைராக்கியம் இருக்கலாம். நாளடைவில் அது கலையலாம் அன்றோ? உலகம் பொல்லாதது' என்று அவரிடம் வாதம் செய்தனர். 'மறுமணம் செய்து கொள்ளக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த திரு.வி.க. எவரது பேச்சுக்கும் இணங்கவில்லை. 'எனக்கு மனைவி என்பவள் ஒருத்தி தானே? இன்னொரு பெண்மணி எனக்கு எப்படி மனைவி ஆவாள்? அவள் எனக்குச் சகோதரி ஆவாள்' என்று அவர் தம் உள்ளக் கருத்தினைத் தெளிவு-படுத்தினார்.

மனைவியின் மரணத்திற்குப் பிறகும் திரு.வி.க. மனம் உடைந்து முடங்கிப் போய் விடாமல், பல வகையான பணிகளில் முனைப்புடன் ஈடுபாடு கொண்டார்; பெண்ணின் பெருமை இவ்வுலகில் நன்கு விளங்க அரும்பாடு பட்டார்; தம் நூல்களில் இயலும் வகைகளில் எல்லாம் பெண்ணின் பெருமையினைப் பேசினார். 'ஆண் எனும் அரக்கனாக வாழ்வதினும் பெண் எனும் தெய்வமாக வாழ்வதில் எனக்கு விருப்புண்டு' என ஒரு முறை 'நவசக்தி' இதழில் அவர் எழுதினார்.

திரு.வி.க. என்ற மூன்றெழுத்துள்...

'திரு.வி.க. என்ற மூன்றெழுத்துள் ஓர் உலகமே அடங்கியுள்ளது. பஞ்சாக்கரத்தினுள் ஆன்மீக உலகம் அடங்கி இருப்பது போல், திரு.வி.க. என்ற மூன்றெழுத்துள் தமிழ் இலக்கணம், இலக்கியம், சமயம், சமரசம், அரசியல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன என்று கூறினால் மிகையாகாது' என மொழிவார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன். 'தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்' என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில எழுத்தாளர்க்குப் பெயர் உண்டு. தமிழ் மொழியில் ஒருவருக்கு அப் பெயரைச் சூட்ட வேண்டும் என்றால், அவர் திரு.வி.க.வே என்று உடனே கூறி விடலாம். உரைநடை, சொற்பொழிவு, பத்திரிகைக் கட்டுரை, கவிதை, உரை, பதிப்பு முதலான பல்வேறு துறைகளின் வாயிலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட்டவர் திரு.வி.க.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பாரதியார் ஆணிவேராய் விளங்கியது போல், இருபதாம் நூற்றாண்டின் உரைநடை வளர்ச்சிக்குத் திரு.வி.க. மூலவராய்த் திகழ்ந்தார். 'உரைநடைக் கம்பர்' எனச் போற்றத் தக்க அளவிற்கு அவர் உரைநடையில் நூல்களை எழுதிக் குவித்தார். 'முருகன் அல்லது அழகு', 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை', 'இந்தியாவும் விடுதலையும்', 'உள்ளொளி', 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' முதலான நூல்கள் இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் இரண்டு பெருமக்கள் 'சிறுசிறு வாக்கியங்களின் தலைவர்'களாக
(Master of the Short Sentences) விளங்கினர். ஒருவர் மகாத்மா காந்தி; மற்றொருவர் திரு.வி.க. முன்னவர் ஆங்கிலத்திலும் பின்னவர் தமிழிலும் சிறிய சொற்றொடர் முறையைக் கையாளும் வித்தகம் கைவரப் பெற்றவர்களாகக் திகழ்ந்தனர். சான்றாக, லாலா லஜபதி ராயின் மறைவை ஒட்டி 'இமயம் சாய்ந்ததோ?' என்னும் தலைப்பில் திரு.வி.க. எழுதிய இரங்கல் கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே சுட்டிக்காட்டலாம்.

''இமயமும் சாய்ந்ததோ? சிந்துவும் வரண்டதோ?' என்று அலறுகிறோம்; அழுகிறோம்; அலமருகிறோம். தலைவருள் இமயமாய்ப் பக்தருள் சிந்துவாய் விளங்கிய நம் லாஜபதியும் நம்மை விட்டுப் பிரிந்தார். பாஞ்சால சிங்கத்தை - பாரத வீரத்தை - அஞ்சா நெஞ்சை - ஆண்டகைமையை - தியாக வள்ளலை - கல்விக்கரசை - லஜபதியை - இனி என்றே காண்போம்! பாஞ்சாலியின் அழுகை என்றே நீங்கும்! லஜபதி போன்ற தலைவரை - தேச பக்தரை - நாம் என்றே பெறுவோம்! உன்ன உன்ன ஊன் உருகுகிறது; உள்ளங் குழைகிறது!'

'பிறவிச் சொற்பொழிவாளர்'

ஆங்கிலப் பேச்சைப் போல் தமிழில் மேடைப் பேச்சினை ஒரு தனிக்கலையாக வளர்த்திலும் திரு.வி.க.வுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர் ஒரு 'பிறவிச் சொற்பொழிவாளர்'
(Born Orator); 'இன்றைய மேடைப் பேச்சுக் கலையின் தந்தை' (Father of Modern Oratory in Tamil). ஏனைய சொற்பொழிவாளர்களுக்கும் திரு.வி.க.வுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. அவர் ஒருபோதும் அவையோரின் நிலைக்குக் கீழே இறங்கி வந்து பேசமாட்டார்; கொச்சைச் சொற்களையோ வசைக் குறிப்புக்களையோ மருந்துக்குக் கூடக் கையாள மாட்டார். மாறாக, ஒட்டுமொத்த அவையினரையும் தம் உயர்ந்த நிலைக்கு மேலே கூட்டிச் செல்லும் அளப்பரிய ஆற்றல் அவரிடம் குடிகொண்டிருந்தது. அவையினருக்கும் தமக்கும் இடையே ஓர் ஆன்மிகக் கூட்டுறவை - நெஞ்சக் கலப்பை - ஏற்படுத்துவதில் திரு.வி.க. கை தேர்ந்தவராக விளங்கினார். காட்டாக, 'மேடைத் தமிழ்' என்ற நூலுக்குத் திரு.வி.க. எழுதிய முன்னுரையில் இருந்து ஒரு பகுதி வருமாறு:

'தோழர்களே! உங்கள் முன்னிலையில் யான் நிற்கிறேன். ஏன் நிற்கிறேன், தெரியுமா? 'மேடைத் தமிழ்' என்னும் நூலுக்கு 'அணிந்துரை' கூறப் போகிறேன். இக் கூற்று உங்கட்கு வியப்பூட்டலாம். 'அணிந்துரைக்கா மேடை! தோழர்களே என்ற விளிப்பு! நன்று! நன்று!' என்று உங்களிற் சிலர் நகைக்கலாம்; சிலர் எள்ளலாம்.' இவ்வாறு சொற்பொழிவுக் கலை பற்றிய நூலுக்குப் பேச்சு நடையிலேயே திரு.வி.க. முன்னுரை எழுதி இருக்கும் பாங்கு வித்தியாசமானது; தனித்தன்மை வாய்ந்தது.

மா வடு போன்ற நடை

திரு.வி.க. 'தேச பக்தன்' பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார்; 'நவசக்தி' இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பணியாற்றினார். 'திரு.வி.க.வின் பத்திரிகை நடை வாயில் நீர் ஊறச் செய்யும் மாவடு போன்றது' என்பர் அறிஞர். பதச் சோறாக, 'தேச பக்தன்' இதழில்
4.1.1918-இல் திரு.வி.க. எழுதிய ஆசிரியக் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி இதோ:

'தமிழ்நாட்டைத் திருத்தத் தமிழ் நூல்களே சாலும். இப்பொழுது திருவள்ளுவரைப் படிப்பவர் யார்? தொல்காப்பியரைத் தொடுபவர் யார்? புறநானூற்றைப் போற்றுவோர் யார்? சிலப்பதிகாரத்தைச் சிந்திப்பவர் யார்? மணிமேகலையை மதிப்போர் யார்? பத்துப்பாட்டைப் படிப்போர் யார்? பலரில்லையே. இந் நூல்களின் பெயர்களைக் கேட்டுள்ளவர் ஆயிரத்தில் ஒருவரோ? இருவரோ? அறிகிலேம்.'

இங்ஙனம் அருமையும் அழகும் இனிமையும் எளிமையும் உணர்ச்சியும் உயிரோட்டமும் கொலுவிருக்கும் நடையாகத் திரு.வி.க.வின் பத்திரிகை நடை விளங்கியது.

மனித வாழ்க்கைக்கு ஓர் இலக்கியம்

'என்னுடைய நூல்களில் முதல்முதல் படிக்கத் தக்கது, 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்பது. ஏன்? அதில் வாழ்க்கை உள்ளது ஆகலின் என்க. காந்தியம் மனித வாழ்க்கைக்கு ஓர் இலக்கியமாக விளங்குவது. காந்தியத்தில் வாழ்க்கையின் நோக்கும் அடைவும் இருக்கின்றன. அவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுவது மக்களின் முதற்கடமை' எனத் திரு.வி.க. தம் 'வாழ்க்கைக் குறிப்புக்க'ளில் 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இக் குறிப்பு ஒரு வகையில் அவருக்கும் முற்றிலும் பொருந்துவதாகவே உள்ளது. திரு.வி.க. மனித வாழ்க்கைக்கு ஓர் இலக்கியம். மனித வாழ்க்கையின் நோக்கும் அடைவும் தெரிந்து கொள்ள விரும்புவோர் திரு.வி.க.வின் வாழ்க்கையைப் பயில வேண்டும்; அது காட்டும் நெறியில் நிற்க வேண்டும். மூதறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் சொற்களில் குறிப்பிவது என்றால், திரு.வி.க. 'பழமையின் பிரதிநிதி; ஆனால், புதுமையின் சங்க நாதம். ஆண்மைக்கு அணிகலன்; பெண்மைக்கு விளக்கம். சாந்தத்தின் வடிவம்; ஆனால், வீரத்தின் ஊற்றுக்களம். தமிழனாகப் பிறந்தார்; இந்தியனாக வாழ்ந்தார்.'

 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.