கவிதை உலகத்தின் புதிய மழலை

முனைவர் இரா.மோகன்

ஹைகூ நூற்றாண்டு: சிறப்புக் கட்டுரை

ருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஹைகூ தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. 'கவிதை உலகத்தின் புதிய மழலை ஹைகூ. இலக்கிய வடிவங்களில் ஓர் அணு. ஒரு மேதையின் குறுஞ்சிரிப்பு. நினைக்க நினைக்க விரிந்துகொண்டே செல்லும், புதிய புதிய அர்த்தங்களை அலை அலையாய் எழுப்பும்' எனக் குறிப்பிடுவர் மேலாண்மை பொன்னுச்சாமி ('அரவணைப்பாக ஓர் அணிந்துரை', எஸ்.குமாரின் 'தூரத்து வெளிச்சம்'). சொற்சுருக்கம், இயற்கையின் தரிசனம், படிம அழகு, தத்துவ நோக்கு, மனித நேயம், நகைச்சுவை உணர்வு, நடப்பியல் பாங்கு ஆகியவை இன்றைய ஹைகூ கவிதையின் தனிப் பண்புகளாக விளங்குகின்றன. இப்பண்புகள் கொலுவிருக்கும் ஹைகூ கவிதைகள் சிலவற்றை இக்கட்டுரை அடையாளம் காட்டுகின்றது.

பேராசிரியரின் பாகுபாடு

தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் நகைச்சுவையை மூன்றாகப் பிரித்துக் கூறுவார். 'நகை என்பது சிரிப்பு. அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்று' என்பது அவரது உரை விளக்கம். இம் மூன்று வகையான நகைச்சுவைகளையும் இன்றைய ஹைகூ கவிதைகளில் காண முடிகின்றது. சில ஹைகூ கவிதைகள் நம்மை முறுவலிக்க வைக்கின்றனளூ இன்னும் சில ஹைகூ கவிதைகள் நம்மை அளவே சிரிக்கச் செய்கின்றனளூ ஒரு சில ஹைகூ கவிதைகள் நம்மைப் பெருகச் சிரிக்கத் தூண்டுகின்றன.

'காதலியை சந்தித்த இடத்தில்
எழுதிப் போடவேண்டும்
விபத்து நடந்த இடம்'
(கம்பம் மாயவன், சிறகின் இசை, ப.27)

என்பது நம்மை முறுவலிக்க வைக்கும் ஹைகூ இது 'சாலை விதி'யை நயமான ஒரு 'சேலை விதி'யாக மாற்றியுள்ளது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது, நடைமுறைக் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகுவது என்பதுதான் இன்றைய ஹைகூவின் தனிப்பண்பாகும். இவ்வகையில் அமையும் ஹைகூ கவிதைகள் நம்மை அளவாகச் சிரிக்கச் செய்கின்றன. ஓர் எடுத்துக்காட்டு: பாரதப் போர் இன்று நடந்தால் அர்ச்சுனன் கண்ணனிடம் கேட்கும் வரம் என்னவாக இருக்கும்? இக்கேள்விக்கு எ.மு.ராஜனின் ஹைகூ கவிதை தரும் பதில் இதோ:

'கிருஷ்ணா உனக்கு ஒரு ஓட்டு
எனக்கு வேண்டும்
உனது படைகளே!'
(பாரதப் போர், ப.9)

'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியுமா?' என்பது ஒரு நாட்டுப்புறப் பழமொழி. இதுபோல், 'கடலலைக்கும் காலில் விழும் கலாச்சாரத்திற்கும் முடிச்சுப் போட முடியுமா?' என யாரேனும் கேட்டால் 'முடியும்' எனப் பதில் கூறுகின்றது மாலதி ஹரீந்திரனின் ஹைகூ கவிதை ஒன்று:

'காலில் விழும் கலாச்சாரம்
வேண்டாம் என்றாலும்
வந்து விழுகிறது அலை'
(ஹைகூ கவிதைகள், ப.3).

'உள்ளப் பட்ட நகை' என்னும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் தொடருக்கு 'உள்ளத்தோடு பிறவாத நகையும் உள' என விளக்கம் தருவார் பேராசிரியர். அவர் குறிப்பிடுவது போல், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறக்காமல், உதட்டளவில் மேலோட்டமாகத் தோன்றும் புன்முறுவலும் உண்டு. 'வறிது அகத்து எழுந்த வாயல் முறுவல்' என்று சிலப்பதிகாரம் இதனைச் சுட்டும். மு.முருகேஷின் ஹைகூ கவிதை ஒன்று இன்றைய நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலையைப் பின்வரும் சொற்களால் பதிவு செய்துள்ளது.

'கவர் நிறையக் கடன்
வாடகைப் புன்னகை
முதல் தேதி'
(விரல் நுனியில் வானம், ப.49)

முதல் தேதியன்று சம்பளக் கவர் நிறையக் கடன் சுமந்து வரும் நடுத்தர மக்களின் உதடுகளில் தவழ்வது 'வாடகைப் புன்னகை' என்கிறார் கவிஞர்.

இங்ஙனம் நகைச்சுவையின் பல்வேறு பரிமானங்களை இன்றைய ஹைகூ கவிதைகளில் பாங்குறக் காண முடிகின்றது.

குறும்புப் பார்வை

ஒரு கோணத்தில் பார்த்தால், ஹைகூ கவிதை சின்னக் கண்ணனைப் போல் தீராத விளையாட்டுப் பிள்ளையாய்க் காட்சி தருகின்றது. அன்றாட வாழ்க்கைக் காட்சிகளை அது தனக்கே உரிய ஒரு குறும்புப் பார்வையுடன் ஆங்காங்கே பதிவு செய்துள்ளது.

'மோதிரக் கையால் குட்டுப் படுவது' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அறிவுமதியின் ஹைகூ கவிதை ஒன்றில் பள்ளிக்குப் போகாத சிறுமி குட்டுப்படுகிறாள்: அதுவும் செல்லமாய். யாரால் தெரியுமா? ஆலங்கட்டி மழையால்!

'பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை'
(கடைசி மழைத்துளி, ப.25)

தண்ணீர்க் குடமெடுத்துத் தனிவழியே போகும் பருவப் பெண்ணை நாட்டுப்புறப் பாடல் ஒன்று நயமாகப் படம்பிடித்துக் காட்டும். இன்றைய ஹைகூ ஒன்று இளம் பெண்ணின் இடுப்பில் அழகாய் அமர்ந்து கொண்டு செல்லும் குடத்தினை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது:

'இடுப்பில் அமர்ந்து கொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்'
(பா.உதயகண்ணன், புல்லிலும் பூக்கள் பூக்கும், ப.15)

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்காக இன்றைய இளைய தலைமுறை கண்டுபிடித்துள்ள மருந்தின் பெயர் 'மெமரி பிளஸ்'. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? இன்றைய நெருக்கடியான சூழலில் 'மெமரி பிளஸ்' சாப்பிடவே மறந்து போய்விட்டதாம் இளைஞர் ஒருவருக்கு!

'மறந்தே போச்சு
மெமரி பிளஸ்
சாப்பிட'
(ந.முத்து, எடை குறைவாய், ப.21)

குடும்ப வாழ்வில் - அதுவும் திருமணமான புதிதில் - மனைவியின் சொல்லுக்கு உள்ள ஆற்றலே தனி. 'தலையணை மந்திரம்' என உலகியலில் வழங்கி வரும் தொடரும் இவ்வகையில் நினைவு கூரத்தக்கதாகும்.

'மனைவி சொன்ன
முதல் ஹைக்கூ
தனிக்குடித்தனம்'
(குயிலொன்று..., ப.13)

என்னும் செல்லம்மாள் கண்ணனின் கவிதை, 'மனைவி சொல்லே மந்திரம்' என்பதன் ஹைகூ வடிவம் ஆகும்.

'துள்ளி வருகுது எள்ளல்'

'சுற்றி நில்லாதே போ - பகையே, துள்ளி வருகுது வேல்!' என்பது கவியரசர் பாரதியாரின் வாக்கு. அது போல் ஏனைய சுவைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்றைய ஹைகூ கவிதைகளில் எள்ளல் சுவை இளங்கன்றினைப் போல் துள்ளித் திரிகிறது. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல் எள்ளலும் அங்கதமும் ஹைகூ கவிதைகளில் பின்னிப் பிணைந்து நிற்கின்றன.

பாரதியார் மட்டும் இன்று இருந்திருந்தால் 'என்று மடியும் எங்கள் ஆங்கில மோகம்' என்று பாடி இருப்பார். ஆம்ளூ ஆங்கிலேயர் இந்திய நாட்டை விட்டுச் சென்றாலும், ஆங்கில மோகம் இந்தியரிடம் இருந்து - குறிப்பாக, தமிழரிடம் இருந்து - இன்னும் முற்ற முழுக்க விட்டு விலகிய பாடில்லைளூ அவர்களுடன் உள்ளத்தளவில் இன்னமும் ஒட்டி உறவாடிக் கொண்டுதான் இருக்கின்றது. இதனை மென்மையான எள்ளல் சுவையோடு எடுத்துக்காட்டுகிறது இன்றைய ஹைகூ ஒன்று:

'இந்தி பேசினால் இந்தியன்
ஆங்கிலம் பேசினால்...
அறிக... அவன் தமிழன்!'
(சீனு. தமிழ்மணி, தீவின் தாகம், ப.80)

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' எனப் பெயர் பெற்றது தமிழ்க் குடி அக்குடியின் வழிவந்த இன்றைய தமிழனோ தனித்தனியே தனக்கொரு குணம் கொண்டவனாக விளங்குகின்றான். எதற்கெடுத்தாலும் அவன் அரசாங்கத்தை எதிர்பார்த்தே வாழ்ந்து வருகின்றான்ளூ தன் உழைப்பை நம்பாமல், சொந்தக் காலில் நிற்காமல் அரசாங்கம் எலும்புத் துண்டுகளைப் போல் அவ்வப்போது வீசி வரும் இலவசங்களை நம்பியே தனது வாழ்நாளை ஓட்டி வருகிறான். தமிழனின் இப்போக்கினை இ.பரிமளத்தின் ஹைகூ கவிதை ஒன்று நச்சென்று எடுத்துக்காட்டுகின்றது.

'சேலை வேட்டி செருப்பு
இலவசம்
மானமுள்ளவன் தமிழன்'
(மின்மினிக் கவிதைகள், ப.16)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சாதி இரண்டொழிய வேறு இல்லைளூ ஆம், வீட்டில் இருந்து திரையரங்கிற்குச் செல்லும் சாதி ஒன்றுளூ திரையரங்கில் இருந்து வீட்டிற்குத் திரும்பி வரும் சாதி இன்னொன்று. இன்றைய ஹைகூ கவிஞர்கள் திரைப்படம் தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தினைக் குறித்துக் கடுமையாகச் சாடியுள்ளனர்ளூ தமிழர்களிடையே காணப்படும் திரைப்பட மோகத்தை எள்ளி நகையாடியுள்ளனர். பல்லவனின் ஹைகூ ஒன்று இவ்வகையில் குறிப்பிடத்தக்கதாகும்.

'நடிகையின் நாட்டியம் கோயிலில்
நாற்பதாயிரம் பேர்
நாலு பேருடன் நடராசர் உலா'
(சின்ன நதிகள், ப.39)

தமிழ்நாட்டில் ஆடல் வல்லானுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா? இத்தகைய ஆற்றல் வாய்ந்த எள்ளல்களின் தெறிப்பினை இன்றைய ஹைகூ கவிதைகளில் பரவலாகக் காண்கிறோம்.

'எங்கெங்குக் காணினும் முரண்கள்!'

வாழ்க்கையில் சோதனைகள், சோகங்கள் வரலாம்ளூ ஆனால் சோதனைகளும், சோகங்களுமே வாழ்க்கை ஆகிவிட்டால்? என்ன செய்வது? எப்படி எதிர்கொள்வது? எவ்வாறு சமாளிப்பது? இன்று தனிமனித நிலையிலும் சரி, ஒட்டுமொத்தமான சமூக நிலையிலும் சரி எங்கெங்குக் காணினும் முரண்களே மண்டிக் கிடக்கின்றன. அதுவும், ஹைகூ மனம் கொண்ட ஒருவருக்கு இன்றை சூழ்நிலையில் அங்கிங்கு எனதாபடி எங்கும் முரண்களே தென்படுகின்றனளூ ஹைகூ கவிதை இன்றைய மனிதரிடமும் சமுதாயத்திலும் காணப்படும் முரண்களைச் சட்டென இனங்கண்டு கொள்ளுகின்றது.

இன்றைய மனிதன் மன அமைதியைத் தேடி – நிம்மதியை நாடி – அல்லும் பகலும் அலைகிறான்ளூ பேயாய் அலைகிறான். அலைபாயும் அவனது மனப்போக்கினை அழகிய முரண் வாயிலாகப் பதிவு செய்துள்ளது இன்றைய ஹைகூ ஒன்று:

'பேயாய் அலைகிறது
மனம்
அமைதி தேடி'
(ரவி, முனை கெட்ட தீ, ப.8)

இன்றைய மனிதன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோனாக விளங்குகிறான். அவன் வெளிப்பார்வைக்கு மலர்ந்த முகத்தோடு காட்சியளிக்கின்றான்ளூ ஆனால் அவன் மனதிற்கு உள்ளே குப்பையும் கூளமுமாய் மண்டிக் கிடக்கின்றன. இதனை 'ரோஜா', 'கள்ளி' என்னும் முரண் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது அவைநாயகனின் ஹைகூ:

'வரவேற்பறையில் ரோஜா
உள்ளே
மனங்களில் கள்ளி...!'
(சூரியச் செதில்கள்)

சொல், பொருள் என்னும் இரு நிலைகளிலும் ஹைகூ கவிதைகள் முரண்களைத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

பழமொழிகளின் பயன்பாடு

பழமொழிகளைக் காலத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளுவதிலும், புதுமொழிகளைப் படைப்பதிலும் இன்றைய ஹைகூ கவிதைகள் சிறந்து விளங்கு-கின்றன.

'பந்திக்கு முந்து, படைக்கு பிந்து' என்பது பழமொழி இதனோடு மூன்றாவதாக ஒரு வரியைச் சேர்த்து இன்றைய ஹைகூ கவிஞர் எஸ்.குமார் புதுமொழி ஒன்றைப் படைத்திருக்கிறார். அவரது புதுமொழி இதோ:

'பந்திக்கு முந்து
படைக்குப் பிந்து
ஓட்டுக்கு ஓடு'
(தூரத்து வெளிச்சம்)

'ஆமாம், ஓடவில்லை என்றால் உன் ஓட்டு உனக்குச் சொந்தம் இல்லை!'

இதே போல், 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்னும் வேளாண்மைப் பழமொழி கவிமுகிலின் கைவண்ணத்தில் பிறிதொரு ஹைகூ கவிதையாகப் புதுப்பிறவி எடுத்துள்ளது:

'ஆடிப் பட்டம்
தேடி விதைப்போம்
யாருடைய நிலத்தில்?'
(சூரியத் துளிகள், ப.17)

சொல் விளையாட்டு

இன்றைய ஹைகூ கவிதைகளில் அறிவார்ந்த சொல் விளையாட்டுக்களையும் ஆங்காங்கே கண்டு மகிழ முடிகின்றது.

உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களால் கடுமையான விளைவுகளைச் சந்தித்துவிட்டது. இந்நிலையில் மூன்றாம் உலகப் போர் எழுந்தால் என்ன ஆகும்? விளைவுகள் எப்படி இருக்கும்? இவ் வினாக்களுக்கான விடைகளைத் தமிழ்நெஞ்சனின் ஹைகூ ஒன்று தனக்கே உரிய பாணியில் சுட்டிக்காட்டுகின்றது.

'மூன்றாம் உலகப் போருக்குப்பின்
உலகம் எப்படி இருக்கும்?
ஆம் - உலகம் எப்படி இருக்கும்?'
(தீவின் தாகம், ப.55)

ஹைகூவின் இயல்புக்கு ஏற்ப, இக்கவிதையின் மூன்றாவது அடி முத்தாய்ப்பாக அமைந்து, படிப்பவரின் சிந்தனையைத் தூண்டுகின்றது.
வயல் வெளிகள் எல்லாம் - விளைநிலங்கள் எல்லாம் - இன்று காலப்போக்கிற்கு ஏற்ப மாறி வருகின்றனளூ வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்பனையாகி வருகின்றன. இதனைத் தம் ஹைகூ ஒன்றில் இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார் செந்தமிழினியன்:

'விளை நிலங்கள்
விலை நிலங்களாயின
வீடுகள்'
(பரிதிப் புன்னகை, ப.12)

'விளைநிலங்கள் - விலைநிலங்களாயின': என்ன அற்புதமான சொல் விளையாட்டு பார்த்தீர்களா?

நல்ல ஹைகூ எது?

'பார்வையில் புதிய கோணம். எதிர்பார்ப்புகளை அநாயாசமாய் உதறும் லாவகம். நம்பிக்கை, நகைச்சுவை. சில வெல்டிங் பொறிகளாய்ச் சுளீரெனச் சுடுகின்றன. அதிர்வுகள்' (புல்லிலும் பூக்கள் பூக்கும், ப.9) என எஸ்.சங்கரநாராயணன், பா.உதயகண்ணனின் ஹைகூ குறித்துக் கூறியிருக்கும் கருத்து, பொதுவாக நல்ல ஹைகூ அனைத்திற்கும் பொருந்தி வருகின்ற ஒன்றே ஆகும். முத்தாய்ப்பாக, 'எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. உள்மனதை நேரடியாகப் பேசு, எண்ணங்களைக் கலையவிடாமல் நேராகச் சொல்' (மேற்கோள்: செல்லம்மாள் கண்ணன், குயிலொன்று... ப.5) என்னும் ஜப்பானியக் கவிஞர் பாஷோவின் அற்புதமான கருத்தோடு இக்கட்டுரை நிறைவு பெறுவது சாலவும் பொருத்தமாக இருக்கும்.

 


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.