குழந்தை இலக்கியத் துறைக்குத் கவிஞர் செல்ல கணபதியின் கொடை

முனைவர் இரா.மோகன்

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் எழுதுவது என்பது ஓர் அரிய கலை. அது எல்லோருக்கும் எளிதில் வசப்பட்டுவிடாது. வளர்ந்த பெரியவர்களுக்கு எழுத எவ்வளவு நிறைந்த புலமையும் மிகுந்த ஆற்றலும் வேண்டுமோ, அதற்கு இணையான – இன்னமும் சொல்ல வேண்டும் என்றால், சற்றே கூடுதலான – புலமையும் ஆற்றலும் குழந்தை இலக்கியம் படைப்போர்க்கு வேண்டும். “குழந்தை மனம் என்பது ஒரு தனி உலகம். அது தனி உலகம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியும்” (மேற்கோள்: மா.இராமலிங்கம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், ப.256) என்பார் அறிஞர் கிளாடியா ரீவ்ஸ்.

எது குழந்தை இலக்கியம்?

குழந்தை இலக்கியம் என்பது பெயரளவில் மட்டுமன்றி, பொருள் அடிப்படையிலும் குழந்தைககளுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும்; குழந்தைகள் தாமாக விரும்பிப் படித்து மகிழ்வதற்கும் ஆடிப் பாடுவதற்கும் உகந்த முறையில் அருமையும் எளிமையும் இனிமையும் ஓசை நயமும் ஒன்று சேர்ந்த கூட்டுக் களியாகத் திகழ்தல் வேண்டும்.

“குழந்தைகளுடைய இலக்கியம் என்று குறிப்பிடும் போது, அது அவர்களுக்கு உரியதாகவும் அவர்களுடையதாகவும் இருக்க வேண்டும்” (நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், ப.66) என மொழிவார் ஒப்பியல் அறிஞர் க.கைலாசபதி. “குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்களில் ஆழ்ந்த உணர்ச்சிகள் வேண்டியதில்லை; அறிவு நுட்பமும் தேவையில்லை. வியப்பான உணர்ச்சிகளை அல்லது எளிய உணர்ச்சிகளையே, இனிய முறையில் எதுகை மோனை நிரம்பிய செய்யுள்களில் உணர்த்தினால் குழந்தைகள் விருப்பத்தோடு பாடுவார்கள். பாட்டில் பொருட் சிறப்பு இல்லையானால் கவலை இல்லை. ஒலி நயம் இருக்க வேண்டும். சில சொற்களும் தொடர்களும் திரும்பத் திரும்ப வர வேண்டும்” (தமிழ் இலக்கிய வரலாறு, ப.411) என்னும் பேராசிரியர் மு.வரதராசனாரின் கருத்து இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

அழ.வள்ளியப்பாவின் வழியில் நடை பயிலும் செல்ல கணபதி

“குழந்தைக் கவிஞன் என்பவன்
குழந்தை ஆக வேண்டுமாம்;
குழந்தை யோடு குழந்தையாய்க்
கூடி ஆட வேண்டுமாம்!

வள்ளி யப்பா இதனையே
வாழ்வின் கொள்கை ஆக்கினார்;
துள்ளும் குழந்தைப் பாக்களின்
சூத்தி ரத்தைக் காட்டினார்!”    
(மணக்கும் பூக்கள், ப.61)

என்பது ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா பற்றிய செல்லகணபதியின் அழகிய சொல்லோவியம்; நயமிகு நடைச் சித்திரம். அழ.வள்ளியப்பாவைத் தம்முடைய குருவாக ஏற்றுக்கொண்டு இருபத்தியோராம் நூற்றாண்டில் குழந்தைகளுக்காகப் பாடல் இயற்றியவர்களில் கவிஞர் செல்லகணபதி முதன்மையானவர் ஆவார்.

செல்ல கணபதி பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றவர்; தம்மைக் குழந்தை இலக்கியப் பாதையில் திசை திருப்பிய அழ.வள்ளியப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் பேராசிரியர் பூவண்ணனுடன் இணைந்து ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பினைத் தொடங்கியவர்; அதன் சார்பில் ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் குழந்தை இலக்கியம் தொடர்பான விழாக்களைச் சிறப்பாக நடத்திக் காட்டியவர். குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு செல்ல கணபதி ஆற்றிய பணிகளுக்கெல்லாம் மணி மகுடம் சூட்டியது போல் புதுதில்லி சாகித்திய அகாதெமி அவரது ‘தேடல் வேட்டை’ என்னும் சிறுவர் பாடல் நூலுக்கு 2015-ஆம் ஆண்டிற்கான பால புரஸ்கார் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் நாற்பதுக்கு மேற்பட்ட குழந்தை நூல்களைப் படைத்துத் தந்துள்ளார். அவரது நூல்கள் தமிழக அரசின் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளன; ‘சிறுவர் இலக்கிய மாமணி’, ‘குழந்தை இலக்கியச் சாதனையாளர்’, ‘சிறந்த குழந்தை எழுத்தாளர்’ முதலான பல்வேறு விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. அவர் இதுவரை பெற்ற விருதுகளில் எல்லாம் தலையாயது, ‘குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் வாரிசு’ என்றச் சான்றோர் பெருமக்களின் ஒருமித்த பாராட்டு ஆகும். அவரது மழலையர் பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும், படக் கலவையுடன் கூடிய அழகிய குறு வட்டுக்களாகவும்
(C.D.) வெளிவந்துள்ளன. அவை குழந்தைகள் இடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளன.

“நாற்பதாண்டுக் காலமாக என் குருநாதர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா வழிகாட்டக் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதி வருகிறேன். என் மணிவிழா நாளில் இதுவரை நான் எழுதிய குழந்தைப் பாடல்களையெல்லாம் தொகுத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை தோன்றியது. நான் நாற்பதாண்டுக் காலமாகச் சேர்த்து வைத்த சிறியதும் பெரியதுமான தங்கக் காசுகளைத் தொகுத்தும் வகுத்தும் பார்த்திட வேண்டுமென்ற துடிப்பு” (முன்னுரை, மலரும் மொட்டுகள், ப.10) என்னும் கவிஞரின் ஒப்புதல் வாக்குமூலம் குழந்தை இலக்கியத்தில் அவருக்கு உள்ள ஆழ்ந்த பற்றையும், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மீது அவர் கொண்டிருக்கும் உயரிய மதிப்பினையும் பறைசாற்றுவதாகும்.

குழந்தை இலக்கியத் துறைக்குச் செல்ல கணபதியின் கொடைகள்

குழந்தை இலக்கியத் துறைக்குக் கவிஞர் செல்லகணபதி தமது வாழ்நாள் சாதனையாக வழங்கியுள்ள வளமான கொடைகள் மூன்று. அவை வருமாறு:

1. மலரும் மொட்டுகள் (2001): 3 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான மழலைப் பாடல் தொகுதி.

2. வளரும் பூக்கள் (2002): 9 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான பாடல் தொகுதி.

3. மணக்கும் பூக்கள் (2006): 12 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கான பாடல் தொகுதி.

“மலரும் மொட்டுகள் மழலையருக்காக. மொட்டுக்கள் வளர்ந்து விரியும் பருவத்தில் வளரும் பூக்கள் ஆகின்றன. ஆகவே வளரும் பூக்களைக் குழந்தைகளுக்காக வழங்கி இருக்கிறேன். மலர்கள் விரிந்து மணம் பரப்பும் போது தானே பூக்களின் மகிமை புரியும்? ஆகவே மணக்கும் பூக்களைச் சிறுவர்களுக்காக வழங்கியிருக்கிறேன்” (ப.10) என ‘மலரும் மொட்டுகள்’ தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் கவிஞர் தந்திருக்கும் விளக்கக் குறிப்பு இங்கே கருதத் தக்கதாகும்.

எட்டே வரிகளால் ஆன கவிஞரின் குட்டிப் பாடல்!

‘தாயின் மொழி’ என்பது ‘மலரும் மொட்டுக்கள்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள முதல் பாடல். இதில் செல்ல கணபதி மழலையரைப் பார்த்து ஓர் அறிவுரை கூறுகிறார். அவர் தரும் அறிவுரை தாய்மொழியைப் பற்றியது; தமிழைப் பற்றியது.

“தாயின் மொழி / தமிழைப் படி!
யாரும் இதை / அறியப் படி!
இன்பத் தமிழ் / இதனைப் படி!
வண்ணத் தமிழ் / வளரப் படி!”      
(ப.25)

பாடலின் தொடக்கத்தில் ‘பாப்பா, தமிழைப் படி!’ என்கிறார் கவிஞர். உலகில் பல மொழிகள் வழங்க, கவிஞர் ஏன் தமிழைப் படிக்கச் சொல்கிறார் என்ற எண்ணம் எழலாம். அதற்கும் கவிஞரே தக்க மறுமொழியைச் சொல்கிறார்; ‘தமிழை ஏன் படிக்க வேண்டும் தெரியுமா? அது உன் தாய்மொழி! தாயின் மொழி! அதனால் படிக்க வேண்டும்’ என்கிறார்.

படிப்பது என்றால் எப்படி? மனத்துக்குள் அமைதியாக வாசித்துக் கொண்டால் போதுமா? போதாது. அப்படி மனத்துக்குள் படிக்கும் போது தமிழ் என்பதை தமில் என்றோ, தமிள் என்றோ, ஒருவேளை ‘டமில்’ என்றோ பிழையான ஒலிப்போடு படித்து விடலாம். அதனால் வாய்விட்டு உரக்கப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது ஒலிப்பு முறையில் பிழை இருந்தது என்றால், அருகில் இருப்போர் அதனைத் கேட்டுத் திருத்துவதற்கு வாய்ப்பு நேரும். அதனால் ‘யாரும் இதை அறியப் படி! உரக்கப் படி!’ என்கிறார் கவிஞர்.

அடுத்து, தமிழைப் படிப்பதால் என்ன பயன் விளையும், ஏன் அதைப் படிக்க வேண்டும் என்னும் வினாவுக்கு விடை தருவது போல் கவிஞர், “தமிழைப் படித்தால் இன்பம் கிடைக்கும். அதனால் படி!” என அறிவுறுத்துகிறார்; ‘இன்பத் தமிழ் இதனைப் படி!’ என்கிறார்.

தொடர்ந்து ‘என் இன்பத்துக்காகத் தான் தமிழைப் படிக்க வேண்டுமா?’ என்ற கேள்வியும் எழலாம் அல்லவா? அதற்கும் விடையாகக் கவிஞர், “இப்படி உன்னைப் போன்ற மழலையர் படித்தால் தான் தமிழ் வளரும். அதனால் வண்ணத் தமிழ் வளரப் படி” என்று முத்தாய்ப்பாக மொழிகிறார்.

“சின்னஞ் சிறு சொற்கள்! மல்லிகைப் பூக்களை இரண்டிரண்டாகத் தொடுத்தது போன்ற வரிகள்! தாய்மொழி பயிலும் முறையை இனிக்கக் கூறும் எட்டே வரிகளாலான குட்டிப் பாடல்!” (‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்!’, மலரும் மொட்டுக்கள், ப.8) என இப் பாடலின் நலத்தை உளமாரப் பாராட்டுகிறார் பேராசிரியர் பூவண்ணன்.

‘எண்கள்’ என்னும் தலைப்பில் செல்லகணபதி படைத்துள்ள பிறிதொரு பாடல் முதல் பத்து வரையிலான எண்ணின் வரிசையை ஏறுமுகத்தில் அழகாக அறிமுகம் செய்கின்றது:

“ஒன்று இரண்டு மூன்று
உண்மை அன்பை வேண்டு.

நான்கு ஐந்து ஆறு
நல்ல வார்த்தை கூறு.

ஏழு எட்டு ஒன்பது
எண்கள் சரியாய் எண்ணிடு.

பத்து பத்து பத்து
படிக்கும் அறிவே சொத்து.”
(மலரும் மொட்டுகள், ப.31)

எண்களின் வரிசையைச் சுட்டுவதோடு, மழலையர்க்கு உண்மை அன்பு, நல்ல வார்த்தை, சரியாய் எண்ணல், அறிவே சொத்து ஆகிய உயரிய வாழ்வியல் விழுமியங்களையும் கவிஞர் இப் பாடலின் வாயிலாக உணர்த்தி இருப்பது சிறப்பு.

‘வளரும் பூக்கள்’ உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

‘எப்படி இருப்பாய்?’ என்னும் தலைப்பில் ‘வளரும் பூக்கள்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிஞரின் சிறுவர் பாடல், வாழ்வில் எப்படி எல்லாம் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் நோக்கில் அமைந்தது.

“எறும்பைப் போலச் சுறுசு றுப்பாய்
இருக்க வேண்டும் நீ.
கரும்பைப் போல் இனிக்கப் பேசிக்
காட்ட வேண்டும் நீ.

மலரைப் போலச் சிரித்துப் பேசி
மகிழ வேண்டும் நீ.
பலரும் விரும்பிப் போற்ற அன்பாய்ப்
பழக வேண்டும் நீ.

தேனைச் சேர்க்கும் ஈக்கள் போலத்
திரிய வேண்டும் நீ.
வானைப் போலப் பரந்த நோக்கில்
வளர வேண்டும் நீ.”
(வளரும் பூக்கள், ப.28)

எறும்பைப் போன்ற சுறுசுறுப்பு, கரும்பைப் போன்ற இன்சொல், மலரைப் போன்ற சிரிப்பு, பலரும் விரும்பிப் போற்றும் அன்பான பழக்க வழக்கம், தேனீக்கள் போல அலைந்து திரிந்து சேர்க்கும் பண்பு ஆகியவற்றைப் பெற்று வானத்தைப் போலப் பரந்த நோக்கில் வளர வேண்டும் எனச் சிறுவர்-சிறுமியர்க்கு இப் பாடலின் வாயிலாக அறிவுறுத்துகின்றார் கவிஞர்.

‘நாரையைப் போல்’ என்னும் பாடலின் முடிவில் இடம்பெற்றுள்ள,

“ஓடி உழைக்கும் மனிதர் என்றும்
உன் போல் முயன்றால் உயரலாம்!”
(ப.4)

என்ற வரிகளும்,

‘உயர உயர ஏறலாம்’ என்னும் பாடலில் அமைந்துள்ள,

“தேடித் தேடிப் படிப்பவர்
தெளிந்த அறிவை அடையலாம்;
ஓடி ஓடி உழைப்பவர்
உயர உயர ஏறலாம்!”
(ப.80)

என்ற வரிகளும்,

‘முடியாது என்பது இல்லை!’ என்னும் பாடலின் இடையே வரும்,

“முயன்று பழகினால் எவர்க்கும் எதுவும்
முடியா தென்பதும் உண்டோ?”
(ப.99)

என்ற வரிகளும்,

‘ஓடி ஆடித் திரிவோம்!’ என்னும் பாடலின் மையக் கருத்தாக வரும்,

“இன்று செய்வதை இன்றே செய்வது
என்றும் பெருமை சேர்க்கும்!
இன்று செய்வதும் நன்றே செய்வது
எவர்க்கும் நன்மை பயக்கும்!”
(ப.102)

என்ற வரிகளும் ஓசை நயத்தோடு அமைந்து பிஞ்சு நெஞ்சங்களில் உழைப்பின் மேன்மையையும் வாழும் முறைமையினையும் பசுமரத்தாணி போல் பதியச் செய்கின்றன.

குழந்தை இலக்கியத் துறையில் புதிய செல்நெறி

குழந்தை இலக்கியத் துறையில் ஒரு புதிய செல்நெறியினை
(Trend) உருவாக்கிய பெருமை செல்லகணபதிக்கு உண்டு. அவரது கண்ணோட்த்தில் “3 முதல் 16 வயது வரை உள்ள பிள்ளைகள் படிப்பதற்காக எழுதப்படுபவையே குழந்தை இலக்கியம்” (முன்னுரை, மணக்கும் பூக்கள், ப.23). மேலும் அவர், “மூன்று முதல் எட்டு வயதினருக்கான பிரிவு, மழலையர் பிரிவு; ஒன்பது முதல் பதினொரு வயதினருக்கான பிரிவு, குழந்தையர் பிரிவு; பன்னிரண்டு முதல் பதினாறு வயதினருக்கான பிரிவு சிறுவர் பிரிவு. இன்ன வயதினருக்கு இன்ன சொற்கட்டு, இன்ன பொருள் என்று அந்த வயதினர் ஏற்றுக் கொள்ளவும் எளிதாகப் புரிந்து கொள்ளவும் கூடிய வகையில் குழந்தை இலக்கியத்தை வயதுக்கேற்ற வகையில் தரம் பிரித்துப் பாடல்களை வசைப்படுத்தியிருக்கிற என்னுடைய இந்த முயற்சி, குழந்தை இலக்கிய வரலாற்றில் முதல் முயற்சி என்ற இடத்தை நிச்சயம் பெறும். இந்த நோக்கில் குழந்தை இலக்கியம் படைக்கப்படுகிற ஒரு போக்கும் இனி ஏற்படலாம்” (ப.23) என்றும் முன்மொழிவார். இக் கூற்றுக்கு நல்லதோர் இலக்கியமாக ‘மணக்கும் பூக்கள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுவர் பாடல் ஒன்றினை இங்கே காணலாம்.

“ஐந்தும் விரல்களே

ஐந்து விரல்கள் உடையநம் கையில்
ஐந்து விரல்களும் உயர்வேதான்!
ஐந்து விரல்களில் ஒன்றுத வாவிடில்
ஐந்தும் பலத்தினை இழப்ப துண்டு!

எழுதத் தெரியும் என்று சொல்கிறாய்
எப்படி உன்னால் முடிகிறது?
எழுத உதவியாய்க் கட்டை விரலுடன்
இருப்பவை நடுவிரல் சுட்டுவிரல்!

நடுவிரல் இன்றி எதையும் பிடித்தால்
நலிந்து போகும் கை வலிமை!
முடுக்கிய வேளையில் வெற்றியின் பரிசாய்
மோதிரம் போட அடுத்த விரல்!

வெற்றியைக் குறித்துச் சுட்டுவ தென்றால்
வேண்டும் உனக்குக் கட்டை விரல்!
வெற்று விரலாய்ச் சுண்டு விரலையும்
வீணாய்க் கேலி பேசாதே!

சுண்டு விரலால் என்ன புண்ணியம்
சொல்ல முடியுமா உன்னாலே?

சுண்டு விரலை இழந்தவர் சாப்பிடச்
சோற்றைப் பிசைவது பெரும்பாடு!

ஒற்றுமை யாக விரல்கள் இருப்பதால்
உந்தன் கைக்கு மிகுந்த பலம்!
ஒற்றுமை யாக மக்கள் வாழ்வது
ஒவ்வொரு நாட்டிலும் நிறைந்த வளம்!”
(பக்.144-145)

“ஒவ்வொரு விரலும் எப்படி இன்றியமையாதது என்று அவர் (கவிஞர்) விளக்கியதைப் படித்து வியந்து நிற்கிறேன். இது கற்பனையா? ஆழமான, வித்தியாசமான பார்வையா? எல்லோருக்கும் விரல்கள் இருக்கின்றன. எல்லோரும் நாள்தோறும் விரல்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஒரு கவிஞர் அந்த விரல்களை எப்படி நுணுக்கமாகப் பார்த்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது; தம் பார்வையைப் பாடலாக வடித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது” (அணிந்துரை, மணக்கும் பூக்கள், ப.5) என இப்பாடலுக்குப் புகழாரம் சூட்டுவார் பாரத மணித்திரு நாட்டின் முன்னை நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

கருத்துப் பாடல்களின் ஆட்சி

கவிஞர் செல்ல கணபதியின் மூன்றாம் தொகுதியான ‘மணக்கும் பூக்கள்’ வளர்ந்து விட்ட சிறுவர் சிறுமியர்க்கு உரியது. எனவே, இத் தொகுதியில் காட்சிப் பாடல்களை விடக் கருத்துப் பாடல்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளன. 12 முதல் 16 வயது வரையிலான சிறுவர்-சிறுமியர்கள் சிந்திக்கும் திறன் வளர்ந்தவர்களாகக் காணப்பெறுவர். இதனை உணர்ந்த கவிஞர், இத் தொகுதியில் சில பிரச்சினைகள் பற்றி அவர்களோடு தம் பாடல்கள் வாயிலாகப் பேசுகிறார், விவாதிக்கிறார்.

முந்தின ‘மலரும் மொட்டுகள்’ தொகுப்பில் ‘தாயின் மொழி தமிழைப் படி!’ என மழலையர்க்கு அறிவுறுத்திய கவிஞர், ‘மணக்கும் பூக்கள்’ தொகுப்பில் சிறுவர்-சிறுமியர்கள் ஒன்று கூடிச் சூளுரைப்பது போல்,

“தாய்மொழியில் கல்வியினைக் கற்போம்
சாதனையால் தலைநிமிர்ந்து நிற்போம்!”
(ப.10)

எனத் தெள்ளத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பாடுகின்றார்; ‘தாய்மொழியில் கற்கின்ற போது, தானாகப் புரிந்து கொள்ளத் தோது!’ எனத் தாய்மொழி வழிக் கல்வியின் தனித்தன்மையையும் உணர்த்துகின்றார்.

‘நூறு ரூபாய்’ என்னும் பாடலில் உழைப்பின் உயர்வினைக் கவிஞர் சிறார்க்கு உணர்த்தி இருக்கும் பாங்கு உள்ளத்தைத் தொடுவது:

“பசிக்கு மீனைக் கொடுக்காதே
பயிற்சி கொடுப்பாய் மீன் பிடிக்க!
பசிக்கு உழைத்துப் பிழைக்கின்ற
பக்குவம் கற்றுக் கொடுப்பாயே!”
(ப.167)

‘ஒருவருக்கு மீனைத் தருவதை விட, மீன் பிடிக்கத் தூண்டிலைத் தருவதே மேலானது!’என்னும் சீனப் பழமொழி இங்கே மனங்கொளத் தக்கது.

உலகச் சிறுவர் இலக்கியப் போக்கு

ஆயிஷா இரா.நடராசன் ‘திசை எட்டும்’ உலகச் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழில் (46)
‘I-Pad சந்ததியை வாசிக்க வைப்பது…’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் இங்கே மனங்கொளத் தக்கவை:

“இன்று உலகச் சிறுவர் இலக்கியம் மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது:

1. சிறுவர்கள் பற்றிய இலக்கியம்
2. சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் (பெரியவர்கள் படைப்பது)
3. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்…

சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் போல அல்ல. அது வயது அடிப்படையில் படைக்கப்படும் நுண் இலக்கியம். ஒரு குழந்தை வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தை உளவியலைக் கொண்டு நாம் அதை மேலும் நான்கு (வயது அடிப்படை) பிரிவுகளாகப் பார்க்கிறோம். ஒரு வயதைக் கடந்து ஒரு குழந்தை மற்றொரு வயதை அடையும் போது அதன் இயல்பு, ரசனை, வாசிக்கும் திறன், உலகப் புரிதல் எல்லாமே படிப்படியாக மாறுகின்றன என்பதைக் கொண்டு சிறுவர் இலக்கியம் வயது அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

1. 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு (வயது 3+)
2. 6 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு (வயது 6+)
3. 10 வயது முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு (வயது 10+)
4. 13 வயது முதல் 16/18 வயது வரையிலான சிறார்களுக்கு (வயது 13+)

பெரும்பாலும் சிறார் இலக்கிய நூல்களுக்கு வயதையும் குறிப்பிடுவதே தற்போது ஒரு புதிய மரபாக உலகம் முழுதும் கடைப்பிடிக்கப்படுகிறது” (திசை எட்டும் 46: உலகச் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழ், ஏப்ரல்-ஜுன், 2015). உலகளாவிய இம் மரபினை - புதிய போக்கினை - கவிஞர் செல்ல கணபதி தம் குழந்தை இலக்கியத் தொகுதிகளில் பின்பற்றி இருப்பது போற்றத்தக்கது.

சிறந்த புத்தகத்திற்கான வரைவிலக்கணம்

உலகில் கோடிக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன; இவற்றுள் சிறந்த புத்தகம் எது என்பதை எப்படிக் கண்டறிவது? கவிஞரின் சொற்களில் இதற்கான விடை வருமாறு:

“தூக்கம் வரவே படித்திட / தூக்கிய புத்தகம் உன்னையே
தூக்கிப் புரட்டிப் போடுமேல் / சொல்வாய் சிறந்த புத்தகம்!
சொக்கும் தூக்கம் இடையிலே / தூக்கிய புத்தகம் யாரையும்
பக்கென விழிக்கச் செய்திடும் / பாங்கெனில் சிறந்த புத்தகம்!
படிக்கத் தொடங்கிய புத்தகம் / படித்து முடிக்கும் வரையிலே
துடிப்பாய்ப் படிக்கச் செய்கிற / சுவைதான் சிறந்த புத்தகம்!
படிக்கும் போது சிலிர்த்திடப் / பண்ணும் சிறந்த வரிகளை
அடிக்கோடு இடுகிற வகையிலே / அமைந்ததே சிறந்த புத்தகம்!
இன்று படித்தோம் நாளையும் / இன்னும் படிப்போம் பலமுறை
என்று சொல்லும் வகையிலே / இருப்பது சிறந்த புத்தகம்!”


நிறைவாகச் சொல்வது என்றால், சிறந்த புத்தகத்திற்கான இவ்வரை-விலக்கணத்திற்கு ஏற்பவே கவிஞர் செல்ல கணபதியின் சிறுவர் இலக்கியம் சார்ந்த புத்தகங்களும் அமைந்துள்ளன எனலாம்.

 
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.