கனடா நாட்டின் முதுபெருங் கவிஞர் வி.கந்தவனம்

முனைவர் இரா.மோகன்

அமுது எங்கே சுவை அங்கே!
சுவை எங்கே தமிழ் அங்கே!
தமிழ் எங்கே நான் அங்கே!
நான் எங்கே தமிழ் அங்கே!”


என்ற பீடும் பெருமிதமும் ததும்பி நிற்கும் கவி ஆளுமைக்குச் சொந்தக்காரர் வி.கந்தவனம். ‘கவி நாயகர்’ என இலக்கிய ஆர்வலர்களால் மதிப்போடும் மரியாதையோடும் அழைக்கப் பெறும் அவரது படைப்புலகம் பரந்து விரிந்தது; அவரது பாட்டுத் திறம் ஆழ்ந்து அகன்று நுண்ணியது.
1964-ஆம் ஆண்டில் ‘1½ ரூபாய்’ என்னும் தலைப்பில் வெளிவந்த குறுநாவலே அவரது முதல் நூல்; அது ‘கவி நாயகர்’ என்ற புனைபெயரில் எழுதப்பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, குறுநாவல், நாவல், மரபுக் கவிதை, புதுக்கவிதை, அரங்கக் கவிதை, குறுங்காவியம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, நாடகம், தொகுப்பு, பாட நூல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த எண்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துச் சாதனை படைத்தவர் கந்தவனம். இளமையில் முன்னறி தெய்வங்களான தமது பெற்றோரை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை அவர்; அசைவிலா ஊக்கம் கொண்ட அவரிடம் ஆக்கமானது தானாகவே அவரது முகவரி கேட்டுச் சென்று சரண் அடைந்தது. ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் பெருமானின் வாய்மொழிக்கு இணங்க, அவர் தாம் எந்தத் துறையில் அடி எடுத்து வைத்தால் முத்திரை பதிக்க முடியுமோ அதில் நுழைந்து முனைப்புடன் முயன்றார்; ‘கவியரங்கிற்கோர் கந்தவனம்’ எனப் புகழாரம் சூட்டப் பெற்றார்; வெண்பா, நான்மணி மாலை, திருவூஞ்சல், ஆத்திசூடி, அகவல், விருத்தம் முதலான சிற்றிலக்கிய வகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தடம் பதித்தார்; எல்லா-வற்றுக்கும் மணிமுடியாக, ‘பாவாரம்’ என்னும் தலைப்பில் பண் சுமந்த தேவாரப் பாடல்களை நினைவுபடுத்தும் பக்திப் பாடல்களை இயற்றித் தந்து, ‘அருள்மாமணி’ என்னும் சிறப்புப் பட்டத்திற்கும் உரியவர் ஆனார்.

“பிறந்ததும் மிகக் கற்றதும் பெரும்
பீடுகொள் கவி பாடவே”


என்னும் இரு அடிகளே போதும், கந்தவனத்தின் கவியுளத்தினைத் திறந்து காட்ட!

“ ... ... கோன்எனப் புகழ்
கொள்ளும் ஓர் பொருள் வல்லதாய்ப்
பொலிவுடன் பெரும் பொறுப்புடன் சுவை
பொங்கிஎப் பொழுதும் தரும்
நலம்விளை கவிநல்கிடா விடில்
நான்பிறந் ததும் ஏதுக்கே!”
(பாடு மனமே, ப.
45)

என்பது ஆழ்ந்திருக்கும் அவரது கவியுணர்வின் அழுத்தமான வெளிப்பாடு ஆகும்.
கந்தவனத்தின் கவிதைக் கொள்கை

“இலக்கியம் என்பது என்ன? / இலங்கிடும் உள்ளெ ழுச்சி;
இலக்கியம் ஊறும் இன்பம்; / இயற்கையின் அழகுக் கோலம்;
இலக்கியம் தெளிந்த ஞானம்; / ஈர்த்து உளம் ஆளும் ஆற்றல்;
இலக்கியம் மனித வாழ்க்கை - / இவையெல்லாம் தரும் எழுத்து!”


(இலக்கியம் என்றால் என்ன, ப.13)

என இலக்கியத்திற்கு இலக்கணம் இயம்பிடும் கந்தவனம், இலக்கியக் கலைகளுள் நனிசிறந்த ஒன்றான கவிதை பற்றிய தம் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ‘பாடு மனமே!’ என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்; ‘மீறிப் பொழிந்தவை’, ‘ஊறித் திளைத்தவை’, ‘தேறித் தெளிந்தவை’, ‘கூறிக் களித்தவை’ என்னும் பொருள் பொதிந்த, படிப்பவரைச் சிந்திக்கத் தூண்டுகின்ற நான்கு உட்பிரிவுகளால் அமைந்த அக் கவிதை நூல் கந்தவனத்தின் பெயர் சொல்லும் படைப்பு ஆகும்.

“பெருகிஎன் நெஞ்சினில் / கவி பீறிட
அருள் தர வேண்டும்என் / கலா வல்லியே!”
(பாடு மனமே, ப.20)

எனப் பாரசக்தியைப் பரவி, அவளது பதமலர் பணிந்து ஏற்றி, உருகி வேண்டும் கந்தவனத்தின் கனவும் நனவும் கவிதையே அன்றி வேறு இல்லை.

“கவிதை கவிதை கவிதை
புரியிற் காணும் / பொருள்கள் யாவும்
கவிதை எனக்குக் கவிதை!”
(ப.21)

என மும்முறை அறுதியிட்டு முழங்குவார் கந்தவனம்.

“உள்ளத்து உயர்வே கவிதை!
தெள்ளத் தெளிவும் / செய்கைத் துணிவும்
துள்ளிப் பயக்கும் கவிதை!”
(ப.23)

எனக் கவிதைக் கலையைப் போற்றிப் புகழும் கவிஞர் இன்னும் ஒரு படி மேலாக, ‘எனக்குக் கடவுள் கவிதை!’ (ப.22) என்றும் மொழிகின்றார்.

“இறைவன்தன் இயக்கத்தில் / என்னென்ன உண்டோ
எல்லாம்என் பாட்டுக்குப் / பொருளாக வேண்டும்!”
(ப.28)

என்பது கவிஞரின் வேணவர்; வள்ளலாரின் மொழியில் சொல்வது என்றால், ‘பிள்ளைப் பெருவிண்ணப்பம்!’

‘பாடு மனமே’ என மனத்திடம் வேண்டுகோள் விடுக்கும் கவிஞர், ‘எழுந்து பாடு மனமே!’, ‘உணர்ந்து பாடு மனமே!’, ‘மகிழ்ந்து பாடு மனமே!’, ‘முழங்கிப் பாடு மனமே!’, ‘துணிந்து பாடு மனமே!’, ‘அழகாய்ப் பாடு மனமே!’, ‘வணங்கிப் பாடு மனமே!’ (பக்.48-49) என வித விதமாய் நயந்தும் நெகிழ்ந்தும் பாடுவது நோக்கத்தக்கது.

“வாய்மை யுள்ள தூய்மை யுள்ள / நல்ல பாட்டிலே
வந்து தெய்வம் நிற்கும் உண்மை”
(ப.53)

என உரைத்திடும் கவிஞர்,

“ஆழிசூழ் உலகத்தை ஆள்கவி / ஆக்கிடாது உயிர் போக்கிடேன்!”
(ப.46)

எனச் சூளுரைக்கவும் தவறவில்லை. ‘ஆழிசூழ் உலகமெலாம் பரதனே ஆள’ என்னும் புகழ் பெற்ற கம்ப சித்திரம், கந்தவனத்தின் கை வண்ணத்தில் ‘ஆழிசூழ் உலகத்தை ஆள்கவி’ எனப் புதுக்கோலம் கொண்டுள்ளது!

கவிநாயகரின் வாழ்நாள் பணி

“ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றால், கிரேக்கம் இசையின் மொழி என்றால், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றால், இத்தாலியம் காதலின் மொழி என்றால் தமிழ் பக்தியின் மொழி, இரக்கத்தின் மொழி ஆகும். தமிழில் இரங்குவது போல வேறு எந்த மொழியிலும் இரங்குவது அரிது” என விதந்து மொழிவார் பன்மொழிப் புலமை சான்ற பேராசிரியர் தனிநாயக அடிகளார். தொன்மை இலக்கியமாம் பரிபாடல் தொடங்கி அண்மை இலக்கியமாம் பாரதியார் பாடல் வரை தமிழ் இலக்கியம் காலந்தொறும் பக்தி உணர்வுக்கு நல்கி வந்துள்ள கொடை அளப்பரியது ஆகும். வாழையடி வாழை என வழிவழியாக வரும் இம் மரபின் தொடர்ச்சியைக் கவிநாயகர் கந்தவனத்திடமும் சிறப்பாகக் காண முடிகின்றது. அவரது வாழ்நாள் பணியாக கருதத்தக்கது, கணிக்கத்தக்கது ‘பாவாரம்’. பக்தி இலக்கியத்தில் சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகிய மூவர் முதலிகள் படைத்து அருளி இருப்பது பண் சுமந்த பாடல்களின் தொகுப்பான ‘தேவாரம்’. அது போல, இருபதாம் நூற்றாண்டில் கவிநாயகர் கந்தவனம் ஆக்கித் தந்திருப்பது ‘பாவாரம்’.

கலாநிதி நா.சுப்பிரமணியன் ‘பாவாரம்’ நூலுக்கு எழுதிய அணிந்துரையில் – 13 பக்க அளவில் அமைந்த அற்புதமான ஆய்வுரையில் – குறிப்பிடுவது போல், “இச் சொற்றமிழ் மாலையானது, சிவபிரானின் அருளை நாடி நிற்கும் ஓர் அடியவரின் உணர்வுப் பெருக்காக வெளிப்பட்டதாகும். சிவபிரான் கோயில் கொண்டுள்ள தலங்களை மையப்படுத்தி அமைந்த வகையிலே, சைவத் திருமுறை மரபின் – குறிப்பாக, தேவார திருவாசகப் பாடல் மரபின் – தொடர்ச்சியாக அமைந்த புத்தாக்கம் இது” (அணிந்துரை, பாவாரம், பக்.10-11).

‘பாவாரம்’ தொகை நூலில் பாடப் பெற்றிருக்கும் பாரதத் திருத்தலங்கள் 63 (63 நாயன்மார்களை நினைவூட்டுவது போல் இப்பகுதி அமைந்திருப்பது ஒரு சிறப்பு; நயம்); ஈழத்துத் திருத்தலங்கள் (45). இவற்றுள் 3 பதிகங்களைப் பெற்றுள்ள திருத்தலம் (திருப்பேரூர்), 2 பதிகங்களைப் பெற்றுள்ள திருத்தலங்கள் (திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஏழு) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நோக்கினால் இத் தொகை நூலில் 117 பதிகங்கள் பாடப்-பெற்றிருப்பது புலனாகும். கோயில்கள் அமைந்திருக்கும் திருத்தலங்களின் பெயர்கள் தலைப்புகளாகச் சுட்டப் பெற்றிருத்தல், பாடல்கள் இசைக்கப் பெற வேண்டிய பண்கள் பற்றிய குறிப்புக்களின் ஆட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது யாருக்கும் கந்தவனத்தின் ‘பாவார’ப் பாடல்கள், மூவர் முதலிகள் பாடிய தேவாரப் பாடல்களின் ஒரு தொடர்ச்சி என்ற எண்ணமே தோன்றும். இப் பாடல்களை ஊன்றிப் பொருளுணர்ந்து, மனம் கலந்து பயிலும் போது, பண் சுமந்து நிற்கும் தேவாரப் பாடல்களை எந்த அளவிற்குக் கவிநாயகர் கந்தவனம் எழுத்தெண்ணிப் பயின்றிருக்கின்றார் என்பதும் விளங்கும். பதச்சோறாக, உள்ளத்தைப் பாகாய் உருக்கும் ஒரு பாவாரப் பாடல் இதோ:

“அன்பினைப் பெருக்க வல்லார் / அனைத்திலும் இருக்க வல்லார்
என்பையும் உருக்க வல்லார் / எதனையும் பொறுக்க வல்லார்
துன்பங்கள் துடைக்க வல்லார் / தொல்புகழ் காசிநாதர்
தன்பதி தனையெ மக்கும் / சால்புறக் காட்டினாரே” (பாவாரம், ப.26)

கொல்லிப் பண்ணில் அமைந்த திருக்காசிப் பதிகத்தின் இம் முதற் பாடலில் தேவாரப் பாடல்களின் தாக்கம் இடம்பெற்றிருப்பது நெற்றித் திலகம்.

திருப்பேரூரில் குடிகொண்டிருக்கும் பட்டீசுவரர் அடியவர்க்குக் காட்சி தந்த அற்புதத்தைக் கவிநாயகர் தம் கவிதை ஒன்றில் வடித்திருக்கும் அழகே அழகு. ‘எண்ணி இருந்த போது வரவில்லையாம்; இருகை கூப்பியும் பயனில்லையாம். பூசை பண்ணிப் பார்த்திருந்தாராம்; பண்ணிசை பாடிக் காத்திருந்தாராம். உண்ணாதிருந்து பார்த்தும் ஒன்றுக்கும் உருகவில்லையாம் இறைவர்’. பிறகு எப்போது, எப்படி இறைவர் காட்சி தந்தார் என்கிறீர்களா? கவிஞரின் உருக்கமான மறுமொழி இதோ:

“ ... ... ஒன்றுக்கும் / உருகா தாரை நினைந்துருகிக்
கண்ணீர் வடித்தேன் பேரூரில் / காட்சி காட்டி நின்றாரே.” (பாவாரம், ப.49)

மாணிக்கவாசகர் ‘அழுது இறைவன் அடி அடைந்த அன்பர்’ அல்லவா? ‘வினையேன் அழுதால் உனைப் பெறலாமே?’ என்பது அவரது மணி வார்த்தை அல்லவா?

ஆன்மிகம் எனப்படுவது யாதெனின்...
ஆன்மிகம் எது என்பது குறித்துத் திட்டவட்டமான, தெள்ளத் தெளிந்த கருத்தினராகக் கவிநாயகர் விளங்குகின்றார். ஆன்மிகம் என்று சொன்னால் ஆண்டவன் வழிபாடு என்றுதான் பலரும் நினைக்கின்றார்கள். கவிநாயகரைப் பொறுத்த வரையில் அது மட்டும் சரி எனத் தோன்றவில்லை. ‘உடலுக்கு இன்னுயிரைப் போல, உயிருக்கும் இறைவன் வேண்டும்!’ என்பதில் கவிஞருக்கு உடன்பாடே. என்றாலும்,

“ ... ஆன்மி கந்தான் / இடரின்றி உலகில் என்றும்
நன்றுஎம்மை வாழ வைக்கும் / நன்னெறி”

(ஆன்மிகக் கவிதைகள், ப.42)

என்றே கருதுகின்றார் அவர். மேலும், ஆன்மிகம் என்பது ‘இந்த உலகை விட்டுத் துறந்தவருக்கோ, அவ்வுலகுக்கோ உரியது அன்று; நம்மைப் பற்றி நம்மையே ஆராய வைத்து, தீய பான்மைகள் அனைத்தும் போக்கி, நம்மைப் பக்குவம் செய்யும் பாதையே’ என அறுதியிட்டு உரைக்கின்றார் கவிஞர்.

‘கடவுளைக் காணும் வழி யாது?’ என்ற வினாவுக்குக் கவிநாயகர் தரும் விடை சுவையானது; செறிவானது: ‘காணாமல் இருப்ப தாலே, கடவுளை இல்லை என்பார் சிலர்; அன்னவர் கடவுளைக் காணவும் முயல மாட்டார்; கண்டவர் சொல்லும் நம்ப மாட்டார்’ (ப.31). அது அவர்களின் குற்றம் அன்று; நாத்திகம் பேசுவது தவறும் அன்று. அப்படி என்றால், கடவுளைக் காண்பது தான் எப்படி எனக் கேட்கின்றீர்களா? இதோ, கவிநாயகரின் சொற்களிலேயே அதற்கான அருமையான விடை:

“எவ்வுயிர் தனையும் பேணும் / எல்லையில் கருணை யாளர்
ஒவ்வொரு மனித ருள்ளும் / உறைந்துளர் என்று கொண்டு
செவ்விய குணத்தால் மக்கள் / தெய்விகம் கண்டு போற்றின்
எவ்வித குறையும் இன்றி / இயங்கும் இவ் வுலவம் அன்றே!”
(ப.34)

இன்னமும் கூர்மையாகத் தருக்க நெறி நின்று விளக்கிக் கூறுவது என்றால், நம்மைப் பேசப் பழக்கியது தாய்; எழுதப் பழக்கியது தந்தை. நமக்குக் கல்வியைப் புகட்டியது ஆசிரியப் பெருமக்கள். ஆனால் நமக்கு சுவாசிக்கக் கற்றுக் கொடுத்தவர் யார்? விஞ்ஞான ஆசிரியரைக் கேட்டால், மரபணு என்பார். சரி, அந்த மரபணுவைத் தோற்றுவித்தவர் யார்? உண்ணல், உழைத்தல், உறங்கல், விழித்தல் ஆகியவற்றை எல்லாம் நமக்குச் செய்விப்பது யார்? மின்னற் பொழுதில் ஓர் உண்மை வெளிச்சமாகின்றது; நம்முள் ஒரு குரல் ஒலிக்கின்றது: ‘கடவுள்! கடவுள்! கடவுள்!’

“கணப்பொழுதும் / என்னுடன்
கடவுள் இருக்கிறார்!
இருந்து / என்னை இயக்குகிறார்!”
(ப.36)

என்பதே கவிஞர் இவ்வகையில் தெளிவுபடுத்தும் அனுபவ மொழி; மெய்ப்-பொருள்.
பிறிதொரு கவிதையில் ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு’ என்பது போன்ற நடையில், ‘கடவுளைக் கண்டால் என்ன, காணாது போனால் என்ன, நடைமுறை வாழ்வின் அச்சு, நம்பிக்கை என்பதாலே, கடவுளைக் கருதிச் செய்யும், கடமையே கடவுள் ஆவர்’ (ப.71) என எடுத்துரைக்கின்றார் கவிநாயகர்.

நம்பிக்கைத் தூண்டலும் மூடநம்பிக்கைச் சாடலும்

இன்றைய சூழலில் ஒரு தேர்ந்த கவிஞர் பொதுநல நோக்கில் ஆற்ற வேண்டிய தலையாய பணிகள் இரண்டு. ஒன்று, பயில்வோர் மனங்களில் நம்பிக்கையை விதைப்பது; மற்றொன்று, சமுதாயத்தில் நிலவும் கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளுக்கும் சாவு மணி அடிப்பது. இவ்விரு பணிகளையும் ஒரு கவிஞர் என்ற முறையில் கந்தவனம் தமது படைப்புக்களின் வாயிலாகச் செவ்வனே விடாது செய்து வரக் காண்கின்றோம். கவிஞரது ‘வரிக் கவிகள்’ என்னும் தொகுப்பில் இந் நோக்கில் கருத்தில் கொள்ளத் தக்க பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு கவிதையில்,

“நம்பிக்கை இல்லையென்றால்
வாழ்க்கை இல்லை / வளர்ச்சி இல்லை
வரலாறு இல்லை / மனித குலமே இல்லை”

என நம்பிக்கைக்காக – நம்பிக்கையோடு – குரல் கொடுக்கும் கவிஞர்.

“யானையின் பலம் தும்பிக்கையில்
மனிதனின் பலம் நம்பிக்கையில்” (வரிக்கவிகள், ப.86)

எனவும் புதுமொழி படைக்கின்றார்.

உலகை – தமிழை – நண்பரை – குருவை – உண்மையை – தெய்வத்தை நம்புவதை விட மேலானது, ஒரு படி உயர்வானது ஒருவன் தன்னை நம்புவது – தன் திறமையை நம்புவது. யாரிடமும் சென்று கெஞ்சிப் பெறுவது அன்று – கேட்டு வாங்குவது அன்று வெற்றி. ஒருவன் வாழ்வில் வெற்றி வாகை சூட வேண்டும் எனில் அதன் தன் கையே தனக்கு உதவி என நம்ப வேண்டும்; தன் வேலைக்குத் தானே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் சோதனைகளைத் தானாகவே சந்திக்க வேண்டும்! சாதனைகள் பற்றியும் தானாகவே சிந்திக்க வேண்டும். ஏனெனில், ‘சொந்த வெற்றியில் தான் சுகங்கள் அதிகம்!’ (பக். 87-88) என்கிறார் கவிஞர்.

“உனக்குள்ளும் சக்தி ஒன்று / உறங்கி கிடக்கிறது.
எப்பொழுது நீ அதனை உணர்கிறாயோ
அப்பொழுது அது விழித்துக் கொள்ளும்!
அந்த விழிப்பில் –
உன்னை உனக்கே தெரியும்
உன் திறமை உனக்கே புரியும்”
(ப.89)

என இளைய தலைமுறையின் நெஞ்ச வயல்களில் நம்பிக்கை நாற்றுகளை நடுகின்றார் கவிஞர்.

உயரத்தில் குறைவென்று துயரத்தில் சுழலும் இளந்தமிழனுக்குக் கவிஞர். ‘விட்டுத் தள்ளு கவலையை’ என அறிவுறுத்துகின்றார்; ‘கட்டை என்ற கவலை விட்டுக் காரியத்தில் புகழை எட்டு’ என வழிகாட்டுகின்றார்;

“திருக்குறள் அளவில் சிறியது
ஆனால் அது / பெருக்கிடும் பொருளோ பெரியது”
(ப.103)

எனக் ‘குறுகத் தறித்த குறளை’ நினைவூட்டி ஆறுதல் கூறுகின்றார். ‘நெட்டையாக வளர்ந்தவரும் நேர்மை குன்றிக் கூனிடலாம்! குட்டையாக உள்ளவரும் குணத்தாலே நிமிர்ந்திடலாம்!’ எனவே,

“உள்ளத்தின் பக்குவமே / உயரத்தை அளந்துரைக்கும்!
உள்ளத்தின் உயர்வொன்றே / உண்மையான உயர்வாகும்”
(ப.104)

என வலியுறுத்தும் கவிஞர் தம் கருத்துக்கு அரணாகத் தோற்றத்தில் கட்டையர்களாக இருந்தாலும், இன்று உலக அரங்கில் கைத்தொழிலால் நெட்டையர்களாக உயர்ந்து நிற்கும் – விசுவரூபம் எடுத்திக்கும் – ஜப்பானியரை மேற்கோள் காட்டுகின்றார்.

முற்போக்குச் சிந்தனையும் நகைச்சுவை உணர்வும் கை குலுக்கி நிற்கும் நல்ல கவிதை ‘மூட நம்பிக்கை’. பூனை குறுக்கே போனது என்று ஆனை மேல் போக இருந்தவன் ஆமை போல் போனானாம்! அட்டமி, நவமியில் பரீட்சை ஆரம்பம் ஆவதால் எழுத வேண்டாம் என்று தகப்பனார் சட்டம் இட்டாராம்! பல்லி சொன்ன காரணத்தைப் பகுத்தறிந்த விருந்தாளி வேண்டாம் உணவு என்று வெளியேறிப் போனாராம்! இராகு காலம் என்று சொல்லித் தாமதித்துத் தாமதித்து நேர்முகத் தேர்வுக்கு நல்ல நேரத்தில் சென்றவர்க்கு கெட்ட செய்தி காத்திருந்ததாம்! சாதகங்கள் சரிபார்த்து வேதியர்கள் முறையாகச் செய்து வைத்த திருமணமோ மணம் மாறி வீசுதாம்! எனவே, எதையும் பகுத்தறிவோடு சிந்தித்துப் பார்த்து நம்ப வேண்டும். மூட நம்பிக்கை எந்நாளும் வாழ்வில் கேட்டினையே விளைக்கும்.

“கோடிக்குப் போகவேண்டும் / பழையதுகள்!
மாடிக்கு வர வேண்டும் / புதியதுகள்!” (ப.97)

எனக் கவிஞர் அக் கவிதையை மோனை நயத்துடனும் முரண் சுவையுடனும் முடித்திருக்கும் பாங்கு நன்று.

‘மதி சூடி’: அமைப்பும் அழகும்
“நீதி நூல்களில் திருக்குளுக்கு அடுத்த சிறப்பை ஆத்திசூடி பெற்று வருகின்றது” (தொல்காப்பியக் கடல், ப.124) என்பர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழ் மூதாட்டி ஔவையார் பாடிய ஆத்திசூடியின் வழியில் இருபதாம் நூற்றாண்டின் பெருங்கவிஞரான பாரதியார் ‘புதிய ஆத்திசூடி’ படைத்தார்; பாவேந்தர் பாரதிதாசன் இரு ஆத்திசூடிகளை இயற்றினார். தமிழ் இலக்கிய உலகில் ஆத்திசூடி பாடுவது என்பது வழிவழியாக ஓர் இயக்கமாகவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இவ் வரிசையில் கவிநாயகர் வி.கந்தவனமும் இணைந்துள்ளார்; ‘மதிசூடி’ என்னும் பெயரில் அவர் ஓர் ஆத்திசூடியைப் படைத்துள்ளார். இந்நூல் 87 சூடிகளால் ஆனது; அமைப்பும் அழகும் புதுமையும் ஒழுங்கும் உடையது. ‘அன்புடன் பழகு’ (1) எனத் தொடங்கும் ‘மதிசூடி’, ‘வையத்தை விரும்பு’ (87) என்னும் சூடியோடு நிறைவடைகின்றது. எடுப்பும் முடிப்பும் பண்டைத் தமிழர் நெறிகளான அன்பிலும் ஒப்புரவிலும் கவிநாயருக்கு உள்ள ஆழ்ந்த பற்றைப் புலப்படுத்தி நிற்கின்றன.

சைவ சித்தாந்தம் எடுத்துரைக்கும் மும்மலங்களுள் முதலில் வருவது ஆணவம். ‘ஆணவம் அடக்கு’ (2) என இரண்டாவது சூடியில் அறிவுறுத்துகின்றார் கவிநாயகர். ‘நான் எனல் கேடு’ (47) என்னும் சூடியும் இப்பொருளை உணர்த்துவதே. அன்புடன் பழகுமாறும் ஆணவம் அடக்குமாறும் வலியுறுத்திய கவிஞர், ‘இறைவனை வணங்கு’ (3) என தொடர்ந்து வழிகாட்டுகின்றார்.

‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பது ஆன்றோர் வாக்கு. அதனை நினைவுபடுத்தும் வகையில் ‘ஏழைக்கு உதவு’ (8) என்கிறது ‘மதிசூடி’, ‘ஊருக்கு நன்மை செய்’ (6), ‘கை கொடுத்து உதவு’ (20), ‘நொந்தவர்க்கு உதவு’ (55), ‘மெலியோர்க்கு இரங்கு’ (74) என்னும் சூடிகளும் இவ் வகையில் நினைவுகூரத் தக்கன.

‘செந்தமிழ் எழுது’ (29), ‘தமிழைப் படி’ (35), ‘தேன்மொழி பேசு’ (42), ‘மொழிவளம் பெருக்கு’ (77) என அன்னைத் தமிழின் நலத்திற்காகக் குரல் கொடுக்கும் ‘மதிசூடி’, ‘தாயகம் போற்று’ (36), ‘திராவிடர் புகழறி’ (37) என இன நலமும் பேசுவது குறிப்பிடத்தக்கது. ‘நூல் பல கல்’ (51) எனப் பொதுப்பட மொழியும் ‘மதிசூடி’, வள்ளுவத்தை அடியொற்றி ‘சாந்துணையும் கல்’ (24) எனவும் அறிவுறுத்துகின்றது.

‘கெஞ்சுதல் தவிர்’ (18), ‘சேதம் தவிர்’ (30), ‘நெருக்கடி தவிர்’ (52), ‘பகைமை தவிர்’ (57), ‘பூசல் தவிர்’ (62), ‘மோதல் தவிர்’ (78) என ஒருவன் தன் வாழ்வில் தவிர்க்க வேண்டுவனவற்றைக் குறிப்பிடும் ‘மதிசூடி’, ‘ஒற்றுமை பேணு’ (10), ‘சுற்றம் பேண்’ (27), ‘நேர்மையைப் பேண்’ (53), ‘மூத்தோரைப் பேண்’ (73), ‘வாக்கினைப் பேணு’ (82) என உயிரினும் மேலாகப் போற்றி மேற்கொள்ள வேண்டிய விழுமியங்களையும் எடுத்துரைக்கின்றது.

‘சிரித்துப் பழகு’ (25) என்பது கவிநாயகரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறி நிற்கும் ஒரு சூடி.

நிறைவாகக் குறிப்பிட வேண்டும் எனில், ‘ஓங்க உழை’ (11) – ‘கடமையிற் கண் வை’ (12) – ‘தெளிவுற நட’ (41)’ – ‘தோல்வியில் துணிந்து நில்’ (45) – ‘நுண்ணறிவு ஈட்டு’ (50) – ‘நோய்க்கு இடங் கொடேல்’ (56) – ‘பீடுற நட’ (60) – ‘முயற்சியில் வெற்றி காண்’ (72) – ‘மேதினி போற்ற வாழ்’ (75) – ‘வீரச் செயல் புரி’ (84) ஆகியனவே வையத்துள் வாழ்வாங்கு வாழக் கவிநாயகர் ‘மதிசூடி’யில் முன்மொழிந்துள்ள பத்துக் கட்டளைகள் ஆகும்.

அனுபவ விரிவும் உணர்வு ஆழமும்

“கவிஞன் ஒருவன், தன் கவிதையில் அமைத்துக் கொள்ளும் பொருள் அவனது அநுபவ விரிவையும், உணர்வு ஆழத்தையும், அவதானத் திறமையையும் பொறுத்ததாகும். கவிதை செம்மையுறுவது அவனது அனுபவ உணர்வின் ஒருமைப்பாட்டினையும் புலமைத் திறனையும், கற்பனா சக்தியையும் பொறுத்தது” (ப.7) எனக் கவிநாயகரின் ‘பாடு மனமே’ என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறப்பிடுவார் பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன். அனுபவ விரிவும், உணர்வு ஆழமும், புலமைத் திறமும், கற்பனை வளமும் கவிநாயகரின் கவிதைகளில் சரி விகிதத்தில் அமைந்து அவரைத் தனித்தன்மை துலங்கும் ஓர் ஆற்றல்சால் கவிஞராக நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

கவிநாயகரின் படைப்பாளுமையில் மோனையைப் போல் முன்னே நிற்பது அவரது சிற்றிலக்கியங்கள் ஆகும். “ஒரு கவிஞர் என்ற வகையிலே தமிழ்ப் பக்தி இலக்கிய மரபைப் பேணி நின்று பிரபந்தங்கள் படைப்பதில் இவர் (கந்தவனம்) தனி ஆர்வம் காட்டி வந்துள்ளார்” (ப.8) என ‘விநாயக வெண்பா’வுக்கு எழுதிய அணிந்துரையில் கலாநிதி நா.சுப்பிரமணியன் குறிப்பிட்டிருப்பது ஈண்டு மனங்கொளத் தக்கதாகும். இக் கருத்துக்கு உயிர்ப்புள்ள ஓர் இலக்கியமாக விளங்கும் கவிநாயகரின் வெண்பா ஒன்று:

“அழவேண்டாம், ஆடி விழ வேண்டாம், பூசை
விழவேதும் வேண்டாம் விரும்பி – தொழுது
நினைத்தாலே போதும், நிகரற்ற தேவன்
எனைத்தானும் ஈவான் இரங்கி”
(விநாயக வெண்பா, 5)

திருவாசகத்தின் மொழியிலே சுட்டுவது என்றால், ‘அருமையில் எளிய அழகு’ களிநடம் புரிந்து நிற்கும் வெண்பா இது!

முறையில்லாத பாலியல் நெறியால் வருவது எயிட்ஸ் நோய். மனிதன் ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயர்நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால், வரவே வராது எயிட்ஸ். இதனைத் தம் ஈரடிக் கவிதை ஒன்றில் திறம்பட வெளிப்படுத்துகின்றார் கவிநாயகர்:

“மனைவியின் உறவே மனதுக்கு நிறைவு
மனமதன் அலைவே வாழ்க்கையின் குலைவு”

(இயற்கைத் தமிழ், ப.54)

எதுகை, மோனை, இயைபு நயங்கள் இக் கவிதையில் கொலுவிருத்தல் நோக்கத்தக்கது.
தமிழில் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப ராமாயணம், பெரிய புராணம் என்றாற் போல் எத்தனையோ விழுமிய இலக்கியங்கள் வகை வகையாய் உண்டு; திருவள்ளுவர், ஔவையார், இளங்கோவடிகள், கம்பர், சேக்கிழார், காளமேகம், வில்லிபுத்தூரார், கச்சியப்பர், பாரதியார் என்றாற் போல் சான்றோர் பெருமக்கள் தொகை தொகையாய் உள்ளனர். எனினும் தமிழர்கள் இலக்கியங்கள் வலியுறுத்தும் விழுமியங்களையோ, புலவர் பெருமக்கள் அறிவுறுத்தும் அறநெறிகளையோ தங்கள் வாழ்க்கையிலே எள்ளளவும் பின்பற்றி வாழ்வதில்லை; அவற்றைப் பொருளுணர்ந்து படிப்பதும் இல்லை. தமிழர்களுக்கே உரிய இத்தனிக் குணத்தினை,

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற அடி
ஓதுவார்; அப்பாலே ஓரடியும் – காதாலும்
கேட்டறியார்; கேட்டாலும் கிஞ்சித்தும் பூங்குன்றன்
பாட்டின் பொருளறியார் பலர்”
(நற்பொருள் நாற்பது, பா.26)

என்னும் வெண்பாவில் கடுமையாகச் சாடுகின்றார் கவிநாயகர்.

அழகிய உவமையின் ஆட்சி

இலக்கிய அணிகளுள் தொன்மையானது உவமை. தொல்காப்பியர் பொருளதிகாரத்துள் ‘அணியியல்’ எனக் கூறாது, ‘உவமையியல்’ என்னும் தலைப்பில் ஓர் இயலை வகுத்திருப்பது உவமையின் உயர்வையும் முதன்மை-யையும் உணர்த்துவதாகும். கவியரசர் பாரதியாரும் தமது கட்டுரை ஒன்றில் உவமை அணியே அடிப்படையானது என்றும், பிற அணிகள் எல்லாம் அதன் மாற்று வடிவங்களே – விரிவாக்கங்களே – என எடுத்துரைப்பார். இன்றைய திறனாய்வாளர்களும் உவமையானது ஒரு படைப்பாளிக்கு வலது கரம் போலச் செயல்படுவது என்றும், உணவில் உப்புப் போல படைப்புக்குச் சுவையைச் சேர்ப்பது என்றும் மொழிவர். உவமையணியின் தகைமையினையும் தனித்தன்மையையும் நன்கு உணர்ந்த கவிநாயகம் தம் கவிதைகளில் ஆங்காங்கே புத்தம் புதிய, பொருத்தமான, தனித்திறன் மிளிரும் உவமைகளைக் கையாண்டுள்ளார். இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்க கவிநாயகரின் சில உவமைகளை ஈண்டுக் காணலாம்.

“கீரி மலையினிலே / நலந்தருங் / கேணி யருகினிலே
மாரி மழையதனால் / மலர்ந்தெழும் / மண்ணினைப் போல உள்ளம் -
பூரித்து நிற்கையிலே ...”
(கீரி மலையினிலே!, ப.23)

என்னும் அழகிய உவமையுடன் தொடங்குகின்றது கவிநாயகரின் ‘கீரி மலையினிலே!’ என்னும் குறுங்காப்பியம். இங்கே உள்ளப் பூரிப்புக்குக் கவிநாயகர் கையாண்டுள்ள உவமை இயல்பானது; மண்ணின் மணம் சான்றது.

“வானத்து நெற்றியில் சந்தனப் பொட்டென / வந்திடும் வட்ட நிலா”
(பாடு மனமே!, ப.34)

என உவமை நயம் நனி சொட்டச் சொட்ட வட்ட நிலாவின் கொள்ளை அழகினைத் தம் கவிதை ஒன்றில் சொல்லோவியமாக வடிப்பார் கவிநாயகர்.

“வளமலி யாழ்ப் பாணத்து, மாம்பழச் சுவையைப் போன்று...” (பாடு மனமே!, ப.68) என்பது ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப அரங்கினில் மொழியும்’ கவிஞர்களின் பாட்டுத் திறத்திற்குக் கவிநாயகர் கையாண்டுள்ள ஓர் அழகிய உவமை.

“திருவா சகத்தைத் தொடுகின்றேன் / சிவபெரு மானைத் தொட்டது போல்
பரமின் சாரம் பட்டென்று / பாய்வதை உணர்ந்தேன் என்னுள்ளே”

(ஆன்மிகக் கவிதைகள், ப.27)

என்னும் அடிகளில் அரிதினும் அரிதான அருளியல் அனுபவத்திற்குக் கவிஞர் பயன்படுத்தியுள்ள உவமை அற்புதத்திலும் அற்புதம்!

“வானத்தில் ஓர்கலி / யாணத்தைப் போற்பல
மாட்சிகள் காட்சிகள் ஆயிரமே!”
(பாடு மனமே, ப.40)

- வானத்தின் பல்வகைக் காட்சிகளையும் மாட்சிகளையும் இதனினும் மேலாக எவரும் உவமையில் வடித்துக் காட்டிவிட முடியாது!

‘இருபத்தோராம் நூற்றாண்டு நமதாகட்டும்!’

தூய உள்ளம் கொண்டவரின் / தோற்றம் தெரியும் அவர்எழுத்தில்”

(இலக்கிய உலகம், ப.64)

என்னும் கவிநாயகரின் வாக்கு அவருக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தி வருவதே ஆகும். இதே போல,

“சாதிமதம் பாரார் தமிழர்சால்பு ஓதிவரும்
நீதியிலே நின்றார் நிகரில்லார் – கோதில்லா
வித்தியா னந்தன் விழுமியங்கள் அத்தனையும்
முத்தமிழர் வங்கி முதல்”
(வித்தியானந்த வெண்பா: 38)

எனப் பேராசிரியர் சு.வித்தியானந்தனைக் குறித்து கவிநாயகர் படைத்திருக்கும் வெண்பாவும் அவரது படைப்பாளுமைக்கு முற்றிலும் ஏற்புடைய ஒன்றே எனலாம். கூட்டிக் கழித்து, பெருக்கி வகுத்துக் கூறுவது என்றால், ‘இருபத்தோரம் நூற்றாண்டு எமதாகட்டும்’ என்பதே கவிநாயகரின் கனவு; குறிக்கோள்; வேட்கை; யாவும்,

“சிந்திப்போம்! செயற்படுவோம்! /- இந்த மந்திர வாக்கியம்
பல்லவியாகவே படுத்துக் கிடக்கிறது / பல காலமாக!
தொடர வேண்டும் துணிவுமிகு / சாதனைச் சரணங்கள்!
படர வேண்டும் பார் முழுதும் / தமிழினக் கிரணங்கள்!”


(பொங்கு தமிழ், ப.24)

கவிநாயகரின் இவ் விழுமிய கனவு – உயரிய குறிக்கோள் – நேரிய வேட்கை நனவாவதற்கு – நடைமுறைக்கு வருவதற்கு – இமைப் பொழுதும் சோராது பாடுபடுவது உலகத் தமிழர் – இளைய தலைமுறையினர் – ஒவ்வொருவரது தலையாய கடமை ஆகும். இக் கடமையைச் செவ்வனே ஆற்றுவதற்குக் கவிநாயகரின் அகர முதல் னகர வரையிலான படைப்புக்கள் யாவும் பல்லாற்றானும் துணை புரிவன. ஒற்றை வரியில் – மறவன்புலவு க.சச்சிதானந்தனின் சொற்களில் குறிப்பிடுவது என்றால் – ‘அவரின் (கவி-நாயகரின்) கவிதைகள் காலத்தைக் காட்டுவன, காலத்துக்கும் வழி காட்டுவன, காலத்தைக் கடந்தும் வாழ்வன’ (பதிப்புரை, பொங்கு தமிழ், ப.4) எனலா


 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.