சங்ககாலத் தமிழர் பண்பாட்டில் மானுடம், மனிதராய் இருத்தல், கருத்தியல்நிலை - புறநானூறு தழுவிய ஓர் ஆய்வு நோக்கு

பேராசிரியர் இ.பாலசுந்தரம்

'மானுடம்', 'மனிதராய் இருத்தல', 'கருத்தியல்நில' என்ற எண்ணக் கருத்துக்கள் பழந்தமிழரின் பண்பாட்டில் எத்தகைய படிமம் பெற்றிருந்தன் சங்காலப் புலவர்கள் அவைபற்றி எத்தகைய புரிந்துகொள்ளல்கள் கொண்டிருந்தார்கள்;; மன்னரும் மக்களும் அவற்றை எவ்வாறு உள்வாங்கித் தம் வாழ்வியலை சீராக்கிக்கொண்டனர் - என்பனபற்றித் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் மானுடம் பற்றிய எண்ணக்கரு பழந்தமிழ்ப்; பண்பாட்டில் உருவாக்கம் பெற்றிருந்தமையை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இவ்விடயங்கள் புறநானூற்றுப் பாடல்களின் மூலமாக எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வீரநிலைக் காலமாகிய சங்ககாலத்தில் இடம்பெற்ற தொடர்ச்சியான போர்களினால் இயல்மானுடப் பண்புகள் சீரழிக்கப்பட்டிருந்தன. மானுட அவலங்களையும் அழிவுகளையும் தடுத்து நிறுத்தும் கடமைப்பாடு மானுடம் போற்றிய புலவர்களுக்கு உரியதாயிற்று. இதனால் அப்புலவர்கள் 'சான்றோர்கள்' என இடைக்கால அறிஞர்களால் சிறப்பிக்கப்பட்டனர். அவர்களது பாடல்களில் குறிக்கோள் தழுவிய ஆற்றுகைகள் முனைப்புப் பெற்றிருந்தன. மானுடத்தை மழுங்கடிக்காது அரசும் மக்களும் அமைதி வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகப் புலவர்கள் பெரும்முயற்சி எடுத்திருக்கிறார்கள். மானுடம் காக்கும் வகையில் வடக்கிருந்து தம் உயிரையும் ஈகம் செய்திருக்கிறார்கள். மானுடம் தழுவிய மனிதராய் வாழும் வழிவகைகளைத் தமது பாடல்களினூடாக அரசர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்ற செய்திகள் புறநானூற்றினூடாக அறியப்படுகின்றன.

மானுடம் பற்றிய சிந்தனைகள் புறநானூற்றுப் பாடல்களிலே முதன்மை பெற்றிருப்பதற்;குரிய காரணங்கள் ஆராயப்பபட வேண்டியவை. மானுடம் பற்றிப் பேசுவோர்களில் அரசர்களும், புலவர்களும் இடம்பெறுகின்றனர். இவர்கள் எத்தகைய சந்தர்ப்பங்களில் இவைபற்றிப் பாடுகின்றனர் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

பகுதி
- 1

அ) புறநானூறும் புலவர்களும்:

சங்ககாலத்து 'எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு, பண்டைத் தாமிழகத்தின் அரசியல் நிலைமை, குடிமக்களின் வாழ்க்கை முறைமை, அவர்களின் பொருளாதார நிலைமை, புலவர் பெருமக்களின் உள்ளத்துணர்வுகள் முதலாயினவற்றை வெளிப்படுத்துகிறது. சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் மக்கள் வாழ்விலிடம்பெற்ற நல்லியல்புகளையே தம் பாடல்களிற் பாராட்டியுள்ளனர். தீமை செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள். இங்ஙனம் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இவை இவையென உள்ளவாறு விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளின் பிழம்பாகவும் சங்க காலத் தமிழகத்தின் வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநாநூறு'(2) ( கே.கே.பிள்ளை)

'சங்க கால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள், மாளிகைகள் அங்காடிகள், கோயில்கள், துறைமுகங்கள், பந்தர்கள், அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும் இப்போது மறைந்து விட்டன. ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய பாடிய பாடல்கள் இப்போதும் எஞ்சிநிற்கின்றன. இவை பண்டைத் தமிழரின் சால்பை விளக்கிக்காட்டுகின்றன.' (2) கே.கே. பிள்ளை . பக் 128). தொல்காப்பியர் அகம், புறம் என்று கூறும் மனிதப் பண்புகளில் புறம் என்பது வீரமும் போரும் சார்ந்தது. வீரம், போர் பற்றிய 400 பாடல்களின் தொகுப்பாக புறநானூறு திகழ்கிறது. புறநானூற்றில் 43 முடியுடை மூவேந்தர்கள் 138 பாடல்களிலும், 48 குறுநில மன்னர்களும் தலைவர்களும் 141 பாடல்களிலும், மற்றும் பொது விடயங்கள் 121 பாடல்களிலும் பாடப்பட்டுள்ளன. ஏனைய புறப்பாடல்களில் வீரமும் போரும் முதன்மை பெறுவதோடு, அகப்பாடல்களிலும்; வீரமும் போரும் உவமைகளாகவும் காதற் பின்னணிகளாவும் அமைந்துள்ளன.

சங்க காலத்தில் வீரப்போர், மறப்பண்பு என்பன பெரிதும் போற்றப்பட்டன. புலவர்கள் மன்னரையும் வள்ளல்களையும் சார்ந்து வாழ்ந்;தனர். இவர்களிடையே நெருங்கிய நட்பும் நிலவியமைக்குப் பாரியும் கபிலவரும், அதியமானும் ஒளவையாரும், கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் என வரும்; பட்டியல் சான்றாகின்றது. புலவர்கள் மானுடம் நிலைத்தோங்கத் தக்கவகையில் மன்னர்களை நெறிப்படுத்தினர். மன்னர்கள் புலவர்கள்மீது கொண்டிருந்த மதிப்பும் நட்பும் அவர்களை மானுடத்தைப் போற்றி மதிக்கச் செய்தன. 'புலவர்கள் அரசர்களின் பரிவாரத்தின் ஒரு பகுதி என்ற முறையில் அவர்கள் அரசர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் அரசியல் தூதுவர்களாக அனுப்பப் பெற்றனர். கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைக்க அவர்கள் தம் மதிப்புக்குரிய நிலையைப் பயன்படுத்தவும் செய்தனர்' என்கிறார் கைலாசபதி (3)

2) மொழியும் மானுடமும்:

மனம் படைத்தவன் மனிதன். மனிதனை மனிதனாக்குவது மொழி. மனத்தால் மொழி வளர்ந்தது. மொழியால் மனம் உயர்ந்தது. மனம் உணர்வுகளுடனும் கருத்துப் பரிமாற்றங்களுடனும் தொடர்புடையது. எறும்பு முதல் யானை முதலாக தத்தம் ஒலிகளால் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றன. ஆனால் நுட்பமான கருத்துப் பரிமாற்றத்திற்குரிய கருவியாக மனிதன் தான் படைத்துக்கொண்ட மொழி பயன்படுவதாயிற்று.(4) மனிதனை மனிதத்தன்மை உடையவனாக சமூகத்தில் தொடர்புகொள்ளச் செய்யும் கருவிகளில் மொழி முதன்மையானது. 'மக்கள் தாமே ஆறறிவுயிரே| எனத் தொல்காப்பியர் ஆறறிவுயிர் என்ற சிறப்பினை மக்களுக்கு வழங்கியமை அவர்கள் பேசும் மொழியிலேயே என்பது இதனால் தெளிவாக உணரப்படகிறது. மொழி இல்லையேல் மனித சமுதாயம் இல்லை. மொழி இல்லையேல் மனித நாகரிகம் இல்லை என்பர் பேராசிரியர் கருணாகரன்.' (5) (மொழியியல் பக் - 2). எனவே மனிதன்
à மனிதம் àமானுடம் என்ற ஒரு பொருட்கிளவிக்கு மொழியின் மாண்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

மானுடம் என்பது நேர்மை, சோர்வின்மை, நீதி, தர்மம் முதலான பண்புகளுக்கு இலக்கணமாக அமைவது. இயற்கை மாறினும், நாட்டின் சட்டதிட்டங்கள் மாறினும், அரசியல் - அதிகாரம் முதலியன தாக்கங்களை ஏற்படுத்தியபோதிலும் தன்னிலை மாறாதிருப்பதே மானுடத்தின் மாண்பு. மானுடம் மனித நேயத்துடன் தொடர்புடையது. முhனுடம் என்பது நட்பு, அன்பு, என்பற்றை உயிரோட்டமாகக் கொண்டது. நட்பு என்பது சால்பறிந்து சேர்வது. ஆது நிலையானது. நண்பர்கள் எப்போதும் சேர்ந்தே இயங்குவர். அவர்கள் மாறுபடுவதில்லை. நீதிக்காக, வன்செயல்களுக்கு எதிராக அரசையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்கள்தான் மானுடத்தின் போற்றும் மனிதர்கள். அவ்வழி வந்த அரசர்கள் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் மானுடம் நிலைபெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்ற அரசனை முரஞ்சியூர் முடிநாகனார் என்ற புலவர் பாடுவதைக் குறிப்பிடலாம். (2)

3) மறம் அக்கால மானுடம் தழுவிய மறப் பண்பாயிற்று:

பொறுமைக்கு நிலத்தையும் மலையையும் ஒப்பிடுதல் புலவர் மரபு. மேற்காட்டிய பாடலிலே 'பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று' சேரலாதன் மனஉறுதியுடனும் நிலைமாறாத் தன்மையுடனும் ஆட்சியை மேற்கொண்டான். நாட்டு மக்களும் பொதுநலம் நோக்கி பழி அஞ்சி வாழ்ந்தனர். மக்களின் நலனுக்காகத் தம் உயிரைக்கூடத் தியாகம் செய்யும் பண்பினராக வாழ்ந்துள்ளனர். வீரத்திற்கும் அதனாற் பெறப்படும் புகழுக்கும் மதிப்புக்கும் தம் உயிரையும் ஈகம் செய்யத் துணிந்துனர் அக்கால வீரர்கள் - என்பதைப் புறநானூறு இரண்டாம்; பாடற் பகுதி சான்றுபடுத்தகின்றது.(7) வீரம் செறிந்த புகழுக்காக வீரர்கள் தம் முயற்சிகள் அனைத்தையும் செலவிட்டனர். அதனால் சான்றோர்களாகிய புலவர்களும் அவர்களது புகழைப் பல்லாற்றானும் புகழந்து பாடலாயினர் (8) இதுபோன்றே வீரர்கள் நல்லிசையுடன் திகழ்ந்தனர் என்ற செய்தியும் புறநானூற்றில் பல பாடல்களில் இடம்பெறுகிறது (9).

4) மன்னிக்கும் பண்பு மானுடத்தின் தனிச் சிறப்பு:

மிருகவர்க்கம், மனிதவர்க்கம் என உயிருள்ளனவற்றைப் பிரித்துக் கூறுவர். மனிதன் சமூகப்பிராணி என குறிப்பிடப்;படுகிறான். மன்னிப்பவன் மனிதன். வேறு எந்த உயிரினங்களிலாவது மன்னிக்கும் இயல்புள்ளதா என்பது ஆய்வுக்குரியது. தமிழக வீரநிலைக் காலத்தில் (கி.மு.1000-கி.பி.300) வாழ்ந்த முடியுடை மூவேந்தரும் பொறுமை, மன்னிப்பு என்ற மானுடப் பண்புகளுக்கு மதிப்பளித்துள்ளனர். மண்ணாசை பிடித்து பிறர் மண் கவ்வும் ஆசையுடன் படையெடுத்து அரக்கத்தனம் புரிந்த அரசர்களிடையே பொறுமை பேணி, மானுடராய் வாழ்ந்து மானுடம் பேணிய அரசர்களும் அக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். சான்றாக, சேரலாதன் பற்றிய பாடலை நோக்கலாம்: 'பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்கும் அளவில்லையாயின் அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும் பெற்று, மானிடம் பேணியமையை 'போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும" (புறம்.2:7-8) என்ற பாடல் வரி மானுடம் பேணியமையைக் குறிப்பிடுகின்றது.

5) வாய்மொழி உறுதி பேணல்:

உரைத்த சொல் தழும்பாமலும், மாறாமலும் இருக்க வேண்டும். பொய்ம்மை இல்லா வாழ்வே மானுடம் சான்றது. அரசனாயினும்சரி மக்களாயினும்சரி சொற்றிறம் ஓம்ப வேண்டும். பாண்டியன் கருங்கையொள்வாள் பெரும்பெயர்வழுதியிடம் இரும்பிடர்த்தலையார் இப்பண்பினைக் கண்டார். அரசனது ஆணை பிறழுமாயின், அரசியல் அறம், பொருள், இன்பம் என்பன நிலைபெறாது போய்விடும். ஆகவேதான், 'நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்..:(புறம்.3: 14) என அப்புலவர் பாடினார். இதனையே திருவள்ளுவர் 'ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்' (குறள் 990) என்ற குறள்மொழி மூலம் விளக்கினார்.

6) நீதி வழுவாமை:

மானுட தர்மங்களை மனுநீதி முதலான நீதி நூல்கள்எடுத்துரைத்து வந்துள்ளன. மனுநீதி கண்ட அனபாயசோழன் ஆவின் கன்றைக் கொன்ற தனது மகன் செய்த குற்றத்திற்காகத்; மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்ற செய்தி சோழ மன்னர்களின் நீதி பிறழா செங்கோல்hட்சியைக் குறிப்பதாகும். நீதிவழி நின்றொழுகிய பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற அரசனைக் காரிகிழார், 'தெரிகோல் ஞமன்ன் போல ஒருதிறம் பற்றிலியரோ நிற்றிறம் சிறக்க..' (புறம்.6: 9-10) என நீதியின் இருப்பிடமாக இருந்து சிறப்புறும் எனப் பாடுகிறார். வேந்தன்பால் நடுவுநிலைமை இன்றாயின், படை குடி அமைச்சு நட்பு முலான அரசியல் அரண்கள் சிறப்புற அமைந்து அரசியலுக்குத் துணைசெய்யாவாதலால் நின்னிடம் நீதி மேலும் சிறக்க எனப் பாடப்படுகிறது.

மானுடம் என்பது பிழைகண்டு பொங்கும் தன்மையது. பொய்ச்சாட்சி, பிறர் பழி கூறுவோரை அணுகாதிருத்தல், குற்றங்களை நீதி நூல்களுக்கு ஏற்பத் தீர ஆராய்ந்து குற்றங்கடிதல் முதலிய மானுடப் பண்புகள் அரசர்களிடம் நிலைபெற்றிருந்தமையைப் புறநானூறு பல இடங்களிலே குறிப்பிடுகிறது. ஊன்பொதிபசுங்குடையார் என்ற புலவர், சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் நீதி நிர்வாகச் சிறப்பை வருமாறு குறிப்பிடுவர்:

'பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய்கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி'
(புறம்.
10:2-4)

அறம் என்பது மானுட நீதி. அறம் தவறினால் மக்கள் மாக்களாக மாறிவிடுவர். அரசநெறிக்கும் அறமே முதன்மையானது. அறநெறிபோற்றம் நீதிமுறைகளில் அரசு தவறுமாயின், அதன் கொற்றம் அழிந்துவிடும். நமர் - தமர் பாராது அரசு நீதி செலுத்துதல் வேண்டும். நீதி செலுத்தும்போது ஆண்மையும் தண்மையும் வண்மையும் என்ற பண்புகள் மிளிர வேண்டும். இப்பண்புகள் யாவும் கைவரப்பெற்று ஆட்சி செய்க எனப் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை, மதுரை மருதனிளநானகனார் பாடுதல் (புறம்
:55. 10-17) நோக்கத்தக்கது (6)

6) பொதுமை நோக்கம்:

தன்னலமற்றுப் பொதுமை நோக்குவதும், தனக்கென வாழாது பிறர்நலம் பேணுதலும்,, எல்லோரும் வாழ வேண்டும் என எண்ணும் சான்றாண்மையும் பொருந்தியதே மானுடம். முpருகம் தன்னுயிர் காக்கப் பிற உயிர்களைக் கொன்று வாழ்கிறது. தான் நீடுவாழ வேண்டுமென சிறப்புணவு தேடி உண்ணும் நிலையுள்ள மனித வாழ்க்கையில் நீடூழி வாழத்தக்க நெல்லிக்கனி அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனுக்குப் பரிசாகக் கிடைத்தது. ஆனால் அம்மன்னனோ தன்னைவிட மக்களுக்கு நல்லனகூறி, அவர்களை நன்னெறிப்படுத்தும் பெரும்புலவர் ஒளவையாருக்கு அதனைக் கொடுத்து மகிழ்ந்தான். இங்கு மானுடம் மேலோங்கி நிற்கிறது. சங்ககாலத்தில் மானுடம் வென்ற செய்திகள் பல இடங்களில் பேசப்படுவதற்கு அதியமான் நெடுமான் அஞ்சி அவ்வையாருக்கு நெல்லிக்கனி ஈய்ந்தமை பற்றிப் பாடும் புறம்
91 ஆம் பாடல் தக்கதொரு சான்றாகும்.


7) கற்றோர் போற்றப்படுதல்:

'இலங்கு நூல் கல்லாதவர் விலங்கொடு அனையர்' (குறள் 410) என்றார் வள்ளுவர். ஆறறிவு படைத்தவன் மனிதன். கல்வியால் உயர்ந்தோர் உலகின் கண்கள் போன்றவர்கள். கல்வியறிவு மிக்கவர்கள் ஒளி மிக்கவர்கள். அவர்களால் உலகம் ஒளிபெறுகிறது. அதனால் மனித இனமும் மானுடப்பண்பும் உயிர்ப்புப் பெறுகின்றன. கல்வியாளர்கள் செறிந்த நாடாயின் அது, மானுடம் செறிந்த நாடாகும். சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனைப் பாடவந்த புலவர் இளங்கீரனார், 'ஒளியோர் பிறந்த இம்மலர்தலை உலகம்... (புறம்:
53 வரி 9) எனப் பாடுவதன் மூலம் மானுடம் போற்றும் மாந்தர்கள் இவ்வுலகில் நிறைந்திருந்த செய்தி அறியப்படுகிறது. சங்க காலத்தில் கபிலர், பரணர் முதலான பெரும்புலவர்கள் கல்வி கேள்விகளில் மேம்பட்டு விளங்கினர் என்பதை, 'செறுத்த செய்யுள் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' (புறம்.53:11-12) என்ற பாடலடிகள் சான்றுபடுத்துகின்றன.. இன்றைய உலகில் கல்வி கட்;டாயமானது என்பதைச் சட்ட மூலமாக நாடுகள் அமுல்படுத்தி வருகின்றன. சங்க காலத்தில் எவ்வகையிலாயினும் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மக்களுக்கு எடுத்துரைத்த செய்தி (புறம். 183) மிகவும் நுண்ணிதாக நோக்கப்பட வேண்டியதாகும். (3)


8) அரசரும் புலவரும்:

அரசுகள் வளர்ந்து தலைப்பட்ட நிலையில், அரசுரிமைக் கோட்பாடும் நன்கு வளர்ச்சி பெறுவதாயிற்று. இக்கோட்பாடு அரசர்களைத் தெய்வீக மரபு உடையவர்களாகப் பாடவழிகுத்தது. அரசர்கள் உயர் மரபினராகக் கணிக்கப்பட்டபோது புலவர்களுக்கும் மன்னர்களுக்கும் மேலும் இறுக்கமான உறவும் நட்பும் ஏற்படலாயின. இந்த மேம்பாட்டு நிலையை மக்கள் அறியச் செயபவர்களாகப் புலவர்கள் செயற்பட்டனர். நெடுஞ்செழியன் (அதியமான் ?) என்ற மன்னன், புலவர்களால் பாடப்படும் பெருமையைத் தான் இழப்பதாகக் கூறியமையை ஈண்டு நினைவுபடுத்துதல் பொருந்தும் (புறம்: ). புலவர்களின் புகழ்மொழிகள் இன்பக் களிகூரும், புகழ்ச்சி விரும்பும் அரசர்களை மகிழ்வுறுத்த மட்டுமான வடிவமாக இல்லையென்றும், மற்றவர் களிடையே அவர்களைக் குறித்து விளம்பரமாகவும், பலர் அறியப் புகழ் பரப்புவதாகவும் பயன்பட அமைந்த தென்க் கூறப்போதுமான சான்றுள்ளது. 'வீரநிலைக் காலத்தில் புலவர்கள் அக்கால மக்கள் தொடர்பு ஊடகங்களின் மறுவடிவமாக இருந்தனர் எனக் கூறும் சாட்விக் தம்பதிகளின் கூற்றை. இதற்குச் சான்றாகக் காட்டுவர் கைலாசபதி.(8)

நாட்டு மக்களை நல்வழிப்படுத்தும் பாரிய பொறுப்பு மன்னனுக்குரியதாக இருந்தது என்பதை, "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே .." என்ற பாடல் விளக்ககின்றது. (9)


9) நாணம் - மானம் - பழி:

புறநானூற்றுக் கால அரசர்கள் அரசியல், போர் முதலான செயற் பாடுகளில் நாணம் என்ற பண்பைக் கடைப்பிடித்துள்ளனர். புலவர்கள் நாணத்தைப் பெரிதும் புகழ்ந்து பாடினர் (இல.) தன் செயலை நேர்த்தியான முறையில் செய்வதற்கு வழிப்படுத்தும் கருவி அல்லது தன்னுணர்வே நாணம என்பதைப் புறம் 44 ஆம் பாடல் விளக்குகின்றது. நலங்கிள்ளி ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டபோது, கோட்டையுள் ஒளித்திருத்தல் அரச வீரத்திற்கு நாணுத்தகும் எனக் கோவூர்க்கிழார் ஆவூர்க்கோட்டை அரசனுக்கு எடுத்தரைத்த அப்பாடற் செய்தி நோக்கத்தக்கது. புறமுதுகிடுதல், குற்றுயிராய்க் கிடத்தல் முதலாயின நாணத்திற்குரியன எனப் புறநானூறு விரிவாகக் கூறுகின்றது. புறம் 36 ஆம் பாடலிலே போர்ப் பறை கேட்டும் போருக்குப் புறப்பட்டு வராத மானம்கெட்ட அரசனோடு போரிடுதல் நாணம் அற்ற செயல் எனப் பாடும் பாடல் வீரநிலைக் காலத்தில் மானம், நாணம் என்ற இரு முக்கிய மானுடப் பண்புகள் பெரிதும் போற்றப்பட்டமை தெளிவாகின்றது.

||புகழ் எனின் உயிரும் கொடுத்தனர் பழி எனின் உலகுடன் அளிப்பினம் பெற்றிலர்' என்று கூறும் புறம்
182 ஆம் பாடல் பழி பற்றிய ஆழ்ந்த கருத்துநிலையைக் காட்டுகிறது. புறம் 151 பார்த்துச் சேர்க்க. மேலும் கோப்பெருஞ் சோழனும் அவனது இரு பிள்ளைகளும் முடியுரிமைக்காகப் போரிடக் கிளம்பிய செயல் பழியுடைத்து எனக் ("இகழுநருவப்பப் பழியெஞ் சுவைய" - புறம்::213:18); குறிப்பிடும் செய்தியும் சிந்தனைக்குரியது.

9) வீரத் தாய்மார்:

புறநானூற்றுக் காலத்தில் வீரத்தாய்மார் படைக்கப்பட்டார்களா அல்லது இயல்பாகவே அவர்கள் மறக்குடி மாதராய் தம் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்களா என்பது ஆய்வுக்குரியது. புறம் 86, 277, 278, 279, 295 முதலான் பாடல்களிலே வரும் தாய்மார் தம் பிள்ளைகளின் போர்மறத்தைப் புகழ்ந்து பெருமை பேசி வீரக்களிப்படைகின்றனர். வீரநிலைக்கால மானுடத்தில் பெண்மையும் தாய்மையம் வீரம் பெற்றிருத்தல் இயல்பானதே. தன் மகன் போர்களத்தில் வீரமரணம் அடைந்தானா என்பதை அறிந்து வரப்புறப்படும் வீரத்தாயின் கூற்றாக வரும்ப பாடல் நோக்கத்;தக்கது:

'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி என்மகன்
யாண்டு ளனாயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே'
(புறம்.
86- காவற்பெண்டு)

10) பெண்களின் சமூக நிலைப்பாடு:

பெண் பெருமைக்குரியவர்களாகக் கருதப்பட்டாள். ஒரு ஆடவனை அறிமுகம் செய்யும்போது அவனது மனைவியின் சிறப்பைச் சொல்லி அவனை அறிமுகம் செய்யும் வகையில் பெண் குடும்ப வாழ்க்கையில் முதன்மை பெற்றிருந்தாள் என்பதும் உணரப்படுகிறது.

"மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்.." (புறம் 314:1)
"மாசில் கற்பும் சேயிழையும் உடையாள் கணவன்"
|"பழிதீர் மொழியும் ஏந்திழையும் உடையாள் கணவன்".

இவ்வாறு பெண்ணை முன்னிலைப்படுத்தி ஆண் அறிமுகப்படுத்தப்படும் நிலைமையை உன்னிப்பாக நோக்க வேண்டும். புறநானூற்றுக் காலத்தில் 33க்கும் அதிகமான பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். வேற்று அரசர்பால் தூதுசெல்லக் கூடியதாக ஒளவயார் போன்றோர் இருந்துள்ளனர். பூதப்பாண்டியனின் தேவியைப்போல்அரச மகளிர் புலமை வாய்ந்தோராக வாழ்ந்துள்ளனர். இசைக்கலையிலும் நடனக்கலையில் சிறந்து விளங்கிய பெண்கள் ஊர்தோறும் வாழ்ந்துள்ளார்கள். இவ்வாறு பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வாழ்ந்துள்ளனர் என்கிறார் மு.வரதராசன் அவர்கள். (10)

'நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நலனே.
(ஒளவையார்: புறம். 187)

என்ற ஓளவையாரின் பாடலில் மானுடத்தின்; சரிபாதிகளான ஆண், பெண் என்ற பாகுபாட்டில் ஆண்களின் பலமும் பலவீனமும் பேசப்படுகின்றமை ஒரு திருப்புமுனையாகிறது. மானுடம் பற்றிய சிந்தனைகள் புறநானூற்றுப் பாடல்களிலே முதன்மைபெற்றிருப்பதற்;குரிய காரணங்கள் ஆராயப்பபட வேண்டியவை. மானுடம் பற்றிப் பேசுவோர்களில் அரசர்களும், (ஆண் - பெண்) புலவர்களும் இடம்பெறுகின்றனர். இவர்கள் எத்தகைய சந்தர்ப்பங்களில் இவைபற்றிப் பாடுகின்றனர் என்பதும் ஆராயப்படத் தக்கவை.

புறநானூறு, மற்றும் சங்க நூல்கள் தொல்காப்பியம் என்பன தரும் செய்திகளில் இல்லக்கிழத்தி, காமக்கிழத்தி என்ற இருதொடர்கள் அறியப்படுகின்றன. இவற்றுக்கு முறையே குடும்பத் தலைவி என்றும், வைப்பாட்டி - பரத்தை என்றும் தமிழ் லெக்சிக்கன் (தொகுதி 5. பக்..336) விளக்கம் தருகின்றது. இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலானோர் வௌ;வேறு விளக்கங்கள் கூறிய போதிலும் போர்மேகம் சூழ்;ந்திருந்த வீரநிலைக்காலத்தில் வீரர்கள் மனைவியரை நீண்டகாலம் பிரிந்திருந்தமை தெளிவானது. போர்க்களத்தில் பெண்களின் பங்களிப்பபும் இருந்திருக்கிறது. அகத்திணைப் பாடல்களிலே இல்லத்தரசிகள் தன் கணவன்மாருடன் ஊடல்கொள்ளும் தன்மையிலான அனேக பாடல்கள் உள்ளன. எனவே இக்காலப்பகுதியில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏக பத்தனிவிரதம் நிலைகொண்டிருந்ததா என்பது ஆய்வுக்கரிது. இங்கு பேசப்படும் வாழ்வியலை அக்காலச் சமூகம் ஏற்றிருந்தது என்பது மட்டும் உண்மையாகும்.

பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த செய்தியும் புறநானூற்றில் ( 125இ326). இவர்கள் உப்பு வணிகம், மீன் வணிகத்திலும் ஈடுபட்டிருந்த செய்திகளும் கிடைக்கின்றன. வீரந்தோம்புதலிலும் பெண்கள் சிறந்து காணப்பட்டனர் என்பதை புறம் 333 ஆம் பாடல் விளக்குகிறது.

11) குடும்பம் பேணப்பட்டது.
Family values

மாண்புமிக இல்லற வாழ்க்கை பற்றிச் சங்;க இலக்கியங்கள் விதந்தோதுகிறன. புதிய மணமகள் தன் கணவனுக்குச் சமைத்து உணவு பரிமாறும் அழகோ தனியழகாகக் குறு தொகை 167 பாடுகிறது. |இல்லற வாழ்விற்கு மிகவும் சிறப்பாக அமைவது நன்மக்கட் பேறு என்பது தமழிரின் கொள்ளை. இதனைத் திருவள்ளுவர் "பெறமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற" (குறள்: 61) எனப்பாடினார். குழந்தைச் செல்வம் பற்றி புறநானூற்றில் கூறப்படும் செய்தி மேலும் சிந்திக்கத்தக்கது:'பலரோடு உண்ணும் பெருஞ்செல்வராக இருப்பினும் குறுகுறுவென நடந்து, உணவைச் சிறுகையால் பிசைந்து மேலும் கீழும் சிதறிப் பெற்றோர் அறிவை இன்பத்தால் மயக்கம் மக்களைப் பெறாதார்க்கு உலகில் பயன்படும் பொருள் ஒன்றுமே இல்ல'எனப் பாடும் ' படைப்புப் பல படைத்து..." என்ற பாடலை (புறம்: 188) பாண்டியன் அறிவுடை நம்பி பாடினான். மேலும் குழந்தையைப் பெறுவது தம் கடன் என்றம் அக்கழந்தைக்கக் கல்வி பயிற்றியும் அறிஞ்களின் அவையில் முன்னணியில் அவன் முந'தியிருக்கம் தகுதியைப் பெற்றுக் கொடுப்பதும், அவன் சான்றோன் என்ற பாராட்டைப் பெறச் செய்வதும் தந்தையிகன் கடன் என்று பெண்கள் கூறுவதை 312ஆம் புறப்பாடல் விளக்குகிறது. இல்லறத்தோர் வருவிருந்தோம்பி வாழ்வாங்கு வாழ்ந்தமையும் கூறப்படுகின்றன (புறம். 182)

12) முதியோர் மதிநிலைக் கூற்று:

'யாண்டு பலவாக நரையில வாகுதல்.....) (புறம்: 191)


13) நிலையாமைத் தத்துவமும் மானுடமும்:

'நில்லா வுலகத்து மன்னதல் குறித்தோர்
தும்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே..'
(புறம்
165:1-2 குமணன் - பெருந்தலைச் சாத்தனார்)

'ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப....
(புறம்: 194)

14) ஈகை:

"பொருளின்மையால் ஏற்பட்ட வறுமை மிகப் பெரிதாகக் கருதப் பெற்றுக் கவலைப்படுபவர் களாகப் பண்டைத் தமிழர்கள் இல'லாததும் இங்கே சுட்டத்தக்கது. புண்டைய தமிழர் பண்பாடு பொருளியலை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்து அன்று. அன்பியலை அடிப்படையாகக் கொண்ட அருள் இயலே அவருக்கு நோக்கமாக .இருந்தது. காசு அறிமுகமாகாத பண்டமாற்று முறை முற்றும் பின்பற்றப்பட்ட சமுதாய அமைப்பில் இஃது இயலக் கூடியதே. இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளம் சுற்றம் சூழ்ந்த சமூக அமைப்பில் வறுமை பெரிதாகத் தோன்றாது. இது ஒரு பழங்குடிப் பண்பாகும்."(11)

சங்ககால குறுநில மன்னரில் ஒருவரான குமணன்; ஈகையால் பெயர்பெற்றுத் திகழ்ந்தான். அவன் ஆட்சியைத் துறந்து, காட்டில் வாழ்ந்தபோது தன்னை அணுகிய புலவனுக்குப் பரிசில் கொடுக்க ஒன்றுமின்றித் தன் தலையையே கொய்து எடுத்துச் சென்று பெரும்பொருள் பெறுக எனக் கூறியமை அம்மன்னிடம் காணப்பட்ட மானுட மாண்பினை வெளிப்படுத்துகிறது. பசித்தார் முகம் பார்த்து, அவர்கள் இரந்து கேட்க முன்னமே அவர்களது பசிப்பிணியைப் போக்குவதே ஈகை. ஒருவரது முகக் குறிப்புக் கொண்டு அவரது துயர் துடைத்தல் மானுடப் பண்பு என்பதை.ப் புறநானூறு, (3:25-26); குறிப்பிடுகின்றது. வேள்பாரியின் வள்ளன்மை பற்றி கபிலர் பாடியது ஈண்டு நோக்கத்தக்கது:

'பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப் புர்லவர்
கபரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப்பதுவே.'(புறம் 107)

திருமுடிக்காரி, ஆய், நாஞ்சில் வள்ளுவன், கோப்பெரும்பேகன், வெல்வில் ஓரி, கொன்கானங் கிழான், ஏறைக்கோன், குமணன், இளவெளிமான், ஏனாதிதிருக்கிள்ளி, பிட்டங்கொற்றன, முதலான வள்ளல்களின் கொடைத்தன்மை பெரிதும் புகழ்ந்து பாடப்பட்ட பல பாடல்கள் (புறம்: 105 -175 : 70க்கும் மேல்) தொடர்ச்சியாக புறநானூற்றிலே இடம்பெற்றுள்ளன. இக்கொடை வள்ளல்களன் புலவர்களை மட்டும் பேணினார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. எவ்வாறாயிறுனம் பகிர்ந்துண்டு வாழும் மாண்பு காணப்படுதல் குறிப்pடத்தக்கதாகும்.

போரில் வீரர்கள் கைக்கொண்ட திறைகள், வெற்றிச் சின்னங்கள், பரிசுகள் ஆகியன உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆச்செயல் இவர்களுக்குப் புகழ் ஈட்டிக் கொடுத்தன. இச்செயல்கள் மன்னரதும் போர் வீராகளதும் வாழ்விலே பெருமைக்குரியனவாகக் கருதப்பட்டன. வீரநெறிக் காலத்துப் போர் - வீரச் செயற்பாடுகளில் மானிடம் பேணும் தன்மை இவ்வாறு அக்கால மக்களால் மதிப்பிடப்பட்டிருக்கலாம்..

15. சமூக ஏற்றத் தாழ்வுகள்:

உயர்ந்தோர் (புறம், 28,33,36) மேலோர் ( புறம்.31) என்ற சொல்லாட்சிகள் தொல்காப்பியர் காலத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன என்பதற்குச் சான்றாகலாம். மேலும், அடியோர், வினைவலர், ஏவல்மரபினர், ஏனோர் என்ற சொல்லாட்சிகளையும் தொல்காப்பியர் குறிப்பிடுவர். அவ்வாறு ஆய்வுழி, இவை அக்கால அடிமைகளையும் பணிந்து வேலை செய்த வேலையாட்களையும் ஏவுதலுக்கு அடங்கி நடந்த ஏவலர்களையும் சுட்டுவன என்ற முடிவிற்கே வருதல் ஒல்லும் என்றார் க.ப. அறவாணன்; (12). இயற்றையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்ந்த சங்ககால மக்களைத் தொழில்கள் வேறுபடுத்திக் கூறின. தச்சன், கொல்லன், பாணன், பறையன், கூவலன், காரோடன், மீனவன் முதலான தொழிற் பிரிவினர் வாழ்ந்தனர். சமூகத்தின் அடிநிலையில் கடைசியர் அமைமந்தனர். ஆனால் கொல்லனும் கோவும் ஒரே அவையத்தில் வீற்றிருந்து பாவியற்றியுள்ளனர். அக்கால மன்னர்கள் மக்களோடு பழகித் தொடர்பு கொண்டு வாழ்ந்தனர். அவர்களிடத்தில் பரந்த மனநிலையும் உயர்ந்த பண்புகளும் பெரகின. ஆன்பும் அறமும் பண்பும் இரக்கமம் ஈதலும் விருந்தோம்பலும் அவர்களின் வளர்ச்சியைக் காட்டின. "யாதும் ஊரெ யாவரும் கேளிர்" என்ற கணியனட் பூங்குன்றனார்pன் அடி இந்தச் சமூகப்பின்னணியில் தோன்றிதாகும் என்கிறார் க.வே. செல்வம். (13)

பகுதி -
2

ஆ) மானுடம் நிறைந்த மனிதராய் வாழ்தல்:

பாவச் செயல்களுக்குப் பயந்து அறம் போற்றினர்:

'இம்மைச் செய்தது மறுமைக்காம் என்னும் தத்துவத்தின் வழி மக்கள் ஒழுகியிருத்தல் மானுட்ம் நிலைத்திருந்தமைக்குச் சான்றாகின்றது. ( புறம் 134 வேள் ஆய் அண்டிரனை - ஆயைஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது)

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைப் நரிவெரூஉத்தலையார் பாடும்போது,

'அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங்கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி' (புறம்:5; 5-8)

என அறிவுரை கூறுவதற்குரிய காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். புறநானூற்றுக் காலம் வீரயுகம் என்பது வெளிப்படை. போர் அறமாகக் கொள்ளப்பட் அக்காலத்தில் கொலைகள் பாவமாகக் கருதப்பட்டிருக்க முடியாது. ஆனால் மானுடம் நிறைந்த மக்களும். சான்றோர்களும் அவர்களிடையே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பாவம் புண்ணியம், சொர்க்கம் - நரகம் என்பன பற்றிப் பேசப்பட்டன. குழந்தைகளைப் பேணுவோர் போன்று மக்களை ஓம்பிக் காக்க என மன்னர்களை வேண்டிக் கொண்டார்கள் என்பதை இப் பாடல் வரிகள் விளக்குகின்றன. மேலும் பாவ புண்ணியங்கள் பற்றியும் பேசப்பட்டன. 'ஆன்முலை அறுத்த அறனி ல்லோர், மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர், குரவர் தப்பிய கொடுமை யோர்......: (புறம்:34: 1-3) எனப் பாவச் செயல்கள் பேசப்படுகின்றமையை நோக்கும்போது அக்காலத்தில் மக்கள் மானுடராக வாழத்தலைப்பட்டனர் என்பது புலனாகிறது.

'பல்சான்றீரே பல்சான்றீரே... புறம் 195) விளக்கம் எழுதுக

2) செய்ந்நன்றி பேணல்:

நன்றி மறவேல் என ஒளவையாரும் பிற்காலத்தில் விதந்துரைத்தார். திருவள்ளுவரும்
'என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்நன்றி கொன்ற மகற்கு' (குறள் )
என்று செய்நன்றி மறவாமையயின் மகத்துவதை;தைக் குறிப்பிட்டார். புறநானூற்றுக் காலத்தில் மானுடம் நிறைந்தவராய் வாழ்ந்த மக்கள் நன்றி மறவாமைப் பண்பே மிகச் சிழறப்பாகப் பேணிவந்தனர் என்ற செய்தியை சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற அரசனை - ஆலத்தூர்கிழார் என்ற புலவர் பாடும்போது வெளிப்படுத்துகின்றார்:

'ஆன்முலை அறுத்த அறனி ல்லேNhர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென,
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென
அறம்பா டிற்றே.. '
(புறம்:34: 1-7)

(மக்கள் மானுடராய் வாழ்வாங்கு வாழ வகுத்த விதிமுறைகளே இவை)

'எந்தை வாழி யாதனுங்க என்
நெஞ்சந் திறப்போர் நிற்காண்குவரே
நின்னியான் மறப்பின் மறக்குங்காலை
என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்னியான் மறப்பின் மறக்கவென ...'
(புறம் 175 ஆதனுங்கன் _அத்திரையனார் )

3) வளம் பெருக்கல்:

மக்கள் மனிதம் நிறைந்த மானுடராய் வாழ்வதற்கு நாட்டில் அமைதி, பசிப்பிணி இன்மை, நீதி, அறம் என்பன நிலைத்திருக்க வேண்டும். இவற்றுக்கு அடிப்படையாகவுள்ள பொருள் வளம் நாட்டில் மலிய வேண்டும். அக்கால மன்னர்கள் 'நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தர்..! (35:12ஆம் வரி) ஆக வாழ்ந்தனர். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் ஆதலால் மன்னன் நாட்டின் வளங்களைப் பெருக்க வேண்டியிரநு;துத. இதனையே பாண்டியன் தலையானங்கானத்தச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடும் - குடபுலவியனார் தம் பாடலிற் (புறம்:18:19-23, 27-30) குறிப்பிட்டுள்ளார்.( 14)

இதுபோன்றே,"ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கம் நாடுகிழவோயே."
( புறம். 40:10-11) என சோ மன்னன் புகழப்படுதல் நோக்கத்தக்கது. ஆக்காலத்தில விவசாயக்குடிகள் சசுகத்தில் வளமுடனும் செல்வாக்கடனும் வாழ்ந்திருக்க வேண்டும். உழவுத் தொழிலுடன் தொடர்புடையவர்களாக ( வேளாண்மை) வேள், வேளிர், ஆய், வேள்எவ்வி, வேள்பாரி ஆகிய குறநில மன்னர்கள. ஈண்டுச் சிந்திக்கத்தக்கவர்கள்.


4) மன்னனை மக்கள் போற்றுதல்:

மக்கள் தம் மன்னனைத் தம் உயிருக்கு மேலாக நேசிக்கும் நிலைப்பாடு அவர்களின் மானுடம் நிறைந்த வாழ்வை வெளிப்படுத்துவதாகும். வுPரநிலைக் காலத்தில் மன்னனுக்காக மக்கள் தம் இன்னுயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தமை வெள்ளிடைமலை. மன்னன் நீண்டகாலம் உயிராபத்து ஏதுமின்றி நலமாக நீடுவாழ வேண்டும் என மக்கள் வேண்டித் தொழுதனர். இச் செய்தியைச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை – குறுங்கோழியூர்க் கிழார் பாடும்போது வருமாறு புலப்படுத்துகிறார்:

'அறிவும் ஈரமும் பெருங்கண்ணோட்டமும்
சோறு படுக்கும் தீயொடு – செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின்நிழல் வாழ்வோரே
திரு வில்லல்லது கொலைவில் அறியார்
நாஞ்சில் அல்லது படையுமறியார்..
(உன் மக்கள் எல்லோரும்)
......................
மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சுமே' (புறம்.20:6 -11, 21ம் வரிகள்)
மக்கள் மனத்தில் இடம் பிடித்துக்கொண்ட மன்னரும் ம கொடைவள்ளல் இறந்தபோது மக்கள் மீளாத் துயரடைந்தனர் என்ற செய்திகளும் பாடபடபட்டுள்ளன. சான்றாக, பேராண்மையிலும்தாளாண்மையிலும் கொடையாண்மையிலும் சிறந்து விளங்கிய பெருஞ்சாத்தர்ன் என்பவன் இறக்க மக்கள் அடைந்த தயரைப் பின்வரும்ப hடலால் கீரத்தனார் வருமாறு பாடுகிறார்.:

"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வுல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே
(புறம் 242)

5) நாடு தேவர் உலகம் போன்றிலங்கியது:

சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி செய்த சேரநாட்டில் மக்கள் மானுடம் நிறைந்தவர்களாக வாழ்ந்தார்கள். மன்னனின் நாடு தேவர் உலகம் போன்றிலங்கியது. தேவலோலகம் என்பதையே சுவர்க்கலோகம் எனக் கொள்வது சமயவழி நம்பிக்கை. அங்கு மேலோர் கீழோர், துன்பம் -துயரம், பகைமை காழ்ப்பு எதுவும் இல்லை. மக்கள் மானுடம் நிறைந்த தேவர்களாக மானுடம் நிறைந்த மக்களாக வாழ்ந்தனர் என்பது தேற்றம். இந்த வாழ்வுநிலையை ஒத்த நிலைமை சேர நாட்டிலும் நிலவிற்றென குறுங்கோழியூர்க்கிழார் வருமாறு குறிப்பிடுகிறார்:

' மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடு
புத்தேழ் உலகத் தற்று எனக்கேட்டு வந்தோம்..'
(புறம். 22:34-35)

6) மன்னர் பழிக்கு அஞ்சுதல்:

நாட்டில் ஏற்படும் அனைத்து அவலங்களுக்கும் மன்னர் தாமே பொறுப்பு ஏற்கும் அருங்குணம் பெற்றிருந்தனர். பஞ்சம், பிணி, மழையின்மை, வெள்ளம், இயற்கை மாற்றம் என்பன நிகழ்ந்தால் அது கோனாட்சியின் கொடுமையின் பயன் என்பது அக்கால மன்னராடசியின் தத்துவமாயிற்று. அதனால் நாட்டில் எத்தகு குறைபாடும் ஏற்படா வண்ணம் அரசன் ஆட்சி மேற்கொண்டான். மக்களும் மானுடம் நிறைந்த வாழ்க்கையினைப் பேணினார்கள். இதனை சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை - குடிநாகனார் வருமாறு பாடுகிறார்:

'மாரி பொய்;ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகல்ஞாலம்
அதுநன் கறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோரே'
( புறம்.
35: 27 -34)


7) மன்னர் பொறுமை போற்றினர்:

கற்றோர்க்கு அடக்கம் அழகு என்பதும், பெருமை என்றும் பணியும் என்பதும் வள்ளுவர் வாக்கு. விண் - பருதி – வளி மணடலம் முதலானவற்றை எல்லாம் ஆராய்ந்தறிந்த கல்விமான்கள் சோழநாட்டில் வாழ்ந்தார்கள். அக்கல்விமான்களாலும் அளந்தறிய முடியாத அடக்க குணமுடையவர்களாக மன்னர் விளங்கினர். இவ்வியல்பு மன்னரும் மக்களும் மானுடம் நிறைந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் குறிக்கும் என்பதையே சோழன் நலங்கிள்ளியை – முதுகண்ணன் சாத்தனார் பாடும் புறநானூற்ப்பாடல் 30 விளக்குகிறது.(அஅ )

8) சான்றோர் போரை விலக்கினர்:

அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மக்கள் வாழும் நாட்டின்மீது படை எடுத்தல் நாணத்தகும் எனக் கூறி, படைஎடுப்பைத் தடைசெய்து, நாட்டில் அமைதி பேணிணர் புலவர்கள். அதன் மூலம் மானுடம் நிலைபெற்றிருந்தது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கருவூரை முற்றுகையிட்டபோது, ஆலத்தூர்கிழார் என்ற புலவர் படை எடுப்பினால் ஏற்படக் கூடிய பல்வேறு அவலங்களை எடுத்துரைத்து, படையெடுத்தல் 'நாணுத் தகவு உடைத்தே' (புறம். 36:13) எனக் கூறுதல் நோக்கத்தக்கது. மேலும் இம்மன்னன் சோழன் நெடுங்கிள்ளியுடன் மேற்கொண்ட போரையும் (புறம்.44-45),கிள்ளிவளவன் - மலையமான் இருவருக்கமிடையிலான போரையும் (புறம்46), பாண்டியன் நன் மாறனது போரையும் காரிக்கண்ணனார் என்ற புலவரும் (புறம்: 57) தடுத்து நிறுத்தி சமாதானம் செய்கிறார்கள். கோப்பெருஞ்சோழன் தன் பிள்ளைகளுக்குஎதிராகப் போர் தொடுக்க அதனை தடுத்துச் சமாதானம் செய்தமை (புறம்213) குறிப்பிடத்தக்கது.

9) போர் அறம் பேணல்:

அக்கால அரசியலில் போர் தவிர்க்க முடியாத ஒனறு. வுPரநிலைக் கால மன்னர் போரிடாதிருப்பது என்பதும் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். இன்றைய ஜனநாயக ஆட்சிக்காலத்திலே மனித உரிமையைக் காப்பாற்றும் பாணியிலான எத்தனை நோர்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் போர்கள் தொடர்ந்து கொண்டுமிருக்கின்றன. இப்பின்னணியில் வீரமும் புகழும் நிலைநாட்டப்பட வேண்டியிருந்த காலத்தில் போர்கள் தவிர்க்க முடியாதவைதான். ஆயினும் போர் அறங்கள் பேணப்படன என்ற செய்தி ஓரளவுக்கேனும் மானுடம் நிலைத்திருந்தமையைச் சான்றுபடுத்துகிறது. போர்க் காலங்களில் அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத உயிரினங்களாகிய பெண்டிர், நோயாளர் முதலானோரை பாதுகாப்புத் தேடிக்கொள்ளுமாறு பணிக்கப்படும் பார்மரபு அக்காலத்தில் இருநதுள்ளது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடும் புறநானூற்றுப் பாடல் இதனை வருமாறு சான்றுபடுத்துகிறது:

'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை..'
(புறம்.9)

பகுதி
3

(இ) கருத்துநிலை

புறநாநூற்றுப் பாடல்களையும் தொல்காப்பிய பொருளதிகார நூற்பாக்களையும் ஒப்ப நோக்கும்போது அவற்றில் கூறப்படும் திணைமரபும் துறைமரபும் பண்டைய மானுடத்தின் தொடர்நிலைகளான வீரம் - போர் சார்ந்த விடயங்களையே குறிப்பதாக உள்ளன. இவை புறப்பாடல்களுக்கான அடிக்கருத்துக்களாகத் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. அவ்வாறு திரும்பத் திரும்ப இடம்பெறும்போது பாடப்படுவோருக்கும் பாடுவோருக்கும் ஏற்பச் சிற்சிறு மாற்றங்கள் பெறுதல் வாய்மொழி மரபின் இயல்பாகும். இந்த அடிக்கருத்துகள் மக்கள் வாழ்விடத்திற்கும் தொழில் முறைகளுக்கும் ஏற்ப மாற்றம் பெறலாயின. ||தொல்காப்பியத்திலும் அதனை ஒத்த நூல்களிலும் கூறப்பட்டுள்ள இயற்கையின் பகுப்புகளும் மனித ஒழுகலாறுகளும் அவற்றுக்கு முந்தைய செய்யுளடிப்படையில் தோன்றியவை என்பதில் ஐயமில்லை எனக்கைலாசபதி அவர்கள் கூறுவது மிகப் பொருத்தமாகும்.( பக் 265). இவை பின்னர் மனிதச் புறநானூற்றுப் பாடல்கள்களின் அடிக்கருத்துக்களாக அமைந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே புறநானூற்றுப் பாடல் ஒவ்வொன்றிலும் இடம்பெறும் ஒவ்வொரு அடிக்கருததும் பாடலின் மையப் பொருளாக அமைந்து, அவை மானுடப் பண்புகள்pன் வெளிப்பாடாக அமைகின்றன. அவ்வகையில் புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெறும் முக்கிய அடிக்கருத்துக்காகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. மன்னர்களும் தலைவர்களும் புகழப்;படுதல்
2. மன்னர்களின் கடமைகள் வலியுறுத்தப்படுதல்
3. மன்னர்களின் அருள்பொதிந்த நீதி தளம்பாத அரசியலைப் போற்றுதல்
4. அரசர் தீயோரை அழித்து நல்லோரைப் பாதுகாத்தல் புகழப்படுதல்
5. கொடுங்கோலனைப் பழித்து செங்கோல் மன்னனைப் புகழ்தல்
6. முன்னோரின் புகழ் அவர்வழி வந்தோர்மீது ஏற்றிப் பாடுதல்
7. வீரர் புகழை; உச்சநிலைப்படுத்திப் பாடுதல்
8. நிலவளமும் நாடும் வாழ்த்தப்படுதல்
9. அரசன் வீரருடன் விருந்துண்டு களித்தல்
10. போர் வெற்றியைப் பாடுதல்
11. நடுகல் வழிபாட்டைப் பாடுதல்
12. மகளிர் வீரரோடு சேர்ந்து வெற்றிக் களிப்பால் ஆடிப்பாடுதல்
13. ஈகை அல்லது வள்ளன்மைப் பண்பைப் புகழ்தல்
14. பரிசிலுக்காகப் பாணரை ஆற்றுப்படுத்ததல்
15. நல்லாட்சியைப் புகழ்தல்

இவைபோன்ற இன்னோரன்ன அடிக்கருத்தக்கள் மேலும் பல புறநானூற்றுப் பாடல்;களில் பயின்று வருதல் நோக்கத்தக்கன. இவை அக்கால்த்தில் மானுடம் பேணப்பட்டமையையும் மக்கள் மானுடராய் வாழ்வாங்கு வாழ்ந்தமையையும் சான்றுபடுத்துகின்றன. புறநானூற்றுப் பாடல்களில் மன்னர்களும் வீரரர்களும் தத்தம் முன்னோர் குடிமரபுகளின்படி வாழ்ந்தனர் அவர்களது புகழ்பெற்ற வரிசைப்படியே தாமும் வாழத் தலைப்பட்டனர் அடிக்கடி றுறப்படுகின்றமை, அவர்கள் முன்னோர்களின் அறநெறிப்படி வாழ்ந்ததார்கள் என்பதைக் குறிப்பதாக அமைகின்றது.


பொதுமை நோக்கம்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்.. .. ..


சமூகத்திழல் ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை. புறநானூற்றுக் காலத்தில் தமிழகத்தில் மக்கள் தாம் செய்யயு; தொழிலுக்கேற்ப பல குலஙகள் அமைந்தன. அவை: அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர், கடம்பர்,கம்'மியர், களமர், கிளைஞர்,குயவர், கறுவர், குறும்பர், கூத்தர்,கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர்,துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர்,பொருநர், மழவர், வடவடுகர், பறையர், பாணர், புலையர், பொருநர்,மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்சகள் தோன்றியிருந்தன. ஒவ்வொருவரும் தத்தம் குலத்தொழிலை மேற்கொண்டனர். திருமணக்கலப்போ அல்லது உணவுக்கலப் மேற்கொள்ளத் தடையிருக்கவில்லை. (கே.கே. பிள்ளை. புக். 161)

மன்னர் நோக்கில் அரசியல் விழுமியம்:

தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் (புறம்: 72)
செங்கோன்மை, புலவர் போற்றும் புகழ், ஈகை மூன்றும் முதன்மையானவை எனப் பாடுகின்றான்.

1) வீரநிலைக் காலம்:

1) சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் நடந்த போரில் சேரன் சிறைப்பிடிக்கப்பட்டான். தாகத்திற்கு நீர் உடனே கொடுக்கப்படாமையால் ஏற்பட்ட அவமானத்தால் வருமாறு கூறி உயிர்நீத்தான்:

'அரசராயினார், குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவை வாள்வாய்ப்பட்டு இறந்தாலன்றி நலமின்றெனக் கருதி அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர். ஆக்குடியிற் பிற்நத யான் சிறைப்பட்டுக் கிடந்து உயிர் நித்தல் தீது. இத்தகைய மறக்குடியினரான எம்பெற்றோர் பகைவர்பால் உணவிரந்துண்டு உயிர்வாழுமாறு மக்களைப் பெறார் காண்' என நினைத்து ஒரு பாட்டெழுதி வைத்து உயிர் நீத்தான். (புறம். 74)

போரும் வீரமுமே அரசருக்கு அழகு:

அதியமானஞ்சி போர்க்களத்திலிருந்து நேரே பிறந்த தன் குழந்தையைப் பார்க்க வந்த காட்சியை ஒளவையார் பாடுகிறார்:

'இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சேன்று அமர் கடந்து நின் ஆற்றல்..' (புறம்.99:9-10) அவனை ஒளையார் பாடியது.

'கையது வேலே காலன புனைகழல்.........
தன் சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே' புறம் 100.

||தமிழ்மக்கள் தாம் பேசிய மொழியுடன் இணைந்து வாழ்ந்தனர். தமிழர் வேறுஈ தமிழ் வேறு என்று பிரிக்க முடியாத அளவு அம்மொழியானது தமிழர் வாழ்வில் இடம் கொண்டது. தமிழரின் வாழ்வு, தமிழர் பேசிய மொழி, தமிழர் வாழ்ந்த நிலம் ஆகிய இம் மூன்றுக்கும் இயல்பான நெருங்கிய தொடர்பு ஒன்றுண்டு என்ற உண்மை தமிழரின் நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாக அமைந்துள்ளது. இத்தத்துவத்தை விளக்குவனவே சங்க இலக்கியங்கள்.(கே.கே. பிள்ளை: பக். 128)

கொடையும் புலமையும்:

கொடைப் பண்புப் புலமையும் இக்காலத்தில் நிலையான கருத்துருவம் பெற்றிருந்தன. இக்கால அரசர்களும் குறுநில மன்னர்களும் தங்'களுடைய புகழே பாடப்படவும், நிலையாகப் போற்றப்படவும் வேண்டுமென்ற எண்ணத்திற்காகவும், புலவர்களுக்கும் பாணர்களுக்கும் கொடை நேர்வதில7; ஒருவர்க்கொருவர் போட்டியிட்டனர். இதனால் அரச ஆதரவு கலைக்கு உகந்ததாக அமைந்தது.( க. கை. பக் 136) இக்காலத்தில் வாய்மொழி மரபிலேயே இலக்கியங்கள் ஆக்கம் பெற்று வழங்கிவந்தன என்ற உண்மையும் (புறம்.282:10-11) குறிப்பிடத்தக்கது. பேருஞ்சித்திரனார் தம் பகாடலில் (158:1-16) பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகிய ஏழு வள்ளகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருத்தலும் நோக்கத்தக்கதாகும்.

புலவர், பாணர். பொருநர், பாடினி, கூத்தர், விறலியர், கோடியர். வயிரியர், கண்ணுளர், அகவுநர் முதலான பல்வகைக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் புறநானூற்றில் பரக்கக் காணலாம். இவர்கள் மானுடம் சிறக்கப் பாடல்கள் பாடியும் இசைநாடகங்கள் நடத்தியும் மக்களிடையே வாழ்ந்திருக்கின்றனர். மானுடம் நிலைத்திருகக் அவர்களளின் செயற்பாடுகளும் காரணமாயின. புலவர் பாடும் புகழுடையோர் வானோர் நிலையை எய்துவர் என்ற நம்பினக்கையும் புறநானூற்றுக் காலத்தில் இருந்தமை பற்றிய செய்தியும் பின்வரும் பாடலால் அறியப்படுகிறது:-

|"வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
விற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தே.."
(புறம். 27:3-9)

சிந்திக்க வேண்டிய விடயங்கள்.

1) வடக்கிருத்தல் மானுடம் தழுவியதா?

சேரமான் பெருஞ்சேரலாதன் கரிகால்வளவனொடு செய்த போரில் சேரனின் மார்பில் பாய்ந்த அம்பு முதுகைக் கிழித்து வெளியே வந்தது. முதுகில் புண்பட்ட அவமானத்தால் சேரன் வடக்கிருந்தான் எனக் கழாத்தலையார் பாடுகிறார் ( புறம் 65) அவ்வாறு அவன் வடக்கிருத்தலே வீரம் என்று பாடுகிறார் குயத்தியார் (புறம். 66). வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடுகிறார் (புறம்: 67) வடக்கிருத்தல் தற்கொலை முயற்சியாகாதா?. நாட்டு மன்னரே மக்களறிய இவ்வாறு தற்கொலை முயற்சியிலீடுபட மக்கள் அனுமதித்ததால் மானுடம் எங்கே சென்றது?

2) போரும் புலவர்களும்:

போரின் அழிவுகள், அவலங்கள் பாடுவதன் மூலம் அரசரதும் போர்வீரரதும் வீரச் சாதனைகள் புகழப்பட்டன. அரசர்கள் செய்த நகரழிவு, விளை நிலங்களுக்கு எரியூட்டல் முதலானவற்றுக்குப் புலவர்கள் காரணம் காட்டி அவர்களைப் புகழ்கிறார்கள். போரில் வெற்றி உமதே எனப் போர் வெறியூட்டும் புலவர்களையும் புறநான}று காட்டுகின்றது ( புறம்: 281,282,284, 287, 288). வுPரர்களுக்குப் போர் வெறியுடு;வனவாகப் புலவர் புகழுரைகள் அமைந்தன. சான்றாக:

ஓடல் செல்லாப் புPடுடையாளர்
நேடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நேல்லுடை நெடநகர்க் கூட்டுமுதற் புரளும்
துண்ணடை பெறுதல் யாவது? புடினே
முhசின் மகளிர் மன்றல் நன்றும்
ஊயர்நிலை உலகத்து நுகர்பவதனால்
வும்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே"
(புறம் 287:7-14)

இதில் வீரர்களுக்கு ஆசை காட்ப்படகின்றதா?

3) பகை நாட்டு மக்களின் அவலம்:

பகைவர் நாட்டு மக்களுக்குச் சுதந்திரம் இருக்கவில்லை. அவர்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை.? எப்போது தம் மனைகளும் நன்செய் புன்செய் நிலங்களும் எரியூட்டப்படும் என்ற ஏக்கத்துடன் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அந்நாட்டு மக்கள் தாயைப் பிரிந்து பசியால் துடித்தழும் குழந்தையைப் போன்று அழுதுகொண்டிருந்தார்கள் என்ற செய்தி, சோழன் உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னியை – பரணர் போற்றிப் பாடும் பாடலால் அறியப்படுகிறது.

'தாயின் தூவாக் குழவிபோல
ஓவாது கூஉ நின் உடற்றியோர் நாடே: (புறம்: 4:18-19)


4) பெற்றோரையும் அரசையும் இழந்து அகதியாக வாழும் நிலை:

'அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வேன்றெறி முரசின் வேந்தரெம்
குன்றுங் கொண்டார் யாம்எந்தையும் இரமே:
( பாரிமகளிர் 112)

5) கொற்றவள்ளை - மழபுலவஞ்சி

புறநானூற்றிலே கொற்றவள்ளை என்றும், மழபுலவஞ்சி என்றும் புகழ்ந்து பேசப்படும் பாடல்களில கூறப்படும் விடயங்கள் சங்க காலத்திலே மக்கள் மானுடராய் வாழ்வதற்கு இடம்தரவில்லை என்றே கூற வேண்டும். சோழன் கரிகாற்பெருவளத்தானை - கருங்குழலனார் பாடுகின்ற பொழுது,
'நீ பகலும் இரவும் பகைவரது ஊரை எரிக்கின்றாய். இரவில் இத்தீயினது ஒளியின் கண்ணே தம் சுற்றத்தைக் கூவியழைத்து அழுகின்ற அழுகுரல் ஓலத்தோடு, அவர்களின் நாட்டில் கொள்ளைஅடித்தலிலும் ஈடுபட்டுள்ளாய்.' என விபரிக்கிறார்:

'எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல - இல்லவாகுபவால்..'
(புறம்.7: 7-10)

உடன்கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு:

பெண்கள் கணவன் போரில் இறக்கத் தாமும் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்தலும (புறம்.. 246), சிலர் கைம்மை நோன்பிருந்து தம்மை வருத்திக்கொண்டு வாழ்தலும் பின்பற்ப்பட்டன. இவ்வாறு கைம்மை நோன்பிருந்து வருந்துவதைவிட இறப்பது மேல் என்று கூறி உடன்கட்டை ஏறத் தயாராகிய பெண்கள் பற்றியும் பாடப்படுகினறன.

8) போரிலே கணவனை இழந்த மகளிர் கூந்தல் களைந்த கொடுமைக் கோலம்:

தொடர்ச்சியான போர்களினால் ஆண்கள் மடிந்து போக எஞ்சியிருந்த பெண்கள் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழ்ந்தனர். அவர்கள் முடிகளைந்து கைம்மை நோன்பு நோற்று வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். பாண்டியன் தலையானங்கானத்தச் செருவென்றநெடுஞ்செழியனை - குடபுலவியனார் பாடிய பாடலில் இக்காட்சியைக் காணலாம்:

'முலைபொலி யாக முருப்ப நூறி
மெய்ம்மறந்த பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர
அவிரறல் கடுக்கும் அம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே.'
(புறம். 25:10-14)

6) வஞ்சப் புகழ்ச்சி

பழித்தல்போலப் புகழும் வஞ்சப் புகழ்ச்சியாக அமைந்த புறநானூற்றுப் பாடல்கள் மன்னர்களைப் போற்றினாலும், நாட்டு மக்களில் அக்கறைகொண்ட சான்றொர்களான புலவர் பெருமக்கள் மறைமுகமாக அக்கால போர் வெறிகொண்ட மன்னர்களைப் கண்டிக்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும். எனவே அஞ்ஞான்று மானுடம் நிலைத்திருந்ததா என்ற கேள்வி எழுதல் இயல்பே. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பெரிய மன்னன, யாகங்கள் வேட்டவன். ஆனால் பிறர் மண்வென்;று, அவர் பொருளில் கொடையளித்தல் தகுமா என்ற கேள்வியை அவரைப் புகழ்ந்து பாடும் நெட்டிமையார் கேட்கிறார்:

'பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநூல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னாவாகப் பிறர்மண் கொண்டு
இனிய செய்தி நின்னார்வலர் முகத்தே'
(புறம்.12)

தொல்காப்பியர் கூறும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நெடுஞ்சேரலாதனும் பெருவிறற்கிள்ளியும் நடத்திய பெரும்போரில் அடவர் அனைவரம் மாண்டனர் . அவர் பெண்டிர் விதவையாக வாழ விரும்பாது உடன் மாய்ந்தனர் என கழாத்தலையார் பாடம் செய்தி இக்காலத்தில் மானுடம் இறந்துவிட்டது என்ற செய்தியைத் தருகிறதா? இவ்விரு வேந்தரும் அனைத்துப் படைகளும் போரில் அழிந்த கழிவிரக்கம் புறம் 63 இல் உள்ளது. மானுடம் எங்கே? இதுதான் வீரமா? வீர யுகம் என்றால் மானுடம் அங்கு இருக்கவில்லையா?

'பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடம்கெட ஈண்டியவியன்கண் பாசறைக்
குளங்கொளற் குரியோர் இன்றித் தெறுவர
ஊடன்வீழ்ந் தன்றால் அமரே- பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கமைந்தனரே' (புறம் 62:10-15)

7) பகைநாட்டின்மீது ஆக்கிரமிப்பு:

சோழன் நலங்கிள்ளி போரிலே தமி;நாடு முழுவதையும் கைப்பற்றிவிட்டான். இனி அவன் வடபுலம் நோக்கிப்படை எடுப்பான் என்ற அச்சம் காரணமாக வடபுலத்து அரசர்கள்; நித்திரையின்றி, விளித்திருந்தார்கள் என முதுகண்ணன் சாத்தனார் பாடுகிறார்:

'வலமுறை வருதலுண்டென்று அலமந்து
நெஞ்சு நடுங்க வலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே:
(புறம்.31: 15- 17)

9) பகைவர் நாட்டை அழித்தல் என்பது மானுடம் தழுவியசெயலன்று:

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் - கோவூர்க்கிழார் பாடும்போது, 'காலனும் காலம் பார்த்தழிப்பான். இவன் தானைகள் காலம் பார்க்கவில்லை. பகைநாட்டு மக்கள் நனவிலும் கனவிலும் போர்க்குரிய துர்க்குறி கண்டு நடுங்கி வாழ்கின்றார்கள்.' ( புறம்: 41) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடும்போது (புறம் 15), இம்மன்னன் தெருக்களை அழித்தான், வயல்நிலங்களைப் பாழ்படுத்தினான், ஊருணி நீர்நிலைகளில் யானைகளை நிறுத்தினான். பல வெற்றி யாகங்களைச் செய்திருக்கின்றான் --- இவையாவும் மானுடத்தைச் சிதைத்து, வதைத்து அழித்துப் பெற்ற கீர்த்திகளன்றோ? சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை – பாண்டரங் கண்ணனார் வருமாறு பாடுவதும் நோக்கத் தக்கது:

'வினைவயல் கவர் பூட்டி – மனைமரம் விறகாகக் -
கடிதுறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரில் தோன்ற........
கரும்பல்லது காடு அறியாப் - பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னாட்டு ஒள்ளெரி ஊட்டினை'
(புறம் 16.: 4 -17)


முடிபுரை:

மானுடம் தழுவிய மனிதராய் மக்கள் வாழ்ந்த வகைமைகள், அதற்குரிய வழிவகைகள், மானுடம் தழுவிய வாழ்வியற்சிறப்புக்கள் முதலான விடயங்கள் புறநானூற்றிலே விரிவாகக் கூறப்படுகின்றன. இந்த ஆய்வுப் புலத்தில் புறநானூற்றை ஆராய்ந்து பெறப்படும் தரவுகள், சங்ககாலத்துப் பண்பாட்டுப் படிமத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளத் துணையாவதோடு, அவை ஏனைய சங்க இலக்கியங்களையும் இந்த அடிப்படையில் ஆய்ந்து சங்ககாலத் தமிழர் பண்பாட்டுப் படிமங்களின் முழுமைத்தன்மையைக் கண்டுகொள்வது அறிஞர் கடமையாகின்றது.


அந்த எண்ணக் கருக்கள் தமிழர் பண்பண்பாட்டு வரலாhற்றில் எவ்வாறு மாற்றம் பெற்றுவந்துள்ளன என்ற ஆய்வுகளுக்கும் இவ்வாய்வுத் தரவுகள் பயன்படத்தக்கவை.


அடிக்குறிப்புக்கள்:

1. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், சென்னை, உலகத் தமழழாராய்ச்சி நிறுவனம், 2000.


(3) கைலாசபதி க. கைலாசபதி, தமிழ் வீரநிலைக் கவிதை, குமரன் புத்தக நிலையம், சென்னை-கொழும்பு, 2006 (மொழிபெயர்ப்பு கு.வெ. பாலசுப்பிரமணியன்), பக். 124).
.
4. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், சென்னை , உலகத் தமழழாராய்ச்சி நிறுவனம், 2000.

5) (மொழியியல் பக் - 2).

6. 'பால் புளிப்பினும் பகல்இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ.'
( புறம்: 2:17-20)

7.. ' உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரார்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமிய ருண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையின'
;.

(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது (புறம். 182.)


8. 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால்,நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்களன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற – நீடூழி வாழிய'
(புறம் 55: 10-17)

9. ' உற்றழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரென்ன உடன்வயிற் றுள்ளம்
சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக வென்னாது அவருள்
அறிவுடை யோனால் அரசும் செல்லும்
வேற்றமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப் பாலொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே.'
(புறம். 183)
(பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது)

4. புகழ்: மறம் வீங்கு பல்புகழ்.. ( புறம்:290:6), நின்புகழ் (புறம்:63:3)உரைசால் புகழ் (புறம்:10:11,31:4-5, 282:10), சேண் விளங்கு புகழ்..(புறம்:127:9), வயங்கு புகழ் (புறம்: 144:12), பல்புகழ் (புறம்:160:15), புகழ் வெய்யோன். (புறம்:239:21), ஓம்பா வீகை விறல் வெய்யோன்.. (புறம்: 152:32)

(5) இசை: நல்லிசை (புறம் 135:9,371:14,380:12,393:9,) கெடா நல்லிசை (புறம்:22:12,168:8,), பரந்துபடு நல்லிசை (புறம்:213:9), அழியா நல்லிசை (புறம்:396:19) பொய்யா நல்லிசை (புறம்:228:7), தொலையா நல்லிசை. (புறம்:123:3) சேண் விளங்கு நல்லிசை (புறம்:282:10), மாயா நல்லிசை .(புறம்:399:12), கலங்கா நல்லிசை ..(புறம்: 396:28).


6. பேராசிரியர் சோம. இளவரசு,தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்கினியம் விளக்கம், பக்.2-3, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

7. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், சென்னை , உலகத் தமழழாராய்ச்சி நிறுவனம், 2000.

8. க. கைலாசபதி, தமிழ் வீரநிலைக் கவிதைஇகுமரன் புத்தக நிலையம், சென்னை-கொழும்பு, 2006, (மொழிபெயர்ப்பு கு.வெ. பாலசுப்பிரமணியன்), பக் 111

9."ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஓளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
(புறம். 312)

10. மு.வரதராசன். பெண்மை வாழ்க. பக் .11-12

11. .க.ப. அறவாணன். தமிழ்ச் சமுதாய வரலாறு -கலப்பியக் காலம், தமிஙட்க் கோட்டம், பாண்டிச்சேரி,1994, பக்.49.
12. மேலது; பக் 49.

13. வே.தி. செல்வம், தமிழகம் வரலாறும் பண்பாடும், சிதம்பரம். மணிவாசகர் நூலகம்.1995.பக்82.

14. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே (ஆதலால்)
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'
( புறம். 18: 19-23, 27-30)


( ) நாணம்: ('புலவர் புகழ்ந்த நாண்' (அகநானூறு. 273:15).